Advertisement

அத்தியாயம் 9
நீ தீண்டிய நிமிடங்கள்
பட்டாம் பூச்சியாய் மனதில்
சிறகடித்துப் பறக்கின்றன!!!
எவ்வளவு யோசித்தும் அடுத்து என்ன செய்ய என்று மட்டும் கண்ணனுக்கு புரியவே இல்லை. “அன்னைக்கு அப்பா அம்மாவை எப்ப தெரியும்ன்னு அவ கேக்கும் போதே யோசிச்சு பதில் சொல்லிருக்கணும்”, என்று இப்போது நினைத்தான். 
இவள் அவர்களிடம் போய் கேட்டாலும் அவர்கள் உண்மையை சொல்ல மாட்டார்கள் என்றல்லவா அவன் எதிர் பார்த்தான். 
மூளை வேலை நிறுத்தம் செய்ய வேறு வழி இல்லாமல் வாசுவை அழைத்தான். அவனுடைய போனோ அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
“இன்னைக்கு பாத்து இந்த அண்ணா போனை ஆப் பண்ணி வைக்கணுமா?”, என்று நினைத்தவனுக்கு மூளையில் மின்னல் வெட்டியது. 
அவனுடைய உயிர் நண்பனான ஆரோனை அழைத்தான். கண்ணனின் போனைப் பார்த்ததும் வேண்டும் என்றே அதை எடுக்காமல் விட்ட ஆரோன் ஆப்பிள் பழத்தை தின்று கொண்டிருந்தான்.
அவன் இப்படி எதுவும் செய்வான் என்று தெரிந்த கண்ணன் மீண்டும் மீண்டும் அழைத்தான். கண்ணன் ஆறாவது முறை அழைக்கும் போது தான் அவனுடைய போனை எடுத்தான் ஆரோன்.
அது மட்டுமல்லாமல் போனை எடுத்ததும் “இன்னைக்கு ராசி பலன்ல சனியன் உன்னைத் தேடி வரும்னு போட்டிருந்தது. என்ன டா இன்னும் வரலையேன்னு நினைச்சேன். கரெக்ட்டா வந்துட்டு. என்ன விஷயம் சொல்லு”, என்றான்.
“டேய் நான் உன் நண்பன் டா”, என்று பரிதாபமாக சொன்னான் கண்ணன்.
“அதெல்லாம் ஒரு காலம். இப்ப நட்பாவது ஒன்னாவது? உன் அல்லக்கை உன் போனை எடுக்கலையா? அதான் எனக்கு பண்ணிருக்கியா? என்ன விஷயம் சொல்லு”
“இன்னும் உன் கோபம் போகலையா ஆரோன்?”
“சும்மா பேசி நேரத்தை வீணாக்காத. என்ன விஷயம் சொல்லு? மைதிலி உண்மையை கண்டு பிடிச்சிட்டாளா? இல்லை அவளுக்கே நினைவு எல்லாம் வந்துருச்சா?”
“இவனுக்கு போய் போன் பண்ணுனேன் பாரு?”, என்று நினைத்து கொண்டு மைதிலி சொன்னதை சொன்னான் கண்ணன்.
அனைத்தையும் கேட்ட ஆரோன், “சரி இப்ப நான் என்ன செய்யணும்?”, என்று கேட்டான்.
“இந்த இக்கட்டுல இருந்து தப்பிக்க ஐடியா சொல்லணும்”
“எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு ஐடியா தான் இருக்கு”
“என்ன டா?”
“பேசாம அவ கிட்ட உண்மையை சொல்லிரு”
“இதுக்கு உன்கிட்ட நான் கேக்காமலே இருந்துருக்கலாம்”
“உன்னை எவன் கேக்க சொன்னான்?”
“மனசாட்சியே இல்லாம பேசாத ஆரோன்”
“மனசாட்சி பத்தி எல்லாம் நீ பேசுற? எல்லாம் நேரம். பாதி உண்மையையும் மீதி பொய்யும் சொல்லி சமாளி. நான் போனை வைக்கிறேன்”,என்று சொல்லி வைத்து விட்டான்.
ஆரோன் போனை வைத்தது மனதுக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் அவன் சொன்ன யோசனை கொஞ்சம் தெளிவை தந்தது.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. ஆனால் கண்ணன் மட்டும் நிம்மதி இல்லாமல் இருந்தான். மைதிலியை நம்ப வைக்க அவனால் முடியுமா என்று உள்ளுக்குள் கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. 
எப்போதும் போல் குளித்து கிளம்பி மைதிலி வீட்டுக்கு சென்றான் கண்ணன். காலை உணவை முடித்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் அருகில் அமர்ந்திருந்தாள் மைதிலி. அவனும் அவளிடம் எதுவும் பேச வில்லை.
கார் போய் நின்றது அவனுடைய கம்பெனிக்கு தான். கேள்வியாக அவனை பார்த்தவளிடம் “என்னோட ரூம்ல தான் எந்த வித இடைஞ்சலும் இல்லாம பேச முடியும்”, என்றான்.
அவனுடைய அறைக்குள் சென்றதும் அவளை அமர சொன்னவன் அவளுக்கு எதிரே அமர்ந்து “இப்ப என்ன கேக்கணுமோ கேள்”, என்றான்.
“வேற என்ன கேக்க போறேன்? நம்மளை பத்தி தான் தெரிஞ்சிக்கணும். இப்பவாது பொய் சொல்லாம உண்மையை சொல்லுங்க. நான் மதியம் மேல காலேஜ் கிளம்பணும்”
“நானே கொண்டு வந்து விடுறேன் மைத்தி”
“சரி சொல்லுங்க”
“உனக்கே எல்லாம் நினைவு வர வரைக்கும் வெயிட் பண்ணலாம்ல?”
“பண்ணலாம் தான். ஆனா ஹஸ்பண்ட்ன்னு முன்னாடி வந்து நீக்குறீங்களே. உங்களால தான் நான் எல்லாமே தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க சொல்லி தான் உங்க மேல உள்ள காதலை நான் நினைவு படுத்துறேன்னு நினைக்க வேண்டாம். நீங்க தெளிவா சொல்லாம சும்மா மேலோட்டமா சொன்னா போதும். நீங்க யாரு, நான் யாரு? நம்ம ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? எப்படி நமக்குள்ள காதல் கல்யாணம் எல்லாம்? போன வருஷம் தான் எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னாங்க. ஆனா எப்ப நடந்ததுன்னு சொல்லலை. அது எந்த சூழ்நிலைல நடந்தது? எனக்கு எப்படி ஆக்ஸிடெண்ட் ஆச்சு?”
“சொல்றேன் மைத்தி, ஆனா நீ உன்னோட மூளைக்கு ரொம்ப பிரஸ்ஸர் கொடுக்காத. சும்மா கதை கேக்குற மாதிரி கேள்”
“சரி, சொல்லுங்க”
“நம்ம ரெண்டு பேருக்குமே சின்ன வயசுல இருந்து அறிமுகம் இருக்கு”
“மறுபடியும் பொய்யா? எங்க அம்மா அப்பா உங்களை முன்னாடியே பாத்தது இல்லைன்னு சொல்றாங்களே “
“அவங்களுக்கு என்னை தெரியாது மா. ஆனா உனக்கு என்னை தெரியும்”
“எப்ப இருந்து?”
“நான் டென்த் படிக்கும் போதுல இருந்து”
“நீங்க டென்த்ன்னா நான் மூனோ நாலோ படிச்சிட்டு இருப்பேன். அப்ப எப்படி?”
“உன்னை முதல் முதலா நான் ஒரு பார்க்ல தான் பாத்தேன். அப்ப நீ சின்ன பொண்ணு தான். எனக்கும் அது லவ் அப்படின்னு எல்லாம் யோசிக்கிற வயசு இல்லை. எனக்கு அப்ப எந்த பிரண்ட்சும் இல்லை. அப்ப தான் நீயா வந்து பேசுன. உடனே உன்னை என்னோட பிரண்டா ஏத்து கிட்டேன். அப்புறம் உன்னோட அக்கா ரேணு என்னோட கிளாஸ் தான்னு தெரிஞ்சது. அதனால உன்னை அடிக்கடி மீட் பண்ணுனேன். உனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வருவ. நாம டெய்லி பார்க்ல தான் மீட் பண்ணுவோம். ரெண்டு பேர்ல யாராவது வரலைன்னா அடுத்த நாள் ரெண்டு பேருக்குமே கஷ்டமா இருக்கும். இது அப்படியே பல வருஷம் தொடர்ந்துச்சு. 
….
நான் ஸ்கூல் முடிச்சு காலேஜ் அஞ்சு வருஷம் படிக்கும் போது வரைக்கும் நாம மீட் பண்ணிட்டு தான் இருந்தோம். அப்புறம் பாரின் போறேன்னு நான் சொன்னப்ப தான் ரெண்டு பேருமே அது காதல்ன்னு உணர்ந்தோம். அதை சொல்லவும் செஞ்சோம். நீ என்னை பிரிய மாட்டேன்னு அழுத. உடனே தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக எல்லாரும் நினைக்கிற மாதிரி தாலி எல்லாம் கட்டலை. உனக்கு ஒரு ரிங் தான் போட்டு விட்டேன். அது இப்ப என்கிட்ட தான் இருக்கு. அப்புறம் ரெண்டு வருஷம் நான் பாரின் போயிட்டேன். நீ போன்ல அடிக்கடி பேசுவ. நான் படிப்பு முடிச்சு வரும் போது தான் நீ என்னை பாக்க வரப்ப என் கண்ணு முன்னாடியே ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. உடனே பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போனேன். என்னோட வைப்ன்னு அட்மிட் பண்ணுனேன். உங்க வீட்டுக்கு தகவல் சொன்ன உடனே வந்தாங்க. என்னை அடிச்சாங்க. அப்புறம் சமாதானம் ஆகிட்டாங்க. எங்க வீட்லயும் சொல்லிட்டேன். உன்னோட படிப்பு முடியனும், அப்புறம் உங்க அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடியணும்னு எங்க வீட்ல வெயிட் பண்ண சொல்லிட்டாங்க. அவ்வளவு தான் நம்ம கதை”, என்று சொல்லி முடித்தவன் அவளை குறுகுறுவென்று பார்த்தான்.
தீவிர யோசனையில் இருந்தவள் அதிக குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையே அவள் அதிக கேள்விகள் கேட்பாள் என்று சொல்லாமல் சொன்னது.
“இந்த மொக்க கதையை அவ நம்புறதே பெரிய விஷயம் டா. இப்படியா நிறைய படத்தை மிக்ஸ் பண்ணி கதை சொல்லுவ”, என்று சிரித்தது மனசாட்சி.
“எப்படி சமாளிக்க போறோம்”, என்று பீதியில் இருந்தவனை பார்த்தவள் பேச ஆரம்பித்தாள்.
“நீங்க போட்ட ரிங்கை ஹாஸ்பிட்டல்ல வச்சு கழட்டிட்டாங்களா? கவலை படாதீங்க. அக்கா மேரேஜ் எல்லாம் முடிஞ்ச அப்புறம் நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம். இப்ப வீட்டுக்கு கிளம்புவோமா? சாப்பிட்ட அப்புறம் ஊருக்கு கிளம்பணும்”, என்றாள்.
அதிர்ச்சியில் சிலையாக நின்றான் கண்ணன். அவன் சொன்னதில் ஒரு விஷயம் கூட உண்மை இல்லை. அப்படி இருக்க அந்த பொய் கதையை சிறு சந்தேகம் கூட இல்லாமல் நம்பி விட்டாளா? 
“அப்பாடி தப்பிச்சிட்டோம்”, என்று எண்ணினாலும் அவளை ஏமாற்றுகிறோமே என்று வருத்தமாக இருந்தது.
அதன் பின் எதுவும் பேசாமல் காரை எடுத்தான் கண்ணன். அவன் அமைதியை பார்த்த மைதிலி “நான் ஊருக்கு போறேன்னு டல்லா இருக்கான் போல”, என்று நினைத்து கொண்டாள்.
வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் கருணாகரனுடன் பேசிக் கொண்டிருந்தான் கண்ணன். 
“கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க மாப்பிள்ளை. மைதிலி உள்ள கூட்டிட்டு போ மா”, என்றார் கருணாகரன்.
அவன் மறுக்க நினைப்பதற்குள் “உள்ள வாங்க”, என்று அழைத்தாள் மைதிலி.
அவளுடன் சென்றவனுக்கு “முன்னாடி விட மைதிலி நிறைய மாறிட்டா”, என்று நினைப்பு ஓடியது.
“அவளுக்கு நினைவு இல்லாம இருந்தாலும் இப்போதைக்கு நீ தான் அவளுடைய புருசன்னு அவ மனசு ஏத்துக்கிட்டு. கடைசி வரைக்கும் அவளுக்கு எதுவும் நினைவு வராம இருந்தா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்”, என்று அவனுக்கு பதில் சொல்லியது மனசாட்சி.
“என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதோ யோசனையிலே இருக்கீங்க? முன்னாடி உங்களை இன்சல்ட் பண்ணதை எல்லாம் மறந்துட்டு பிரீயா இருங்க”, என்றாள் மைதிலி. 
அவளைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்தி விட்டு கட்டிலில் அமர்ந்தான். இந்த முறை அவன் சொல்லாமலே அவன் அருகில் அவனை இடித்த படி அமர்ந்தாள் மைதிலி. 
திகைத்து போய் அவளைப் பார்த்தான். அவன் பார்வையை உணராமல் “அப்பா உங்களை அடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நாம செஞ்சது தப்பு தான? இப்ப எல்லாம் சரி ஆகிட்டு. நான் சந்தோஷமா இருக்கேன். எங்க வீட்லயும் சரி சொல்லிட்டாங்க. உங்க வீட்லயும் சரி சொல்லிட்டாங்க. எனக்கு எப்ப டா மறுபடியும் நம்ம கல்யாணம் நடக்கும்னு இருக்கு”, என்று பேசிக் கொண்டிருந்தவளை கண்டு அவன் திகைப்பு கூட தான் செய்தது.
மைதிலி இப்படி எல்லாம் பேசுவாள் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை. அப்படி இருக்க அதிர்ச்சி ஆகாமல் என்ன செய்வான்? 
“சீக்கிரம் அக்கா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னா நம்ம ரூட் சரியாகிரும். பேசாம நாமளே நல்ல மாப்பிள்ளை பாக்கலாமா?”, என்று கேள்வி கேட்டவள் அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.
சிலை போல் இருந்தவன் அவளுடைய கேள்வியில் தான் நிக்ழ்காலத்துக்கு வந்தான்.
“நானும் நல்ல இடமா பாத்துட்டு தான் இருக்கேன் மைத்தி”, என்றான் கண்ணன்.
“ஹ்ம் சரி. அப்புறம் உங்க கிட்ட சாரி சொல்லணும்”
“எதுக்கு?”
“உங்களை ரொம்ப டீஸ் பண்ணிட்டேன். வேற யாராவது இருந்தா சப்புன்னு ஒரு அரை விட்டுருப்பாங்க”
“உன்னை என்னால அடிக்க முடியாது. ஏன்னா உனக்கு வலிச்சா எனக்கும் வலிக்கும்”
“நாம ரொம்ப லவ் பண்ணிருப்போம்ல?”
“ஹ்ம் ஆமா”
“நான் ஒண்ணு கேக்கட்டுமா?”
“ஹ்ம் கேளு”
“நான் உங்க லைப்ல வராம இருந்துருந்தா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருந்துருக்கும்ல?”
“சத்தியமா இல்லை. நீ என் வாழ்க்கைல வந்த அப்புறம் தான் என்னோட வாழ்க்கைல ஒரு உயிர்ப்பே வந்தது”
“நாம ரெண்டு பேரும் வெளிய எங்கயாவது போயிருக்கோமா?  இப்ப உள்ள லவ்வர்ஸ் மாதிரி, படத்துக்கு, இல்லைன்னா வேற எங்கயாவது?”
“அப்படி எல்லாம் இல்லை. நீ வேற மாதிரி எதுவும் நினைக்காத. நாம மத்தவங்க மாதிரி கிடையாது. அப்புறம் நான் உனக்கு முத்தம் கொடுத்ததே உங்க வீட்ல வச்சு தான். அதுக்கு முன்னாடி என்னோட விரல் கூட உன் மேல பட்டது கிடையாது”
“அது எப்படி? லவ்ன்னு இருந்தா இதெல்லாம் இருக்கணும்ல?”
“அப்படின்னு கட்டாயம் இல்லை மா. அது மட்டுமில்லாம நான் உன்னை விட அஞ்சாறு வயசு பெரியவன். உன்னை என்னோட தேவதையா தான் பாத்தேன். மித்த படி தப்பா எல்லாம் நினைச்சது இல்லை”
“அப்புறம் அன்னைக்கு மட்டும் எதுக்கு….?”
அவளை பார்த்து புன்னகைத்தவன் அவள் காதருகே குனிந்து “இப்ப உன்னை சின்ன பொண்ணா எப்படி நினைக்க? சத்தியமா அப்படி தோணாது”, என்றான்.
அவள் முகத்தில் இருந்த வெட்க சிவப்பை பார்த்தவன் “இப்ப எழுந்து ஓடிருவா”, என்று நினைக்க அவளோ அவன் தோளில் சாய்ந்து அவனை இறுக்க கட்டிக் கொண்டாள்.
தீண்டல் தொடரும்….
 

Advertisement