Advertisement

அத்தியாயம் 7
வார்த்தைகள் அனைத்தையும்
மறக்கிறேன் நீ என்னைத்
தீண்டும் நொடியில்!!!
மாணிக்கவேலுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சாரு போன் வரவும் அதை எடுத்துப் பார்த்தாள்.
வாசு என்று இருந்ததும் அவள் புருவ மத்தியில் ஒரு முடிச்சு விழுந்தது.
“யாரு மா போன்ல?”, என்று கேட்டார் மானிக்கவேல்.
“வாசு அண்ணாப்பா”
“அவன் எதுக்கு போன் பண்ணிருக்கான்னு தெரியலையே. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது. என்னன்னு கேளு மா”
போனை எடுத்தவள் “அண்ணா எப்படி இருக்கீங்க? சுந்தரி அண்ணி, கேசவ் குட்டி நல்லா இருக்காங்களா?”, என்று அவன் குடும்பத்தையே விசாரித்தாள்.
“சாருப்பாப்பா இது நலம் விசாரிக்கிற நேரம் இல்லை. உங்க அண்ணனுக்கு ஒரு இக்கட்டு”
“என்னது அண்ணனுக்கா? என்னண்ணா ஆச்சு?”
“மைதிலி அவ புகுந்த வீட்டை பாக்க ஆசைப்படுறா”
“ஐயையோ”
“நீ ஐயையோ சொல்றதுலே அங்க நிலைமை சரி இல்லன்னு தோணுது. சரி சீக்கிரம் நீ அருண் தம்பியை கூட்டிட்டு உங்க அண்ணா வீட்டுக்கு வந்துரு”
“அண்ணா அப்பா அம்மா…”
“அவங்க எங்கயாவது டூர் போனதா சமாளிச்சிருங்க”
“”சமாளிச்சிருங்களா? அப்ப நீங்க வரலையா?”
“நானா, நான் வந்தா எதுக்குன்னு யோசிப்பாங்க. நீ சீக்கிரம் கிளம்பு”
“அடுத்த அரை மணி நேரத்துல அங்க இருப்போம் அண்ணா”, என்று சொல்லி போனை வைத்தவள் தன் தந்தையைப் பார்த்தாள்.
“என்ன ஆச்சு சாரு?”
“அப்பா உங்க தேவதை அவங்க புகுந்த வீட்டை பாக்க ஆசைப் படுறாங்களாம்”
“புரிஞ்சிட்டு பாப்பா. நீ அருணை கூட்டிக்கிட்டு கிளம்பு”
“உங்களுக்கு சாப்பாடு பாதிலே நிக்குதே”
“ஒரு நாள் சாப்பிடலைன்னா உயிர் போய்றாது. எனக்கு என் பையன் வாழ்க்கை முக்கியம் நீ ஓடு”
“சரிப்பா”, என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியவள் நேராக சென்றது அருணின் அரைக்கு தான்.
பதட்டத்துடன் வந்த தங்கையைப் பார்த்த அருண்  “ஏய் பப்ளி, என்ன ஆச்சு? எதுக்கு இவ்வளவு டென்ஷன்? உனக்கு வேர்க்கும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்”, என்றான்.
“உன் கிண்டல் எல்லாம் அப்புறம். அண்ணாக்கு சூழ்நிலை சரி இல்லை. மைதிலி அண்ணி நம்ம எல்லாரையும் பாக்கணும்னு வராங்களாம்”
“அண்ணியா? செம.. ஆனா இங்க எப்படி?”
“இங்க இல்ல.,. அங்க… ஸோ நாம அங்க போகணும். இப்பவாது புரியுதா?”
“வா வா கிளம்பலாம்”, என்று அருண் சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள். சரியாக அவர்கள் வீட்டு வாயிலை தாண்டும் போது நி”ல்லுங்க ரெண்டு பேரும்”, என்ற குரலில் அதிர்ச்சியாக திரும்பி பார்த்தார்கள்.
“ஐயையோ அம்மா டா, ஏதாவது சொல்லி சமாளி”
“சரி நீ கொஞ்சம் முகத்தை சோகமா வச்சிக்கோ”
“அண்ணனும் தங்கச்சியும் எங்க கிளம்பிட்டீங்க?”, என்று கேட்டாள் அவர்களை பெற்றவள் மனிஷா.
“அம்மா, நம்ம சாரு பிரண்ட் ஹேமா இருக்கால்ல? அவளுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சாம். அதான் அவளைப் பாக்க கூட்டிட்டு போறேன்”, என்றான் அருண்.
“அட பாவி, அவளை எதுக்கு டா சொன்ன? அவ உன்னை என்ன செஞ்சா?”, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள் சாரு.
“ஓ அப்படியா? சரி அருண் ரெண்டு பேரும் பாத்து போயிட்டு வாங்க. சாருவை பத்திரமா கூட்டிட்டு வந்துரு”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
“அப்பாடி தப்பிச்சிட்டோம். வா போகலாம்”
“இரு டா உன்னை ஹேமா கிட்ட வத்தி வைக்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறினாள் சாரு.
“பிளீஸ் டி பத்த வச்சிராத. இப்ப தான் பிக்கப் ஆகுற மாதிரி இருக்கு”, என்று சொல்லிய படியே காரை எடுத்தான். 
“அடப்பாவி, அவ கூட கடலையா டா? அவ நம்பர் எப்படி டா தெரியும்?”
“உன் போன் எதுக்கு இருக்கு? சுட்டுட்டேன்”
“டேய் டேய், தங்கச்சியோட பிரண்ட் உனக்கும் தங்கச்சி மாதிரி டா”
“அப்ப அண்ணானோட பிரண்ட் அண்ணன் தான?”
“இவன் எப்படி கண்டு பிடிச்சான்?”, என்று யோசித்தவள் “தெரிஞ்சிருடுச்சா? உனக்கும் தெரிஞ்சிருடுச்சா? அண்ணா கிட்ட மட்டும் சொல்லிராத டா அண்ணா. நம்ம ரெண்டு பேரும் சீக்ரெட்டாவே வச்சிக்கலாம்”, என்றாள்.
அருணோ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தான், “என்ன டா பேசாம வர?”, என்று கேட்டாள் சாரு.
“அப்பா, அம்மா சரி இல்லைன்னா நாம இப்படி தான் இருப்போம். சரி சரி அண்ணிக்கிட்ட ஓவர் ஆக்டிங் பண்ணி கெடுத்துராத”
“அதெல்லாம் பெர்பெக்ட்டா நடிச்சிருவேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா”
“என்ன?”
“இல்லை இப்ப நடிச்சிறலாம். ஒரு வேளை அண்ணிக்கு எல்லாமே நினைவு வந்துருச்சுன்னா?”
“வேற என்ன? அண்ணா கடைசி வரை பிரம்மச்சாரி தான்”
“அப்ப நம்ம கல்யாணம்?”
“ஆமா, நீ இதுலே இரு. வீடு வந்துருச்சு. கொஞ்சம் கலைச்சுப் போட்ட படி ஏதாவது செய். தினமும் புலங்குற மாதிரி இருக்கணும்”
அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே வீடு அன்றாடம் புலங்குவது போல தான் இருந்தது. 
“நம்ம வேலண்ணா வேலையா இருக்கும் டி, வா அவரை பாப்போம்”, என்று சொல்லி கிச்சனுக்குள் நுழைந்தனர்.
வீட்டு வேலைக்காரனான வேலுவோ பாத்திரங்களை அடுக்கிய படி இருந்தான்.
“ஏய் சாரு பாரேன். வேல் அண்ணாவுக்கு முன்னாடியே அண்ணா சொல்லிட்டாங்க போல? டெய்லி புலங்குற கிச்சன் மாதிரி சமைச்சு எல்லாம் வச்சிருக்காங்க”, என்று சொல்லி கொண்டே பாத்திரத்தை திறந்து பார்த்தான்.
பார்த்தவன் திகைத்தான். அது வெறும் பாத்திரமாக இருந்தது. “என்னண்ணா இது?”, என்று கேட்டாள் சாரு.
“இது சோறு, இது குளம்பு, இது கூட்டுன்னு நமக்கு மட்டும் தான தெரியும்? அம்மணி வந்து திறந்தா பாக்க போகுது?”, என்றான் வேல்.
“சூப்பர் அண்ணா, யார் ஐடியா?”
“வாசு மாப்பிள்ளை போன் பண்ணான். நான் செட் பண்ணிட்டேன். சரி சரி நீங்க வெளிய போய் இருங்க”
அவர்கள் இருவரும் வெளியே வந்து ஹாலில் அமர்ந்து டி‌வி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காரை ஒட்டிக் கொண்டிருந்த கண்ணனோ “கடவுளே இன்னைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது”, என்று வேண்டிக் கொண்டிருந்தான்.
அவன் அமைதியைப் பார்த்த மைதிலி “என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போனா உங்க அம்மா அப்பா ஏதாவது சொல்லுவாங்களா?”, என்று கேட்டாள்.
“இல்ல மா. அதெல்லாம் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க”
“பின்ன எதுக்கு இப்படி டென்சனா இருக்கீங்க?”
“இல்லை நீ முதல் தடவை எங்க வீட்டுக்கு வரியா? அதான் கொஞ்சம் நெர்வசா இருக்கு”
“உங்களுக்கு பிடிக்கலைன்னா நாம அங்க போக வேண்டாம்”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை மைத்தி. அது உன்னோட வீடு. உனக்கு மட்டுமே சொந்தம். நீ வரது எனக்கு எப்படி பிடிக்காம போகும்?”
“ஆமா என்னோட வீடாம். நான் சொன்னா உங்க வீட்டு ஆள்களை வெளியே துரத்திருவீங்களா? ஆளைப் பாரு”
“அது உன் வீடா இல்லையான்னு அங்க வந்த அப்புறம் பாரு”
“சரி, இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”
“இன்னும் பத்து நிமிசத்துல வீடு வந்துரும்”
“அப்படியா? அப்ப கடைல ஏதாவது வாங்கிட்டு போகலாமா?”
“ஹூம் வீட்ல ரெண்டு வாலு இருக்கு. ஸ்நாக்ஸ் ஏதாவது வாங்கிட்டு போகலாம்”, என்று சொல்லி ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.
வேண்டியதை வாங்கி கொண்டு காரை செலுத்தியவன் அந்த பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினான். அவள் வீட்டை விட ஐந்தாறு மடங்கு பெரியதாக இருந்தது அந்த வீடு. 
அதை விட அவளுக்கு அதிர்ச்சி என்னவென்றால் வாசலில் மைதிலி இல்லம் என்று பொரிக்கப் பட்டிருந்தது தான். 
அந்த ஒரு பெயர் பலகையே அது அவளுடைய வீடு தான் என்று சொல்லாமல் சொன்னது. அவனை நிமிர்ந்து பார்த்தாள். 
அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “என்ன வீட்ல உள்ளவங்களை துரத்திரலாமா?”, என்று கேட்டான்.
மறுப்பாக தலை அசைத்தவள் “வீடு ரொம்ப அழகா இருக்கு”, என்றாள்.
“என்னோட தேவதை வீடு அழகா தான் இருக்கும். வெளியவே நின்னா எப்படி? உள்ள வா”
என்னமோ சி ஐ டி மாதிரி அவர்கள் வாழ்க்கையைப் பற்றி துப்பு துலக்க வந்து விட்டாள் தான். ஆனால் இப்போது உள்ளே செல்லும் போது உடம்பெல்லாம் பயத்தில் வேர்த்து விட்டது.
அவள் மனநிலை உணர்ந்தவன் ஆதரவாக அவள் கையை பற்றிக் கொண்டான். அந்த தீண்டலில் தெம்பாக உணர்ந்தாள்.
“ஒற்றைத் தீண்டல் இவ்வளவு தெம்பளிக்க முடியுமா?”, என்று யோசித்த படி வந்தவளை “அண்ணி”, என்ற சாருவின் குரல் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது.
தன்னுடைய யோசனையில் இருந்து வெளியே வந்தவள் அவனை கேள்வியாக பார்த்தாள்.
“இது என் தங்கச்சி சாரு, அது என் தம்பி அருண்”, என்று அறிமுகப் படுத்தினான் கண்ணன்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள் மைதிலி. “இந்த சிரிப்பெல்லாம் எங்களுக்கு பத்தாது. பாத்து எவ்வளவு நாள் ஆச்சு?”, என்று சொன்ன சாரு மைதிலியை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
அதில் கொஞ்சம் சகஜமானாள் மைதிலி. அருண் கண்ணனின் சாயலில் இருந்தான். ஆனால் சாரு வெள்ளையாக வடமாநிலத்தவர் போல இருந்தாள். “அவளோட அம்மா மாதிரி இருப்பா போல?”, என்று எண்ணிக் கொண்டாள் மைதிலி.
“அம்மா அப்பா எங்க அருண்?”, என்று கேட்டான் கண்ணன்.
“அப்பாக்கு ஒரு மீட்டிங். அதான் கிளம்பிட்டாங்க? அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க. நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா இருந்திருப்பாங்கண்ணா”, என்று அருண் சொன்னதும் “நான் தான் இன்னைக்கு போகலாம்னு சொன்னேன்”, என்றாள் மைதிலி. 
“இப்ப என்ன அண்ணி? இன்னொரு நாள் அவங்க இருக்கும் போது வந்துட்டாப் போச்சு”
“வாங்க மா, நல்லா இருக்கீங்களா?”, என்று அவர்களுக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தான் வேலு. 
“இது வேலு அண்ணா. வீட்டை இவங்க தான் பாத்துக்குறாங்க. வாசு அண்ணா இருக்காங்கல்ல? அவங்க சொந்தக்காரர்”, என்று மைதிலியிடம் சொன்னவன் “சாரு இதுல ஸ்நாக்ஸ் இருக்கு. எல்லாருக்கும் எடுத்து வை. நான் மைதிலிக்கு வீட்டை சுத்தி காட்டிட்டு வரேன்”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான். 
அதிர்ச்சியில் சிலை போல நின்ற சாருவை உலுக்கிய அருண் “என்ன ஆச்சு சாரு? அண்ணா அண்ணிக்காக தான் நம்ம கிட்ட பேசிருக்காங்க. இல்லைன்னா பேச மாட்டாங்க. உன் ஷாக்கை குறைச்சிட்டு வேலையைப் பாரு”, என்றான்.
“அப்ப அப்பா சொன்னது சரி தான் டா”
“என்ன சொன்னாரு?”
“தேவதை வீட்டுக்கு வந்தா எல்லாம் சரியா போகும்னு. அப்ப அண்ணி வந்துட்டா அண்ணா நம்ம கூட எல்லாம் நல்லா பேசுவாங்க. அப்படி தான டா?”
“ஹூம் ஆமா”, என்று ஒரு மாதிரிக் குரலில் சொன்னான் அருண்.
“என்ன ஆச்சு டா, திடீர்னு பீஸ் போன பல்ப் மாதிரி ஆகிட்ட?”
“ஒண்ணும் இல்லை”
“சும்மா சொல்லு”
“இல்லை தினமும் நான் உன் கூடவே இருக்கேன். ஆனா உனக்கு அண்ணா தான் உசத்தி, அப்படி தான?”
“ஹா ஹா பொறாமையா அண்ணா? அண்ணா எனக்கு அப்பா மாதிரின்னா நீ எனக்கு அம்மா டா”, என்று சொல்லி அவன் மனதை குளிர வைத்தாள் சாரு.
அந்த பதிலில் சிலிர்த்த அருண் அவள் தலையில் செல்லமாக முட்டி “போய் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வா பாப்பா”, என்றான்.
சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டே சென்றாள் சாரு. அவளைப் பார்த்த வேலு அண்ணா “என்ன மா இன்னைக்கு இவ்வளவு சந்தோஷம்? அம்மணி வீட்டுக்கு வந்ததுனாலவா?”, என்று கேட்டான்.
“அவங்க தான் சந்தோசத்துக்கு காரணம் அண்ணா. பெரியண்ணா என்கிட்ட பேசுறாங்க. சின்னண்ணன் அவன் அன்பை காட்டுறான். இதுக்கெல்லாம் கிரெடிட் அண்ணிக்கு தான் கொடுக்கணும். தினமும் இப்படியே இருந்தா நல்லா இருக்கும் இல்லைண்ணா?”
“கூடிய சீக்கிரம் நடக்கும் மா. நீ கவலை படாத. அம்மணி ஐயா கூட வந்துட்டா எல்லாம் சரியா போகும்”
“எங்க? அவங்க சேரும் போது என்னை கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிருவாங்களே”
“சோகமா சொல்ற மாதிரி கல்யாணதுக்கு அடி போடுற மாதிரி இருக்கு மா? ஐயா கிட்ட சொல்லவா?”
“அண்ணா உங்க காலுல வேணும்னா விழுறேன். ஆப்பு எதுவும் ரெடி பண்ணிறாதீங்க. அந்த பிளேட் எல்லாம் எடுங்க”, என்று சிரித்தாள் சாரு.
கீழே உள்ள எல்லா அறையையும் காட்டி விட்டு மைதிலியை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
மாடியில் அவள் நுழைந்ததும் அவள் கண்ணில் பட்டது அவள் ஆபீஸில் பார்த்த அதே அவளுடைய ஆளுயர படம். 
அதைப் பார்த்து அவளுடைய குழப்பம் மேலும் அதிகரிக்க தான் செய்தது. அவள் முகத்திலே அதைக் கண்டவன் “என்ன மா?”, என்று கேட்டான்.
“ஒரு மாதிரி பயமா இருக்கு”, என்று வெளிப்படையாக உண்மையைச் சொன்னாள் மைதிலி.
“என்னைப் பார்த்தா?”
“ஹூம் ஆமா” 
“என்னைப் பிடிக்கலையா? நான் அழகா இல்லையா?”
“ஃப்ச் நான் பயப்படுறது உங்க ஸ்டேட்டஸ் பாத்து. இவ்வளவு பெரிய பணக்கார லைஃப்ல நான் எப்படி உள்ள வந்தேன்? என் பேர் வைக்க உங்க வீட்ல எப்படி சரி சொன்னாங்க? என் மேல உங்களுக்கு எதுக்கு இவ்வளவு லவ்? எனக்கு எப்படி ஆக்ஸிடெண்ட் ஆச்சு? என் லைப்ல என்ன தான் ஆச்சு? என்று கேள்வி மேலே கேள்வியாக கேட்டுக் கொண்டே வந்தவள் “கண்ணா”, என்ற அவன் பெயரை சொல்லிக் கொண்டே மயங்கி விழுந்தாள்.
கண்ணனுக்கு அவள் மயங்கி விழுந்ததே அதிர்ச்சி என்றால், அவள் கண்ணா என்று அழைத்தது அதை விட அதிர்ச்சியை தந்தது.
ஒரு நொடி சிந்தித்தவன் அமைதியாக கீழே சென்றான். அவள் மயங்கியதை அவர்களுக்கு காட்டாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீர் எடுத்து வந்தவன் அவள் முகத்தில் தெளித்தான்.
மெதுவாக கண் விழித்தவள் அவனுடைய மடியில் இருப்பதை உணர்ந்து அவசரமாக விலகினாள்.
அவள் கண் விழித்ததும் தான் நிம்மதியானான் கண்ணன். அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் “இப்ப தெரியுதா உன்கிட்ட எதுக்கு நாங்க எல்லாரும் உண்மையை சொல்லாமல் இருக்கோம்னு? உன்னோட உடம்பு இன்னும் சரியாகலை. உனக்கு எந்த அதிர்ச்சியும் சந்தோஷமும் கொடுக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க. நீ கொஞ்சம் யோசிச்சதுக்கே இப்படி நடந்துருச்சு. இனி உன்கிட்ட நான் எதுவும் சொல்லுறதா இல்லை. நீ என்னை தப்பா நினைச்சா நினைச்சிக்கோ”, என்றான்.
அவன் கூறியதை கேட்டவள் ஒரு புன்னகையுடன் “பிராடு”, என்றாள்.
“என்ன பிராடுன்னு சொல்றா? மயங்கினதுல எல்லாம் நினைவுக்கு வந்துருச்சா?”, என்று அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான்.
“என்னமோ என்னை கஷ்ட படுத்துற மாதிரி பேசமாட்டேனு சொன்ன? இப்ப திட்டுற? அப்ப நீ பிராடு தான?”
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் பிராடு தான்”, என்று நினைத்தவன் “என் பொண்டாட்டியை திட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதுவும் இப்ப நான் திட்டவே இல்லை. மயங்கின உடனே ரொம்ப பயந்துட்டேன் டா. சாரி கண்ணம்மா”, என்றான் கண்ணன்.
அவன் குரலில் உருகிக் கொண்டிருந்தவள் அந்த “கண்ணம்மா”, என்ற வார்த்தையில் மனதுக்குள் எதுவோ மாற்றம் நிகழ்வதைக் கண்டாள்.
“வா கீழே போகலாம்”, என்று அழைத்ததும் அவன் பின்னே சென்றாள் கண்ணனின் கண்ணம்மா.
தீண்டல் தொடரும்….

Advertisement