Advertisement

அத்தியாயம் 6
தீண்டிச் செல்லும்
உன் நினைவுகள்
வானவில்லாய் மனதை
வண்ணமாக்கிச் செல்கிறது!!!
“மைதிலி என்ன கேள்வி கேட்டாலும் சமாளிச்சிறலாம்”, என்று அவனே அவனுடைய மனதுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் அவன் மனதோ என்ன சொல்லி சமாளிக்க போறேன் என்று நினைத்து பயந்து தவித்தது.
இத்தனை நாள் இல்லாமல் தன்னிடம் அவள் இந்த கேள்வியை எல்லாம் கேட்பது நல்லது நடப்பதற்கா, இல்லை அவனுக்கு கடவுள் ஒரு ஆப்பை தயார் செய்கிறாரா? அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
ஆனாலும் அவளை பார்க்க போவதை நினைத்து உள்ளம் குதூகளித்தது மட்டும் நிஜம். 
அன்றைய வேலைகளை அவன் முடித்தாலும் மனது மைதிலியை சுற்றியே வந்தது. பன்னிரெண்டு மணி வரை பார்த்தவன் அதற்கு மேல் அவளை அழைக்க கிளம்பி விட்டான்.
காரை ஒட்டிக் கொண்டிருந்தவன் மனம் முழுவதும் அவளைப் பற்றியே சிந்தித்தது.
அவனுடைய தேவதை அவள். அவன் வாழ்வில் ஒரு பிடிப்பு வந்தது என்றால் அது அவளால் தான். ஆனால் அவனைப் பற்றிய எந்த நினைவுமே அவளுக்கு இல்லை.  
மாலை ஆறு மணிக்கு ஹாஸ்டல் முன்பு வண்டியை நிறுத்தியவன் அவளை போனில் அழைத்தான்.
போனை மைதிலி எடுத்ததும் “நான் வந்துட்டேன் மைத்தி, நீ கிளம்பிட்டியா?”, என்று கேட்டான் கண்ணன்.
“ஹலோ சார், அப்படி உடனே எல்லாம் கிளம்பிற முடியாது. இனி தான் நான் குளிக்கவே போறேன்”, என்று நக்கலாக சொன்னாள் மைதிலி.
“ஓ, சரி. கிளம்பி வா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். அடுத்த இரண்டு நிமிடம் கழித்து அவன் முன்னே வந்து நின்றவள் “சரியான லூசு, நான் குளிக்க போறேன்னு சொன்ன உடனே நீ என்ன சொல்லிருக்கணும்? முன்னாடியே கிளம்பி இருக்கலாம்னு சொல்லி என்னை திட்டணும். அதை விட்டுட்டு சரி கிளம்பி வான்னு சொல்ற?”, என்றாள்.
அவளைப் பார்த்ததும் ஒரு பளீர் புன்னகையை சிந்தியவன் “உன்னை கஷ்டப் படுத்துற மாதிரி என்னால பேச முடியாது மா. போகலாமா?”, என்று கேட்டான்..
முன் பக்க கதவை திறந்து கொண்டு காரில் ஏறிக் கொண்டே “ஏன் அப்படி?”, என்று கேட்டாள் மைதிலி.
“ஏன்னு எல்லாம் சொல்ல முடியாது. என்னால உன்னை திட்டவோ, உன்னை கஷ்ட படுத்துற மாதிரி பேசவோ முடியாது. போகலாமா?”, என்று சொல்லிக் கொண்டே காரை எடுத்தான் கண்ணன்.
“ஆள் மயக்கி”, என்று முணுமுணுத்தாள் மைதிலி.
தன் காதில் விழுந்த வார்த்தையை நம்ப முடியாமல் “ஏய், இப்ப நீ என்ன சொன்ன?”, என்று கேட்டான்.
“ஆள் மயக்கின்னு சொன்னேன் போதுமா? எங்க கிளாஸ்ல எல்லாரும் உன்னைப் பத்தி தான் கேக்குறாங்க. ரெண்டு நாளுல எல்லாரையும் மயக்கி வச்சிருக்க”, என்று அவள் சொன்னதும் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அமைதியாக இருந்து விட்டான்.
“பதில் சொல்லாம சிரிச்சா எப்படி? நீ ஆள் மயக்கி தான?”
“இல்லையே”
“இல்லை ஆள் மயக்கி தான். என் பிரண்ட்ஸ் உன்னை பத்தி பேசுறாங்க. என்னோட அக்கா ரெண்டு பேரும் பேசுறாங்க. அம்மா, அப்பா இப்படி எல்லாருமே உன்னை புகழ தான செய்றாங்க. அப்ப எல்லாரையும் மயக்கி வச்சிருக்கேன்னு தான அர்த்தம்”
“எல்லாரையும் மயக்கி வைக்கிறது என்னோட வேலை இல்லை. அதே மாதிரி நான் வேற யாரையும் மயக்க வேண்டிய அவசியமும் இல்லை. நீ என்கிட்ட மயங்கிருக்கியா மைத்தி?என்னைக்கு என்கிட்ட நீ மயங்குறேன்னு சொல்லுரியோ அன்னைக்கு நான் ஆள் மயக்கின்னு ஒத்துக்குறேன். போதுமா?”, என்று அவன் சொன்னதும் வாயை கப்பென்று மூடிக்கொண்டாள் மைதிலி. 
“இது உனக்கு தேவையா மைதிலி? நீ அவனை காலாய்ச்சா அவன் உன்னை கலாய்க்கிறான்”,என்று மனதுக்குள் நினைத்தாள் மைதிலி.
அவள் மௌனத்தை தாங்க முடியாமல் “எப்பவும் அன்டைம்ல தான் ஊருக்கு வருவியா?”, என்று கேட்டான்.
“ஹிம் ஆமா. அப்பா தான் பஸ் ஸ்டாண்ட் வருவாங்க”
“இன்னைக்கு ஊருக்கு வரேனு மாமா கிட்ட சொல்லிட்டியா?”
“நான் தான் வீட்டுக்கே போக போறது இல்லையே. அப்புறம் எதுக்கு சொல்லணும்? நான் ஹாஸ்டல்ல இருக்கேன்னு நினைச்சிக்கட்டும்”, என்று அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தாள்.
“என்னது வீட்டுக்கு போகலையா? விளையாடாத மைத்தி. இப்ப வீட்டுக்கு தான் போறோம்”
“வீட்டுக்கு தான் போறோம். ஆனா எங்க வீட்டுக்கு இல்லை. உன்னோட வீட்டுக்கு”
சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன் “என்னது? எங்க வீட்டுக்கா? நீ சும்மா தான சொன்ன?”, என்று கிட்ட தட்ட அலறினான்.
“இப்ப எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க? நான் உன் பொண்டாட்டி தான? நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது உண்மை தான?”
“அடி மடியிலே கையை வைக்காளே? கடவுளே இப்படியா என்னை கை விடுவ?”, மனதுக்குள் நொந்து போனவன் அவளை பாவமாக பார்த்தான்.
“என்ன பார்வை? பொண்டாட்டியை வீட்டுக்கு கூட்டிட்டு போக என்ன பயம்? எனக்கு உண்மையை சொல்லுங்க. நம்ம கல்யாணம் முடிஞ்சது உங்க வீட்டுக்கு தெரியுமா தெரியாதா?”
“ஓ தெரியுமே”
“அப்புறம் என்ன? கூட்டிட்டு போங்க”
“அது அது வந்து… இல்லை மைத்தி நைட் ஆகிரும்ல? அதான்”
“ஓ ஆமால்ல? நடு ராத்திரி போக முடியாது தான்”, என்று சொன்னவள் எதையோ யோசித்தாள்.
“அப்பாடி சமாதானம் ஆகிட்டா”, என்று அவன் பெருமூச்சு விடும் போதே “அதுக்கு ஒரு ஐடியா இருக்கு. பேசாம ஒரு ஹோட்டல் போய் நைட் தங்கிட்டு காலையில உங்க வீட்டுக்கு போகலாம்”, என்றாள்.
“என்னது ஹோட்டலா?”
“நீ என்ன எதுக்கு எடுதாலும் ஷாக் ஆகுற?”
“இல்ல மா, ஹோட்டல் சேஃப் இல்லை அதான்”
“என்னோட ஹஸ்பண்ட் என் கூட இருக்கும் போது எனக்கு என்ன பயம்”
“இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை”, என்று முணுமுணுத்தவனுக்கு மூளைக்குள் மின்னல் வெட்டியது. 
அவள் பாதையிலே போய் அவளை மடக்க நினைத்தவன் “ஓ சரி போகலாம்”, என்றான்.
முன்பு அவன் பயந்ததையும், இப்போது அவன் சிரிப்பையும் பார்த்தவளுக்கு குழப்பம் வந்தது.
“எதுக்கு ஒரு மாதிரி சிரிக்கிற?”
“இல்லை ரொம்ப நாள் கழிச்சு நீ என்னோட பொண்டாட்டினு ஒத்து கிட்டாயா? அதை யோசிச்சேன்”
“இதுல யோசிக்க என்ன இருக்கு?”
“என்ன இப்படி கேட்டுட்ட? புது பொண்டாட்டி, நைட் நேரம், ஹோட்டல் ரூம், ரெண்டு பேருக்குமான தனிமை…”
அவன் பேச்சில் மொத்தமாய் குழம்பியவள் ஒரு எச்சரிக்கையோடு “இப்ப நீ என்ன தான் சொல்ல வர? எனக்கு புரியலை”, என்றாள்.
“இது கூட புரியலையா? போகும் போது புருட்ஸ், பூ, ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு போகணும்”
“அது உங்க வீட்டுக்கு வாங்கிட்டு போக தான? காலைல வாங்கிக்கலாம். நைட் எதுக்கு வாங்கணும்?”
“அது எங்க வீட்டுக்கு இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும்”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம். எனக்கு நைட்  நாலு இட்லி மட்டும் போதும்”
“ஹா ஹா விளையாடாத மைத்தி. நமக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட்”, என்று சொல்லி அவள் தலையில் குண்டை தூக்கிப் போட்டான்.
அதிர்ச்சியில் பெ பெ என்று விழித்தவள் “நீ சும்மா தானா சொல்ற?”, என்றாள்.
“இதுல எல்லாம் யாராவது விளையாடுவாங்களா? நான் கூட உன்னோட ரெண்டு அக்காவுக்கும் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் நாம சேந்து வாழலாம்னு நினைச்சேன்”
“நல்ல அறிவாளித்தனமா தான யோசிச்சிருக்க? அப்புறம் எதுக்கு இந்த விபரீதம்”
“இங்க பாரு மைத்தி ஒரு மனுஷன் சந்தர்ப்பம் கிடைக்காதவரைக்கு தான் நல்லவன். கிடைச்சதுன்னா கண்டிப்பா சூழ்நிலை அவனை தப்பு பண்ண வச்சிரும்”
“இல்லை இல்லை நீ ரொம்ப நல்லவன். நீ அப்படி எல்லாம் கிடையாது’
“இத்தனை நாள்ல நீ இன்னுமா என்னை புரிஞ்சிக்கலை. ரெண்டு தடவை சந்தர்ப்பம் கிடைச்சப்ப உனக்கு முத்தம் தரலையா என்ன? உன்னை விட்டு விலகியா நின்னேன்? இந்த விசயத்துல என்னை நம்பாத சொல்லிட்டேன்”
முத்தம் பற்றி பேசியதும் முகம் சிவந்தவள் அந்த பொழுதுகளை நினைவில் கொண்டு வந்தாள்.
சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் சிந்து பாடுவான் என்பது உண்மை என்பது புரிந்ததால் “தேவை இல்லாம நாமளே சிக்கிட்டோமோ”, என்று நினைத்தாள்.
“என்ன மைத்தி அமைதியா வர? உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?”
“எனக்கு ஒண்ணு தோணுது”
“என்ன மா?”
“பேசாம எங்க வீட்டுக்கே போய்ருவோமா?”
“ஏன்?”
“இல்லை ஹோட்டல் சேஃப் இல்லைனு சொன்னல்ல அதான்”
“ஏன் என் மேல நம்பிக்கை போய்ருச்சா? பரவால்ல. அதுக்கெல்லாம் பயப்படாத, நாம போக போறது நம்ம ஹோட்டலுக்கு தான்”
“என்னது நம்ம ஹோட்டலுக்கா?”
“ஹம் ஆமா”
“இல்லை இல்லை வேண்டாம். பிளான் மாத்திக்கலாம். என்னை எங்க வீட்லே விட்டுரு. ஹோட்டல் எல்லாம் வேண்டாம்”, என்று சொல்லி பின் வாங்கினாள்.
“அப்படி வா வழிக்கு. நல்லதா போச்சு தப்பிச்சிட்டேன்”, என்று நினைத்தவன் கருணாகரனை அழைத்து மைதிலியை கூட்டிக் கொண்டு வருவதைக் கூறினான்.
எதை எதையோ யோசித்த படி வந்த மைதிலி சீட்டில் சாய்ந்து தூங்கி விட்டாள்.
அவள் தலையை தன்னுடைய தோளில் சாய்த்தவன் வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
“கொஞ்ச நேரத்தில் எப்படி பயமுறுத்திட்டா, ராட்ச்சசி”, என்று நினைத்து சிரித்தான் கண்ணன்.
மைதிலி வீட்டின் முன் காரை நிறுத்தியதும் அவள் தலையை எடுத்து சீட்டில் வைக்கும் போது கருணாகரன் வெளியே வந்து விட்டார்.
“பாப்பா எந்திரி, வீடு வந்துருச்சு”, என்ற கருணாகரன் குரலைக் கேட்டு கண் விழித்தவள் அவனைப் பார்த்த படியே இறங்கினாள்.
“உள்ள வாங்க மாப்பிள்ளை”, என்று அவர் அழைத்தாலும் “நான் நாளைக்கு வரேன் மாமா. நீங்க நல்லா தூங்குங்க”, என்றான் கண்ணன்.
“சரி மாப்பிள்ளை. பாத்து போங்க. நீ உள்ள வா மா”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார் கருணாகரன்.
அவனை பார்த்த படி நின்றவள் அருகில் சென்றவன் “போய் தூங்கு. குட் நைட்”, என்றான்.
“இதை அங்க இருந்தே சொல்லிருக்கலாமே. எதுக்கு இப்படி கிட்ட வந்து சொல்லிட்டு போறான்”, என்று மனதுக்குள் யோசித்தாலும் தலையை அசைத்து அவனை வழி அனுப்பினாள்.
நலுங்கிய உடையுடனும், கலைந்த தலையுடனும், கண்களில் தூக்க கலக்கத்துடனும் நின்றவளை கண்டு அடக்க முடியாமல் முத்தமிட அருகில் வந்தவன் சூழ்நிலை கருதி விலகிய உண்மையை யார் அவளுக்கு சொல்வது?
உள்ளே சென்ற போது “மாப்பிள்ளை பத்திரமா போய் சேரணும்”, என்று அம்மாவும் “நீ பஸ்ல வந்துருக்கலாம்ல டா. அப்பா கூப்பிட வந்துருப்பேனே”, என்று அப்பாவும் சொல்வதை கேட்டு கலக்கமானவள் “வீட்டுக்கு போனதும் ஒரு மெசேஜ் பண்ணுங்க”, என்று மெசேஜ் அனுப்பி வைத்தாள்.
அந்த அக்கறையை கண்டு கண்களில் நீர் கோர்த்தது கண்ணனுக்கு. வீட்டுக்கு வந்தவன் “பத்திரமா வீட்டுக்கு வந்துட்டேன்”, என்று அனுப்பி வைத்து விட்டே படுத்தான். 
காரில் உறங்கியதால் தூக்கம் வராமல் இருந்தாளா? இல்லை அவன் மெசேஜ்காக தூங்காமல் இருந்தாளா தெரியவில்லை. அவனுடைய மெசேஜ் வந்ததும் தான் தூங்க ஆரம்பித்தாள்.
காலையில் அவனுடைய போன் சத்தத்தில் தான் கண் விழித்தான் கண்ணன். அழைப்பது வேற யாராக இருக்கும்? மைதிலியே தான். 
“ஹாய் மைத்தி குட் மார்னிங்”
“குட் மார்னிங். எந்திச்சாச்சா?”
“இன்னும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு தான் எந்திரிக்கணும்”
“அதெல்லாம் நீங்க தூங்க முடியாது. அடுத்த ஒரு மணி நேரத்துல எங்க வீட்ல இருக்கணும்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
“என்ன டா அதிசயம்? அவ வீட்டுக்கு போனாலே போ போ ன்னு துரத்தி விடுவா. இன்னைக்கு அவளே கூப்பிடுறா “, என்று நினைத்தவனை “எப்படியும்  நீ தூங்கி எந்திச்சு அங்க தான போக போற? என்னமோ போகாத மாதிரி சீன் போடுற”, என்று சொல்லி சிரித்தது மனசாட்சி.
அவள் சொன்னது போல் ஒரு மணி நேரத்தில் மைதிலி வீட்டில் இருந்தான் கண்ணன். எப்போதும் போல் பெரியவர்கள் வரவேற்பார்கள் என்று அவன் நினைக்க, நடந்ததோ அவர்களை விட அதிகமான உற்சாகத்துடன் பளீர் புன்னகையுடன் அவனை மைதிலியும் வரவேற்றாள்.
அவனுக்கு காலை உணவை அவளே பரிமாறினாள். சாப்பிட்டு முடித்ததும் “மதிய சாப்பாடுக்கு வந்துருவோம் மா. போயிட்டு வரோம் பா”, என்று சொன்ன மைதிலி “வாங்க கிளம்பலாம்”, என்றாள்.
பெரியவர்களிடம் சொல்லி விட்டு இருவரும் காரில் ஏறினார்கள். சிறிது தூரம் சென்றதும் “நானே உன்னை வெளிய கூட்டிட்டு போகணும்னு தான் நினைச்சேன் மைத்தி. நீயே கிளம்பிட்ட? எங்க போகலாம்னு சொல்லு, போவோம்”, என்று புன்னகையுடன் கேட்டவன் முகம் அவள் சொன்ன பதிலைக் கேட்டதும் பேய்  அறைந்தது போல ஆனது. 
“இன்னைக்கும் அதிர்ச்சி ஆகிட்டியா? உங்க வீட்ல என்ன பேயா இருக்கு. உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக இப்படி பயப்படுற?”, என்று மைதிலி கேட்டதும் தன்னை சமாளித்தவன் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தினான்.
கேள்வியாக அவனை பார்த்தவளிடம் “ஒரு போன் பண்ணிட்டு வரேன்”, என்று சொல்லி காரில் இருந்து இறங்கி வாசுவை அழைத்தான்.
“என்ன இந்த நேரத்துல சார் கிட்ட இருந்து போன்?”, என்று நினைத்து வாசு எடுத்ததும் “அண்ணா மொத்தமா போச்சு அண்ணா”,என்றான் கண்ணன்.
“என்ன ஆச்சு சார்?”
“மைதிலி எங்க வீட்டுக்கு வரதுக்கு கிளம்பிட்டா”
“என்னது? உங்க வீட்டுக்கா?”
“ஹும் ஆமா, இப்ப நீங்க என்ன செய்யணும்னா?…”
“நீங்க சொல்லவே தேவை இல்லை சார். நீங்க ஒரு மணி நேரம் மட்டும் டைம் கொடுங்க. நான் பாத்துக்குறேன்”
“ஹும் சரி, கேர்புல்”, என்று சொல்லி போனை வைத்தவன் காரினுள் அமர்ந்தான்.
கண்ணன் போனை வைத்த அடுத்த நொடி வாசு அழைத்தது கண்ணனின் தங்கை சாருவைத்தான்.
தீண்டல் தொடரும்….

Advertisement