Advertisement

அத்தியாயம் 4
உன் நினைவுகள்
என்னை தீண்டிச் செல்லும் வேளை
என் உயிர் வரை சிலிர்க்கிறது!!!
காரை ஒட்டிக் கொண்டிருந்த கண்ணன் “எங்க போறோம்?”, என்று கூட கேட்காமல் தன்னுடன் வரும் அவளை பார்த்தான். அவளோ காரில் ஓடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டவாறு வந்தாள்.
கார் நின்றதும் கண்களை திறந்த மைதிலி திகைத்தாள். அவர்கள் வந்த டூரிஸ்ட் பஸ் அருகில் நின்றது. அனைவரும் அதில் ஏறிக் கொண்டிருந்தார்கள். கேள்வியாய் கண்ணனைப் பார்த்தாள்.
“அவங்க கூட போய் சுத்திப் பார்துட்டு வா”, என்றான் கண்ணன்.
“யாரோ நேத்து அவங்க கூட போக கூடாதுன்னு சொன்னாங்க?”, என்று கேட்டாள் மைதிலி.
“அது தான் நீ என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டியே? நீ என்னுடையவள்ன்னு தெரிஞ்ச அப்புறம் நான் எதுக்கு பொறாமை படணும்? உங்க கூட சுத்திக் காட்ட ஒரு ஆள் வருவாரு. அப்புறம் மதியம் எல்லாருக்கும் ஹோட்டல்ல சாப்பாடு சொல்லிருக்கேன். ஆனா மதியம் நாம ரெண்டு பேரும் உங்க வீட்ல போய் சாப்பிடணும். உன்னை கூப்பிட வருவேன். இப்ப பாத்து பத்திரமா போயிட்டு வா”, என்றான்.
இப்போதும் அவனை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் கீழே இறங்கினாள்.
இருவரும் ஜோடியாக நடந்து வருவதை பார்த்த பஸ்ஸில் இருந்தவர்கள் அவர்கள் ஜோடிப் பொருத்ததைப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
எல்லாரையும் பார்த்து புன்னகைத்த கண்ணன் டிரைவர் மற்றும் சுற்றிப் பார்ப்பவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். அனைவரும் அவனுக்கு பை சொல்லியதும் பஸ் கிளம்பியது. மைதிலியோ எந்த உணர்வையும் முகத்தில் காட்டாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய முகம் கண்ணில் மறையும் வரை அவனும் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பின்னர் தான் கிளம்பிச் சென்றான்.
மைதிலியோ அமைதியாக எதையோ யோசித்த படி சென்றாள். சிறிது நேரம் அமைதியாக சென்ற பஸ் சிறிது நேரத்தில் கலகலப்பானது.
மாற்றி மாற்றி அனைவரும் சாரி சொல்ல, மைதிலியும் சகஜமாக அவர்களுடன் பேச ஆரம்பித்தாள். இடை இடையே கண்ணனின் நினைவும் எழாமல் இல்லை.
மதியம் வரை பல இடங்களை சந்தோசத்துடன் சுற்றிப் பார்த்தனர். மதியம் இரண்டு மணிக்கு, அவளை அழைக்க அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து விட்டான் கண்ணன்.
“நாமளும் இவங்க கூடவே சாப்பிடலாமா? அம்மா கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிறலாம்”, என்றாள் மைதிலி.
“எனக்கு அங்க மாப்பிள்ளை விருந்து தயாராகிட்டு இருக்கு. அதை விட்டுட்டு இங்க யாராவது சாப்பிடுவாங்களா? அது மட்டும் இல்லை டா, ஹோட்டல்ல தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு. பிளீஸ் மா”, என்று அவன் சொன்னதும் மைதிலி அவனுடன் கிளம்பி விட்டாள்.
அவன் சொன்ன படி விருந்து தான் தயாராக இருந்தது. அவன் கண்களிலே அவன் ஆர்வத்தையும், பசியையும் கண்ட மைதிலி “அம்மா நாங்க சாப்பிட்டுக்குறோம். நீங்க ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி அனுப்பி விட்டாள்.
சிரித்துக் கொண்டே வேதவள்ளி சென்றதும் “எதுக்கு அத்தையை அனுப்புன? மாமாவையும் கூப்பிடு.எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்”, என்றான் கண்ணன்.
“எப்படியும் நாம சாப்பிட்ட அப்புறம் தான் அம்மா, அப்பா சாப்பிடுவாங்க. ஏன் நான் பரிமாறினா பிடிக்காதா?”
“நீ பரிமாறி நான் சாப்பிடக் கொடுத்து வச்சிருக்கணும் மைத்தி. நீயும் உக்காரு. சேர்ந்து சாப்பிடலாம்”
அவனுக்கு பரிமாறிய படியே அவளும் சாப்பிட்டாள். சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்று அவளுடைய நண்பர்களுடன் விட்டு விட்டு சென்று விட்டான்.
மாலை ஆனதும் அவளை வீட்டில் கொண்டு போய் விட்டவன் இரவு சாப்பாட்டையும் மைதிலி வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் சென்றான். அடுத்த நாளும் இதுவே தொடர்ந்தது.
மூன்றாவது நாள் அனைவரும் கிளம்பினார்கள். அவர்களை வழியனுப்ப மைதிலியை அழைத்து வந்தான் கண்ணன்.
பஸ் கிளம்பும் முன் “நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும். கண்ணன் சார் தான் உனக்கு பொருத்தம்”, என்றான் ரவி.
“முன்னாடி அப்படி சொன்ன. இப்ப இப்படி சொல்ற? என்னை யார் கூடவாது ஜோடி சேத்துட்டே இருக்கணுமோ ரவி?”, என்று கேட்டாள் மைதிலி.
“லவ்வர்ஸ்னாலே கண்டிப்பா சேரணும்னு தான் எல்லாரும் நினைப்போம்.  எப்படியோ நீ சந்தோஷமா இருக்கணும் மைதிலி. உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டோம். ரொம்ப சாரி. காலேஜ்ல பாப்போம்”, என்றான் ரவி.
அனைவரும் பை சொன்னதும் பஸ் கிளம்பி சென்றது. அவளை அழைத்துக் கொண்டு மைதிலி வீட்டுக்குச் சென்றான் கண்ணன்.
அடுத்து வந்த நாட்கள் முழுவதும் காலையில் அவளை பார்க்க வருபவன், காலை உணவை அங்கேயே முடித்து விட்டு வேலையை பார்க்க சென்று விடுவான். பின் மாலை வருபவன் இரவு உணவையும் முடித்து விட்டுத் தான் அவனுடைய வீட்டுக்கு செல்வான்.
மைதிலி அவனுடன் கலகலவென்று பேச மாட்டாள் தான். ஆனால் அவன் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பாள். சில நேரம் வேதவள்ளி மற்றும் கருணாகரனுடன் பேசிக் கொண்டிருப்பான்.
இரவு உணவுக்கு மைதிலியை வெளியே அழைத்துச் செல்வான். லீவ் முடிந்து மைதிலி காலேஜ் கிளம்பும் போது “நான் மைதிலியை பஸ் ஏத்தி விடுறேன் மாமா”, என்று சொல்லி அழைத்துக் கொண்டு வந்தான் கண்ணன்.
காரில் செல்லும் போது இருவருக்குள்ளும் மௌனமே ஆட்சி செய்தது. என்ன பேசவேன்று தெரியாமல் அவளும், அவள் பிரிவை தாங்க முடியாமல் அவனும் அமைதியாக வந்தார்கள்.
மைதிலிக்கு அவனை பிரிய போவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை தான். ஆனால் அவன் முகத்தில் இருந்த சோகம் அவளை எதுவோ செய்தது. தனக்காக தான் அந்த தவிப்பு என்று புரிந்த போதும் அவனை அன்னியனாகவே தான் அவள் மனது எண்ணியது.
அவனால் காதலிக்க படுவது பிடித்திருந்தாலும், அவன் மீது அவளுக்கு எந்த காதல் எண்ணமும் ஏற்படாத நிலையில் பொய்யாக அவனிடம் பேச விரும்ப வில்லை.
ஆனால் அவனோ உன்னை பிரிஞ்சு எப்படி இருப்பேன்னு ஒரு வார்த்தை அவள் வாயில் இருந்து வராதா என்று தவம் இருந்தான்.
பஸ் ஸ்டண்ட் வந்தே விட்டது. அவள் இறங்கியதும் அவள் பையை எடுத்துக் கொண்டு அவனும் இறங்கினான்.
“நான் வேணும்னா உன்னை காலேஜ்ல கொண்டு வந்து விடவா மைத்தி?”, என்று கேட்டான் கண்ணன்.
அவன் கேள்வியில் இருந்த யாசிப்பு, கண்களில் இருந்த தவிப்பை பார்த்தவள் “சரி”, என்று சொல்லி மறுபடியும் காரில் ஏறி அமர்ந்தாள்.
அதுவே அவனுக்கு பெரிய சாதனை என பட சந்தோசமாய் காரை ஓட்டினான்.
மறுபடியும் மௌனமே ஆட்சி செய்தது. கார் பைபாசில் நுழைந்ததும் “மறுபடியும் எப்ப லீவு இருக்கும்?”, என்று கேட்ட கண்ணன் அவளிடம் இருந்து பதில் வராததால் அவளை திரும்பிப் பார்த்தான்.
அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் தலை அங்கு இங்கு என்று ஆடிக் கொண்டிருந்தது. ஒரு புன்னைகையுடன் அதை பார்த்தவன் அவள் தலையை எடுத்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான்.
காலேஜ் வருவதற்கு சற்று முன்பே கண் விழித்த மைதிலி தான் அவனுடைய தோளில் சாய்ந்திருப்பதைக் கண்டு முகம் சிவக்க தலையை திருப்பிக் கொண்டாள்.
சிறிது நேரம் அவளிடம் பேசாமல் இருந்தவன் “மறுபடியும் எப்ப வருவா மைதிலி?”, என்று கேட்டான்.
“தெரியலை, எப்ப தோணுதோ, லீவ் இருந்தா வந்துருவேன்”
“வந்தா போன்… நீ போன் பண்ண மாட்ட. ஒரு மெசேஜ் அனுப்பி விடுவியா பிளீஸ்?”
அவன் பிளீஸ் சொன்னதால் எதுவும் கஷ்டபடுத்தாமல் “சரி”,என்று மட்டும் சொன்னாள்.
“ஸ்நாக்ஸ் எதுவும் வாங்கணுமா?”
“ஆமா வாங்கணும். பணம்….”, என்று அவள் எதுவோ சொல்ல வரவும் “பிளீஸ் பணம் தரேன்னு  சொல்லி அசிங்க படுத்திராத. நானே வாங்கி தரேன்”, என்றான்.
“பாசக்கார பயபுள்ள”, என்று எண்ணியவள் “பணம் நீங்க தான் கொடுக்கணும்னு தான் நானும் சொல்ல வந்தேன்”, என்று சிரித்தாள்.
“தேங்க்ஸ்”, என்று சொல்லிய படியே ஒரு பெரிய கடை முன்பு வண்டியை நிறுத்தியவன் “நீயும் வா, உனக்கு பிடிச்சதை வாங்கு”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.
அவளுக்கு பிடித்ததை சொல்லியது போக, அவனும் அவள் “போதும் போதும்”, என்று சொல்ல சொல்ல வாங்கிக் கொடுத்தான்.
காலேஜ் வருவதற்க்கு முன்பே காரை நிறுத்தி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு வலித்ததோ என்னவோ அவனுக்கு உயிரே தன்னை விட்டுச் செல்வது போல வலித்தது.
“இவன் விட்டா கண்ணுல இருந்து வாட்டர்ஃபால்ஸ் திறந்துருவான் போலவே?”, என்று எண்ணியவள் “நீங்க கிளம்புங்க, நான் கால் பன்றேன்”, என்றாள்.
“சரி, நான் கிளம்புறேன். நீ ஃபோன் பண்ண மாட்டன்னு தெரியும். இருந்தாலும் பண்ணுவேன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ். ஒரு வாரம் மேல உன் கூடவே இருந்துட்டேனா? அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. பை. நீ நல்லா சாப்பிடு”, என்றான்.
“நீங்களும் நல்லா சாப்பிடுங்க. முன்னாடி மாதிரி சாப்பிடாம இருக்காதீங்க”
“ஒரு வாரம் உங்க வீட்ல சரியான சாப்பாடு. உடம்பு எடை கூட கூடுன மாதிரி இருக்கு. இனி அப்படி சாப்பிட முடியாது”
“நீங்க சும்மா ரீல் சுத்தாதீங்க. நல்லா சாப்பிடாம தான் கையில ஆர்ம்ஸ் எல்லாம் வச்சி பிட்டா இருக்கீங்களோ?”, என்று கேட்டவள் கேட்ட பின்னர் தான் என்ன உளறினோம் என்பதையை சிந்தித்தாள்.
அதிர்ந்து அவனை அவள் பார்க்கும் போதே அவளை நெருங்கி விட்டான் கண்ணன். அவன் கண்களில் இருந்த மின்னலே தான் சொல்ல கூடாததை சொல்லி அவனை ஏற்றி விட்டது புரிந்தது. பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு அவன் உடம்பை ரசித்ததை சொன்னால் அவன் அப்படி பார்க்காமல் என்ன செய்வான்?
எங்கே முத்தமிட்டு விடுவானோ என்று பயந்து கன்னங்கள் இரண்டையும் பொத்திக் கொண்டாள்.
அவள் செய்கையைக் கண்டு வாய் விட்டே நகைத்தவன் அவள் சற்றும் எதிர்பார்க்காத அவள் இதழ்களைச் சிறை செய்தான். அசைய மறந்து இருந்தவளை விட்டு விலக முடியாமல் விலகினான் கண்ணன்.
சிலை போல் இருந்தவளை பார்த்து புன்னகைத்தவன் காரை ஹாஸ்டல் முன்பு நிறுத்தி விட்டு “லவ் யு பேபி. ஒழுங்கா சாப்பிடு”, என்றான்.
அவளோ எதுவோ கனவில் மிதப்பது போல நடந்து சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும் தான் காரை எடுத்துக் கொண்டு சென்றான் கண்ணன்.
தன்னுடைய அறைக்கு சென்றவளோ கட்டிலில் படுத்து விட்டாள். காரை ஒட்டிக்கொண்டிருந்த கண்ணனுக்கோ மனம் வெறுமையாக இருந்தது. இத்தனை நாட்கள் அவள் அவனுடன் இருந்ததால் தான் உயிர்ப்புடன் இருந்தான்.
இனி பழைய படியே வாழ்க்கை நகரும். வரும் போது எவ்வளவு மெதுவாக காரை ஒட்டிச்சென்றானோ, போகும் போது அவ்வளவு வேகமாக சென்றான்.
கலகலப்பில்லாமல் வீட்டினுள் நுழைந்தவனைக் கண்டு அருணுக்கும் சாருவுக்கும் வருத்தமாக இருந்தது. ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் சிரித்தது.
அன்று இரவு தனக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த சாருவின் முகம் கலையிழந்து இருக்கவும் “என்ன டா மா ஆச்சு?”, என்று பரிவுடன் கேட்டார் கண்ணன், சாரு, அருண் மூவரையும் பெற்ற தந்தை மாணிக்கவேல்.
“அண்ணன் மறுபடியும் அதே மாதிரி ஆய்ட்டாங்கப்பா. கஷ்டமா இருக்கு”
“இது நிரந்தரம் இல்லை டா அம்மு. சனியன் வீட்டை விட்டு போனதும் சரியாகிரும். இல்லைன்னா தேவதை வீட்டுக்கு வந்தாலும் உன் அண்ணன் சரியாகிருவான்”
“சரிப்பா. நீங்க இருங்க. நான் மாத்திரை கொண்டு வரேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள்.
தான் செய்த தவறுக்கு தன்னுடைய மகன் சிலுவை சுமப்பதை நினைத்து அவர் கண்களில் நீர் வடிந்தது.
ஹாஸ்டலில் தூங்கிக் கொண்டிருந்த மைதிலி எழுந்து பார்க்கும் போது அவளையே பார்த்த படி இருந்தார்கள் அவளுடைய தோழிகள். 
அவர்களை பார்த்து புன்னகைத்தாள் மைதிலி. அவள் சிரித்ததும் அவர்களும் சகஜமானார்கள்.
“சாரி”, என்றாள் பிரேமா.
“அதெல்லாம் மறந்துடுங்க”, என்றாள் மைதி[லி.
சரி சாப்பிட போகலாமா?”, என்று கேட்டாள் ஆர்த்தி.
“என்ன சப்பாடா? மணி எத்தனை?”, என்று கேட்டாள் மைதிலி.
“மணி எட்டு. நாங்க வந்தது கூட தெரியாம அப்படி தூக்கம் உனக்கு”, என்றாள் பிரேமா.
“ஐயோ, இவ்வளவு நேரமா தூங்கிட்டேன்? அம்மா அப்பாக்கு கூட ஃபோன் பண்ணலையே. இருங்க பேசிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கருணாகரனை அழைத்தாள்.
அவர் எடுத்ததும் “அப்பா சாரிப்பா. வந்து தூங்கிட்டேன்”, என்று குற்றவுணர்ச்சியுடன் சொன்னாள் மைதிலி.
“பரவால்ல மா. மாப்பிள்ளை உன்னை விட்டதுமே ஃபோன் பண்ணிட்டார். அவர் தான் கூட்டிட்டு போனாராமே”
“ஆமா பா”
“சரி டா”
“அம்மா என்ன செய்ராங்கப்பா?”
“அவ அடுப்படில இருக்கா”
“சரிப்பா நான் அப்புறம் பேசுறேன்”
சரி போய் சாப்பிடு”, என்று அவர் சொன்னதும் போனை வைத்து விட்டு அவர்களுடன் சாப்பிடச் சென்றாள்.
தோழிகளும் பழைய படி பேசியதால் உற்சாகமாகவே சாப்பிட்டாள் மைதிலி.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்ததும் இருவரும் கதை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
“சொல்லு எப்ப கல்யாணம் ஆச்சு?”
…..
“ஆக்சிடெண்ட் முன்னாலே ஆச்சா?”
….
“லவ் மேரேஜா?”
….
“உங்க அம்மா அப்பா முன்னாடியே ஒத்துக்கிட்டாங்களா?”
…..
“அவங்க வீட்டுக்கு போய்ருக்கியா?”
இப்படி மாற்றி மாற்றி இருவரும் கேள்வியை எழுப்பினார்கள். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் “கேள்வியை கேட்டு முடிச்சிட்டீங்களா? இல்லை இன்னும் இருக்கா? உண்மையை சொல்லப் போனா உங்க கேள்வி எல்லாத்துக்கும் சத்தியமா எனக்கு பதில் தெரியாது. மயக்கம் தெளிஞ்சு எழுந்தேன். எல்லாரும் எல்லாரையும் பத்தி சொன்னாங்க. கல்யாணம்னு சொன்னது அதிர்ச்சி தான். அப்புறம் அவங்களை ரொம்ப மீட் பண்ணது இல்லை”, என்றாள்.
“இப்படி சொல்ற? ஆனா ஸ்டேஜ்ல அப்படி உருகி உருகி பாடின?”
“அதுவா? நான் எங்க அக்கா கிட்ட சொன்னேன். இப்படி புரோகிராம் இருக்குனு. அவளும் கண்ணனும் கிளாஸ்மெட். சோ அவ சொல்லிருப்பா போல. உடனே கண்ணன் எனக்கு அந்த பாட்டைப் பாடி அனுப்பினாங்க. என்னை விட சூப்பரா பாடுவாங்க. இரு போட்டுக் காட்டுறேன்”, என்று சொல்லி அவன் பாடியதை போட்டுக் காண்பித்தாள்.
அதில் ஆரம்பித்ததுமே “என்னுடைய இதய தேவதைக்கு சமர்ப்பணம்”, என்று ஆரம்பித்து தான் பாடலைப் பாடி இருந்தான்.
அதைக் கேட்டு பிரம்மித்துப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
“சூப்பர் டி, அந்த அண்ணாவுக்கு செம வாய்ஸ். ஆளும் சூப்பரா இருக்காங்க”, என்றாள் பிரேமா.
“நீ கொடுத்து வச்சவ?”, என்றாள் ஆர்த்தி.
“எங்களுக்கு எல்லாம் தெரியாம எப்படி அவங்க கிட்ட பேசுவ?”, என்று கேட்டாள் பிரேமா.
“நான் எங்க பேசுவேன். அதான் சொன்னேனே? ரொம்ப பேச மாட்டேன். அதிகம் பார்த்தது கூட இல்லை. இந்த தடவை தான் பேசவே செஞ்சிருக்கேன். ஒரு தடவை அவங்க இண்டஸ்ட்ரீஸ்க்கு கூட்டிட்டு போனாங்க. அப்பா அம்மா அனுப்பி வச்சாங்க. விருப்பம் இல்லாம தான் போனேன். போன அப்பறம் தான் தெரிஞ்சது. அதுவே என் பேர்ல தான் இருக்குன்னு. அவங்களை பத்தி எனக்கு எதுவுமே நினைவு இல்லை. ஆனா நிறைய குழப்பம் வரும். அம்மா அப்பா கிட்ட கேட்டா மாப்பிள்ளை சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டார்ன்னு சொல்லிருவாங்க. அக்காங்க கிட்ட கேட்டா நான் இப்படி எல்லாம் கேட்பேனு தெரிஞ்சே ஃபோன் எடுக்க மாட்டிக்காங்க”
“நீ ஏன் மத்தவங்க கிட்ட கேக்குற? சம்மந்தப் பட்ட ஆள் கிட்ட யே கேக்க வேண்டியது தான?”, என்று கேட்டாள் ஆர்த்தி.
“கண்ணன் கிட்டயா?”
“ஆமா, நீ அவங்க பொண்டாட்டி தானா? அவங்க கிட்ட கேளு. உன்னை பத்தி, அவங்களை பத்தி, உங்க கல்யாணத்தை பத்தி எல்லாமே கேளு. அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லு. மனைவியா நடந்துக்கோ மைதிலி, இது உன் வாழ்க்கை. நாளைக்கு பழசு எல்லாம் நினைவு வராமலே போகலாம். அதனால நீ மனசு விட்டு அண்ணா கிட்ட பேசு”, என்றாள் பிரேமா.
“ஆமா இப்பவே பேசு. நாங்க கவி ரூம் வரைக்கும் போயிட்டு வரோம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்.
முதல் முறையாக போனில் கண்ணனை அழைத்தாள் மைதிலி.
அவனுடைய ஆபீஸ் கேண்டீனில் இட்லியை வேண்டா வெறுப்பாக விழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு போனில் “வொய்ஃப் காலிங்”, என்று வந்ததைப் பார்த்ததும் பொறையேறியது.
தீண்டல் தொடரும்….

Advertisement