Advertisement

கண்ணனின் புன்னகையை கண்டு தங்கையும், தம்பியும் சந்தோசத்தில் திளைத்தார்கள் என்றால் ஒரு ஜோடி கண்கள் அதை வெறித்து நோக்கின.
இது எதையும் அறியாமல் மைதிலியை நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தான் கண்ணன்.
அவனின் நாயகியோ “இவன் பீல் பண்ணக்கூடாதுன்னு நான் இவன் நல்லவன், வல்லவன், அழகன்னு பேசினா இவன் எனக்கே உம்மா கொடுத்துட்டு போய்ட்டானே. நாளைக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு”, என்று வாய் விட்டே புலம்பினாள்.
“ஆமா அவன் கொடுக்கும் போது வாயை பிளந்து நின்னுட்டு இப்ப பேச்சை பாரு”, என்று காறித்துப்பிய மனசாட்சியை கண்டு கொள்ளாமல் அவளுடைய அக்கா ரேணுகாவை போனில் அழைத்தாள்.
ஃபோன் அடிக்கவும் எடுத்துப் பார்த்த ரேணுகா, அது மைதிலி என்று காட்டியதும் “ஐயையோ குட்டிச்சாத்தான்”, என்று அலறி விட்டு போனை கட் செய்தாள்.
கட் ஆன போனை வெறித்துப் பார்த்த மைதிலி “நான் ஃபோன் பண்ணுவேன்னு சொல்லிருப்பானோ? அதான் கட் பண்ணி விடுறாலோ?”, என்று எண்ணினாள்.
அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் அவள் வயிறு கூப்பாடு போட்டது.
வெளியே வந்தவளை வயிறார சாப்பிட வைத்தாள் வேதவள்ளி. சாப்பிட்டு முடித்ததும் அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்தவள் எப்போதும் கேட்கும் கேள்வியை கேட்க ஆரம்பித்தாள்.
“எனக்கு எப்படி மா கல்யாணம் ஆச்சு? அக்கா எல்லாம் இருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி சீக்கிரம் ஆச்சு? கண்ணன் எப்படி மாப்பிள்ளை ஆனார்?”, என்று மைதிலி கேட்டதும் கருணாகரனை ஒரு பார்வை பார்த்த வேதவள்ளி “இதை எல்லாம் மாப்பிள்ளை உன்கிட்ட சொல்லக்கூடாது, அவளுக்கே நினைவு வரட்டும்னு சொல்லிட்டாருன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன். தூக்கம் வந்தா உள்ள போய் பாடு”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.
பதில் வராது என்று தெரிந்தும் கேள்வி கேட்ட தன்னுடைய மடத்தனத்தை நொந்தவாறே கருணாகரனைப் பார்த்தாள்.
அவள் பார்வையைக் கண்டதும் “அப்பா, கடைக்குப் போயிட்டு வரேன் பாப்பா”, என்று சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார்.
விடை தெரியா பல கேள்விகளுடன் தன்னறைக்கு வந்தவள் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தாள்.
அங்கே பல அழகான இனிய கவிதைகளை அவளுக்கு அனுப்பி இருந்தான் அவளின் கண்ணன்.
“பெரிய காதல் மன்னன்னு நினைப்பு”, என்று உதட்டைச் சுளித்தாலும் அந்த கவிதைகளை ரசித்துப் படிப்பதை நிறுத்தவில்லை அவள்.
அவனைப் பற்றிய நினைவுகளுடனே கண்ணயர்ந்தாள் மைதிலி.
அழகான மாலைப் பொழுதில் அவ்வப்போது கைகளை நீட்டி, “ஸ், ஆ”, என்று மழை நீரின் ஸ்பரிசத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் மைதிலி.
“அங்கே நின்னு ரசிக்க கூடாது டி செல்லம். இங்க வந்து இப்படி நனைஞ்சிட்டே ரசிக்கணும்”, என்று புன்னகையுடன் மழை நீரில் நனைந்து கொண்டே கூறினான் கண்ணன்.
“ஐயோ காய்ச்சல் வரும் பா. அது கூட பரவால்ல. இந்த இடி மின்னல் வேற திடீர்னு வரும். நான் வரலை”, என்று மறுத்தவளை இழுத்து மழை நீரில் விட்டவன் “காய்ச்சல் வந்தா உன்னைக் கவனிக்கத் தான் நான் இருக்கேன்ல? அப்புறம் இன்னைக்கு இடி மின்னல் வராது”, என்றான்
மழை நீரில் நனைந்து உடல் வெட வெடக்க நின்றவளின் தோள் தொட்டு அணைத்துக் கொண்டான் கண்ணன்.
இன்னும் நடுங்கியவளின் முகம் நிமிர்த்தி அவள் கூந்தலை இறுக்கிப் பிடித்து அவள் இதழ் மீது முத்தமிட்டான்.
அடுத்த நொடி “ஐயையோ!”, என்ற அலறலுடன் கண் விழித்தாள் மைதிலி.
 “ச்சி இது என்ன இப்படி எல்லாம் கனவு வருது? எல்லாம் அவன் கொடுத்த முத்ததால வந்தது”, என்று எண்ணியவள் கடுப்புடன் நினைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலை பத்து மணி போல் மைதிலி வீட்டுக்கு வந்து விட்டான் கண்ணன். பெற்றோர்கள் அவனை அன்பாக கவனிக்க மைதிலியோ அவனை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தாள்.
அவனுக்கு குழந்தை முறுக்கி கொள்வது போல தான் இருந்தது அவள் பார்வை.
“சாப்பிடுறீங்களா மாப்பிள்ளை?”, என்று கேட்டாள் வேதவள்ளி.
“இல்லை அத்தை வீட்ல சாபிட்டுட்டேன். மைதிலியை வெளிய கூட்டிட்டு போகணும். அதான் வந்தேன்”, என்றான் கண்ணன்.
“உங்க பொண்டாட்டியைக் கூட்டிட்டு போக எதுக்கு தயக்கம்? மைதிலி குளிச்சிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்பு”, என்று வேதவள்ளி சொன்னதும் அவனை ஒரு முறை முறைத்து விட்டு குளிக்க சென்றாள்.
அவள் சென்றதும் கருணாகரனுடன் பேசிக் கொண்டிருந்தான் கண்ணன். அவரும் “மதியம் நம்ம வீட்ல தான் சாப்பிடணும் மாப்பிளை. நான் போய் சாமான் எல்லாம் வாங்கிட்டு வரேன். நீங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
அவர் சென்றதும் போனை பார்த்த படி அமர்ந்து விட்டான். வேதவள்ளியும் அவர்களுக்கு தனிமை கொடுக்க பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டாள்.
போனை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் முன் எதுவோ நிழலாட நிமிர்ந்து பார்த்தான். குளித்து முடித்து ஒரு சுடிதார் அணிந்து புது மலர் போல வந்தாள் அவன் மனைவி. அவளையே இமைக்காமல் பார்த்தான்.
“இவன் இப்படி பாத்தே என்னை வெக்க பட வச்சிருவான் போலவே”, என்று நினைத்துக் கொண்டு சமையல் அறைக்கு சென்ற மைதிலி, நான்கு இட்லி மற்றும் சட்னி வைத்து எடுத்து வந்து அவனுக்கு எதிரே தரையில் அமர்ந்தாள். பின் ரிமோட் எடுத்து டி‌வி யை பார்த்த படி சாப்பிட ஆரம்பித்தாள்.
இரண்டு வாய் எடுத்து வைத்தவள் என்ன நினைத்தாளோ அவனை நிமிர்ந்து பார்த்து  “நீங்க சாப்பிட்டுட்டீங்களா?”, என்று கேட்டாள்.
அவள் கேள்வி அவனுக்கு கண்ணீரை வரவழைக்க அதை மறைக்க முடியாமல், கண்ணில் நீரோடு “நான் காலைல எப்பவுமே சாப்பிட மாட்டேன். என்னை இது வரைக்கும் சாப்பிட்டுட்டியான்னு கேக்க மாட்டாங்க. உங்க வீட்ல தான் கேக்குறீங்க? தேங்க்ஸ்”, என்றான்.
“சாப்ட்டாச்சான்னு தான கேட்டேன்? எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்குறான்? சாப்பாடு வேணும்னு சொல்றானா? வேண்டாம்னு சொல்றானா?”, என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவன் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் அவள் மனதை என்னவோ செய்ய அவனை மறுபடியும் நிமிர்ந்து பார்த்தாள். அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னவென்று கண்களால் கேள்வியை எழுப்பினாள். “நான் ஒண்ணு கேக்கட்டா மைத்தி? நீ என்னை தப்பா நினைக்க கூடாது”, என்றான்.
“கேளுங்க”
“எனக்கு ஏதாவது சாப்பிட தாயேன். எனக்கு ரொம்ப பசிக்குது”, என்று சொல்லி முடிக்கும் முன்பே அவனுக்கு வார்தைகள் திக்கியது.
அதிர்ந்து விழித்தவளின் கண்களிலும் கண்ணீர் பெருகியது. அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தவள் தட்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
தன்னுடைய நிலையை எண்ணி நொந்தவாறே கண்ணில் துளிர்த்த நீரை துடைத்தவன் முன்பு மூன்று இட்லி உள்ள தட்டை நீட்டினாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவனிடம் “பார்வை எல்லாம் அப்புறம். முதல்ல சாப்பிடுங்க”, என்று சொல்லி தட்டைக் கொடுத்தாள்.
புன்னகையுடன் அதை பெற்றுக் கொண்டவன், சாப்பிட ஆரம்பித்தான். அவன் இட்லியை உண்டு முடிப்பதற்க்குள் ஆவி பறக்க மொறு மொறு தோசையைக் கொடுத்தாள்.
அவள் கொடுக்க கொடுக்க சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். அவனைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் சிந்தனை வயப்பட்டாள் மைதிலி.
சாப்பிட்டு முடித்தவன் ஒரு நிறைவான புன்னகையுடன் “தேங்க்ஸ்”, என்றான்.
ஏனோ அந்த நொடி “எதுக்கு டா கலங்குற? உனக்காக நான் இருக்கேன்”,என்று அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்தது மைதிலிக்கு.
அவளுடைய எண்ண ஓட்டத்தை தடை செய்வது போல் “போகலாமா மைத்தி?”, என்று கேட்டான் கண்ணன்.
வேதவள்ளியிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.
தீண்டல் தொடரும்….

Advertisement