Advertisement

அத்தியாயம் 3
ஒரு நொடியேனும்
தீண்டிச் செல்,
மரணத்தையே ரசிப்பேன் நான்!!!
“எப்படி பாவமா பாக்குறான்? ஆனா செய்றது எல்லாம் வில்லத்தனம் மாதிரியே இருக்கே? இவன் நல்லவனா கெட்டவனா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டே அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் மைதிலி.
“இவ ஏன் இப்படி குறுகுறுன்னு பாக்குறா? கண்டு பிடிச்சிருப்பாளோ? இருந்தாலும் கடவுள் எனக்கு இவ்வளவு புத்திசாலி பொண்டாட்டியை கொடுத்துருக்க வேண்டாம்”, என்று மனதில் எண்ணிக் கொண்டான் கண்ணன்.
இவர்களை அதிகம் யோசிக்க விடாமல் “ஏய், அப்பா சொல்றாருள? மாபிள்ளையை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்று இருவரின் சிந்தனையையும் கலைத்தாள் வேதவள்ளி.
அதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் இருந்தால் பெற்றோரிடம் மண்டகப்படி கிடைக்கும் என்பதால் “வாங்க”, என்று அவனை பார்த்து சொல்லி விட்டு முன்னே நடந்தாள்.
அறைக்குள் சென்றதும் அவனை திரும்பி பார்த்தவள் “பாத்ரூம் இங்க இருக்கு. யூஸ் பண்ணிக்கோங்க”, என்றாள்.
“அவளே கிளீன் பண்ணி விடுவான்னு ரொம்ப பேராசை படாத கண்ணா”, என்று மனசாட்சி எடுத்துரைத்ததும் அவனே உள்ளே சென்றான்.
சட்டையை கழற்றி, அதை நீரில் அலசியவன் அதை வெளியே எடுத்துக் கொண்டு வந்தான்.  
வெள்ளை பணியனோடு அவன் வருவான் என்று மைதிலி சத்தியமாக எதிர் பார்க்க வில்லை. அவளை அறியாமலே அவள் தலை தானாக வெட்கத்தில் திரும்பிக் கொண்டது. அவளுடைய மனநிலை புரியாதவனோ “மைதிலி இதை இந்த சேர்ல போட்டுக்கவா?”, என்று கேட்டான்.
தன்னை சமாளித்துக் கொண்டவள் “போட்டுக்கோங்க. நான் ஒன்னும் அடிக்க மாட்டேன். பயப்பட வேண்டாம்”, என்றாள்.
“இவளுக்கு வாய் ஜாஸ்தி”, என்று நினைத்துக் கொண்டான்.
அப்பா கைலி எடுத்துக் கொடுக்க சொன்னது நினைவில் வந்து “கைலி வேணுமா?”, என்று கேட்டாள்.
“இல்லை வேண்டாம். இப்ப வீட்டுக்குத் தான் போறேன். அங்க போய் குளிச்சிக்கிறேன்”, என்று அவளை தர்மசங்கட படுத்த விரும்பாமல் சொன்னான்.
அங்கிருந்த சேரில்  சட்டையை காய வைத்திருந்ததால் “இந்த கட்டில்ல உக்காரலாமா?”, என்று கேட்ட கண்ணன் அவள் எதுவோ சொல்ல வரவும் “அடிக்க மாட்டேன்னு தான சொல்ல வர?”, என்று சொல்லி சிரித்துக் கொண்டே அங்கு அமர்ந்தான்.
“நீயும் இங்க வாயேன் மைத்தி. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று அழைத்தான்.
பதில் எதுவும் சொல்லாமல் அவனுக்கு அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள் “சொல்லுங்க, என்ன பேசணும்?”, என்று கேட்டாள்.
“இவ எப்ப வாங்க போங்கன்னு பேச ஆரம்பிச்சா?”, என்று நினைத்தவன் “உன்னோட ரெண்டு சந்தேகத்துக்கும் பதில் சொல்ல போறேன்”, என்றான்.
“சொல்ல மாட்டீங்கன்னு நினைச்சேன். பரவால்ல சொல்லணும்னு தோணுச்சே. அதுவரைக்கும் சந்தோஷம், சொல்லுங்க. விஷ்ணு பத்தி உங்களுக்கு யார் சொன்னா?”
“ரேணு தான் சொன்னா. பிளீஸ் அவளை எதுவும் சொல்லாத”
“இந்த அக்கா கிட்ட எதையுமே இனி சொல்லக் கூடாது. எல்லாத்தையும் அந்த லூசு இவன் கிட்ட உளறி வச்சிருது. ரேணுவாம் ரேணு. இவன் தான் பேரு வச்ச மாதிரி செல்ல பேர் வச்சி கூப்பிடுருதை பாரு”, என்று அவள் மனதில் நினைக்கும் போதே “உன்னையும் தான் அவன் மைத்தின்னு கூப்பிடுறான்”, என்றது மனசாட்சி.
“ஹான், அப்ப அவளும் நானும் இவனுக்கு ஒண்ணா?”
“ஹேய், உன்னோட அக்கா மேலயே உனக்கு பொறாமையா? அந்த அளவுக்கு இவனை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்ற மனதின் கேள்விக்கு “ஒரு ஆமையும் இல்லை. அவனோட கிளாஸ்மேட் தான் ரேணு. அதனால தான் அப்படி கூப்பிடுறான். ஆனா என்னை கூப்பிடுறது….”, என்று அவள் மனசாட்சியுடன் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே “இரண்டாவது கேள்விக்கு சத்தியமா உன்னை அவங்க கூட சுத்தி பாக்க அனுப்பாததுக்கு காரணம் பொறாமை தான் மைத்தி”, என்றான் கண்ணன்.
தன்னுடைய நினைவுகளில் இருந்து கலைந்தவள் “என்ன இவன் இப்படி பொசுக்குன்னு பொறாமைன்னு உண்மையை ஒத்துக்கிட்டான்?”, என்று எண்ணினாள்.
“என்ன பாக்குற? பொண்டாட்டிக்காக பொறாமை வராம வேற யாருக்காக மைத்தி வரும்? பொறாமை, போட்டி, கோபம் இந்த கெட்ட குணம் எல்லாம் உனக்காக மட்டும் தான் மைத்தி எனக்கு வரும். ஏன்னா நீ எனக்கு அவ்வளவு முக்கியம். உனக்காக என்னால முடிஞ்ச அத்தனையும் செய்வேன். யு ஆர் மைன் மைத்தி. எந்த காரணத்துக்காகவும் என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது. அது ரொம்ப வலிக்கும். நீ இப்ப என்னை விட்டு தள்ளி நிக்குறதே எனக்கு எப்படி வலிக்குதுன்னு தெரியுமா?”
அவன் கூறியது அனைத்தையும் கேட்டவள் திகைத்துப் போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பற்றி அவளுக்கு எதுவுமே நினைவில்லை. அப்படி இருக்கும் போது அவனோ அவள் தான் அவனுடைய வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
“என்ன டா, இவ்வளவு ஒப்பனா உன்கிட்ட வழியுறேன்னு யோசிக்கியா மைத்தி? உன்கிட்ட நான் ஸ்டேட்டஸ் பாக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்?”, என்றான் கண்ணன்.
குரலில் எந்த உணர்வையும் காட்டாமல் “என்ன சந்தேகம்?”, என்று கேட்டாள் மைதிலி.
“நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலையா மைத்தி? விஷ்ணு மாதிரி வேற பையனை கல்யாணம் பண்ணிருக்கணும்னு நினைக்கிறியா? ஒரு வேளை விஷ்ணுவே உன் மனசில் இருக்காரா? நம்ம கல்யாணத்தை காரணம் காட்டி நீ யோசிக்கிறியா?”, என்று கேட்டான் கண்ணன்.
அவன் கண்களில் வலியை கண்டவள் “இந்த கேவலமான பேச்சை இனி பேசினா நான் மனுசியா இருக்க மாட்டேன்”, என்று கடுப்புடன் சொன்னாள்.
ஒரு விட தவிப்போடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். அவனை அதிகம் வாட்டாமல் “நீ எதுக்கு லூசு மாதிரி யோசிக்கிற? விஷ்ணு மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் நான் உன் பொண்டாட்டி அப்படிங்குறது தான் சத்தியமான நிஜம். நான் உன்னை விட்டு விலகி தான் இருக்கேன். உன்னை விட்டு ஒதுங்கி இருக்கல புரியுதா?”, என்றாள்.
…..
“என்னோட நிலைமை உனக்கு தெரியும் தான? என்னோட வாழ்க்கைல நடந்த நிறைய விஷயங்களை நான் மறந்துட்டு நிக்குறேன். இது தான் உன்னோட அம்மா அப்பான்னு சொன்னப்ப ஏத்துக்க முடிஞ்சது. இவங்க உன் கூட பிறந்தவங்கன்னு சொன்னப்ப அதுவும் பெருசா தெரியலை. ஆனா இவன் தான் உன் புருசன்னு சொன்னப்ப எனக்கு எப்படி இருந்துருக்கும்? என்னால உடனே உன்னை ஏத்துக்க முடியலை. அதுக்காக வேற ஒருத்தனை எப்படி தேடி போவேன்? நான் எல்லாத்தையும் மறந்தாலும் என் கிட்ட இருக்குற நல்ல குணம் எதுவும் மாறலை. இப்ப என்ன? உன்னை விட்டு போய்ருவேனோன்னு தான பயம். சத்தியமா அப்படி எதுவும் நடக்காது. எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் கொடு. அப்பவும்  நினைவில்லைன்னா, புதுசா கல்யாணம் ஆன மாதிரி உன் கூட வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன்”, என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.
இத்தனை நாட்களில் அவனிடம் அதிகமாக மைதிலி இன்று தான் பேசியிருக்கிறாள். அவள் பேசியதே அவனுக்கு பிரமிப்பு என்றால் அவள் பேசிய விஷயம் அவனை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தது.
அவனை விட்டு அவள் செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையை அந்த நிமிடம் அவனுக்கு கொடுத்தாள் மைதிலி.
இது வரை ஊஞ்சலாடிக்கொண்டிருந்த அவன் மனதுக்கு அமைதியை கொடுத்தாள்.
அடுத்த நிமிடம் அவளிடம் ஒன்றும் சொல்லாமல் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே நடந்தான்.
“ஒரு நிமிஷம்”, என்று சொல்லி அவனை நிறுத்தினாள்.
என்னவென்ற கேள்வியை கண்களில் தாங்கி அவளைப் பார்த்தான்.
“உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனைத் தேடிப் போற அளவுக்கு நீ ஒன்னும் மட்டம் இல்லை. உன்கிட்ட இருக்குற கம்பீரத்தை நான் வேற யார்க்கிட்டயும் இது வரைக்கும் பாத்தது இல்லை. இன்னும் சொல்ல போனா உன்னை மாதிரி அழகான, அருமையான குணத்தோட எந்த பையனும் இருக்க மாட்டாங்க. யு ஆர் லூக் லைக் எ கிங்”, என்றாள்.
இப்போது திகைத்து நிற்பது அவன் முறையானது. தான் உயிராக நினைக்கும் பெண்ணிடத்தில் இருந்து வரும் இந்த வார்த்தைகள் ஒரு மனிதனை எவ்வளவு சந்தோஷப் படுத்தும் என்று காதலிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
அப்படிபட்ட சந்தோஷத்தை கொடுத்தவளை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தவன் அடுத்த நொடி அவள் அருகே ஓடிச்சென்று அவள் கன்னத்தில் இதழ் பதித்திருந்தான்.
அவன் ஓடி வருவதை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் முத்தமிட்டதும் திக் பிரம்மை பிடித்து நின்று விட்டாள்.
அவள் பேச்சில்லா நிலையை பார்த்த கண்ணன்  “இவ இப்படி சிலை மாதிரி நிப்பான்னு தெரிஞ்சிருந்தா உதட்டுலே முத்தம் கொடுத்துருப்பேனே?”, என்று நினைத்துக் கொண்டு புன்னகையோடு அங்கிருந்து வெளியேறினான்.
வெளியே நின்ற கருணாகரனையும், வேதவள்ளியையும் பார்த்து புன்னகைத்தவன் “மைதிலி தூங்குறா, அவளை எழுப்ப வேண்டாம். அவளா எழுந்ததும் சாப்பாடு கொடுங்க. நான் நாளைக்கு வரேன் மாமா, போயிட்டு வரேன் அத்தை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவனுடைய புன்னகையே அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்முகத்துடன் அவனை வழி அனுப்பி வைத்தார்கள்.
இங்கிருந்து சென்ற கண்ணன் போய் நின்றது ஒரு பிரமாண்டமான அரண்மனை போல் இருந்த வீட்டின் முன்பு தான். செக்யூரிட்டி கதவைத் திறந்ததும் உள்ளே வழுக்கி கொண்டு சென்றது அவனது கார்.
முகம் முழுவதும் சந்தோசத்துடனும், உதட்டில் சிரிப்புடனும், கண்களில் ஒரு வித மயக்கத்துடனும் உள்ளே சென்றவனை மொத்தக் குடும்பமே அதிர்ந்து போய் பார்த்தது.
யாரையும் கவனிக்காமல் தன்னறைக்கு சென்றவன் கதவை மூடி விட்டு கட்டிலில் படுத்தான் அவனுடைய தேவதையின் நினைவுகளோடு!!
“சாரு இது நம்ம அண்ணா தானா?”, என்று கேட்டான் கண்ணனின் தம்பி அருண்.
“அண்ணனே தான் டா. அண்ணா இப்படி இருந்து எவ்வளவு நாள் ஆச்சு? நான் இதை அப்பாக் கிட்ட சொல்ல போறேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடிப் போனாள் கண்ணனின் தங்கை சாருலதா.

Advertisement