Advertisement

அத்தியாயம் 2
விழியில் உன் பிம்பம்
விழும் முன்
நாசியை தீண்டிச் செல்கிறது
உன் வாசனை !!!!
அனைவரின் அதிர்ச்சியை கண்டாலும் எதையும் பேசாமல் உள்ளே செல்ல பார்த்த மைதிலியை விழுந்தடித்துக் கொண்டு வரவேற்றார் மேனேஜர் வாசு. அவரை பார்த்து நட்புடன் புன்னகைத்தாள் மைதிலி.
“எம்மாடி நீ , இன்னைக்கு வருவேன்னு சொல்லவே இல்லையே. ஐயா க்கு தெரியாதா?”
“தெரியாது அங்கிள்”
“சரி உள்ள வா. எல்லாரையும் உள்ள வர சொல்லு”
“அங்கிள் டைம் ஆச்சு, எல்லாருக்கும் சாப்பாடு… “
“நீ ஏன் கவலை படுற? இன்னும் கொஞ்ச நேரத்துல தஞ்சாவூர்ல இருக்குற மொத்த ஹோட்டலும் இங்க இருக்கும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்.
“எல்லாரும் உள்ள வாங்க”, என்றாள் மைதிலி.
“மைதிலி ஒரு நிமிஷம்”, என்றான் விஷ்ணு.
“சொல்லுங்க சார்”
“இது எல்லாம் உன்னோடதா? நீ பணக்காரியா?”
“இல்லையே”
“இப்படி சொன்னா என்ன அர்த்தம்? உன் பேர்ல தான இருக்கு. எம் கே ன்னா மைதிலி கருணாகரன் தான?”
“ஹ்ம்ம்…. அப்படியும் சொல்லலாம்”, என்று சொல்லி சிரித்தாள்.
“ப்ச், இப்ப எதுக்கு சிரிக்கிற? உன்னோட போட்டோ கூட இருக்கே”
“சார் டென்ஷன் ஆகாதீங்க? நான் எல்லாத்தையும் சொல்றேன். முதல்ல எல்லாரும் சாப்பிடலாம். உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே நடந்தவளை அனைவரும் பின் தொடர்ந்தார்கள்.
பெரிய கான்பரன்ஸ் நடக்கும் இடத்துக்கு அழைத்து சென்றாள்.  அந்த இடமே பிரமாண்டமாக இருந்தது. எல்லாரும் அமர்ந்ததும் அவளும் ஒரு இடத்தில அமர்ந்தாள்.
அடுத்த கால் மணி நேரத்தில் அவர்கள் முன் வித விதமான சாப்பாடு குவித்து வைக்க பட்டிருந்தது.
அனைவரும் அசந்து போனார்கள். அதன் பின் எல்லாரும் உணவில் கவனம் செலுத்தி சாப்பிட ஆரம்பித்தார்கள். தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டு ஒரு ஜூஸை பருகி கொண்டிருந்தாள் மைதிலி.
சாப்பாடு முடிந்ததும் கைகளை கழுவி விட்டு மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தார்கள்.
“இப்பவாது சொல்”, என்றான் விஷ்ணு.
“சார் அவ சொல்லவே வேண்டாம், உங்களுக்கு இன்னுமா புரியலை? அவ அவளோட பணத்திமிரை காட்டுறதுக்கு தான் நம்மளை இங்க வர வச்சிருக்கா. அப்பா, அம்மா விவசாயின்னு சொல்லி நம்மளை ஏமாத்திருக்கா”, என்றான் ரவி.
“உனக்கெல்லாம் அறிவே கிடையாதா டா? பணத்திமிரை உங்க கிட்ட மூணு வருசமா காட்டிருக்கேனா? எங்க அம்மா அப்பாவை பாத்தா உனக்கு விவசாயி மாதிரி தெரியலையா? எல்லாருக்கும் பசிக்கு சாப்பாடு தான கொடுத்தேன்? இதுல எங்க என்னோட பணத்திமிரை நீ பாத்த?”, என்று கேட்டாள் மைதிலி.
“மைதிலி நீ சொல்றது எல்லாமே நியாயமா தான் இருக்கு. நீயாவே உண்மையா சொல்லிட்டா, யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க”, என்றாள் ராஜி.
“சரி சொல்றேன். ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியலை. என்னமோ என் மேல தப்பு இருக்குற மாதிரியே எல்லாரும் பேசுறீங்க? காதலிக்கிறதும் காதலிக்காம போறதும் என்னோட விஷயம். கல்யாணம் பத்தி நானும் என் அம்மா அப்பாவும் தான் முடிவு எடுக்கணும். நீங்க சொல்றதை கேக்குற அளவுக்கு நீங்க எனக்கு என்ன உயிரையா கொடுக்க போறீங்க? நாலு வருஷம் என் கூட இருக்குற உங்க பேச்சை கேட்டு என்னோட வாழ்க்கையையே நான் மாத்திக்கணுமா? நீங்க பண்றது உங்களுக்கே அறிவு கெட்டதனமா இல்லை? ஏன் ரவி நீ இந்த விஜியை லவ் பண்ணுனு நான் சொன்னா நீ லவ் பண்ணுவியா?”, என்று மைதிலி கேட்டதும் எல்லாருமே மௌனமாய் இருந்தார்கள்.
 “சரி போனது போகட்டும். என்னோட பக்கம் இருக்குற நியாயத்தை நான் சொல்லிறேன். என்னோட அம்மா அப்பா விவசாயம் தான் பாக்குறாங்க. எனக்கு ரெண்டு அக்கா இருக்காங்க. முதல் அக்கா பேர் ரேணுகா. வயசு இருபத்தி ஏழு, பெங்களூர்ல ஒரு ஐ. டி கம்பெனில வேலை பாக்குறா.  அடுத்த அக்கா பேர் மலர். வயசு இருபத்தி நாலு. திருச்சி ல பைனல் இயர் எம். ஈ படிக்கிறா. நான் தான் கடைசி. எல்லாருக்கும் நான் தான் செல்லம்”
…..
எங்க வீட்டுக்கு வந்தீங்களே, அது மட்டும் தான் என்னோட வீடு. இந்த எம். கே இண்டஸ்ட்ரீஸ் என்னோட பேர்ல தான் இருக்கு. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அது மைதிலி கருணாகரன் இல்லை. அது மைதிலி கண்ணன்”
….
“என்ன குழப்பமா இருக்கா? எனக்குமே நிறைய விஷயம் குழப்பமா தான் இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகிருச்சாம். இந்த இடத்துக்கு சொந்தக்காரன் வேற யாரும் கிடையாது. எனக்கு தாலி கட்டின என்னோட ஹஸ் பண்ட் கண்ணன் தான்”, என்று சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாள்.
“மைதிலி உனக்கு கல்யாணம் ஆகிருச்சா? அது என்ன ஆகிருச்சாம்ன்னு நீயே சொல்ற? “, என்று கேட்டான் விஷ்ணு.
“ஆமா சார். ஆனா எனக்கே தெரியாது?”
“பொய் சொல்லாத மைதிலி. லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிகிட்டியா? அதான் எனக்கே நிறைய பிரச்சனைன்னு சொன்னியா? உங்க வீட்ல ஏத்துக்கிட்டாங்க. அவங்க வீட்ல ஏத்துக்கலையா? அவரை நினைச்சு தான் அன்னைக்கு ஸ்டேஜ்ல பாடினியா?”
 
“சார் நான் பொய் சொல்லலை. உண்மையை தான் சொல்றேன். எனக்கு கல்யாணம் நடந்தது எனக்கே தெரியாது. கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு காலேஜ் சேரும் போது தான் எனக்கே தெரியும். அன்னைக்கு நான் பாடின பாட்டை எனக்கு எழுதி கொடுத்ததே கண்ணன் தான். அது என்னை பற்றிய வரிகள். அதனால தான் அது எனக்கு சொந்தமானதுன்னு சொன்னேன்”
“சார் அவ தான் உளறுறான்னா, நீங்களும் இப்படி கேட்டுட்டு இருக்கீங்க? ஏண்டி  நீ டைம் பாஸ் பண்றதுக்கு நாங்க தான் கிடைச்சோமா? லீவ்ல வீட்ல படுத்து தூங்க விடாம இங்க வர வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கியா? உனக்கு தெரியாம கல்யாணம் ஆகிருச்சோ? இதை நாங்க நம்பணும்?”, என்று அருண் என்பவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவன் கன்னத்தில் இடியென ஒரு கரம் இறங்கியது.
“அம்மா”, என்ற அலறலுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான் அருண்.
எல்லாருக்குமே அதிர்ச்சி தான். அங்கு கோபமே உருவாக அருணை முறைத்த படி நின்ற கண்ணன் “யாரை பாத்து டீ ன்னு சொன்ன? கண்டவன் எல்லாம் டீ ன்னு சொல்றதுக்கு அவளை யாருன்னு நினைச்ச? அவ என்னோட தேவதை டா. என்னோட சாம்ராஜ்யத்துக்கே ராணி. என் கண்ணு முன்னால அவளை கேள்வி கேக்குறதே தப்பு. இதுல அவளை  டீ ன்னு வேற சொல்வியா? தோலை உரிச்சிருவேன் பாத்துக்கோ”, என்று கர்ஜித்தான்.
அந்த இடமே குண்டூசி விழுந்தால் கூட கேட்காதது போல அமைதியாக இருந்தது.
அருண் கொஞ்சம் ரவுடி போன்ற தோற்றத்தில் இருப்பான். அவன் செயலும் அப்படி தான் இருக்கும். உண்மை தெரியாமல் எரிச்சலில் தான் மைதிலியை திட்டினான். அது மட்டுமல்லாமல் அவன் தோழிகளை, தங்கையை டீ சொல்லி தான் கூப்பிடுவான். அதே போல மைதிலியையும் அழைத்து விட்டான்.
ஆனால் கண்ணன் எங்கிருந்து தான் வந்தானோ, அவன் விட்ட ஒரு அறையில் சப்த நாடியும் அடங்கி நின்று விட்டான் அருண்.
கண்ணனோ இன்னும் கோபம் குறையாமல் சிங்கத்தின் தோரணையோடு மிடுக்காக நின்றான். அவன் நின்ற விதமே அனைவருக்கும் பயத்தை உருவாக்கியது.
அவன் அருகில் வந்த மைதிலி அவன் கையை பற்றி கொண்டாள். அடுத்த நொடி சாந்த சொரூபியாக அவளை பார்த்து புன்னகைத்தான் கண்ணன்.
பதிலுக்கு புன்னகைத்த மைதிலி “சாரி அருண், நிஜமாவே நான் சொல்றது உண்மை தான். என்ன நடந்ததுன்னு இப்ப வரை எனக்கு தெரியாது. காலேஜ் சேரும் போது ஒரு ஆக்சிடெண்ட்ல எனக்கு பழசு எல்லாமே மறந்துடுச்சு. நான் கொஞ்ச நாள் கழிச்சு தான காலேஜ் சேர்ந்தேன். செகண்ட் இயர் படிக்கும் போது தான் எனக்கே தெரியும். இவர் தான் கண்ணன். என்னோட கணவர். இதையும் எல்லாரும் தான் எனக்கு சொன்னாங்க”, என்று சொல்லி அறிமுக படுத்தினாள்.
“சாரி சார், நான் பேசினது தப்பு தான். என்னை மன்னிச்சிருங்க”, என்றான் அருண். பதிலுக்கு அவனை பார்த்து கண்ணன் புன்னகைத்ததுமே நிலைமை கொஞ்சம் சகஜமானது.
அதன் பின்னர் தான் கண்ணனை அனைவரும் நன்றாக பார்த்தார்கள். பார்த்தவர்கள் “என்ன ஒரு அழகு”, என்று வியந்து தான் போனார்கள்.
அவன் உடையும் கையில் இருந்த மருத்துவ கருவியும் அவன் ஒரு மருத்துவன் என்று சொல்லாமல் சொன்னது.
“ஏய் குறத்தி, ஏண்டி சொல்லலை இன்னைக்கு இப்படி கூட்டத்தை கூட்டிட்டு வருவேன்னு”, என்று மைதிலியை பார்த்து சொன்ன கண்ணன் “நீங்க எல்லாம் மைதிலி பிரண்ட்ஸ். சோ ரெண்டு நாள் எல்லாரும் இங்க ஸ்டே பண்ணிட்டு தான் போகணும். வாசு அண்ணா இவங்க தங்கி சுத்தி பார்க்க ஏற்பாடு பண்ணுங்க”, என்றான்.
வாசு “சரி சார்”, என்றதும் “சாரி சார், நாங்க எல்லாரும் இன்னைக்கு கிளம்புறோம்”, என்றான் விஷ்ணு.
“விஷ்ணு தான உங்க பேர்? உங்களுக்கு ஏதும் மனசு சங்கட படுற மாதிரி இருக்கா?”
“இவருக்கும் தெரியுமா?”, என்று நினைத்தாலும் “ஐயோ அப்படி எல்லாம் இல்லை சார். பாக்குற எல்லா பொண்ணும் மனைவி ஆகிட முடியாதே சார். அம்மா அப்பா கிட்ட வேற பொண்ணு பாக்க சொல்லுவேன்”, என்று சொல்லி புன்னகைத்தான் விஷ்ணு.
 
“அப்புறம் என்ன? எல்லாரும் டூர் வந்தீங்கன்னு நினைச்சுக்கோங்க. இங்க சுத்தி பாக்க நிறைய இடம் இருக்கு. எல்லாரும் என்னோட கெஸ்ட். இப்ப போய் எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. வாசு பாத்துக்கோங்க”, என்று சொன்ன கண்ணன் மைதிலியின் கையை பிடித்து அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்,
போகும் இருவரையும் பார்த்த படி நின்றார்கள் அனைவரும். விஷ்ணு அழகு தான். ஆனால் அவன் மீசை இல்லாமல் அயல்நாட்டு தோற்றத்துடன் இருந்தான். ஆனால் கண்ணனோ அடர்ந்த மீசையுடன், ஆண்மையின் இலக்கணமாக இருந்தான். மைதிலியையும் கண்ணனையும் அருகருகே வைத்து பார்த்த போது அவ்வளவு அழகாக அவர்களுக்குள் பொருந்தி இருந்தது.
அவர்கள் பொருத்தத்தை பார்த்து விஷ்ணுவே பொறாமை பட்டான்.
மைதிலியை நேராக தன்னுடைய ஆபிஸ் அறைக்கு தான் அழைத்து சென்றான். உள்ளே செல்லும் வரை அமைதியாக இருந்தவள் உள்ளே நுழைந்ததும் அவன் கையை வெடுக்கென்று தட்டி விட்டாள். அது மட்டுமல்லாமல் “என்னோட அனுமதி இல்லாமல் உன்னை யாரு என் கையை பிடிக்க சொன்னது?”, என்றாள்.
கதவில் சாய்ந்து நின்று அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன் “ஏய் பொண்டாட்டி, இதை ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு செய்ற? பிடிச்ச உடனே தட்டி விட்ருக்க வேண்டியது தான?”, என்றான்.
“எல்லார் முன்னாடியும் என் புருஷன் அசிங்க பட கூடாதுல்ல? அதனால தான் அமைதியா இருந்தேன்”
“அப்ப என்னை புருஷன்னு ஒத்துக்குற? சூப்பர் டீ செல்லம்”
“அப்படி தான எல்லாரும் சொல்லி என்னை நம்ப வைக்கிறீங்க? அப்புறம் நீ மட்டும் எதுக்கு என்னை டீ ன்னு சொல்ற? நீயும் சொல்ல கூடாது”
“என் பொண்டாட்டியை நான் சொல்லாம வேற யார் சொல்லுவா? சரி சரி எதுக்கு என்கிட்ட இப்படி எல்லாரையும் கூட்டிட்டு வரேன்னு சொல்லலை?
 
“முன்னாடியே சொல்லிருந்தா ரொம்ப கிராண்டா எதாவது செஞ்சு சீன் போட்டுருப்ப?”
“எப்படி டீ இவ்வளவு சரியா சொல்ற? என் பொண்டாட்டி வந்தா சும்மா தோரணையா இருக்க வேண்டாமா? அப்படி தான் செஞ்சிருப்பேன்”
“அது தான் தெரியுமே. சரி எனக்கு வீட்டுக்கு போகணும். சாயங்காலம் இவங்க கூட நானும் சுத்தி பாக்க போறேன்”
“அதுக்கு வாய்ப்பே இல்லை. அவங்க போறதுக்கு எல்லா செலவையும் நானே பாத்துப்பேன். சரியான டைம்ல அவங்களுக்கு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணிருவேன். ஆனா உன்னை மட்டும் அவங்க கூட அனுப்ப முடியாது டீ”
“ஏண்டா, ஏண்டா முடியாது”, என்று சண்டை போடுவது போல கேட்டாள் மைதிலி.
“இவர் தான் என்னோட கணவர்”, என்று புன்னகையோடு சொல்லிய மைதிலியையும், இப்போது சண்டை போடும் மைதிலியையும் மனக்கண்ணில் ஒன்றாக வைத்து பார்த்தான் கண்ணன்.
“இவ எப்ப மாறுவா?”, என்று எண்ணி பெரு மூச்சு விட்டான். அவனையே பார்த்த படி நின்ற மைதிலி “டா சொன்னதுனால கோபம் வந்துட்டோ? கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ? பாக்க எவ்வளவு கம்பீரமா இருக்கான்? ஆனா நான் எதாவது சொன்னா மட்டும் சின்ன பிள்ளை மாதிரி பீல் பண்றான்”, என்று எண்ணி கொண்டாள்.
அவளுடைய யோசனையை பார்த்தவன் “இங்க பாரு மைத்தி, அந்த விஷ்ணு உன்னை கல்யாணம் பண்ண கேட்ருக்கான் (ஏனோ விஷ்ணு உன்னை லவ் பண்ணிருக்கான் என்று சொல்ல கண்ணனுக்கு மனதில்லை). அப்படி இருக்கும் போது, இப்ப நீ என்னோட பொண்டாட்டின்னு அவனுக்கு தெரிஞ்சிருச்சு.  நீ அவங்க கூட சுத்தி பாக்க போனா அவன் மனசு சங்கட படாது”, என்றான்.
அவன் சொன்னது நியாயமாக பட்டதால் “சரி நான் அவங்க கூட போகலை. என்னை வீட்ல கூட்டிட்டு போய் விடு”, என்றாள்.
“அப்பாடி சமாதானம் ஆகிட்டா”, என்று மனதுக்குள் நினைத்தவன் “வா செல்லம் போகலாம்”, என்றான்.
அவனுடன் இரண்டடி எடுத்து வைத்தவள் “ஏய் இரு இரு”, என்றாள்.
“என்ன மா?”
“இல்லை, எனக்கு ரெண்டு சந்தேகம்”
“உனக்கு சந்தேகமா? என்ன அது? அதுவும் ரெண்டு என்ன?”
“முதல் சந்தேகம், அவன் விஷ்ணுனு எப்படி தெரியும்? அதுவும் அவன் என்னை கல்யாணம் பண்ண கேட்டதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”
“ஐயையோ, மாட்டிகிட்டேனே”, என்று நினைத்தவன் “அது அது வந்து…”, என்று இழுத்து பதில் சொல்லாமல் “ரெண்டாவது சந்தேகம் என்ன?”, என்று கேட்டான்.
“அவங்க கூட நான் போக கூடாதுனு சொன்னதுக்கு காரணம் நிஜமாவே விஷ்ணு சார் பீல் பண்ணுவாங்கன்னு சொன்னியா? இல்லை அவரை பார்த்து பொறாமையா?”, என்று கேட்டான்.
“இவ மட்டும் எப்படி இப்படி எல்லாம் உண்மையை கண்டு பிடிக்கிறா?”, என்று எண்ணி கொண்டு “வா வீட்டுக்கு போற வழியில சொல்றேன்”, என்று சொல்லி பொய் காரணம் யோசிக்க நேரத்தை உருவாக்கினான்.
“ஹ்ம்ம் சரி”, என்று சொன்ன மைதிலி வெளியே நடந்தாள்.” என்ன சொல்லலாம்?”, என்று யோசித்த படியே அவள் பின்னே நடந்தான் கண்ணன்.
காரில் அவனருகே அமர்ந்தவள் கேள்வியை மறந்து வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். அப்பாடி மறந்துட்டா? எதையும் பேசி அவளுக்கு ஞாபக படுத்த கூடாது”, என்று நினைத்து அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கண்ணன்.
நேராக மைதிலியின் வீட்டு முன்னர் தான் கார் நின்றது. தன்னுடைய வீட்டைப் பார்த்தவள் அவனை முறைத்தாள்.
“இப்ப எதுக்கு பேபி என்னை முறைக்கிற?”, என்று கேட்டான் கண்ணன்.
“பின்ன பொண்டாட்டி பொண்டாட்டின்னு பீத்திக்கிற? மதியம் உன் பொண்டாட்டி சாப்பிடலை தெரியுமா? அதை கேட்டு ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வைக்காம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க?”
“நானா ஹோட்டலுக்கு கூப்பிட்டா வருவியா? வரமாட்டேன்னு அடம் பிடிப்ப”, என்று எண்ணிக்கொண்டு “இப்ப உங்க வீட்டுக்கு வந்தது நீ ரெபிரஷ் ஆக. அதுக்கப்புறம் சாப்பிட போகலாம்”, என்றான்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம். நான் எங்க வீட்லே சாப்பிட்டுக்குறேன்”
“பட் எனக்கு வேணுமே. நானும் மதியம் சாப்பிடலை தெரியுமா?”
“ஏன்?”
“நீ சாப்பிடலைன்னு வாசு அண்ணா சொன்னாங்க. அதான்”
“போய் சாப்பிடு”
“வேண்டாம்”
“ஏன்?”
“இப்போதைக்கு பொண்டாட்டி கையால சாப்பிட கொடுத்து வைக்கலை. அட்லீஸ்ட் பொண்டாட்டி கூட உக்காந்தாவது சாப்பிடலாம்னு நினைச்சேன். அதுக்கும் வாய்ப்பு இல்லை”, என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.
அவனையே குறுகுறுவென்று பார்த்தாள் மைதிலி. “இவ எதுக்கு இப்படி பாக்குறா?”, என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே “வாங்க வாங்க உள்ள வாங்க. என்ன மைதிலி மாப்பிள்ளையை வெளியவே  நிக்க வச்சிட்ட. உள்ள கூப்பிடு பாப்பா”, என்று சொல்லிய படி அவனை வரவேற்றார் கருணாகரன்.
“பரவால்ல மாமா இருக்கட்டும். நான் கிளம்புறேன். இன்னொரு நாள் வரேன்”, என்று சொல்லிய படியே காரில் இருந்து இறங்கினான் கண்ணன்.
“ஐயோ இந்த பாச காட்சியை பாக்க கூடாதுன்னு தான அவனை உள்ளவே கூப்பிடலை. இந்த அம்மா, அப்பா மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு உருகுவாங்களே. அவனும் இன்னொரு நாள் வரேன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வர ரெடியா இறங்கி நிக்குறான் பாரு”, என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டிருந்தாள்.
அதற்குள் உள்ளே இருந்து ஓடி வந்த வேதவள்ளியும் “வாங்க மாப்பிள்ளை, பாத்து ரொம்ப நாள் ஆச்சு. உள்ள வாங்க”, என்று புன்னகையுடன் வரவேற்றாள்.
“இல்ல மாமா நான் கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு”
“எப்படியும் உள்ள தான் வர போறான். அதுக்கு எதுக்கு இப்படி சீன் போடுறான்”, என்று எண்ணினாள் மைதிலி.
அவள் நினைத்த படி அடுத்த நிமிடம் வீட்டு சோபாவில் அமர்ந்திருந்தான் கண்ணன்.
மகளின் வாழ்க்கை, மகளின் செய்கையால் கேள்விக்குறியாகி விடுமோ என்று மனதுக்குள் கவலை அரித்துக்கொண்டிருந்தாலும், அந்த கவலைக்கு அவ்வப்போது உங்கள் மகள் தான் என்னுடைய வாழ்கை என்று கூறி மருந்திட்டு கொண்டிருந்தான் கண்ணன்.
அப்படி பட்ட மாப்பிள்ளையை அவர்கள் கவனிக்காமல் இருப்பார்களா? அவனை விழுந்து விழுந்து கவனித்தார்கள். அதை வேடிக்கை பார்த்த படி நின்றாள் மைதிலி. அவ்வப்போது அவளை கவனித்த படி இருந்தாலும் அவர்கள் உபசரிப்பில் நெகிழ்ந்தான்.
கருணாகரன் கேள்விக்கு பதில் சொல்லிய படியே ஜூஸ் பருகி கொண்டிருந்த கண்ணன், தன்னையே முறைத்த படி நின்ற மைதிலியை பார்த்து கண்களால் என்னவென்று கேட்டான்.
“ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடு”, என்று சைகை செய்தாள் மைதிலி.
அங்கே இங்கே அலைந் ததால் தலை முடி களைந்து, ஆடை ஆங்காங்கே சுருங்கி, களைப்பா ன தோற்றத்துடன் நின்றாலும் அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தாள் மைதிலி.
தலை முதல் கால் வரை அவளை பார்வையிட்டவனுக்குள் மெதுவாக காதலன் எட்டி பார்த்தான். ரசனையாக பார்வையிட்டவனின் பார்வை மெதுவாக கனவனுடைய பார்வையாக மாறியது. லேசாக விலகி இருந்த துப்பட்டாவின் மீது கவனம் பட்டதும் அடுத்த நொடி எழுந்து நின்று விட்டான் கண்ணன்.
“அப்பாடி எந்திச்சிட்டான், கிளம்பிருவான்”, என்று அவள்  எண்ணிக்கொண்டிருக்கும் போதே “மாமா ஜூஸ் கொட்டிட்டு. கிளீன் பண்ணனும். வாஷ் ரூம் எங்க இருக்கு?”, என்று கேட்டான்.
“அட பாவி, இவன் எப்ப ஜூஸை மேல கொட்டினான்? அப்ப கிளம்ப மாட்டானா?”, என்று எண்ணும் போதே “பாப்பா, மாப்பிள்ளையை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ. அவர் டிரெஸ்ஸை கிளீன் பண்ணிக்கொடு. அது வரைக்கும் புதுக் கைலி இருக்கும். எடுத்து கொடு”, என்றார் கருணாகரன்.
“ஆன்”, என்று வாயை பிளந்து நின்று விட்டாள் மைதிலி.
அவளுக்கு நினைவிருக்கும் வரை இரண்டு முறை கண்ணன் இங்கே வந்திருக்கிறான். அம்மா, அப்பா விழுந்து விழுந்து கவனிப்பார்கள். இது தான் நடக்கும். ரூமுக்கு அழைத்து செல்ல சொல்வது இது தான் முதல் முறை. அதனால் தான் திகைத்து நின்றாள் மைதிலி.
அவனோ உள்ளுக்குள் சிரித்த படி அவளை பாவமாக பார்த்தான்.
தீண்டல் தொடரும்….

Advertisement