Advertisement

அத்தியாயம் 15
உன்னிதழ் தீண்டிய தேநீர்
என்னிதழை நனைக்கும் போது
மொத்தமாய் உருகிப் போகிறேன்!!!
“என் மேல கோபமா மைத்தி, உன்கிட்ட பொய் சொல்லிட்டேன்னு?”, என்று அவன் கேட்டதற்கும் எந்த அசைவுமின்றி அமர்ந்திருந்தாள். 
“அந்த பொம்பளை பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் மைத்தி பிளீஸ் மா”
……
“நான் முதல்ல இருந்து நம்ம வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லிறேன் மைத்தி”
“எனக்கு ஆரோன் அண்ணா எல்லாம் சொல்லிட்டாங்க”, என்று வாயை திறந்தாள் மைதிலி.
அப்போதும் ஆரோனின் நட்பை எண்ணி பூரித்துப் போனான் கண்ணன். “சாரி மைத்தி, என்னை மன்னிச்சிரு”
“மன்னிப்பெல்லாம் அப்புறம் கேக்கலாம். ஆரோன் அண்ணா கோப பட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது?”
“அது அவன் சொல்லலையா? அவனுக்கு தான் இப்ப வரைக்கும் எல்லா விஷயமும் தெரியுமே?”
“ரேணு அக்கா சொன்னாளா? ஆனா அண்ணா தெரியாதுன்னு சொன்னாங்களே?”
“ரேணு சொல்லலை. ஆனா அவன் லவ் பண்ண பொண்ணு சொல்லிருப்பா”
“இது என்ன புது கதை? என்னோட வாழ்க்கைக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவன் லவ் பண்ணுறது உன்னோட அக்கா மலரை தான?”
“அட பாவி, இதை சொல்லலை பாத்தீங்களா?”
“அது அப்படி தான். சரி நானே என்ன நடந்ததுன்னு சொல்றேன். அவன் கோப பட்டு போய் கொஞ்ச நேரத்துல உங்க வீட்ல இருந்து அத்தையும் மாமாவும் வந்துட்டாங்க”, என்று சொல்லி அன்றைய நாளுக்கு போனான்.
கண்ணன் என்ன நடந்தது என்று சொல்ல வருவதற்குள் அங்கு சக்கர நாற்காலியில் ஒரு நர்ஸ் உதவியோடு வந்த மாணிக்கவேல் “மைதிலிக்கு ஒண்ணும் இல்லை. சீக்கிரமா எழுந்து வந்துருவா. நினைவு மட்டும் கொஞ்சம் தப்பிருக்கு. எப்ப வேணா அது சரியாகிரும். யாரும் கவலைப் பட வேண்டாம். அப்புறம் என்னை மன்னிச்சிருங்க. மைதிலி என்னைப் பாக்க எங்க வீட்டுக்கு தான் வந்தா. அவளை எனக்கு முன்னாடியே தெரியும்”, என்று ஆரம்பித்தார்.
“இவர் யாரு? இவரை பாக்க எதுக்கு மைதிலி போகணும்?”,என்று அவர் கூறுவது குழப்பமாக இருந்தாலும் “அவளுக்கு ஒண்ணும் இல்லை தான? அவளுக்கு சரியாகிரும்ல?”, என்று கண்ணீருடன் கேட்டார் கருணாகரன்.
“அவளுக்கு ஒண்ணும் இல்லை. அவ கூடிய சீக்கிரம் குணமாகிருவா. ஆனா நம்மளை எல்லாம் அவளுக்கு நினைவு இருக்குமான்னு தான் தெரியலை”
“ஐயையோ என் பொண்ணுக்கு எங்களை தெரியாதா?”, என்று அழுதாள் வேதவள்ளி.
“அழாத மா. மைதிலிக்கு ஒண்ணும் இல்லை. அவ பழைய படி ஆகிருவா”
“நீங்க யாரு? உங்களுக்கும் எங்க பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”, என்று கேட்டார் கருணாகரன்.
“நான் உண்மையை சொல்றேன். மைதிலியை சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு தெரியும். அதனால என்னைப் பாக்க அடிக்கடி வருவா. அவளுக்கு கண்ணனை ரொம்ப பிடிக்கும்”, என்று மாணிக்கவேல் சொன்னதும் அதிர்ச்சியாக அவரை பார்த்தார்கள் மைதிலி பெற்றோர். 
“எங்க பொண்ணு உங்க பையனை காதலிச்சான்னு சொல்றீங்களா?”, என்று கொஞ்சம் கண்டிப்பாகவே கேட்டார் கருணாகரன்.
“நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. மைதிலி ரிசல்ட் பத்தி சொல்ல தான் எங்க வீட்டுக்கு வந்தா. ஆனா வீட்ல என்னோட ரெண்டாவது சம்சாரம் அவளை தர குறைவா பேசிட்டா. மைதிலி அதுக்கு அவளை அடிச்சிட்டு கோப பட்டு வரும் போது தான் ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். இன்னொரு விஷயமும் சொல்லணும். நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு தெரியலை”
“எனக்கு எல்லா விஷயமும் குழப்பமா இருக்கு. சின்ன வயசுல மைதிலி கண்ணன் கண்ணன்னு அழுதது நினைவு இருக்கு. அது உங்க பையனை நினைச்சு தானா? உங்க மனைவி எதுக்கு என் மகளை திட்டணும்? இன்னொரு விஷயம் என்ன?”
“அது வந்து நான் எல்லா விஷயமும் சொல்றேன்”, என்று ஆரம்பித்து முதல் மனைவி பற்றி, மனிஷா பற்றி, கண்ணனின் நிலை பற்றி, அவன் வாழ்க்கையை மாற்றின மைதிலி பற்றி என்று அனைத்தையும் சொன்னவர் “அன்னைக்கு அவ பேசுனதை தாங்க முடியாம மைதிலிக்கு எந்த அசிங்கமும் வரக்கூடாதுன்னு நினைச்சு என் மகன் உங்க பொண்ணு கழுத்துல என் முதல் மனைவியோட தாலியை போட்டுட்டான்”, என்று சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். அவர் சொன்னதும் கண்ணனுக்கும் அதிர்ச்சி தான்.
கருணாகரன் எதுவோ கோபமாக சொல்ல வரும் போது “இது பெரிய தப்பு தான். அவ சின்ன பொண்ணுன்னு எங்களுக்கும் தெரியும். இப்போதைக்கு அவன் போட்ட தாலி கூட மைதிலி கழுத்தில் இல்லை. இப்போதைக்கு அவ உங்க பொண்ணு தான். அவளை எப்ப எங்க வீட்டுக்கு மருமகளா இல்லை மகளா அனுப்பணும்னு உங்களுக்கு தோணுதோ அப்ப அனுப்புங்க”, என்ற மாணிக்கவேல் கண்ணனிடம் கண்ணைக் காட்டி அவர்களிடம் பேச சொன்னான்.
அவனோ நடந்து கொண்டிருப்பதை அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் நிலையை உணர்ந்த மாணிக்கவேல் “இவன் தான் என்னோட பையன் கண்ணன். இந்த ஹாஸ்பிட்டல் இவனோடது தான். இன்னும் சொல்ல போனா இது மைதிலியோட ஹாஸ்பிட்டல் தான். எம்.கேன்னா மைதிலி கண்ணன்ன்னு தான் அர்த்தம். இது அவனுக்கே தெரியாது. நான் தான் மைதிலி எங்க வீட்டு பொண்ணுன்னு நினைச்சு அவ பேரை சேத்து வச்சேன்”, என்று அவர் சொன்னதும் இது என்ன புது கதை என்று அனைவரும் பார்த்தார்கள்.
கண்ணனுக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவனைப் பொறுத்தவரை அது அம்மா அப்பா பெயர் என்று தான் நினைத்தான்.
“ஒரு பொண்ணு கழுத்துல ஒரு தடவை தான் தாலி ஏறணும்னு நான் நினைக்கிறேன். இல்லை உங்க பொண்ணுக்கு என் மகனை விட நல்ல மாப்பிள்ளை கிடைச்சா நீங்க கட்டி வச்சிக்கோங்க”, என்று சொன்னதும் கருணாகரனும் வேதவள்ளியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“எங்க பொண்ணுக்கு உங்க பையன் தான் மாப்பிள்ளைன்னு எழுதி வச்சிருக்கார் போல?”, என்றார் கருணாகரன்.
“அவசரப் பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நீங்க பொறுமையா யோசிச்சு கூட முடிவெடுங்க. இது அவளோட ஹாஸ்பிட்டல். என்னோட மகன் வாழ்க்கைல ஒரு வெளிச்சமா வந்த உங்க மகள் என் மகன் கூடவே கடைசி வரைக்கும் இருக்கணும்னு தான் அவங்க பேர்ல ஆரம்பிச்சேன்”
ஆழ்ந்த மௌனம் அங்கே நிலவியது. கண்ணனிடம் ஒரு வார்த்தை கூட மைதிலி வீட்டினர் பேசவில்லை. ஆனால் அவனைப் பார்த்து சிரித்தார் கருணாகரன். 
அந்த புன்னகையில் தைரியம் வர பெற்றவன் “உங்க பொண்ணை நான் உயிருக்கும் மேல பாத்துக்குவேன். அவளுக்கு ஒண்ணுன்னா நானே இந்த உலகத்துல இருக்க மாட்டேன். என் மேல நம்பிக்கை இருந்தா என்கிட்ட அவளை கொடுத்துருங்க”, என்றான். 
அவன் சொன்னதில் அவனையே தான் கருணாகரனும் வேதவள்ளியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
ஆனால் அடுத்த நிமிடமே மாணிக்கவேல் மயங்கியிருந்தார். அனைவரும் பதறிப் போனார்கள். “அவருக்கு காலுல பயங்கர வலி இருந்தது. இனி அவரால் எப்பவுமே நடக்க முடியாது. என்னோட மகன் வாழ்க்கையை காப்பாத்தணும்னு சொல்லி தான் வலியை பொறுத்துட்டு இங்க வந்தார். நான் அவரை ரூம்க்கு கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து அவரை அழைத்து சென்றாள் நர்ஸ்.
“நீங்க முதல்ல அப்பாவை போய் பாருங்க தம்பி. நாங்க மைதிலி கூட இருக்கோம்”, என்றார் கருணாகரன். 
அவனோ தயங்கி அவர் முகத்தைப் பார்த்த படி அசையாமல் நின்றான். அவன் மன குழப்பம் அவருக்கு புரிந்ததோ என்னவோ? “மைதிலி இனி உங்க பொண்டாட்டி தான். அதுல எந்த குழப்பமும் வேண்டாம் மாப்பிள்ளை. போய் அப்பாவை பாருங்க”, என்று அவர் சொன்னதும் அவர் கையை இறுக்கி பற்றியவன் அங்கிருந்து சென்றான்.
மயக்கத்தில் இருந்த மாணிக்கவேலைப் பார்த்தவனுக்கு கஷ்டமாக இருந்தது. பக்கத்தில் அருணும் அழுத படி தான் இருந்தான்.
அப்போது கண் விழித்த மாணிக்கவேல் “தேவதை மாதிரி உங்க அம்மா இருந்தும் சனியனை தேடி என் கால் போச்சுல்ல?அதுக்கு எனக்கு இது எப்பவோ வர வேண்டியது தான். உன் வாழ்க்கைல அந்த தேவதையை கூட்டிட்டு வர எனக்கு அந்த பொய் தான் பா தெரிஞ்சது. எனக்காக ஒரு உதவி செய்ப்பா. மனிஷா கெட்டவ தான். ஆனா அவ வயித்துல பிறந்த அருணும் சாருவும் தங்கமானவங்க. அவங்களை என் காலத்துக்கு அப்புறம் நீ தான் பாத்துக்கணும்”, என்றார்.
“என் தம்பி தங்கச்சியை நான் பாக்காம யார் பாப்பா?”, என்று கேட்டு சிரித்தான் கண்ணன்.
“எனக்கு இது போதும். எனக்கு ஒண்ணும் இல்லை. நீ அவ கூட போய் இரு”, என்றார். 
“பாத்துகோ அருண், நான் மேல தான் இருக்கேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான். அதன் பின் அவன் கவனிப்பில் தான் இருந்தாள் மைதிலி. அதுக்கு அவனுக்கு சுதந்திரத்தை அளித்தார்கள் கருணாகரனும் வேதவள்ளியும். அவள் காதில் “நீ எனக்கு வேணும் மைத்தி”, என்று சொல்லிக் கொண்டே இருந்தான் கண்ணன்.
ரேணுகாவும் “கண்ணன் என் கூட தான் படிச்சான். ரொம்ப நல்ல பையன்”, என்று சான்றிதழ் வழங்க அவன் மனப்பூர்வமாக அவர்கள் வீட்டு மாப்பிள்ளையானான். ஆனால் மைதிலிக்கு நினைவு வந்தால் என்ன நிலைமை ஏற்படும் என்று அவர்களுக்கும் பயம் இருந்தது. கோபத்தில் அவனை பிடிக்க வில்லை என்று சொல்லி விட்டால் என்ற கவலை அவர்களை ஆட்டிப் படைத்தது.
மைதிலி கண் விழித்ததும் யாரையும் தெரியாமல் குழம்பினாள். அனைவரைப் பற்றி சொன்னாலும் கண்ணனைப் பற்றி யாரும் சொல்ல வில்லை.
கல்லூரியில் சேர்ந்தாள். சில மாதங்கள் கழித்து தான் மெதுவாக அவளிடம் சொன்னாள் வேதவள்ளி.
“என்னமா ஏதோ சொல்ல வறீங்க? அப்புறம் சொல்லாம இருக்கீங்க?”, என்று கேட்டாள் மைதிலி.
“அது வந்து மைதிலி, நீ காலேஜ் போறல்ல? அங்க யாராவது பையங்க உன் பின்னாடி வந்தா அவங்க கிட்ட இருந்து ஒதுங்கி வந்துரு கண்ணு”
“சரிம்மா”
“யாராவது லவ்வுன்னு சொன்னா மயங்கிறாத மா”
“எதுக்கு மா என்னை யாராவது ஏமாத்திருவாங்களோன்னு பயப்படுறியா?”
“இல்லை உன் மனசுல வேற யாரும் வந்துற கூடாதுன்னு தான் பயப்படுறேன். நான் சொல்றதை பொறுமையா கேளு தங்கம். உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு”, என்று சொன்னாள்.
அதிர்ச்சியில் விழி விரித்தவள் கண்கள் கலங்கி விட்டன. அவளை நம்ப வைத்து, கண்ணன் தான் அவள் கணவன் என்று புரிய வைப்பதற்க்குள் வேதவள்ளி தான் ஒரு வழியாகிவிட்டாள்.
ஒரு நாள் வீட்டுக்கு வந்த கண்ணனை பயத்துடன் பார்த்தவள் பின் அவன் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டாள். அவளை வெளியே அழைத்துச் செல்ல கண்ணன் கேட்டதும் அவனுடன் போக சொல்லி வேதவள்ளி வற்புறுத்த மொத்த கோபமும் அவன் மேல் திரும்பியது.
அவன் அவளை அழைத்து சென்றது கம்பெனிக்கு தான். அங்கு அவள் புகைப்படத்தை கண்டு திகைத்தாலும் அவனிடம் எதுவும் பேச வில்லை. அப்படியே பேசினாலும் அவனிடம் எரிந்து விழுந்தாள். கண்ணனை தவிர கம்பெனியில் உள்ள மற்ற அனைவரிடமும் நன்கு பேசினாள்.
அவள் கல்லூரிக்கு சென்ற பிறகு அவளை அழைத்துப் பார்த்த கண்ணன் அவள் போனை எடுக்க மாட்டாள் என்று தெரிந்து அழைப்பதை நிறுத்தி விட்டான். ஆனால் யார் மூலமாவது அவள் தேவை அனைத்தும் நிறைவேற்றினான்.
அனைத்தையும் சொல்லி விட்டு பெருமூச்சு விட்டான் கண்ணன். யோசித்த படி அமர்ந்திருந்த மைதிலியைப் பார்த்தவன் “உண்மை எல்லாம் சொல்லிட்டேன் மைதிலி. பிளீஸ் என்னை மன்னிச்சிறேன். உண்மையிலே உனக்கும் எனக்கும்  கல்யாணம் நடக்கவே இல்லை. உங்க அம்மா அப்பா என்னை ஏத்துக்கணும்னு தான் அந்த பொய்யே சொல்லப்பட்டது. இப்ப உனக்கு என்னை பிடிக்கலைன்னா கூட நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ”, என்று வலியுடன் சொன்னான்.
அவள் அமைதியாக இருக்கவும் “உன்னை பொண்டாட்டி பொண்டாட்டினு சொன்னது நிஜமாவே நீ என் மனைவியா ஆகணும்னு ஆசைல தான். என் மனசுல நான் உன் கூட தான் வாழ்ந்துட்டு இருக்கேன். உனக்கு என்னை பிடிக்கலைன்னா நீ நல்ல முடிவா எடு மைத்தி”, என்றான்.
அவனை முறைத்துப் பார்த்தவள் “இப்படி நல்லவன் மாதிரி பேசுறவன் எதுக்கு முத்தம் கொடுக்கணும்?”, என்று கேட்டாள்.
“அது உன்னை அவ்வளவு பக்கத்துல பாத்த அப்புறம், தனிமை கிடைச்ச உடனே…”
“அந்த முத்தமெல்லாம் பொண்டாட்டின்னு நினைச்சு கொடுத்தியா?இல்ல…?”
“சத்தியமா  நீ என்னோட மைத்தி, என் பொண்டாட்டின்னு நினைச்சு தான் கொடுத்தேன். உன்னை தவிர வேற யார் கிட்டயும் என்னால அப்படி நடந்துக்க முடியாது மா”
“அப்புறம் எதுக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க சொல்ற? எனக்கு நினைவில்லாதப்ப உன்னை விரும்புனேனான்னு தெரியாது. ஆனா இப்ப நீ இல்லாம இருக்க முடியாது”, என்று சொல்லி அவன் நெஞ்சில் பால் வார்த்தாள்.
அடுத்த நொடி அவளை நெருங்கியவன் அவளை தொடவா வேண்டாமா என்று தவித்தான். அதை ஒரு புன்சிரிப்போடு பார்த்தவள்  அவளாகவே அவனை அணைத்துக் கொண்டாள். எல்லை இல்லாத நிம்மதியை அடைந்தான் கண்ணன்.
வெகு நேரம் அவளை அணைத்த படியே ஒரு மோன நிலையில் இருந்தான். அவன் நிலை உணர்ந்தவளும் அசையாமல் நின்றாள்.
இவர்கள் தவத்தை கலைக்கவென கண்ணன் போன் அடித்தது. அவளை விலக விடாமலே அதை எடுத்தான் கண்ணன். 
ஆரோன் தான் அழைத்தான். கண்ணன் அதை எடுத்து காதில் வைத்ததும் “என்ன மச்சி அடி பலமா?”, என்று கேட்டான் ஆரோன்.
“தேங்க்ஸ் டா”, என்று சொல்லி சிரித்தான் கண்ணன்.
“அழுவேன்னு பாத்தா சிரிக்கிற?”, என்று ஆரோன் கேக்கும் போது அவனுக்கு பதில் மைதிலி சொன்னாள்.
“எங்க வீட்டுக்காரரை நான் சிரிக்க தான் வைப்பேன் டா அண்ணா. அழ  எல்லாம் வைக்க மாட்டேன்”, என்றாள் மைதிலி.
“ஏய், மிளகாபஜ்ஜி அவன் கூட சேந்துட்டியா? அவன் பிராடு”
“காதல்ல பிராடு தனம் பண்ணலைன்னா என்ன கிக்கு? அப்புறம் அவன் என்னை கல்யாணம் செஞ்சதுல எனக்கே கோபம் இல்லை. நீ பெரிய கோபக்காரன் மாதிரி அவன் கிட்ட பேசாம இருந்த பல்லை தட்டிருவேன் பாத்துக்கோ. அப்புறம் நீயும் பிராடு தான?”

Advertisement