Advertisement

மனிஷா அவளை திருப்பி அடிக்க போக மாணிக்கவேல் அவளை பிடித்தார். ஆனால் அவரை மனிஷா தள்ளி விட்டதும் கீழே விழுந்தவர் பின் எழவே இல்லை. அவருடைய கால்கள் செயல்பாட்டை இழந்து விட்டது.
அதை ஒருவரும் கவனிக்கவில்லை. கண்ணன் மைதிலியை சமாதான படுத்திக் கொண்டிருந்தான்.
மைதிலியோ “இனி இந்த கேவலமான பொம்பளை இருக்குற வீட்டு படியை நான் மிதிக்க மாட்டேன். எல்லாம் உன்னால தான். உன்னை பாக்கலைன்னா இப்படி பட்ட கேள்வி எல்லாம் இந்த பொம்பளை என்னை பாத்துக் கேக்குமா? இனி என் வாழ்க்கைல வராத”, என்று கோபத்துடன் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள்.
“தனியா எப்படி போவா?”, என்று நினைத்து அவள் பின்னே காரை எடுக்க போனான். அப்போது மாணிக்கவேலின் முணங்கல் சத்தம் கேட்டதும் வேலைக்காரனை அழைத்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்ல சொன்னான். அருணிடம் “பாத்துக்கோ”, என்றும் சொல்லி விட்டு சென்றான்.
பின் அவன் காரை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது அவள் எங்கு சென்றாள் என்றே தெரிய வில்லை. அவள் வீட்டுக்கு செல்லும் வழியில் காரை ஓட்டிச் சென்றான். 
இத்தனை நாள் கழித்து கிடைத்த சொர்க்கம் அவனை விட்டுப் போனது போல உணர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. 
மனிஷா பேசிய பேச்சினால் தான் மைதிலி கோபமாக சென்றாள். அதற்கு கண்ணன் என்ன செய்வான் என்று கூடிய சீக்கிரமே புரிந்து கொள்வாள். இதை கண்ணனுமே நம்பினான். அவளை சமாதான படுத்த தான் தேடினான்.
சிறிது தூரம் சென்றதும் அவன் கண்ணில் பட்டாள் மைதிலி. அவளை அடைய வேகமாக வண்டியை செலுத்தியவனின் கையை விட்டு கார் கட்டுப்பாடின்றி சென்றது. அதை அவன் உணரும் முன்பே அவளை இடித்து தள்ளி இருந்தான் கண்ணன். 
ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை கண்டு துடித்துப் போனவன் அவளை தூக்கிக் கொண்டு அவனுடைய ஹாஸ்பிட்டலுக்கே சென்றான்.
கொஞ்சம் இருட்ட துடங்கியதால் யாரும் அந்த இடத்தில் இல்லை. தன்னுடைய தேவதையை தானே காயப் படுத்தியதை அவனாலே நம்ப முடியவில்லை. ஹாஸ்பிட்டலுக்கு சென்ற கண்ணன் மற்ற மருத்துவர்களை வைத்து அவளுக்கு சிகிச்சை செய்ய வைத்தான். பின் வாசுதேவனையும் ஆரோனையும் அழைத்தான்.
அவர்கள் வரும் போது பித்து பிடித்தது போல இருந்தான் கண்ணன். இருவரும் வந்ததும் நிலைமையை அறிந்து அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். 
மைதிலி வீட்டில் அவள் வீட்டுக்கு வரவில்லை என்றதும் பதட்டமானார்கள்.
அவள் செல்லும் பார்க்குக்கு சென்று பார்த்தார் கருணாகரன். அப்போது தான் அவருக்கு அவள் நிலைமையை போனில் சொன்னான் ஆரோன்.
மைதிலி உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர் சொன்ன பிறகு தான் கண்ணன் உயிர் அவனிடம் வந்தது. ஆனால் அவள் கோமா ஸ்டேஜில் இருப்பதை சொன்னதும் திகைத்தான். ஒரு மருத்துவனாக அவனுக்கு தெரியுமே அவளின் நிலை.
“இதை எப்படி டா அவளோட அம்மா அப்பா கிட்ட சொல்றது?”, என்று கேட்டான் ஆரோன்.
“எனக்கும் தெரியலை டா. நாம எப்படி அவளைப் பாத்தோம், நம்ம எல்லாம் யாருன்னு கேள்வி வரும் டா. அது மட்டுமில்லாம நானே காரை ஏத்துனேன்னு எப்படி சொல்ல?”, என்று கண்ணீருடன் சொன்னான் கண்ணன்.
“எனக்கு தெரிஞ்சு ஒரு வழி தான் டா இருக்கு. இப்போதைக்கு நாம ஆக்ஸிடெண்ட்ட பாத்து அவளை இங்க அட்மிட் பண்ணதாவே இருக்கட்டும். அவங்க கிட்ட அப்படியே சொல்லுவோம். நீ தான் காரை வச்சு அவளை இடிச்சதை சொல்லவே வேண்டாம். அவளுக்கு சரியான பிறகு நாம வந்து பாப்போம். கஷ்ட பட்ட குடும்பம் தான். அதனால பணம் எதுவும் வாங்காத”, என்றான் ஆரோன்.
“இவளை இந்த நிலைமைல போட்டுட்டு எப்படி டா நான் இங்க இருந்து அசைய முடியும். என்னைப் பாக்க அவ்வளவு ஆர்வமா தேடி வந்தவ இப்ப கிழிஞ்ச நாரா கிடக்குறா? அவ எந்திச்சு நடக்குற வரைக்கு நான் அவளை விட்டு நகர மாட்டேன்”
“புரியாம பேசாத டா. நீ டாக்டரா அவளை பாத்துக்கலாம். ஆனா அவ கூட இருந்து உன்னால பாக்க முடியாது. அப்படின்னா நீ லவ் பண்ணுறது எல்லாம் சொல்ல வேண்டி வரும். அது தெரிஞ்சாலும் பரவால்லன்னு நினைக்கலாம்னு பாத்தா அவ உன்னை லவ் பண்ணுறாளான்னு கூட தெரியாது. இப்போதைக்கு நான் சொல்றதை கேளு. அவளை டாக்டரா பாத்துக்கோ. மித்த விவரம் அவ வீட்டுக்கு தெரிய வேண்டாம்”, என்று ஆரோன் சொன்னதும் “என்னால முடியாது எனக்கு அவ கூடவே இருக்கணும். நான் தான் அவளை இந்த நிலைமைல ஆக்குனேன். நான் தான் அவளை பாத்துக்குவேன்”, என்றான் கண்ணன்.
ஆரோனுக்கு எரிச்சலாக வந்தது. நண்பனின் மனநிலையும் புரியாமல் இல்லை. ஆனால் இப்படி கிடக்கும் மகளை நினைத்து பெற்றவர்கள் கவலைப் படும் போது இவன் காதல் என்று நின்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே அவன் கவலை. 
கண்ணன் கதை அனைத்தும் வாசுவுக்கு தெரியும் ஆதலால் “பேசாம கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்ப தான் மைதிலி உங்களை விட்டு போக மாட்டாங்க. அவங்களோட அம்மா அப்பா கிட்ட கூட இன்னைக்கு தான் கல்யாணம் ஆகிருச்சுன்னு சொல்லிக்கலாம்”, என்று சொன்னான் வாசு.
கண்ணனின் கண்களில் ஒளி வந்தது. அதை உணர்ந்து “அது தப்பு”, என்று ஆரோன் மறுக்க, “நான் கல்யாணம் பண்ண போறேன்”, என்று கண்ணன் கூற “இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ மனுஷனே கிடையாது. ஆனா என் மேல உனக்கு உண்மையிலே அன்பு இருந்தா என் மேல சத்தியமா உன் கார் தான் அவளை இடிச்சது அப்படிங்குற விவரம் யாருக்கும் சொல்ல கூடாது. இனி உன் மூஞ்சிலே முளிக்க மாட்டேன்”,என்று சொல்லி விட்டு சென்று விட்டான் ஆரோன். கடைசியில் சத்தியம் வாங்கி உண்மையான நட்பை நிரூபித்து விட்டு தான் அங்கிருந்து அகன்றான் ஆரோன்.
“எனக்கு தெரிஞ்சு இது தான் மா நடந்தது. அதுவும் நீ நல்லா ஆகிட்டேன்னு ரேணு சொல்லி தான் தெரியும்”, என்று முடித்தான் ஆரோன்.
அனைத்தையும் கேட்ட மைதிலி குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள். அவள் குழப்பத்தைப் பார்த்த ஆரோன் “அவன் செஞ்சது தப்பு தான். ஆனா நீ சொல்லு. அவன் மேல உனக்கு ஏதாவது வெறுப்பு வருதா?”, என்று கேட்டான்.
இல்லை என்னும் விதமாய் தலை அசைத்த மைதிலிக்கு கண்ணனைக் காண வேண்டும் போல் இருந்தது.
“என்ன மண்டையை ஆட்டிக்கிட்டு இருக்க? வெறுப்பு இல்லை தான?”
“மேலோட்டமா பாத்தா தப்பு இல்லை. ஆனா கல்யாணம் பண்ணுனது தப்பு தான?”, என்று கேட்டாள் மைதிலி.
“தப்பு தான், அதுவும் பெரிய தப்பு தான். ஆனா அந்த வாசு தான் அவன் மூளையை சலவை செஞ்சிருக்கான். இவனும் நீ எங்க அவனை விட்டுப் போய்ருவியோன்னு அப்படி பண்ணிருக்கான். நானும் இப்ப அவனை மன்னிச்சிட்டேன். நீயும் மன்னிச்சிறேன்”
“ஹ்ம், ஆனா கண்ணனோட சித்தி….”
“மிளகாபஜ்ஜி, டெவில் பேச்சுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கணுமா? அவளை நினைச்சு கோபத்துல உன் வாழ்க்கையை தீர்மானிக்க அவ ஒண்ணும் உத்தமி இல்லை. அவ முன்னாடி இந்த வீட்டுக்கு இனி வர மாட்டேன்னு சொன்னதுக்கு எல்லாம் நீ பீல் பண்ணலாமா? அப்படியே இருந்தாலும் நீ ஏன் அந்த வீட்டுக்கு போற? அவன் தான் உனக்காகவே மாளிகையை கட்டி வச்சிருக்கானே?”
“ஹ்ம் நீங்க சொல்றதும் சரி தான். எனக்கு கண்ணனைப் பாக்கணும்”, என்றாள் மைதிலி.
“இங்க வர சொல்லவா?”
“வேண்டாம் ஆஃபிஸ்ல போய் பாக்கணும். நான் கிளம்புறேன். உங்க கிட்ட அப்புறமா பேசுறேன்”, என்று சொன்ன மைதிலி எழுந்து கொண்டாள்.
“அப்புறம் மைதிலி எனக்கு ஒரு விஷயம் பயமா இருக்கு”
“என்னண்ணா?”
“இல்லை ஒரு வேளை எல்லாம் உனக்கு நினைவு வந்துருச்சுன்னா நீ ஏதாவது தப்பான முடிவு எடுத்தா…?”
“:கவலைப் படாதீங்க. இன்னைக்கே போய் டைரி எடுத்து எல்லாத்தையும் எழுத போறேன். என்னைக்காவது நான் எல்லாத்தையும் மறந்துட்டேனா உங்களையும் மறந்துட்டா எனக்கு அந்த டைரியை நினைவு படுத்துங்க போதும். ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் குழப்பமா இருக்கு”
“என்னமா?”
“இல்லை நீங்களே சொல்றீங்க, நான் கண்ணனை லவ் பண்ணலைன்னு. ஒரு வேளை அது உண்மையா இருந்து கண்ணனை நான் அண்ணன் மாதிரி நினைச்சிருந்தா?”
“இது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனா இப்ப நீ அவன் கூட பழகினது உனக்கு நினைவு இருக்கு தான? அப்ப அவன் மேல காதல் வந்துச்சான்னு நினைச்சு பாரு. முதல்ல அவனை போய் பாரு”
“சரி. கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“அடப்பாவி இவ எல்லாத்தையும் கேட்டுட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாளே? இவ அவனை ஏத்துக்கணும்னு தான மூச்சு விடாம கதை சொன்னேன்”, என்று நினைத்தவனுக்கு தலை சுற்றியது.
இதுக்கு மேல் அவன் கையில் எதுவும் இல்லாததால் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு விட்டு கண்ணனை அழைத்தான். 
காரை ஓரம் நிறுத்தி விட்டு போனைப் பார்த்த கண்ணன் “இவன் என்ன இந்த நேரத்துல கூப்பிடுறான்?”, என்று எண்ணிக் கொண்டே அதை எடுத்து “நான் பயங்கர டென்ஷன்ல இருக்கேன் டா. ஏதாவது சொல்லி என்னை வெறுபேத்தாத. எதுக்கு கூப்பிட்ட?”, என்று கேட்டான்.
“இல்லை தனியா உக்காந்து ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன். போர் அடிச்சது. அதான் உன்னை கூப்பிட்டேன்”
“டேய் கொலைவெறியை கிளப்பாத. நானே மைதிலி எங்க போனான்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கேன்”
“மைதிலியா? ஓ அவளுக்கு எல்லாமே தெரிஞ்சிட்டா?”
“ப்ச், விளையாடாத டா”
“சரி சரி டென்ஷன் ஆகாத. மைதிலி உன்னோட ஆஃபிஸ்க்கு தான் போயிட்டு இருக்கா”
“என்னது?”
“அதிர்ச்சியாகாத. உன் மேல உள்ள கோபத்துல கண் மூடித்தனமா வண்டியை ஓட்டுனா. நான் தான் நிறுத்தி உன்னை ஏமாத்துனவன சும்மா விட்டுட்டு போகலாமான்னு ஏத்தி விட்டேன். அதான் உன்கிட்ட நியாயம் கேக்க போயிட்டு இருக்கா”
“நல்ல நண்பன் டா நீ. ஏன்டா இப்படி பண்ணுண? சரி வை. நான் போய் அவளை பாக்குறேன்”,என்று சொல்லி போனை வைத்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். 
“இந்த வருஷ பிறந்தநாள் அமோகம்”, என்று நினைத்து கொண்டே வண்டியை செலுத்தியவனுக்கு அவள் என்ன சொல்வாளோ என்று பயமாக இருந்தது. 
“இவ நான் பழைய விஷயம் எல்லாம் சொன்னா நம்புவாளா? நான் சொல்றதை காது கொடுத்து கேட்பாளா? முன்னாடியே அவ்வளவு அடமா இருப்பா. இப்ப தான் என்கிட்ட குளோசா நெருங்குறான்னு நினைச்சேன். இப்ப எல்லாம் போச்சே”, என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டு வந்தான்.
காரை நிறுத்தியதும் அவனைப் பார்த்த செக்யூரிட்டி “சின்னம்மா உள்ள இருக்காங்க சார்”, என்றான்.
“சரி நீ காரை பார்க் பண்ணிரு”, என்று சொல்லி விட்டு கிட்ட தட்ட ஓடினான். அவனுடைய அறையில் அவன் இருக்கைக்கு எதிரே அமர்ந்திருந்தாள் மைதிலி. அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அவளுக்கு எதிரே அமர்ந்தான். 
அவளோ அவன் வந்தது தெரிந்தும் நிமிர்ந்து பார்க்காமல் இருந்தாள்.
“சாரி மைதிலி”, என்று அவன் சொல்லியும் அவளிடம் இருந்து பதில் இல்லை. 
தீண்டல் தொடரும்…..

Advertisement