Advertisement

அத்தியாயம் 14
தென்றலாய் வருடும்
உன் நினைவுகளில்
என் வாழ்க்கை
அழகாய் மாறிப் போனதே!!!
அதன் பின் ரேணுகாவை தேடி பிடித்து அவள் முன் நின்றார்கள் ஆரோனும் கண்ணனும். ரேணுகாவுக்கு ஆரோனை மட்டும் தான் அடையாளம் தெரிந்திருந்தது. கண்ணன் ஆளே மாறிப்போயிருந்தான்.
“எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?”, என்று புன்னகையுடன் கேட்டாள் ரேணுகா.
“நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க?”, என்று கேட்ட ஆரோன் எப்படி மைதிலி பற்றி விசாரிக்க என்று தயங்கினான்.
ஆனால் கண்ணனோ “எனக்கு மைதிலியைப் பாக்கணும் ரேணுகா”, என்றான்.
அவன் சொன்னதும் திகைத்தாலும் கண்ணனும் மைதிலியும் முன்னமே ஒட்டுதலாய் இருப்பது தெரியும் என்பதால் பெரிதாக எதையும் எண்ணாமல் “அவ இப்ப தான் லவன்த் படிக்கிறா. அவளும் உன்னோட குருப் தான் கண்ணன். ஆனா அவளை எப்படி பாக்க? வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. அம்மா அப்பா அலோவ் பண்ண மாட்டாங்க”, என்றாள்.
“நீ எங்கயாவது அவளை கூட்டிட்டு வா. எங்களைப் பாக்கன்னு சொல்லாத”
“கண்டிப்பா சொல்ல முடியாது. அவளுக்கு இப்ப உங்களை நினைவு இருக்கானு தெரியாது. ஆனா கண்ணன் அப்படின்னு பேரைக் கேட்டா மட்டும் அவளுக்கு பிடிக்காது”
“அது அவ கிட்ட பேசாம இருந்ததுனால கோபமா இருக்கும். இப்ப பெரிய பொண்ணா ஆகிருப்பா. அதெல்லாம் மறந்துருவா. அப்புறம் கண்ணன் ஒரு வாரத்துல அமெரிக்கா கிளம்புறான். அதுக்குள்ள அவளை அவன் கண்ணுல காமிச்சிரு ரேணு”, என்றான் ஆரோன்.
“ஹ்ம் சரி எப்ப, எங்க கூட்டிட்டு வரேன்னு போன் பண்ணுறேன்”, என்று ரேணுகா சொன்னதும் கிளம்பி போனார்கள்.
சொன்னது போல் அடுத்த நாளே ஆரோனை ஒரு பார்க்குக்கு வர சொல்லி அழைத்தாள் ரேணுகா. அவனும் கண்ணனை அழைத்துக் கொண்டு அங்கு வந்து காத்திருந்தான். கண்ணன் மனம் முழுவதும் எதிர்பார்ப்பில் மலர்ந்திருந்தது.
அதைப் பார்த்த ஆரோன் “இவன் முன்னாடியே மைதிலியை பிடிக்கும்னு சொல்லிருந்தா முன்னாடியே பாக்க வச்சிருக்கலாமே”, என்று நினைத்தான்.
இவர்கள் எதிர் பார்த்த படி ரேணுகா மைதிலியை அழைத்து வந்தாள். கூடவே மலரையும்.
மைதிலியைப் பார்த்த கண்ணன் கண்களை இமைக்காமல் அவளைப் பார்த்தான். அதே துறுதுறு கண்களுடன், கொள்ளை கொள்ளும் அழகுடனும் நீண்ட கூந்தலுடனும் அங்கே வந்தாள் கண்ணனின் கண்ணம்மா.
வயதில் சிறியவள் தான். ஆனால் அவள் வயதுக்கு இது கூடுதல் வளர்ச்சி தான் என்று பார்ப்பவர்கள் எண்ணுவார்கள். மலருடன் வாய் அடித்துக் கொண்டே வந்தவளை ரசித்துக் கொண்டிருந்தான் கண்ணன். 
ரேணுகா, மைதிலியையும் மலரையும் அழைத்துக் கொண்டு வந்து நின்றது இவர்கள் அருகில் தான்.
இரண்டு ஆண்கள் நின்றவுடன் குழப்பமாக ரேணுகாவைப் பார்த்தாள் மலர். ஆனால் மைதிலியோ பார்த்த உடனே இருவரையும் அடையாளம் கண்டு கொண்டாள்.
அனைவரையும் முறைத்துப் பார்த்த மைதிலி கடைசியில் ரேணுகாவையும் முறைத்து விட்டு அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.
அவள் கையைப் பிடித்த ரேணுகா “ஏய் இருடி ஒரு நிமிஷம்”, என்றாள்.
ஆனால் மைதிலியோ “இந்த வீணாப் போனவங்களைப் பாக்க தான் இங்க கூட்டிட்டு வந்தியாக்கா? நான் கூட ஏதோ முக்கியமானவங்களோன்னு நினைச்சேன்”, என்று கோபத்துடன் சொன்னாள்.
அவள் அப்படிச் சொன்னதும் ஆரோனும் கண்ணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 
பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்த கண்ணனை ரேணுகாவுக்கு அடையாளம் தெரியவில்லை.  ஆனால் மைதிலி அவர்களை அடையாளம் கண்டு கொண்டாள். 
“ஏய் நாங்க வீணா போனவங்களா? நீ யாருன்னு நினைச்சு எங்க கிட்ட பேசுற? நாங்க யாருன்னு சொன்னா அப்படியே பாசமா மாறிருவ?”, என்றான் ஆரோன்.
“வீணா போனவங்களை அப்படி தான் சொல்லணும். யாருன்னு தெரிஞ்சா பாசம் பொங்குமா? பொங்காது டா பொங்காது. விஷம் வச்ச பாயாசத்தைத் தான் உங்க வாயில ஊத்தணும். நீ ஆரோன் குரங்கு தான? அவன் உன் ஃபிரண்ட் தான?”, என்று கேட்டாள் மைதிலி.
“எப்படி கண்டு பிடிச்ச மிளகா பஜ்ஜி?”
“ஆமா ஆமா, உங்களைக் கண்டு பிடிக்க சி ஐ டியா வரணும்? உங்களை எல்லாம் பாக்க எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை. நான் போறேன்”
“இரு மிளகாபஜ்ஜி, நீ இன்னும் மாறவே இல்லை”
“மாறாம இருந்தா தான் நாம மனுசங்க. மாறுனா மனுசனே இல்லை”
“கோப படாத மிளகாபஜ்ஜி. நாங்க உன்னோட பிரண்ட்ஸ் தான?”
“பிரண்ட்ஸா? நீங்களா? நீங்க என்னோட எதிரிங்க. அவன் தான் நடந்தது என்னன்னு தெரியாம லூசு மாதிரி நடந்துக்கிட்டான். நீ என்ன டேஷ்க்கு பேசலையாம்?”
“எனக்கு எக்ஸாம் இருந்துச்சு தான? ஆமா அது என்ன டேஷ்?”
“அதை உன் பிரண்டு கிட்ட கேளு. அப்புறம் எக்ஸாமையே கட்டிட்டு அழ வேண்டியது தான? என்னைத் தேடி எதுக்கு வந்தீங்க?”, என்று கேட்ட மைதிலி மலர் மற்றும் ரேணுகாவிடம்  “நீங்க ரெண்டு பேரும் வந்தா வாங்க. நான் வீட்டுக்கு போறேன்”, என்று சொல்லிக் கிளம்பி விட்டாள்.
அவளையே ஆசையாக ரசித்து கொண்டிருந்த கண்ணனை கிள்ளி விட்ட ஆரோன் “அவ போறா பாரு டா. அவளை பிடிச்சு வச்சி பேசு. அசையாம நிக்குற?”, என்று சொன்னான்.
அடுத்த நொடி அவள் பின்னே ஓடினான் கண்ணன். இவர்கள் மூவரும் அவர்களைப் பார்த்த படியே நின்றார்கள். கெஞ்சிக் கொண்டே அவள் பின்னே சென்ற கண்ணன் வாயில் இருந்து வந்தது எல்லாமே “சாரி மைத்தி”, என்ற வார்த்தை தான்.
அவள் கண்டு கொள்ளாமல் செல்லவே அவள் முன்னர் போய் நின்றவன் அவள் காலிலே விழுந்து விட்டான்.
இதை மைதிலி மட்டும் இல்லை. இவர்கள் மூவருமே எதிர்பார்க்கவில்லை. 
அவ்வளவு பெரிய பையன் ஒரு சிறு பெண்ணின் காலில் விழுவதா.
கோபத்தைக் கை விட்ட மைதிலி “முழுமாடு மாதிரி வளந்துருக்க? என் காலுல விழுற? எந்திரி. எல்லாரும் பாக்குறாங்க”, என்று சொல்லி கை கொடுத்தாள்.
அவள் கை தொட்டு எழுந்த நொடி சிலிர்த்து போனான் கண்ணன். அந்த சிலிர்ப்பு காமத்தினால் வந்ததல்ல. காதலினால் வந்தது.
அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்த மைதிலி “இங்க வா”, என்று அவனை அழைத்தாள். அவளுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான் கண்ணன்.
“வேற யாராவது இப்படி பண்ணிருந்தா கண்டுக்காம போயிருப்பேன். உன்னைக் கடந்து அப்படி போக முடியலை”, என்றாள் மைதிலி.
“உன்னை தவிர வேற யாராவது இருந்துருந்தா திரும்பிக் கூட பாக்க மாட்டேன்”, என்ற கண்ணனின் பதிலில் மைதிலி உதடுகளில் புன்னகை வந்தது. அதை பார்த்து கண்ணன் நிம்மதியடைந்தான்.
“என்னை தேடி வர உனக்கு இவ்வளவு வருஷமா டா கண்ணா? நான் எவ்வளவு மிஸ் பண்ணுனேன்னு தெரியுமா? உனக்கு என்ன ஆச்சு? அந்த டெவில் உன்னை ஏதாவது செஞ்சிருக்குமோ? நீ சாப்பிட்டியான்னு இப்படி எல்லாம் யோசிச்சிட்டே இருப்பேன் தெரியுமா? நீ என்னடான்னா இவ்வளவு பெருசா வளந்துருக்க?”
“என்னை மன்னிச்சிரு மைத்தி. ஏதோ கோபத்துல அப்படி செஞ்சிட்டேன். ஆனா உன்னை நினைக்காத நாளே இல்லை. மன்னிச்சிருவ தான? இப்பவும் எனக்கு உன்னை விட்டா வேற யாருமே இல்லை”
“உன்னை மன்னிக்காம வேற யாரை மன்னிக்கவாம்? 
“எப்படி எங்களை கண்டு பிடிச்ச மைத்தி?”
“மறந்தா தான அடையாளம் வைக்கணும்? தினமும் நினைச்சிட்டு இருந்தா எப்படி மறக்கும்? அதுவும் இந்த குண்டு கண்ணு மறக்கவே செய்யாது. ஆரோன் அண்ணா இப்பவும் குரங்கு மாதிரி தான் இருக்கான்”, என்று சிரித்தாள்.
அவள் சிரிப்பில் அவனும் அழகாக சிரித்தான். பின் அவனைப் பற்றி அவளும் அவளைப் பற்றி அவனும் விசாரித்தார்கள். 
பின் அங்கிருந்த மூவரையும் கை காட்டி அழைத்தான் கண்ணன். அதன் பின் அனைவரும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அங்கிள் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டாள் மைதிலி.
“குட்டி ஏஞ்சல் பாத்தியா பாத்தியானு கேப்பார்? நீ ஒரு நாள் எங்க வீட்டுக்கு அவரைப் பாக்க வரியா?”, என்று கேட்டான் கண்ணன்.
அவள் சரி என்று சொன்னதும், அவன் அமெரிக்கா செல்வது பற்றி கூறினான் ஆரோன். அது தெரிந்து உள்ளுக்குள் வருந்தினாள் மைதிலி. 
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அனைவரும் கிளம்பினார்கள். கண்ணனுக்கோ அவளுடன் செல்ல கால்கள் துடித்தது. 
மைதிலியோ வெகு நாட்கள் கழித்து நிம்மதியாக இருந்தாள். அடுத்த நாள் அவள் நிம்மதியை கெடுக்கவே அவளுடைய பள்ளி வாசலில் வந்து நின்றார்கள் கண்ணனும் ஆரோனும். 
ஸ்கூல் முடிந்து வெளியே வந்தவள் சத்தியமாக அவர்களை எதிர்பார்க்க வில்லை. 
திருட்டுதனமாக அவர்களை நோட்டம் விட்டவள் அவர்களை கண்டுகொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.
“பாத்துட்டு பாக்காத மாதிரி போறதைப் பாரு டா. இந்த வாண்டு பின்னாடி எல்லாம் அலைய வேண்டி இருக்கே”, என்றான் ஆரோன்.
“அவ கூட அவ பிரண்ட்ஸ் வாராங்க பாரு. அதான் அப்படி போறா. வா அவ பின்னாடியே போகலாம்”, என்று சொல்லி அவள் பின்னே நடந்தார்கள். சிறிது நேரத்தில் அவள் தோழிகள் வேறு பக்கம் சென்றதும் இவர்கள் அருகில் வந்தவள் இவர்களை முறைத்தாள்.
“ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது மூளை இருக்கா? ஒரு வயசு பொண்ணு பின்னாடி இப்படி வந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? என் பிரண்ட்ஸ் வேற கிண்டல் பண்ணிட்டு போறாங்க”, என்று மைதிலி கேட்டதும் “நீயா வயசு பொண்ணு?”,என்று கேட்டு அவளிடம் ஒரு கொட்டை வாங்கினான் ஆரோன்.
“சாரி மைத்தி, உன்னை பாக்கணும் போல இருந்துச்சு. அதனால தான் வந்தோம்”, என்றான் கண்ணன். 
“சரி, சரி நேத்து மாதிரி பார்க் வாங்க. நான் வரேன்”
“கூடவே மலரை கூட்டிட்டு வா”, என்று சிரித்தான் ஆரோன்.
அவனை முறைத்து விட்டு கண்ணனை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள் மைதிலி.
அதன் பின் அடுத்து வந்த நான்கு நாட்களும் இதுவே தொடர்ந்தது. மலரும் மைதிலியும் பார்க் வருவார்கள். நால்வரும் அமர்ந்து சிறிது நேரம் பேசுவார்கள். கண்ணனுக்கு அழகான நாட்கள் அவை. ரேணுகா என்றாவது வருவாள்.
அடுத்த நாளே மைதிலியிடம் விடை பெற்று பாரீன் சென்று விட்டான் கண்ணன். புன்னகையோடு அவனை வழி அனுப்பினாள் மைதிலி. 
அந்த புன்னகையில் தன்னை தொலைத்தாலும் “அவளுக்கு என்னை பிரிஞ்சு இருக்குறது வருத்தமே இல்லையோ?”, என்ற கவலை அவனை அரித்தது.
ஆனால் அவனுக்கு குறையாத ஏக்கத்தை குரல் வழியாக அவனுக்கு அனுப்பி அவனை நிம்மதியடையச் செய்தாள் மைதிலி. “எப்ப டா கண்ணா வருவ?”, என்ற அவளின் ஒரு கேள்வியில் அவனுடைய சோகம் அனைத்தும் அவனை விட்டு அகன்று விடும்.
ஏதாவது காரணம் சொல்லி ரேணுகாவை போனில் அழைத்து  மைதிலியிடம் பேசிவிடுவான். 
இப்படியே இரண்டு வருடம் கடந்திருந்தது. மைதிலி பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட்டுக்காக காத்திருந்தாள். 
கண்ணன் படித்து முடித்து வரும் போது அவனுக்காக அவனுடைய அப்பா ஆரம்பித்து வைத்திருந்தது தான் எம்.கே ஹாஸ்பிட்டல். உண்மையிலே அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. 
அன்று மாலை மைதிலியை காண சென்றான் கண்ணன். அவளும் ஆர்வமாக வந்தாள். முன்பு பார்த்ததை விட இப்போது நன்கு வளர்ந்திருந்தாள். 
இவர்களைக் காண ஆரோனும் வந்து விட்டான். அவன் வந்ததும் கேட்டது “மலரை கூட்டிட்டு வரலையா?”, என்று தான்.
“மலருக்கு லீவ் இல்லை”, என்று சொல்லி முறைத்தாள் மைதிலி.
தினமும் ஒரு மணி நேரம் நேரில் பார்ப்பது தொடர்ந்தது. மைதிலிக்கு பரிட்சை முடிவுகள் வந்து அதை அவனிடம் சொல்வதற்காக வந்திருந்தாள். அவள் மார்க்கைக் கேட்டு சந்தோசப்பட்டவன் அவளை வீட்டுக்கு அழைத்தான். 
மைதிலியும் அவனுடன் சென்றாள். மாணிக்கவேலிடம் நன்கு பேசினாள் மைதிலி. சாருவும் அருணும் கூட அவளிடம் நன்கு பேசினார்கள்.
அப்போது அங்கு வந்த மனிஷா அனைவர் முன்னிலையிலும் மைதிலியை தரக்குறைவாக பேசிவிட்டாள்.
“இவ்வளவு சின்ன வயசுல இவன் கூட அலையுறியே? இன்னும் கொஞ்சம் வருஷம் போனா, நீ எத்தனை பேர் கூட போவ? உன் அழகுக்கு இவன் எவ்வளவு குடுக்குறான்?”, என்று கேட்டாள் மனிஷா.
கண்ணன் முழுக் கோபத்துடன் “கண்ட சனியன் கிட்ட எல்லாம் பேசாத மைத்தி. அது சாக்கடை. வா நாம போகலாம்”, என்று சொல்லி அவளைப் பிடித்திருந்தான்.
மைதிலி அவள் பேசிய பேச்சில் சப்பென்று, மனிஷா கன்னத்தில் அறைந்திருந்தாள்.

Advertisement