Advertisement

ஆரோன் அவனை எவ்வளவு தாங்கியும் அவன் பேச வில்லை. அவரிடம் பேசியதை சொல்ல வந்தாலும் அவன் சொல்ல விட வில்லை.  அதன் பின்னர் மைதிலி பள்ளிக்கு வருவதும் நின்று போனது. 
பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தான் கண்ணன். ரேணுகாவும் ஆரோனும் அவனை விட குறைவான மதிப்பெண்களே.
அதனால் கண்ணனுக்கு மேக்ஸ் பயாலஜி பிரிவும், அவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவும் கிடைத்தது. அதில் அவர்களை விட்டு இன்னும் விலகினான். 
இந்த இடைவெளியில் மாணிக்கவேல் “சர்வீஸ் போதும்”, என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டார். காரணம் அவர் காலில் பட்ட மிகப் பெரிய காயம். வீட்டுக்கு வந்ததும் கண்ணனின் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு அவனை வீட்டுக்கும் அழைத்து செல்ல வந்தார்.
“ஏன் டுவல்த்ல நான் நல்ல மார்க் எடுக்கணும்னு உங்களுக்கு அக்கறை இல்லையா? இங்க இருந்தா தான் நான் படிப்பேன். வீட்டுக்கு வந்தா என்னை படிக்க விட மாட்டீங்க”, என்று சொல்லி மறுத்து விட்டான் கண்ணன்.
“என்னை மன்னிச்சிருப்பா.. அந்த ராட்சசி பேச்சைக் கேட்டு உன்னை தப்பா நினைச்சுட்டேன்”
“இப்ப மட்டும் என்ன மன்னிப்பெல்லாம்? யார் உங்களுக்கு புரிய வச்சா? அப்புறம் உங்க காலுக்கு என்ன? ஒரு மாதிரி நடக்குறீங்க?”
 
“காலுல ஒரு சின்ன அடி. அப்புறம் உண்மை எல்லாம் இப்ப இல்லப்பா, முன்னாடியே தெரியும். உன்னோட பிரண்ட்ஸ் ஆரோனும் மைதிலியும் தான் எல்லாம் சொன்னாங்க. அந்த குட்டி ஏஞ்சல் தான் என் கண்ணனை அழ வச்சா அடிச்சிருவேன்னு மிரட்டுனாளே? எங்க ரெண்டு பேரும்”, என்று மாணிக்கவேல் சொன்னதும் அதிர்ச்சியானான் கண்ணன்.
“அவங்களா சொன்னாங்க? என்ன சொன்னாங்க?”, என்று கேட்டு அனைத்து விவரங்களையும் கேட்டவன் இப்போது வருந்தினான். 
அவர் சென்றதும் அடுத்து அவன் காண சென்றது ஆரோனைத்தான்.
இப்போது முகம் திருப்புவது ஆரோனின் முறையானது. அவனுடைய கிளாஸ், ஸ்கூல் கிரவுண்ட், ஹாஸ்டல் என்று அவனை வழி மறைத்தான் கண்ணன்.
ஆரோன் மறுபடி பேசியதும் நட்பை புதுப்பித்துக் கொண்டான். ஆனால் மைதிலி. அவளை பற்றி ஆரோனிடம் கேட்க கூட மனதில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பதாம்.
இப்படியே நாட்கள் நகர கண்ணனின் அழகில் கவரப் பட்டு தைரியம் உள்ள பெண்கள் அவனிடம் காதலை சொன்னார்கள். ஒரு முறைப்போடு அவர்களை கடந்து சென்று விடுவான்.  இதில் கொடுமை என்னவென்றால் கண்ணனிடம் கொடுக்க சொல்லி ஆரோனிடமே கடிதத்தை கொடுத்து விட்டார்கள்.
அவனை நன்கு திட்டி விடுவான் கண்ணன். இதுவே தொடர பொறுமை இழந்த ஆரோன் “பேசாம யாரையாவது லவ் பண்ணி தொலையேன் டா. அப்புறம் எனக்கு ரெஸ்ட் கிடைக்கும்ல?”, என்றான்.
அவனை தீர்க்கமாக பார்த்த கண்ணன் “தேவை இல்லாத விசயங்களைப் பத்தி என்கிட்ட பேசாத”, என்று ஒரு வார்த்தையில் முடித்து விட்டான். 
பன்னிரெண்டாம் வகுப்பு வரை இப்படியே சென்றது அவன் வாழ்க்கை. மைதிலியை பற்றி மட்டும் ஒரு நாள் கூட அவன் நினைக்காமல் இருந்ததில்லை. 
கண்ணன், ஆரோன் இடையே இருந்த நட்பு மேலும் மேலும் இறுகி கொண்டே தான் சென்றது. ஆனால் மைதிலியைப் பற்றி மட்டும் கண்ணன் ஆரோனிடம் எதுவுமே கேட்க மாட்டான்.
ஏனென்றால் மைதிலி விஷயத்தில் ஆரோன் எப்படி நடந்து கொள்வான் என்று பயம் இருந்தது கண்ணனுக்கு. அது உண்மையும் கூட. மைதிலியை ஆரோன் தன்னுடைய சொந்த தங்கையாகத் தான் பார்த்தான்.
பள்ளி முடிந்ததும் வேறு வழியில்லாமல் கண்ணன் அவனுடைய வீட்டுக்கு சென்றான். ஆரோன் அங்கேயே தங்கியிருந்தான்.
கண்ணன் வீட்டுக்கு சென்றதும் மனிஷா மறுபடியும் அவளுடைய வேலையை ஆரம்பித்தாள். கண்ணனோ ஒதுங்கி போனான். 
இதில் அருணும் சாருவும் அவனை அண்ணா அண்ணா என்று அவனை சுத்தி வர அவர்களிடம் பேச ஆசை இருந்தாலும் மனிஷாவை நினைத்து விலகிப் போனான்.
ஒரு முறை அவர்கள் வந்து இவனிடம் பேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்த மனிஷா தன்னுடைய பிள்ளைகளை அடி வெளுத்து விட்டாள்.
அதுமட்டுமில்லாமல் இவனிடம் வந்து “என் பிள்ளைங்க கிட்ட பேசுன உன்னை உயிரோட வைக்க மாட்டேன். என்ன பாக்குற? என்னோட அண்ணனை வச்சு உன் பாட்டி தாத்தா கதையை முடிக்க தெரிஞ்ச எனக்கு உன் கதையை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? சோத்துல விஷம் வச்சாலே போதும்”, என்று மனிஷா சொன்னதும் அதிர்ச்சியில் விழி விரித்து நின்றான் கண்ணன். அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“பயப்படாத, அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். இப்ப சொத்து உன் பேர்ல இருக்கே. அதனால தான் உன்னை உயிரோட விடுறேன்”, என்று சொல்லி விட்டு அவள் போனதும் மனதுக்குள் அந்த வயதானவர்களை நினைத்து கண்ணீர் வடித்தான். அன்றில் இருந்து வீட்டில் அவன் சாப்பிடுவதில்லை. 
அவன் சாப்பிடாததைப் பார்த்து மாணிக்கவேல் கேட்டதற்கு “என்னை வற்புறுத்தாதீங்க”,என்று சொல்லி விட்டான்.
ஆனால் அவரும் வீட்டில் நடப்பதைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அதனால் என்ன நினைத்தாரோ, அவனை தனியே அழைத்து சென்றார். 
“வீட்ல உனக்கு என்ன கஷ்டம் நடந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியது தானப்பா?”,என்று மாணிக்கவேல் கேட்டதும் அவரை பார்த்து கேவலமான சிரிப்பை உதிர்த்தான் கண்ணன். அந்த சிரிப்பில் “சொன்னா மட்டும் என்ன செய்வீங்க?”, என்ற கேள்வி தொக்கி நின்றது.
“என்னை மன்னிச்சிருப்பா. அவ கிட்ட நான் அடங்கி போகல. என்னோட  மூணு பிள்ளைங்களை நினைச்சு அமைதியா இருக்கேன். அன்னைக்கு அவ உன்கிட்ட உன் தாத்தா பாட்டியை கொன்னதா சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன். அதுல இருந்தே அவ எந்த எல்லைக்கும் போவான்னு புரிஞ்சது. இப்போதைக்கு சொத்து எல்லாம் உன் பேர்ல இருக்குனு தான் அமைதியா இருக்குறா. எப்ப வேணா அவ ஏதாவது செய்யலாம். அதுக்கு முன்னாடி நாம ஏதாவது செய்யணும்”
“நான் இப்ப என்ன செய்யணும்?”, என்று கேட்டான் கண்ணன்.
“என் மேல நம்பிக்கை இருந்தா உன்னோட சொத்தை நான் என்ன வேணும்னாலும் செய்யலாம்னு எனக்கு எழுதிக் கொடு”
“எனக்கு டாக்டர்க்கு சீட் கிடைச்சா என்னை படிக்க வைப்பேன்னு நீங்க உறுதி கொடுத்தா நானும் எழுதிக் கொடுக்குறேன்”, என்றான் கண்ணன்.
அந்த வயதிலே அவனுடைய தெளிவான முடிவைக் கண்டு “இவன் நல்லா வருவான்”, என்று நம்பிக்கை கொண்டார் மாணிக்கவேல்.
கையோடு கொண்டு வந்திருந்த பத்திரத்தை அவனிடம் கொடுத்தார். அதை படிக்காமலே கையெழுத்து போடப் போனான்.
“படிச்சிட்டு போடுப்பா”
“இந்த சொத்து எல்லாம் என் கூட வரப் போறது இல்லை. எப்பவும் என்னை விட்டு போகாத படிப்பை கொடுப்பேன்னு சொல்லிருக்கீங்க. அதை நம்பி தான் போடுறேன்”, என்று சொல்லி போட்டுக் கொடுத்தான்.
அதன் பிறகு வெகு துரிதமாக வேலைகளை ஆரம்பித்தார் மாணிக்கவேல். துணைக்கு அவருடைய நண்பனின் மகன் வாசுதேவனை வைத்துக் கொண்டார்.
“எம். கே”, என்ற பெயரில் தொழில்களை துடங்கினார். மிலிட்டரிகாரர் என்ற பெயர் அவருக்கு பல இடத்தில் உதவியது. பணத்துக்கு கிராமத்தில் இருந்த தேவையில்லாத இடங்களை வித்து விட்டார்.
கடின உழைப்பை போட்டதால் தொழில் மேலும் விரிவடைந்தது. கண்ணனுடைய தாத்தா பாட்டி வைத்திருந்தது அனைத்துமே நிலபுலன்கள் தான். அதை தொழிற்சாலையாகவும் கம்பேனியாகவும் மாற்றிய பெருமை மாணிக்கவேலையே சாரும்.
தன் மேல் உயிரையே வைத்திருந்த கல்யாணிக்கு செய்த துரோகத்துக்கு பாவமன்னிப்பாகவே அதைக் கருதினார்.
தொழிலைப் பற்றி, வரும் லாபம் பற்றி அரை குறையாக அறிந்த மனிஷா “செத்து போன உன் பொண்டாட்டி கல்யாணி பேரைச் சேத்து தான எம். கேன்னு வச்சிருக்க?”, கேள்வி கேட்டாள். அவள் மேலும் கேள்வி கேட்பதற்கு முன் அவளை பணத்தால் அடித்தார்.
தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் அவளும் பெரிதாக எடுக்க வில்லை. இப்படியே நாட்கள் நகர்ந்தது. கண்ணனும் மெடிக்கல் காலேஜில் சேர்ந்தான். மனிஷாவுக்கு உள்ளுக்குள் புகைந்தாலும் வெளியே எதையுமே காட்ட வில்லை.
கண்ணனோ ஹாஸ்டலில் இருந்து தான் படிப்பேன் என்று சென்று விட்டான். அங்கு அவனுக்கு கிடைத்த நண்பன் தான் சதீஷ்.
ஆரோனுக்கு இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணனும் ஆரோனும் சந்தித்துக் கொண்டார்கள். சதீசும் இவர்களுடன் நட்பாகி விட்டான். 
சதீஷின் தம்பி சக்தியும் அருணும் ஒரே வகுப்பு தோழர்கள். அருணைப் பார்க்க சக்தி அடிக்கடி வீட்டுக்கு சென்றதால் அவனை விரும்ப ஆரம்பித்தாள் சாரு.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. கண்ணன் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது ஆரோன் படித்து முடித்து வேலையில் சேர்ந்து விட்டான்.
கண்ணன் படித்து முடித்ததும் அவனை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் மாணிக்கவேல். மனிஷா புலம்பியே தள்ளினாள். 
அடுத்த வாரம் கிளம்ப வேண்டும் என்ற நிலையில் தான் ஆரோனிடம் பேசிக் கொண்டிருந்தான் கண்ணன்.
“இப்படியே படிப்பு படிப்புனு ஒடுறதை எப்ப நிப்பாட்ட போற கண்ணன்?”, என்று கேட்டான் ஆரோன்.
“ப்ச் எதுலையுமே விருப்பம் இல்லை டா. ஏதோ மனசு வெறுமையா இருக்குற மாதிரி இருக்கு. இனி உன்னையும் ரெண்டு வருசத்துக்கு பாக்க முடியாது”, என்று சோர்வாய் சொன்னான் கண்ணன்.
“பேசாம கல்யாணம் பண்ணிக்கோ”
“கல்யாணமா நானா?”
“என்ன டா இப்படி கேக்குற? உன் அழகுக்கு பொண்ணுங்க வரிசைல நிக்குறாங்க. ஸ்கூல்லயே அத்தனை பொண்ணுங்க. காலேஜ்ல கேக்கவா வேணும்? உனக்கு துணைக்கு ஒரு ஆள் இருந்தா நல்லா இருக்குமே டா”
“என் வாழ்க்கைல ஒருத்தியை தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது”
“ஒருத்தியா? யார் டா அது?”
“உனக்கு தெரிஞ்சவ தான்”
“எனக்கு தெரியுமா? நாம பொண்ணுங்களைப் பத்தி பேசுனதே இல்லையே. இப்ப எங்க இருக்கா?”
“அதை நீ தான் சொல்லணும்”
“நானா?”
“ஆமா மைதிலி பத்தி நீ தான் சொல்லணும். என் வாழ்க்கைல அவளைத் தவிர வேற யாருக்கும் இடம் கிடையாது”
“ஏய், மிளகா பஜ்ஜியையா சொல்ற?”
“ஹ்ம்ம ஆமா. இப்பவாது அவளைப் பத்தி சொல்லு டா. எனக்கு அவளைப் பாக்கணும்”
“நீ அந்த மிளகா பஜ்ஜியை மறக்கவே இல்லையா?”
“எப்ப நான் செத்து, என்னை அடக்கம் பண்ணுறாங்களோ அப்ப தான் அவளை மறப்பேன். அவளைப் பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா டா? நீ அவளைப் பாத்தியா?”
“நீ அவளை திட்டியதும் வீட்டுக்கு போன அப்புறம் அவ ஒரே அழுகை போல? என்ன டா சொன்னீங்க என் தங்கச்சியைன்னு ரேணு சண்டை. அப்புறம் ரேணுகாவும் என்னோட பேசுறது இல்லை. ஆனா ரேணு எங்க வேலை பாக்குறான்னு தெரியும். அவளைப் பாத்தா மைதிலி பத்தி தெரிஞ்சிரும்”
“ஹேய் நிஜமாவா?”
“ஹ்ம் ஆமா, அப்புறம் உண்மைலேயே லவ் பண்ணுறியா டா?”
“எனக்கு லவ்வா இல்லையான்னுலாம் சொல்ல தெரியாது. ஆனா அவ என்கூட இருந்தா தான் எனக்கு லைப்.. இப்ப அவ ஸ்கூல் கூட முடிச்சிருக்க மாட்டா. ஆனா எத்தனை வருஷம் ஆனாலும் அவளுக்காக காத்துருப்பேன் டா”, என்று சிரித்தான் கண்ணன். 
அவன் இப்படி கூற மைதிலியோ கண்ணன் என்ற பெயரையே வெறுத்தாள்.
தீண்டல் தொடரும்….
 

Advertisement