Advertisement

அத்தியாயம் 13
உன் தீண்டலில் கரையும்
ஒவ்வொரு நொடியும்
புது ஜனனம் எடுக்கிறேன் நான்!!!
தன்னுடைய வாழ்க்கையை பற்றி ஆரோன் கூற, ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தாள் மைதிலி.
“நான் உன்னை எப்ப பாத்தேன் தெரியுமா மைதிலி? ஒரு பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு நீ உங்க அம்மா அப்பாவோட வந்துருந்த. அப்ப நீ ரொம்ப சின்ன பொண்ணு. அன்னைக்கு நான் கண்ணனை தேடி ஓடி வரும் போது நீ சாப்பிட்டுகிட்டு இருந்த ஐஸ் கிரிமை தட்டி விட்டுட்டேன். நான் சாரின்னு சொல்றதுக்குள்ள நீ அழ ஆரம்பிச்சிட்ட”, என்று அன்றைய நினைவில் சிரித்தான் ஆரோன்.
“ஹா ஹா நான் அழுதேனா? உங்களை அடிக்கலையா? ஆனா என்னோட அம்மா அப்பா வேற மாதிரி என்னை பத்தி சொன்னாங்க. ரொம்ப கோவக்காரி, சேட்டைக்காரி, வாய் பேசிட்டே இருப்பேன்னு?”, என்று சிரித்தாள் மைதிலி.
“நீ அடிக்காதது என்னோட அதிர்ஷ்டம் மா. நீ அழுதப்ப எனக்கு என்ன பண்ணன்னு தெரியாம உன்னை சமாதான படுத்த கிட்ட வந்தேன். ரேணுவும் நீ அழுறதைப் பாத்துட்டு கிட்ட வந்தா. என்ன ஆச்சு மைதிலினு அவ கேட்ட அப்புறம் தான் உன் பேர் மைதிலின்னே தெரியும். நான் பதில் சொல்றதுக்குள்ள நீ இந்த குரங்கு என் ஐஸ் கிரிமை தட்டி விட்டுட்டான்னு சொன்ன. நீ குரங்குன்னு சொன்ன உடனே நான் உன்னை முறைச்சேன்”
“என்னது குரங்கா ஹா ஹா”
“உனக்கு சிரிப்பா தான் இருக்கும். அப்புறம் ரேணு தான் அப்படி சொல்ல கூடாது பாப்பா. இது ஆரோன், என் கிளஸ்ல தான் படிக்கிறான். ஆரோன் இது என் கடைசி தங்கச்சி, மைதிலி. குரங்குன்னு சொன்னதுக்கு ஆரோன் கிட்ட சாரி சொல்லுன்னு உங்க அக்கா சொன்னதும் நீயும் சாரி அரண் அப்படின்னு சொன்ன. உடனே எங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு வந்துருச்சு. ரேணு தான் நீ அண்ணான்னே சொல்லு மைதிலினு உனக்கு சொல்லிக் கொடுத்தா. நானும் உன்னை கூட்டிக்கிட்டு ஐஸ்கிரீம் வாங்க போனேன். ஐஸ் கிரீம் வாங்கிட்டு திரும்பும் போது தான் கண்ணன் தனியா உக்காந்துருக்குறதைப் பாத்து உன்னையும் கூட்டிக்கிட்டே அங்க போனேன். அவன் எங்கயோ பாத்துட்டு உக்காந்துருந்தான்”
…..
“நீ இது யாருன்னு கேட்ட. இவன் என்னோட பிரண்ட் கண்ணன். நீ கண்ணண்ணான்னு சொல்லுன்னு உனக்கு சொல்லிக் கொடுத்தேன். ஆனா நீ அவனை கூப்பிட்டது கண்ணான்னு. பாரேன் அப்பவே அவன் உனக்கு அண்ணன் இல்லைன்னு தோணிருக்கு. அவ்வளவு நேரம் அமைதியா இருந்தவன் நீ கண்ணான்னு கூப்பிட்டதும் தான் திரும்பிப் பார்த்தான். என்ன நினைச்சானோ உன்னையே பாத்துட்டு இருந்தான். நீயும் இந்தா ஐஸ்கிரீம் சாப்பிடு கண்ணான்னு அவன் கிட்ட கொடுத்த. எனக்கு ஆச்சர்யம் என்னன்னா அவன் நீ கொடுத்ததும் வாங்கி கிட்டான். ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது அவனோட அம்மா அவனை கண்ணான்னு தான் கூப்பிடுவாங்கன்னு. அப்பவே அவன் உன்னை அவனோட அம்மாவா நினைச்சிட்டான் மைதிலி”, என்று ஆரோன் சொன்னதும் மைதிலி கண்களில் கண்ணீர் நிற்காமல் பெருகியது.
“அழாத மைதிலி எல்லாரும் பாப்பாங்க”, என்று சமாதானப்படுத்தினான் ஆரோன்.
“முடியலைண்ணா, சரி கண்ட்ரோல் பண்ணிக்கிறேன். நீங்க சொல்லுங்க”, என்று மைதிலி சொன்னதும் மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.
உண்மையாகவே கண்ணன் மைதிலியை தன்னுடைய அம்மாவோடு தான் ஒப்பிட்டுப் பார்த்தான். சில மாதங்களாக மனிஷா அவனை சனியனே, பீடை என்று தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மைதிலி அவ்வாறு அழைத்ததும் அவன் கண்களில் சிறு ஒளி வந்தது. அவன் அருகே மைதிலியை அமர வைத்த ஆரோன் அவளுக்கு அடுத்த பக்கம் அமர்ந்து இருவரையும் தான் பார்வையிட்டான்.
கண்ணனோ கையில் இருந்த ஐஸ்கிரிமை அவள் வாயில் வைத்து “நீ சாப்பிடு”,என்று சொல்லி அவளுக்கு ஊட்டி விட்டான். அவன் உதடுகளில் அழகான புன்னகை. அதைக் கண்டு வியந்து போனான் ஆரோன். ஏனென்றால் இந்த ஆறேழு மாதத்தில் இன்று தான் கண்ணன் சிரித்தே ஆரோன் பார்த்தான்.
அவன் ஊட்டியதும் அதை ஒரு வாய் சாப்பிட்டவள் அதை வாங்கி அவனுக்கும் ஊட்டி விட்டாள்.
அந்த வயதில் ஆரோனுக்கு அப்படி கொடுத்திருந்தால் “ஐய எச்சி”, என்றிருப்பான். ஆனால் அங்கோ இருவரும் ஐஸ்கிரிமை மாற்றி மாற்றி ஊட்டிக் கொண்டார்கள்.
அதன் பிறகு ரேணு வந்து அவளை அழைத்துச் சென்று விட்டாள். அதன் பின்னர் ஒரு மாதம் வரைக்கும் அவளை கண்ணன் பார்க்க வில்லை. ஆனால் அவள் கண்ணா என்று அழைத்த நிமிடங்களை அடிக்கடி எண்ணிப் பார்ப்பான். அவளைப் பார்க்க வேண்டும் என்று அவன் அப்போதே ஏங்கியது நிஜம்.
வீட்டிலோ மனிஷா கொடுமை நாளுக்கு நாள் அதிகமானது. அந்த வீட்டில் வேலை செய்யும் தங்கதுரை என்பவர் அவனுக்கு உணவு தரவில்லை என்றால் என்றோ செத்திருப்பான். அதுவும் மனிஷா அருணை நன்கு கவனிக்கும் போது மனதுக்குள் வெந்து சாவான் கண்ணன். அவனுடைய அன்னையின் நினைவு அவனை வெகுவாக வாட்டியது. 
யாரும் இல்லாத நேரம் அருண் இவனை அண்ணா என்று அழைத்தால் அவனை கண்டு கொள்ளாமல் சென்று விடுவான்.
மாணிக்கவேல் வீட்டுக்கு ஓரிரு நாள் வந்தால் அப்போது மனிஷாவே அவருடன் இருந்து கொண்டு அவனை நெருங்க விடாமல் தடுத்தாள்.
அவனுடைய அப்பா மேல் அவனுக்கு கோபம் அதிகம் உண்டு. அவனைப் பொறுத்த வரையில் அவனுடைய அம்மா சாவுக்கு அவர் தான் காரணம் என்ற எண்ணம். அதனால் அவனும் அவரை நெருங்க மாட்டான். இது மனிஷாவுக்கு வசதி. 
அதனால் அவர் வந்ததும் இல்லாததும் பொல்லாததும் அவர் காதில் ஓதப்பட்டது. மனிஷாவுக்கு சாரு பிறந்ததும் அவன் இந்த வீட்டிலே இருக்க கூடாது என்று முடிவெடுத்த மனிஷா அவனை ஹாஸ்ட்டலில் சேர்த்து விட்டாள். என்னவென்று கேட்ட மாணிக்கவேலிடம் குழந்தையை கொல்ல வந்துவிட்டான் என்று பொய் சொன்னாள். அவரும் அவனை வெறுக்க ஆரம்பித்தார். ஆனால் ஹாஸ்டல் சென்றதில் கண்ணன் உயிர்த்தான். 
ஒரு காரணம் ஆரோன் என்றால் மற்றொரு காரணம் மைதிலி. ஹாஸ்டலில் இருந்து சீக்கிரம் பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்பதால் அவன் முன்னே வந்து அமர்ந்திருக்கும் போது ரேணுகாவை ஸ்கூலில் விட வரும் போது அவளுடைய அப்பா கருணாகரன் மைதிலியை உடன் அழைத்து வந்தார்.
முதல் நாள் பார்த்ததும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஆனால் அவளிடம் போய் பேச மாட்டான். துருதுருவென்று பார்வையிட்டுக் கொண்டிருப்பவளை தூரத்தில் இருந்தே ரசிப்பான்.
ஏதாவது சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் ரேணுகா அவளை பள்ளிக்கு அழைத்து வரும் போது ஆரோனை அண்ணா என்று அழைத்தும் கண்ணா என்று இவனையும் அழைத்து பேசுவாள் மைதிலி. ஆனால் இருவரையும் வாங்க, போங்க என்றெல்லாம் அழைக்க மாட்டாள்.
அதுவும் அவள் வரும் போது கண்ணன் அவனுக்கு தெரிந்த வகையில் அவளுக்கு பல பொருள்கள் வாங்கிக் கொடுப்பான். பலூன், விளையாட்டு சாமான், திண்பதற்க்கு பண்டம் என்று வாங்கிக் கொடுப்பான். அவள் வந்தால் கண்ணன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த ஆரோன், சமயம் கிடைக்கும் போதெல்லாம் இருவரையும் சந்திக்க வைத்தான்.
அதன் பின்னர் தான் ஆரோனிடம் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்தான் கண்ணன். “எனக்கு மைத்தியை பாக்கணும் போல இருக்கு. நீ ரேணு கிட்ட சொல்றியா?”, என்று கேட்கும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் வந்தது. 
ஆரோன் மட்டும் தான் ரேணுகாவுடன் பேசுவான். ஆரோனும் “மைதிலி எப்ப வருவா?  இதை அவ கிட்ட கொடு”, என்று சொல்லி கண்ணன் எதையாவது கொடுத்தால் அதைக் கொடுப்பான். 
ரேணுகா கொண்டு போகும் அனைத்தும் ஆரோன் கொடுப்பதாக தான் மைதிலியிடம் சொல்லப் பட்டது. அதுவும் ரேணுகா வீட்டில் போய் உன்னோட பாசமான அண்ணன் கொடுத்தது என்று தான் நக்கல் அடிப்பாள். 
ஆரோன் குடும்பத்தையே பற்றி விசாரித்ததும் கண்ணன் முற்றிலும் மாறிப் போனான். ஆரோனுக்கு அப்பா யாரென்றே தெரியாது. அது போல அவனுடைய அம்மாவும் இவன் பிறந்ததுமே இறந்து விட்டாள். அவன் குழந்தையிலே இங்கு தான் இருக்கிறான். அவன் கதையைக் கேட்ட கண்ணனுக்கு, தான் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் தோன்றியது.
இவர்கள் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் அனைவருக்கும் இடம் உண்டு என்றாலும் அங்கு தங்கியிருப்பது அதிகம் அனாதை பிள்ளைகள் என்பதால் லீவுக்கு கட்டாயம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டுபாடு எதுவும் கிடையாது. அதனால் கண்ணன் வீட்டை மறந்து நிம்மதியாக இருந்தான்.
கண்ணன் நன்கு படிப்பான். அது போல ஆரோன் நன்கு படிக்க மாட்டான். அதற்காக மோசமாகவும் படிக்க மாட்டான். இப்படியே  மூன்று வருடம் கடந்திருக்க மெது மெதுவாக தான் கண்ணனின் நிலை அனைத்தும் மைதிலிக்கும் தெரிய வந்தது. அதன் பின்னர் அவள் மேலும் அவனிடம் தான் ஒட்டுவாள். அது கண்ணனுக்கும் பிடித்தமான விஷயமே. 
ஒரு முறை மாணிக்கவேல் பள்ளிக்கு அவனைப் பார்க்க வந்திருக்க கண்ணன் அவரை பார்க்க முடியாது என்று மறுத்து விட்டான். அவரும் திரும்பி செல்லலாம் என்று நினைக்கும் போது அவர் அருகில் வந்து நின்றாள் மைதிலி.
அவளைப் பார்த்ததும் புண் சிரிப்புடன் “ஹேய் குட்டி, அப்படியே ஏஞ்சல் மாதிரி இருக்க? நீ இங்க தான் படிக்கிறியா?”, என்று கேட்டார். 
அவளோ பதில் சொல்லாமல் அவரை முறைத்த படி நின்றாள்.  அதில் திகைத்து போனவர் அவள் உயரத்துக்கு குனிந்து அமர்ந்து “என்ன ஆச்சு மா?”,என்று கேட்டார்.
“நீங்க கெட்டவங்க தான?”, என்று கேட்டாள் மைதிலி.
குழப்பமாக அவளைப் பார்த்தவரிடம் “ஆமா நீங்க கெட்டவங்க தான். உங்களால தான் கண்ணாவோட அம்மா இறந்துட்டாங்க”, என்று மைதிலி சொன்னதும் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தார்.
சில நொடிகள் மனதில் வலிகள் வந்தாலும் “இப்படியா இந்த கண்ணன் சொல்லிக்கிட்டு இருக்கான்”, என்று கோபம் வந்தது.
“கண்ணன் தான் உன்கிட்ட இப்படி சொன்னானா?”, என்று கேட்டார்.
“இல்லை, எனக்கு ஆரோன் அண்ணா சொன்னான். கண்ணா இப்படி எல்லாம் சொல்ல மாட்டான். அவன் ரொம்ப பாவம். அவனுக்கு என்னை விட்டா யாருமே இல்லை தெரியுமா? அவன் முன்னாடி எல்லாம் அழுதுட்டே இருப்பானாம். ஆனா இப்ப தான் சிரிக்கிறான். எதுக்கு எல்லாரும் சேந்து அவனை அழ வைக்கிறீங்க?”
“இனி அழ வைக்க மாட்டேன் மா”
“ஆனா உங்க வீட்ல ஒரு டெவில் இருக்கே. அது கண்ணாவை அடிக்கும். சூடு எல்லாம் வச்சிருக்கு. கண்ணனுக்கு சாப்பாடு கூட போடாதாம்”
“ஒரு வேளை இதெல்லாம் உண்மையா இருக்குமோ?”, என்ற சந்தேகம் முதன்முதலில் மாணிக்கவேலுக்கு வந்தது.
“கண்ணாவை யாரும் அழ வைக்க கூடாது. அப்படி செஞ்சா அவங்களை நான் அடிச்சிருவேன்”, என்று கண்ணை உருட்டி மிரட்டினாள் மைதிலி.
“இதெல்லாம் உனக்கு யாரு பாப்பா சொன்னா?”
“ஆரோன் அண்ணா தான் சொன்னான்”
“அவன் எங்க இருக்கான்?”
“அதோ அங்க”, என்று கை காட்டியதும் “ஐயையோ இந்த பாப்பா போட்டுக் கொடுத்துருச்சே”,என்று நினைத்து அங்கிருந்து ஓடப் பார்த்த ஆரோனை பிடித்து நிறுத்தி விட்டு “இந்த பாப்பா சொல்றது எல்லாம் உண்மையா தம்பி?”, என்று கேட்டார் மாணிக்கவேல்.
“ஆமா இதெல்லாம் உண்மை தான். ஆனா நாங்க சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க தான? கண்ணன் பாவம். ஒரு நாள் சாகவே போய்ட்டான் தெரியுமா? எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். இப்ப தான் உங்களைப் பாத்தேன். அதனால தான் உங்க கிட்ட மைதிலியைச் சொல்ல வச்சேன்”, என்று அவரை முறைத்துக் கொண்டே சொன்னான் ஆரோன்.
“உனக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லுப்பா”, என்று அவர் கேட்டதும் அனைத்தையும் சொல்லிவிட்டான்.
“கண்ணன் ரொம்ப நல்லா படிக்கிறானாம். அவனுக்கு டாக்டர் சீட் கிடைக்குமாம். அவனை நீங்க டாக்டருக்கு படிக்க வைப்பீங்களா?”
“கண்டிப்பா படிக்க வைக்கிறேன். இது உன் தங்கச்சியா?

“தங்கச்சி தான். ஆனா கூட பிறந்தவ இல்லை. கூட படிக்கிற ரேணுவோட தங்கச்சி”
“இவளும் இங்க தான் படிக்கிறாளா?”
“இல்லை, இன்னைக்கு ஸ்போர்ட்ஸ் டே. அதான் வந்துருக்கா. ஆனாலும் கண்ணனைப் பாக்க அடிக்கடி வருவா. கண்ணனுக்கு இவன்னா ரொம்ப பிடிக்கும்”
“இப்ப அவன் பத்தாவது படிக்கிறான். அவனை இப்படியே படிக்க சொல்லு. அவனுக்கு பிடிச்சதை நான் படிக்க வைக்கிறேன். அவனை நீ நல்லா பாத்துகோ. அப்புறம் குட்டி ஏஞ்சல், உன்னோட கண்ணனை இனி அழ வைக்கவே மாட்டேன் சரியா? நீயும் அவனை நல்லா பாத்துக்கணும்”
“நான் நல்லா தான் பாத்துக்குவேன். அவனுக்கு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்துருக்கேன் தெரியுமா?”, என்று மைதிலி கேட்டதும் சாட்டையைக் கொண்டு அடித்தது போல துடித்துப் போனார் மாணிக்கவேல்.
வீட்டுக்கு போகும் போது பிள்ளைகளுக்கு அவ்வளவு பண்டம் வாங்கி கொண்டு சென்றவர் கண்ணனைப் பார்க்கும் போது வெறும் கையை வீசிக் கொண்டு வந்திருந்தார்.
மைதிலியும் ஆரோனும் அவரை அற்ப புழுவைப் பார்ப்பது போல பார்ப்பதாக அவருக்கு தோன்றியது. அடுத்த நிமிடம் மைதிலி அருகே மண்டியிட்டவர் “நீ கடைசி வரைக்கும் கண்ணன் கூட இருப்பியா ஏஞ்சல்? அவனை நீ தான் நல்லா பாத்துக்கணும். அவன் மேல உண்மையா அன்பு வைக்க, அவனை சந்தோஷப் படுத்த வேற யாருமே இல்லை. அவன் கூட இருப்பியா?”, என்று கேட்டார்.
“அவன் கூட தான் இருப்பேன். நாங்க ரெண்டு பேரும் சண்டையே போட மாட்டோம் தெரியுமா? ஆரோன் அண்ணா தான் சண்டை போடுவான். அப்புறம் என் பேர் ஏஞ்சல் இல்லை. மைதிலி”
“எனக்கு நீ ஏஞ்சல் தான். இனி ஆரோன் அண்ணா உன் கூட சண்டை போட மாட்டான் சரியா? போட கூடாது என்னப்பா”
“நான் ஒண்ணும் சண்டை போடலை. இவ தான் மிளகாபஜ்ஜி மாதிரி சண்டை போடுவா”, என்று ஆரோன் சொன்னதும் வெகுநாள் கழித்து சந்தோஷமாக சிரித்தார் மாணிக்கவேல்.
மேலும் சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து சென்றார். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணன் அவர் 
சென்றதும் இவர்கள் அருகில் வந்து “எனக்குன்னு நீங்க ரெண்டு பேர் தான் இருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா எங்க அம்மாவை கொன்ன ஆள்கிட்ட நீங்க பேசுறீங்க. இனி என் கூட பேசாதீங்க”, என்று சொல்லிவிட்டு அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்றதும் மைதிலி அழுது விட்டாள். அதன் பின் வந்த நாட்களில் இருவரிடமும் அவன் பேச வில்லை. மைதிலி காலையிலும் சாயங்காலமும் வரும் போது அவன் கண்டு கொள்ளவே இல்லை. மனதுக்குள் மறுபடியும் இறுகிப் போனான்.

Advertisement