Advertisement

“உனக்கு ஆக்ஸிடெண்ட்ல என்னை நினைவில்லாம இருக்கலாம். ஆனா நீ என்னோட மிளகாய் பஜ்ஜி தான்”
“என்னோட மிளகாய் பஜ்ஜியா? அட கடவுளே இவனையும் நான் கல்யாணம் பண்ணிருக்கேனு சொல்லப் போறானா?”, என்று அதிர்ந்து விழித்தாள்.
அவள் பார்வையிலே அவள் நினைப்பை உணர்ந்தவன் “அட ச்சி நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. ஏற்கனவே உன் பின்னாடி ஒருத்தன் அலைஞ்சு லூசானது பத்தாதா? நான் உன்னோட அண்ணன் போதுமா? நானும் ரேணுவோட கிளாஸ் மேட்”, என்று அவசரமாக சொன்னான்.
“ஓ”, என்றாள் மைதிலி.
“என்ன ஓ, நீ ஒரு எழுத்துல பேசி சரித்திரமே இல்லை தெரியுமா?”
ஏனோ, அவளைப் பற்றி அவன் சொல்ல சொல்ல அவள் கண்களில் ஒரு ஒளி வந்தது. இப்போதைக்கு அவளைப் பற்றி அவளுக்கு தெரிய வேண்டுமே. அதற்கு இவனை விட்டால் வேறு ஆள் இல்லை என்று எண்ணி மௌனமாக அவனை பார்த்திருந்தாள்.
“பாத்து ரொம்ப நாள் ஆச்சு. உன்கிட்ட பேச நிறைய கதை இருக்கு. பக்கத்துல எங்கயாவது உக்காந்து பேசுவோமா? நடு ரோட்டில் நின்னுட்டு இருக்கோம்”
அவள் சரி என்பதாய் தலை ஆட்டியதும் “என் பின்னாடியே வா மிளகா பஜ்ஜி, பக்கத்துல ஒரு ரெஸ்டாரெண்ட் இருக்கு. அப்படியே எஸ்கேப் ஆகிராத. அப்புறம் உன் வீடு தெரியும். வீட்டுக்கே வந்துருவேன்”, என்று சொல்லி வண்டியை எடுத்தான்.
“வீடு தெரியும்னா எதுக்கு இத்தனை நாள் வரலையாம். இதுல அண்ணனாம் அண்ணன்”, என்று நினைத்து அவனைப் பின் தொடர்ந்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். “எப்படி இருக்க மைதிலி?”, என்று உருக்கமாக கேட்டவனின் கண்கள் கலங்கியது.
அதைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் “இபோதைக்கு யார் என்ன உறவு சொன்னாலும் எனக்கு எதையுமே நம்ப முடியலை. நீங்க அண்ணனு சொன்னதுனால உங்க கிட்ட கேக்குறேன். தயவு செஞ்சு நீங்களாவது உண்மையைச் சொல்லுங்க. என்னைப் பத்தி? கண்ணன் தெரியும் தான? அவர் கூட எனக்கு கல்யாணம் ஆகிருச்சா? அவர் தான் என்னை கார் ஏத்திக் கொல்லப் பார்த்தாரா?”, என்று கேட்டாள் மைதிலி.
“உன்னோட குழப்பம் எல்லாத்தையும் நான் தெளிய வைக்கிறேன். ஆனா நீ எதையும் அவசரப் பட்டு முடிவு பண்ணாத மா. நீ இத்தனை நாள் கண்ணன் கூட பழகிருக்க. ஒரு நிமிஷம் கூட அவன் உன்னைக் கொல்ல மாட்டான்னு உனக்கு தோணவே இல்லையா? யார் என்ன சொன்னாலும் நம்பிருவியா?”
அவன் சொன்னது உள்ளுக்குள் குத்தினாலும் “நீங்க அவங்க பிரண்டா? அதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க”, என்றாள்.
“இப்போதைக்கு அவன் என் பிரண்டே இல்லை”
எது எப்படியோ? இதை எல்லாம் சொன்னது அவங்க அம்மா. அதுவும் என்னவெல்லாம் பேசிட்டாங்க”
“அது அவனோட அம்மா கிடையாது மைதிலி”
“என்ன சொல்றீங்க? அச்சு அசல் சாரு மாதிரி தான இருக்காங்க”
“அது சாருவுக்கும் அருணுக்கும் அம்மா தான். ஆனா கண்ணனுக்கு சித்தி. கண்ணனுக்கு அம்மா கிடையாது”, என்று ஆரோன் சொன்னதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் மைதிலி.
ஆமா மைதிலி, அவன் கதை ரொம்ப வலிகள் நிறைந்தது. “முதல்ல எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்றேன். அதுக்கப்புறம் முடிவெடு”
“கண்ணனோட அம்மா பேரு கல்யாணி. கண்ணனோட அப்பா பிஸ்னஸ் மேன் எல்லாம் கிடையாது, அவர் மிலிட்டரில இருந்தார். அவனோட அப்பா ரொம்ப ஏழ்மையானவங்க. அவரோட அம்மா அப்பா பாத்த பொண்ணு தான் கல்யாணி. கண்ணனோட அம்மா வீட்ல அவங்க ஒரே பொண்ணு. கூட பிறந்தது யாருமே இல்லை. செல்வ சீமாட்டியா இருந்தவங்க. பெரிய பணக்காரங்க. அதாவது மிராசுதார்ன்னு சொல்லுவாங்கல்ல? அந்த மாதிரி. அவங்க அம்மாவும் பாக்க அவ்வளவு லட்சணாமா இருப்பாங்க. நல்ல குணவதியும் கூட. நான் அவங்களை போட்டோல தான் பாத்துருக்கேன்.
கண்ணனோட அப்பா லீவ் எடுத்துட்டு வந்து தான் அவங்களை கல்யாணமே செஞ்சார். பணம் இல்லைன்னாலும் பையன் நல்ல குணம்னு தெரிஞ்சு கட்டி வச்சிருக்காங்க.
மிலிட்டரில இருக்குறவங்க குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு உனக்கு தெரியும் தான? கண்ணனோட அப்பவோட அம்மா அப்பா கூடிய சீக்கிரமே இறந்து போக அவங்க அம்மாவோட அம்மா அப்பா வீட்ல கல்யாணியம்மாவை விட்டுட்டு அவரும் பஞ்சாப் போய்ட்டார். அப்புறம் எப்பவாது தான் வருவார். அதுக்கு அப்புறம் தான் கண்ணன் பிறந்தான். 
அவன் பிறந்த அப்பவே செல்வ செழிப்போட பிறந்தவன் மா. ஏகப்பட்ட சொத்துக்கு ஒரே வாரிசு. சும்மாவே பேரனை செல்லமா வளப்பாங்க. அவங்க வீட்ல கேக்கவா வேணும்.  
கண்ணனோட அப்பா இங்க வரும் போதும் மாமியார் வீடுன்னுல்லாம் பாக்காம சகஜமா தான் இருந்துருக்கார்.ஆனா யார் எப்படின்னு யாருக்குமா தெரியும்? கண்ணனுக்கு பதினொரு வயசு இருக்கும் போது அவர் இந்த மனிஷா அப்படிங்குற பொம்பளையை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கார். அதுவும் கையிலே நாலு வயசு குழந்தையோட”
“ஐயையோ, அது தான் அருணா?”, என்று கேட்டாள் மைதிலி.
“ஆமா மா, எல்லாருக்கும் எப்படி இருக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரேன். அதுவும் கண்ணனோட அம்மாக்கு.நினைக்கவே அருவருப்பா இருக்கும்ல? அப்படி ஒரு நிலைமை தான். கவலைன்னா என்னன்னே தெரியாம இருந்த கண்ணனுக்கு வீட்டில் எல்லாரும் அழுவதும் அதுக்கு அப்பா கூட்டிட்டு வந்த பொம்பளை தான் காரணம் என பாதி புரிஞ்சும் புரியாத நிலை. 
கண்ணனோட அப்பாவுக்கு, கல்யாணதுக்கு முன்னாடியே அந்த பொம்பளை கூட தொடர்பிருந்தா ஏதோ காதல்ன்னு நினைச்சிருக்கலாம். ஆனா கல்யாணதுக்கு அப்புறம் தான் அவங்க அப்பா இப்படி அந்த பொம்பளையை செத்துகிட்டார். அது தெரிஞ்சதுல இருந்து எல்லாருமே வீட்டுல இடி விழுந்தது மாதிரி துடிச்சு போயிட்டாங்க. கண்ணோட பாட்டி தாத்தா கண்ணனோட அப்பாவை அப்படியே வெளிய போக சொல்லிட்டாங்க. அவரும் அந்த பொம்பளையை கூட்டிட்டு போய்ட்டார். ஆனா அடுத்த நாளே கண்ணனோட அம்மா இறந்து போயிட்டாங்க”
“ஐயையோ”, என்று அலறி இருந்தாள் மைதிலி.
“ஆமா மா. இவ்வளவு பெரிய வலியை தாங்க முடியாம அவங்க இதயம் நின்னுருச்சு. எந்த பொண்ணால தான் இதை தாங்க முடியும்? மகளின் வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்னு கவலைல இருந்த அந்த பெரியவங்க இப்ப மகள் இறந்தே போனதும் பாதி உயிரோட நின்னாங்க. ஒரே பேரனோட நிலையை நினைச்சு அழுது அழுது ஒஞ்சி போனாங்க. ஆனா அப்பவே சொத்தை எல்லாம் கண்ணன் பேருக்கு எழுதி வச்சிட்டாங்க”
“சொத்து மட்டும் இருந்து என்னண்ணா பண்ண? அப்புறம் என்ன ஆச்சுண்ணா?”, என்று கேட்டாள் மைதிலி.
“அவங்க சொத்தை மாத்தி எழுதி ஒரு மாசத்துல அவங்க ரெண்டு பேரும் போன கார் ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு”
அதிர்ச்சியில் மைதிலி அழுதே விட்டாள். அவள் கண்களுக்கு குட்டி கண்ணன் கண்ணீரோடு நிற்பது போல தோன்றியது. இப்போது வலிகளை அவன் அனுபவிப்பது போல் அவனுக்கு ஆறுதல் சொல்ல அவள் மனம் பரபரத்தது.
அவள் நிலை உணர்ந்தவன் “லூசு பய. முன்னாடியே இவ கிட்ட உண்மையை சொல்லிருந்தா இந்நேரம் சந்தோஷமா இருந்துருக்கலாம்”, என்று நினைத்துக் கொண்டு மேலும் சொல்ல ஆரம்பித்தான். 
“அப்புறம் என்ன? எல்லாம் இருந்தும் அனாதை மாதிரி ஆய்ட்டான். ஆனா அவனை அப்படியே விட்டுருந்தா அவன் வாழ்க்கை வேற மாதிரி ஆகிருக்குமோ என்னவோ? ஆனால் பெரியவர்கள் சாவுக்கு வந்திருந்த அவனோட அப்பா அந்த பொம்பளையை காட்டி இவ தான் உனக்கு சித்தி இனி அவ தான் உன்னை பாத்துக்குவான்னு சொல்லிட்டாராம். அவளும் அந்த மாதிரி நடிச்சிருக்கார். அவனோட அப்பா கிளம்பி போன அப்புறம் என்ன நடந்துருக்கும்னு உனக்கு தெரியும் தான மா? சித்தி கொடுமை எவ்வளவு கேள்வி பட்டுருப்போம். கொடுமை மட்டுமில்லாம அவனோட அப்பா கிட்ட கூட அவனைப் பத்தி தப்பான எண்ணத்தை உண்டு பண்ணிருக்கா. அந்த நேரம் சாரு அவ வயித்துல இருந்துருப்பா போல. கர்ப்பிணி பெண் சொன்னதும் எல்லாத்தையும் நம்பிட்டார் கண்ணனோட அப்பா”
….
“அவனை கான்வெண்ட்ல இருந்து கார்போரேசன் ஸ்கூல்க்கு மாத்துனா. அவரோட அப்பா கிட்ட அவன் செட்டை பண்ணி, ஒரு பையன் மண்டையை உடைச்சு டீ சீ கொடுத்துட்டாங்கன்னு பொய் சொல்லி ஏமாத்திருக்கா.அந்த ஸ்கூல்ல தான் நானு ரேணு அவன் எல்லாம் ஒரே கிளாஸ். ஸ்கூல்லயும் யார் கூடவும் பேசாம அமைதியா இருப்பான். எப்பவும் அவன் எதையோ யோசிச்சிட்டே தான் இருப்பான். அப்படி இருக்குறதுக்காகவே அவனை எல்லா மிஸ்ஸும் திட்டுவாங்க”
“பாவம் தான் கண்ணன். அதெல்லாம் சரிண்ணே. நான் எப்படி உங்க வாழ்க்கைல வந்தேன்”, என்று கேட்டாள் மைதிலி.
“இரு சொல்றேன். நீ எங்க வாழ்க்கைல வரலை மா. கண்ணனோட வாழ்க்கையாவே வந்த. அவன் உயிரோட இருக்குறதுக்கே நீ தான் காரணம்”
“அண்ணா”
“ஆமா மைதிலி, நீ அவன் வாழ்க்கைல வராம இருந்துருந்தா அவன் இந்த உலகத்தில் இருந்துருக்கவே மாட்டான். இன்னும் சொல்ல போனா அவன் உனக்காக தான் உயிரோடே இருந்தான். இப்ப வரைக்கும் உன்னோட நினைப்பு தான் அவனை உயிரோட வச்சிருக்கு”
 
தீண்டல் தொடரும்….
 

Advertisement