Advertisement

அத்தியாயம் 12
மனம் சில்லென்று குளிர்கிறது
உன்னை தீண்டிய தென்றல்
என்னைத் தீண்டியதால்!!!
செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டு கண்ணன் அதிர்ந்து தான் போனான். ஏன் என்றால் அவன் சின்னம்மா என்று சொன்னது கண்டிப்பாக சாருவாக இருக்க முடியாது. ஏனென்றால் அனைவரும் சாருவை சாரும்மா என்று தான் அழைப்பார்கள். மைதிலியை மட்டுமே சின்னம்மா என்பார்கள். 
மைதிலி இங்கே வந்தாளா? அப்படி என்றால் அவள் ஹாஸ்டலில் இல்லையா? அதுவும் வீட்டுக்கு போயிருக்காளா? அங்க தான் யாருமே இல்லையே. ஐயையோ ஒரு வேளை இந்த வீட்டுக்கு போயிருந்தா? நினைக்கேவே வயிறு கலக்கியது. உடனே அவளை அழைத்தான்.  செக்யூரிட்டியிடம் சைலன்ட் மோடில் வைக்கப் பட்டு மைதிலியின் போன் பத்திரமாக இருந்தது.
வேறு வழி இல்லாமல் கருணாகரனை அழைத்தான். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பிள்ளை. மைதிலியைப் பாத்துட்டீங்களா? நான் தான் உங்க கூட இருக்கும் போது போன் பண்ண சொன்னேன். வீட்டுக்கு சாப்பிட வாங்க மாப்பிள்ளை”, என்றார் கருணாகரன்.
“சரி மாமா வரேன்”
“அவ கொடுத்த கிஃப்ட் புடிச்சதா மாப்பிள்ளை? நேத்து முழுக்க கஷ்டப்பட்டு வாங்கி ஏதேதோ ஒட்டிக்கிட்டு இருந்தா. அவ இப்படி சந்தோஷமா இருந்து நான் பாத்ததே இல்லை மாப்பிள்ளை. உங்க வாழ்க்கை மேல இப்ப தான் எனக்கும் உங்க அத்தைக்கும் ஒரு பிடிப்பு வந்திருக்கு. ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட வாங்க”, என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
ஆக மைதிலி நேற்றே இங்கு வந்திருக்கிறாள். “ஐயோ என்னோட பிறந்தநாளுக்கு என்னைப் பாக்க ஆசையா வந்தவள் நிலை என்ன ஆகுமோ?”, என்று பயந்தவன் அவள் என்னவெல்லாம் பேசினால் என்பதை செக்யூரிட்டியிடம் விசாரித்தான். அவன் சொன்ன அனைத்தையும் கேட்டவனின் கார் மின்னல் வேகத்தில் அவன் வீட்டை நோக்கிப் பயணித்தது.
ஆனால் இவன் போய் சேரும் முன்பே அங்கு அனைத்தும் முடிந்திருந்தது. அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்த மைதிலியை அதிக நேரம் தவிக்க விடாமல் கதவை திறந்தது சாட்சாத் அவள் ரோட்டில் பார்த்த அதே பெண். 
அவளை எங்கோ பார்த்தது போல இருந்த குழப்பத்துக் விடை இப்போது கிடைத்தது. சாருவின் அம்மா தான் என்று இப்போது உணர்ந்தாள் மைதிலி. 
“சாருவோட அம்மான்னா …அப்படின்னா கண்ணனுக்கும்….”, என்று யோசித்துக் கொண்டிருந்தவள் “ஆண்ட்டி நீங்க சாருவோட. அம்மாவா?”, என்று கேட்க வந்தாள். ஆனால் அப்போது தான் மனிஷாவின் நிலை உரைத்தது மைதிலிக்கு. 
கதவை திறந்த மனிஷா சத்தியமாக மைதிலியை எதிர் பார்க்க வில்லை. “எதுக்கு இவங்க என்னைப் பார்த்து இப்படி அதிர்ச்சியா இருக்காங்க. வீட்டுக்கு வந்த மருமகளைப் பாக்குற மாதிரியான பார்வையை அவங்க பாக்கலையே?”
கண்ணன் வீடு மாற்றி சொன்னது, இப்போது மனிஷாவின் அதிர்ச்சி என்று அனைத்தையும் யோசித்துப் பார்த்த மைதிலிக்கு எதுவோ சரி இல்லை என்று மட்டும் பட்டது. 
ஆனால் அந்த சூழ்நிலையிலும் இவங்க மகன் தான் கண்ணன் என்று நினைக்க தோன்ற வில்லை மைதிலிக்கு.
இவள் சிந்தனையை கலைக்க காற்றைக் கிழித்துக் கொண்டது மனிஷாவின் குரல். “எங்க வந்த? உனக்கு எல்லாம் மானம் ரோசமே கிடையாதா? அன்னைக்கு அப்படி சவால் விட்டுட்டு போன? இப்ப வெக்கமே இல்லாம வாசப்படில வந்து நிக்குற?”
இன்னும் என்ன பேசினாளோ? எதுவுமே மைதிலி காதில் விழவில்லை. மானம் ரோசமே கிடையாதா என்ற வார்த்தையிலே அதிர்ச்சியில் சிலையாக நின்றாள்.
“என்ன உறைஞ்சி போய் நிக்குற? மறுபடியும் பணம் புடுங்க தான வந்துருக்க? என்னமோ நான் அப்படி இப்படின்னு பேசின. இப்பவும் நைட் முழுக்க உன்கூட தான் படுக்குறானா? எவ்வளவு பணம் வாங்குற?”, என்று மனிஷா கேட்டதும் “இப்படி பச்சையாவும் பேசுவாங்களா?”, என்று நினைத்தாள் மைதிலி.
“ஆனா எப்படி உன்னை சாகடிக்கணும்னு நினைச்சு உன் மேல காரை மோதுனவன் பின்னாடியே அலையுற? ஏன் அலைய மாட்ட? பணம் வேணுமே”, மேலும் என்ன சொல்லி இருப்பாளோ கையைக் காட்டி மனிஷாவின் பேச்சை நிறுத்தினாள் மைதிலி.
மனிஷா வா அமைதியாக இருப்பாள்? “வெட்கமே இல்லாம வந்து நிக்குற./ நீ என்னை கன்ட்ரோல் பண்ணுறியா? எதுக்கு டி இங்க வந்த?”, என்று கேட்டாள் மனிஷா.
மூளை வேலை நிறுத்தம் செய்ய “சாருவைப் பாக்கணும்”, என்றாள்.
“என்னோட பொண்ணை கண்ட சனியன் எல்லாம் பாக்கணுமா? உன் மூச்சுக் காத்து கூட அவ மேல படக் கூடாது. நீயெல்லாம் என்ன டி ஜென்மம்? வெட்கமே இல்லாம வந்து நிக்குற? நல்ல குடும்பத்துல பிறந்திருந்தா தான? எனக்கும் தெரிஞ்ச நிறைய ஆள் இருக்காங்க. அவங்க கூட எல்லாம் போயிட்டு வரியா? நிறைய சம்பாதிக்கலாம் “, என்று சொல்லும் போதே அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள் மைதிலி.
இது இரண்டாவது முறை இவளிடம் அடிவாங்குவது என்ற நினைப்புடன் அவளை வெறித்துப் பார்த்தாள் மனிஷா.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன இப்ப கையால கொடுத்ததை செருப்பால கொடுக்க வேண்டி இருக்கும். ஜாக்கிரதை”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்து விட்டாள் மைதிலி.
இங்கேயே இருந்து அவள் பேசும் கேவலமான பேச்சை கேட்க சத்தியமாக மைதிலியால் இனிமேல் முடியாது. அதுக்காக என்ன நடந்தது என்று அவளிடமே கேட்க மனதும் இல்லை. 
“இதுக்கெல்லாம் காரணம் அந்த கண்ணன் தான். அவன் என்னைப் பாக்காத வரைக்கும் அவனுக்கு நல்லது”, என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய பேகை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“ஏமா கிஃப்ட் மா, பார்சலை வச்சிட்டு போறீங்க”, என்று செக்யூரிட்டியின் குரல் கேட்டாலும் காது கேளாதது போல வண்டியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டாள்.
பாதி தூரம் சென்று கொண்டிருக்கும் போது வண்டியின் வேகத்தை கண்ட நேற்று கடையில் அவளை பின் தொடர்ந்தவன்  வண்டியை திருப்பிக்க் கொண்டு அவள் பின்னே சென்றான்.
அடிச்சு புடிச்சு வீட்டுக்கு வந்த கண்ணன் செக்யூரிட்டியிடம் “மைதிலி வந்தாளா?”, என்று கேட்டான்.
அவர் பே என்று விழிக்கவும் “ஒரு பொண்ணு வந்துச்சா?”, என்று கேட்டான்.
“ஆமா சார், உங்களை தேடி வந்தாங்க. அப்புறம் சாரும்மாவை பாக்குறதுக்கு உள்ள போனாங்க. வெளிய போகும் போது இந்த பார்சலை வச்சிட்டு போயிட்டாங்க. அவங்க பேர் மைதிலின்னு தெரியாது சார்”, என்றான் செக்யூரிட்டி.
அந்த பார்சலை வெறித்துப் பார்த்தவன் “இது இங்கயே பத்திரமா இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்றான். மைதிலி சென்றதும் கதவை அடைக்காமல் உள்ளே சென்ற மனிஷா ஹாலிலே தான் அமர்ந்திருந்தாள்.
முழுக் கோபத்துடன் அவளை நெருங்கியவன் அவள் கழுத்தைப் பிடித்து தூக்கி நிறுத்தினான். மேலும் கழுத்தை நெறித்த படி நின்றான். அவன் முகத்தில் கொலை வெறி தாண்டவமாடியது.
கொன்னுருவானோ என்ற பயத்தில் “சாரு, அருண் காப்பாத்துங்க”, என்று திக்கி திணறி கத்தினாள் மனிஷா. 
“என் மைதிலி கிட்ட என்ன டி சொன்ன?”, என்று வெறியுடன் கேட்டான் கண்ணன்.
“நான் ஒண்ணும் சொல்லலை. கழுத்தை  விடு”, என்று சொல்லும் போது அந்த காட்சியைப் பார்த்த படியே வந்த அருணுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் தன்னுடைய அண்ணனுக்கு எதிராக எதுவும் செய்ய அவன் தயாராக இல்லை. ஏதோ நிகழ்ச்சி நடப்பது போல் சோபாவில் அமர்ந்து பார்வையிட்டான்.
“டேய் அருண் காப்பாத்து டா. நான் உன் அம்மா”, என்றாள் மனிஷா.
“வேற யாராவது உன்னை கொலை பண்ண வந்தா கண்டிப்பா தடுப்பேன். ஆனா அண்ணனுக்கு எதிரா என் சுண்டு விரலைக் கூட நீட்ட மாட்டேன்”, என்று சினிமா பாணியில் வசனம் பேசினான் அருண்.
“பஞ்ச் டயலாக் பேசுற நேரமா டா இது? சாரு, சாரு காப்பாத்து”, என்று கத்தும் போதே அங்கு மாணிக்கவேலை சக்கர நாற்காலியில் அமர வைத்த படியே அழைத்து வந்தாள் சாரு.
“என்னங்க இங்க பாருங்க. உங்க பையனை விட சொல்லுங்க. சாரு அம்மாவை கொல்லுறான் மா”, என்று மனிஷா சொன்னதும் பதில் பேசாமல் சாரு இருந்தாள் என்றால் “இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்”, என்றார் மாணிக்கவேல்.
யாரும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் என்று நினைத்தவள் “நீ தான் அவளை கார் ஏத்தி கொல்ல முயற்சி செஞ்சென்னு சொன்னேன்.அழுதுட்டே போயிட்டா”, என்றாள்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான கண்ணன் அவளை மேலும் நெரித்தான்.  “இந்த சனியனைக் கொன்னு உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காத பா”, என்று மாணிக்கவேல் சொன்னதும் அவளை அப்படியே சோபாவில் தள்ளி விட்டான்.
கழுத்தைப் பிடித்துக் கொண்டு சரிந்து கிடந்தாள் மனிஷா. “தாமு”, என்று வீட்டு சேகரட்ரியை அழைத்த மாணிக்கவேல் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உள்ள சி‌சி‌டி‌வி புட்டெஜ் காட்டு”, என்றார்.
அதை எடுத்து ஓட விட்டான் தாமு. மனிஷா பேசியதும், மைதிலி அதிர்ச்சியும் பதிவாகி இருந்தது. “ஐயோ என்னை தேடி வந்தவளை இப்படி ஆக்கிட்டேனே”, என்று மனம் நொந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் ஒரே ஒரு சந்தோஷம் மைதிலி மனிஷாவை அடித்தது. 
“இன்னைக்கே இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்”, என்று சொன்ன கண்ணன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். 
வண்டியை வேகமாக ஒட்டிக் கொண்டிருந்த மைதிலியின் மனம் ஊமையாக அழுதது. ஏதோ சுத்தி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அமானுசியமாக பட்டது. எதுவுமே நினைவு இல்லாமல் அதுவே பெரிய வலி என்றால் கண்ணன் செய்த நம்பிக்கை துரோகம் உயிரோடு கொன்றது போல இருந்தது.
“எத்தனை பொய்? இனி அவன் எந்த விஷயத்தில் உண்மையாக இருப்பான் என்று நம்ப? இவனைப் போய் எப்படி காதலிச்சேன்? அடுத்து என்ன செய்ய? வாழ்க்கை முழுவதும் இவனுடன் தானா? அந்த வீட்டில் போய் எப்படி வாழ முடியும்?”, என்று நினைத்தாள். 
இது எல்லாத்தையும் விட கண்ணன் மேல் தோன்றியிருந்த நேசம் அவளை கொன்று போட்டது. “உன்னை என்னோட மனசு ஏத்துக்க முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சிருக்க கூடாதா? இப்ப ரொம்ப வலிக்குதே”,என்று அழுதாள்.
எங்கே செல்வது என்று கூட தெரிய வில்லை. வீட்டை விட்டு வரும் போது பெற்றவர்கள் முகத்தில் இருந்த சந்தோஷத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு வலி மேற்கொண்டு தான் வந்தது.
மனம் தறிக்கெட்டு ஓட, கைகள் மட்டும் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தது. 
அப்போது அவளை வழிமறைத்த படி வந்து நின்றான் அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆரோன். நேத்து அவளை கடையில் பார்த்ததும் அவன் தான்.
அவள் முகமே சரி இல்லை என்று புரிந்தது. அதுவும் அவள் வண்டி எங்கிருந்து வருகிறது என்று புரிந்து கொண்டான். “கண்ணனைத் தேடி அவன் வீட்டுக்கு போயிருப்பா. அந்த பொம்பளை அவ வேலையை காமிச்சிருப்பா”, என்று புரிந்து கொண்டவன் இனியும் தன்னுடைய நண்பன் வாழ்கையில் தலையிடாமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்து அவள் முன்பு வண்டியை நிறுத்தினான்.
சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருந்தாள் மைதிலி. அவள் இதயம் பயங்கரமாக துடித்தது. சாதாரணமாக வண்டி ஒட்டிச்செல்பவர்களுக்கே இப்படி யாராவது வழி மறைத்தால் பதட்டம் வரும். இவளோ அவள் நிலையிலே இல்லை. அப்படி இருக்க அதிர்ந்து போய் அவனை திட்ட மறந்து நின்றாள் மைதிலி.
அவளுடைய நிலையை அறிந்தவன் வண்டியில் இருந்து இறங்கி அவள் அருகே வந்தான். நடந்த பிரச்சனைகள் அனைத்தும் மறந்து போக கலவரத்துடன் சுற்றி முற்றி பார்த்தாள்.
அவள் செய்கையைக் கண்டு “உன்னை கடத்துற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை. அந்த அளவுக்கு நீ வொர்த்தே இல்லை மிளகாய் பஜ்ஜி”, என்று சிரிப்புடன் சொன்னான் ஆரோன்.
அவன் சிரிப்பே அவளுடைய பயத்தை விரட்டி இருந்தது. ஆனாலும் அவன் அழைத்த மிளகாய் பஜ்ஜி ஒரு திகைப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement