Advertisement

அத்தியாயம் 11
உன்னைத் தீண்டும் நொடிகள்
அனைத்தையும் சேகரிக்கிறேன்
புதுக் காவியம் படைக்க!!!
வீட்டுக்கு சென்றதும் இரவு அவளை அழைத்தான் கண்ணன். ஒரு ரிங்கிலே அவனுடைய போனை எடுத்த மைதிலி “பத்திரமா போய்ட்டீங்களா?”, என்று கேட்டாள். 
அவள் அக்கறையில் மெய் சிலிர்த்தவன் “பத்திரமா வந்துட்டேன். உன்னை தான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் மைத்தி”, என்றான்.
“கடைசி வரைக்கும் உங்க கூட தான இருக்க போறேன். இதெல்லாம் நான் படிச்சு முடிக்கிற வரை தான். அப்புறம் உங்க கூடவே தான் இருப்பேன்”
“ஹ்ம் சாப்பிட்டுட்டியா?”
“அதெல்லாம் அப்பவே முடிஞ்சது. நீங்க என்ன சாப்பிட்டீங்க?”
சாப்பிடவில்லை என்று உண்மையைச் சொன்னால் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பாள் என்பதால் “தோசை சாப்பிட்டேன். உன்னோட ரூம் மேட்ஸ் வந்துட்டாங்களா?”, என்று கேட்டான்.
“ஹ்ம் வந்துட்டாங்க. நாளைக்கு ஆர்த்திக்கு பெர்த்டே. அதனால நாளைக்கு அவ ட்ரீட். மதியம் இந்த ஹாஸ்டல் சாப்பாட்டுல இருந்து விடுதலை. கேண்டீன்ல தான் சாப்பாடு. அப்புறம் கேக்கணும்னு நினைச்சேன். உங்க பெர்த்டே எப்ப?”
“டிசம்பர் 3”
“ஹே அப்ப வர சண்டே உங்க பெர்த்டே வா?”
“ஹ்ம் ஆமா. நீ இந்த வீக் இங்க வந்தா சேந்து செலிப்ரெட் பண்ணலாம். இல்லைன்னா எல்லா நாளும் போல தான் அன்னைக்கும்”
“தெரியலையே, லீவ் இல்லைன்னா கண்டிப்பா வர முடியாது”
“ஹ்ம் சரி”
“அதை விடுங்க. என்னோட பெர்த்டே தெரியுமா?”
“உன்னோட பெர்த்டே தெரியாம நான் எப்படி இருப்பேன் மைத்தி ஆகஸ்ட் 17 தான?”
“தெரியாம கேட்டுட்டேன்”
“சரி நேரம் ஆச்சு. நீ போய் தூங்கு”, என்று சொன்ன கண்ணன் அவள் சரி என்று சொன்னதும் போனை அணைத்து விட்டு படுத்தான். தூக்கம் அவனை தழுவிக் கொண்டது.
உறக்கம் வராமல் தவித்த மைதிலி இந்த பிறந்த நாள் அன்று அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தாள். 
சொல்லாமல் கொள்ளாமல் அவன் முன் நிற்க வேண்டும் என்று எண்ணியவள்  எப்படி என்று யோசித்தாள். செய்ய வேண்டியதை மனதுக்குள் பட்டியலிட்டாள். தான் ஒரு வாழ்த்து சொன்னாலே அவன் பிரம்மிப்பான். 
ஒரு பரிசோடு அவன் முன் நின்று அவனுடைய பிரம்மிப்பை கண்களால் காண ஆசை கொண்டாள்.பின் அவனை நினைத்த படியே உறங்கி போனாள்.
அந்த வாரம் முழுவதும் எப்போதும் போல் நகர்ந்தது. நாள் நெருங்க நெருங்க மைதிலி மனதுக்குள் குதூகலமாய் உணர்ந்தாள்.
வெள்ளி மாலை வீட்டுக்கு கிளம்பினால் அனைவரும் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் சனிக்கிழமை அதிகாலையிலே பஸ் ஏறி விட்டாள். 
மதியம் பன்னிரெண்டு மணி அளவில் வீட்டுக்கு வந்து இறங்கிய மகளை பார்த்த கருணாகரனும் வேதவள்ளியும் திகைத்தாலும் “வர மாட்டேனு சொன்ன?”, என்று கேள்வி கேட்டார்கள்.
“உங்க மாப்பிள்ளைக்கு நாளைக்கு பெர்த்டேப்பா. அதான் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்”, என்று புன்னகையுடன் சொன்ன மகளைப் பார்த்து இருவருக்கும் மனசு நிறைந்தது. 
மைதிலி கண்ணனுடன் சந்தோஷமாக வாழ்வாள் என்று எண்ணி அவர்கள் மனது பூரித்து போனது. 
உள்ளே சென்று பணம் எடுத்து வந்து மைதிலியிடம் கொடுத்த கருணாகரன் “இந்தா பாப்பா, மாப்பிள்ளைக்கு புடிச்சதா வாங்கிக் கொடு”, என்றார்.
“சரிப்பா, என்று வாங்கிக் கொண்டவள் “அப்பா, அம்மா ரெண்டு பேரும் அக்காங்க கிட்ட மட்டும் எதையும் சொல்லிறாதீங்க. அப்படியே அவங்க கிட்ட உளறிருவாங்க. நான் இப்பவே போய் கிஃப்ட் வாங்கிட்டு வரேன்”, என்றாள்.
“ஏய், சாப்பிட்ட அப்புறம் போ டி”, என்றாள் வேதவள்ளி. 
“இல்லைமா, இப்ப பசி இல்லை. நான் வந்து சாப்பிடுறேன்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“என்ன வாங்க?”, என்று யோசனை பல ஓடி, ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்தவள் “முதல்ல போய் ஒரு செட் டிரஸ் எடுப்போம்”,என்று நினைத்து கடைக்கு சென்றாள்.
கருணாகரன் எப்போதும் டெய்லரிடம் தான் சட்டை தைக்க கொடுப்பார். வீட்டில் அவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள் என்பதால் முதன் முதலில் ஒரு ஆணுக்கு உடை எடுக்க தடுமாறினாள் மைதிலி. 
ஒவ்வொரு உடையையும் மனதிலே அவனுக்கு போட்டு அழகு பார்த்தாள். அனைத்தும் அவனுக்கு பொருந்துவது போல இருக்கவும் “இந்த ஆள்மயக்கிக்கு எது போட்டாலும் அழகா இருக்கும் போலவே”, என்று நினைத்தாள்.
மனதில், அவனுக்கு தான் பொருத்தமா இருக்கிறோமா என்று கேள்வி எழுந்தது. அதை ஒதுக்கியவள் உடைத் தேர்வில் இறங்கினாள்.
அவனுக்கு பொருத்தமாக, தனக்கு பிடித்த மாதிரியான உடையை எடுத்தவள் கடையை விட்டு வெளியே வந்தாள். 
அப்போது ரோட்டுக்கு அந்த பக்கம் ஒரு பெண் ஒரு ஆணுடன் கோபமாக பேசிய படியே செல்வதை பார்த்தாள்.
அந்த பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கும். அவள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் அல்ல. அவளை எங்கேயோ பார்தது போலவே இருந்தது மைதிலிக்கு.
அவள் அந்த பெண்ணைப் பார்த்தது போல இவளையும் ஒருவன் பார்த்தான். பார்த்தது மட்டுமல்லாமல் அவளை பின் தொடரவும் செய்தான்.
இந்த ஒரு வாரமாக கண்ணனிடம் அவனுக்கு பிடித்ததை அவனிடமே போட்டு வாங்கி லிஸ்ட் தயார் படுத்தி வைத்திருந்தாள். அது போக அவளுக்கு தோன்றிய பொருள்கள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டிருந்தாள். 
இவள் பின்னாடியே வந்து இவளை நோட்டம் விட்டவன் அவள் வாங்கும் பொருள்களைக் கண்டு ஒரு புன்சிரிப்புடன் அங்கிருந்து சென்று விட்டான். 
மைதிலி வீட்டுக்கு செல்லும் போது மணி நான்கு ஆகி இருந்தது.
கடையில் இருக்கும் போதே வேதவள்ளி பலமுறை “சீக்கிரம் வா”, என்று சொல்லி விட்டாள். அதனால் இப்போது அவளிடம் மண்டகப்படி கிடைக்கும் என்று தெரிந்து பயந்து கொண்டே உள்ளே சென்றாள்.
அவள் நினைத்தது போல மைதிலியைப் பார்த்ததும் திட்ட வாய் திறந்த வேதவள்ளிக்கு, தன்னுடைய செல்ல மகளின் முகத்தில் இருந்த சந்தோசத்தைக் கெடுக்க தோன்றவில்லை. 
அது மட்டுமல்லாமல் சின்ன சிரிப்புடன் “என்னங்க இங்க வாங்க. உங்க மகளோட கூத்தைப் பாருங்க”, என்று கருணாகரனை அழைத்தாள்.
உள்ளே இருந்து வந்த அவரும் மைதிலியைப் பார்த்து சிரித்தார்.
“இப்ப எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கீங்க?”, என்று குழப்பத்துடன் கேட்டாள் மைதிலி.
“ஏமா, மாப்பிள்ளைக்கு பரிசு வாங்க தான போன? ஏதாவது பரிசு வாங்கிருந்தா ஏதாவது அட்டப்பெட்டில இருக்கும். டிரெஸ் வாங்கிருந்தா ஒரு கவர்ல இருக்கும். நீ என்னடான்னா மார்க்கெட்ல காய்கறி வாங்கிட்டு வார மாதிரி ரெண்டு பையோட வந்துருக்க?”
“அப்பா போங்கப்பா, இதெல்லாம் கிப்ட்  தான். நானே இன்னும் மூணு ஐட்டம் வாங்காம வந்துட்டேனேன்னு கவலைல இருக்கேன்”
“என்னது இன்னுமா? சரி சரி முறைக்காத. எதுக்கு வாங்கலை?”
“பணம் பத்தலைப்பா”
“முவ்வாயிரம் கொடுத்தேனே பாப்பா?”

“அவளுக்கு இப்ப முப்பதாயிரம் கொடுத்தாலும் பத்திருக்காது.. அப்படிதான டி?”, என்று  கேட்டாள் வேதவள்ளி.
“ஆமா மா, அவ்வளவு பணம் இருந்துருந்தா ஒரு ரிங் வாங்கிக் கொடுத்துருப்பேன்”
“பணம் வேணுமா பாப்பா? நீ மோதிரம் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறியா?”, என்று கேட்டார் கருணாகரன்.
“வேண்டாம் பா, அவர் கிட்ட மோதிரம் இல்லாமலா இருக்கும்? அவருக்கு நான் வாங்கிருக்குறது ரொம்ப பிடிக்கும்”
“மாப்பிள்ளையை நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வா”
“சரிப்பா, அம்மா சாப்பாடு தா. பசிக்குது. அப்புறம் இதெல்லாம் கிஃப்ட் பாக்ஸ்ல அடைக்கணும்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே நடந்தாள்.
பெரியவர்கள் இருவரும் ஒரு அர்த்தமுள்ள சிரிப்பை பகிர்ந்து கொண்டார்கள்.
அன்று இரவு அவளை போனில் அவளை அழைத்த கண்ணன் “சாப்பிட்டியா மைத்தி?”, என்று கேட்டான்.
“ஹ்ம் சாப்பிட்டேன்”, என்று ஹாஸ்டலில் இருப்பதை போலவே பேசியவள் “நாளைக்கு என்ன பிளான்?”, என்று கேட்டாள்.
“ஒரு பிளானும் இல்லை. எப்போதும் போல தான். நீ வந்துருந்தா நல்லா இருந்துருக்கும்”
“அடுத்த பிறந்த நாளுக்கு உங்க பக்கத்துலே இருப்பேன் போதுமா? இதுக்கு முன்னாடி நம்ம ஒண்ணா பிறந்த நாள் கொண்டாடிருக்கோமா?”
“இது வரைக்கும் இல்லை. நீ உன் பிறந்த நாள் அன்னைக்கு உங்க வீட்டுல இருப்ப. என்னோட பிறந்தநாளுக்கும் ஒண்ணா இருந்தது இல்லை”
“கவலைப் படாதீங்க. அப்புறம் காலைல கோயிலுக்கு போயிட்டு வரணும் சரியா?”
“ஹ்ம் சரி”
“வீட்டுல எல்லாரும் என்ன பண்ணுறாங்க”
“நான் என்னோட ரூம்ல இருக்கேன் மைத்தி. கீழ என்ன பண்ணுறாங்கன்னு பாக்கலை. மலர், ரேணு கால் பண்ணாங்களா?”
“இப்ப தான் பேசுனேன். அடுத்த வாரம் மலர் அக்கா இங்க வாரா”
“இங்கன்னா? உங்க காலேஜ்க்கா?”
உளறியதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டு “வீட்டுக்கு வருவான்னு சொல்ல வந்தேன்”, என்று சமாளித்தாள்.
“சரி,நேரம் ஆச்சு நீ படுத்து தூங்கு”
ஹ்ம்ம  சரி குட் நைட்”, என்று சொல்லி போனை வைத்தவள் 11.45 மணிக்கு அலாரம் வைத்து விட்டு படுத்தாள்.
இது வரை யாரும் கண்ணனை இரவு எழுப்பி வாழ்த்து எல்லாம் சொன்னது இல்லை என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.
நல்ல உறக்கதில் இருந்த மைதிலி அலாரம் சத்தத்தில் கண் விழித்தாள். எழுந்து முகம் கழுவி வந்தவள் கண்ணனை அழைத்தாள்.
“இந்த நேரத்தில் யாரு”, என்று எண்ணியபடியே போனை எடுத்த கண்ணன் மைதிலி அழைக்கவும் “இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கா? எதுவும் பிரச்சனையா?”, என்ற பதட்டத்துடன் போனை எடுத்தான்.
“எதுவும் பிரச்சனையா மைத்தி? என்ன இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க?”
அவன் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்தவள் “அப்படி எல்லாம் இல்லை. மணி இப்ப பன்னிரெண்டு. ஹேப்பி பேர்த்டே டூ யு”, என்று வாழ்த்தைச் சொன்னாள்.
கண்கள் வியப்பில் விரிய, உதட்டில் புன்னகை மலர “ஏய், என்ன இது? தேங்க்ஸ் “, என்றான்.
அவன் சிரிப்பை மனதில் கொண்டு வந்து “பெர்த்டே பேபி இன்னைக்கு மாதிரியே சிரிச்சிட்டு இருக்கணும். படுத்து தூங்குங்க.நான் காலைல பேசுறேன்”, என்றாள்.
“சரி தூங்குறேன். ஆனா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“என்ன செய்யணும் ?”
“ஒரு அஞ்சு நிமிஷம் பேசுறியா?”
“இதெல்லாம் ஒரு உதவியா?”, என்று கேள்வி கேட்டவள் அரை மணி நேரத்துக்கும் மேல் பேசி விட்டு தான் வைத்தாள்.
உறக்கத்தை தொலைத்து விட்டு உறைந்த புன்னகையுடன் மைதிலியைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் கண்ணன்.
கதிரவன் தன்னுடைய ஒளிக் கதிர்களை பாய்ச்ச குருவிகள் கீச் கீச் என்று கத்த பொழுது அழகாக விடிந்தது.
வெளிச்சம் முகத்தில் பட்டதும் தான் கண் விழித்தாள் மைதிலி. தன்னுடைய போனை எடுத்து அவனை அழைத்து மறுபடியும் பிறந்த நாள் வாழ்த்து கூறியவள் “எங்க இருக்கீங்க”, என்று கேட்டாள்.
“இப்பதான் கோயில்ல சாமி கும்பிட்டேன்”
“சூப்பர். இன்னைக்கு ஆபீஸ் போவீங்களா? இல்லை வெளிய எங்கயாவதா?”
“தெரியலை. தோணுனா போவேன். இல்லைன்னா ரூம்லே ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான். சரி வீட்டுக்கு போயிட்டு உனக்கு கால் பண்ணவா?”
“நீங்க வீட்டுக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்?”
“ஒரு பத்து நிமிஷம் தான் ஆகும்”
“சரி நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் குளிச்சிட்டு சாப்பிட்ட அப்புறம் உங்களை கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் ஏற்கனவே குளித்திருந்தாள்.
பின்னர் கிளம்பி வெளியே வந்தவள் காலை உணவை முடித்து விட்டு கிளம்பி விட்டாள். 
அவன் கிஃப்ட்டுடன் செல்வதைப் பார்த்த கருணாகரன் “மாப்பிள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு வா மா. இல்லைன்னா அவரைப் பாத்ததும் அப்பாக்கு போன் போடு. நானே கூப்பிடுறேன்”, என்றார்.
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு குதூகலமாய் சென்ற மைதிலி அடுத்த அரை மணி நேரத்தில் போய் நின்றது கண்ணனின் வீட்டின் முன்பு தான். 
ஆனால் அவளை வரவேற்றது கேட் வாசலில் தொங்கிய பூட்டு தான். “வீட்டை பூட்டிட்டு எங்க போயிட்டாங்க?”, என்று நினைத்து அவனை போனில் அழைத்தவள் புன்னகையுடன் “எங்க சார் இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
அவன் காண்பித்த வீட்டுக்கு அவள் வருவாள் என்று கண்ணன் கனவா கண்டான்? அதனால் எந்த நினைவுமின்றி “வீட்ல தான் இருக்கேன் மைத்தி. நீ அதுக்குள்ள குளிச்சிட்டியா?”, என்று சாதாரணமாக கேட்டான்.
“இவன் என்ன இப்படி புளுகுரான்?”, என்று நினைத்தவள் “விளையாடுறானா ?”,என்று எண்ணி “குளிச்சிட்டேன். அப்புறம் நீங்க என்ன செய்றீங்க? வீட்ல யாரெல்லாம் இருக்கா?”,என்று கேட்டாள்.
“நான் ஆபீஸ் கிளம்ப போறேன். வீட்ல எல்லாருமே இருக்காங்க”
“சரி நான் சாப்பிட்ட அப்புறம் கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் குழப்பத்துடன் அவனுடைய ஆஃபிஸ்க்கு வண்டியை செலுத்தினாள். 
அவளை புன்னகையுடன் வரவேற்ற செக்யூரிட்டி “ஐயயா இன்னும் வரலையே மா”, என்றார். “இனி தான் வருவான் போல?”, என்று நினைத்து மறுபடியும் அவனை அழைத்தாள். 
உடனே அவளுடைய போனை எடுக்க வில்லை. இரண்டாவது முறை அழைக்கும் போது அதை எடுத்தவன் “தேங்க்ஸ் மைத்தி, ரெண்டு நிமிஷம் படுப்போமேன்னு நினைச்சு படுத்தேன் அப்படியே தூங்கிட்டேன். நல்லதா போச்சு எழுப்பி விட்டுட்ட”, என்றான்.
மேலும் குழம்பி போனவள் போனை வைத்து விட்டு அந்த ஆஃபிசைப் பார்த்தாள். ஏற்கனவே செக்யூரிட்டி அவளை உள்ளே போய் இருக்க சொல்லி விட்டான். இவள் தான் வெளியே நின்று கண்ணனை அழைத்தாள்.
இப்போது கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கண்டிப்பாக தெரிய வேண்டும் என்பதால் நேராக செக்யூரிட்டி அருகில் போய் நின்றாள்.
இவளைப் பார்த்து சிரித்தவன் “ஐயா வரேனு சொன்னாங்களா மா?”, என்று கேட்டான்.
“ஹ்ம் ஆமா அண்ணா. சரி உங்க வீடு எங்க இருக்கு,உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க”, என்று அவனை பற்றி விசாரித்து நன் மதிப்பைப் பெற்றாள். அனைத்தையும் உள் வாங்கிக் கொண்டு “உங்க முதலாளி வீட்டுக்கு போய்ருக்கீங்களா அண்ணா?”, என்று கண்ணனைப் பற்றி விசாரித்தாள்.
“வருசா வருஷம் பெரிய ஐயாவோட பிறந்த நாளுக்கு எல்லாரும் அங்க போவோம்மா”
“எல்லாருமா?”
“ஆமாம்மா, கம்பேனி, ஆஸ்பத்திரி எல்லா இடத்திலயும் வேலை பாக்குற எல்லாருமே போவோம்”
“நீங்க அத்தனை பேர் போறதுக்கு அவர் இங்க வரலாம்ல? அவர் இங்க வர மாட்டாரா?”
“உங்க மாமனாரைப் பத்தி என்கிட்டயே விசாரிக்கீங்களா? உங்களுக்கு தெரியாததா? அவர் எப்படிம்மா இங்க வர முடியும்? அவருக்கு தான் நடக்க முடியாதே”,என்று சொன்னதும் வந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு “இல்ல அண்ணா, அதை மாத்தணும். வீட்டுக்குள்ளே இருந்தா அவருக்கு மனசு ரொம்ப ஒரு மாதிரி இருக்கும். வெளிய வந்து காத்து வாங்குனா உடம்புக்கு நல்லது தான? எப்படி என் யோசனை?”, என்று சாதாரணமாக கேட்டாள்.
“நீங்க என்ன தப்பாவா சொல்ல போறீங்க? நீங்க மருமகளா போன அப்புறம் பெரியைய்யாவ நல்லா பாத்துக்கோங்க”
“சரிங்க அண்ணா, எல்லாரும் அவங்க வீட்டுக்கு எப்படி போவீங்க?”
“கம்பேனி பஸ் கூட்டிட்டு போயிரும். இங்க ஏறி அங்க இறங்க போறோம். வல்லம் டவுன்ல தான் மா அவங்க வீடு இருக்கு. அந்த ஏரியால பெரிய வீடு அவங்க வீடு தான் மா. மாணிக்கவேல் வீடு எதுன்னு அங்க யார் கிட்டையுமே கேக்க வேண்டாம். பாத்தாலே தெரிஞ்சிரும். நம்ம சின்னையாவோட விசிட்டிங் கார்ட்ல கூட அந்த வீட்டு அட்ரெஸ்ஸ் தான் போட்டுருக்கும். ஆனா ஐயா இன்னொரு வீடும் கட்டிருக்குறதா பேசிக்கிட்டாங்க”
தேவையான தகவல் கிடைத்து விட அவனைப் பார்த்து சிரித்தவள் “ஒரு விசிட்டிங் கார்ட் கொடுங்களேன்”, என்றாள்.
“இதோ எடுத்து தரேன் மா”, என்று சொல்லி அவன் கொடுத்ததும் அதைப் பார்த்தவளுக்கு குழப்பம் மேலும் அதிகரிக்க தான் செய்தது.
“இதை ஏன் என்கிட்ட சொல்லலை?”, என்று நினைத்தவள் நேராக அவனுடைய வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினாள்.
முன்பு பார்த்த வீட்டை விட பிரம்மாண்டமாகவே இருந்தது அந்த வீடு. எதுவோ மனசு கிடந்து அடிக்க “விசாரிக்காம விட கூடாது என்று நினைத்து செக்யூரிட்டி அருகில் சென்றாள்.
அவனுக்கு இவள் யாரென்று தெரியாதே.அதனால் “யார் மா நீங்க?”, என்று விசாரித்தான்.
“கண்ணனை பார்க்கணும்”
“சின்னையா இப்ப தான் வெளிய போனாங்க”
“ஓ ஆபீஸ் போய்ட்டான் போல”, என்று நினைத்தவள் அருணை பற்றி கேட்க நினைத்தாள்.
செக்யூரிட்டி தன்னை சந்தேகமாக பார்க்கவும் “பையனைப் பத்தி விசாரிச்சா இப்படி தான் பார்ப்பான்”, என்று எண்ணி “சாரு இருக்காளா?”, என்று கேட்டாள்.
கண்ணன், சாரு என்று பெயர் சொல்வதால் “இந்த வீட்டுக்கு இந்த பொண்ணு வேண்டப்பட்டது போல?”, என்று எண்ணி “உள்ளாரா தான் இருக்காங்க போங்க”, என்றான்.
அவன் மரியாதையை கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளே நடந்தாள்.
ஏனோ உள்ளே போகாதே என்று மனம் சண்டித்தனம் செய்ய, உண்மையை அறியாமல் அவளால் எப்படி செல்ல முடியும்.
முடிவாக வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தாள்.
அதே நேரம் கம்பேனிக்குள் நுழைந்த கண்ணனைப் பிடித்த செக்யூரிட்டி “இப்ப தான் சார் சின்னம்மா வந்து உங்களை கேட்டுட்டு உங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டுப் போனாங்க”, என்று குண்டைத் தூக்கிப் போட்டான்.
கண்ணன் தலையில் விழுந்தது சாதாரண குண்டு அல்ல. அணுகுண்டு.
தீண்டல் தொடரும்….
 

Advertisement