Advertisement

கதாநாயகன் : கண்ணன்
கதாநாயகி : மைதிலி
அத்தியாயம் 1
மொத்தமாய்
தோற்றுத்தான் போகிறேன்,
நீ என்னை
தீண்டிச்செல்லும் நொடியில்!!!
சென்னையில் உள்ள வீ .சி இன்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியத்தின் மேடையில் நின்று மைக்கைப் பிடித்து பாடிக் கொண்டிருந்தாள் மூன்றாம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில்  படிக்கும் மைதிலி.
அங்கிருந்த அனைவரின் கவனமும் அவள் மேல் இருக்க அவளோ  கண்களை மூடிய படி தன்னையே மறந்து பாடிக் கொண்டிருந்தாள்.
அவளை இரு ஜோடி விழிகள் கூர்மையாக பார்த்து கொண்டிருந்தது. ஒரு ஜோடி விழிகளில் பரிதவிப்பு இருந்ததென்றால் மற்றொரு ஜோடி விழிகளில் இருந்ததோ அளவிட முடியாத ஆர்வம்.
அவள் பாடி முடித்து கண்ணை திறக்கும் போது அங்கிருந்த அனைவருமே எழுந்து நின்று கைகளை தட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவு பாராட்டு கிடைத்தாலும்,  அதை கண்டு கொள்ளாமல் அவள் பார்வை அவள் வகுப்பில் படிப்பவர்கள் அமர்ந்திருக்கும் பக்கம் சென்றது.
அங்கு அமர்ந்திருந்த நாற்பது பேருமே வெறுமனே எழுந்து நின்றார்க ளே தவிர ஒருவரும் கைகளை தட்ட வில்லை. “இதை நான் எதிர் பார்த்தேன்”, என்று நினைத்துக் கொண்டு சோர்ந்த முகத்துடன் கீழே இறங்கினாள்.
ஒரு மாத காலமாக மொத்த வகுப்பே தன்னை  ஒதுக்கி வைத்ததை நினைக்கும் போது பற்றிக் கொண்டு வந்தது மைதிலிக்கு.
“எல்லாம் அவனால் வந்தது, விஷ்ணு கொஷ்ணு. பாவி, அவனால தான் எல்லாம். அவனுக்காக மொத்த கிளாசுமே என்கிட்ட பேச மாட்டிக்கு”, என்று மனதுக்குள் பொருமி கொண்டே தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
தனக்கு இரண்டு புறமும் அமர்ந்திருந்த ஆர்த்தியையும், பிரேமாவையும் பார்த்தாள். இரண்டு வருடம் நல்ல தோழிகளாக இருந்தவர்கள் இன்று முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
மனதுக்கு வருத்தமாக இருந்தாலும் அதை நினைக்காமல் அடுத்த நிகழ்ச்சியை பார்வையிட்டாள்.
கடைசியில் பரிசு வழங்கும் போது மைதிலிக்கு முதல் பரிசு என்று அறிவிப்பு வந்தது. சந்தோசத்துடன் மேடை ஏறியவள் இன்முகத்துடன் அதை பெற்று கொண்டாள்.
அடுத்த நொடி அவளிடம் மைக் நீட்ட பட்டது. அவள் மைக்கை வாங்கியதும் “இந்த பாட்டு படத்தில் உள்ளது கிடையாது தான மைதிலி?”, என்று கேட்டார் பிரின்சிபால் சதாசிவம்.
“எஸ் சார், இந்த பாட்டு எந்த படத்திலும் வந்தது இல்லை. இனியும் வராது, இது எனக்கு மட்டுமே சொந்தமானது”, என்று பூரிப்புடன் மைதிலி சொன்னதும் அவளை பார்த்து கொண்டிருந்த ஒரு ஜோடி விழிகளில் மெல்லிய நீர் துளி.
“ரொம்ப திறமை இருக்கு மைதிலி உனக்கு. ரொம்ப அருமையா பாடின மா. வாழ்த்துக்கள்”, என்றார் சதாசிவம்.
கீழே வந்து அமர்ந்தவள் விழா முடிந்ததும்  தன்னுடைய ஹாஸ்டலுக்கு சென்று குளித்து விட்டு கட்டிலில் அமர்ந்தவள் தன்னுடைய போனை எடுத்து பார்த்தாள். அதில் வந்திருந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தாள்.”இந்த அளவுக்கு உனக்கு மூளை இருக்கா?”, என்று வந்திருந்தது..
அதை பார்த்து புன்னகைத்தவள் “நான் பதில் அனுப்ப மாட்டேன்னு தெரிஞ்சும் எனக்கு மெசேஜ் அனுப்புற உனக்கு தான் அறிவே இல்லை”, என்று எண்ணி கொண்டாள்.
 அப்போது தான் பிரேமாவும் ஆர்த்தியும் உள்ளே வந்தார்கள். அவர்கள் முறைப்பான பார்வையை கண்டதும் இருந்த சந்தோஷமான மனநிலை மாறியது போல உணர்ந்தாள் மைதிலி.
“ஏண்டி ஆர்த்தி, பாட்டுல முழுக்க முழுக்க காதல் வார்த்தையா சேத்து பாடுவாங்களாம். ஆனா ஒருத்தன் உண்மையா விரும்புனா வேண்டாம்னு சொல்லுவாங்களாம். என்ன நியாயமோ?”,  என்றாள் பிரேமா.
“ஆமா பிரேமா, விடு இதெல்லாம் திருந்தாத ஜென்மம். காதல்னா என்னன்னு தெரியாது. எவனாவது ஏமாத்துனா அவன் பின்னாடி அலையுவாங்க. ஒருவேளை இன்னும் பணக்காரனுக்கு வெயிட்டீங்கோ என்னவோ?”, என்று ஆர்த்தி பேசி கொண்டிருக்கும் போதே எரிச்சலில் வெளியே வந்து விட்டாள்.
ஒரு மரத்தடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவள் உள்ளம் கொதித்தது. “எப்படி எல்லாம் பேசுறாளுக, பேசாம பிரின்சிபால் சார் கிட்ட கம்பளைண்ட் பண்ணிரலாமா? சே வேண்டாம் இன்னும் ஒரு வருஷம் இதுங்க கூட தான் குப்பை கொட்டணும்”, என்று வாய் விட்டே புலம்பினாள் மைதிலி.
“என்ன மைதிலி தனியா பேசிட்டு இருக்க?”, என்று கேட்ட படி வந்தாள் கம்ப்யூட்டர் பிரிவைச் சேர்ந்த ரேகா.
“ஒன்னும் இல்லை ரேகா. சும்மா தான்”, என்று சோர்ந்த குரலில் சொன்னாள் மைதிலி.
“சூப்பரா பாடுன. காலேஜ் புல்லா  உன்னை பத்தி தான் பேசுது. அதான் விஸ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன். ஆனா நீ சந்தோசமா இருக்குற மாதிரி இல்லையே. எதுவும் பிரச்சனையா?”
“எதுக்கு உன் பங்குக்கு நீயும் என்னை திட்டவா?”, என்று நினைத்து கொண்டு “ஒன்னும் இல்லை ரேகா. சும்மா அம்மா, அப்பா பத்தி நினைச்சிட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்லை”, என்று சமாளித்து அவளை அனுப்பி வைத்தாள்.  அவள் சென்றதும் ஒரு மாதம் முன்பு நடந்த நிகழ்வை அசை போட்டாள்.
விஷ்ணு என்ற ஒருவனுக்காக தான் மொத்த கிளாசுமே அவளை தள்ளி வைத்திருக்கிறது.
 
எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் அசிஸ்டன்ட் ப்ரொபஸராக வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகி இருந்தது.மொத்த அழகையும் அவனுக்கு வைத்து கடவுள் படைத்தது விட்டார் போல. அதற்கே பெண்கள் அவன் பக்கம் என்றால் அவன் திறமையும், பாடம் எடுக்கும் அழகும்,நகையுவையான பேச்சும், உதவி செய்யும் மனப்பாங்கும் பசங்களையும் கவர்ந்தது.
அதனால் விஷ்ணு சார் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். மைதிலிக்குமே அவனை ரொம்ப பிடிக்கும் தான் அவன் காதல் என்று சொல்லும் வரை.
ஒரு மாலை பொழுதில் காலேஜ் முடிந்து ஹாஸ்ட்டல் போகும் வழியில்  அவளிடம் காதல் சொன்னான்.
“மைதிலி, ஒரு நிமிஷம்”, என்ற விஷ்ணுவின் குரல் கேட்டு மைதிலி, பிரேமா, ஆர்த்தி மூவரும் திரும்பி பார்த்தார்கள்.
“குட் ஈவினிங் சார்”, என்று மூவரும் சொன்னதும் “குட் ஈவினிங், மைதிலி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”, என்றான் விஷ்ணு.
“என்ன சார்? சொல்லுங்க”
“இல்லை, தனியா பேசணும்”
உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தாலும் “நீங்க சொன்னதை அடுத்த நிமிஷமே என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்ல தான் போறேன். சோ அவங்களும் இருக்கட்டும். சொல்லுங்க”, என்று சாதாரணமாகவே சொன்னாள்.
“தஞ்சாவூர்ல உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்றியா?”
“எங்க வீடா? எதுக்கு சார் கேக்குறீங்க?”
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மைதிலி, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன் அளவுக்கு என் மனசை வேற எந்த பொண்ணும் கலைச்சது இல்லை. உன்னோட அதிகமான அழகா? நிதானமான குணமா? இல்லை பொறுமையா? எதுவோ ஒன்னு  நீ எனக்கு வேணும்னு தோணுது. உன்னை கல்யாணம் பண்ண ஆசை படுறேன். உங்க வீட்ல என்னோட அம்மா அப்பாவை பேச சொல்றதுக்கு தான் கேக்குறேன்”, என்று தயக்கத்துடன் சொல்லி முடித்தான்.
தனிமையில் சொல்ல வேண்டிய காதலை கூட ஆள் வைத்து கொண்டு சொல்ல வேண்டி இருக்கிறதே என்று தர்ம சங்கடமாக இருந்தது அவனுக்கு.
அவன் சொன்னதை கேட்ட மூவருக்குமே அதிர்ச்சி தான். கதாநாயகனா அவர்கள் மனதில் இருப்பவன் விஷ்ணு, அவன் மைதிலியிடம் காதலை சொல்லி இருக்கிறான்.
முதல் முறையாக ஆர்த்தி மற்றும் பிரேமா கண்களில் பொறாமையை கண்டாள் மைதிலி.
அடுத்த நிமிடம் மைதிலியின் மனதுக்குள் “நீ எனக்கு வேணும் மைத்தி”, என்ற ஒரு ஆண் குரல் கேட்டது.
தன்னை நிலை படுத்தி கொண்டவள் “என்னை மன்னிச்சிருங்க சார். எனக்கு இதுல எந்த உடன் பாடும் இல்லை. நீங்க என்னை விட நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க”, என்று சொல்லி விட்டு தோழிகள் கூட வருகிறார்களா இல்லையா என்று கூட பாராமல் சென்றே விட்டாள்.
“விஷ்ணு சாரை வேண்டாம்னு சொல்லிட்டாளா?”, என்று அதிர்ச்சியாகி நின்ற பிரேமா மற்றும் ஆர்த்தியிடம் “ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் அவ பிரண்ட்ஸ் தான? அவ கிட்ட எனக்காக பேசுங்களேன்”, என்றான் விஷ்ணு.
“சரி”, என்று அவனிடம் சொன்னவர்கள் மைதிலியிடம் வற்புறுத்த ஆரம்பித்தார்கள்.
பொறுமையாக அவர்களிடம் மறுப்பை சொல்லிக்கொண்டிருந்த மைதிலி  ஒரு கட்டத்தில் எரிச்சலாக மறுப்பை சொன்னாள்.
கடைசியாக அது வாக்கு வாதத்தில் முடிந்து அவளிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். ஒற்றுமையாக இருந்தவர்கள் பேசாமல் இருந்ததை கிளாசில் கண்டு பிடித்து ஒருவர் மாற்றி ஒருவர் விசாரித்து கடைசியில் உண்மை அனைவருக்கும் தெரிந்தே விட்டது.
 
அனைவரின் கனவு நாயகனாக இருக்கும் விஷ்ணுவை திருமணம் செய்ய கிளாசில் உள்ள பசங்க கூட வற்புறுத்த மன அழுத்தத்துக்கு ஆளானாள் மைதிலி.
ஒரு சாராக நினைத்து விஷ்ணுவுக்கு இவளும் தீவிர ரசிகை தான். அதற்காக காதல் என்று எல்லாம் அவள் நினைத்து பார்க்க வில்லை. அதன் பின் அனைவருமே அவளிடம் பேசுவதை தவிர்த்தார்கள்.
ஒருவனுக்காக அனைவருமே பேசாமல் இருப்பது விந்தையாக இருந்தாலும் அனுபவிக்கும் போது மைதிலிக்கு வலித்தது. ஏதாவது உதவி கூட யாரிடமும்  கேட்க முடியாமல் திண்டாடினாள்.
இந்த விஷயத்தில் விஷ்ணு மேல் இப்போது வரை அவள் மனதில் நல்மதிப்பு தான் இருக்கிறது. ஏனென்றால் ஒரு முறை அவனுடைய விருப்பத்தை சொல்லி விட்டு அவள் மறுத்ததும் ஒதுங்கி விட்டான். அவளை வேறு எப்போதும் தொல்லை செய்ய வில்லை.
அவன் மீது உள்ள பக்தியில் மற்றவர்கள் தான் அவளை துன்புறுத்தி கொண்டிருந்தார்கள்.
பழசை யோசித்து கொண்டிருந்தவள் சுற்றிலும் இருட்டியதை உணர்ந்து சாப்பிட சென்றாள். சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்தவள் அடுத்த வாரம் வரும் செமஸ்டர் பரிட்சைக்கு படிக்க ஆரம்பித்தாள்.
பரிட்சை முடியும் வரை பிரேமா, ஆர்த்தி என்ன சொன்னாலும் அதை காதில் வாங்க கூடாது என்று முடிவில் இருந்தாள்.
நாளை செமஸ்டர் லேப் என்னும் நிலையில் இன்று ரெகார்ட் நோட்டில் போனபைட் கையெழுத்து வாங்க ஸ்டாப்  ரூமில் சப்மிட் செய்திருந்தார்கள். “சைன் பண்ணிட்டேன். எல்லாரும் எடுத்துக்கோங்க”, என்று கோகுல் சார் சொன்னதும் அனைவரும் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
தன்னுடைய நோட்டை தேடிய மைதிலி திகைத்தாள். “ஒரு வேளை யாரும் மாத்தி எடுத்துருப்பாங்களோ?”, என்று நினைத்து கொண்டு கிளாசுக்கு சென்றவள் அனைவரிடமும் கேட்டாள்.
அப்போது ரவி என்றவன் எழுந்து “நீ விஷ்ணு சாரை லவ் பண்றேன்னு சொல்லு, நோட் உன்கிட்ட வரும்”, என்றான்.
 
“இப்படியும் செய்வார்களா?”, என்று இருந்தது மைதிலிக்கு.
எரிச்சலின் உச்சத்துக்கு சென்றவள் அவர்கள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் நேராக சென்றது விஷ்ணுவை பார்க்க தான்.
கோபமாக தன முன் நின்ற மைதிலியை பார்த்தவன் “என்ன ஆச்சு மைதிலி?”, என்று உண்மையான அக்கரையில் கேட்டான்.
“நீங்க ஏன் சார் என்னோட லைப்ல வந்தீங்க? உங்களால தான் என்னோட நிம்மதி சந்தோசம் எல்லாம் போச்சு. எனக்கே வாழ்க்கையில ஏக பட்ட பிரச்சனை இருக்கு. இதுல நீங்க வேற?”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.
“ஐயோ மைதிலி என்ன ஆச்சு? நான் அன்னைக்கு சொன்னதுக்கு அப்புறம் உன்னை தொல்லை செய்யவே இல்லையே”, என்று பதறி போனான் விஷ்ணு.
அவனிடம் நடந்த அனைத்தையும் சொன்னதும் “ஐயையோ, வா என் கூட”, என்று சொல்லி அவளுடைய கிளாசுக்கு சென்றான்..
அங்கே சென்றதும் “ரவி, மைதிலி நோட் எங்க? “, என்று கேட்டான் விஷ்ணு.
“என்கிட்ட இல்லை சார்”, என்றான் ரவி.
“மைதிலி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டா. இப்ப உங்க எல்லாருக்கும் சந்தோசமா? அவ நோட்டை அவ கிட்ட கொடுங்க “, என்று சொல்லி அவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தையும், மைதிலிக்கு அதிர்ச்சியையும் கொடுத்தான் விஷ்ணு.
“ரொம்ப சந்தோசம் சார். இந்தா மைதிலி உன் நோட்”, என்று சொல்லி ரவி என்பவன் அவள் கையில் கொடுத்ததும் அடுத்த நொடி அவன் கன்னத்தில் அறைந்திருந்தான் விஷ்ணு.
அனைவரும் உறைந்து விட்டார்கள். “உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சா? என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கிற நீங்க உங்க கூடவே இருக்குற பொண்ணை இவ்வளவு நாள் வதைச்சிருக்கீங்க? காதல் என்ன சொன்னவுடன் வர்ற விஷயமா?”, என்றான் விஷ்ணு.
 
“சார் உங்களுக்கு என்ன குறைச்சல்? ரொம்ப அழகா இருக்கீங்க? நல்ல படிச்சு நல்ல வேலைல இருக்கீங்க? இத்தனைக்கும் கல்யாணம் பண்ண தானே கேட்டீங்க? மைதிலி அம்மா அப்பா விவசாயின்னு தான் சொல்லிருக்கா. அதனால அவளுக்கு நல்ல லைப் அமையும்னு தான்”, என்றான் மற்றொருவன்.
“நல்ல லைஃப்பா? எனக்கு நல்ல லைப் அமைச்சு தர நீங்க யாரு டா? உங்க எல்லார் கூடயும் நான் எப்படி பழகுனேன்? நல்ல பிரண்டா, ஒரு சகோதரியா, உங்க எல்லாரையும் என்னோட அண்ணன் மாதிரி நினைச்சு தான பழகுனேன்? ஆனா என் மனசுல என்ன இருக்குன்னு யாராவது கேட்டீங்களா? யாருமே என்னை பத்தி யோசிக்கலை. ரெண்டு வருஷம் மேல உங்க கூட இருக்கேன். ஆனா என்னை நோகடிச்சிடீங்கள்ல? என் பிரண்ட்ஸ் கூட என்னை புரிஞ்சிக்கல”, என்று கத்தினாள் மைதிலி.
“இப்பவும் எங்களுக்கு புரியலை மைதிலி. நீ எதுக்கு சாரை வேண்டாம்னு சொல்ற?”
“அப்ப நான் முடிவு சொல்லாம,இந்த விசயத்தை விட மாமாட்டீங்க டீங்க அப்படி தான? சரி நான் சொல்றேன். ஆனா இப்ப இல்லை. சார் நீங்க எனக்கு உதவி செய்யணும்”
“என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் மைதிலி. சரி அதை விடு. என்ன உதவி சொல்லு”
“செமஸ்டர் எக்ஸாம் சனிக்கிழமை முடியுது. சண்டே நீங்க எல்லாரும் என் கூட எங்க ஊருக்கு வரணும். ஒரு பஸ் பிடிங்க. பஸ்க்கு பணம் நானே கொடுத்துறேன்”
“உன்னால எப்படி அவ்வளவு பணம்…”, என்று விஷ்ணு சொல்லும் போதே “அவ வீட்ல ரொம்ப கஷ்டம் சார். நாமளே ஷேர் பண்ணி கொடுக்கலாம். நாங்க எல்லாரும் வரோம்”, என்றான் ரவி.
அவனை பார்த்து முறைத்த மைதிலி “ரொம்ப தேங்க்ஸ்”,என்று முறைத்த படி சொல்லி விட்டு அவன் கையில் இருந்த நோட்டை பிடுங்கி கொண்டு அங்கிருந்து சென்றாள்.
அதன் பின் மூன்று வாரமாக அவளுடன்  பேச வந்தவர்களை இவள் கண்டு கொள்ளாமல் சென்றாள்.
 
பிரேமா, ஆர்த்தி சாரி சொல்லியும் அவர்களிடமும் அவள் பேச வில்லை.
எவ்வளவு மனஉளைச்சல் இருந்தாலும் அவளுக்கு வரும் ஒரு குறுஞ்செய்தி அவளை உற்சாகமாக ஆக்கி விடும்.
நன்றாக பரீட்சை எழுதினாள் மைதிலி.  ஞாயிற்றுகிழமை காலை ஆறு மணிக்கு அனைவரும் பேசிய படி ஒரு பஸ் நிறுத்தத்துக்கு வந்து விட்டார்கள். மைதிலியும் இரண்டு பைகளுடன் வந்தாள்.
அதை தூக்கி பஸ்ஸில் வைக்க கையை நீட்டிய பிரவீனை ஒரு முறை முறைத்து விட்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டாள். விஷ்ணு அவளை ஆர்வமாக பார்வையிட்டான்.
எல்லாருமே தங்களுக்குள் பேசிய படி வந்தார்கள். “இவளுக்கு ஊர்ல எதாவது அத்தை பையன் இருப்பாங்களோ? அதான் மாட்டேன்னு சொல்றாளோ?”, என்று குழம்பி தவித்தார்கள்.
குழப்பத்தின் நாயகியோ மனம் முழுவதும் உற்சாகத்துடன் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் வந்தாள்.
அவள் மனதும் யோசித்த படி தான் இருந்தது. “அடுத்த வருஷம் புல்லா இவங்க கூட எப்படி படிக்க? எப்படி இவங்க கூட கோபம் இல்லாம பேச முடியும்?”, என்று நினைத்து கொண்டே வந்தாள்.
மதியம் ஒரு மணி போல், தஞ்சாவூரில் உள்ள ஆவாரம்பட்டி என்ற  கிராமத்திற்குள் பஸ் நுழைந்தது.
பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் நடுத்தரமான ஒரு வீட்டின் முன் நிப்பாட்ட சொன்னாள் மைதிலி.
“இது தான் என்னோட வீடு. எல்லாரும் உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய பேகை எடுத்துக்கொண்டு இறங்கியவள் உள்ளே சென்றாள்.
அந்த வீட்டை பார்த்து அவளை ஏழை என்று சொல்ல முடியாது தான். அதே நேரம் பஸ்க்கு பணம் கொடுக்கும் அளவுக்கு பணக்காரி என்றும் சொல்ல முடியாது.
 
உள்ளே வந்தவர்களை கருணாகரனும், வேதவள்ளியும் வரவேற்றார்கள். “இவங்க தான் என்னோட அப்பா அம்மா”, என்று அறிமுக படுத்தி வைத்தாள் மைதிலி.
“அப்பா அம்மா இவங்க எல்லாரும் எதுக்கு இங்க வந்துருக்காங்கன்னு தெரியுமா?”, என்று மைதிலி ஆரம்பிக்கும் போதே “நாங்க சொல்றோம்”, என்று சொன்ன விஜி “இவர் தான் எங்க சார் விஷ்ணு. இவருக்கு மைதிலியை ரொம்ப பிடிச்சிருக்காம். அதை சொன்னதுக்கு மைதிலி முடியாதுன்னு சொல்லிட்டா. அதான் நாங்க காரணம் தெரிஞ்சிக்க வந்தோம்”, என்றாள்.
“மைதிலிக்கு வரனா? ஹா ஹா”, என்று சொல்லி சிரித்தார் கருணாகரன். வேதவள்ளியும் சிரித்தார். மைதிலியும் புன்னகைத்தாள்.
சம்பந்தம் இல்லாமல் சிரிக்கும் மூவரையும் பார்த்து அனைவரும் குழப்பமாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்.
“இப்ப எதுக்கு சிரிக்கீங்க? எங்க சார விட உங்க பொண்ணுக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைக்காது”, என்றான் ரவி.
“நான் யாரையும் குறைச்சு மதிப்பிடறவன் கிடையாது தம்பி. உங்க சார் மேல நீங்க எல்லாரும் அன்பு வச்சிருக்குறது பாத்தா ரொம்ப சந்தோசம். ஆனா மைதிலியை விட்டுருங்க”, என்றார் கருணாகரன்.
“ஏன் சார் மைதிலி உங்க பொண்ணே இல்லையோ? அதான் அவளுக்கு நல்லது நடக்க விட மாட்டுக்கீங்களோ?”, என்று கேட்டான் ஜெகன் என்பவன்.
“அப்பா இங்க இருந்தா  இவங்க விபரீதமா யோசிப்பாங்க. நானே இவங்க கிட்ட பேசிக்கிறேன். அம்மா என்னோட பேகை என் ரூம்ல வச்சிருங்க. எல்லாரும் வாங்க”, என்று சொல்லி விட்டு பஸ்ஸை நோக்கி நடந்தாள்.
அனைவரும் ஏறியதும் பஸ் கிளம்பி சென்றது. மதியம் இரண்டு மணியை நெருங்கியதால் அனைவருக்கும் பசி எடுத்தது.
“இங்க நல்ல ஹோட்டல் சொல்லு மைதிலி. டைம் ஆச்சு. எல்லாரும் சாப்பிடலாம்”, என்றான் விஷ்ணு.
“சாப்பிட தான் சார் போறோம். இருங்க அஞ்சு நிமிசத்துல போயிறலாம். கால் மணி நேரத்துல சாப்பிட ஆரம்பிச்சிரலாம்”, என்று சொன்னாள் மைதிலி. அடுத்த ஐந்து நிமிடத்தில் “எம். கே இண்டஸ்ட்ரீஸ்” என்ற பிரமாண்டமான வாயில் முன்பு நின்றது.
மைதிலி தலையை தூக்கி செக்யுரிட்டியை பார்த்தாள். அவளை பார்த்ததும் கதவை அவசரமாக திறந்து விட்டார். பஸ் உள்ளே நுழைந்ததும் அனைவரும் இறங்கினார்கள். மைதிலி அருகே ஓடி வந்த செக்யூரிட்டி “வணக்கம்மா. நீங்க நாளைக்கு வராதா ஐயா சொன்னாங்களே”, என்றான்.
“உங்க ஐயாவை ஏமாத்த தான் நான் இன்னைக்கே வந்தேன். உங்க ஐயா இருக்காரா?”
“இல்ல மா. ஹாஸ்ப்பிட்டல் போயிருக்காங்க. ஒரு முக்கியமான ஆப்பரேஷனாம்”
“சரி சரி உடனே போன் பண்ணி சொல்லிராத. ஒரு மணி நேரம் கழிச்சு உங்க ஐயா க்கு கால் பண்ணி அஞ்சு நிமிசத்துல வந்து இருக்கணும்னு சொல்லு சரியா”, என்று சிரித்த படி உள்ளே நடந்தாள்.
அனைவரும் திகைத்த படியே அவள் பின் நடந்தார்கள். மிக பெரிய கட்டிடங்கள் அங்கே அணிவகுத்திருந்தன. 
விஷ்ணுவிடம் “சார் இது எந்த இடம்?”, என்று கேட்டான் ரவி.
“எம். கே அப்படிங்குறது தஞ்சாவூர் ல பெரிய கம்பேனினு கேள்வி பாத்திருக்கேன். கம்பேனி மட்டும் இல்லை. இங்கயே காலேஜ், ஹாஸ்ப்பிட்டல் எல்லாமே இருக்கு. ஒரு தடவை வேலை தேடி அப்பளை பண்ணுனேன். ஆனா இங்க எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கான்னு தெரியலையே”, என்று சொல்லி கொண்டே வந்த விஷ்ணு அதிர்ந்து போனான். அவன் மட்டும் இல்லை. அனைவருமே அதிர்ந்து போனார்கள்.
அந்த ஆபிஸ் உள்ளே நுழையும் இடத்தில் மிகவும் உயரமான பெரிய புகைப் படத்தில் சிரித்து கொண்டிருந்தாள் மைதிலி.
“அப்படின்னா எம். கே ன்னா மைதிலி கருணாகரனா? இதெல்லாம் இவளோடதா? இவ இவ்வளவு பணக்காரியா?”, என்று நினைத்து அனைவருமே அதிர்ந்து நின்றார்கள்.
தீண்டல் தொடரும்….

Advertisement