Advertisement

“காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா…? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால் காதல் சேராமல் போகும்போது தான் இ..ன்னும் இ..ன்னும் ஆழமா மனசுக்குள்ள வேர் விட்டு நீக்கும். அதுக்கு தான் பவர் அதிகம்.
அந்த காதலை தாண்டி பொண்டாட்டி பிள்ளைன்னு நிறைவா ஒரு வாழ்க்கை வாழலாம். ஆனால் அந்த காதல்.. முதல் காதல்.. நமக்குள்ள ஒரு வித மாயம் பண்ணும். நம்மளோட நினைவுகளை இனிமையாக்கும் ரொம்ப ரொம்ப… அதுக்காகவே அந்த லவ் தோத்துப் போனதுக்கு சந்தோஷ படலாம்.
அபகரிக்கிறது அன்பு இல்லை.. அரவணைக்கிறது தான் அன்பு….!
நீங்க மனசு வச்சா இந்த உணர்வில் இருந்து விடுதலை தரலாம். உண்மையா சொல்லுறேன் உங்களை யாருக்காவது பிடிக்கலன்னா விடுதலை கொடுங்க. சந்தோசமா வாழணும்ன்னு விடுதலை கொடுங்க. அந்த கண்ணு இருக்குதுலா.. நீங்க காதலிச்ச பொண்ணோட கண்ணு.. அதுல இருந்து கண்ணீர் வரவே கூடாது. அப்படி பார்த்துக்கணும்… உரிமையா கிட்ட இருந்து இல்லை. விலகி இருந்து.. அது தான் லவ். அந்த இடத்துல தான் உங்களோட லவ் உசந்து நிக்குது.
அந்த பொண்ணு நல்லா இருந்துச்சின்னு வைங்க.. உங்களோட பொண்ணு இன்னும் நல்லா இருக்கும். பியூச்சர்ல்ல உன் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா கூட, அது சொல்லும் என் அப்பா…டா.. எவ்ளோ பெரிய ஜென்டில்மேன் தெரியுமா..??! பொண்ணுங்களை மதிக்க தெரிஞ்ச ஒரு ஆண்மகன் எனக்கு அப்பாவா இருக்கிறார்ன்னு சொல்லும்…!
இப்போ சொல்லுங்க.. உங்களோட முடிவு என்னன்னு.. காதலை அடைய தப்பான வழியில போக போறீங்களா..??! இல்லை உங்க பொண்ணோட மனசுல ஹீரோவா இருக்க போறீங்களா..??”
இருளின் நிசப்தம் மட்டுமே சில நொடிகள் அங்கே. தூரத்தே தெரிந்த ஒளி விளக்குகள் நகரத்தின் இரவு நிலையை பிரதிபலிக்க, மனதில் ஏதோ யோசித்தவராய் அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவரிடம் பேச வார்த்தைகள் இல்லை. இதயத்தில் ஆணி அடித்தார் போல கேள்விகளால் துளைத்தவள்.. நிதர்சனத்தை எவ்வளவு அழகாய்… சொல்லி விட்டாள் இந்த பெண்.. அப்படியே அவள் அம்மா கீர்த்தனா மாதிரியே பேசுறா…
தான் செய்ய இருந்த காரியத்தின் வீரியம் நெஞ்சில் அமிலமாய் எரிந்தது. இந்த பெண் மட்டும் வராமல் இருந்திருந்தால்… நா.. நா..நான்.. என்ன காரியம் செய்திருப்பேன்… நினைக்கவே நெஞ்சம் வலித்தது.
நிமிர்ந்து அவள் முகம் பார்த்து சொன்னார்.
“தாங்கஸ்.. ரொம்ப பெரிய உதவி செஞ்ச.. என்னை என் பொண்ணோட மனசுல ஹீரோவா ஆக்குனதுக்கு.. நான் என்னைக்கும் உனக்கு கடமை பட்டுருக்கேன்.
வா.. நானே உன்னை வீட்ல விட்ருறேன். உன் அம்மாட்ட பேசுறேன்”.
“சரி. வாங்க போகலாம்” என்று எழ முற்பட்டவள், அவ்வளவு நேரம் கால் மடக்கி அமர்ந்து இருந்ததால் கால் மரத்து போயிருக்க.. நிலை தடுமாறி.. அருகிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரமல் விழுந்தாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அவரும் அந்த ரவுடிகளும் திகைத்துப் போய் நிற்க… அங்கே காலத்தின் விதி மேகப் பெண்ணை பிரசவிக்க செய்து தனது இருப்பை மழையாக அறிவித்தது.
பிடிக்க பிடிமானம் ஏதும் இல்லாமால் அவள் சரசரவென கீழே போய் கொண்டே இருந்தாள். வானத்திலிருந்து கொட்டும் மழை மட்டுமே இப்போது அவளை கட்டி தழுவியது. நெஞ்சம் படபடக்க… உள்ளத்தில் தங்கியிருந்த பயம் வீறு கொண்டு எழ.. பெண்ணவள் உள்ளம் தானாக அவனை தேடியது. நெஞ்சோடு கைகளை இறுக்கி பிடித்திருந்தவள் தேஜா வூ நினைவாக அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த கற்களை உள்ளங்கையில் தாங்கி பிடித்தபடி,
“தே….ஜா வூ..! நான் நம்புறேன்.. உ…ன்னை நம்புறேன்.. பிளீஸ் சேவ் மீ..! ர..ர…வி….!” உயிரை குரலில் தேக்கியப்படி அந்த கற்களுக்கு தன் மூச்சு காற்று மூலம் உயிர் கொடுத்தாள்.
அந்த நிலா ஒளியில், மழை துளிகள் அந்த கற்களில் பட்டு சிதற… உள்ளங்கையின் கதகதப்பில் அந்த கற்களுக்கு வெட்பம் கிடைக்க… அவள் மூச்சு காற்று தூங்கி கிடந்த கற்களுக்குள் உயிர்மூச்சினை பரப்பியது…
அது வெறும் சாதாரண கல் என்று நினைத்திருந்தவள் சிறிதும் அறிந்திருக்க மாட்டாள். அது ஒரு மாய சக்தி கொண்ட கல் வடிவத்தில் உள்ள ‘நண்பன்’ என்று.
அவள் ‘ரவி’… ‘தேஜா வூ’.. என்று மாற்றி மாற்றி புலம்பி கொண்டே … அந்த மலைச் சரிவிலிரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தாள்.
“வீழ்கிறேன் நான்…
உன்னுடன் வாழ்வதற்கே..!”

Advertisement