Advertisement

நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய… சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்… மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை.
அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சு தானே. அப்படி இருக்கையில் எத்தனை நேரம் தான் இவளது அலம்பளை தாங்குவது. கூட்டத்தில் ஒருவன் பொங்கி விட்டான்.
பின்ன.. ரவுடின்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம இப்படி ‘ஜோக், கடி’ன்னு பெயரில் எத்தனை அடிகளை தான் தங்குவான்.
“அண்ணா… என்னால முடியலன்னா. ஒன்று இவளை வாயை மூடிக்கிட்டு வர சொல்லுங்க.. இல்லை என்னை வண்டிய விட்டு இறக்கி விட்ருங்க..” என்று அந்த ரவுடி கும்பலின் தலைவனிடம் முறையிட்டான்.
“டேய் நீ ஏண்டா பொங்குறா. அடங்குடா.. தங்கச்சி நீ சொல்லும்மா” இதை சொன்னது அவளது குறும்பு பேச்சில் கவரப்பட்ட மற்றொருவன்.
“அப்படி சொல்லுங்கண்ணா… ” அவனுடன் கைகளை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டவள்,
“வாவ்வவ்வே…” என்று வசை பாடியவனை பார்த்து பழிப்பு காட்டியவள் மிச்ச சொச்ச கடி ஜோக்குகளை அள்ளி விட்டாள். பின் கொஞ்சம் நேரம் கழித்து தன்னை வம்பு இழுத்தவனுடன் டீல் பேசலானாள்.
“இப்போ நான் சொல்லுறதை மட்டும் நீ செஞ்சேன்னு வை… இனி கார் ஸ்டாப் பண்ணுற வரை நான் வாயே திறக்க மாட்டேன். உங்க ரவுடி பேபி.. சாரி சாரி முறைக்காத தலைவா.. உன் அழகுல மயங்கி காரை எங்கேயாவது கொண்டு போய் மோதிட போறேன்” என்று அருகில் இருந்த அந்த கூட்டத்து தலைவனை வாரியவள்… தொடர்ந்து சொன்னாள்…
“உனக்கு நான் பெரிய வேலையெல்லாம் கொடுக்கல.. நான் சொல்லுற ஆளுக்கு லிப் ஸ்டிக் மட்டும் போட்டு விட்டா போதும்”.
“ஹா ஹா ஹா… இது என்ன பிஸ்கோத்து.. இவ்ளோ தான் மேட்டர்ரா…”
“பொறுடா என்னை தூக்கிட்டு வந்தவனே…
அந்த ஆள் வேற யாருமில்லை. நல்லமனுஷன் தான்.. “
“ஹ்ம்ம்.. பெயரை சொல்லு முதல..”
“குட் ஸ்னேகாக்கா”.
“என்ன சொன்ன.. நம்ம நடிகை ஸ்நேகா அக்காவா..??”
“ஹாங்..” அவனை மேலும் கீழும் பார்த்தவள்.. “துறைக்கு ஆசை தான். நான் சொன்னது ‘நல்ல பாம்பு’டா.
இதே ஆசையோடு நல்ல பாம்புக்கு போய் லிப்ஸ்டிக் போட்டுட்டு வா பார்ப்போம்”.
‘கொள்’ளென்று அனைவரும் சிரித்தனர். முகத்தில் கரி பூசாத குறையாக காலை வாரி விட்டு விட்டாள் பெண். அவனுக்கு சங்கடமாகி விட்டது.
“ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்”.
“சரி சரி.. விடு. உன் ரேஞ்சிற்கு ஒரு சவால்.
நம்ம விநாயகரை உன்னால மடியில வச்சு கொஞ்ச முடியுமா…”
“ஹா ஹா ஹா.. இதெல்லாம் ஒரு சவாலா.. என் ரேஞ்சிற்கு தருவேன்னு பார்த்தா.. பொம்மையை போய் கொஞ்ச சொல்லுற..?!” கிண்டல் தொனித்தது அவன் குரலில்.
“அடங்குடா ரவுடி பையா. நான் சொன்ன விநாயகர்…. யா…யா….யானை பகவான். புரியுதா?” முட்டை கண்ணை விழித்து உருட்டி விளக்கினாள்.
“அய்யய்யயோ..”
“ஹே. அவ்ளோ பெரிய யானையை எப்படிடா மடியில வைக்க முடியும். இதுல வேற கொஞ்சல் குலாவல்ன்னா.. தாங்குமாடா உன் பாடி..? “- ரவுடிகளில் ஒருவன்.
“டேய் நீ சும்மா இரு. இவள் வேணும்ன்னே என்னை வம்புக்கு இழுக்குறா…”
“நான் எப்படிடா உன் ஜாம்பவான் பாடியை இழுக்க முடியும். நானே தூசி மாதிரி இருக்கேன்”.- ஆராதனா.
“பாருங்க தலைவா. இவள் என்னையையே வச்சி செய்..ய்..யு..றா”
“ஹா ஹா ஹா…” ஒட்டு மொத்த ரவுடி கூட்டமும் ரவுடி’பேபி’யாக மாறி புன்னகைத்தது.
“சரி விடு. ஒர்ரி பண்ணிக்காத பேபி. இப்போ அடுத்த சவால் சொல்லுறேன். ரொம்ப ஈஸி தான். நம்ம வாம்பயர் இருக்காருலா… டேய் டேய் பேய் முழி முழிக்காதடா.. முழுசா சொல்லி முடிச்சிடுறேன். அதான் நம்ம இரத்த காட்டேரி கொசு அண்ணாச்சி இருக்காருலா அவர்க்கு ஒரே ஒரு தடவை டி…டி..ரஸ் போட்டு விட்டா போதும்”. கண்சிமிட்டி சிரித்த படி அப்பாவியாக சொல்லி முடித்தாள் ஆராதனா.
சிரிப்பு வெடி வானுக்கும் மண்ணுக்கும் பறந்தது தான் அடுத்து நடந்தது.
“ஹா ஹா ஹா….”
“ஹைய்யோ அம்மா…”
மானம் போச்சே… என்று கர்சீப்பால் முகத்தை மூடி கொண்டான் அவன். “இனி நான் உன் பேச்சுக்கே வரல. ஆளை விடும்மா…” பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கி கொண்டான்.
“ஹா ஹா ஹா…”
“சிரிச்சு சிரிச்சே என் வயிறு வெடிச்சிரும் போல… ஹா ஹா ஹா.. “
அவர்களுக்குள் பேசிய படியே, அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.
“சரியான வானரம் நீ..” அதுவரை அமைதியாக இருந்த அவர்கள் தலைவன் இப்படி சொல்லவும் மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஆகி போனது.
ஆராதனாவிற்கும் கொஞ்சம் நாணம் கலந்த சங்கடமாகி போனது. பதில் என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் மூடி கொண்டாள்.
சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது. அது இப்போது அந்த இடத்திற்கு பொருந்தாது போல ஆராதனாவை தவிர அனைவருக்கும் தோன்றியது.
“ஏன் ஸயிலன்ட் ஆகிட்ட…? என்னோட ஆள்களை மட்டும் இவ்ளோ நேரம் கலாய்ச்சியே இப்போ நான் சொல்லுறேன் ஒரு டாஸ்க். அதை முடிஞ்சா செய் பார்ப்போம்”. இப்போது பேரம் பேசியது அத்தலைவன்.
என்ன என்பது போல அவன் முகம் பார்த்தாள்.
“இதோ இத்துனுண்டு இருக்கிற எறும்புக்கு அழுத்தமா ஒரு கிஸ் கொடு பார்ப்போம்”.
சட்டென கிறீச்சிட்டு நின்றது வண்டி.
“எ..ன்…ன்…ன..ன..து.. எறும்புக்கு கிஸ்ஸ்ஸா… நானா…???”
“ம்ம்ம்.. நீயே தான்”.
“என்ன தலைவா சொல்லுறீங்க??”.
“ஆமாடா. இவள் வாயை மூட வைக்க அந்த எறும்பால தான் இப்போதைக்கு முடியும். இவள் நான் செஞ்சு காட்டுறேன்னு வீம்புக்கு போய் கிஸ் பண்ணா எப்படியும் அந்த எறும்புகிட்ட கடி வாங்க தான் போற. இதை அவள் செய்யலன்னா அவளோட டீல் படி வாயை மூடிக்கிட்டு வர வேண்டியிருக்கும். சோ எதுனாலும் நமக்கு வசதி தான்”.
“தலைவா… நீங்க எங்கேயோ போயீட்டிங்க..”
அவர்களுக்கு முறைப்பை பதிலளித்தவள் அதன் பின் மறந்தும் வாயை திறக்கவில்லை.
“இதோ.. வண்டியை இந்த பக்கம் திருப்பு. ஹ்ம்ம்…”
அவன் வழி சொல்ல சொல்ல அவள் வண்டியை ஓட்டினாள். யாராவது தன்னையே கடத்த தானே வண்டியை ஓட்டி செல்வார்களா.. ? இந்த உலகத்திலே நான் மட்டும் தான் இப்படி செய்திருப்பேன். பெண்ணவள் மனம் நொந்து கொண்டது.
“ம்ம்ம். நிறுத்து வண்டியை. சாவியை குடு”. அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் சொன்னபடி செய்தாள்.
“கீழே இறங்கு”. அவன் குரலில் கட்டளை இருந்தது.
பலி ஆடு போல ஒன்றும் பேசாமல் செய்தாள்.
“டேய் அந்த ஆளுக்கு போனை போடுடா. எங்கே இருக்கான்னு கேளு”.
“சரி தலைவா”.
ஆராதனா சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆள் அரவமற்ற காலியான இடம். கொஞ்சம் உயரமான இடமாக வேறு தென்பட்டது. ஊரை விட்டு தொலைவில் வந்திருப்பது தூரத்தே தெரிந்த குட்டி குட்டி வெளிச்ச புள்ளிகளின் மூலம் புரிந்தது. கத்தி கூப்பாடு போட்டாலும் ஒரு காக்கா கூட எட்டி பார்க்காது போல.
அட கிருஷ்ணா.. எப்போ வந்து என்னை காப்பாற்றுவ.. அவள் உள்மனம் நம்பியது. நிச்சயம் அவன் வருவான். அது தேஜாவூவோ இல்லை.. அந்த ரவி குலோப்ஜாமுன்னோ.. யாராக இருந்தாலும் சரி. தனக்கு ஒன்றும் ஆகாது. இல்லாத தைரியத்தை எல்லாம் சேர்த்து திடமாக இருக்க பிரயாத்தனப்பட்டாள்.
கண்ணை கூசும் வெளிச்சத்தில் வானில் மின்னல் வெட்டியதில் பெண்ணவள் உள்ளம் கொஞ்சம் நடுங்க ஆயத்தமானது. இதுவரை நண்பர்களை போல சிரித்து பேசிய ரவுடி பேபிஸ் இப்போது இறுகி போய் நின்றிருந்தனர். இவள் பக்கம் திரும்பவே இல்லை. அது வேறு இவள் மனதில் கிலியை பரப்பியது. பொறுக்கமாட்டாமல் வாய் விட்டு கேட்டாள்,
“அட பாவிகளா.. இவ்ளோ நேரம் பல்லை காட்டி சிரிச்சி பேசிட்டு இப்போ யாரோ போல நிக்குறீங்களேடா.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா…”
அவர்கள் ஒன்றும் பேசவில்லை.
“நீங்கயெல்லாம் மனுஷ ஜென்மங்களா.. இல்லை காட்டு மிராண்டிகளா.. இப்படி யாருமில்லாத இடத்துக்கு பச்சகுழந்தையை கடத்திட்டு வந்திருக்கீங்க”.
அங்கும் இங்கும் நடந்தபடி யாரேனும் தன்னை காப்பாற்ற வருவார்வகளா… அதான் அவளோட தேஜா வூ அப்படின்னு தேடி தேடி பார்த்தும் யாரும் வந்த பாடில்லை..
இப்போது வானத்தில் இடியுடன் கூடிய மின்னல் வெட்டியது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் கண் சிமிட்ட சிமிட்ட… பெண்ணவள் தேகம் தூக்கி வாரி போட்டது.
இவனுங்களை நம்பி பயனில்லை. கஷ்டப்பட்டு ஃப்ரென்ட் ஆகி எப்படியாவது தப்பிச்சிர்லாம்ன்னு பார்த்தா… ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டுக்குதே. இப்போ என்ன பண்ண…?!
கண்ணை கூசி கொண்டு தூரத்தில் ஒரு வண்டி வருவது தெரிந்தது. ஒரு வேளை தன்னை காப்பாற்ற தான் யாரும் வருகிறார்களோ..?! என்று ஆவலுடன் பார்த்தாள். இவள் மனதிற்குள் யோசித்து கொண்டிருக்கும் போதே வண்டி அங்கு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்கினார். இறங்கியதும் அந்த ரவுடிகளிடம் ஏதோ பேசியவர் பின் இவளை நோக்கி வந்தார்.
இவருக்கு என் அப்பா வயது இருக்குமா…? பார்க்க அப்படி ஒன்றும் வில்லத்தனமாக இல்லையே. இவரா நம்மை கடத்தி கொண்டு வர சொன்னது?! மனதிற்குள் கேள்விகள் படையெடுத்தது. அதற்குள் இவள் அருகே வந்தவர் இவளை பார்த்து கேட்டார்.
“ஹ்ம்ம்… சொல்லு… எங்கே அந்த பொருள்?” கடினமாய் இருந்தது ஒவ்வொரு வார்த்தைகளும்.
ஏன் இத்தனை கோபம்.?அப்படி என்னிடம் என்ன பொருள் இருக்கு.?
“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல”.
“புரியலையா…?! ஹாங்… இதை என்ன நம்ப சொல்லுறீயா…? கீர்த்தனாவோட பொண்ணாற்றே… அப்பாவியா தான் பேசுவா”.
தன் அம்மாவின் பெயரை சொன்னதும் ஆராதனாவிற்கு இவன் தனதன்னைக்கு தெரிந்தவர் என்பதை குறித்துக் கொண்டது.
“எனக்கு இப்போ உன்கிட்ட பேச நேரமில்லை. எனக்கு கண்டிப்பா தெரியும் . அந்த பொருள் உன்கிட்ட தான் இருக்கு. நீயா கொடுத்தா நல்லது. இல்லை நானா எடுக்க வேண்டியிருக்கும்”. கொடூரமாய் அவரது முகம் இப்போது மாறியிருந்தது.
“அய்யோ.. சத்தியமா நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்கு புரியல”. கண்ணில் நீர் நிக்காமல் பெருக அதை உதடு துடிக்க அடக்கியபடி அவரிடம் மாஞ்சாடினாள். பெண்ணவள் இப்போது முழுவதுமாக பயந்து விட்டாள் என்பதை அவளது கண்ணீர் துளிகளே சாட்சி சொன்னது.
அங்கிருந்த யாரும் அவளது நிலையை பொருட்படுத்தவே இல்லை. இப்படி கடத்தல் ஸீன் எல்லாம் சினிமாக்களில் பார்த்தது. இப்படி தனக்கு நேரும் என்று கனவா கண்டாள். யாருமில்லா அந்த இரவில்… நிற்கதியாய் ஒரு பெண்ணாய் ஆண்கள் சூழ நிற்கையில் எந்த பெண் தான் ஐயம் கொள்ளாமல் இருப்பாள்.
தொப்பென தரையில் விழுந்து தன் நிலையை எண்ணி அழுதாள் பெண்.
“ஹ்ம்ம்ச்… முதல அழுகிறதை நிப்பாட்டு. உன்னை யாரும் இங்கே தப்பா எதுவும் பண்ண போறது இல்லை. எனக்கு தேவை அந்த பொருள். அதை கொடுத்துட்டா நான் உன்னை விட்ருறேன்”.
“நான் அல்ரெடி உன் வீட்டை செக் பண்ணி பார்த்துட்டேன். உன் ரூம்ல இருந்து தான் வித்தியாசமா ஒளி வந்து. சோ கண்டிப்பா அது உன்கிட்ட இருக்கணும்.
இதுல தேவையில்லாம அந்த குர்க்காவ வேற தூக்க வேண்டியதா போச்சி… “
அழுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அவர் முகம் பார்த்தாள். என்ன?? இவர் அந்த கு…ர்.. க்..கா..வை.. அப்படியென்றால் அன்று எதேச்சையாக எதுவும் நடக்கவில்லையா..??? இவர் எப்போது இருந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்..??
குழப்பத்துடன் அவள் அவரது கண்களை ஊடுறுவி பார்த்தாள்.
“ஹ்ம்ம்.. உனக்கு விளக்கமா சொன்னா தான் புரியும் போல” சொல்லியபடி அவளேதிரே அத்தரையில் அமர்ந்தவர், சுற்றியிருந்த அந்த ரவுடிகளை கொஞ்சம் தள்ளி நிற்குமாறு பணித்துவிட்டு அவளிடம் ஒரு புகைப்படத்தை கட்டினார்.
அவளது அம்மா அப்பா சேர்ந்திருக்க கூட ஒரு பெண்மணி அவர் அருகில் இன்னொரு ஆண். விழி விரிய பெண்ணவள் அதை பார்த்தாள்.
“ம்ம். சொல்லு. இதுல இருக்கிறது யாருன்னு தெரியுதா?!”.
“எங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.?”
“சம்மந்தம் எனக்கும் உன் அம்மாவுக்கும் இல்லை. கூட நிற்கிற இந்த பெண்ணுக்கும் எனக்கும் தான் ஜென்ம ஜென்மான பந்தம் ஆக வேண்டியது. உன் அம்மாவோட அவள் சேர்ந்ததால எல்லாத்தையும் இழந்துட்டு, இப்போ இப்படி உன்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கிறேன்”.
“என்ன சொல்றீங்க..?! எங்க அம்மா யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாங்க”.
“யாரு இப்போ இல்லைன்னு சொன்னா..??!”
“அப்படின்னா…?!”
“ஹ்ம்ம்.. உன் அம்மா பக்கத்துல நிக்குற பொண்ணு பேரு பார்கவி. என்னோட பாருவா ஆக வேண்டியவள்”.
பார்கவி என்ற பெயரை கேட்டதும் ஆராதனாவின் நினைவடுக்கில் லேசான நினைவு வந்தது. அப்படியென்றால் இந்த பெண்மணி அம்மாவின் ஃப்ரென்ட் ராஜுவோட மனைவியா தான் இருக்கணும். சிறுவயதில் சில சமயம் அவளது அம்மா இவர்களை பற்றி பேசி கேட்டிருக்கிறாள். இவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படம் அம்மாவிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறாள். அதனால் இப்போது இந்த புகைப்படத்தை பார்த்ததும் நியாபகம் வந்தது.
“நீங்க தான் மித்திரன்..னா??!”
அவர் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்தார்.
“அப்போ உங்க பார்கவி ஏன் அந்த ராஜுவோட நிக்கிறாங்க..?”
அவன் முகம் மீண்டும் விகாரமாய் மாறியது. சில நொடிகள் கண் மூடி எதையோ ஜீரணிக்க போராடியவர், பின் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பினார். அவளை கூர்மையுடன் பார்த்து சொன்னார்,
“அப்போ உனக்கு எல்லா விஷயமும் தெரியும்”.
“மேலோட்டமான விஷயங்கள் மட்டும் அம்மா சின்ன வயசுல சொல்லியிருக்கிறாங்க. ஆனால் உங்களை பற்றி தான் தெரியல”.
“சொல்லுறேன் கேட்டுக்கோ. இந்த பார்கவி என்னோட மனைவியா வர வேண்டியவ..! அ.. ந்த ராஜசேகர் பார்கவியை மட்டும் பார்க்காம இருந்தி…ரு..ந்..தா இந்நேரம் நானும் பார்கவியும் சந்தோஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருப்போம். இடையில் உங்க அம்மா வேற வந்து அவளுக்கு நல்லது பண்ணுறதா நினைச்சி எனக்கு கெடுதல் பண்ணிட்டா”.
“அப்போ நீங்க அடுத்தவரோட மனைவியை காதலிச்சிருக்கீங்க…?! அவர்களை அடைய ஏதோ தப்பு பண்ண ட்ரை பண்ணியிருக்கிறீங்க”
“ஏய்….!” பாய்ந்து வந்து அவள் கழுத்தை நெறித்தான். தன் காதலை எவ்வளவு ஈசியாக கொச்சை படுத்துகிறாள். ஆராதனாவிற்கு உயிர் பயம் தொண்டை குழியில் மாட்டி கொண்டு தவித்தது.
“அவள் எப்பவுமே என்னோட காதலி தான். இந்த ராஜசேகர் நேத்து வந்த பையன்” என்று கோபத்தில் பொரிந்து தள்ளியவர் அவரது காதல் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
தான் பார்கவியின் மேல் வைத்த காதலையும் அதை புரிந்து கொள்ளாமல் ராஜசேகரை அவர் மணந்ததையும், பின் தோழனாக அவருடன் இருந்ததையும்.. அதன் பின்… அந்த டைம் ட்ராவல் பற்றி அவனுக்கு தெரிந்ததை அவளுக்கு புரியும் விதத்தில் அவன் சொந்தகதை சோககதையையும் சேர்த்து… அந்த பயணம் மூலம் தன் காதலை அடைய அவருக்கு தேவையான அந்த பொருளில் வந்து முடித்தார்.
என்ன இது.. ஆள் ஆளாளுக்கு வந்து இன்றைக்கு ஏதேதோ சொல்லிகிட்டு இருக்கிறாங்க. அங்கே ஆபிஸ்ல என்னடான்னா அந்த ரவி பையன் ஒரு கதை சொன்னான். இப்போ இந்த மனுஷர் வந்து ஏதோ உருட்டுக்கட்டை கேம்ன்னு சொல்லுறார். ஒருவேளை அந்த ரவிக்கு இவர் சொல்லுற.. அந்த பொருளுக்கும்.. சம்மந்தம் இருக்குமோ.?
“என்ன… இதை நம்ப சொல்லுறீங்களா.. இந்த காலத்துல போய்… ஏதோ கேம்… மேஜிக் ஸ்டோன்… ப்ளூ ஸ்டோன் அப்படின்னு சொன்னா யாராவது நம்புவாங்களா..?”
“அப்போ நான் சொன்னதை நம்பல. சரி அதை விடு. நீ நம்பு நம்பாம போ. எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எனக்கு அந்த பொருள் வேணும். அது கண்டிப்பா எங்க இருக்குன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். ம்ம்ம் சொல்லு..” என்று தொடர்ந்து பேசியவர் சட்டென தன் பேச்சை நிறுத்தினார்.
நெற்றி புருவம் சுருங்க ஒரு நொடி யோசித்தவர்..
“வெய்ட்… வெய்ட்… இப்போ கொஞ்ச முன்ன என்ன சொன்ன….? கேம்.. ஸ்டோன்ன்னு சொன்னாலா…??? நான் கேம்ன்னு மட்டும் தானே சொன்னேன். ப்ளூ ஸ்டோன் அப்படி…ன்…னு எதுவும் சொல்ல…லீ…யே..?!”
ஹைய்யய்யயோ..! அப்போ நானாக தான் உளறிட்டேனா..??! அந்த ரவி பைய சொன்னப்போவே ஒழுங்கா கேட்டுருந்தேனா இந்த நிலைமை வந்திருக்குமா?? அவன் சொன்னது அந்த கல்லா தான் இருக்கும்னு நினைச்சி வாய் தவறி சொல்லிட்டோமே..! அய்யோ.. இப்போ என்ன பண்ண…?! பீதியில் அவளது முகம் கலவரமானது.
“எனக்கே நான் என்ன தேடுறேன்னு தெரியாது. குத்துமதிப்பா எனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கும்ன்னு நினைச்சி தான் உன்னை கடத்த சொன்னது. ஆனால் நீ சரியா எனக்கு தேவையான பொருள் அந்த கற்கள் அப்படின்னு சொல்லுற.. எப்படி..? “
போச்சி… செத்தேன்…! கரேக்ட்டா பாயிண்ட்ட பிடுச்சிட்டானே..
“என்ன பதிலை காணோம்…? உனக்கு அப்போ அந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கு. தெரியாதது போல இவ்ளோ நேரம் அப்பாவியா நடிச்சிருக்க..? அப்படி தானே… ?”
அவள் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் பயந்து போய் நிற்க்கையிலேயே ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார். கன்னம் எரிந்த பிறகு தான் அவளுக்கு அவர் அடித்ததே உரைத்தது.
“அ…ம்…மா…” வலியில் கத்தினாள்.
“ம்ம்ம்ம்ம்… கத்துடி கத்து.. நல்லா கத்து… நீ இங்கே கத்துறது உங்க அம்மாவுக்கு கேட்கட்டும். அன்றைக்கு மட்டும் புத்திமதி சொல்லி பார்கவியை தடுக்கமா இருந்திருந்தா இந்நேரம் நான் காலத்தையே மாற்றியிருப்பேன். எல்லாம் என்னோட இஷ்டப்படி நடந்திருக்கும்”.
அவரது கத்தல் சிங்கத்தின் உறுமலாய் பெண்ணவளை அச்சுறுத்தியது.
“ஆனா எல்லாம் போ..யி… கடைசில என்னோட பா…பா..ர்கவியும் போயிட்டா.. இப்போ வரை அவளுக்கு என்ன ஆச்சின்னு தெரியாம நான் செத்துகிட்டு இருக்கிறேன்” குரல் தழுதழுக்க பேசினார்.
இது அவர் தானா..? குரல் நடுங்க தேம்பி தேம்பி.. சிறு பிள்ளை போல் அழுவது அவர் தானா..?! கொஞ்சம் முன்னே கத்திய கத்தல் எங்கே.. இப்போது இங்கே கண்முன்னே குலுங்கி அழுவது எங்கே…?
ஆராதனா குழம்பி போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாவம் மனிதர். இயல்பில் நல்லவர் தான். இந்த காதல் வந்து அவரது நல்ல குணத்தை சோதித்து பார்க்கிறது. அதான் மனிதர் பித்து பிடித்துப்போய் தப்பு வழியில் காதலை அடைய நினைக்கிறார். அப்படி அவர் அடைந்தாலும் அது உண்மையான காதல் சுடராய் ஒளி வீசிடுமா என்ன..?
இயற்கையாக விளைந்த பழங்களுக்கும் செயற்கை முறையில் வளர்ந்த பழங்களுக்கும் எவ்வளவு தான் பார்த்து பார்த்து கவனித்தாலும்.. அதன் சுவை அல்லது போஷாக்கில் கடுகளவேனும் வித்தியாசம் தெரியாமலா போய்விடும்…??? அவர் அழுவதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் பின் அமைதியாக கேட்டாள்,
“உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா??”
இவள் என்ன சம்மந்தமில்லாமல் எதையோ கேட்கிறாள் என்று நினைத்தவர் கண்களை துடைத்து தன்னை சரிப்படுத்தியவர் பின் அவளை பார்த்து சொன்னார்,
“ஆமா. ஒரு பெண்ணும் உள்ளாள்”.
“உங்கள் மகள் பற்றி சொல்லுங்களேன்..”
மகள் பற்றி கேட்டதும் அவரது முகத்தில் கனிவு வந்திருந்தது.
“சீ இஸ் மை ஏஞ்சல். அவளுடன் இருக்கும்போது மட்டும் தான் என்னோட துக்கம் கவலை எல்லாம் பறந்து போயிடும் அவள் தான் என்னோட உலகமே”.
“ஓ.. ஸ்வீட்.. உங்க வைஃப் எப்படி..??”
மனைவியின் நினைவில் புன்முறுவல் பூத்தவர், “அவள் என்னோட எனர்ஜி. வாழ்க்கையில எத்தனையோ முறை நான் அடிப்பட்டாலும் அவள் ஒருபோதும் கலங்குனதே இல்லை. என்னை அவள் எதுக்குமே கவலைப்படவிட்டதே இல்லை. சீ இஸ் மை காட்மாதர், எவ்ரி திங்க்”.
“ஏன் கேட்குற..? இப்போ இந்த நேரத்துல இது அவசியமா…??!”
“ஆமா. ரொம்ப அவசியம்”. என்று சிறு இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள்,
“சப்போஸ் நீங்க பார்கவியை மேரேஜ் பண்ணி..யி…ருந்தா இப்போ உங்களோட ஏஞ்சல் அன்ட் காட்மாதர் இன்னொருத்தருக்கு சொ..ந்தமாகி….”
அவரது தாடை இறுகுவதிலே தெரிந்தது அடக்கப்பட்ட கோபம். இருந்தும் அவள் தொடர்ந்தாள்.
“அதாவது இன்னொருத்தருக்கு மனைவியா…”
‘ஷிட்…..’ சொல்லி முடிக்கவில்லை அதற்குள் கன்னத்தில் விழுந்தது பலமாய் ஒரு அரை. பல்லை கடித்து வலியை தாங்கியவள் நிமிர்ந்து அவர் முகம் பார்த்து மீண்டும் சொன்னாள்.
“யாரோ ஒருத்தருக்கு உங்களோட இன்றைய பொண்டாட்டி, அந்த அவரோட மனைவியாவும்… உங்களோட செல்ல பொண்ணு அந்த முகம் தெரியாதவருக்கு பொண்ணாவும் கூட ஆகியிருக்கலாம் இல்லையா…???”
“என்னடி சொன்ன..??” என்று மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியவரை தடுத்தவள்,
“சோ உங்க பொண்ணு, பொண்டாட்டின்னு வர்றப்போ மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருதாக்கும்..?! அடுத்தவனுக்குன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாலே உங்களுக்கு இவ்ளோ கோபம் வருதே… நீங்க மட்டும் இப்போ என்ன பண்ணுறதா இருந்தீங்க..? அடுத்தவரோட மனைவியை உங்களோட மனைவி இடத்துல வச்சி பார்க்கிறீங்க.. இது எப்படி நியாயம் ஆகும்..? ஹாங்… சொல்லுங்க.. இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்கிறீங்க..?
உங்கள் பொண்டாட்டி மட்டும் உங்களுக்கு உத்தமமா இருக்கணும் ஆனால் நீங்க ஊர் மேயனுமா…??”
“ஏய்.. பேசணும்ன்னு என்ன வேணும்னாலும் பேசாதா..! பல்லை பேர்த்திடுவேன். என்னோட மனைவியையும் பெண்ணையும் யாருக்காகவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. இனி ஒரு தரம் அவர்களை வேற யார்கூடயாவது சேர்த்து வச்சி பேசுனா… நான் மனுஷனா இருக்க மாட்டேன்”. விரல் நீட்டி எச்சரித்தவரை அலட்சியமாக பார்த்தவள்,
“ஓ.. அது சரி. அப்போ நீங்க சொன்ன அந்த டைம் ட்ராவல்… அது மட்டும் எதுக்காக..??”
முகத்தில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவர் சட்டென அமைதியாகிவிட்டார்.
“நீங்க காலத்தையே மாற்றி அமைக்கணும்ன்னு தானே ஆசை படுறீங்க.. அப்படி இருக்கும்போது… உங்கள் மனைவி மகள் எதுக்கு..? அவர்களையும் தூக்கி தூர போட வேண்டியது தானே.. உங்களோட காதலி அடுத்தவரோட மனைவின்னு ஆன பின்னும் அவர்களை அடைய நினைக்கிறது மட்டும் எந்த விதத்தில நியாயம்…?? அதுவும் சொல்லாத ஒரு தலை காதல்..!
உங்க காதலி வேணும்னு தானே இவ்ளோ தூரம் தப்பான வழியில நடந்திருக்கிறீங்க.. அப்படி ஒருவேளை நீங்க காலத்தை மாற்றி அமைத்தால்.. நான் சொன்னது தானே நடக்கும்..!
உங்க மனைவியை இன்னொருவருக்கு தாரம் வார்த்து கொடுத்துட்டு.. உங்களோட காதலியோட டூயட் பாடுவீங்களா.. அது தான் உங்களோட ஆசையா..??”
தீக்கங்குகளாய் அவளது கேள்விகள் நெஞ்சில் பாய்ந்தது. துடிதுடித்துப் போனார். இத்தனை நாட்களாய் இதை எப்படி யோசிக்காமல் போனேன்…? அவர்கள் இல்லாமல் என்னால் ஒரு வாழ்வை எப்படி எண்ண முடியும்..?? அப்படியென்றால் என் காதல் பொய்யா..? கலக்கம் சூழ ஆராதனாவை பார்த்தார்.
அவரது குழப்பத்தை புரிந்து கொண்டவள் சொன்னாள்,
“உங்களோட காதல் பொய்யின்னு இப்போ யாரு சொன்னா..? அது உண்மையா இருக்க போயி தானே உங்கள் மனைவி மகள்ன்னு யோசிக்காமல் இத்தனை வருஷமா அந்த டைம் ட்ராவல் பற்றியே யோசித்திட்டு இருந்திருக்கீங்க..!!”
“பின்னே… என்ன தான் சொல்கிறாய்…??”

Advertisement