Advertisement

கண்ணாமூச்சி ஆடி
கனவை விதைக்கிறாய் என்னுள்…
கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்..
இது என்ன விளையாட்டு கண்ணா…!
“ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும்.
எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..?
காலபயணம் பற்றி ஒரு சின்ன எடுத்துக்காட்டுக்கு சொல்றேன்.. இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான மகாபாரதத்தில் ‘ரைவதா அரசன்’ பற்றிய கதையில், அவர் படைப்புக் கடவுளான பிரம்மாவைக் காண்பதற்காக சொர்க்கத்திற்கு பயணிக்கிறார். காரணம் அவருக்கு ஒரு மகள் உண்டு. மகள் என்றால் சாதாரண மகள் அல்ல… பேரழகி. தேவதை போன்ற பிரம்மிக்க வைக்கும் அழகு. ஒரு முறை தரிசித்தாலும், சித்தம் கலங்கி போனாலும் நினைவில் அழியாமல் நிற்கும் அழகு. அப்படி ஒரு அழகிய மகளை மணமுடிக்க இவ்வுலகில் எவரேனும் உண்டோ…? இதை அறிந்திட தான் படைப்பு கடவுள் பிரம்மனை தேடி சொர்க்கலோகத்திற்கு சென்றாராம். (எப்படி ? இந்த காலத்தில் ராக்கெட்,விண்வெளி கலம் உண்டு. ஆனால் அக்காலத்தில்… யோசிக்க வேண்டிய விஷயம்.)
அங்கே சில காலம் பிரம்மனுடன் தங்கி விட்டு பின்னர் பூமிக்கு திரும்பி வருகிறார். ஆனால் பூமியில் இப்போது பல யுகங்கள் கடந்துவிட்டதைக் கண்டு ரைவதா அரசன் அதிர்ச்சி அடைகிறார். அவர் போன நோக்கம் என்ன… இப்போது இங்கே நடப்பது என்ன..?
(அவர் மகளுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையான்னு மகாபாரதம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க..)
அப்படியெனில் இவர் காலத்தை வென்று அதில் பயணம் செய்து, அவர் விரும்பிய காரியத்தை முடிக்க சென்றிருக்கிறார். திரும்பி சொந்த இடத்திற்கு வருகையில் அவர் வயது மாறவில்லை. ஏனெனில் அவர் பூமியில் இல்லை. பூமியில் உள்ளவர்களுக்கு வயது ஆகும். வேறு கிரகத்தில் வாழ்பவர்களுக்கு நம்மை காட்டிலும் வயது குறைவாக தான் இருக்கும். எப்படி ஒருவரது எடை பூமியில் ஒரு அளவாகவும் விண்வெளியில் வேறு அளவாகவும் இருக்கிறதோ அது போல இதுவும்.
பொதுவாக பூமியில் வசிப்பவர் ஒருவர் தன் இருபது வயதில் காலபயணம் செய்கிறார், அப்போது அவர் நண்பருக்கும் அதே இருபது வயது தான். அவர் கால பயணம் செய்து விட்டு திரும்பி வந்து பார்த்தால், அவர் அதே இருபது வயதில் தான் இருப்பார். அந்த இருபது வயது நண்பர் இப்போது நாற்பது வயதில் அல்லது அறுபது வயதில் அல்லது இறந்தும் கூட போயிருக்கலாம். இது தான் அந்த கால பயணத்தில் ஏற்படும் ஒரு மாற்றம். கால பயணத்தின் அளவை பொறுத்து வயது மாறும்”.
“இன்ட்ரெஸ்டிங்…. அப்புறம்…?? ” ஆர்வமாய் கேட்டு கொண்டிருந்தார் பார்கவி கீர்த்தனாவிடம்.
“நமக்கு பிடித்தவர்கள் நம்முடன் இல்லாமல் ஏதோ ஒரு புது உறவுகளுடன் வாழ நேர்ந்தால் நம் உணர்வுகள் என்ன மாதிரி இருக்கும்…? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா…? நாம் நினைத்ததை சாதித்து காட்டலாம்… ஆனால் விதியை எப்படி மாற்ற முடியும்.
கால பயணம் செய்து ஒரு நிகழ்வை மாற்றினால் கண்டிப்பாக அது ஏதாவது ஒரு விபரீதத்தை கொடுக்கும்.
இப்போ சொல்லு பார்கவி இப்படி ஒரு ஆபத்தான விளையாட்டு தேவையா…??”
“அதான் ராஜுவும் நானும் இதை தூக்கி போட நினைத்தோம். அவன் ஏன் இதை பத்திரபடுத்தி வச்சிருந்தான்…?”
“அவரும் இதை தூக்கி போட தான் நினைச்சாராம்.. ஆனால் அடுத்த நாளே அவர் ஏதோ டூர் போயிட்டாறாம். திரும்பி வந்ததுக்கு அப்புறம் அப்படியே மறந்தும் போயிட்டாராம்.
இதை இன்னும் தூக்கி போடலயா..? எப்படி மறந்தேன்னு தெரியல. எனக்கு அவசர வேலை இருக்கு. நீயே தூக்கி போட்டுருன்னு சொன்னார். நான் தான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டூர்லாம்ன்னு வந்தேன்.
அப்புறம் சொல்லுங்க கீர்த்தனா. இதை எப்படி யூஸ் பண்ணுறது…?”
கீர்த்தனாவின் பார்வை தன் மேல் படுவதை கண்டும் காணாதது போல… தொடர்ந்து பேசினார்.
“ஏன் கேட்கிறேன்னா… சும்மா ஒரு ஆர்வம் தான். எப்படி இது ஒர்க் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலன்னா எனக்கு இருப்பே கொள்ளாது. எப்படியும் தூக்கி போட தானே போறேன்.
அவர் கிட்டேயே கேட்டேன். அவர் பிசியா இருக்கிறதுனால உன்கிட்ட கேட்டுக்கச் சொன்னார்”.
“ராஜுவே சொன்னானா…? நம்பமுடியலயே…”
“நான் என்ன பொய்யா சொல்லுறேன். இல்லன்னா இதை தூக்கிக்கிட்டு உன்கிட்ட ஏன் வர போறேன்”.
கீர்த்தனாவிற்கு விருப்பமில்லை. இருந்தும் ராஜசேகரே சொல்லியப்…பின்… எப்படி… மறுப்பது?
அவரை மேலும் யோசிக்கவிடாமல் பார்கவி தன் பேச்சு சாமர்த்தியத்தால் அவரை திசை திருப்பி வந்த காரியத்தை சாதித்துக் கொண்டார்.
குறிப்புகளுக்கான விளக்கங்கள், பரமபதம் வேலை செய்யும் நேரம், அதற்கு தேவையான எனர்ஜி எங்கிருந்து எப்போது கிடைக்கும், அந்த வண்ண தாயகற்கள் பயன் எல்லாம் இப்போது பார்கவியின் மூளையில் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டது.
“திரும்பவும் சொல்லுறேன் பார்கவி. இந்த கேம் விளையாடனும்ன்னு கனவுல கூட நினைச்சிறதா. இப்போ வீட்டுக்கு போகும் போதே தூக்கி போட்டுரு. புரியுதா…”
“கண்டிப்பா கீர்த்தனா”.
“ஹே.. கீர்த்தி குட்டி. இங்கே கொஞ்சம் வாடா..” தேவேந்திரன் தன் மனைவியை அழைக்கும் குரல் கேட்டது.
“பார்கவி கொஞ்சம் பொறு. அவர்கிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துர்றேன்”. கீர்த்தனாவின் தலை மறைந்ததும்
பார்கவியின் கண்கள் குருட்டு ஆசையில் பரமபத பெட்டியை வருடியது.
அங்கே அறையினுள்ளே,
“ஏய் கீர்த்தி டார்லிங்… இந்த சிகப்பு சரீல(saree) எவ்ளோ அழகா இருக்க தெரியுமா… உன்னை விட்டு பிரிஞ்சி இருக்கவே முடியல”.
கை வளைவில் மனைவியை அணைத்தபடி நின்று தேவேந்திரன் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
“ஹம்ச்… விடுங்க தேவா… என்னது இது.? பார்கவி வேற இருக்க. இப்ப
போய்… விடுங்க…”
“ஹே.. யார் இருந்தா எனக்கென்ன.. என் பொண்டாட்டி நான் கொஞ்சுவேன்.. போடி…”
“உங்ககிட்ட பேச முடியுமா… முதல என்னை விடுங்க. அவள் காத்துகிட்டு இருக்கிறா..”
“முஹும். ஒரு கிஸ் குடு. உன்னை விடுறேன்”. சொல்லியபடி இன்னும் இழுத்து நெருக்கமாய் அணைத்து தன் முகத்தில் முத்தத்திற்காக அழைப்பு விடுத்தார்.
குங்குமாய் சிவந்த முகத்தை மறைத்தப்படிக் கீர்த்தனா,
“விடுங்க என்னை. தேவா நான் சொல்றேன்ல. அப்புறம் தாரேன்”.
“நோ. ஐ வான்ட் நவ்”. அடம்பிடித்தார் அவர்.
“உங்களை…”
அலுத்துக்கொண்டாலும் வேறு வழி இல்லாததால்,
“ஹ்ம்ம்…இப்போதைக்கு ஒன்னே ஒன்னு தான்”. மெதுவாக எம்பி பட்டு இதழ்களால் கன்னத்தில் முத்தம் கொடுத்தவர், சட்டென அவரை தள்ளிவிட்டு அலங்காட்டி(பழிப்பு) விட்டு ஓடி விட்டார்.
அறையிலிருந்து சிவந்த முகமாக சிரித்தபடி வெளியே வந்த கீர்த்தனாவை பொறாமை கலந்த வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் பார்கவி. இவளுக்கு மட்டும் எப்படி எல்லாம் கிடைக்கிறது. ஆசை கணவர், தோள் கொடுக்க ஓடி வரும் நட்பு, நிறைவான வாழ்க்கை. எப்படி இவளுக்கு மட்டும் அமையலாம். இங்கே நான் கணவரின் அன்பிற்காக ஏங்கி கொண்டிருக்க இவள் கொஞ்சி குழாவுவது எங்கே…?
இவளால் தான் என்னால் என் கணவரிடத்தில் நெருங்க முடியவில்லை. இவள் மட்டும் என் கணவரது வாழ்வில் வராமல் இருந்திருந்தால்…. இருந்திருந்தால்….
சட்டென மின்னல் வெட்டியது அவரது மனதில். கண்கள் அந்த பரமபத பலகையை ஒரு வித வெறியுடன் பார்த்தது. உன்னால் முடியும் தானே…!!! எல்லாவற்றையும் என் மனம் விரும்பும்படி நடத்த கண்டிப்பாக இதன் உதவி எனக்கு இப்போது தேவை.
நான் விரும்பியது போல என் கணவர் வாழ்விலிருந்து கீர்த்தானவை நீக்கி விட்டால் …. கற்பனை பண்ணவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. புன்னகைத்துக் கொண்டார்.
“என்ன பார்கவி தனியா உக்காந்து எதை நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கிற…?!” தேநீர் கப்புடன் வந்தார் கீர்த்தனா.
“அதுவா கீர்த்தனா… இது ஒரு சாதாரண பலகை. ஆனால் இதுக்குள்ள எவ்ளோ சக்தி அடங்கி இருக்குது. அதை தான் நினைச்சேன். தானாக சிரிப்பு வந்துட்டு…”
“ஹ்ம்ம்… இந்த டீ எடுத்துக்கோ”.
“ம்ம்ம்….”
“ப்பாம்…..ப்பாம்….”
வெளியே பார்கவியை அழைத்து செல்ல வண்டி வந்ததற்கு அடையாளமாக ஹார்ன் சத்தம் கேட்டது.
“சரி கீர்த்தனா. அப்போ நான் கிளம்புறேன்”.
“ஹ்ம்ம்.. சரி”.
வெளியே வந்தவர் அப்போது தான் கவனித்தார் டிரைவர் வராமல் அங்கே அவர் அண்ணணது தோழன் நிற்பதை.
“யார் அது பார்கவி. புதுசா தெரியிராரு…?”
“அவரா.. என் அண்ணாவோட ஃபிரென்ட் மித்ரன். பிஸ்னெஸ் விஷயமா வந்திருக்கிறார். எங்க வீட்ல தான் தங்கியிருக்கிறார்”.
“ஓ.. சரி சரி…”
“அப்போ நான் கிளம்புறேன் கீர்த்தனா”.
“ஷ். ஷ்.. ஷ்… என்னது இது பார்கவி.. போகும் போ இப்படி அபசகுணமா கிளம்புறேன்னு சொல்ல கூடாது. போயிட்டு வர்றேன் அப்படின்னு தான் சொல்லணும். பத்திரமா போயிட்டு வா”.
“சரி . இனி திருத்திக்கிறேன்”. புன்னகை முகமாகவே பதில் அளித்தார்.
“அப்புறம் பார்கவி… சொல்லணும்னு தோணிச்சி. சொல்றேன். தப்பா எடுத்துக்காத…”
“ஹே.. ஏன் இப்படிலாம் பேசுற. உனக்கு இல்லாத உரிமையா…??”
“நம்ம கலாசாரத்துல பெண்கள்தான் கணவர் வீட்டுக்குப் போகிறோம். கணவர் வீடுங்கிறது வேற மாதிரி தான் இருக்கும். நிச்சயமா நம்ம அம்மா வீடு மாதிரி இருக்காது. பெண்கள் நாம அதுக்கேத்த மாதிரி மாற வேண்டி வரலாம். அதனால, நம்ம கணவர், அவருடைய குடும்பம், அவர் கூடப் பிறந்தவங்க, நட்பு வட்டம்ன்னு புகுந்த வீட்டின் பழக்க வழக்கங்களுக்கு ஏத்தபடி நம்மளை மாத்திக்கிறது தான் நல்ல வாழ்க்கைக்கு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட கால தாம்பத்தியத்துக்கும் இதுதான் சரியான வழி. நான் ஒன்றும் பெரிய அனுபவசாலி கிடையாது. ஆனாலும் எனக்கு இந்த கொஞ்ச நாள்ளிலயே தெரிஞ்சிக்க முடிஞ்சிது.
நீ பொறாமை படுற அளவுக்கு நான் ஒன்றும் ஒர்த் இல்லை பேபி. சோ உன்னை நீயே குழப்பிக்காத.
மனசு விட்டு பேசி ஒரு பிரச்சனையை தீர்க்கிறது ஒரு வகைன்னா… நம்மளோட மனசுக்கு நெருக்கமானவங்க கூட பழகி அவர்களோட செயல் மூலமா, அவர்கள் நம்ம மேலே வச்சியிருக்கிற அன்பை புரிஞ்சிக்கிறது ரெண்டாவது வகை.
கூர்ந்து கவனி. உன்னை சுத்தி என்னை நடக்குதுன்னு அமைதி…யா.. மூன்றாவது மனுஷியா இருந்து பாரு. அப்போ தான் உன்னோட குழப்பத்துக்கு பதில் கிடைக்கும்”.
“இதெல்லாம் இப்போ என்கிட்ட ஏன் சொல்லுற கீர்த்தனா…?!!” கண்டுகொண்டாலோ மனதை… ?! நெஞ்சம் படப்படத்தாலும் குரல் நடுங்காமல் கேட்டார்.
ஒன்றும் பேசாமல் நெருங்கி வந்து பார்கவியை அணைத்துக் கொண்டார். தோள் வளைவில் முகத்தை தாங்கிய படி,
“பதறாத பார்கவி. இதை பிடி. நீ மறந்து அங்கே சோபாவிலே வச்சிட்டு வந்துட்ட”. என்றபடி ஒரு பொருளை பிறர் கவனம் படாமல் அவரது கைப்பையில் திணித்தார்.
அது ஒரு காகிதம். பரமபதம் பற்றிய விளக்கங்களை பார்கவி எழுதி வைத்திருந்தார். கீர்த்தனாவிடம் பேசிய பின் அந்த பேப்பரை கைப்பையில் வைப்பதற்கு பதில் சோபாவிலே வைத்துவிட்டார். அதை கீர்த்தனா பார்த்து விட்டார். அதை தான் இப்போது பார்கவியிடம் கொடுத்தார்.
பின் அவர் கண்களை பார்த்து… நான் உன் மனதை தெரிந்து கொண்டேன் என்பது போல், ஒரு முறை கண் சிமிட்டி ‘ஆம்’ என்பது போல செய்கை செய்தார். பார்கவியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.
பார்கவியின் உள்ளம் நடுங்கியது. எப்படி இப்பெண்ணால் இலகுவாக இருக்க முடிகிறது. எல்லாம் தெரிந்தும்…??! அப்படியெனில் நான் தான் தவறாக எண்ணி கொண்டிருக்கிறேனா…??! இவள் மீது தவறில்லையா..?
கீர்த்தனாவோ மாறாத அதே புன்னகையுடன்…
“மனசுக்கு சந்தோஷமோ துக்கமோ.. தோள்தாங்க கணவன் கிட்டதான் போக தோன்றும். இது தான் பெண்களோட குணம். அந்த உரிமையை நான் என்னைக்கும் ‘தேவா’வை தவிர யாருக்கும் கொடுத்ததில்லை. என்னால உன்னோட மனசை புரிஞ்சிக்க முடியுது. கொஞ்சம் பொறுமையா யோசி. அப்போ நீயே புரிஞ்சிப்ப..”
ஒன்றும் பேசாமல் பார்கவியும் விடை பெற்றார்.
நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் நினைத்திருப்போம்… நமக்கு மட்டும் காலத்தை மாற்றும் திறன் இருந்திருந்தால்.. இதை இப்படி மாற்றியிருப்பேன். இதை நடக்க விடாமல் தடுத்திருப்பேன். இந்த நிகழ்வை அனுபவித்திருப்பேன். இதை இன்னும் கூடுதலாக, சிறப்பாக செய்திருப்பேன். இப்படி எத்தனையோ விருப்பங்களை மனம் சொல்லும். ஆனால் இவற்றை மாற்றுவதால் எல்லாம் வாழ்க்கை இனிமையானதாக மாறி விடுமா என்ன… ? ஒன்று போனால் இன்னொன்று…வரும் தானே.. இது தானே இயற்கையின் நியதி.
ஹைய்யோ! கையில் இருந்த ஒரு ரொட்டி துண்டும் போயிற்றே என்று மனிதன் புலம்பினால், அந்த காக்கைக்கு உணவு எங்கிருந்து வரும்? ஒன்றை நினைத்தால் இன்னொன்று நடக்குமா..???! ஒன்றை மாற்றினால் தொடர்ந்து பலவற்றை நாம் மாற்றி கொண்டே இருக்க வேண்டியது தான். அதனால் எதையும் மாற்ற முயலாமல், இருப்பதை இருக்கிறப்படியே ஏற்று, அதை கொண்டு முன்னேறும் வழியை பார்ப்பதே சிறந்தது. அது தான் நிலையான மகிழ்ச்சியை தரும்.
இதை எப்படி இந்த பார்கவிக்கு சொல்வது. சொன்னாலும் இப்போது ஏற்று கொள்ளும் மனநிலையில் பெண் இல்லை. அவள் கணவனிடம் மனம் விட்டு பேசியிருந்தால் இத்துணை தூரம் தவறாய் கற்பனை செய்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ராஜசேகரை பொறுத்தவரை மனைவிக்கு தேவையானதை பார்த்து பார்த்து தான் செய்கிறார். ஆனால் கீர்த்தனாவிடம் காட்டும் துள்ளல் மனைவியிடம் கொஞ்சம் குறைவு. அவள் தோழி. இவள் மனைவி. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதே. மனைவி மனைவி தான். தோழி தோழி தான். மனைவியின் இடத்தை தோழியால் ஒருபோதும் நிரப்ப முடியாது. அதுபோல குழந்தை மனம் கொண்ட நட்பிற்கு நிகராக எந்த உறவுமே ஈடு ஆகாது.
ராஜசேகரை பொறுத்தவரையில் அவர் நல்ல கணவர். தெரிந்தவர்களுக்கும் அப்படி தான் தெரியும். பார்கவியின் உள்மனதும் அதை தான் சொல்லும். ஆனாலும் ஒரு போட்டி. தன் கணவன் எப்படி தன்னிடம் காட்டும் அதே அன்பை வேறு ஒரு பெண்ணிடம் காட்டலாம். எனக்கு மட்டும் தான் அவரது முழுஅன்பும் வேண்டும். குழந்தை சொல்லுமே தன் தாய் தனக்கு மட்டும் தான் வேண்டும் என்று அதுபோல… இது பெரிய குற்றமில்லை. ஆனால் அதை பெரிய விஷயமாக எண்ணி ஒருவர் வாழ்வை அழிக்கும் நிலைக்கு சென்றால்… அது..?!
இப்போது அந்த நிலைக்கு தான் பார்கவியும் சென்று கொண்டிருக்கிறார்.
கீர்த்தனாவின் இலைமறை பேச்சு பார்கவியின் மனதை சாய்க்குமா..??
என்னை சாய்ப்பாயோ…?!

Advertisement