Advertisement

அத்தியாயம் 30
புன்னகை அழகு தான்
இல்லையென்று யார் சொன்னது?
ஆனால்
பெண் நகை அணிந்தால்
புது அழகு தானே!
அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான்.
காதில் சிவப்பும் பச்சையும் கற்கள் கலந்த பெரிய குடை ஜிமிக்கி அசைந்தாட , கழுத்திலே காசுமாலைகள் சரம் சரமாய் கோர்த்திருந்த செயினின் முடிவில் தொகைவிரித்த இரண்டு மயில்கள் நெஞ்சோடு நெஞ்சு முட்டிக் கொண்டிருக்க அதன் கால்களிலே ஊஞ்சல் போன்ற டிசைனில் குழல் ஊதும் கண்ணன் தோளில் ராதை தலை சாய்த்து நிற்பது போலவும், அவர்களை சுற்றி இதய வடிவத்தில் சிவப்பு வண்ண ரத்தின கற்கள் அலங்கரிக்க, தங்க குண்டு மணிகள் அதன் நுனியில் ஆடிய படியும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அவளது அழகை ரசித்து பார்த்தவன் அவளை விரல் பிடித்து எழுப்பி, “வா. அப்பா, பாட்டி எல்லோர்ட்டையும் போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம். கூடவே உனக்கு சில சர்ப்ரைஸ்ஸும் இருக்கு. எந்த காரணத்திற்காகவும் நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு துணையா நான் இருக்கேன். சரியா? வா” என்றபடி விரல் பிடித்து அழைத்து சென்றவனின் பின்னே ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல சென்றாள். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த அவர்கள்அங்கே நடு ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த பெரியவர்களை பார்த்ததும் ரவி புன்னகைத்தான் என்றால்  ஆராதனாவின் நெஞ்சுக்கூடோ பலத்த வேகத்துடன் துடிக்க ஆரம்பித்தது.
‘அய்யோ! அம்மா, அப்பா, வதனா இவர்கள் எல்லோரும் எங்கே இங்கே..? அதுவும் இந்நேரத்தில்? கண்டிப்பாக இவன் வேலையாக தான் இருக்கும். ராட்சஷன்! நினைத்ததை உடனே சாதிக்கும் ரகம். ச்..ச.. இவனிடம் மாட்டி கொண்டு என்ன பாடு பட போகிறேனோ?!’.
அங்கே ரவியின் அப்பா, பாட்டி, ஆராதனாவின் அம்மா, அப்பா, சகோதரி, இளங்கோ, அவர் மனைவி, மகள் என்று எல்லோரும் ஒன்றாக அந்த நீள்வடிவ சோபாவில் அமர்ந்து இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும் சுற்றி குடும்பமே அணிவகுத்து கும்மியடிக்க தயாராக இருப்பது போல தோன்றியது ஆராதனாவிற்கு. ‘இவன் எப்போது அம்மா அப்பாவிற்கு எல்லாம் தகவல் சொன்னான். என்ன சொல்லி வரவழைத்திருப்பான்’. பயத்தில் விரல்கள் நடுங்க பெண்ணவள் ரவியின் சட்டையை பிடித்துக் கொண்டாள். அவளது பதற்றத்தை அவள் முகம் பார்க்காமல் அச்சிறு தொடுகையிலேயே உணர்ந்தவன் அவளுக்கு கண்களாலே ஆறுதல் சொன்னான்.
“அப்புறம் சொல்லுப்பா. எங்க எல்லோரையும் காலையிலே இவ்ளோ சீக்கிரமா வர சொல்லியிருக்கிற. உங்களை பார்க்கும் போதே விஷயத்தை யூகிக்க முடியுது. இருந்தாலும் உங்க வாயால கேட்டுட்டா நல்லா இருக்கும். ம்ம்ம்.. சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று ஆருவிடம் பார்வையை பதித்த ராஜ சேகர வர்மா ரவியிடம் கேட்டு உரையாடலுக்கு தொடக்க புள்ளி வைத்தார்.
“அப்பா. நான் ஆராதனாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” எந்தவித அலங்கார வார்த்தைகளும் இன்றி பட்டென்று மனதில் இருந்ததை போட்டு உடைத்தான் ரவி.
“என்னடா சொல்லுற?”- ரவியின் அப்பா.
“எ..என்ன..” – இளங்கோ.
“அப்போ நீ நேகாவை விரும்பலையா?” இது பாட்டி.
“என்ன ஆரு இதெல்லாம்?” -கீர்த்தனா.
“கள்ளி. சொல்லவே இல்லை” – வதனா.
ஆள் ஆளுக்கு அவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்த ரவியும் ஆருவும் ஒருவருக்கு ஒருவர் கண்களால் தைரியம் கொடுத்து கொண்டு பேச தொடங்கினர்,
“அம்மா. நான் ரவியை விரும்புறேன். அவன் இல்லாம என்னால வாழ முடியாது. அவனை விரும்புற விஷயத்தை நேத்து தான் நானே புரிஞ்சிகிட்டேன். அதனால ஏன் உங்க கிட்ட சொல்லலன்னு கேட்காதீங்க”.
“ஆரு சொல்லுற மாதிரி நேத்து தான் அவளோட காதலை என்கிட்ட சொன்னா. சொன்னதும் நான் உங்க எல்லோர்கிட்டேயும் சொல்லணும்னு நினைச்சேன். அதான் எல்லோரையும் உடனே வர வச்சேன். அதுவும் இல்லாம உங்க எல்லோராட சம்மதமும் எங்களுக்கு ரொம்ப முக்கியம்” என்று ஆருவின் அப்பா அம்மாவை குறிப்பாக பார்த்து சொன்னான்.
“இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படிடா.. இப்போ நாங்க என்ன பண்ணனும்னு ஆசைப்படுற..?” என்றார் ராஜசேகர வர்மா.
“எனக்கு ஆராதனாவை கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்கிறேன்”.
‘அட.. இவன் என்ன இவ்வளவு பாஸ்டா இருக்கான். மேரேஜ் பத்தி எல்லார்ட்டையும் சொல்லுறான். நம்ம கிட்ட பெர்மிசன்.. சரி அது கூட வேண்டாம் ஒரு இனபர்மேஷனுக்காவது  சொல்லியிருக்கலாம்ல. சரியான பந்தய குதிரை. போடா தேஜா வூ’ மனதிற்குள் திட்டி கொண்டாள் ஆரு.
“அது சரி. பொண்ணை பெத்தவங்க கிட்ட முதல அனுமதி கேளு. எனக்கு என் பையன் கல்யாணம் யார் கூட நடந்தாலும் சந்தோசம் தான். இதுல வேற ஆரு கீர்த்தனா பொண்ணுன்னு சொல்லும் போது என்னால எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்” என்று அவர் சம்மதத்தை சொல்ல அடுத்து பாட்டியின் முகத்தை பார்த்தான் ரவி.
“பாட்டி. நீங்க நினைக்கிற மாதிரி நானும் நேகாவும் வெறுமனே நண்பர்கள் தான். அதை தாண்டி வேற எதுவும் இல்லை”.
“ம்ம்ம்ம். புரியுது. நான் உனக்கு வர போற மனைவிக்குன்னு கொடுத்த அந்த நகைகளை ஆரு போட்டிருக்கிறதை பார்க்கும் போதே உன் விருப்பம் தெரிஞ்சி போச்சி. இதுல நான் சொல்லுறதுக்கு எதுவுமில்லை. என் பேரனுக்கு அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணோட கல்யாணம் நடந்தா போதும்” என்று அவரும் அவர் சம்மதத்தை சொன்னார்.
இப்போது ஆருவின் பெற்றோர்கள் என்ன சொல்ல போகிறார்களோ? என்று அனைவரும் அவர்கள் முகத்தை ஒருவித கலக்கத்துடன் பார்க்க..
“ராஜு உன்னோட பையனுக்கு என்னோட பொண்ணை கொடுக்கிறதுக்கு முழுசம்மதம்” என்று கீர்த்தனா தன் முடிவை ரவியை போல பட்டென்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினார்.  “இவ்ளோ ஸ்பீடா இருக்கிற உன் பையன் கல்யாண தேதியையும் பிக்ஸ் பண்ணி வைக்காமையா இருந்திருப்பான். அதையும் சொல்ல சொல்லு. அப்புறம் தாலி முகூர்த்த புடவை எல்லாம் எடுத்தாச்சா.. இல்லை இனிமே தானா?” என்று நான் ஒன்றும் உன் வேகத்திற்கு சளைத்தவள் இல்லை என்று அவனை சீண்டினார்.
‘என்னது இது? விட்டால் இப்போதே தாலி கட்டி குடும்பம் நடத்த அனுப்பி விடுவாள் போல. பெண்ணை பெற்றவன் நான் இருக்கையில் இவள் இந்த ஆட்டம் ஆடுகிறாளே’ என்று மனதினுள் நொந்தப்படி தேவேந்திரன் சட்டென எழுந்து நின்று விட்டார். “கீர்த்தனா என்னது இது..? ஆராதனவோட அப்பா நான் இருக்கும் போது நீ மட்டும் தனியா எப்படி முடிவு எடுக்கலாம். உன்னோட ஸ்நேகிதன் மேலே உள்ள பாசத்துல உடனே சரின்னு சொல்லுற. ஹ்ம்ம்.. இது கொஞ்சம் கூட சரியில்லை. இது நம்ம பொண்ணோட லைப்”. ‘நம்ம’ என்ற வார்த்தையில் கூடுதல் அழுத்தம் கொடுத்து கீர்த்தானவை முறைத்தவர் ரவியிடம் திரும்பி,
“பாருங்க மிஸ்டர் ரவி. என்னோட பொண்ணை நான் எப்படி வளர்த்தேன்னு உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு ராத்திரியும் என்னோட தோளில் சாய்ந்துகிட்டு கதை கேட்டுகிட்டே தான் தூங்குவா. ஒருநாள் சொன்ன கதையை திரும்ப சொல்ல கூடாது. அதுக்காகவே டெய்லி நியூ ஸ்டோரியா கஷ்டப்பட்டு யோசிச்சு சொல்லுவேன். அப்படியும் சில நாள் தூங்காம அடம் பண்ணுவா. அப்போ நிலாவை காட்டி, நட்சத்திரதிற்கு பேர் வச்சி விளையாடி அவளை  கொஞ்சி கெஞ்சி தூங்க வைப்பேன். இப்படியெல்லாம் பொறுமையா ஹாண்டில் பண்ண உங்களால முடியுமா?
அவளுக்கு பிடிச்ச சாப்பாடுன்னா நான் தான் ஊட்டி விடணும்ன்னு அடம்பிடிப்பா. கூடவே என்னோட விரலையும் கடுச்சி வைப்பா. வலியில உயிர் போனாலும் சிரிச்சிகிட்டே சாப்பாடு ஊட்டுவேன். உங்களால அது முடியுமா?
என் பொண்ணு தூக்கத்துல குங்-பூ, கராத்தே எல்லாம் பண்ணுவா. அதெல்லாம் அனுசரிச்சி உங்களால் இருக்க முடியுமா?
இப்படி ஒவ்வொன்றுக்கும் அவள் நான் இல்லாம இருந்தது இல்லை”.
‘யாரு ஆருவா? இல்லை நீங்களா? உங்க பொண்ணு இல்லமா நீங்க இருந்துகிட மாட்டேன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு சும்மா ரீல் விடாதீங்க.’ என்று ஒரு லுக் விட்டார் கீர்த்தனா.
சிறகு முளைத்த தேவதையிவள்
சிம்பிள் சிரிப்பில் மயக்கியவள் இவள்
சில்வண்டாய் ரீங்கரித்தாலும் 
சில்மிஷம் செய்து அடிமையாக்குபவள் இவள்..
இவள் என் மகள்..
சேட்டைகள் குறும்புகள்
குசும்புகள் குளறுபடிகள்
தொல்லைகள் எதுவாயினும்
என்னுள் மகிழ்ச்சியை பரப்பியவள் இவள்..
இவள் என் செல்ல மகள்..
இவளின்றி நொடி பொழுதும் கடந்திடுமோ என் வாழ்வு..?!
தந்தை பாசத்தில் மனதில் வண்ண கவிதைகள் பூத்தது அவருள்.
“இப்படி ஏகப்பட்டது இருக்குது மாப்பிளை.  ஆரு என்னோட உயிர் மாப்பிளை. அவளோட ஒவ்வொரு தேவையையும் பார்த்து பார்த்து செஞ்சவன் நான். இப்போ பொசுக்குன்னு எங்கிருந்தோ வந்து என் பொண்ணை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டு போறேன்னு சொன்னா.. என்னால எப்படி ஏத்துக்க முடியும் மாப்பிளை”.  பேசிக் கொண்டே வந்தவர் தன்னையும் அறியாமல் ரவியை ‘மாப்பிளை’ முறை வைத்து அழைத்து விட்டார். ” உங்களால் இதெல்லாம் முடியுமான்னு முதல சொல்லுங்க மாப்பிளை” என்று ஆரு பண்ணும் சில செயல்களை சொல்லி ஆருவை கேலி பண்ணியவர் மறைமுகமாக தன் சம்மதத்தை ‘மாப்பிளை’ என்ற அழைப்பிலேயே எல்லோருக்கும் உணர்த்தி விட அங்கே சிரிப்பலை பொங்கியது.
‘ஷ் ஷ் ஷ்… ஷப்பா.. கொஞ்ச நேரத்துல டெரர் பீஸ் ஆகிட்டார். நல்ல வேளை இது வெறும் எமோஷனல் சீன் தான்’ மனதுக்குள் ஆசுவாசபட்டுக் கொண்டான் ரவி.
ஆருவோ தன் அப்பா இப்படி எல்லோர் முன்னும் தன்னை ‘அழகான இம்சை மகள்’ பட்டத்தை கொடுத்து மாட்டி விடுவார் என்று எதிர்பாராததால் அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்.
மகள்கள் செய்யும் சேட்டைகள் எந்த ஒரு ஆண்மகனையும் விரும்பி கோமாளி வேஷம் போடவைக்கும் மாயதந்திரம் கொண்டவை.. என்பதை உணர்ந்தவர்களுக்கு மகள்களின் பிரிவு உணர்ச்சி மிகுந்தவையாக தான் இருக்கும்.
“மாமா.. உங்க பொண்ணுக்கு தூக்கம் வந்தா இதோ இப்படி தூக்கி வச்சி கொஞ்சிப்பேன்” என்று அவர் சொன்னதை இவன் செயல்படுத்தினான். ரவியின் கைகளில் ஆரு குழந்தையாக தவிழ, எல்லோர் முன்னும் இப்படி தன்னை  பொசுக்கென்று தூக்கிய சங்கடத்தில் ஆரு நெழிய, சுற்றி இருந்தோர் இந்த அதிரடியை கண்டு ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
“அப்புறம் என்ன சொன்னீங்க மாமா? சாப்பாடு தானே.. என் சாப்பாடையும் சேர்த்து ஊட்டி விட்டுட்டா போச்சி. ஒரு அப்பாவா மட்டும் இல்லமா தாயுமானவனா என்னால் சந்தோசமாகவே இதெல்லாம் செய்ய முடியும். அவள் குங்-பூ பண்ணாலும் சரி கராத்தே ஷாட் அடிச்சாலும் சரி உங்க பொண்ணு கூட காலம் முழுக்கா மல்லு கட்ட நான் தயார் மாமா”. தகப்பனாய் அவருள் எழுந்த ஐயத்தை ஒன்றுமே இல்லாதது போல மாற்றி விட்டான். அவனது செயலில் மனம் பூரித்து போனார் தேவேந்திரன். என் மகளை சந்தோசமாய் இவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை பிறந்தது அவருள்.
அதன் பின் அங்கே எல்லோரும் ஒரு மனதாக திருமண பேச்சு வார்த்தையில் இறங்கினர். வதனாவிற்கு முடித்த பின் தான் ஆருவிற்கு திருமணம் என்று ஒரு தாயாக கீர்த்தனா சொல்லிவிட வதனாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் பேச்சு எழும்பியது.
‘ஹய்யையையோ.. இப்படி என்னை மாட்டி விட்டுட்டாளே கடன்காரி ஆரு’ மனதுக்குள் பொறுமிய படி ஆருவை கண்களாலே எரித்தாள் வதனா.
நிலைமையை புரிந்து கொண்டு ஆருவே வதனாவின் காதல் விஷயத்தை சொன்னாள். முதலில் திகைத்த கீர்த்தனாவும் தேவேந்திரனும் பின் ராமின் நல்ல குணங்கள் தெரிந்ததால் ஒத்துக் கொண்டனர். அது மட்டுமில்லாமல் ஒரு பெண்ணாவது அவர்கள் பக்கத்திலே கண்முன்னே இருப்பாளே, அது அவர்களுக்கு திருப்தியாய்பட  வதனா ராமின் காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தனர்.
எல்லோரும் அவர் அவர் போக்கில் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க ரவிக்கு போன் கால் ஒன்று வரவும் தொலைபேசியுடன் அவன் நகர்ந்து செல்லவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆரு  தன்னை நோக்கி வந்த இளங்கோவை கண்டதும் அவளது கண்கள் வியப்பில் விரிந்தது. வந்தவர் நெகிழ்ச்சியாக ஆருவின் கைகளை பிடித்துக் கொண்டு “அம்மாடி ஆராதனா! உனக்கு ஒன்றும் ஆகலையே? நான் உன்னை எங்கேயெல்லாமோ தேடுனேன். இன்னும் என்னோட ஆள்கள் தேடிக்கிட்டு தான் இருக்கிறாங்க. நீ நல்ல படியா இருக்கிறதை பார்க்கும் போது தான் நிம்மதியா இருக்கு. எப்படிமா இதெல்லாம் நடந்து? என்னால தான நீ மலையிலிருந்து விழுந்த.. நான் மட்டும் உன்னை நேற்று கடத்தாம இ..இ..ருந்திரு..ந்..தா..” குரல் தழு தழுக்க பேசியவர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆருவிற்கு தர்ம சங்கடமாய் போய் விட்டது.
“ஷ்.. ஷ்.. விடுங்க அங்கில். உங்கள் கண்ணு முன்னாடி தானே நிக்கிறேன்.எனக்கு தான் ஒன்னும் ஆகலையே. எதுக்கு உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிறீங்க?! ஐ அம் ஆல்ரைட். எல்லாம் நல்லத்துக்குன்னு நினைச்சிக்கோங்க. ஆக்சுவலா நேத்து நான் கால் தடுக்கி விழுந்ததுனால தான் ரவிக்கிட்ட வந்து சேர முடிஞ்சி. என்னோட காதலையும் புரிஞ்சிக்க முடிஞ்சி. கூடவே சில அற்புதங்களையும் தான். அதற்காக நான் தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும். அதை விட்டுட்டு நீங்க என்னாடான.. முதல கண்ணை துடைங்க அங்கில். யாராச்சும் பார்க்க போறாங்க”.
“நீ மறுபடியும் மறுபடியும் கீர்த்தனாவோட பொண்ணுன்னு ப்ரூவ் பண்ணுறமா. நான் உனக்கு கெடுதல் பண்ண நினைச்சிருந்தும் நீ என்னை மனுஷனா மாத்தின. உன்னோட உயிருக்கே ஆபத்து வர இருந்தும் நீ காட்டி கொடுக்காமா எனக்கு ஆறுதல் சொல்லுற. இப்படி ஒரு அன்பான பொண்ணை பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு”.
“இதையே எத்தனை தரம் தான் சொல்லுவீங்க அங்கில். விடுங்க. அப்புறம் உங்க பேரு மித்திரன்தானே பின்னே ரவி மத்தவங்க இளங்கோன்னு சொல்லுறது எப்படி?”.
“அதுவா.. என்னோட முழுப்பெயர் இளங்கோ மித்திரன். ரவிக்கு இளங்கோ. மற்ற எல்லோருக்கும் மித்திரன். அதான் உனக்கு தெரியல”.
“ஓ. அப்படி போகுதா லாஜிக். சரி தான். அப்புறம் அங்கில் இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள  சீக்ரெட். தப்பி தவறி கூட யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். தேவையில்லாம யாரும் மனவேதனை படறதுல எனக்கு இஷ்டம் இல்லை” கறாராய் சொன்னாள் ஆராதனா.
“உஉஉன்னோட இந்த மனசு வேற யாருக்கும் உண்மையிலேயே வராது ஆராதனா. உன் பெயருக்கு ஏற்றப்படி நீ ஆராதிக்க பிறந்தவ தான்மா”.
“ஆராதிக்க பிறந்தவ மட்டும் இல்லைடா காதலால் எல்லோரையும் சேர்த்து வச்சி பிரபஞ்சத்தையே ஆள பிறந்தவடா இந்த ஆராதனா” என்றபடி இவர்கள் பேச்சினூடே உள்ளே நுழைந்தார் பாட்டி.
“நீங்க சொன்னா சரி தான்” இளங்கோமித்திரனும் ஆமோதிக்க ஆருவிற்கு சிரிப்பாக வந்தது. ஆள் ஆளுக்கு அவளை தலையில் தூக்கி வைத்து சுற்றாத குறையாக புகழ்ந்ததில் வேடிக்கையாக இருந்தது.
“எதுவுமே காரண காரியமில்லாமல் இந்த உலகத்துல நடக்காதுமா. அது அதுக்குன்னு நேரம் வரும்போது எல்லாம் சரியா நடக்கும். அது மாதிரி தான் நீயும் என்னோட பேரன் வாழ்க்கையில வந்தது. உலகத்துல எத்தனையோ பேர் இருந்தும் நீ தான் இந்த வீட்டுக்குன்னு இருக்குது பார்த்தியா? அது தான் விதி. உன்னோட கள்ளங்கபடமில்லா இந்த அன்பு தான் உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கு. உனக்குள்ள இருக்கிற இந்த அன்பு இந்த உலகத்தை மட்டுமில்லை பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.
நான் ஏன் இப்படி சொல்லுறேன்னு நீயே ஒரு நாள் புரிஞ்சிப்ப. அப்போ உனக்கே எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். ஹ்ம்ம்.. எதையோ சொல்ல வந்து ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கேன் பாரு. இந்தாம்மா. இதை என்னோட பரிசா வச்சிக்கோ” என்று ஒரு நகை பெட்டியை அவள் கையில் கொடுத்தார்.
அது ஒரு மூன்றடுக்கு மெல்லிய கழுத்து சங்கிலி. முதலடுக்கில் வட்ட வடிவ பிரெமுக்குள் நீல நிறத்திலான கருவிழி மிதந்த படி இருந்தது. இரண்டாவது அடுக்கில் பிறை நிலாவும் நட்சத்திரமும் கோர்த்திருக்க நடுவில் வெள்ளை நிற கற்கள் பதித்த சிலுவை அசைந்தாடியபடி இருந்தது. மூன்றாவது அடுக்கில் ஒற்றை கருப்பு நிற இறகு ஒன்று கண் சிமிட்டியபடி இருந்தது. பார்ப்பதற்க்கே அந்த செயின் வித்தியாசமாக இருந்தது.
ஆராதனாவின் விரல்கள் தானாக அந்த சங்கிலியை தொட்டு தடவியது. உடலில் ஒருவித சிலிர்ப்பு பரவி அடங்கியது. பெண்ணவள் எதையோ பெயர் சொல்ல தெரியாத பரவச நிலையை உணர்ந்தாள்.
அப்போது அங்கு வந்த ரவி வர்மா அவள் தோளோடு அணைத்து எல்லோர் மீதும் பார்வையை பதித்து உதிர்த்தான் அந்த மங்களகரமான காதல் வார்த்தையை. “இப்பவே எங்களோட எங்கேஜ்மெண்ட் வச்சிக்கலாம்னு இருக்கிறேன். இப்போ சிம்பில்லா ரிங் எக்ஸ்சேஞ் பண்ணி முடிச்சிக்கலாம். ஏன்னா இன்னும் ஒரு வாரத்துல எனக்கும் ஆராதனாவுக்கும் மேரஜ்”.
‘என்னது..??’ விழிகள் விரிய அதிர்ந்தாள் ஆராதனா. அனைவரும் அவன் சொன்ன செய்தியில் ஸ்தம்பித்து இருக்க பாட்டி கேட்ட அடுத்த கேள்வியில் நிஜத்திற்கு வந்தனர். “இவ்ளோ சீக்கிரமா வைக்க வேண்டி அவசியம் என்ன ரவி? கொஞ்சம் பொறுமையா பண்ணலாமே. பொண்ணு வீட்டு சைடும் நாம் பார்க்கணுமில்ல”.
“நோ பாட்டி. என்னால ஆருவை இதுக்கு மேல தனியா விட முடியாது. எனக்கு ஆரு என் கூடவே இருக்கணும். அதோட நெஸ்ட் மன்ந்த் எனக்கு பிஸ்னெஸ் விஷயமா அலைய வேண்டி இருக்கும். சோ இப்போ வச்சா தான் வசதி. கல்யாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் நான் அரேஞ் பண்ணிக்கிறேன். நீங்க யாரும் எதுக்காகவும் கவலை பட அவசியமில்ல”.
கீர்த்தனா ஒரு தாயக மற்ற சீர்வரிசைகள், நகை என மகள்களுக்கு செய்ய வேண்டியதை நினைத்து கலங்கி நிற்க அவரது தயக்கத்தை உணர்ந்து கொண்டவனாக, “ஓ ஆன்ட்டி. நீங்க எனக்கு ஆராதனாவை மட்டும் தந்தா போதும். வேற எதுவும் தேவையில்லை. அது மாதிரி வதனா கல்யாணத்தை பற்றியும் கவலைப்பட வேண்டாம். ராம் கிட்ட நான் பேசிட்டேன். அவனுக்கு எல்லாம் ஓ.கே தான். சோ நீங்க ரிலாக்ஸா இருங்க”.
‘இப்படி ஒரு சிறந்த மருமகன் யாருக்கு கிடைக்கும். ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடு. கல்யாண வேலை என்று எதுவும் இல்லாமல் பார்த்து பார்த்து செய்ய மருமகனே மகனாக மாறினால் யாரால் தான் மறுக்க முடியும்?’.
இப்படி யாருக்கும் மறுப்பு தெரிவிக்க எந்த காரணமும் கொடுக்காமல் அடாவடியாக நின்று அனைவரையும் சம்மதிக்க வைத்து விட்டான் அந்த மாயக்காரன் ரவி வர்மா. ஆராதனாவின் விரலில் நிச்சய மோதிரத்தை அணிவித்து பாதி திருமணத்தை முடித்துவிட்டான். எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் பொதுவாக பேசிவிட்டு அவரவர் அறைகளில் தஞ்சம் புகுந்து கொள்ள ஆராதனா தன் கைகளில் அவன் அணிவித்த அந்த மோதிரத்தையே பார்த்து கொண்டிருந்தாள். அது பொதுவாக அணியும் மோதிரம் போல பெயர் பொரித்தோ அல்லது வைரம் பதித்தோ இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. மனித இதயம் துடிப்பதற்கு ஆயத்தமாக இருப்பது போல செதுக்கப் பட்டிருந்தது. ‘இது அவனது இதயமாம். என் கையில் அவன் சிறைப்பட்டிருக்கிறானாம்’ தனிமையில் அவன் சொன்ன விளக்கத்தை நினைத்தவளுக்கு சிரிப்பாக வந்தது.
“சரியான போக்கிரிடா நீ” அவனுடன் பேசுவதாக எண்ணி கொண்டு அந்த மோதிரத்துடன் பேசிக் கொண்டிருந்தவள் காலை எதுவோ குடைவது போல இருந்தது. குனிந்து பார்த்தவள் கருவிழிகள் இரண்டும் விரிந்து ஒளிர்ந்தது.

Advertisement