Advertisement

அத்தியாயம் 29
ஹச் என்ற தும்மலில்
துதிக்கையை ஆட்டி
கும்மியடிக்க வைத்தாளே
பருவப் பெண்ணை
தனக்குள்ளே வைத்திருந்த
கலை ரகசியத்தால்!
“ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா” பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினாள் ஆராதனா.
“ம்ஹும். நான் சொன்னா சொன்னது தான். இப்பவே செய்யுற” விடாப்பிடியாக சண்டித்தனம் செய்தான் ரவி.
“டேய். எனக்கு உண்மையிலேயே எப்படி கட்டுறதுன்னு தெரியாதுடா”.
“மூச். மறுபேச்சு பேச கூடாது. ம்ம்ம். சீக்கிரம் போய் ரெடி ஆகு. கம் ஆன். குயிக். நோ மோர் ஆர்குமெண்ட்ஸ்”.
இருந்தும் ‘காச் மூச்’ என்று கத்தியவள் வேறு வழியின்றி கட்டிலில் கிடந்த பைகளை எடுத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்கு சென்றாள்.
தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆராதனாவை அறிமுகப்படுத்த விரும்பினான் ரவி. அதுவும் அன்றே. அதற்கு தான் அவளை புடவை கட்ட சொல்லி கேட்டுக் கொண்டிருந்தான். அவளோ எனக்கு சேலை வசதியில்லை, அதுவுமில்லாமல் சேலை கட்ட தெரியாது என்று ஏதேதோ சொல்லி சமாளித்து பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகாமல் கோபத்துடன் ரவி கொடுத்த ஆடைகள் நிரம்பிய பைகளை எடுத்துக் கொண்டு உடை மாற்றச் சென்றாள்.
வேண்டா வெறுப்பாக அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தவள் திகைத்துப் போனாள். ஆச்சரியத்தில் அதை அப்படியே தூக்கி கொண்டு ரவியிடம் ஓடினாள்.
“ஹேய்..இ..இதெல்லாம் எ.. எப்படிடா..?” வேகமாக ஓடி வந்ததில் மூச்சிறைக்க சுவாசத்திற்க்கு தடுமாறியபடியே வியப்புடன் அவனிடம் கேட்டாள்.
“என்னது எப்படி?” இவள் என்ன கேட்கிறாள் என்று ஒன்றும் புரியாமல் புருவம் உயர்த்தி அவளிடமே மீண்டும் வினா தொடுத்தான்.
“எனக்கு சாரீ கட்ட தெரியாதுன்னு உனக்கு முன்னவே தெரியுமா? ஹப்பாடா பாவாடை, ரெடிமேட் சாரீ..” என்று தன் கைகளில் இருந்தவற்றை சுட்டி காட்டியவள், “உனக்கு எப்படி பொண்ணுங்க ட்ரஸ் பத்தியெல்லாம் தெரியும்?” ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.
“ஏய். லூசு பொண்ணு” என்று செல்லமாய் சலித்தப்படி அவளது முன்நெற்றியில் விரல்களை சேர்த்து வைத்து தட்டியவன், “நீ தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் உன்னோட விருப்பு வெறுப்பு அது இதுன்னு எல்லாம் ஆளுக்கு அத்துப்படி”.
“உனக்கு சாரீ கட்ட கஷ்டமா இருக்கும்னு தான் இந்த ஸ்கர்ட் வாங்குனேன். எவ்ளோ நேரம் வேணும்னாலும் நீ சாரில இருக்கலாம். இந்த ஸ்கர்ட் உனக்கு ரொம்ப கம்பர்ட்டபுலா இருக்கும். அதோட நீ எப்படி கட்டினாலும் உனக்கு சாரீல நல்ல வடிவத்தை இந்த ஸ்கர்ட் கொடுக்கும். அல்சோ வாஷ்ரூம் போகணும்ன்னா இதோ இந்த ஸ்கர்ட் அடி பக்கம் ரெண்டு சைடுலயும் இருக்கிற இந்த ‘யூ’ வடிவத்தில் இருக்கிற எலெஸ்டிக் கயிறை தூக்கி உன்னோட ரெண்டு பக்கம் சோல்டர்லயும் ஸ்கூல் பாக் போடுற மாதிரி போட்டுக்கிட்டு சுலபமா டாய்லெட் போகலாம். அதோட சாரீ கசங்கிடுமோ மடிப்பு கலைஞ்சிடுமோ அப்படின்னு எந்த ஒரு டென்ஷனும் வேண்டாம். இது ஒரு பேக் மாதிரி சாரீ மடிப்புகளை கலையாம வச்சிக்கும்.
அப்புறம் இந்த ரெடிமேட் சாரீல முந்தானை மடிப்பு, கொசுவம் எல்லாம் எடுத்து அழகா அவங்களே தைத்து வைத்திருப்பாங்க. உன்னோட சைஸ்க்கு ஏற்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்க ஹுக் எல்லாம் இருக்கும். ஜஸ்ட் ஒரு டவலை கட்டிக்கிற மாதிரி ஒரு சுத்து சுத்துனா போதும். எப்படி அய்யாவோட செலக்க்ஷன்? அடிச்சி தூள் கிளப்புதுல..” சொல்லியபடி காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
ஆராதனாவிற்கு அவனது அளவுக்கு அதிகமான அக்கறையில் பேச்சே எழும்பவில்லை. ஓர் இரவுக்குள் இவன் எப்படி எனக்காக பார்த்து பார்த்து வாங்கியிருக்கிறான். அதுவும் எனக்கு  பொருந்துகிற மாதிரி! எனக்கு எதிலும் அசௌவுகரியம் ஏற்பட்டு விட கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருக்கிறான். அப்படியென்றால் இவன் எவ்வளவு தூரம் என் மேல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு துணை”. சந்தோஷ மிகுதியில் அவனை இறுக்க அணைத்து விடுபட்டாள் பெண்.
“ரொம்ப பெருமையா இருக்குதுடா. பொண்ணுங்கனாலே உணர்ச்சி இல்லாத ஜடம்ன்னு நினைக்கிறவங்க மத்தியில நீ எனக்காக பார்த்து பார்த்து செய்யுறப்போ எனக்கு அவ்ளோ ஹாப்பியா இருக்குது”.
“ஹேய். இதுக்கே அசந்துட்டா எப்படி. இது வெறும் ட்ரெய்லர் தான்மா. இனிமே தான பார்க்க போற இந்த மாமனோட ஆட்டத்தை. ம்ம்ம். போ சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா பார்க்கலாம்”.
” சரி போறேன். லாஸ்ட்டா ஒரே ஒரு கொஸ்டின் கேட்டுக்கவா?”.
“இன்னுமாடி இருக்கு உன் கொஸ்டின்? ஹப்ப்பா.. சாமி.. ஆனா இதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து பின்னாடி நீ நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் செஞ்சி தான் ஆகணும். ம்ம்ம்.. சொல்லு. என்ன கேட்கணும்”.
‘அதென்ன பதில் செஞ்சு தான் ஆகணும்ன்னு சொல்லுறான். பதில் சொல்லனும்ன்னு தானே சொல்லனும்’. மனதின் சிந்தனையை ஒதுக்கியவள் அவன் முகம் பார்த்து கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
“அன்றைக்கு பீச்ல என்னை மீட் பண்ணிட்டி உன்னோட வீட்டுக்கு போன அப்புறம் எதுக்காக அந்த ராத்திரி நேரத்துல என்னை காப்பாற்ற வந்த? எனக்கு கஷ்டம்னு தெரிஞ்சி வந்தியா இல்லை வேற எதுக்காக வந்த?”.
“அதுவா.. அன்றைக்கு தான் நான் என்னோட பாட்டியை முதன்முதலா பார்த்தேன். பார்த்த உடனே எனக்கு அவங்க மேலே ஒரு வித லவ் பீல் ஆச்சி. அது மட்டுமில்லமா அவங்களோட பெயரும் என்னோட அம்மாவோடதும் ஒன்று தான். இது தான் பார்கவி பாட்டின்னு  அப்பா சொன்னதும் எனக்கு அவங்க என்னோட அம்மாவா தான் தெரிஞ்சாங்க . ஏதோ சொல்ல முடியாத பந்தம் எனக்கும் அவங்களுக்கும் இருக்கிற மாதிரி தோணுச்சி. அப்போ இருந்து இப்போ வரை அப்படி தான் இருக்கு அந்த பீல்”.
“போதும்.. போதும்.. எல்லா பசங்களும் அம்மா புராணம் பாடுவாங்கான்னா நீ அம்மா பெயரில இருக்கிற ஓல்ட் லேடியையும் பற்றி புராணம் பேசுற. சரி விடு. எப்போ தான் அந்த கற்களை மூலமா என்னை கண்டுபிடிச்ச. அதை சொல்லு”.
“அந்த கற்கள் என்னோட கட்டிலின் ஓரத்தில் கட்டி வச்சிருந்தாங்க. அது ஏதோ சாமி கயிறுன்னு நினைச்சி யாரும் தூக்கி போடல. அதனால தான் அந்த கயிறு இவ்ளோ நாள் ஆனா அப்புறமும் என் கூடவே இருந்திருக்கு. அந்த கற்கள்களுக்கு அது தான் பதுகாப்புன்னு ஒரு வேளை எங்க அம்மா நினைச்சிருக்கலாம். பாட்டி எனக்கு கதை சொல்லி தூங்க வைச்சிட்டு இருக்கும் போது தான் இந்த கற்களை பாட்டி கண்டுபிடிச்சாங்க. அதை பற்றி எனக்கு எதுவும் தெரியலன்னு சொன்னேன். அப்போ தான் பாட்டி இந்த கற்கள் மனசுக்கு பிடிச்சவங்களை மீட் பண்ண வைக்கும்ன்னு சொன்னாங்க.
உன் கூடவே வைச்சிக்கோ. சாமிக்கிட்ட இருக்கிற உங்க அம்மா உனக்கான காத்துகிட்டு இருக்கிற உன்னோட தேவதையை காட்டுவான்னு சொன்னாங்க.
அவங்க போன அப்புறம் நான் அதை யூஸ் பண்ணி பார்த்தேன். யாரை மீட் பண்ண.. அம்மாவா நீயான்னு தோணிச்சி.. அம்மா தான் சாமிக்கிட்ட பத்திரமா இருக்கிறாங்களே. சோ எனக்கு என்னோட தேவதை.. அதாவது குட்டி ஆராதனாவை பார்க்கணும்னு தோணிச்சி. அந்த வயசுல என்னோட எண்ணத்துல நிச்சயம் காதல் இல்லை. அந்த ராத்திரி நேரத்து பங்க்சனில் நீ ராதை மாதிரி காதலை கண்ணுல தேக்கி வச்சிக்கிட்டு கண்ணணை எண்ணி டான்ஸ் ஆடுனதை பார்த்த அப்புறம் என்னோட நெஞ்சுல காதலை தவிர வேறு எதுவுமே இல்லை”.
அன்று பார்த்ததும்
வந்தது இஷ்டம் என்றால்
இன்று பிடித்த உன்மேல்
வந்தது முரட்டு இஷ்டமடி பெண்ணே!
“ஓ. அப்படின்னா உன்னோட பாட்டி தான் கண்டுபிடிச்சங்களா?! அது சரி அவங்களுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?”
“அவங்களுக்கு எப்படி தெரியும்? சும்மா ஆறுதளுக்காக அப்படி சொல்லியிருப்பாங்க. ஏன்னா நிலா ஒளியும் மழை தண்ணியும் இதுக்கு வேணும்ன்னு நான் தானே கண்டுபிடிச்சேன். அன்றைக்கு நைட் நான் அதை என்னோட வீட்டு பால்கனியில் இருந்து தான் ட்ரை பண்ணி பார்த்தேன். அப்போ பார்த்து மழை சாரல் அடிச்சி. நிலாவும் வந்துச்சி. சோ அய்யா அப்படியே ட்ராவல் பண்ணி வந்து உன்னை பார்த்தா.. அந்த குடிகார பயல் உ..ன்..னை… எனக்கு வந்த கோபத்துல நல்லா வெளுத்து வாங்கிட்டேன். என் வீட்டுக்கு திரும்ப வந்து நிறைய தடவ யூஸ் பண்ணி பார்த்து தான் இந்த மெத்தட் கண்டுபிடிச்சேன். நிலாவும் மழையும் சேர்ந்து தான் இதை ஒர்க் பண்ண வைக்குதுன்னு”.
மேலும் எதையோ கேட்க வாய் திறந்தவள் இதழின் மீது விரல்களை வைத்து மூடியவன், “மூச்.. இதுக்கு மேலே ஒரு கேள்வியும் கிடையாது. சீக்கிரம் போய் கிளம்புற. கோ கோ”.
அவளும் அவனின் அவசியம் புரிந்து எதுவும் பேசாமல் அந்த பைகளை ஏந்தியபடி உள்ளே சென்றாள்.
################
ஆனியன் ஸ்கின் கலரில் இளரோஜா நிற பார்டர் வைத்திருந்த அந்த புடவைக்கு ஏற்றபடி மிதமான வேலைப்பாடுகள் கொண்ட டார்க் பிங்க் கலர் பிளவுஸ் அவளுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. தேவலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த ரதியாட்டம் ஜொலித்தாள் ஆராதனா. அவளது அழகில் ஒருநொடி இமைக்க மறந்த ஆண்மகன் ரவி, மெல்ல நடந்து சென்று அவள் விரல் பிடித்து அழைத்து அங்கிருந்த மரஊஞ்சலில் அமர வைத்தான்.
அவள் கையில் ஒரு பெட்டியை கொடுத்தான். அது பார்ப்பதற்கு ராஜஸ்தானி வேலைப்பாடுகள் கொண்டவையாகவும் பெட்டியின் முகப்பு பக்கத்தில் வெள்ளை நிற யானை ஒன்று அதன் துதிக்கையை உயர்த்தியபடியும் அதனை சுற்றிலும் பூக்களும் நட்சத்திரங்களும் அலங்கரித்து கொண்டிருந்தன. அதனை அந்த மர ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஆராதனாவின் கைகளில் கொடுத்தவன் அவளருகேயே இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டான். கண்களாலேயே அந்த மரப்பெட்டியை திறந்து பார்க்கும்படி சொன்னவனின் பார்வைக்கு கட்டுப்பட்டு மங்கையவளும் அதை திறக்க முயற்சித்தாள்.
ஆனால் என்ன முயன்றும் அவளால் அதன் திறக்கும் பக்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. அவள் அந்த பெட்டியுடன் போராடும் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அக்கள்ளன். ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படவே அவள் அந்த பெட்டியை விட்டு விட்டு அருகேயிருந்த ரவியை நிமிர்ந்து பார்த்தாள். அவன் ஒன்றும் தெரியாதது போல முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டிருந்த போதும் அவன் கண்களில் ஒழிந்திருந்த கள்ளச் சிரிப்பை கண்டு கொண்டாள் அவன் காதலி.
“ஏய். என்னது இது. என்னை என்னனு நினைச்சிக்கிட்டு விளையாடுறா? ஹ்ம்ம்..? உன்னோட தொல்லை ஓவரா போச்சி. ஹம்ச். முதல இதை எப்படி ஓபன் பண்ணுறதுன்னு சொல்லு” என்று கையில் இருந்த பெட்டியை காட்டியபடி கேட்டாள்.
“பெரிய பெயின்டிங்ஸ் எல்லாம் அசல்ட்டா வரையிற. ஒரு சின்ன பாக்ஸை ஓபன் பண்ண தெரியல. ஷேம் ஷேம்..” வாயை பொத்தி கேலி செய்தவன் சிரித்தப்படியே தொடர்ந்தான்.
“நீ லியானார்டோ டாவின்சியோட பெயின்டிங்ஸ் பரர்த்திருப்பியே. அதுல ஒரு மர்மம் இருக்கும். அவர் ஏதோ ஒன்றை புதுசா சொல்ல முயற்சித்திருப்பார். அதே சமயம் அந்த டைம்ல அதாவது அவர் வாழ்ந்த
காலத்துல யாருக்கும் தோன்றாத தெரியாத பல விஷயங்கள் அவருக்கு அத்துப்படி. அதை அவரோட ஒவ்வொரு ஓவியத்திலும் நாம பார்க்கலாம். அதே மாதிரி தான் இந்த பாக்ஸ் மேல இருக்கிறதும்”.
“டாவின்சி பற்றி தான் எல்லோருக்கும் தெரியுமே. அவர் தான் பத்து மனுசங்களோட மூளைக்கு சமமானவர் அயிற்றே. இவர் ஓவியத்திற்கு மட்டுமில்லை சிற்பம் வடிவமைப்பது, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, பொறியியலாளர், உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகர அமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை, வடிவமைப்பாளர் அப்படின்னு ஏகப்பட்ட கலைகளை தனக்குள்ள அடக்கி வச்சிருந்த மனுஷர் ஆச்சே”.
“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அவரை உலகம் முழுசா ஃபேமஸ் ஆக்குனது என்னவோ மோனலிசா ட்ராயிங் தானே..?!”.
“ஆமா. இப்போ அதுக்கும் இந்த பாக்ஸ்க்கும் என்ன சம்மந்தம்?”.
“இருக்கு டியர். சம்மந்தம் இருக்கு. அவரோட அந்த பெயிண்டிங் இப்போ வரை பிரேஷ்ஷா புதுசு மாதிரியே ஷைனிங் கொடுக்க காரணம் அது வரையப் பட்டிருக்கிற விதம். அதாவது லேயர் பை லேயர்ரா (அடுக்கடுக்காக) வரைய யூஸ் பண்ணியிருக்கிற மெத்தட் தான். மொத்தம் பன்னிரெண்டு லேயர் இருக்கு. அதை எப்படி சொல்றதுன்னா ஒரு முறை பெயிண்டிங் பண்ணதுக்கு அப்புறம் அடுத்த பெயிண்டிங் ஏற்கனவே வரைந்து வைத்திருக்கிற பெயிண்டிங் மேலே வரையிறது. சோ ஒன்றுக்கு மேலே ஒன்றுன்னு மொத்தம் பன்னிரெண்டு அடுக்கா கலர்ஸ் பண்ணியிருப்பாங்க.
இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஒவ்வொரு லேயரும் ஒன்று அல்லது இரண்டு மைக்ரோ மீட்டர் தடிமன் கொண்டது. அப்படின்னா பார்த்துக்க எவ்ளோ ரிஸ்க் எடுத்து கச்சிதமா ரெடி பண்ணியிருப்பார். ம்ம்ம்..?”.
“ஹ்ம்ம்.. உண்மை தான். சென்டிமீட்டரை  விட பத்து மடங்கு சிறியது மில்லி மீட்டர். மில்லி மீட்டரை விட ஆயிரம் மடங்கு சிறியது மைக்ரோ மீட்டர். அப்படி தானே?! இதை எந்த ட்ரிக் யூஸ் பண்ணி வரைஞ்சார்ன்னு கடைசி வரை சொல்லாமலே போய் சேர்ந்துட்டார். மனுஷர் அந்த டெக்னிக் மட்டும் சொல்லி கொடுத்துட்டு போயிருந்தார்ன்னா எவ்ளோ நல்லா இருந்திருக்கும். இப்போ வரை எல்லா ஓவியர்களும் அந்த டெக்னிக் கண்டுபிடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டு கிட்டு இருக்கிறாங்க. அது சரி இப்போ எதுக்கு மோனலிசாவையும் அந்த டாவின்சியையும் பற்றி பாடம் எடுக்கிற?”.
“விஷயம் இருக்கு. பொறு சொல்றேன்”.
“ம்ம்ம்.. சீக்கிரம் சொல்லு”.
“அப்படிப்பட்ட அந்த அறுநூறு வருஷ பழமையான ஓவியம் போல இந்த மரப்பெட்டியில் இருக்கிற பெயின்டிங்ஸ்ஸும்”.
“டேய். என்னடா சொல்லுற. நம்புற மாதிரி சொல்லு” அவன் சொல்வது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் நம்புவதற்கு கடினமாக இருந்தது. ஒருவேளை அவன் சொல்வதில் ஏதும் உண்மை இருந்தால் அதை வெளியே சொல்லி பிரபலமடைவதை விட்டு இப்படி ரகசியமாக வைத்து கொள்ள என்ன தேவை இருக்க போகிறது.
“ஹேய் அம்மு. நிஜமாடா. என்னோட பாட்டி தான் சொன்னாங்க. நானும் முதல இதை நம்பல. அப்புறம் செக் பண்ணி பார்த்த அப்புறம் தான் உண்மை தெரிஞ்சி”.
“என்ன உண்மை?”.
“இந்த பெயிண்டிங்ஸ்ஸும் அப்படி தான். அவர் பன்னிரெண்டு லேயர் வரைஞ்சிருந்தார்ன்னா இந்த பெயின்டிங்ஸ்ல என்பத்திரெண்டு அடுக்கு இருக்கு. ஒவ்வொரு அடுக்கும் வெறும்..”
“சொல்லுடா..”
“வெறும் ஒன்றே ஒன்று நானோ மீட்டர் தான்”.
“டே..டேய். என்னடா சொல்லுற. நானோ மீட்டர்ன்னா மைக்ரோ மீட்டரை விட ஆயிரம் மடங்கு சின்னது ஆச்சே. ஹைய்யோ.. எப்படிடா. டேய் டேய் பிளீஸ்டா. எப்படியாச்சும் அந்த மெத்தட் மட்டும் எனக்கு கேட்டு சொல்லுடா.உன் பாட்டிக்கு இல்லை இல்லை உனக்கு கோவில் கட்டி கும்பிடுறேன்.
ஹைய்யோ! அந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா நான் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப பெரிய ஓவியர். வாவ்.. கேக்கவே எவ்ளோ நல்லா இருக்கு” என்று அவள் பாட்டிற்கு அவளது கற்பனை உலகில் பயணித்து கொண்டிருந்தாள்.
“ஹே ஹே.. கொஞ்சம் உன்னோட ட்ரீம்ல இருந்து நிஜத்துக்கு வா” என்று அவள் தோள் தொட்டு உலுக்கியவன் “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ இதை எப்படி திறக்கிறதுன்னு உனக்கு தெரியணுமா வேண்டாமா?”
“நான் வேண்டாம்ன்னாலும் நீ விடவா போற. சொல்லு. சொல்லி முடி”.
“இந்த பெயின்டிங்ஸ்ல மேஜிக் இருக்கு. இதோ இருக்குதுல இந்த யானையோட துதிக்கை அது தான் அந்த மேஜிக் கீ. அதாவது இதை ஓபன் பண்ணுற சாவி. ஆசிர்வதிக்கிற மாதிரி உசந்து நிக்கிற துதிக்கையை பிடிச்சி கீழே இறக்குன்னா இந்த பாக்ஸ் ஓபன் ஆகிரும். அப்புறம் மீண்டும் அந்த துதிக்கையை பிடிச்சி கீழேயிருந்து மேலே தூக்குன்னா க்ளோஸ் ஆகிடும். எப்படி..?”
“கொடு. நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்” என்று அந்த பெட்டியை வாங்கியவள் அவன் சொன்னது போலவே செய்தாள். “அய்.. ஓபன் ஆகுதுடா” சந்தோஷத்துடன் சொன்னவள் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.
அதில் சில நகைகள் இருந்தன. அதை பார்த்தாலே தெரிந்தது அதன் விலை கண்டிப்பாக அதிகம் என்று.
“இப்போ எதுக்கு இதெல்லாம் எனக்கு கொடுக்குற?”.
“உனக்கு இல்லை என்னோட மனைவிக்கு கொடுக்கிறேன். தயவுசெய்து என் மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசி மூட் அவுட் ஆக்கத. இன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதை அப்படியே நிலைக்க விடு”. எங்கே அவள் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என்ற அச்சத்தில் அவன் முன்னெச்சரிக்கையாக சொன்னான்.
“ம்ம்ம்..உனக்காக ஒத்துக்கிறேன். ஆனால் இதுவே தொடர கூடாது” விரல் நீட்டி எச்சரித்தாள் பெண்.
“உத்தரவு மகாராணி..!” இடைவரை குனிந்து நமஸ்கரித்து உரைத்தான் அவன்.

Advertisement