Advertisement

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!
அத்தியாயம் 28
சொல் பேச்சு கேட்கும் தேவதை பெண்ணாய் இருப்பதை விட
அடம்பிடிக்கும் வாண்டாய்
அட்டூழியம் செய்யும் சுட்டியே
மனதில் இடம் பிடிக்கிறது…
“பாட்டி ,அப்பா, என்னை விட்டுட்டு போன அம்மா எல்லோர் மேலேயும் உள்ள கோபத்துல யார்கிட்டயும் சொல்லாம பீச்க்கு வந்து உக்காந்துட்டேன். அப்போ தான் ஒரு தேவதை வந்தாள். கூடவே வால் பிடிச்சுக்கிட்டு இன்னொரு அடாவடி தேவதையோட”. அன்றைய நினைவில் ரவி தன் கண்முன்னே விரிந்த காட்சியை ஆராதனாவுடன் பகிர்ந்து கொள்ளலானான்.
வெள்ளை நிறத்தில் அழகாய் இருந்த அந்த குழந்தைக்கு இளம் மஞ்சள் நிற கவுன் பொருத்தமாய் இருந்தது. அமர்ந்திருந்த ரவி மீது மோதிய அந்த குழந்தை ரவியை பார்த்து பயந்து நிற்க அவன் தன் முன்னே நின்ற குழந்தையை ஆர்வமாக பார்த்தான்.
குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் பார்ப்பதற்கு தேவதை போல இருந்தால்..
ரவியும் அப்படி தான் அந்த குழந்தையின் முகசுணக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே அந்த குழந்தையின் பின்னே யாரோ வருவது தெரிந்தது. அவன் அமர்ந்திருந்தவாறே தலை சரித்து யாரென்று பார்த்தான். அதுவும் இன்னொரு குழந்தை தான்.
இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த குழந்தை இவர்கள் அருகில் வந்து அந்த தேவதை குழந்தையை பார்த்து,
“அதிவு கெத்தவளே! ஒதுங்கா போவத் தெயிறாது. இப்பயியா விதுந்து கிதப்ப? ஒது தாக்கு(dog) கூத பியிக்க முயில” என்று இடுப்பில் கை வைத்து அந்த குழந்தையை திட்டியவள் ரவியை பார்த்து,
“ஒது சின்ன பாப்பா விதுந்து கிதக்கு. இப்பயி மாது மாயிரி இருக்க. எதுப்பி வித தெயிறாது. எதுமை மாது” காரசாரமாக பொரிந்து தள்ளியது தேவதை ரூபத்தில் இருந்த அந்த சுட்டி.
‘என்னது.. எருமை மாடா. இத்துன்னுண்டு இருந்துபுட்டு இது என்னமா பேச்சு பேசுது. இது குழந்தை இல்லை. சரியான வாண்டா இருக்கும் போல’.
“ஏய். போ போயி தாக்கு பியிச்சு கொது. உந்தால தா தாக்கு ஓயி போற்றி. ம்ம்ம். கம்மு. போயி பிதி” அந்த குட்டி வாண்டு அவனை விரட்டியது.
எல்லாம் என் நேரம் என்று புலம்பியபடி அந்த டாக் எங்கேனும் தெரிகிறதா என்று பார்த்தான். பார்த்தவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“ஓய். குட்டி அந்த டாக் ஓடி போயிடிச்சி. நான் எப்படி பிடிக்க முடியும். நீயே பாரு இங்க எங்கேயாவது உன் டாக் நிக்குதான்னு”.
“அய்யோ அண்ணா. அது எங்களோட டாக் இல்லை. பார்க்க அழகா இருந்துச்சா அதான் அது கூட நானும் தங்கச்சியும் விளையாடிட்டு இருந்தோம்” என்று அந்த அழகான தேவதை குழந்தை பதில் சொல்லியது.
“அப்படியா. குட்டி ஏஞ்சல் உங்களோட நேம் என்ன?”.
“யென் பேர்ரு வதனா”.
“சரி. உங்களோட அப்பா அம்மா எங்கே”.
“அதோ. அங்க நிக்கிறாங்க” என்று அவர்கள் வந்த திசையை நோக்கி கை காட்டியது. அங்கே அவளது பெற்றோர் இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.
“அவங்க தான் உங்க அப்பா அம்மாவா?”
“ம்ம்ம்”.
“சரி. இப்படி தனியா விளையாட கூடாது. அப்பா அம்மா கூடவே இருக்கணும். புரியுதா. போங்க” என்றதும் வதனா ஓடி விட்டாள். ஆனால் அந்த குட்டி வாண்டோ இவனை முறைத்து கொண்டிருந்தது.
“இன்னும் ஏன் இங்கே நிக்கிற. போ உன்னோட அம்மாட்ட”.
“நீயி போலயா? எதுக்கு தன்னியா உக்கான்ந்து இதுக்க. உன் ம்மாஆ ப்பா எங்க?”
‘ நான் இப்போ எங்கே போக? அங்கே திரும்பவும் எப்படி போக முடியும்? பாசமாய் வளர்த்த அம்மா தான் இன்றில்லையே. நான் இப்பொழுது என்ன செய்ய?’. அந்த சுட்டி பெண்ணின் ஒற்றை கேள்வியில் அவன் மனம் கணத்தது. தனக்கு யாருமில்லை என்ற எண்ணம் வரவே தானாக கண்கள் கசிந்தது அவனுக்கு.
“அதுழுயா? எதுக்கு அதுழுற?”
இவன் ஒன்றும் பேசவில்லை அமைதியாகிவிட்டான். இந்த சின்ன பெண்ணிடம் என்னவென்று சொல்ல.
அவன் அருகே அமர்ந்து கொண்டது அந்த குழந்தை. இல்லை இல்லை வாலில்லா வாண்டு. அவர்கள் அருகே இருந்த ஒரு பேப்பரை எடுத்து பார்த்துவிட்டு அவனிடம் நீட்டி இது என்ன என்று கேட்டது. அவனும் வாங்கி படித்து பார்த்துவிட்டு சொன்னான்.
அது ஒரு கடல் பறவை. அதோட பெயர் ஆல்பாட்ரஸ். ஆசிய பெருங்கடலில் வாழும் அற்புத பறவையினம். பத்தாயிரம் மைல்களை வெறும் நாற்பத்தி ஆறு நாட்களில் தரையில் கால் பதிக்காமல் எந்த உணவும் எடுத்து கொள்ளாமலே பறந்து கடக்கும் சக்தி கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் அறுபது ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடிய ஒரு பறவையினம். இதன் உடலமைப்பை வைத்து தான் பெரிய பெரிய ஜெட் விமானங்கள் தயாரிக்க கரணமாயிருந்ததாம்.
அந்த பறவையின் இறக்கையை இருபுறமும் இருவர் பிடித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தனர் ரவியின் கையிலிருந்த பேப்பரில்.
“அப்பதின்னா அதோட அப்பா அம்மா குதும்பம் யேல்லாத்தையும் வித்துட்டு பதந்து போயிருமா?”.
“ஆமா. அப்போ தானே அந்த பறவை வாழ முடியும்” குழந்தைக்கு புரியும் விதத்தில் விளக்கினான்.
“அம்மா அப்பா இதுந்தா வாத முதியதா? யென்?” அப்பாவியாய் கேட்டது குட்டி வாண்டு.
“அதுவா பறவைகளுக்கு சிறகு முளைச்சத்தும் தாய் பறவை கூட்டை விட்டுட்டு போயிரும். சோ அது சாப்பிட அதுவா தான் உணவு தேடணும்”.
“நீயும் பெதுசா ஆயிட்டியா? அதான் நீயும் இப்போ அப்பா அம்மா இல்லாம வந்திருக்கியா? நீயும் இந்த பதவை போல பதக்க போதீயா?”
இதற்கு என்ன பதில் சொல்ல? தயங்கினான் ரவி.
“ஆன்னா நீயி தித்தும்பி போயிரு. உன்ந்தோட அப்பா அம்மாட்டயே. பாவமில்ல. உதக்காக காத்துட்டு இதுப்பங்கள்லா. பதவை மாறி பதக்காத. எல்லோர் கூதவும் சேஞ்சு இரு. எதுக்கு பியிஞ்சி போனும். நானு பாரு பப்பா..ம்மாஆ.. வது.. எல்லோதும் செஞ்சு தான் இருக்கோம். நீ மட்டும் எயிக்கு தத்தியா இக்கணும். பாது. உனக்கு இந்தும் றெக்கை கூத சதியா முதைக்கல”.
“ஹ்ம்ம்ச். உனக்கு புரியாது. என்னால இனி திரும்பிலாம் போக முடியாது”.
“ஏன்னு?”.
“அவங்க யாரும் எனக்கு.. என்ன சொல்ல சொந்தமில்லை மாறி தோணுது”.
“அப்பதின்னா? நீயி இந்த தாக்கு மாதி போவியா?”.
“ஒரு விதத்துல அப்படி தான்”.
“ச் ச் சு.. பாவமில்ல நீயி”.
“ம்ம்ம். கிளம்பு நீ. உன்னோட அம்மா உன்னை தான் பார்த்துட்டு இருக்கிறாங்க. போ” என்று அந்த சுட்டியை விரட்ட விரும்பினான் ரவி. ஏதோ ஒரு விதத்தில் அந்த குழந்தையின் கேள்வி அவனை அசவுகரியமாக உணர வைத்தது. ஏதோ தான் குற்றம் செய்தது போல.
“சரிய். நீயும் அப்போ கிதம்பு உன் வீத்துக்கு. நீயும் அந்த பதவை மாதி அதோட அப்பா அம்மா வித்துட்டு போன மாதிரி உன் அப்பா அம்மாவை வித்துட்டு போவதா. எனக்காக. ப்பிளீஸ்.. இந்த ஒது ததவை மத்தும் வீத்துக்கு போ. அந்த பதவை மாதி பெயிய தெக்கை வந்ததும் பதந்து போ. இப்ப தா உதக்கு றெக்கை இல்லையே. அப்போ தா நா அம்மாட்டா போவேன்”.
“எதுக்கு இப்போ இப்படி அடம் பிடிக்கிற”.
“ப்பிளீஸ்.. யென் பப்பு குத்தில்ல”. கண்களை சுருக்கி விரல் நுனிகளை கோபுரம் போல சேர்த்து தன் தாயை போல கொஞ்சிய தினுசில் அவன் கரைந்து போனான். அந்த சின்ன சிறு வாண்டின் செய்கை அவன் உள்ளத்தை அசைத்து பார்த்தது. ‘பப்பு’ இது தன் தாயின் பிரத்தேயேக அழைப்பு. அவனும் அன்பிற்கு ஏங்கும் சிறுவன் தானே. யாரிடத்திலாவது தன் தாயின் செயல் பிரதிபலித்தால் இலகுவது இயல்பு தானே.
“ம்ம்… எதுந்து” என்று அவனை தோள் பிடித்து எழுப்ப முயன்றது அந்த வாண்டு. பிஞ்சு கைகளின் செயலுக்கு இணங்கி அவனும் எழுந்து நின்றான்.
“குத் பாய். வா போலாம்” அவன் விரல் பிடித்து அழைத்து சென்றது. அக்குழந்தையின் ஸ்பரிசம் அவனுக்கு இதமாய் இருந்தது. வெகு நாள் கழித்து தன்னை அதட்ட.. கொஞ்ச.. கெஞ்ச.. ஒரு ஆள் கிடைத்துவிட்டதே.
“சரி. உனக்காக நான் இப்போ திரும்பி வீட்டுக்கு போறேன். ஆனால் அங்கே ஏதாவது எனக்கு பிடிக்காதது நடந்தா திரும்பி வேற எங்கேயாவது போயிருவேன். ஓகே?”.
“அய். ஜாலி. இப்போ தா நீயி குத் பாயி”. கை தட்டி ஆர்ப்பரித்து குதுகளித்தது அந்த சுட்டி வாண்டு. அந்த குழந்தையின் சந்தோசம் அவனுக்கும் நிறைவாய் இருந்தது. அவள் பெற்றோரிடம் விட்டுவிட்டு அவன் வீடு நோக்கி செல்லலானான்.
அப்போது அந்த குழந்தை அவன் விரல் பிடித்து இழுத்து குனியவைத்து அவன் கன்னத்தில் இதழ் பதித்தது. அவன் உறைந்து போனான். அவனும் சிறுவன் தான். ஆயினும் ஏதோ ஒன்று தடம் மாறியது. உள்ளுக்குள் என்னமோ ஒரு பிடிமானம் வந்தது.
‘இவள் தேவதை அல்ல. ஆனால் எனக்காக வந்த கடவுள். தேவதைகளுக்கு எல்லாம் மேல். என் செல்ல குட்டி வாண்டு. கண்டிப்பாக நான் திரும்பி வருவேன் உனக்காக. அப்போது நான் உன்னை என்னை விட்டுபிரிய விடமாட்டேன்’.
“ஒது வேளை நீயி திதும்பி வந்தா யென் வீத்துக்கு வா. இங்க தான் இதுக்கு. சதியா? நா உன்ன பத்துமாமா பாத்துக்கறே. அந்த தாக்குக்கு பதிலா நீ என் கூதவே இதுந்துரு” தலையை ஆட்டி ஆட்டி சொன்னது அப்படியே அவன் மனதில் நினைத்ததை வேறுவிதமாக. அவன் அந்த சுட்டியின் பேச்சில் இருந்த அன்பில் நொறுங்கி போனான்.
‘கண்டிப்பா. உனக்காக நான் திரும்பி வருவேன்’ மனதில் நினைத்து கொண்டான்.
“ம்ம்ம்..” வார்த்தைகள் அதிகமில்லை ஆனால் உணர்ச்சிகள் நிரம்பியது.
“ஆராதனா.. ஏய் ஆரு. போதும் வா அம்மாக்கு டைம் ஆகுது பாரு. சீக்கிரம் வீட்டுக்கு போகணுமில்ல” என்றபடி அவளது அம்மா அவளை அவனிடமிருந்து பிரித்து சென்றார். அந்த சுட்டி வாண்டுவின் பெயர் ஆரதனாவா? நைஸ் அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவளது கடைசி விரல் இவன் நுனி விரலை முத்தமிட்டு பிரிந்து சென்றது.
##########################################
“ஹே.. அப்போ அந்த சுட்டி வாண்டு நான் தானா.. அய்.. ஜாலி.. நாமா சின்ன வயசிலேயே மீட் பண்ணியிருக்கிறோம். ஹா ஹா.. விசித்திரமா இருக்குல்ல” ஆர்ப்பரித்து துள்ளினாள் ஆராதனா. அவனுக்கு இவளது செய்கை அந்த குட்டி வாண்டுவின் செயலை நியாபகப்படுத்தியது.
“அப்போ உன்னோட நெஞ்சுல குத்தியிருக்கிற டாட்டூ அந்த ஆல்பாட்ரஸ் பறவை தானா..?!” ஆச்சரியத்தோடு கேட்டாள்.
“கள்ளி நல்லா சைட் அடிச்சியிருக்கிற. ம்ம்ம்ம்.. நானும் அதே கோலத்துல ஒரு நாள் உன்னை பார்ப்பேன். அப்போ இருக்குடி”. அவன் டவல் அணிந்திருந்த அந்த தோற்றத்தை குறிப்பிட்டு அவளையும் அவ்வாறு ஒருநாள் அவனளவனாக மாற்றிய பின் பார்ப்பேன் என்று தன் மனதின் ஆசையை சொன்னான் அந்த காதலன்.
பின் தன் நெஞ்சை தொட்டு காட்டி “அந்த பறவை தான் இது. உன்னோட நினைவா தான் அந்த பறவையை பச்சை குத்துனேன். கண்ணாடில பார்க்கும் போதெல்லாம் ஒரே மூச்சுல பறந்து உலகத்தையே சுத்தி வர இந்த பறவை போல நானும் சீக்கிரம் உன்னை வந்து பார்க்கணும், உன் கூடவே என் வாழ்நாள் முழுசும் உன்னையே சுத்தி வரணும்ன்னு தோணும்”.
யாரோ தான் நீ
என் கண்ணில் படும்வரை..
யாருமே தேவையில்லை இப்போது
என்னில் நீ சேர்ந்த பின்..
“மம்ம்ம்ம்… கவிதை அள்ளுது ராசா.. அப்புறம் சொல்லு. நீ வீட்டுக்கு போன அப்புறம் என்ன நடந்து?”.
“நான் வீட்டுக்கு திரும்பி போகும் போது என்னோட அப்பா அவங்க சொந்தகாரங்க கிட்ட சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க. ‘எனக்கு என்னோட ரவி இருக்கான். அவன் மட்டும் போதும். வேற யாரும் எனக்கு தேவையில்லை. இனி இந்த வீட்டு பக்கமே வராதீங்க’. அதை கேட்டதும் எனக்கு கோபம் எல்லாம் பறந்து போயிடிச்சி. ஓடி போய் எங்க அப்பாவை கட்டி பிடிச்சு அழுதுட்டேன்.
அந்த சம்பவத்துக்கு பிறகு வேற யாரும் திரும்பவும் கல்யாணம் பண்ண சொல்லி கேட்டு வந்து என்னோட மனசை கஷ்டப்படுத்திருவாங்களோன்னு எங்க அப்பா பீல் பண்ணி என்னை என் பாட்டியோட அமெரிக்கா அனுப்பி வச்சிட்டாங்க. அப்புறம் தான் உனக்கு எல்லாம் தெரியுமே”.
“மம்ம்ம்ம்…. அது சரி உன்னோட அம்மா உன்கிட்ட எப்போ அந்த கற்களை கொடுத்தாங்கன்னு சொல்லவே இல்லையே”.
“ஓ. அதுவா. அன்றைக்கு நைட் நான் என்னோட அறைக்கு போய் என்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு இருக்கும் போது தான் எங்க அம்மாவோட அந்த ஹேண்ட் பேக் கண்ணுல பட்டுச்சி. அதை திறந்து பார்க்கும் போது தான் அதுல சில நோட்ஸ்ஸும் கற்களும் இருந்துச்சி. அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன் அந்த கற்களுக்கு சக்தி இருக்கு. நமக்கு ப்ரென்ட் மாதிரி எப்போ வேணும்னாலும் ஹெல்ப் பண்ணும்.
எப்படி அந்த பரமபதம் டைம் ட்ராவல் பண்ணுமோ அதே மாதிரி இந்த கற்களும் ரொம்ப நேரம் இல்லமா கொஞ்ச நேரம் மட்டும் டைம் ட்ராவல் பண்ணும் அப்படின்னு நான் தெரிஞ்சிகிட்டேன்.
நிலா ஒளியில மழை நீர் இந்த கற்கள் மேல் பட்டு நம்மளோட மூச்சு காற்று வெட்பமும் உள்ளங்கை ஸ்பரிசமும் சேர்ந்து அந்த கற்களுக்கு சூடு கொடுத்து அதை உயிர்த்தெழ செய்யும் அப்படின்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதை செக் பண்ணி பார்க்கும் போது தான் உன்னை அந்த குடிகாரன்கிட்ட இருந்து என்னால காப்பாத்த முடிஞ்சிது”.
” ஓஹோ.. கதை அப்படி போகுதா. சரி ஃபஸ்ட்டு அந்த ஹேண்ட் பாக் எப்படி உன்கிட்ட வந்து?”.
“அது எனக்கு சரியா நியாபகம் இல்லைடி. ஆனால் சின்ன வயசுல இருந்தே அந்த பாக் என்னோட ரூம்ல தான் இருக்கு. ஒருவேளை எங்க அம்மா வச்சிருப்பங்களோ?” .
“என்னை கேட்டா? ஹம்ச்” அசால்ட்டாக தோளை குலுக்கினாள் பெண்.
“ஹே நான் உனக்கு ஒண்ணு காட்டட்டா” என்று ஆர்வத்தோடு சொன்னவள் தன் ஆடை மறைவில் இருந்து அந்த கற்களை எடுத்து சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தாள். அன்று கீதுவுடன் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளி பட்டு அந்த கற்கள் மின்னியதை அவனுக்கு காட்ட விரும்பினாள்.
ஆனால் இம்முறை அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த கற்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது போலும். இவள் அப்படி இப்படி உலுக்கியும் அந்த கற்களில் இருந்து ஒளி வருவேனா என்று அடம்பிடித்தது.
“ஏய் என்ன பண்ணுறடி?”.
“டேய் ரவி அன்றைக்கு இப்படி தான் கீது கூட நின்னு பேசிட்டு இருக்கும் போது இந்த கற்கள் ரொம்ப பவரா மின்னிச்சி. ஆனால் இப்போ அப்படி எதுவுமே ஆகல. ஏன்னு தெரியல”.
“அதை கழற்றி என்கிட்ட கொடு. நான் பார்க்கிறேன்”. அவனும் அந்த கற்களை ஆராய்ந்தான். அவனிடம் இருந்ததற்கும் இப்போது உள்ள கற்களுக்கும் அதில் ஏதோ ஒரு சிறு வித்தியாசம் இருப்பது போல பட்டது. கற்களின் நடுவில் மெல்லிய கோடு ஒன்று புதிதாய் இருந்தது.
“நான் நினைக்கிறேன் இந்த கற்களோட பவர் குறைஞ்சிடிச்சுன்னு. அதாவது நம்மளோட மொபைல்க்கு சார்ஜ் போடுற மாதிரி இந்த கற்களுக்கும் ஒருவேளை சார்ஜ் போடணுமா இருக்கும். நம்ம ரெண்டு பேரும் இதை யூஸ் பண்ணி டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறோம். சோ அதோட எனர்ஜி லெவல் கம்மி ஆகிருக்கு”.
“அய்யோ. அப்போ இந்த கற்கள் செத்து போச்சா. நாம டைம் ட்ராவல் பண்ண முடியாதா? இனி இதுக்கு உயிர் வராதா?”.
“ஏண்டி..? பச்ச குழந்தையை விட மோசமா பிகேவ் பண்ணுற. அதான் சொல்லுறேனே அதுக்கு சார்ஜ் போட்டா திரும்ப பழையபடி ஆகிரும்னு”.
“உண்மையாவா..?”
“ம்ம்ம். இப்போதைக்கு அது ரெஸ்ட் எடுக்குதுன்னு நினைச்சிக்கோ”.
“ம்ம்ம்ம். சரி. ஆனால் இதுக்கு எப்படி ஜார்ஜ் போடுவ?”.
“அதை நான் பார்த்துக்கிறேன். உனக்கு இப்போ எல்லா விளக்கமும் தெரிஞ்சிடிச்சில்ல. சீக்கிரம் போய் ரெடி ஆகு. என்னோட வீட்ல உள்ளவங்கிட்ட உன்னை அறிமுகப்படுத்தி விடுறேன்”.
“ரவி. இப்பவேவா… உங்க வீட்ல உள்ளவங்க எப்படி எடுத்துக்குவாங்களோ?” கொஞ்சம் பயத்துடன் கேட்டாள்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ முதல போ போய் ரெடி ஆகு”.
“ரவி ரவி பிளீஸ். கடைசியா ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அன்சர் பண்ணிடு”.
“ம்ம்.. கேளு”.
“அதுவா நீ எனக்கு அந்த வூட்டன் டிரேல ஒன்னு தந்தியே அது என்னது?”.
“அதுவா.. அது ஒரு மூலிகை பானம். நான் முதல என்ன சொன்னேன்,
‘அச்சு அசலனா வதனத்தின் தோலை’ பதிமுக மரத்தோட தோல் அதாவது பட்டை.
‘மணங்களின் ராஜாவோடு மணமுடித்து’ நல்லா மணம் வீச கூடிய பொருள் அது ஏலக்காய் அப்புறம் சுக்கு.
‘தேகத்தை சீராக்கும் சிங்கத்தை’ நம்ம உடலை சமமா மேயிண்டைன் பண்ண கூடிய பொருள் சீரகம்.
‘வெற்றி ரிப்பனை வெட்டி அதன் நுனியை’ அதாவது வெட்டி வேர்.
‘சிங்கிள் பாயாய் ஜொலிப்பவனோடு தன்னந்தனியாக மோத விட்டு’ சிங்கிள் மீன்ஸ் தனியா சரியா? நான் சொன்னதும் அது தான் தனியா விதை. சம்பாருக்கு எல்லாம் போடுவோமே அந்த பொடி.
‘கருங்காலி பயலை காளிக்காக தீக்குளிக்க வைத்து’ அப்டிங்கிறது கருங்காலி மரத்தோட பட்டை.
‘கடைசியில் ஏழு அரக்கர்களையும் நைய புடைத்து’ இப்போ நாம பார்த்தோமே பதிமுக பட்டை, ஏலக்காய், சுக்கு, சீரகம், வெட்டி வேர், தனியா, கருங்காலி பட்டை இவங்க தான் அந்த ஏழு அரக்கர்கள். நல்லா நைசா அரைத்து அதை,
‘ஜலத்திலே நீராட செய்து
ஒரு சிட்டிகை சொடுக்கி
ஆற பொறுத்தால் வருவேனே நான்
கன்னிப் பெண்ணின் நாணத்தை போல’ அப்படின்னா அந்த அரைத்து வைத்திருக்கிற பொடியில் ஒரு சிட்டிகை எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து சூடு ஆறிய பிறகு சரியான பக்குவம் வரும். எப்டின்னா கன்னிப் பெண் வெட்கப்படும் போது அவளோட கன்னம் சிவக்குமே அது போல இளம் ரோஜா நிறத்தில் அந்த தண்ணீரோட நிறம் இருக்கும்.
‘கதகளி ஆடி கண்ணை கவர்ந்து
கண்ணுக்கு தெரியாதவனை துவம்சம் செய்வேனே’ இது எதை சொல்லுதுன்னா கதகளி டான்ஸ் கேரளாவோட பாரம்பரிய நடனம். அது போல இந்த மூலிகை தண்ணீரும் கேரளா மாநிலத்தோட பாரம்பரியம். அங்கே எல்லோர் வீட்டிலும் இந்த தண்ணீரை சாதாரணமா பார்க்கலாம். அதை போல எந்தவொரு விசேஷம்ன்னாலும் இந்த தண்ணீர் தான் பரிமாறுவாங்க. இந்த மூலிகை தண்ணீர், தண்ணீர் மூலமா பரவ கூடிய கண்ணுக்கு தெரியாத நோய் கிருமிகளை சாகடிச்சிரும். சோ நமக்கு எந்த வித பிரச்சனையும் வராது.
இந்த மூலிகை தண்ணீரை ‘பதிமுக தண்ணீர்’ அல்லது ‘தாகமுக்தி’ அப்படின்னு சொல்வாங்க. ம்ம்ம்.. இப்போ புரிஞ்சா நான் எதுக்கு உன்னை அந்த தண்ணீர் குடிக்க சொன்னேன்னு. போ. போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா”.
“ஓ.கே” என்று துள்ளலுடன் செல்லும் தன் செல்ல சுட்டி வாண்டை ரசித்துக் கொண்டான். இனி தான் அவனுக்கு வேலைகள் ரவுண்டு கட்டி நிற்கிறதே.

Advertisement