Advertisement

“ஏ…ய்.. நீ.. நீ.. நீ… ர…வி தானே..??”
“ஆ..ஆ…மா… உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..??! நீங்க யாருக்கா?!” திணறிய படி கேட்டவனை முறைத்தவள்,
“துறைக்கு எதுவும் நியாபகம் இல்லையோ..?? இப்போ என்னடா சொன்ன… நான் உனக்கு அக்காவா…?? டேய்…!
எல்லாம் என் நேரம்டா.. எல்லாம் உன்னால தான்.. நான் இங்கே வந்து முழிச்சிக்கிட்டு நிக்குறதுக்கு காரணமே நீ தான்.. நீ என்ன..டா.. ன்..னா.. அக்கா… மக்கான்னு..”
“ஷ்.. ஷ்.. அக்கா பிளீஸ் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு முக்கியமான ஒரு ஆளை பார்க்க வந்திருக்கிறேன். நீங்க வேற சத்தம் போட்டு, தேவையில்லாத கதை பேசி என்னோட நேரத்தை வீணடிச்சிராதீங்க”
“டேய்… யாரு யாரோட நேரத்தை வேஸ்ட் பண்ணுறது…??! ஆமா.. நான் உனக்கு அக்காவாடா..?? இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டு பாரு.. அப்போ இருக்கு உனக்கு கச்சேரி” அவன் அக்கா என்றழைத்த அதிர்ச்சியில் ஆராதனா அவனை தாளித்து கொண்டிருக்கையில்,  அவர்களை கடந்து யாரோ செல்வது தெரிந்தது.
ஆராதனாவும் ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்று கொண்டிருந்ததால், அவளால் தன் பின்புறமிருந்து தன்னை கடந்து சென்ற அந்த நபரின் முகத்தை பார்க்க முடியவில்லை. அந்த நபர் அணிந்திருந்த யூனிபார்ம் அவள் பள்ளிச் செல்லும் மங்கை என்பதை பறைசாற்றியது.
அது சரி இவன் எதற்கு இப்போ அந்த பொண்ணை இப்படி வெறித்துப் பார்க்கிறான்..?! வில் புருவத்தில் கேள்வி நாண் ஏற்றி எதிரில் நின்றவனை முறைத்தாள். அந்த முறைப்பை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு அவன் அந்த பெண்ணின் மீதே கண்ணாக இருந்தான். முகத்தில் அவ்வளவு மென்மை. ஏதோ பார்க்க கிடைக்காத பொருளை அதிசயித்து பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய்.. ஜாமூ! என்னடா பார்க்குற..?” பதிலேதும் சொல்லாமல் அவன் அந்த தேவதையை தரிசித்துக் கொண்டிருந்தான். 
‘விளங்கிடிச்சி…! இவன் இப்போதைக்கு திரும்ப போறது இல்லை’. தலையில் அடித்துக் கொண்டவள் தலை திருப்பி அந்த பள்ளி சிறுமியை பார்த்தாள். சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும் அவள் நடையில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல தெரிந்தது. ‘இந்த பெண் ஏன் ஒரு மாதிரி நடக்கிறாள். எங்கேனும் அடி பட்டிருக்கிறதா…?’ யோசனையில் இருக்கும் போதே.. தன் அருகிலிருந்த டீன் ஏஜ் ரவி அந்த பெண் பின் ஓடி சென்றான்.
“டேய் டேய்… எங்கடா போற.. நில்லுடா…” உன்னோட பெரிய ரோதனையா போச்சு.  மூச்சிரைக்க ஆராதனாவும் அவன் பின்னே ஓடினாள்.
அங்கே டீன் ஏஜ் ரவி அந்த பள்ளி குழந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது புரிந்தது. அந்த பெண் எதையோ அசௌவுகரியமாக உணர்வதை போல நெளிந்து கொண்டிருந்தாள் .
‘படவா ராஸ்கல்.. ஆபிஸ்ல வச்சி என்கிட்ட லவ் சொல்லி கிஸ் வேற பண்ணிட்டு.. நீ இந்த பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்துருக்க. மவனே உனக்கு இருக்குடா கச்சேரி’ அவனை அடிக்க கைகள் பரபரக்க, கைகளை தேய்துவிட்டப்படி அவனை நோக்கி சென்றாள்.
அவன் தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றி அந்த பெண்ணிடம் கொடுப்பது தெரிந்தது.
“அட பாவி மவனே.. பட்டப் பகலில் இப்படி பிகேவ் பண்ணுறீயேடா. வெட்கங் கெட்டவனே..! இருடா.. இதோ வரேன்”.
விறு விறுவென சென்றவள் அவனது தோள் பட்டையை அழுத்தி பிடித்து சுட சுட தன் கோபத்தை காட்ட நினைக்கையில் அவன்அந்த டீன் ஏஜ் ரவி சட்டென இவளது துப்பட்டாவை உருவினான்.
“ஹைய்யோ… என்னடா பண்ணுற..?!” அதிர்ச்சியில் ஆராதனா நிற்க்கையிலேயே, அவன் அந்த சிறுமியின் கால்களில் வழிந்தோடிய குருதியை துடைத்து விட்டான். அப்போது தான் ஆராதனாவும் அதை கவனித்தாள், அந்த பெண்ணின் ஆடையை.
‘ஷிட்… இது தான் விஷயமா… இதை போய் நான் தவறாக நினைத்து விட்டேனே..??’
நிமிர்ந்து அந்த பெண்ணின் முகம் பார்த்தாள் ஆராதனா. ஹை வால்டேஜ் ஷாக்.. ‘ஹைய்யோ… இது நானா… திரும்பவும் நானே தானா..?! நானே என்னை மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறேனா..? என்னோட ஒவ்வொரு பருவத்திலும் எனக்கு நானே உதவி செய்து கொண்டேனா..? அப்படி என்றால் அந்த ரவி கூறியது அனைத்தும் உண்மை என்றல்லவா ஆகிறது..???’ அத்தனை குழப்பத்திற்கும் தீர்வு கிடைத்தது போல இருந்தது பெரியவள் ஆராதனாவிற்கு.
அந்த பள்ளி சீருடை அணிந்த ஆராதனா, ரவி கொடுத்த சட்டையை அவளது இடுப்பில் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலக்கம் விலகி நிம்மதி திரும்பியிருந்தது.
“ஹ்ம்ம்… இவ்ளோ தான்மா விஷயம். புரியுதா? தைரியமா போ. உன் வீடு வரை உனக்கு துணையா நான் வரேன். சரியா? உன்னை யாரும் தப்பா பார்க்க மாட்டாங்க. அதுக்கு நான் கேரண்ட்டி”.
அந்த பள்ளி செல்லும் ஆராதனா முகத்தில் புன்னகை கீற்றின் சாயல். ரவியின் முகத்திலோ எதையோ சாதித்த உணர்வு..
‘இதோடா.. இங்க என்ன நடக்குது? கம்பர் சொன்னது போல, “அவனும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்..” அப்படிங்கிற ரேஞ்சிற்கு ரெண்டும் விழி வழி காதல் கீதம் பாடுது.  ஹ்ம்ம்… என்னடா ரவி.. ஹீரோவாகலாம்ன்னு ட்ரை பண்ணுறீயா…?? எல்லாம் தெரிஞ்ச நான் இங்கே குத்துகல்லாட்டம் நிக்கிறப்போ அப்படி நடக்க விட்ருவேனா…??!
முதல என்னடான்னா என்னை ஆன்ட்டின்னு சொன்ன.. இப்போ உறவு முறையே மாத்தி அக்கான்னு சொல்லுற. இது பியூச்சர்க்கு நல்லது இல்லை..யே ..டா எ..ன்..ன்..னோ..ட ஸ்வீட் குலோப்ஜா..ம்..ம்..மூ…மூ…!
சோ இன்னும் எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிற ஆரு… யூ ஸ்டார்ட்டு..டூ..’
என்றபடி அவனை பின் தொடர்ந்து சென்றாள் பெரியவள் ஆராதனா. அதற்குள் அந்த ரவி அந்த பள்ளி மாணவி ஆராதனாவின் வீட்டை அடைந்திருந்தான்.
‘டேய்..அதுக்குள்ள போயிட்டியா.. இருடா வரேன்..’
அந்த பள்ளி ஆராதனா இவனிடம் புன்னகை முகமாக விடைபெறுவது தெரிந்தது. ‘இப்போது விட்டால் இவனை பிடிக்கமுடியாது. அந்த பெண்ணோடு வீட்டிற்குள் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அப்புறம் அது இது என்று பேசி வீட்டில் உள்ள அனைவரையும் மயக்கி விடுவான். நான் இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டேன்’.
குடு குடுவென சென்றவள் ரவியின் காதை பிடித்து திருகினாள்.
“ஆ…ஆ…அம்மா..” தன் காதை பிடித்திருந்த அவள் கையை தடுக்க போராடினான் அந்த இளம் பருவ ஆண்மகன். இவள் விடுவாளா என்ன..?இது தான் வாய்ப்பு என்று அவள் உயரத்திற்கு அந்த பனைமர இளைஞனை குனிய வைத்து துடிக்க வைத்தாள்.
“ஆ…ஆ… வலிக்குது.. ஹே..சொல்றேன்ல..”வலியில் கத்தினான் அவன்.
“வலிக்குதா..?அப்போ எனக்கு எப்படி இருக்கும். நான் உனக்கு அக்காவாடா? முதலில் ஆன்ட்டி.. இப்போ அக்கா.. அப்புறம் அடுத்த தடவை பாட்டின்னு சொல்வீயா…???”
“அய்யோ… நீங்க என்ன சொல்லறீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல. என்னை விடுங்க. உங்ககிட்ட பேச எனக்கு நேரமில்லை”. பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் தன் கைகளில் பற்றிக்கொண்டிருந்தும் அவன் உருவம் காற்றோடு காற்றாய் கலந்தது. எதிர்பாரத இந்த நிகழ்வில் சிற்பி செதுக்கி வைத்த சிற்பம் போல அசைவற்று நின்றாள் ஆராதனா.
‘ஹேய்… இது எப்படி… ??? அப்டின்ன்னா??? ரவியும் அவனோட ஒவ்வொரு பருவத்திலயும் டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறானா…??? ஷ் ஷ் ஷ்… ஷப்பா… கண்ணை கட்டுதே சாமி…’
சுவரின் மீது சாய்ந்த வண்ணம் குழப்பத்திற்கு விடை தேட ஆரம்பித்தாள் அந்த மங்கை ஆராதனா. ‘எல்லாம் சரி தான். அந்த ரவி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான். நான் இப்போது.. இங்கே.. இப்படி என் நேரத்தை அனுபவித்து கொண்டிருப்பதை பார்த்தால்.. அத்தனையும் நிஜம். அப்படியென்றால் நானும் டைம் ட்ராவல் பண்ணி கொண்டிருக்கிறேனா..??? எனக்கு ஏன் இவன் அக்கா என்றால் அத்தனை கோபம் வருகிறது..? இவன் எப்படி கூப்பிட்டால் எனக்கென்ன என்று என்னால் ஏன் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..??’
நெற்றி புருவம் சுருக்கி யோசித்தவள் அதற்கான காரணம் புரிபடுகையில் ஸ்தம்பித்துப் போனாள். ‘அ…அ..ப்..டி..ன்..ன்..னா நா..நா…னும் அவனை விரும்புறேனா…?’ அதற்கு மேலே அவளை யோசிக்க விடாமல் அந்த கற்கள் ஒளிர ஆயத்தமானது. ஒரு வித தெளிவுடன் அவள் அந்த கற்களை பார்த்தாள். அவள் பார்வையின் வீரியத்தில் அந்த கற்கள் தயங்கியதோ…? அந்த கற்களை உள்ளங்கையில் வைத்து நெஞ்சுக்கருகில் தூக்கி தன் மூச்சுக் காற்று படும் தூரத்தில் பிடித்தப்படி வைத்து அதனோடு பேச ஆரம்பித்தாள்.
“நீ எனக்கு பாதுகாப்பா இருப்பன்னு நான் நம்புறேன். என்னை இப்போ எ..எ..என்னோட தேஜா வூ.. ஹம்ச்…இல்ல இல்ல.. என்னோட ரவிக்கிட்ட இப்பவே கூட்டிக்கிட்டு போ. அது எந்த கிரகம்ன்னாலும் சரி.. எனக்கு இப்பவே அவனை பார்க்கனும்.. பாருடா.. உன்னோட ஆரு உன்னை தேடி.. உன்னை முழுசா நம்பி.. உனக்காகவே வந்திருக்கிறேன்.. அப்படின்னு சொல்லணும். உன்னை புரிஞ்சிக்கிட்டேன், நீ சொன்ன அத்தனையும் நான் நம்புறேன். என்னை ஏற்றுக் கொள்வீயான்னு கேட்கணும். ம்ம்ம்.. போ.. சீக்கிரம் போ.. என்னோட ரவிகிட்ட கொண்டு போ”.
காதலை உணர்ந்து கொண்ட மங்கை தன் மனதை எந்தவித தயக்கமும் இன்றி அந்த கற்களிடம் முதல் முறையாக தன் காதலை வெளிப்படுத்தினாள். உணர்ச்சி பெருக்கில் தத்தளித்தவள் அந்த கற்களின் மேல் தன் உதடுகளை பதித்தாள். தூது செல்ல தனக்கு தலைவி கொடுத்த இன்பப்பரிசில் திக்கு முக்காடி போனது அந்த நீல பச்சை கற்கள். முதல்முறை அதுவும் வெகுநாள் கழித்து தனக்கு கிடைத்த முதல் முத்தத்துடன் குதூகலமாய் ஒளிர ஆரம்பித்தது. அந்த ஒளி வெள்ளத்தில் சந்தோசத்துடன் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்ட படியே தன் பயணத்தை தொடர்ந்தாள் ஆராதனா.
காதல் பயணம்…
கற்கால தோழியுடன்..
காதலனை தேடி சரணடைய!
#######################

Advertisement