Advertisement

உடல் சாய்ந்தாலும்
உன்னை சேர்ந்திடுமே..
என் ஆன்மா..!
மித்தரனுடன் உரையாடிய பின்பு எல்லாம் சுபமாய் முடிந்த திருப்தியில் பெண்ணவள் ஆராதனா சட்டென்று எழ எதிர்பாராமல் கால் வழுக்கி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தாள். அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ரவுடிகளும் மித்ரனும் திகைத்துப் போய் இருக்கையிலே, அவள் பிடிப்பதற்கு எந்த பிடிமானமும் இன்றி வேக வேகமாய் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தாள். காற்றிலே மிதக்கும் இலையை போல கீழே சரசரவென விழுந்து கொண்டிருந்தாள்.
அப்போது அவள் என்ன நடக்கிறது என உணரும் முன்னே, சட்டென்று காற்றில் மிதக்கும் காகிதம் போல அந்தரத்திலே மிதந்தாள்.
எ..எ..எ..ன்..ன.. நாம் இன்னும் கீழே விழவில்லை?! நமக்கு ஒன்றும் ஆகவில்லையா..? என பயத்தில் மூடியிருந்த கண்களை திறந்து பார்த்தவள் ஆச்சரியத்தில் அதிர்ந்தாள்.
அவள் எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் மிதந்து கொண்டிருக்கிறாளா..?? எப்படி..? அவள் ஆராய்ச்சியிலிருக்கும் போதே, அந்த கற்கலிலிருந்து ஒரு மாய ஒளி வீசியது. அது அவளை ஏதோ ஒரு மந்திர உலகத்தில் பயணிக்க வைத்தது. உடல் நடுங்க..இமைகளை மூட மறந்து.. ஆச்சரியத்தில் இதழ்கள் பிரிந்திட.. சுற்றிலும் நிறங்கள் அங்கும் இங்கும் பாய.. கண்கள் கூச.. பெண்ணவள் அதுனுள் தொப்பென விழுந்தாள்.
அவளை சுற்றி இப்போது காலங்கள் பின்னோக்கி ஓடி கொண்டிருந்தது. எதுவும் சரிவர புரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தது அவளால். தாம் ஏதோ கால சக்கரத்தில் பயணிக்கிறோம் என்பதை அவளால் அனுமானிக்க முடிந்தது. ரவி சொன்னதும் அந்த மித்ரன் சற்று முன் கூறியதும் இதை பற்றி தானோ..?! சிந்தனையிலிருக்கும் போதே அந்த வண்ண சுழல் சட்டென ஓரிடத்தில் வந்து நின்றது. சுற்றிலும் ஒரே இருட்டு. கனவு காண்கிறோமா நாம்? பெண்ணவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறதுவென புரியாமலே கவனித்துக் கொண்டிருந்தாள். சட்டென அந்த ஒளி வெள்ளம் குறைந்து ஓரிடத்தில் வந்து நின்றாள்.
தான் எங்கு இருக்கிறோம் என சுற்றிலும் பார்வையை சுழல விட, அவள் இது வரை பார்த்திராத இடமாக இருந்தது. ஏதோ ஒரு நகரத்தின் வீதியில் நிற்பது புரிந்தது. வீடுகள் மற்ற கட்டிடங்கள் எல்லாம் பழைய அமைப்பில் இருந்தது. நெருக்கடியாக இல்லாமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவை அமைந்திருந்தன. தெரு விளக்குகள் நிலா ஒளிக்கு போட்டியாக ஜொலிக்க அந்த இடமே வித்தியாசமாக பெண்ணவளுக்கு பட்டது.
அப்போது அங்கே தூரத்தே யாரோ நடந்து வரும் அரவம் கேட்கவே பார்வையை அங்கே திருப்பினாள். அந்த ஆள் பார்க்க சைக்கோ மாதிரி இருந்தான். அவன் பின்னே ஒரு சிறுகுழந்தை பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. அவன் பெண்ணாக இருக்குமோ..? பார்க்க பக்கா குடிகாரன் மாதிரி இருக்கிறான் இவனை நம்பி குழந்தையை தாய்காரி அனுப்பி வைத்திருப்பாளோ. ச்…ச்..ச.. இருக்காது.
இவன் இந்நேரத்தில் எங்கே போகிறான், அதுவும் இருட்டு பக்கமாய். அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது இவளை நோக்கி அவர்கள் வருவது தெரிந்தது. எதுவோ தோன்ற பெண்ணவள் அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டாள்.
அவன் இவளை கடந்து சென்றான். பின்னால் அந்த சிறுமியும் வந்துக் கொண்டிருந்தாள். அச்சிறுமி இவளை கடந்து செல்கையில் அதிர்ந்து போய் விட்டாள் ஆராதனா. ஏனென்றால் அந்த சிறுமி இவள் தான். ஆம்! ஆராதனாவே தான். இவளது சின்ன வயதில் இருக்கும் அந்த ‘குழந்தை ஆராதனா’. சிறு வயது ஆராதனா..! அப்படியென்றால் என் கடந்த காலத்திற்கு நான் வந்திருக்கிறேன்னா?? நான் பெரிய பெண்ணாக இருக்கிறேன். இந்த பெண் சிறுமியாக இருக்கிறாளா?! அப்படியென்றால் இங்கே இருப்பது இரண்டு ஆராதனா ! குழந்தை பருவ ஆராதனா ஒன்று, பெரிய பெண் ஆராதனா ஒன்று.
இது எப்படி சாத்தியம்?! அதிர்ச்சியில் ஆராதனாவிற்கு மயக்கமே வரும் போலிருந்தது. இருந்தும் இருக்கும் நிலை எண்ணி தன்னை சுதாகரித்துக் கொண்டவள் மெதுவாக அவர்கள் பின்னே யாருமாறியாமல் மறைந்து சென்றாள். அங்கே அவன் யாருமற்ற இடத்தில் அந்த சிறுமியிடம் தப்பாக நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இவளுக்கு தூக்கிவாரி போட்டது. அய்யோ! இந்நிகழ்ச்சி பார்ப்பதற்க்கு அப்படியே சிறு வயது ஆராதனாவிற்கு நடந்தது போல இருந்தது. எப்படி இது..?? என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ ஒரு சிறுவன் ஓடி வந்தான். அந்த சைக்கோ மனிதனை தள்ளி விட்டு அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றான்.
அவனோ முரடன். இவனோ சிறுவன். அவனிடம் இச்சிறுவனது மோதல் எடுபடுமா என்ன..?? அந்த குடிகாரன் ஒரே தள்ளு. அந்த பையன் இவள் காலடியில் வந்து விழுந்தான். எழுந்தவன் இவள் இருப்பதை பார்த்து,
“ஆன்ட்டி என்ன பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”. என்று ஆராதனாவின் கைகளை பிடித்து இழுத்து சென்றவன் அவள் கையில் கீழே கிடந்த பெரிய கல்லை கொடுத்தவன் “பிடிங்க ஆன்ட்டி. இதை அவன் மேலே போடுங்க” சொல்லிவிட்டு அவன் அங்கே தூரமாய் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து வந்தான்.
அதற்குள் அவன் அச்சிறுமியிடம் மீண்டும் தவறாக நடக்க முயல, அந்த குழந்தை பயந்து போய் வீறிட்டு அழ, இங்கே ஆராதனா நொடியும் தாமதிக்காமல் அந்த குடிகாரன் மேல் கல்லை வீசினாள். அது அவனது முதுகை பதம்பார்த்தது.
“அய்யோ!அம்மா!” அலறியபடி கீழே விழுந்தான். அந்த சிறுவனும் இது தான் சமயம் என்று அவனை அடி வெழுத்து வாங்கிவிட்டான். அவன் மயக்கம் போட்டு விழும்வரை அச்சிறுவன் விடவில்லை. அப்படி ஒரு முரட்டு அடி. இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சக்தியா..?! சிந்தனையிலிருக்கும் போதே ஆராதனாவை அந்த ‘குழந்தை ஆராதனா’ கட்டி அணைத்துக் கொண்டாள். தேம்பி தேம்பி அழுத குழந்தையை ஆறுதல் படுத்தினாள் பெரியவள்.
“ஒன்றுமில்லைடா. கண்ணை துடை. அதான் நாங்க வந்துட்டோம்ல. அழாத குட்டிமா.. என் அம்மு குட்டியில்ல..” செல்லம் கொஞ்சியபடி கண்ணை துடைத்துவிட்ட அவளது கைகள் அப்படியே நின்றது. என்ன இது…? என்னையே நான் சமாதான படுத்துகிறேனா..? அம்மு என்று எனக்கு நானே கொஞ்சி கொள்கிறேனா..? என்ன நடக்கிறது இங்கே..? ஆயசமாக உணர்ந்தாள் ஆராதனா.
“ஹ்ம்ம்… கொஞ்ச நேரத்துக்கு இவன் எழுந்திருக்க மாட்டான் ஆன்ட்டி, நீங்க வாங்க. அம்மு குட்டியை அவுங்க அம்மாட்ட கொண்டு போய் விட்ருலாம்”
“அம்மு.. உனக்கு ஒன்றும் ஆகலையே…?” குழந்தையின் கண்ணீரை துடைத்து விட்டப்படி கேட்டான் சிறுவன்.
ஆராதனாவிடம் இருந்து பிரிந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டது. குழந்தையின் முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவன்.
“ஷ்.. ஷ்… ஒன்றும் இல்லைடா.. அதான் நாங்க வந்துட்டோம்ல.. அழுகாதடா.. என் அம்முல..?!”
கன்னத்தில் விழுந்த கண்ணீரை தன் கரங்களால் துடைத்து விட்டான் அவன். உதடு பிதுக்கி அழும் குழந்தையை சமாதானப் படுத்தியவனிடன்,
” நா..நா..னு… ரொ…ம்ப பயந்த்துட்டேன் பப்பு…” என்று மீண்டும் விட்ட அழுகையை தொடர்ந்தது அக்குழந்தை.
“முதல அழுவுறதை நிறுத்து.. இப்படி தான் யார் என்ன வாங்கி தாரேன்னு சொன்னாலும் பின்னாடி போயிருவீயா? மம்மிட்ட சொல்ல தெரியாது? இனி ஒரு தரம் இப்படி பண்ணு..!!? உனக்கு இருக்கு. ஹ்ம்ம் எழுந்திரு. வீட்டுக்கு போகலாம்”.
சொல்லிவிட்டு அந்த சிறுவன்  நடக்க ஆரம்பித்தான்.
ஆராதனாவும் ‘குழந்தை ஆராதனா’வை தூக்கி கொண்டு அவன் பின்னே சென்றாள்.
மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தும் பெண்ணவள் ஆராதனா வாய் திறக்கவில்லை. அவளால் நடப்பதை இன்னும் நம்பமுடியவில்லை. தன்னுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் சிறுவனை பார்த்தாள்.
அந்த கண்கள், மூக்கு, இதழ்கள், தாடை எல்லாம்… எங்கேயோ பார்த்தது போல இருந்தது. இந்த சிறுவன் யாராக இருக்கும்..?? பார்ப்பதற்கு அந்த குலோப்ஜாமூன் ரவி மாதிரியே இருக்கிறானே. எப்படி?!
அவள் வாய் திறந்து எதுவோ கேட்க வரவும், அங்கே ஒரு பெண் பதற்றத்துடன் இவர்களை பார்த்து கூக்குரலிட்ட படியே வந்தாள்.
அ..து.. அ..து..அந்த பெண்மணி கீர்த்தனா தானே. அது ஆராதனாவின் அம்மா தானே.
“அ..ம்..மா..” அதிர்ந்து நின்றாள் பெரியவள் ஆராதனா.
“என் கண்ணே..!” என்று பாய்ந்து வந்தவர், பெரியவள் ஆராதனாவிடம் இருந்து குழந்தை ஆராதனாவை வாங்கி கொண்டார். குழந்தையின் முகத்தை கைகளில் தாங்கியபடி முத்தங்கள் பல கொடுத்தவர், இவளிடம் நன்றி உரைக்கவும் அங்கே கூட்டம் கூட ஆரம்பித்தது. தேவேந்திரன் வதனா மற்றும் சில உறவினர்கள் வந்து விட்டனர்.
இவளை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி வெளியே கூட்டி வந்த அச்சிறுவன், “ஆன்ட்டி நான் கிளம்புறேன். சான்ஸ் கிடைச்சா மீண்டும் பார்க்கலாம்”. சொல்லிவிட்டு அவள் கண்முன்னே அவன் மாயமாய் மறைந்து விட்டான்.
‘ஆ..ஆ…இவன் எங்கே போனான்..? என்னை போய் ஆன்ட்டி என்று அழைக்கிறானே. பாவி! நான் உனக்கு ஆன்ட்டியாடா?! வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டின்னு கூப்பிடுறானே. ஹைய்யோ… ஆண்டவா! இந்த கொடுமையை எங்கே போய் சொல்லுவேன்.’
அவள் அவன் மறைந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்கும்போதே அவளும் ஒரு மாய சூழலில் மாட்டிக் கொண்டாள்.
மீண்டும் அவள் எங்கோ சென்று கொண்டிருந்தாள். இந்த முறை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு சுற்றுப்புறம் நடப்பதை மனதில் உள்வாங்கி பார்த்தாள். அந்த வண்ண சூழல் அவளை இப்போது அவர்கள் காலனிக்கு செல்லும் ஒரு தெருவில் கொண்டு வந்து விட்டது. எங்கே யாரையும் காணோம். எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்..?
அங்கும் இங்கும் இவள் பார்வையை சுழல விட்டு தேடிக் கொண்டிருக்கையில், கையில் குளிர் கண்ணாடியும், சாம்பல் நிறத்தில் சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்த டீன் ஏஜ் பையன் ஒருவன் அங்கே ஓரமாய் நிற்பது தெரிந்தது. அவன் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தான். ஏதோ ஒன்று அவனிடம் இருக்கும் சுற்றுப்புறத்திற்கு பொருந்தாது போல இருந்தது. அவனும் அவன் உடையும் ஒரு தினுசாக இருந்தது. இருந்தும் இப்போது அவள் இருக்கும் சூழ்நிலைக்கு அவனிடம் பேசினால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்றெண்ணத்தில்  அவனை நோக்கி சென்றவள்,
“டேய் பையா!” அழைத்தவள் அவன் திரும்பி இவள் முகம் பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டாள்.

Advertisement