Advertisement

கல்லெறிந்து கலைத்து போட்டாலும்
கலகலவென சிரிப்பேன்
கட்டி கொடுக்க நீ இருந்தால்…
தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த வாலிபனிடன் அங்கிருந்த நாற்காலியில் அமருமாறு சொல்லிவிட்டு தானும் அமர்ந்து கொண்டார்.
“ம்ம்ம்ம்.. சொல்லுங்க எஜமான். வர்மா கோட்டையின் சக்கரவர்த்தி ராஜ சேகர வர்மா அவர்களே சொல்லுங்க… உங்களுக்கு இப்போ என்ன சொல்லணுமோ அதை என்கிட்ட தாராளமா சொல்லலாம். நான் காது கொடுத்து கேட்கிறேன்….” அழுத்தமாய் சொன்னார் கீர்த்தனா.
“ஏன் இப்படி யாரோ மாதிரி பேசுற”.
“பின்ன நீங்க என்ன எனக்கு உறவா…?”
சாட்டையடி கேள்வியாய் அவரது இதயத்தை தாக்கினார். எங்கே எப்படி அடித்தால் வலிக்கும் என்று தெரிந்தவராயிற்றே கீர்த்தனா. கண்களை மூடி இதயத்தின் வலியை குறைக்க விரும்பினார் ராஜசேகர்.
கலங்கிய முகத்துடன் கீர்த்தனாவை பார்த்து,
“உறவுன்னு சொல்லி அதை முடிச்சிக்க விரும்பலை. நீ எனக்கு அதுக்கும் மேலே. பெயர் சொல்லி தெரியவைக்க வேண்டிய உறவு நமக்கு…ள்….ள..து.. இல்லன்னு நான் நினைக்கிறேன். அது உனக்கு புரிஞ்சா சரி”.
உறவினும் மேலானது என்று சொன்னதும் கோப கடலில் தத்தளித்த கீர்த்தனாவின் மனம் அமைதி அடைந்தது.
கொஞ்சம் ஸ்ருதி இறங்க அமைதியாக ஆனால் கூர்மையாக கேட்டார்.
“பெயர் இல்லாத அந்த உறவு என்ன உறவு மிஸ்டர் ராஜசேகர வர்மா. உரிமையான உறவு இருக்கிறவங்களுக்கே மதிப்பு இல்ல. இதுல இப்படிபட்ட உறவுலாம் எங்கி…ருந்து…? சொடக்கு போட்டு முடிக்கறதுக்குள்ள காணாமா போய்டும்”.
“ஷ்… அப்படி பேசாத கீர்த்திமா.. அதுவும் உன் வாயால அப்படி சொல்லாத. அப்பவும் சரி… இப்பவும் சரி… எப்பவுமே நீ எனக்கு ஸ்பெஷல் தான். இதை யார்கிட்டயும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை”. கொஞ்சம் காட்டமாகவே ராஜசேகரும் பதில் கொடுத்தார்.
“அவ்வளவு உரிமை கொண்டாடுபவர் அன்றைக்கு மட்டும் ஏன் என்னை ஒதுக்கி தள்ளுனார். அதுவும் எந்த விளக்கமும் கேட்காமா…? அப்டின்னா என் மேலே நம்பிக்கை இல்லைன்னு தானே அர்த்தம்”.
“ஷ் ஷ் ஷ்…. கீர்த்திமா அப்டிலாம் இல்லைடா…” சொல்லியபடி கீர்த்தனாவின் கைகளை ஆதரவுக்காக பிடித்து கொண்டார். கீர்த்தனா கைகளை விலக்கவில்லை. அவருள்ளும் ஒரு இதம் பரவியது. இது என்ன மாதிரியான உறவு.. யாரேனும் கேட்டால் சொல்ல தெரியாது. நட்பா என்றால்…. இல்லை! காதலா என்றால்.. அதுவும் இல்லை…! அப்படி என்றால் சகோதர பாசமா என்றால்.. அதுவும் இல்லை..! எல்லாம் கலந்த ஒரு புது உணர்வில் பிறந்த உறவு. இதற்கு பெயர் இல்லை. அது எல்லோரிடத்திலும் உணர முடியாது. எல்லோருக்கும் புரியவும் புரியாது.
காதலுக்கும் மேலே உள்ள உறவு… நட்பு என்னும் கைகளுக்குள் அடங்கி போகாத உறவு. தாயின் உறவை போன்றது.. தந்தையின் பாதுகாப்பை உணர்த்துவது… ‘தாயும் தந்தை’யுமான உறவு இது. சில பேருக்கு தான் இப்படி ஒரு நட்பு கிடைக்கும். அவர்கள் உண்மையிலேயே வரம் வாங்கியவர்கள் தான்.
மனம் நெகிழ்ந்து போனார் கீர்த்தனா. அவரது கைகளை பிடித்துக் கொண்டிருந்த ராஜசேகருக்கும் புரிந்தது.
“மறந்துரு.. நான் அன்றைக்கு அப்படி நடந்துருக்க கூடாது . மன்னிச்சிடு”. மனமுவந்து வருந்தினார். கீர்த்தனாவின் மனமும் சேர்ந்து கலங்கியது. எதுவும் பேசவில்லை. அமைதியான அந்த சூழ்நிலை அவர் நினைவுகள் பின்னோக்கி இழுத்து சென்றது. ராஜசேகர்க்கும் கீர்த்தனாவுக்கும்மான இளமை பொழுதுகள் கண்முன்னே கட்சியாய் விரிந்தது.
அப்போது கீர்த்தனாவிற்கு பத்து வயது இருக்கும். வேலை நிமித்தமாக அவரது குடும்பம் புது இடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தது. அங்கே தான் ராஜசேகரை சந்தித்தது. இவரது வீட்டுக்கு நேர் எதிர்வீடு தான் ராஜ சேகரதும். அந்நியோந்நியமாய் ஆரம்பித்தது அவர்களது நட்பு. ஒருவர் பின் ஒருவர் சுற்றி கொண்டே திரிவர்.
அது போல அன்று ஒரு பௌர்ணமி மழை நாளில் கீர்த்தனாவிற்கு வெளியே செல்லவேண்டும் என்று ஆவல் பிறந்தது. வீட்டில் சொன்னால் அடி விழும். எனவே யாருக்கும் தெரியாமல் வீடிஞ்ச ஜன்னல் வழியே போர்வையை கயிறாக கட்டி கீழே மெதுவாக இறங்கி வீட்டின் கம்பவுண்டு சுவர் ஏறி குதித்து எப்படியோ யார் கண்ணிலும் படாமல் வெளியே வந்து விட்டார்.
“ஷ்… ஹப்படா..”
என்று வெளியே வந்து ஒரு அடி எடுத்து வைத்திருப்பார். அதற்குள் அங்கே எதிரே ராஜசேகர் நின்றிருந்தார்.
ஆச்சர்ய பட்டுப்போனார் கீர்த்தனா.
“டேய் ராஜு! எப்படிடா கண்டுபிடிச்ச.?! எங்கேபோனாலும் டோகோமோ டாக் மாதிரி பின்னாடியே மோப்பம் பிடிச்சி வந்துடுற.. எப்படிடா…??”
“ஹம்ச்… அதை விடு.. இந்நேரத்துல எங்கே கிளம்பிட்ட.. மழை வேற தூத்துது..ஹ்ம்ம்?”
“இல்லடா.. இந்த சாரல் மழையில நனைஞ்சிக்கிட்டே அந்த பால் நிலாவை பார்க்கணும்ன்னு தோணிச்சிடா.. அதான் சட்டுன்னு கிளம்பிட்டேன்”.
“யார்கிட்டயும் சொல்லாம திருட்டுத்தனமா..?!
ஹ்ம்ம்..
நல்ல ஆசை போ. சரி வா. நானும் கூட வரேன். பட் சீக்கிரம் திரும்பி வந்துரனும்”. அலுத்து கொண்டாலும் அக்கறையாய் அழுத்தமாய் டீல் பேசியே கூட்டி சென்றான்.
இருவர் மட்டும். அந்த நிலவொழியில் காலாற நடந்தபடி, அந்த அழகான சூழ்நிலையை ரசித்தபடி செண்டிருந்தனர்.
இதமான சூழ்நிலை மனதை வெகுவாக இலகுவாக்கியது. இதழ்கள் தானாக பாடியது…
காதல் கொஞ்சம்…
காற்றுக் கொஞ்சம்…
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம்…
தூரம் இல்லை…
தூவானமாய்…
தூவும் மழை…
அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம்வரை செல்வேன்..
விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்
காணக் காத்திருப்பேன்…
காதல் கொஞ்சம்…
காற்றுக் கொஞ்சம்…
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம்…
தூரம் இல்லை…
தூவானமாய்..
தூவும் மழை…
முதல் வரி அவன் பாட.. அடுத்த வரி அவள் பாட ரம்மியமாக சென்றது அவர்களது நடைபயணம். காலார நடந்தபடி அருகே இருந்த கடற்கரைக்கு வந்திருந்தனர். அங்கே பால் நிலா என்னை அள்ளி பருக வா என்று காற்றோடு காற்றாக கலந்து தூது அனுப்ப… அலைகடல் நிலாமங்கையை கவர வேண்டி அலை அலையாய் நடனம் ஆட… பார்ப்பதற்கே கண் கொள்ளா கட்சியாய் இருந்தது.
கைகளை கன்னத்தில் தாங்கியபடி அந்த நிலா மங்கையை ரசித்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.
“டேய் ராஜு.. நிலா எவ்ளோ அழகா இருக்குது பார்த்தியா…?? பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குதுடா…”
“ஹ்ம்ம்… அது சரி.. இங்கேயே டேரா போட்ருலாம்னு முடிவு பண்ணிட்டியா…?”
“ஹேய்.. அப்டிலாம் இல்ல.. கொஞ்ச நேரம் தான். நான் தான் உனக்கு டீல் பேசியிருக்கிறேனே.. சோ புல் டே லாம் ஸ்டே பண்ணுற ஐடியா இல்லை. சோ கூல் பேபி”.
மீண்டும் நிலா பெண்ணிடம் அடைக்கலம் புகுந்து கொண்டார் கீர்த்தனா. இருவரும் அப்படியே கொஞ்சம் அந்த நிலவொளியில் நனைந்தனர்.
நேரம் கடந்து கொண்டிருந்தது.
“ம்ம்ம்… போதும் கீர்த்தி. கிளம்பலாம். இல்லன்னா லேட் ஆகிடும். யார் கண்ணுலயாவது மாட்டிருவோம்”.
“முஹூங்.. இன்னும் கொஞ்ச நேரம்டா.. பிளீஸ்….” கண்களை சுருக்கி கேட்ட அழகில் ராஜசேகர் மயங்கி போனார். குழந்தை தாயிடம் கெஞ்சுமே அது போல இருந்தது. இப்படியே சில பல கெஞ்சல் போட்டு நேரம் கடத்தினார் கீர்த்தனா. நேரம் கடக்கவே பொறுத்து பார்த்தவர் அவர் கைகளை பிடித்து எழுப்பினார்.
“கீர்த்தி.போதும். எழுந்திரு”.
“ஹேய்… பிளீஸ்…”
“நோ… கம் ஆன். கெட் அப்..”
சலித்து கொண்டே எழுந்தார் கீர்த்தனா. ‘கிளம்பவா சொல்கிறாய் இருடா உனக்கு விளையாட்டு காட்டுகிறேன்’. எண்ணிய மாத்திரத்தில் ஓட்டம் பிடித்தார்.
“ஹே… நில்லு.. ஓடாத….
நில்லுன்னு சொல்றேன்ல..
ஹே..”
“முடிஞ்சா பிடிச்சிக்கோ…”
சொல்லியபடி மூச்சிரைக்க ஓடியவர் ஒரு கட்டத்தில் எதுவோ தடுக்க கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
“ரா…..ஜு…” கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டு ராஜசேகர் விரைந்து சென்றார்.
கீழே விழுந்து கிடந்த கீர்த்தனாவை கை கொடுத்து தூக்கி விட்டவர். “பார்த்து போக வேண்டியது தானே. இப்படியா கால் கையை உடைச்சு வச்சுப்ப..” ஆடையில் ஒட்டியிருந்த கடல் மணலை தட்டி விட்டார்.
“ஹே.. அது என்ன…?!” கீர்த்தனா சுட்டிக்காட்டிய திசையில் ராஜசேகரது பார்வையும் சென்றது.
குனிந்து அந்த பெட்டியை கையில் எடுத்தார் ராஜசேகர்.
“பரமபதம் கேம் மாதிரி இருக்குதுடா..”
மரத்தாலான அந்த சதுரவடிவ பெட்டியின் நடுவில் சதுரமான கட்டத்திற்குள் சில எண்களும் ஏணிகளும் பாம்புகளுமாய் ஆன வரைப்படங்களும் அதில் இருக்க, அந்த எண்கள் அடங்கிய சதுர வடிவத்தின் வலது மற்றும் இடது புறத்தில் இருபுறமும் மூன்று சிறிய கட்டங்கள் அடங்கியதுமாய் அதன் மேலே ஏதோ எழுத்துகளுமாய் இருந்தது.
“ராஜு இதுல ஏதோ எழுதி இருக்கிற மாதிரி தெரியுதுடா..”
“ம்ம்ம்ம்… கொஞ்சம் தள்ளு. சரியா வெளிச்சம் இல்லை.நிலா வெளிச்சத்துல பார்ப்போம்”.
“குறிப்பு மாதிரி இருக்குதுடா. எப்படி இந்த கேம் விளையாடனும்ன்னு சொல்லியிருக்கிறாங்க போல…”
“ஹ்ம்ம்… எனக்கும் அப்படி தான் தோணுது”.
ஆனால் இதற்கு விளையாட தாயகட்டை வேணுமே… அது இல்லையே. இந்த பாக்ஸ் கிடைச்ச இடத்துல போய் பார்ப்போமா..?
“அதெல்லாம் வேண்டாம். இந்த இருட்டுல அங்கே போறது சரியா இருக்காது”.
“அதுவும் சரி தான். இந்த இருட்டுல போய் தேடுனாலும் கிடைக்காது”.
“சரி சரி நடையை கட்டு. வீட்டுக்கு போய்கிட்டே பேசலாம்”.
“டேய் டேய் அதை என் கையில குடுடா. ஒரு முறை பார்த்துகிட்டு தர்ரேன்” .
“நோ. உன் கையில தந்தா நீ இது என்னது ன்னு ஆராய்ச்சி பண்ணியே நேரத்தை கடத்துவ. ஹ்ம்ம்… நட நட…”
“போடா…”
வீட்டை நெருங்கும் சமயம் கீர்த்தனா ராஜ சேகர் கையில் இருந்து அந்த பெட்டியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
“ஏய்… திருடி…நில்லுடி…”
“போடா…”
கத்தியபடி ஓடியவரை ராஜ சேகர் கொஞ்ச நேரத்தில் பிடித்துக் கொண்டார்.
“ஹே. அதை முதல என்கிட்ட கொடு”.
“முஹும்… தர மாட்டேன். விடுடா..”
“கீர்த்தி ‘தா’ன்னு சொல்றேன்ல..”
இருவரது கைகளிலும் பெட்டி அங்கேயும் இங்கேயும் இழுப்பட்டது. அப்போது சடாரென வானத்தில் மின்னல் வெட்டியது. அதில் பயந்த கீர்த்தனா சட்டென தன் கையை விட்டுவிட்டார். ராஜுவின் கையில் இப்போது பெட்டி மாறியது.
“டேய்… தாடா..”
“நோ நோ.. தள்ளி போ”.
“ஏய் அதை பாரு. ஏதோ பாக்ஸ் ஓபன் ஆகிருக்கு”.
கையில் இருந்த பெட்டியை பார்த்தார் அவர்.இருவரும் பெட்டியை இழுத்ததில் எப்படியோ திறந்திருக்க வேண்டும்.
இடதும் வலதுமாய் குறிப்புக்கள் எழுதி இருந்த பகுதில் வலப்புறமிருந்த அந்த சிறிய மூன்று வடிவ சதுர பக்கத்தின் நடுவில் இருந்த ஒரு சதுர வடிவ பகுதி மட்டும் திறந்த படி இருந்தது.
“இது ஏதோ பாக்ஸ் போல இருக்குதுடா.. அப்போ இடது பக்கத்துலயும் பாக்ஸ் இருக்க சான்ஸ் இருக்குதுடா. அம்மா, இந்த பாக்ஸ் குள்ள என்ன இருக்கு..?? ஏதோ மண்ணு மாதிரி இருக்கு…?!”
“பொறு. நான் பார்க்கிறேன்”.
பார்க்க மண் துகள் போல தான் இருந்தது. இடது பக்க பாக்ஸ்யை திறக்க பார்த்தார் அவர். ஆனால் முடியவில்லை. இது யூஸ் பண்ணி நாளாகிருக்கும் போல. ஜாம் ஆகிருக்கு.
“ஹ்ம்ம்.. இங்கே காட்டு. என்னென்ன குறிப்பு எழுதி இருக்குதுன்னு பார்ப்போம்”.
சந்திர தேவதை
சூரிய கதிரை
திருடி கொள்ள..
வான்மகள் மடி திறக்க..
அங்கே புதிதாய் பிறந்தது
புது உலகம்..!
நேரத்தை தாயம் கொண்டாடிய படியே!
விரும்பினால் என்னை தொடு..!
என்னதுடா இது…? ஏதோ புதிர் மாதிரி இருக்கு… ஒன்னும் விளங்கலையே..?
“எனக்கும் சரியா தெரியல கீர்த்தி.
வேற என்ன குறிப்பு எழுதி இருக்குதுன்னு பார்ப்போம்”.
நான் நீயாகலாம்..
நீ நானாகலாம்…
நாம் காணாமல் லாகளாம்…
என்னை தாயம் விருந்தாக்கினால்…
உன் விருப்பப்படி என்னை உனதாக்கிக்கொள்!
“அப்படின்னு எழுதியிருக்கு. அப்படின்னா என்னவா இருக்கும்…?”
“சரி அதை விடு. இந்த கேம் எப்படி விளையாடுறதுன்னு ஏதாவது ரூல்ஸ் போட்ருக்கான்னு பார்ப்போம்..”
குற்றமில்லை குற்றமில்லை..
காலபகவானை வதம் செய்தால்..
குறுக்கு வழி துணிந்தால்…
கண்சிமிட்டும் நேரத்தில் 
காணாமல் போவாயடா…!!
“அப்படின்னு இங்கே ஒரு குறிப்பு இருக்கு கீர்த்தி. எனக்கென்னமோ இந்த கேம்மை தப்பா யூஸ் பண்ண ஏதோ பிரச்சனை வரும்னு தோணுது”.
“ஹ்ம்ம்… ஏமாத்தாமா நேர்மையா விளையாட சொல்லியிக்கும்மா இருக்கும்டா”.
“ஹ்ம்ம்..”
முக்காலமும் தோகை விரித்தாட
ரசித்து பார்க்கையில்
தற்காத்து கொள்ள..
உற்ற தோழனாய் 
உடன் வருவேன் நான்…!
அப்படின்னு எழுதியிருந்தது.
“ஹ்ம்ம்… நான் நினைக்கிறேன் இது திறக்காத இந்த பாக்ஸ் பற்றின க்குளுவா இருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தா நமக்கு உதவி செய்யுமா இருக்கும்”.
“ஹ்ம்ம்… அப்படியும் இருக்கலாம். சரி சரி டைம் ஆகுது. நீ வீட்டுக்குள்ள போ. நாளைக்கு பார்க்கலாம்”.
“டேய் டேய்.. பிளீஸ் டா…இவ்ளோ தூரம் வந்தாச்சு. ஒரே ஒரு தடவை இந்த கேம் விளையாண்டு பார்த்துட்டு அப்புறம் போகலாம்டா…”
“உனக்கு என்ன ஆச்சு கீர்த்தி… இன்றைக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கிற..?”
“பிளீஸ் டா..” விட்டால் அழுது விடுவாள் போல கண்ணில் நீர் கோர்த்திருந்தது.
“ஹ்ம்ம்… சரி ஒரே ஒரு தடவை தான். முதல உன் வீட்டுக்குள்ள போவோம். இங்கே தெருவுல நின்னு விளையாட வேண்டாம். போ. உள்ளே போ. நானும் வரேன்”.
“ஹைய்யா.. ஜாலி…”
துள்ளி குதித்து மான் குட்டியாய் கீர்த்தனா செல்ல… பின்னே ராஜ சேகரும் சென்றார். தங்கள் விதியே இதனால் மாற போகும் என்பதை அறியாமல்….

Advertisement