Advertisement

அட இது என்ன கூத்து…
அட அது என்ன பாரு…
அட இது எப்படி ஆச்சி..
அட அது எங்க போச்சி…
அவ்ளோ தான் வாழ்க்கை…
யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உள்ளம் கூப்பாடு போடுமாம். அது போல யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தாரோ அவரையே இன்று கண்ணெதிரே கொண்டு வந்த விதியை சபித்து கொண்டார் கீர்த்தனா.
தன் எதிரே அத்தனை வயதாகியும் அதேபோல அன்று பார்த்த அதே ஆளுமை தோரணை கொஞ்சமும் குறையாமல் வந்து நின்ற அந்த நரைத்த இளஞனை கொலைவெறியோடு முறைத்து கொண்டிருந்தார் கீர்த்தனா.
“ஹேய்.. கீர்த்தி.. நீ தானா இது.. பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு. எப்படி இருக்க..?!”
யாரோ யார் கூடவோ பேசுகிறார்கள் என்ற தோரணையில் நின்றிருந்தவர் அவரது கீர்த்தி என்ற அழைப்பில் முகம் கடுமையாக , ரொம்பவும் அக்கறையாய் கேட்டவரை இன்னும் அதிகமாய் முறைத்து பார்த்தார் கீர்த்தனா.
“ஹேய்.! நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கிறேன். என்னை நியாபகம் இல்லையா..?”
“மறக்க கூடிய மனிதரா நீங்கள். எப்படி அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியும்”. விரக்தியாய் பதிலளித்தார் கீர்த்தனா.
“நீ இன்னும் பழசை மறக்கலயா கீர்த்தி.?!”
“மறந்தால் தானே நினைப்பதற்கு..?
எல்லாத்தையும் மறக்கிற மாதிரியா நீங்க அன்றைக்கு நடந்துகிட்டிங்க?!”
“ஹம்ச்.. ஏன் இவ்ளோ ஹார்..ர்..ஷா.. பிஹேவ் பண்ணுற. அன்றைக்கு இருந்த நிலைமையே வேற”..
“என்ன நிலைமை…?! ஹாங்..!? சக்கரவர்த்தி ராஜ சேகர வர்மாக்கு அப்படி என்ன பரிதாபமான நிலைமை?? கொஞ்சமாது பொருந்துற மாதிரி சொல்லுங்க..”
“ஏன் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற..?”
“பின்ன என்ன உங்களை கொஞ்சி புகழ் பாடி ஆராதிக்க சொல்லுறீங்களா…?!”
அவரது வஞ்ச புகழ்ச்சி அணியால் லேசான குறுநகை மீசையோரமாய் துடித்தது அந்த நரைத்த வாலிபனுக்கு. ( வஞ்ச புகழ்ச்சி அணி என்பது தமிழ் இலக்கியத்தில் புகழ்வது போல செய்து குற்றம் சுமத்துவது). மீசையை முறுக்கிவிட்ட படியே லேசாக தலை சாய்த்து சிரித்து கொண்டார்.
பெப்பர் சால்ட் ஹேர் என்பார்களே அது போல கருப்பும் வெள்ளையுமாய் கலந்த கேசம். இன்றைய தலைமுறையினரின் ஸ்டைல்க்கு ஏற்ப நாகரிகமாய் வெட்ட பட்ட கேசம் ஜெல் போட்டு நிமிர்ந்து நிற்க… முறுக்கிய மீசையும் நவ நாகரிகமாக காட்சியளிக்க.. கொஞ்சம் பணக்கார கலையும் அழகு சேர்க்க… கொஞ்சம் சொக்கி தான் போனார் கீர்த்தனா.
அதே வசீகரம்… அதே ஸ்டைல்… வயசானாலும் இன்னும் உன்னோட அழகும் கம்பீரமும் கொஞ்சம் கூட குறையலடா. கீர்த்தனாவின் உள்ளம் மயங்கி தான் போனது.
மயங்க நினைத்த மனதை தடுத்து கோபம் என்னும் கவசத்தை ஆயுதமாக பயன்படுத்தினார் கீர்த்தனா. எள் பொரியும் அளவு கோபத்தை முகத்தில் தாண்டவமாட விட்டப்படி நிமிர்ந்து கண்ணோடு கண் பார்த்து முறைத்தார் இப்போது.
“ஹம்ச்..” அவரது தோற்றத்தில் தன் நிலையை எண்ணி அலுத்து கொண்டவர்,
“ஏட்டிக்கு போட்டியா பேசாதா கீர்த்தி. கொஞ்சம் அமைதியா பேசு. வா இங்க எங்காயாவது ரீலாக்ஸா உக்காந்துகிட்டே பேசலாம்”.
“ஒன்றும் தேவையில்லை. அவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆளுகின்ற எஜமான் நீங்க. போயும் போய் ஒன்றும் இல்லா எங்க கிட்ட பேச என்ன அவசியம் வேண்டி கிடக்கு…?!”
ரொம்பவும் முறுக்கி கொண்டார் கீர்த்தனா. அவர் அன்று பட்ட வேதனை அப்படியோ…?!
“ஹ்ம்ம்…” ஆழ்ந்த பெருமூச்சினை விட்டவர் கீர்த்தானவை நிமிர்ந்து பார்த்து அந்த வார்த்தைகளை சொன்னார்.
“மன்னிச்சிடு”.
ஒரு நொடி கீர்த்தனாவால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. கேட்டது நிஜம் தானா…??!
அ..அ..அ..வர் தானா.. இதை சொன்னது…?? அதுவும் எத்தனை இறுமாப்பாய் இருந்தவர் இன்று ஒன்றும் இல்லாதது போல… எதையோ இழந்தது போல… இத்தனை தூரம் அதுவும் தன்னிடம் இறங்கி வரும் அளவிற்கு என்ன ஆயிச்சு.? பழைய உறவில் இருந்த பாசம் லேசாக துளிர் விட்டது. இயற்கையாகவே இரக்க குணமும், அன்புள்ளமும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும், கொண்டவரால் இவரது கசங்கிய முகத்தை அதற்கு மேலும் காண முடியவில்லை. ஒன்றும் பேசாமல் இரண்டு அடி எடுத்து அவரை கடந்து சென்றவர் பின் அவரை அமைதியாக திரும்பி பார்த்து சொன்னார்.
“பாலோவ் மை ஃபுட் ஸ்டெப்ஸ்”
நரைத்த இளைஞன் புன்னகைத்து கொண்டார்.
“நீ இன்னும் மாறவே இல்லை கீர்த்தி. கொஞ்ச நேரம் கூட உன்னால கோபத்தை தக்க வச்சிக்க முடியல. இதுல எப்படி இத்தனை வருஷம் என்கிட்ட பேசாம இருந்த”. மனதினில் நினைத்து கொண்டவர் காரை லாக் செய்து விட்டு கீர்த்தனாவின் பின் தாயோடு செல்லும் பூனை குட்டியாய் நடந்தார்.
பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருந்தது. சிங்கம் கூட மானுக்கு இரையாகிறதே… அதுவும் தானாக மனமுவந்து…
#################T####
“சத்தியமா நான் சொல்லுறேன்டா…
உன் தொல்லை என்னை கொல்லுதடா…
பைத்தியமா நான் சுத்துறேன்டா..
உனக்காக நான் கோமாளி ஆகிறேன்டா…
நீ..தான் நீ…தான்…
எனக்கேத்த வில்லன் நீதான்…
நான் தான் நான் தான்..
உனக்கேத்த பேமாளி நான் தான்…
அட கிறுக்கா கிறுக்கா…
நான் தான் இப்போ கிறுக்கா…
ஹ்ம்ம்…..ஹ்ம்மம்ம்…….
மம்ம்ம்ம்ம்ம்ம்…..”
வேண்டுமென்றே அந்த குலோத்துங்க ராஜாவை வெறுபேற்ற வேண்டியே அவனுக்கு கேட்கும் படி கதவில் மறைந்து இருந்த படி ரிதமாக பாடியபடியே கொஞ்சம் தாமதமாகவே அவனது கேபினுக்குள் சென்றாள்.
‘ நீ சொ..ன்..னா நான் உடனே பின்னாடி ஓடி வந்துரணுமா.. போடா… ‘
பொறுமையாய் எடுத்து சொல்லியும் என் பேச்சு கேட்காமல் வேண்டும் என்றே தாமதமாக வந்த தன் ஆருயிர் காதலி ஆராதனாவை முறைப்பதை தவிர வேறு எதுவும் அவனால் இப்போதைக்கு பண்ணமுடியவில்லை.
“ஹ்ம்ம்.உட்காரு”. அழுத்தமாய் உத்தரவிட்டான்.
இதுக்கெல்லாம் அசருர ஆளா நான்… என்பது போல வெகு நிதானமாக அமர்ந்தாள் ஆராதனா.
கையில் இருந்த பைலை திறந்து அதில் தான் குறித்து வைத்திருந்த ஐடியாக்களை அவனிடம் சொல்லலானாள். ஒவ்வொரு குறிப்பையும் அதற்கு எப்படிப்பட்ட ஓவியம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தனது விருப்பங்களை முன் வைத்தாள்.
“இட்ஸ் மை ஒப்பினியன். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்”.
அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்து எதையும் அனுமானிக்க முடியவில்லை. அழுத்தமாய் முகம் காட்சியளிக்க டேபிள் மீது இருந்த பேப்பர் வெயிட்டரை அழகாக அங்கும் இங்கும் உருட்டி நாட்டியம் ஆட வைத்து கொண்டிருந்தது அவனது இடக்கை. அது கூட நளினமாய் இருந்தது.
‘எவ்வளவு சுத்தமாய் பளிச்சென இருக்கிறது விரல்கள். விரல் நகம் கூட அவனது ஆளுமையை இப்படி பறைசாற்றுகிறதே. அட குலோத்துங்கா… ஏன்டா இம்புட்டு அழகா இருந்து தொலைக்கிற….??
ஹ்ம்மம்ம்…
சரி தான். இவன் ஏதோ ஃபார்ம்க்கு போய்ட்டான். அதான் பிள்ளை இவ்ளோ சைலெண்ட்டா இருக்கிறான். இன்னைக்கு நல்லா வச்சி செய்ய போறான்.அது மட்டும் உறுதி ஆரு பி கேர் ஃபுல்லு மா… “
அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும் இவளே பேச்சை தொடர்ந்தாள்.
“தென் உங்களுக்கு ஒன்று தெரியுமா… ரவிவர்மா வரைந்த ஓவியங்கள்.. மிகவும் புகழ் வாய்ந்தவை அதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை. ஆனாலும் ஏன் சொல்றேன்னா.. அவர் சின்ன நுணுக்கங்களையும் கலைநயத்தோடு வரைந்திருப்பார்.. நான் அந்த அளவுக்கு வரையல. ஆனாலும் மோசம் இல்லை”.
சிரித்தபடி அவனருகே தன் நாற்காலியை நகர்த்தி, அவனை பார்த்து பேசலானாள்.
“ஓவியங்களை நேர் பார்த்து பேசும் அழகு கொண்டவை அப்படின்னு சொல்லுவாங்க. இதோ இந்த பிச்சர் பாருங்க. என்டரன்ஸ் ப்ளேஸ்ல எல்லோர் பார்வையும் படும் இடத்துல வச்சா சூப்பர்ரா இருக்கும்”.
மனதை மயக்கும் அந்த மான் விழி கண்களை அங்கும் இங்கும் உருட்டியபடியும், ரூச் தடவாமலே சிவந்த கன்னங்கள் பற்றி அக்கறையின்றியும், உதட்டில் புன்னகையுடனும், கைகளை காற்றிலே விளையாடவிட்டபடியும், விரிந்திருந்த கூந்தலை கதோரோமாய் ஒதுக்கியபடியும் அவள் பேசியதை அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன்.
அவளறியாமல் அவளை நோக்கி நெருங்கி வந்தவன் அவள் கையில் இருந்த பேனாவை டேபிள் மீது வைத்தவன், அவள் இரு கைகளையும் தன் கைகளுக்குள் அணைத்து, அவளை நிமிர்ந்து பார்த்தான்.
எதிர்பாரமல் நிகழ்ந்த இந்த தொடுகையில் பெண்ணவள் உள்ளம் ஒரு நொடி நின்றது. ஒரு வித கலக்கத்துடன் அவனை அவளும் நிமிர்ந்து பார்த்தாள்.
“எவ்ளோ அழகா இருக்கிற தெரியுமா…?!”
‘ஹாங்.. இவன் என்ன கேணையனா..? லூசு மாதிரி பேசுறான். நான் என்ன சொல்லிகிட்டு இருக்கிறேன் இவன் என்ன செய்யுறான். மண்டையில நட்டு கலந்துட்டா…?’
‘கொஞ்சம் முன்னாடி கூட தெளிவா தானயா இருந்தான். அதுக்குள்ள பிள்ளைக்கு என்ன ஆச்சி..?! ஒன்னும் விளங்களையே…??’
“உனக்கு என்னோட தவிப்பு கொஞ்சம் கூட புரியலல..? லூசு மாதிரி தெரியிறேனா?!”
‘அதை எப்படிப்பா என் வாயால சொல்லுவேன்…?’ தமிழ் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாணியில் சலித்து கொண்டாள் ஆரு மனதில்.
“உன்னை பார்க்காம நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்”. சொல்லியபடி இதயத்தில் அவளது வலக்கையை எடுத்து அழுத்தியவன்…
“இங்கே நீ ராஜ்ஜியம் பண்ணி என்னை உனக்கு அடிமையாக்கிட்ட…”
‘அட.. இது என்ன கூத்து.. நான் எப்போடா அங்கே வந்தேன்… ராஜ்ஜியமாம் ராஜ்ஜியம். வேற யார்கிட்டேயும் சொல்லிராத.. பைத்தியம்ன்னே முடிவு காட்டிருவாங்க. நானே பத்து பைசாக்கு பிரயோசனம் இல்லாம இருக்கேன். நான் உன்னை அடிமையாக்குனேனா…? உனக்கு மனசாட்சியே இல்லையாடா…?! கண் அவிஞ்சி போயா கிடக்குறா…?’
“உன்னை சந்திக்கிற ஒவ்வொரு தடவையும் சொல்லிரலாம்ன்னு நினைப்பேன் ஆனால் அதற்கான அவகாசம் கிடைக்காது”.
‘தலையும் புரியல.. வாலும் புரியல.. சாவடிக்கிறடா…’
“உனக்கு தெரியுமா…?!”
‘என்னது..?! நீ பைத்தியம் மட்டும் இல்லை அவார்ட் வாங்குன மென்டல்ன்னா…?’
“நான் உன்னை முதல் முதலா எப்போ மீட் பண்ணேன் தெரியுமா…?!”
‘ஹ்ம்ம்… சொல்லி தொலை…’
“நம்மளோட சின்ன வயசுல மீட் பண்ணியிருக்கிறேன். அதை இப்போ நினைச்சாலும் மனசுக்கு இதமா இருக்கு”. பேசியபடியே அவளது கைகளில் முத்தம் ஒன்றினை பரிசளித்தான். சிலிர்த்து போனாள் ஆராதனா.
‘இவனை எப்போது நான் பார்த்தேன். ஒன்னும் நியாபகத்துக்கு வர மாட்டுக்குதே…’
சிந்தனையில் புருவம் சுருங்க யோசித்தவளை.. அருகே இழுத்து அவளது புருவத்தை நீவி விட்டான். ஆண்மகனது மெல்லிய தொடுகை அவளுள் காதல் ஹார்மோன்களை தட்டி எழுப்ப போதுமானதாக இருந்தது.
விழி உயர்த்தி அவன் முகம் பார்த்தாள். அந்த கண்கள் பொய் பேசுவது போல தெரியவில்லை. ஆனால் எப்படி இது சாத்தியம். ஹ்ம்ம்.. இனி மனதுக்குள் பேசி ஒரு பயனும் இல்லை. அவனிடமே வாய்விட்டு கேட்டுவிட வேண்டியது தான்.
“நீங்க என்ன சொல்லறீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல” ஒரு வழியாக வாய் திறந்து கேட்டுவிட்டாள்.
அமர்ந்தபடியே அவளை தன் நோக்கி இன்னும் அருகில் இழுத்தவன், அவளது ஆடைக்குள் ஒழிந்திருந்த செயினை கண் முன்னே தூக்கி காட்டினான். நீலம் பச்சை கற்கள் பதித்த அந்த டாலர் அங்கும் இங்கும் நடனம் ஆடியபடியே மின்னியது.
அவனது இத்திடீர் நெருக்கத்தில் மலங்க மலங்க விழித்தப்படி இருந்தவள், அவனது இந்த தொடுகையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்படி இவன் அந்த இடத்தில் தொடலாம். விரல் நுனி கூட படாமல் அவன் செயினை எடுத்தது வேறு விஷயம். அந்த நிமிடம் பெண்ணவள் எதையும் உணரவில்லை.
எப்படி இவன் தொடலாம். அதுவும் இல்லாமல் எனது பெர்சனல் செயினை இவன் எப்போது பார்த்தான். இவனுக்கு எப்படி தெரியும். இவ்வளவு தூரம் என்னிடம் உரிமை எடுத்து கொள்ள இவனுக்கு முதலில் யார் அனுமதி கொடுத்தது…?
யூ ராஸ்கல். ஹவ் டார் யு…?! மனம் குமுறினாள் பெண். ஜிவு ஜிவு வென்று கோபம் தலைக்கேறியது. காதில் புகை வராத குறை.
நொடியும் யோசிக்காமல் அவளது வலக்கை அவனது இடக்கன்னத்தை பதம் பார்த்தது.
முதல் அடி..! எந்த ஆண்மகனுக்கும் பிடிக்காதது.
விவரம் தெரிந்த நாளிலிருந்து யாரிடமும் தலை வணங்காமல், யார் கையும் மேலே படாமல் பொத்தி பொத்தி வளர்ந்தவன்அதுவும் தங்க தட்டிலே சீராட்டி வளர்ந்தவன், வாங்கிய முதல் அடி. அதுவும் தன் உயிருக்கு உயிரான காதலியிடமிருந்து. எப்படி இருக்கும் அந்த ஆண்மகனது நிலை.
கை கொட்டி சிரித்தது விதி. விதியை சதியால் வெல்ல வேண்டும். அதை விட்டு காந்திய வழியில் போனால் அடி என்ன மிதி கூட கிடைக்கும். இதை இந்த வளர்ந்த ஆண்மகனுக்கு யார்
சொல்வது..?!
முகம் ரௌத்திரமாக மின்ன, பற்கள் நறு நறுவென அரைபட, உடல் இறுக அவன் இருந்த நிலையே அவனது கோபத்தின் அளவை பறைசாற்றியது.
“அக்னி குஞ்சொன்று கண்டேன்
கொழுந்துவிட்டு எரிந்தபடி…
அடங்கா திமிராய் தெரிந்ததும்
கெட்டி இழுக்க விளைந்ததடி- சகியே
பாலும் பழமும் வேண்டாம்
புசிக்க உன் காதல் போதும்
நித்தமும் உன்மத்தம் அடைந்து
நினைவெங்கும் நீயாக வேண்டும் – சகியே”
அழுத்தம் திருத்தமாய் தன் மனதில் அவளுக்கான காதலை எடுத்துரைக்க… அவளோ அவனை கண்ணாலே பஸ்பமாக்கி விடுவது போல் பார்த்தாள்.
“வீழ்வேன் என்று நினைத்தாயோ?
அகிலமாளும் குலோத்துங்கா…
உன் காதல் சுடரில் மாய
நான் என்ன விட்டில் பூச்சியா?
சிவபெருமானின் சக்தியடா நான்…
வெட்டி வீழ்த்தி விடுவேன்
மங்கையவள் அங்கம் தீண்டினால்…!
மதியிழந்து மாண்டு போகாதே
வர்மா குலத்தின் ஒற்றை வேந்தே…!”
உனக்கு மட்டும் தான் பாரதி வரியையும் சங்க தமிழையும் உனக்கு சாதகமாக மாற்ற முடியுமா…? என்னாலும் முடியுமடா… நான் ஆராதனா டா… அனைவரும் ஆராதிக்க பிறந்த பெண் குல வேங்கையடா…
பெண்ணவள் மூச்சு காற்று கூட கர்ஜித்தது. ஆண்மகன் முன் சற்றும் தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை.
அவளை பொறுத்தவரை தவறு தவறு தான். அது எப்படி அவன் என்னை தொடலாம்.? நானே கொஞ்சம் தடுமாறினாலும் இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு அதிகாரம் என்னிடத்தில் வந்தது.. அவனுக்கு பிடித்திருந்தால் உரிமை உண்டா…? நான் சொ..ல்..ல வேண்டும். நான் ஒத்துழைக்க வேண்டும். இவன் பாட்டிற்கு என்னை ஆக்கிரமித்து ஆள நினைத்தால் எப்படி..?
உச்ச கோபத்தில் பெண்ணவள் என்ன சிந்திக்கிறோம்.. என்ன செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் அவனை அடித்து விட்டு.. இப்போது அவனுடன் மல்லு கட்டி கொண்டிருந்தாள்..
அவன் தொட்டவுடன் உருகி உருகி காதல் கொள்ள துடித்த அவளது மனம் இப்போது எங்கே போய் ஒழிந்து கொண்டதோ.. யாம் அறியேன்.. இப்போது இங்கே தீக்கங்காய் இருப்பது சத்தியமாய் அந்த சுட்டிப் பெண் ஆராதனா இல்லை. அது மட்டும் நிச்சயம்.
கோபம் என்னும் அம்பை கண்ணில் தேக்கி இருவரது நாணிலிருந்தும் எந்நேரம் வேண்டுமானாலும் அம்புகள் பாயலாம். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. நொடிகள் நிமிடங்களாக கோபத்தீயின் வீரியம் மெது மெதுவாக வடிய ஆரம்பித்ததும் ஆண்மகன் தாழ்ந்து வந்தான்.
“தப்பான எண்ணத்துல நான் உன் செயினை எடுக்கல. நான் சொல்ல வரதை முதல பொறுமையா கேளு… நீயா ஏதாவது நினைச்சிக்கிட்டு சண்டை போடாதா…” குரல் லேசாக தட்டு தடுமாறினாலும் அழுத்தமாய் சொன்னான்.
கொஞ்சம் ஆசுவாசமானது பெண் மனம். இருந்தும் தன் கம்பீரத்தை தளர்த்தவில்லை. நீ செல்வதால் நான் கேட்கவில்லை. எனக்கு தோன்றியதால் இறங்கி வருகிறேன் என்ற ரீதியில் அமைதியாய் அமர்ந்தாள்.
பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு குணம் உண்டு. நன்மை செய்கிறேன் என்ற பெயரில் ஓவர் அக்கறை எடுத்து கொள்வார்கள். அவர்களாகவே ஒன்றை நினைத்து கொண்டு அதை அன்பால் திணிக்க பார்ப்பார்கள். அது நல்லது என்றாலும் பெண்ணிடம் அவள் விருப்பம் என்னவென்று கேட்க பல ஆண்மகன்களுக்கு தோன்றுவதே இல்லை. எல்லாம் உன் நலனுக்காக தானே என்று முடித்துவிடுவர். ஆனால் பெண் மனம் ஏங்கும்… விரும்பும்.. தவிக்கும்… எதிர்பார்க்கும்…தனது அபிப்பிராயத்தை கேட்க வேண்டி.. ஆனால் அது நடக்கவே நடக்காது.
அது போல தான் ஆராதனாவும் நினைத்தாள். என்னிடம் முதலில் எதற்கும்… எல்லாவற்றிற்கும் விருப்பம் கேள் என்று. ஆண்மகன் அவனை.. அவன் காதலை… தெளிவுபடுத்த விருப்புகிறானே தவிர பெண்ணவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முற்படவில்லை. இது ஆராதனாவின் வாதம்.
எவ்வளவு பொறுமையாக இப்பெண்ணிடம் பேசுகிறேன். இவள் என்னடாவென்றால் வானுக்கும் மண்ணுக்கும் ‘தாம் தூம்’ என்று குதிக்கிறாள். இவள் என்ன எனக்கு அந்நியமா..? இப்படி கூச்சலிடுகிறாள். தொட்டது தப்பு என்றே சொல்லி கொண்டு இருக்கிறாள். இது இவளுக்கு ஓவர் ஆக தெரியவில்லை. அவள் விருப்பத்தை வார்த்தையாக சொல்லாவிட்டாலும், அந்த கண்கள் காதல் சொன்ன பிறகு தானே நெருங்குகிறேன்”. இது ரவி வர்ம குலோத்துங்கன்னின் வாதம்.
அவரவர் வாதம் அவரவர்க்கு நியாயம்.
இங்கே புதல்வன் தன் காதலியுடன் சொற்போர் யுத்தம் நடத்த.. அங்கே அந்த நரைத்த வாலிபன் சிங்கமாய் கர்ஜிப்பதை மறந்து… பூனை குட்டியாய் மானின் பின்னால் செல்கிறார்… ஹ்ம்ம்…
சொற்போர் யுத்தம் முடிந்து காதல் போர் தொடங்குமா…?
புள்ளிமான் பூனை குட்டியை அடித்து துவம்சம் செய்யுமா..?
அடுத்த பதிவில் காணலாம்.

Advertisement