Advertisement

“இதழ் தீண்டாமல்…
விரல் தொடாமல்…
பார்வை வீழ்த்தியது!
கதை பேசாமல்..
லயம் தேடாமல்…
இதயம் சரிந்தது..!
உன்னால்.. எல்லாம் உன்னால்.. !”
தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்…?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ…?! நிழலை தேடவா.. நிஜத்தை ஏற்கவா… ?  மனம் இவனிடத்தில் ஏன் இத்தனை விருப்பமாய் சரணாகதி ஆக விரும்புகிறது… ?! மனதில் ஆயிரம் கேள்விகள் துளைக்க பெண்ணவள் தன் எதிரே அமர்ந்திருந்த அந்த ஆண்மகனின் நெருக்கத்தை விரும்பியே ஏற்றது.
கண்கள் பேச பாஷையில்லை… மூக்கின் நுனி இடைவெளி தூரமில்லை… இதழ்கள் தீண்ட இடமில்லை… ஈருடலும் மோதவில்லை..
ஆனால் எல்லாம் நடந்தது போல ஒரு பிரம்மை மனதில் எழாமல் இல்லை.
இரு உள்ளங்களும் அந்த இடைவெளி கலந்த நெருக்கத்தை விரும்பியது. ஆண் மகன் தன் உள்ளத்தை பெண்ணவளுக்கு ஒரு துளி மிச்சமின்றி கண்களில் காட்டினான். பெண்ணவள் உள்ளம் குழம்பியது. இது சாத்தியமா… இவனிடம் எனக்கு அந்த தேஜாவூவிடம் எழுந்த அதே பாதுகாப்பு உணர்வு எழுகிறதே…?!
அன்று வந்த அந்த நிழல் இங்கே கண்ணெதிரே இருக்கும் நிஜத்திடம் உணர்கிறதே…??!
நிழலும் நிஜமும் நின்று என் உணர்வுகளை இப்படி பந்தாடுகிறதே…?!
அவன் சட்டை துணி உடலில் மோதி காதல் ஹார்மோன்களை நரம்பெங்கும் கடத்தியது. பெண்ணவள் மெதுவாக இமைகளை தாழ்த்த முற்பட்டாள். அதே நேரம் ஆண்மகன் அவனது முகத்தை உயர்த்தினான். இது போதாதா.. சங்கமிக்க…?! அவள் நாசியின் நுனியில் அவனது இதழ் மொட்டுக்கள் பட்டு சிதறியது. முதல் முத்தம். ஆம்.. இதை முத்தம் என்றால் தகும் தானே…??!
இந்த ஜாதி மல்லி பூக்களை விட அழகு நீ என்பதை உணர்த்த கொடுத்தானோ இந்த மூக்கு நுனி முத்தம்?!
கன்ன கதுப்புக்கள் செந்தாமரையாய் மலர்ந்தது அவளுக்கு. அவன் மூச்சு காற்றின் வெட்பம் மூச்சடைக்க செய்தது.
தாக்குப்பிடிக்க முடியாமல் கீழிதழை மேலிதழால் கடித்துக் கொண்டாள். ஆண்மகன் யோக்கியம் காணாமல் போக வழி வகு..த்..த..தோ..??! பெண்ணவளின் இச்செய்கை.! மெதுவாக அவள் நாடியை பிடித்து உயர்த்தினான். சிப்பியாய் இமைகள் மூடியிருக்க.. அதன் அழகில் கவரப்பட்டவனாய் அடக்கமாட்டாமல் இதழ் பதித்தான் அம்முத்துக்களை அள்ள.
உன்னுடன் என்றும் எப்போதும் நான் பயணிக்க விரும்புகிறேன் என்று உள்ளம் காதல் மொழி பேசி..ய..து பெண்ணவளுக்கும் புரிந்ததோ..?!
எந்தவித தங்கு தடையின்றி காதல் வெள்ளம் கரை புரண்டோட வழி செய்தது இம்முத்தம்.
முத்தத்தின் சுவை எதையென்பேன்..?!
மழலையின் முதல் உணவா…
மங்கையின் இதழ் மணமா…
இதயம் வரை துளைக்கிறதே!
ஹப்பப்பா…
இப்படி ஆர்பரிக்கிறதே நெஞ்சம்…
உன்னில் கலந்திட..!
நொடிகள் கடக்க மனமே இல்லாமல் விலகினான் அவன்.
அழகான கனவு ஒன்று கலைந்தது போல இருந்தது இருவருக்கும்.
அவன் முகம் நோக்க சங்கடப்பட்டு பெண்ணவள் நிலம் பார்த்தாள். அவனுக்கு புரிந்தது அவளது தவிப்பு.
அவளை அவனை நோக்கி அமருமாறு செய்துவிட்டு பேச தொடங்கினான்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எல்லாத்தையும்…என் மனசுல உள்ள எல்லாத்தையும். ஒன்றுவிடாம எதையும் மறைக்காமல்… நான் சொல்லுறதை பொறுமையா கேட்பியா…?!”
அவன் கண்களை இப்போது நேருக்கு நேர் சந்தித்தாள் அவள். அவன் சொல்வது போல் இப்போது பேசி தான் ஆக வேண்டும். இந்த உணர்விலிருந்து விடுபட இது தான் வழி.
ஹ்ம்ம்… சொல். நான் கேட்கிறேன். எனபது போல் விழியோடு விழி பார்த்தாள்.
“உனக்கு ஏதாவது தோணுதா என்னை பார்க்கும் போது? ஏதாவது நியாபகம் இருக்குதா…?!”
இவன் எதை கேட்கிறான்..?!  இவனை பற்றி எனக்கென்ன தெரியும்?! இவனை இதற்கு முன் நான் எங்கே பார்த்தேன்… நியாபக படுத்த என்ன இருக்கிறது…?  பேந்த பேந்த முழித்தபடி வினவினாள்…
“எ..ன்..ன நியா..பக..ம்..?”
“ஹ்ம்ம்..
அப்படின்னா உனக்கு எதுவும் நியாபகத்துக்கு வரல…
சரி விடு…
நீ என்ன நினைக்கிறாய் என்னை பற்றி..”
என்னடா இது.. இவன் இப்படி பட்டென கேட்கிறான்..?
“ஹாங்….
உங்களை ப..ற்..றி நினைக்க எ..ன்..ன இருக்கு…?” புரியாதது போல கேட்டாள்.
சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் தோளில் முகம் பதித்து.. கூந்தல் மணத்தை  ருசித்தபடியே… சொன்னான்.
“இப்போ சொல்லு…
உனக்கு இப்போ எப்படி பீல் ஆகுது…”
இதயம் லப்-டப்….லப்-டப்… என்பதற்கு பதில்… ல…வ் மீ…. கி…ஸ் மீ… என்று பாடியது..
“ஏன் அமைதியா இருக்குற.. சொல்லு.. உனக்கு என்னோட அணைப்பு கஷ்டமா இருக்கா… ??! ஹ்ம்ம்… சொல்லு… மறைக்காத… எதுவா இருந்தாலும் சொல்லு…!”
இப்படி சொல்லு சொல்லுன்னு சொன்னா நான் என்னத்தைடா சொல்லுவேன். என்னோட இதயகீதத்தை சொன்னா காரி துப்பமாட்ட… அட..போடா…
அவளுக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை அவளால் இப்போது சரியாக கையாள முடியும் என்று தோன்றவில்லை. எனவே மௌனம் சந்தித்தாள்.
“என்னால இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியும்..ன்..னு தோணல பேபி.. உன்னை இப்படி ப..க்..க..த்துல வ..ச்..சி..க்..கிட்டு.. ம்ஹும்… ஒரு நிமிஷம் கூட தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க முடியலடா. இப்படி என்னோட கையணைப்பிலேயே வச்சிருக்கணும்னு தோணுது. பிளீஸ் பேபி புரிஞ்சிக்கோ.”
அவள் ஒன்றும் பேசவில்லை. நடப்பதை அதன் போக்கில் போகவிட்டாள். அவன் தொடர்ந்து பேசலானான்.
“நான் செஞ்சு முடிக்க வேண்டிய கடமை ஒன்று பாக்கி இருக்கு. அதை செட்டில் பண்ணிட்டு தான் உன்கிட்ட இதைப்பற்றி பேசணும்ன்னு நினைச்சிருந்தேன். ஆ..னா..ல் உன்னை நேரில்  பார்த்ததற்கு அப்புறமா… சத்தியமா முடியலடி…!
உனக்கு இதை நம்புவதற்கு கஷ்டமா தான் இருக்கும். பட் அது தான் உண்மை.”
சொல்லியபடி அவள் நெற்றியில் இவன் நெற்றி கொண்டு முத்தமிட்டான். இதழ் தீண்டினால் தான் முத்தமா..?!
அனைத்தையும் கேட்டவள் அமைதியாக கேட்டாள் அவனிடம், “ஏ..ன்..? எதற்காக எ..ன் மேலே…?!”
பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்க கரண்டி என்பார்களே… அது போல எந்தவித கஷ்ட நஷ்டங்களும் தெரியாமல் வளர்ந்தவன்… இப்படி நடுத்தர குடும்பத்து பெண் மேல் காதல் என்றால் அதை அவளால் எப்படி ஏற்று கொள்ள முடியும்.
கண்டிப்பாக இவன் என்னை முன்னே பார்த்திருக்க வேண்டும். ஆனாலும் என்னிடம் காதல் வரும் அளவு அப்படி என்ன இருக்கிறது..?! மனம் அதன் போக்கில் சிந்தித்தது.
பெண்ணவளுக்கு தெரியவில்லை.. காதல் ஜாதி மதம் பணம் அந்தஸ்து  நிறம் என்று எதுவும் பார்ப்பதில்லை…
எப்போது எப்படி எங்கே காதல் வரும் என்று அந்த காதல் நாயகன் மன்மதனுக்கே தெரியாத போது… பாவம் இந்த சின்ன பெண் என்ன செய்வாள்..?!
அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய் ஏன் என்ற  ஈரெழுத்தில் பதில் கேள்வி தொடுத்தாள் பெண்.
ஒரு நொடி அவன் மனம் தயங்கியது… பின் நிமிர்வுடன் அவள் கண்களை பார்த்து சொன்னான்.
“பி..கா..ஸ்… ஐ லவ் யூ. உன்னை சார்ந்த எல்லாத்தையும் நான் விரும்புறேன். எனக்கு நீ மட்டும் போதும். என்னோட சந்தோசம் உன்கிட்ட இருக்கும்போ நான் வேற எதை பற்றி நினைப்பேன் பேபி..?”
இதயம் அதிர்ந்தது பெண்ணவளுக்கு. ஒரு யூகமாய் தான் நினைத்திருந்தாள் இப்படியாக தான் இருக்கும் என்று. ஆனால் இப்படி இவன் வெளிப்படையாக அதுவும் இப்படி அழுத்தமாக இருப்பான் என்று நினைத்தது இல்லை.
தொடர்ந்து அவன்பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தான்..
“ஐ லவ் யூ பேபி. ஐ காண்ட் லாஸ் யூ பார் எனி ரீசன். ஐ வான்ட் யூ”.
வியப்பில் விழிகள் விரித்தப்படி ஆராதனா ஸ்தம்பித்து போய் இருந்தாள். கொஞ்ச நேரம் அவளுக்கு அவன் சொன்னதை உணர்ந்து கொள்ள அவகாசம் கொடுத்தவன், பின் அவள் வலக்கையை எடுத்து தன் நெஞ்சில் பதித்து, “இங்கே நீ எப்போ வந்தன்னு கேட்டா எனக்கு சரியா சொல்ல தெரியல. இது சரி வருமா… அப்படின்னு நிறைய யோசிச்சத்துக்கு அப்புறம் தான் சொல்லுறேன். ஏதோ பார்த்ததும் காதல்ன்னு நினைச்சிறாதா…?! நல்லா தெரிஞ்சி.. உன்னை புரிஞ்சத்துக்கு அப்புறம் தான் இந்த முடிவெடுத்து இருக்கிறேன். உனக்கும் என்னோட அருகாமை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்…”
அவள் முறைக்கவும்..
“இ..ல்..லை..ன்..னு பொய் சொல்லாத.. உன்னோட இந்த கண்கள் என்னை எத்தனை முறை ஏக்கமாக பரர்த்திருக்கிறதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்”.
அட… அப்படியா பார்த்து தொலைச்சேன்…?! மனம் சாடியது.
“உன்னை பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்குள்ள வர்ற உணர்வை கட்டுப்படுத்தவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு மேல சத்தியமா முடியாதுடி…”
அவள் கன்னங்களை தன் இரு கைகளாலும் தாங்கியவன் விழி நோக்கி கேட்டான்.
“உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணுமா…?!”
அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. அவன் சொன்னது போல அவனருகில் அவள் அவளாக இல்லை. ஏதோ பெயர் தெரிய உணர்வு அவளுள் எழாமல் இல்லை. ஆயினும் இப்படி உடனே கேட்டால்… என்ன சொல்ல…
“ஐ காண்ட் திங்க் எனித்திங் நவ். ஐ வான்ட் சம் டைம்” எப்படியோ ஒரு வழியாக வாய் திறந்து விட்டாள்.
இதழ்கள் மலர சொன்னான். “சரி.. உன் இஷ்டம். உனக்கு எப்போ பதில் சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு”.
காதல் சொல்ல துடித்த மனதைசிரமப்பட்டு அடக்கியபடி அங்கிருந்து அகன்றாள்.
############
கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி.. கையிலிருந்த அந்த கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தார் இளங்கோ.
அதில் இருந்த விஷயம் அவரை கொஞ்சம் வாட்டியது… கூடவே ஒரு சந்தோஷ செய்தியையும் சொல்லியது.
எத்தனை ஆண்டு கால தவம் இது. இது மட்டும் சாத்தியம் ஆனால்… என்னை விட அதிர்ஷ்ட சாலி வேறு யாரும் இருக்கமுடியாது. அவரது  கடந்த கால நினைவுகள் கண்முன்னே விரிந்தது. பல உருவங்கள் தோன்றி மறைந்தது. அதில் ஒரு பெண் உருவம் இவரை பார்த்து சிரித்தபடி வந்தது. நிஜத்தில் இருந்துகொண்டு நிழலை தொட விரும்பினார். அந்த உருவம் கிண்கிணியாய் சிரித்தபடி மறைந்தது. கண்கள் பனிக்க டிராயரில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தார். அதே பெண் தான் இந்த போட்டோவிலும் சிரித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் அலைகழித்த மனம் அமைதி கொண்டது.
“நான் உன்னை கூடிய சீக்கிரமே பார்க்க வந்துக்கிட்டு இருக்கிறேன்ம்மா.. இந்த தடவையாது நீ என்னை ஏமாற்றமா என் கூட வருவியாம்மா..?!” சொல்லியபடி கையில் இருந்த கோப்பில் பார்வை பட்டது.
மெலிதாக சிரித்து கொண்டார்.  “கண்டிப்பா நீ என் கூட வருவ… இல்லை..ன்..னா நான் வரவைப்பேன். இந்த முறை நான் எக்காரணத்தை கொண்டும் உன்னை இழக்க மாட்டேன்” அழுத்தமாய் வார்த்தைகள் பிறந்தது இப்போது அவரிடமிருந்து.
அதற்கும் அந்த பெண் உருவம் புன்னகையையே பரிசாக கொடுத்தது.
###############
எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்று தெரியாமலே வந்து சேர்ந்திருந்தாள் ஆராதனா. அவன் கூறிய வார்த்தைகளும் அந்த நெருக்கமுமே கண் முன் வந்தது.
அணிந்திருந்த ஆடைக்கு உள்ளே மறைத்தபடி போட்டிருந்த அந்த கற்கள் பதித்த செயினை வெளியே எடுத்து பார்த்தாள். “நீ வந்ததுல இருந்து என்னோட வாழ்க்கையிலே எவ்ளோ மாற்றம் தெரியுமா…?! எல்லாம் ரொம்ப வேகமா நடக்கிற மாதிரி இருக்கு”.
“ஹே தேஜாவூ… சொல்லு.. நான் அவனை விரும்புறேனா..? அவன் சொன்னது போல நான் அவனை லவ் பண்ணேனா உன் மேல எனக்கு வந்த அந்த பீலிங்ஸ் என்ன… எனக்கு ஒன்னுமே புரியல”.
ஏதோ அந்த கற்கள் இவளிடம் பேசுவது போல உரையாடி கொண்டிருந்தாள்.
அப்போது மூச்சு வாங்க வேகமாக ஓடி வந்து அவளருகே வந்து நின்றாள் கீது.   தலைமுடி எல்லாம் களைந்து முகம் வெளுக்க எதற்கோ பயந்து ஓடி வந்தது போல இருந்தாள்.
என்னடி ஆச்சு.. ஏன் இப்படி பதறி அடிச்சி ஓடி வர…?! கலக்கமாய் கேட்டாள் ஆராதனா.
அ..ந்..த
அ..ந்..த…
கு….கு….கு… கு..ர்..க்..கா….  செ..த்..துப் போயிட்டான்…டி…. குரல் தந்தியடிக்க மொழிந்தாள் கீது.
சர்வமும் அடங்கியது ஆராதனாவிற்கு. உடல் விறைக்க முகம் வெளுக்க துவங்கியது பெண்ணவளுக்கு. கண் முன்னே ஏதோ சுழல்வது போல இருக்க… அப்படியே மயங்கி சரிந்தாள் ஆராதனா.

Advertisement