Advertisement

அதன் பின் ஒருநாள், கடைக்கு அருளைப் பார்க்க வந்த இசை அவன் அறையில் இல்லாது மேலாளரிடம் விசாரித்தாள். மேல் தளத்தில் போட்டோ ஷூட் நடப்பதாகவும் அங்கிருப்பதாகவும் தெரிவிக்க..  ஆவலோடு அவளும் சென்றாள். 

 

தங்கள் ஆடைவடிவமைப்பாளர் மூலம் புதுவிதப் பட்டுப்புடவை ஒன்றை அருளின் ஐடியாவில் வடிவமைத்திருந்தனர். அதன் சிறப்பு, சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாடலில் வரும் தொண்ணூற்று ஒன்பது மலரையும் ஒரே புடவையில் வெவ்வேறு நிறத்தில் நெய்து முந்தானை முழுவதும் துதிக்கையைத் தூக்கிய நிலையில் ஒற்றை யாளி ஒன்றும் பெரிய அளவில் நெய்யப்பட்டிருந்தது. 

 

முற்றிலுமே தமிழரின் தனி அடையாளம் எனச் சொல்லும் விதமாகவும், கட்டுபவர்களுக்குக் கண்டிப்பாகத் தனி வித கம்பீர உணர்வைத் தரும் என்றே என்றெண்ணியும் வடிவமைத்து விட்டனர். அப்புடைவையை வெளியிடுவதற்கு போஸ்டர்களை வடிவமைப்பதற்கான போட்டோ ஷூட்டை தற்போது நடத்திக் கொண்டிருந்தான். மாடலாக வந்த பெண் புடவையை உடுத்தி நிற்க, பார்த்த அருளுக்கு திருப்தியாக இல்லை. 

 

புதுச்சேரியை சேர்ந்த பிரெஞ்ச் மாடலான அப்பெண்ணின் வெளிர் நிறமும், அவள் தரும் உடல் பாவனைகளும் அருளுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. பிடிக்கவில்லை எனச் சொல்லிட இயலாது திருப்தியாக இல்லை, அவ்வளவே.

 

வேறு மாடலைப் பார்க்கும்படி பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டுக் கண்ணை மூடி அமர்ந்திருந்தான் அருள்வேலவன். சரியா உள்ளே வந்த இசை, அவனருகே இருந்த இருக்கையில் அமர்ந்து, அருளைச் சுரண்டி அழைத்தபடி, “ஏங்க, போட்டோ ஷூட்ன்னு சொன்னாங்க முடிஞ்சிடுச்சா?” என்றாள் மெல்லிய குரலில். 

 

விழி திறந்த அருள் நிமிர்ந்து அமர, “யாருங்க மாடல்?” என எதிர்பார்ப்போடு அடுத்த கேள்வியை இசை கேட்க, “நீ தான்..” சட்டென உரைத்தான் அருள். 

 

அவளோ திருதிருவென முழிக்க, அவனோ ஒப்பனையிடும் பெண்களை அழைத்து இசைக்கு ஒப்பனையிடச் சொல்லிவிட்டு, வேலையாளை அழைத்துப் புதிதாக ஒரு புடவையும் கொண்டு வரச் சொல்லினான். 

 

“நானா..? நான் எப்படி..?” என அதிர்ந்த இசை, தன் கழுத்து கைகளைத் தொட்டுக்காட்ட, “நீ தான் இசை, நான் கண்ண மூடி யோசிச்ச போதும் நீ தான் வந்த, நீ தான் இதுக்கு பொருத்தமாகவும் இருப்ப..” என்றவன் கை பிடித்து உரைத்தான். 

 

“ஏங்க.. உங்களுக்கு வேற பொண்ணுங்களைத் தெரியாது அதனால நீங்க கண்ணு மூடினாலும் நான் தான் வருவேன் அதுக்குன்னு என்னைப் போய் மாடலா நிக்கச் சொன்னால் எப்படிங்க? பார்க்கிறவங்களுக்கு எப்படியிருக்கும்? இவ்வளவு ஹார்ட்வொர்க் பண்ணிட்டு என்னை வைச்சு சொதப்புறீங்களே?” என்றாள் வேண்டுதலாக. 

 

“இசை.. உன்னை நீயே ஒரு போதும் குறைச்சிச் சொல்லாத, என்னால அதை அனுமதிக்க முடியாது. ஏதோ ஒரு மாடல் அறிமுக்கப்படுத்துறதை விட நம்ம பொருளை நாம அறிமுக்கப்படுத்துறது தான் சிறப்பு. என் உயர்வுல உன் உழைப்பு இல்லாமலா? சரி, அதை விட நீ ஏன் இதை ஒரு வாய்ப்பா பார்க்கக் கூடாது?” என்றபடி அவள் கைகளைப் பற்றியவன், “இது தப்போ, அசிங்கமோ இல்லை, அப்பறம் இதை ஏன் நீ மறைச்சி வைக்க நினைக்கிற? நீ வெளிவராது தான் உன்னை மாதிரி இருக்குறவங்களுக்கு நீ தர நம்பிக்கை. அழகுங்கிறது அடையாளமில்லை, அரிதாரம்..” என்றான். 

 

வேலையாள் புதுப் புடவை ஒன்றைக் கொண்டு வந்திருக்க, இசை அப்போதும் மௌனமாக இருக்க, “நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்கலைன்னா அப்பறம் நான் கம்பெல் பண்ண வேண்டியதா இருக்கும். இல்லை நானே செய்ய வைக்க வேண்டியாதவும் இருக்கும்” எனக் காதோரம் மெல்லிய குரலில் உரைக்க, அவன் காலை மிதித்தவள், “நீங்கப் போங்க அங்கிட்டு…” என்றாள் மிரட்டலாக. 

 

சிரிப்போடு எழுந்து கொண்டவன், ஒப்பனையிடும் பெண்களை அழைத்து, “மேக்கப் போடுங்க, பட் அவங்களுக்கான தனித்துவத்தை மறைக்கக் கூடாது” எனச் சொல்லிச் சென்றான். 

 

முழு ஒப்பனையும் முடிய, இசையும் சென்று உடை மாற்றி அறையிலிருந்து வெளியே வர, அவள் எதார்த்தமாக நடந்து வருவதையே சில புகைப்படங்களும் அதன் பின் அவள் பாவனைகள் காட்ட.. சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பல வண்ணங்கள் கலந்த புடவை வானவில்லை அள்ளிச் சுற்றியது போன்றிருங்க, புகைப்படங்கள் அனைத்தும் அழகாய் வந்திருந்தது. 

 

அருளுக்கு இசையின் மீது பதிந்த பார்வையை மீட்க முடியவில்லை. தன் கற்பனைகளுள் அடங்கிய தன்னவள் அவன் ரசிக்கும் அழகானாள். குறிஞ்சிப்பட்டு என்ற பெயரில் புடவை வெளியாக, எதிர்பார்த்ததை விடவும் பெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது. வெளியூர்கள், வெளி நாடுகளிருந்தும் பிரேத்யேக ஆடர்கள் குவிய, தை திருநாளுக்கு அதிகாமவே விற்பனையானது. 

அருள் சொல்லியது போலே, இசை தற்போது அவள் போன்றோருக்கு நம்பிக்கையூட்டும் அடையாளமாக மாறியிருக்க, அதைத் தொடர்ந்து செய்தும் வந்தாள். தனியாக ஒரு யூடூப் சேனல் ஒன்றை தொடங்கி விக்டிலைகோ நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமான பேச்சாளராக மாறியிருந்தாள். யாரது உதவியும் தலையீடுமின்றி அவளே அதைச் செய்து கொண்டிருந்தாள். 

 

தேவகி பேசாதது மனோவிற்கு என்னவோ போல் இருந்தது. பாரி ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, இசைவாணி உணவு மேசையில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருக்க, மனோ அருகே வந்தமர்ந்து மெல்லிய குரலில், “அண்ணி விக்கிக்கு மட்டும் ஹெல்ப் பண்ணீங்கல்ல..? அது போல எனக்கும் ஹெல்ப் பண்ணுங்க..” என்றான் உரிமையாக. 

 

“என்ன ஹெல்ப்? உங்க அண்ணாட்ட பெர்மிஷன் வாங்கணுமா?” என்க, அவனும் வேக வேகமாகத் தலையசைத்தான். 

 

நிமிர்ந்து பாராத இசை, “நீ ஏன் வீட்டுல எல்லாம் பெர்மிஷன் கேட்கப் போற? உன்  வாழ்க்கைல உன் விருப்பம் போலே தானே முடிவு எடுப்ப? உங்க அண்ணன் என்ன உன்னை அடக்கி அடிமையாவா வைச்சிருக்காரு? இல்லை அவரைக் கேட்காமல் தான் நீ எதுவும் செய்ய மாட்டியா?” என்றாள். 

 

அவள் வார்த்தை உண்மையிலே சுருக்கென்று மனோவைக் குத்தியது. முகம் வாட, அவன் மௌனமாக, “உங்க அண்ணன் வருஷத்துல எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? அவ்வளவு இருந்தும் அவர் தம்பி வெளியே வேலைக்குப் போறான்னா எப்படி இருக்கும்? என்ன பேசிப்பாங்க? விக்கியைப் போல உனக்கும் செய்யணும்னு அவருக்கு ஆசை, செய்ய முடியாத வருத்தம், மனசுல இருந்தாலும் வெளிக்காட்டிக்க மாட்டாரு. நீ தான் என்னென்னவோ தப்பாப் புரிஞ்சிகிட்டே. உங்க அண்ணன் காட்டுற கண்டிப்பு அதிகாரமில்லை, அன்பு..” என்றாள் அமைதியாக. 

 

“சாரி அண்ணி, என் விருப்பத்தை எடுத்துச் சொல்லி இருக்கணுமே தவிர, அவனைக் குறைவா சொல்லியிருக்கக் கூடாது, சொன்னது தப்புத் தான்..” என்ற மனோவும் வருந்த, “எங்கிட்ட சொல்லாத, அவர்கிட்ட சொல்லி சீக்கிரம் சமரசமாகு மனோ..” என்றாள் இசை. 

 

“அதெல்லாம் ஆல்ரெடி வந்த அன்னைக்கே பண்ணிட்டேன். அண்ணனும் கூட இப்போ நல்லாப் பேசுவானே” என்றவன் சிரிக்க, “இது எப்போடா நடந்தது, எனக்குத் தெரியாமல்?” என வியந்தாள் இசை. 

 

குழந்தைகளோடு இருப்பதால் அவர்களைக் கவனிப்பதில்லை என அருள் சொல்லிய அதே காரணத்தைச் சொல்ல, இசை கண்களை உருட்டி முறைத்தாள். 

 

மனோ வாய் மூடிச் சிரிக்க, “சரி, யாரு அந்தக் கன்னடத்துப் பைங்கிளி, பெங்களூர் தக்காளி?” என்றவள் விசாரிக்க, தோள்களைக் குலுக்கியவன், “அப்படி யாரும் இருந்தால் தானே சொல்லுறதுக்கு..?” என மென் குரலில் அவள் காதோரம் குனிந்து உரைத்தான். 

 

‘பின் ஏன் உதவி கேட்டான்?’ ஒரு நொடி யோசித்தவள், “ஹோ.. அத்தையை வம்பிழுக்கவா அப்படிச் சொன்ன?” என்க, அவன் தலையசைக்க, “அடேய்.. அது இன்னும் உங்கம்மாவுக்கு கேட்குற மாதிரி கத்திச் சொல்லுடா..” எனப் பாரியும் உரைத்தார். 

 

அதே நேரம் சமையலறையை எட்டிப்பார்த்த மனோ, தேவகி உள்ளே இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைய, சரியாக மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்த தேவகி, “என்னது.. எனக்குக் கேட்குற மாதிரி கத்தச் சொன்னீங்க?” என்றார். 

 

மனோ விழித்து நிற்க, “அது ஒண்ணுமில்லை அத்தை, பெங்களூர்ல நல்லா சப்பாத்தி தட்டத்  தெரிஞ்ச பொண்ணாப் பார்த்து இருக்கானாம், அவள் சமையல் ருசிக்கு முன்ன உங்க சமையல் எல்லாம் மோசம்னு சொல்லுறான்…” என இல்லாததைப் போட்டுக் கொடுத்துச் சிரித்தாள் இசை. 

 

மூக்கு விடைக்க முறைத்த தேவகி, “என்னடா சொன்ன?” என அந்த வயதிலும் அவனை விரட்டி வர, “உதவி கேட்டதுக்கு இப்படி மாட்டி விட்டுட்டீங்களே அண்ணி..” எனப் பதறியபடி மனோ ஓட, “விடாதே தேவகி அவனை. இந்தா இரண்டு அடி போடு..” எனச் சிரிப்போடு தனது ஸ்டிக்கைத் தூக்கித் தந்தார் பாரி. 

 

தேவகி துரத்திக் கொண்டிருக்க, “குடும்பமா ஒண்ணு கூடிட்டாங்க, உன் உசுருக்கு உத்தரவாதமில்லை. ஓடு மனோ, ஓடு..” என அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு ஓட, வேடிக்கைப் பார்த்திருந்த இசை தன்னை மறந்து சிரித்தாள். 

 

அவள் சிரிப்பு அவ்வீட்டின் இன்னிசையாக ஒலிக்க, அப்போது தான் வாசலின் வழி உள் நுழைந்த அருள், மனம் நிறையக் கேட்டான். 

அருள் அறைக்குள் சென்று விட, “ஏங்க, சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” கேட்டபடியே உள்ளே வந்தாள் இசை. 

 

உள்ளே வந்தவளை இழுத்து அணைத்தவன், நிறைந்த மனதிற்குள் அவளை அடைத்துக் கொண்டான். 

அவள் என்னவென்று கேட்க வர, “உஷ்..” எனச் சத்தமிட, அவளும் சின்னச் சிரிப்போடு சுகமாக அவனை அணைத்துக் கொண்டாள். 

 

அங்கே பெரும் அமைதி மட்டுமே, ஆனால் அருளினிசை அவனோடு இருக்க, அவனுக்குள் ஓர் மென்னிசை தவழ்ந்து கொண்டிருந்தது. அவ்வீட்டின் நல்லிசை மட்டுமல்லாது அருள்வேலவனை இசைக்கும் இன்னிசையாகவும் இசைவாணியே இருந்தாள். 

*****

Advertisement