Advertisement

அத்தியாயம் 22

மனோ வேலைக்கு வந்து சில மாதங்கள் கடந்து விட்டது. அன்னையைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டதே என ஏங்கினான். அவன் மீதிருக்கும் கோபத்தில் அலைபேசியிலும் தேவகி பேச மறுத்துவிட, அருளும் நலம் விசாரிப்பாய் ஒரு வார்த்தை மட்டுமே பேசுவான். இசை மட்டும் தான் இங்கு நடப்பதைத் தெரிவிப்பதும் அவனைப் பற்றிக் கேட்டறிவதும். 

 

விடுமுறை நாட்கள் இல்லாத போதும், சம்பளத்தை விடுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு தேவகியைப் பார்க்க ஓடி வந்திருந்தான் மனோ. 

 

தற்போது இசை, அருளுக்குத் தொழிலிலும் உதவியாக இருக்க, விக்கியும் நன்கு தொழில் கற்றுக் கொண்டதால், அவனுக்கு எனத் தனியாக ஒரு மொபைல் ஷோரூம் வைத்துக் கொடுத்திருந்தான் அருள்வேலவன். 

 

“நான் கூட உன்னை இனி வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லவும், விரட்டித் தான் விடுறார் போலன்னு நினைச்சேன். ஆனால் உன்னை முதலாளியாகவே ஆக்கிட்டாரே..” என அருளின் அன்றை வார்த்தைக்கும் இன்று அர்த்தம் கற்பித்துக் கொண்டு இசை பெருமை  பேசினாள். 

 

“எல்லாம் அந்த எட்டரை பஸ்ல வந்த அதிர்ஷ்டம் தான்” என மனோ கேலி செய்ய, “அடேய், அதிர்ஷ்டமா? என் உழைப்பும் பொறுமையும்டா! அதுக்கு நான் என்ன அடி வாங்குன்னேனு  தெரியுமா?” என விக்கித் துள்ள, “தெரியும் தெரியும், எல்லாம் அண்ணி சொல்லிடாங்க” என்ற மனோ சிரித்தான்.  

 

இசையும் உடன் சிரிக்க, விக்கி முகம் சுருக்கிய போதும், “ஹோ.. இங்கிருந்து பெங்களூர் வரைக்கும் என் பெருமையைப் பரப்பிட்டீங்களா? சூப்பர் அண்ணி, அப்படியே அமெரிக்கப் பிரதமர் வரைக்கும் அஞ்சா நெஞ்சன், அசரா வீரன் விக்கின்னு பரப்பி விடுங்க” என்றவன் காலரையும் தூக்கி விட்டுக்கொண்டான். 

 

அன்றிரவு அருள் அலைபேசியில் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க, அருகே வந்த இசை, அவனை அழைத்தாள். தலையை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் குனிந்து கொண்டான். 

 

முகம் சுருக்கியவள், “ஏங்க, இன்னுமா என் மேல கோபம் போகலை?” என்க, “ஆமாம், உன்னைக் கையோங்குனது என் தப்பு தான், அதுக்கு தான் அன்னைக்கு உனக்குப் பிடிச்ச ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்து சமாதானப்படுத்திட்டேன். ஆனால் நீ எங்கிட்ட விக்கி விஷயத்தை மறைச்சது தப்பு தானே? அதுக்கு இன்னும் நீ என்னைச் சமாதானப்படுத்தலையே?” என்றான். 

 

எத்தனையோ முறை சொல்லிவிட்ட போதும் மீண்டும் ஒரு நினைவூட்டல். அவன் ஏதோ கோபம் கொள்வது போலே தெரியவில்லை. ஆனால் கொஞ்சி சமாதானப்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மட்டுமிருக்க, இசையும் புரிந்து கொண்டு தான் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். 

 

அருளிடம் சொல்லக் கூடாது என்ற உள்நோக்கமெல்லாம் இல்லை. அவர்களுக்குள் காதல் இருந்திருந்தால் மெல்ல அவன் புரிந்து கொள்ளும் படி பொறுமையாகச் சொல்லியிருப்பாள். அப்படி எதுவும் இல்லை என்னும் போது, அது ஒரு சொல்ல வேண்டிய விஷயமாகத் தோன்றவில்லை. அதிலும் அருள் முன் கோபக்காரன் என நன்கு அறிந்த பின், புதிதாகப் பிரச்சனைகளை இழுத்துக் கொள்ள விருப்பமில்லை. 

 

இடுப்பில் கை வைத்துக் கண்களை உருட்டி முறைத்தவள், “நான் தப்பு பண்ணிட்டேனா? சரி, சாரி..” என்க, “உன் மன்னிப்பு எல்லாம் வேண்டாம். சமாதானம், சமாதானம்..” என்றவன், சுட்டி விரல் நீட்டி நெருங்கி வருமாறும் அழைத்தான். 

 

மேலும் மூச்சு வாங்க முறைத்தவள், “அப்படியே நான் வந்து கொஞ்சிச் சமாதானப்படுத்திட்டா மட்டும் நீங்க விக்கியையும் பிருந்தாவையும் சேர்த்து வைச்சிருவீங்க பாரு” என்றவள் சிலுப்பிக் கொள்ள, அருள் சிரித்தான். 

 

தலையாட்டியபடி, “அவங்களைச் சேர்த்துத் தான் வைக்கப் போறேன், நீ இங்க வா..” என்க, நம்ப இயலாது, “நிஜமாவா?” என்றாள் நெருங்கி வந்து. 

 

“ம்ம்.. இந்த வாரம் பொண்ணு பார்க்கப் போறோம், அடுத்து மாசம் நிச்சயதார்த்தம். அந்த பொண்ணு படிப்பு முடியவும் கல்யாணம்..” என்றவன் பட்டியலிட, வியந்த இசை, “எல்லாம் ஓ.கே.. இப்பவும் நீங்க அவசரப்படுறீங்க தான். நீங்க நினைக்கிற மாதிரி பிருந்தாவும் விக்கியும் லவ் பண்ணலை” என்றவள் விளக்க வர, பேச விடாது தடுத்தான். 

 

“அது எல்லாம் எனக்குத் தெரியும் நீ கோவிச்சிட்டுப் போன இரண்டாவது நாளே திரும்பவும் எல்லா புட்டேஜ் வீடியோசையும் பார்த்துட்டு விக்கியையும் கூப்பிட்டு விசாரிச்சிட்டேன். அவங்க லவ் பண்ணலை தான், ஆனால் இரண்டு பேர் மனசுலையும் லவ் இருக்கு. அந்தப் பொண்ணோட குடும்ப நிலைமைக்கு விக்கி காதலை என்னைக்கும் ஏத்துக்காது, அது தெரிஞ்சி தான் அரேன்ஜ் மேரேஜா செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்” 

 

மூக்கு விடைக்க முறைத்தவள், “எல்லா முடிவும் நீங்களே எடுக்காதீங்க, சம்மந்தப்பட்டவங்க கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” என்றாள். 

 

“ம்ம்.. ஒரு தடவை கேட்காம செய்து அனுபவப்பட்டுட்டேன், அதனால இந்த முறை கேட்டுட்டுத் தான் முடிவு பண்ணியிருக்கேன். விக்கிக்கு ரொம்ப சந்தோஷம், ராமமூர்த்தி அங்கிள் கிட்ட கேட்கும் போது.. முதல்ல நம்ம வசதிக்கு தயங்குனார் அப்புறம்.. இத்தனை நாள் விக்கி அங்க வேலை பார்த்ததுல அவன் கேரக்டர் புரிஞ்சிக்கிட்டதால சம்மதம் சொல்லிட்டார். 

 

விக்கி வீட்டுலையும் கேட்டுட்டேன், பொண்ணுப் பார்க்க போறோம்.. பொண்ணு ஓ.கே சொன்னால் நிச்சியதார்த்த நாள் குறிக்க வேண்டியது தான்” 

 

விழி விரிய வியந்தவள், “இதெல்லாம் எப்போங்க செய்தீங்க? அதுவும் எனக்குத் தெரியாமல்?” என்க, அவளை இழுத்து நெற்றியோடு நெற்றி முட்டியவன், “நீ தான் ராஜி குழந்தையோடையும் கிருஷ்மியோடையும் தானே சுத்திக்கிட்டு இருக்க? என்னைக் கவனிக்க உனக்கு எங்க நேரம்?” எனக் குறைபட்டுக் கொண்டான். 

 

அன்று இரு குடும்பமும் பெண் பார்க்கச் சென்றிருந்தனர். விடுமுறை நாளெனக் குழந்தையைப் பார்க்க வந்திருந்த பிரகாஷையும் ராஜி இழுத்து வந்திருந்தாள். அவள் ஆராய்ச்சி எல்லாம், ‘உண்மையிலே அருள் தங்களை மன்னித்துவிட்டானா? இருவரும் சகஜமாகப் பேசிக் கொள்கின்றனரா?’ என ஆராய்வதிலே இருந்தது. 

 

ஸ்வேதியும் வந்திருந்தாள். ஜெகனுக்கு டெல்லியில் மத்திய வங்கி ஒன்றில் வேலை கிடைத்திருக்க, விஷயம் அறிந்து வந்திருந்தாள். முதலில் ஏற்க மறுத்த ஜெகனும் அவன் வீட்டுப் பெரியோர்களின் அறிவுரையால் ஏற்றுக்கொண்டான். பிள்ளை தவறு செய்யும் போது கண்டிக்காத பெற்றோரின் உறவு இருப்பதற்கு இல்லாமல் இருப்பதே சிறப்பு என நினைத்தவன், அவள் பிறந்தகத்தோடு உறவை முறித்துக் கொள்ளும்படி உரைத்தான். 

‘அப்போ தான் டெல்லி சொல்லும் போது உடன் அழைத்துச் செல்வேன்’ என்க, ஸ்வாதிக்கு விருப்பமே இல்லாத போதும் இப்போதைக்குத் தலையாட்டி வைத்தாள். 

 

சீதாவிற்கு அந்த வீட்டிலிருக்கும் மரியாதையே தனி. ஸ்வாதிக்கு ஆரம்பத்திலிருந்த மரியாதையும் தற்போதும் திரும்பி வந்ததில் இல்லை. ‘இனி வரப் போகும் பிருந்தா தன்னை விட எந்த விதத்திலும் உயர்ந்தவளா?’ என ஆராயும் உள் நோக்கம் தான் அவளிற்கு. 

 

பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் விக்கியின் பெற்றோரோடு அருளை மட்டுமே எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தைப் பார்க்கவும் வியப்பு தான். வரவேற்றவர்கள் பார்த்துப் பார்த்துக் கவனித்தனர். அதிலும் பிருந்தாவை அழைத்து வந்து நிறுத்த, சற்று மிரண்டே விட்டாள். 

 

கூட்டத்தில் விக்கி எந்த முக்கில் இருக்கிறானோ எனத் தெரியாது முகம் வியர்க்க, படபடப்போடு நிற்க, இசை வந்து தன்னருகே அழைத்துக் கொள்ளவும் தான் சற்றே ஆசுவாசமானாள். ஏற்கனவே இசையைத் தெரியும் ஆகையால், அவள் அருகில் இயல்பாக இருக்க, இசை இது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது, அறியாதது போலே புதியாக அவளைப் பற்றி அனைத்தையும் விசாரித்தாள். 

இறுதியில் இசை அவளிடம் சம்மதம் கேட்க, ஒரு நொடி மௌனமாக இருந்தவளை, “ஏதா இருந்தாலும் உன் விருப்பம் தான், சொல்லும்மா..” எனச் சீதா ஊக்குவிக்க, விக்கி தான் திக்திக் மனதோடு அமர்ந்திருந்தான். 

 

அவன் காதருகே குனிந்த மனோ, “நீ என்னடா நம்ம எட்டரை பஸ் மாதிரி புஷு புஷுன்னு மூச்சு விடுற?” என்க, “டேய் மனோ, வேண்டாம். இனி கிட்ட வந்த காதைக் கடிச்சி வைச்சிடுவேன்..” என்றான் மிரட்டலாக. 

 

அருகில் இருந்த பிரகாஷ், “விடுங்க மச்சான், அவரே பொண்ணு என்ன பதில் சொல்லப் போறாளோன்னு டென்ஷன்ல இருக்காரு..” என்க, “இருடா, உனக்கும் ஒரு காலம் வரும்ல.. அப்போ வகையா கவனிக்கிறேன்..” என்ற விக்கியின் மென்குரலில் இருவரும் சிரித்துக் கொண்டனர். 

 

பிருந்தாவின் வீட்டில் அனைவருமே இந்த சம்பந்தத்தை எதிர்பார்த்திருப்பதை அறிந்திருந்த போதும், “நான் படிக்கணும். இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு..” என்றாள் மெல்லிய குரலில். 

 

“படிக்கிற புள்ளைய நாங்க தொந்தரவு செய்யலைம்மா, படிப்பு முடியவும் தான் கல்யாணம் வைப்போம்..” என அருள் உரைக்க, “ஆமாம், இப்போ உன் விருப்பம் என்னன்னு மட்டும் சொல்லு போதும்..” என்றாள் இசை. 

 

அதில் பிருந்தா சற்றே ஆறுதலடைய, “படிச்சிட்டு வேலைக்குப் போறதுன்னா கூட ஓ.கே, உங்க விருப்பம் தான்..” என்ற விக்கியின் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையிலே மேலும் நிம்மதியுற்றவளின் தலை சம்மதமென அசைந்தது. 

 

இரு வீட்டிலும் அனைவருக்கும் சந்தோஷமே. அதுவும் விக்கியின் வீட்டில் அனைவருமே வந்திருக்க, இது போன்ற நாள் இனி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் அன்றே நிச்சியதார்த்தமும் செய்து கொண்டனர். விக்கிக்கு நிச்சியம் முடிந்ததில் பெரும் மகிழ்வு. அவன் முகமே பூரித்துத் தெரிய, மனோவின் கேலி, கிண்டல் அதிகமாக, அனைவரும் மன நிறைவோடு வீடு வந்தனர். 

 

Advertisement