Advertisement

அத்தியாயம் 08

பொன்னான புது விடியல். பறவைகளின் கீச்சொலியும், வண்டினங்களின் ரீங்காரமும் இசைபாடும் நேரம். அவ்விசை மட்டுமல்லாது, ஆதவனின் சிற்றொளியும் சிறிதும் நுழைத்துவிட முடியாதபடி அத்தனை ஜன்னல்களும் திரைச்சீலைகளால் இழுத்து மூடியிருக்க, இருள் சூழ்ந்திருந்தது. 

 

ஆனாலும் அந்த இருளிலும் பொருட்களை அடையாளம் கண்டு கொள்ளும்படியான சிறு வெளிச்சம் மட்டுமிருக்க, அந்த வெளிச்சம் போதவில்லை என்பது போல் கண்களை மூடித் திறந்தான் அருள்வேலவன். விடித்துவிட்டது என நன்கு புரிந்தது, இருந்தும் எழ முடியவில்லை. இடது கை எதிலோ சிக்கிக்கொண்டது போன்ற அழுத்தம், அந்த மென்மையும், நாசி நிறைந்த மலர் மணமும் இசைவாணியை நொடியில் உணர்த்தியது. 

 

மெல்ல ஒருக்களித்துப் படுத்தவன் குனிந்த பார்க்க, அவன் இடது கையைப் பற்றி நெஞ்சோடு சுருட்டி அணைத்திருந்தாள். அதிலும் அவன் கைகளில் உணரும் அழுத்தம் அவளின் சீரான மூச்சினையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதையும் உணர்த்த, சட்டென அவளிடமிருந்து கைகளை உருவி விட, அந்த அதிர்வில் அவளும் உறக்கம் கலைந்து விழித்து விட்டாள். 

 

மனைவி தான் என்றாலும் ஒரு பெண்ணின் அணைப்பும் அதில் உணரும் மென்மையான ஸ்பரிசமும் புதிது, அவனையும் அறியாது சட்டென உருவியும் விட்டான், அவள் விழிக்கவும் தான் என்ன நினைப்பாளோ என்ற பதைபதைப்பு. 

 

விழித்தவளுக்கு நிகழ்ந்தது நொடியில் புரிய, சுணங்கிய முகத்தோடு, “சாரி.. அது என் பெட்ல ஒரு டெடிபியர் வைச்சிருப்பேன், அந்தப் பழக்கம்..” என்றவள் தடுமாறி விளக்கம் உரைக்க வர, “லேட்டாகிடுச்சு, குளிச்சிட்டு வரேன்” என்றவன் இறங்கி ஓடியே விட்டான். 

 

என்னவோ தன்னை ஸ்பரிசிக்கத் தகாதவள் போன்று ஓடுபவனை நினைக்க மனமும் முகமும் சுணங்கினாள். குளிக்காமல் வெளியிலும் செல்ல முடியாது, என்ன செய்வது என்றும் தெரியாது, உறக்கம் வராத போதும் மீண்டும் தலையணையை அணைத்துப்படுத்துக் கொண்டு விழி மூடினாள். 

 

நேற்று திருமணம் முடித்து வீட்டிற்கு வரவும், அவளைப் பூஜையறையில் விளக்கேற்ற வைத்தனர். பின் இருவருக்கும் பால், பழம் கொடுக்க என மேலும் சில சடங்குகளும் நிறைவடைய அந்தி நேரம் ஆனது. சீதா அனைவருக்கும் மாலை சிற்றுண்டி பரிமாற, அதன் பின் இருந்த சில உறவுகளும் விடைப் பெற்றுச் சென்றனர். 

 

இசையின் கைகளில் ஒரு பட்டாடையைக் கொடுத்த ராஜி குளித்து உடை மாற்றும்படி கீழிருக்கும் ஓர் அறையில் விட்டுச்சென்றாள். அது விருந்தினர் அறை பெரும்பாலும் அவர்கள் வீட்டிற்குத் தங்கும் படியான விருந்தினர் வருவதில்லை, திருமணம் என்பதால் சுத்தப்படுத்தி இருந்தனர். கதவை சாற்றிவிட்டு இசையும் உடை மாற்றிக் கொண்டிருக்கக் கேட்டது தேவகி, பத்மாவின் குரல்கள். 

 

எப்படியோ தேவகி, ஒருவழியா அருளுக்கு நல்லபடியா கல்யாணம் முடிச்சிட்டே” என்ற பத்மாவின் குரலுக்கு, “இது முடியுறதுக்குள்ள நான் பட்டபாடு அந்த நடராஜனுக்குத் தான் தெரியும்” என்றார் தேவகியும். 

 

“எனக்கும் தெரியுமே! அருள் எவ்வளவு பிடிவாதக்காரன்னு, முதல்ல பிடிக்கலை வேண்டாம்னு சொல்லிட்டாலும் ஹாஸ்பிட்டல படித்துகிட்டு நீ கேட்டேன்னு திரும்பவும் அதே பொண்ணை கட்டிகிட சம்மதிச்சானே..! அவன் பிடிவாதத்தை விட உன்மேல பாசம் அதிகம்” என்க, தேவகிக்கு மகனை நினைத்துப் பெருமை தான். 

 

“எனக்கு எதுவுமாகிடுமோன்னு பயந்திருப்பான் போலே அதான் சரின்னு சொல்லிட்டான். வேற எந்தப் பொண்ணு ஜாதகமும் பொருந்தி வரலை, நானும் என்ன செய்யட்டும்?” என்றபடி தேவகி நகர, பத்மாவும் பின் சென்று விட, மூடிய அறையின் உள் இருக்கும் இசையை இருவரும் அறிந்திருக்கவில்லை. 

 

காலையிலிருந்த சந்தோஷமான மனநிலையெல்லாம் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மணல் கோட்டை போல் சிதைந்து போனது. ‘என்ன செய்திருக்கிறார்கள் கட்டாயப்படுத்தியா தன்னைத் திருமணம் செய்து வைத்திருகிறார்கள்? என்ற ஆற்றாமை. என் வீட்டில் கூட என் விருப்பம் கேட்டுத் தானே செய்தார்கள் ஆனால் இவர்கள் ஏன் இப்படிச் செய்து விட்டார்கள்? 

 

இசைக்கு இன்றும் ஜெகன் பேசிய வார்த்தைகள் நெஞ்சில் தீராக் காயமாக, நீங்காத வலியாக இருக்கிறது. அந்த வலியை மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் வலிமையில்லாது போக, இரண்டாவதாக வந்த வரனான அருளையே சரியென ஏற்றாள். அவனைப் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் அவனை மறுப்பதற்குக் காரணமென எதுவுமில்லை. அவனுடனான வாழ்க்கையை முழுமனதாக ஏற்றக் கொள்ளும் முடிவில் தான் வந்திருந்தாள். 

 

ஆனால் அவன் ஒரு இக்கட்டில், கட்டாயத்தில் தன்னை ஏற்றதையே அவளால் தாங்க முடியவில்லை. திருமணமான முதல் நாளே ஏமாற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. 

‘அதான் முதலிலே தன்னை நிராகரித்தானே? பின் அன்னைக்காகத் தான் திருமணம் செய்து கொண்டானோ?’ என்ற குழப்பம். 

‘என் மீது பிடித்தம் என்ன, சிறு ஆர்வம் கூடவா வரவில்லை. எவ்வாறு இந்த முகத்தைப் பார்த்தால் ஆர்வம் வரும்? கிறுக்கல் ஓவியம், சிதைந்த காகிதம் போன்று தானே?’ என கழிவிரக்கம் தோன்ற, கண்கள் கூடக் கலங்கி விட, “சாரி, சாரி கண்ணுல மை பட்டுடுச்சாமா?” என்ற சீதாவின் குரலில் கலைந்தாள். 

ராஜியும், சீதாவும் அவளை அலங்கரித்துக் கொண்டிருக்க, முயன்று முகத்தை இயல்பாகக் காட்டினாள். அனைத்தும் முடிய, இருவரும் அவளை அழைத்து வர, எதிரே வந்த தேவகி அவள் கைகளில் பால் செம்பையும் கொடுத்து ஆசிர்வதித்தார். இருவரும் தான் அருளின் அறையில் அவளை விட்டுவிட்டுச் சென்றனர். 

 

அவன் இல்லை அறையில், செம்பை மேசையில் வைத்தவள், கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள். சரியாகக் குளியலறையிலிருந்து இடையில் கட்டிய துண்டோடு வெளியே வந்த அருள் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. வாசலில் வழி அவனை எதிர்பார்த்திருந்தவள், குளியலறையிலிருந்து அவனை எதிர்பாராது சட்டென எழுந்து நின்றாள். 

 

உடை மாற்ற வேண்டும், பீரோவில் சென்று எடுக்க வேண்டும். மூளை கட்டளையிட்ட பிறகும் அவன் கால்களும் கண்களும் அவளை நோக்கித் தான் நிலைத்து நின்றது. எத்தேச்சியாகப் பார்த்த ஒரு பார்வை தான், மறுநொடி பார்வை தரை நோக்கியிருந்தது. 

 

அப்படியொன்றும் அவளுக்குப் பார்க்கத் தூண்டவில்லை உணர்வுகள், சகஜமாகப் பார்க்கக் கணவன் என்ற உரிமை உணர்வும் வந்திருக்கவில்லை. அவளையே பார்த்திருந்தவன், தன் போலே உடைகளை எடுத்துக் கொண்டு மாற்றச் சென்றுவிட்டான்.  

 

‘அவன் மட்டும் என்னைப் பார்க்கவில்லை நான் மட்டும் ஏன் பார்க்கவேண்டும் என்ற பிடிவாதம் அவளுக்கு. திருமணம் பேசிய பின்பும், அவளைப் பார்க்க முயலவில்லை. பெண்பார்க்கும் அன்றும் வரவில்லை, ஒரு அலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் இல்லை. அன்று அவன் கடைக்கு வந்திருந்தபோதும் ஒரு பார்வை பார்க்காது சின்ஸியர் சிகாமணியாக வேலை பார்த்தவன், பின் நான் மட்டும் ஏன் பார்க்க வேண்டும்?’ என்றெண்ணம். 

 

அனைத்தும் அவனுக்குத் தன் மீது ஆர்வமில்லை என்றே காட்ட, முதல் நாளே திருமண வாழ்க்கை அவளுக்கு சுவாரஸ்யமற்றதாகத் தோன்றியது, ஏமாற்றமான உணர்வு. இத்தனையும் அவள் கட்டிலில் ஓரம் படுத்துக் கொண்டு தான் மனதில் அனத்திக் கொண்டிருந்தாள். உடை மாற்றி வந்தவனுக்கும் ஏமாற்றம் தான், அவள் படுத்திருப்பதைப் பார்த்த பின். 

அப்போதே பார்த்தானே அவளின் சோர்ந்த நிலையும் வலியில் கால்களை அழுத்திக் கொண்டிருப்பதையும். அதிகப்படியான அசதி இருக்கும் என்றே நினைத்தான். அருகில் வந்தவன், செம்பைக் கையில் எடுத்துவிட்டு, “பால் குடிச்சிட்டு தூங்கு இசை” என்றான். 

 

‘உங்கம்மா சொல்லித் தானே திருமணம் செய்து கொண்டாய், இதுவும் உங்கம்மா தான் சொல்லி அனுப்பினாரா? என்று கேட்க வேண்டும் போல் ஆத்திரம் வந்தது. முதல் நாள் ஏமாற்றத்தோடு போகட்டும், பிரச்சனை வேண்டாம் என்றே நினைத்துப் பல்லைக் கடித்து அடக்கியவள், உறங்குவது போலே விழிகளையும் மூடிக் கொண்டாள் சிறிதும் அசையவில்லை. 

 

சுருண்டு இறுகிப்படுத்திருந்த தோற்றமே அவள் உறங்கவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது. ‘வேண்டாம் என்று மறுத்தால் கூடப் பரவாயில்லை, அதென்ன பதில் சொல்லாத உதாசீனமும், உறங்குவது போன்ற நடிப்பும்?’ என அருளுக்கும் சினம் வந்தது. ‘நான் என்ன அவள் மேல் விழுந்து பிராண்டியா எடுக்கப் போகிறேன், நானும் மனிதன் தானே?’ என்று தோன்றியது. என்னைப் பற்றி என்ன நினைத்தால்? 

 

இயல்பிலே கோபக்காரன் வேறு, அவள் செயலும் அவனை அவமதிப்பது போன்றே இருக்க, அவள் தோள்களைப் பற்றி எழுப்பிக் கேள்வி கேட்கத் துடித்தன கைகள். 

 

அவள் நினைத்த அதே காரணத்திற்காகவே அமைதியானான். சில நிமிடங்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன், பின் மின் விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் மறுபுறம் படுத்தான். மின் விளக்கை அணைத்ததுமே ஒரு நொடி அவள் பதறினாள் அதை அறிந்த போதும் இரவு விளக்கையும் போடாது இருளில் படுத்துவிட்டான். அவளோ, ‘ஏன் என் முகம் பார்க்கக் கூட சகிக்கவில்லையோ?’ என்றே விம்மினாள். 

 

இப்போதும் இடையில் கட்டிய துண்டோடு தான் வெளியே வந்தான். அவள் விழித்து விட்டாள் என அறிந்தும். நேற்றைய அவள் ஒரு பார்வையிலும் தன்னை நிமிர்ந்து பார்க்காத தோற்றத்திலும் ஒரு அந்நியத்தன்மை தான் இருந்தது. ‘சரி தான், தாலி கட்டிவிட்டாலும் ஒரு நாளில் உறவாகிவிட இயலுமா? நேற்றைக்கு முன் வரையிலும் அவளுக்கு நான் அந்நியன் தானே? சற்று அவளுக்கு நேரம் கொடுக்க வேண்டும்’ எனச் சற்று முன் குளிக்கும் போது தான் யோசித்திருந்தான். 

 

தன் இயல்பிற்கு, தன் வாழக்கைமுறைக்கு அவளும் பழக்கப்படட்டும் என விட்டவன், உடை மாற்றிவிட்டு பூஜையறை நோக்கிச் சென்றான். அவன் அறையை விட்டு வெளியேறவும் தான் அவளுக்குச் சீரான மூச்சுகளே வந்தது. அவளுக்கான மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள். 

 

மண்டபத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசியது தான், அதன் பின் இன்னும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவனோடு பேச வேண்டும், இயல்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்தாள். ‘அவனுக்குப் பிடிக்கவில்லை எனினும் தனக்கு இது தான் வாழ்க்கை எனும் போது அதைச் சீராக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்’ என நினைத்தாள். 

 

சாமி கும்பிட்டவன் பூஜையறையிலிருந்து வர, தேவகி அவள் கையில் காபியைக் கொடுத்துவிட்டு இசையைப் பற்றி கேட்டுச் சென்றார். என்னவோ அன்னையின் பார்வையே அவனை ஆராய்வது போன்ற தோற்றம், அவர்களைக் கடந்து வந்தால் ஹாலில் பத்மா, ராஜியோடு, பெரியப்பாவும், அப்பாவையும் காண, ஒரு நீண்ட மூச்சை இழுத்துக் கொண்டான். 

 

“வாணி ரூம்பல இருக்காளா? நான் பார்த்துட்டு வரேன்” என ராஜி எழுந்து சென்று விட, “இன்னைக்கு மதியம் மருமகளைக் கூட்டிட்டு நம்ம வீட்டு விருந்துக்கு வந்திடு அருள்” என்றார் பெரியப்பா கார்முகிலன். 

 

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துடுட்டு உச்சி நேரத்துக்கு வந்திடுப்பா” என பத்மாவும் அவனை ஆராயும் பார்வை பார்த்தபடி அழைக்க, சரியெனத் தலையை ஆட்டி வைத்தான். 

 

என்னவோ அவர்கள் பார்வை எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இயல்பாக இருந்திருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பானோ என்னவோ? எப்படியேனும் தப்பித்துவிடும் மனநிலையில் இருக்க சரியாக அழைத்தது அவன் அலைபேசி. அலுவலக அழைப்பு வர, அதி முக்கியமான அலுவலக வேலை என தந்தையிடம் தெரிவித்துவிட்டு ஓடியே விட்டான். 

 

சமையலறையிலிருந்து வந்த தேவகி, அருள் சென்றுவிட்டதை அறிந்து பாரியைக் கடிந்து கொண்டிருக்க, இசையும் ராஜியும் உள்ளிருந்து வந்தனர். ‘அவன் வேலை விஷயமாகச் சென்றுவிட்டான் சில மணி நேரங்களில் வந்து விடுவான்’ எனப் பெரியவர்கள் சொல்ல, அவனிடம் பேச நினைத்திருந்த இசைக்கு மீண்டும் ஏமாற்றம் தான். 

 

தேவகி இரண்டுமுறை அழைத்தும் ‘இரவு தான் வர இயலும், முக்கியவேலை’ என்று விட்டான். நாள் முழுதும் பெரியவர்கள், சீதா, அவள் மகள், ராஜி என வீட்டுப் பெண்களோடு பொழுது கழிக, மாலை நேரம் விக்கியும், மனோவும் கூட சில நிமிடங்கள் அவளோடு அமர்ந்து பேசினார். அத்தனை பேரும் அவளைப் பற்றி விசாரித்ததை விட, அருளைக் கோபக்காரன், கண்டிப்பானவன் என விவரித்தது தான் அதிகம். 

 

அது வரையிலும் தன்னை பிடிக்காததால் தான் தவிர்த்துச் சென்றுவிட்டானோ என நினைத்திருந்த இசைக்கு, நேற்றைய தன் செயலுக்குக் கோபமாக இருக்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. 

 

மாலை, இசையின் அன்னை வந்திருந்தார். மறுவீட்டு விருந்திருக்கு அழைக்க, அருள் இல்லாது போக பெரியவர்களிடமும் மகளிடமும் தெரிவித்தார். அவர் கிளம்பும் நேரம் ராஜியும் உடன் சென்றுவிட்டாள். 

 

இரவு பதினோரு மணி அளவில் தான் அருள் வீட்டிற்கு வந்தான். ஹாலில் அமர்ந்திருந்த மனோ லேப்டாப், மொபைல் சகிதம் நண்பர்களோடு குழு அழைப்பில் இணைத்தபடி பிராஜெக்ட் வொர்க்கைச் செய்து கொண்டிருக்க, தேவகி தான் கதவு திருந்து விட்டார். 

 

அருள் உள்ளே வந்ததுமே, “ஏன்டா கொஞ்சமாது பொறுப்பு இருக்கா? இப்படிக் கல்யாணமான மறுநாளே வெளியே போயிருக்க? அதையும் விட இவ்வளவு லேட்டாவா வருவ?” என்றவர் இரைய, “வந்த பிள்ளையைச் சாப்பிட்டியான்னு கேட்காமல், என்னம்மா நீ?” என குறைபட்டான். 

 

“கொஞ்சமாவது அவளைப் பத்தி யோசிச்சியா? உனக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம்?” அவர் பொறுக்காமல் கேட்க, “அவளை என்ன தனியாவா விட்டுட்டு போனேன், நீங்க எல்லாம் இருக்கீங்க தானே? அம்மா நம்ம ஃபர்னிச்சர் ஷோ ரூமுக்கு வந்த மரங்கள்ல சரியான டாக்குமெண்ட்ஸ் இல்லைன்னு செக் போஸ்ட்ல நிறுத்தி கேஸ் வேற பைல் பண்ணிடாங்க. நம்ம வக்கீலை வரச் சொல்லி, நான் ஆபிஸ் போயி டாக்குமென்ட்ஸ் எடுத்துட்டுப் போனேன். ஒருவழியா எல்லாம் முடிச்சி இப்போ தான் குடோன்ல லோட் இறக்கிட்டு வரேன்” என்றான் சோர்ந்த குரலில். 

அதன் பின்னே சற்று இறங்கிய தேவகி உணவுண்ண அழைக்க, “குளித்து வருகிறேன், நீங்கள் செல்லுங்கள் நானே உண்டுகொள்வேன்” என அவன் அறைக்குள் சென்றான். உள்ளே வந்தவனுக்கு அதிர்ச்சி தான். அந்த நேரமும் உறங்காமல் இசைவாணி கட்டிலில் அமர்ந்திருந்தாள். 

அவன் ஒரு பார்வை பார்க்க, “பேசணும்..” என்றாள். சரியென்று தலையாட்டியவன், “நான் குளிச்சிட்டு வாரேன், சாப்பாடு எடுத்து வை” எனச் சென்றான். 

 

குளித்து அவன் ஹாலுக்கு வர, மனோவோடு அமர்ந்து அவன் பிராஜெக்ட் பற்றி இசை கலந்தாலோசித்துக் கொண்டிருக்க, உணவு மேசையில் தேவகி தான் காத்திருந்தார். தொந்தரவு செய்யாது அவனும் சென்று அமர, அவர் பரிமாற உணவுண்டான். பின் இசையின் அன்னை வந்ததையும் அவர்களை மறுவீட்டு விருந்திருக்கு அழைத்ததையும் தெரிவித்தார்.  

 

“அம்மா அதெல்லாம் என்னால போக முடியாது..” உரத்த குரலில் அருள் மறுக்க, இசையும், மனோவும் ஒரு சேர நிமிர்ந்து பார்த்தனர். 

 

“இதெல்லாம் சம்பிரதாயம் கண்டிப்பா போகணும் அருள்” என்றவர் முறைக்க, எரிச்சலானவன், “அம்மா சும்மா சும்மா எல்லாத்துக்கும் என்னைக் கட்டாயப் படுத்தாதீங்கம்மா.. கல்யாணத்தோட உங்க கண்டிஷன் எல்லாம் முடிஞ்சது. இனி எல்லாம் என்னால அங்க போக முடியாது” என்றான்.  

 

இசையை எழுந்து சற்று அருகே வர, பின்னோடு மனோவும் வந்தான். 

 

“அண்ணா, அது உன் மாமியார் வீடு எத்தனை நாளைக்கு உன்னால போகாம இருக்க முடியும்?” 

 

“அது பிரகாஷோட வீடு. அழைக்காம என்னால எப்படி அங்க போக முடியும்? நான் என்ன மான ரோஷம் இல்லாதவனா? சோத்துல உப்புப் போட்டுத்தான் சாப்பிடுறேன்” மனோவின் கேள்விக்குப் பதில் சொல்லியபடி திரும்பிய அருளின் பார்வை இசை மீது தான் இருந்தது. 

 

‘அப்போ என் அன்னை வீட்டு உறவு இனி எனக்கில்லையோ?’ நினைக்கவே கண்கள் கலங்க, விழி நிறைந்த நீரோடு அவள் அறைக்குள் சென்றுவிட்டாள் இசைவாணி. 

 

“ஏன்டா இப்படி அடம் பண்ற? இதெல்லாம் சரியில்லை அருள்” எனத் தேவகி கண்டிக்க, “அண்ணி ரொம்ப ஆசையோட இருந்தாங்க, அவங்க வைச்சிருக்கிற புக்ஸ் எல்லாம் எடுத்திட்டு வந்து எனக்கும் தரேன்னு சொன்னாங்க, ரோஜா செடி, மீன் தொட்டி, டெடிபியர்ன்னு ஒரு லிஸ்டே சொன்னாங்க. ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தாங்க அண்ணா” என மெல்லிய குரலில் தெரிவித்தான் மனோ. 

 

அவனால் அண்ணனைக் கண்டிக்கவோ குறை கூறவோ இயலாது, அண்ணிக்குப் பரிந்து பேசினான். ஆனால் அருள்வேலவன் எதற்கும் அசையாது தன் முடிவில் திடமாக இருந்தான். 

 

நீங்கப் போய்த் தூங்குங்கம்மா, நீயும் போய் உன் வேலையைப் பாரு” 

இருவரையும் அனுப்பிவிட்டு தன்னறைக்குள் சென்றான். நேற்றைய இரவைப் போலே இன்றும் இசைவாணி படுத்திருக்க, மெல்லிய விசும்பல் குரல் அந்த இரவின் நிசப்தத்திற்குள் கேட்க, அழுகிறாள் என அவனுக்கும் புரிந்தது. பெண் பார்க்க அவன் வராததை விட தன் வீட்டிற்கு அவன் வரப்போவதில்லை என்பது புரிய, அதிகமாக வலித்தது. 

 

‘இதென்ன சிறுபிள்ளை போன்ற செயல், அவளுக்கு வேண்டுமெனில் சண்டையிட்டுக் கூட உரிமையாகக் கேட்கலாம், ஆனால் இதென்ன அழுகை?’ அவனுக்கு எரிச்சல் தான் அதிகமானது. 

 

“இசை..” அழுத்தமாக அழைத்தான். 

 

அவள் அசையவேயில்லை. இந்த உதாசீனம் தான் அவனுக்கு இன்னும் சினத்தைக் கொடுத்தது. 

 

“இசை..” மீண்டும் உக்கிரமாக அழைத்தபடி, அவள் தோள்களை அழுத்தப்பற்றி எழுப்பி அமர வைத்தான். 

 

அழுத முகத்தோடு அமர, “உனக்கென்ன காதுமா கேட்கலை?” என்றான். 

 

“வாணின்னு தான் கூப்பிடுவாங்க” என்றாள் மெல்லிய குரலில் சுணங்கிய முகத்தோடு. 

 

“அது உங்க வீட்டுல, இங்க இனி இசை தான்” என்றான் அதிகாரமாக. 

 

அவள் அமைதியாகவே இருக்க, “முதல்ல கண்ணைத் தொட” அதட்டலிட, கீழ் பார்வையில் முறைத்தபடி துடைத்தாள். 

 

“எதுன்னாலும் வாய் திறந்து கேட்கணும், இப்படிச் சின்ன பிள்ளை மாதிரி அழுது காரியம் சாதிக்கக் கூடாது. எனக்கு அழுதா பிடிக்காது, என்ன புரிஞ்சதா?” என்க, தலையாட்டினாள். 

 

“என்னால உங்க வீட்டுக்கு எல்லாம் வர முடியாது, அம்மாவ மாதிரி நீயும் என்னை கட்டாயப்படுத்தாதே, நாளைக்கு நீ போறதுன்னா தாராளமாக போயிட்டு வா, உங்க வீட்டு ஆளுங்களும் வந்து போகட்டும். எனக்கு அதுல எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால் என்னை எதுலையும் இழுக்கக் கூடாது” என்றான் உறுதியான குரலில் சற்றே மிரட்டல் போலே. 

 

அவள் அதற்கும் தலையாட்டி வைக்க, அவன் சிறு தலையசைப்போடு படுத்துவிட்டு விழி மூடினான். 

 

‘நான் அழுகிறேனே எனக்குச் சமாதானம் உரைக்காது அவன் முடிவிலே பிடிவாதமாக இருக்கிறானே? மனைவி தானே நான்? இவையனைத்தையும் அமைதியாகவோ கொஞ்சியோ சொல்லிருக்கலாம் தானே? இதென்ன அதட்டலும் மிரட்டலுமாக?’ என சுணங்கிய மனதோடு அவனையே பார்த்திருந்தாள். 

“சிடுமூச்சி சின்ராசு..” மெல்லியதாய் முனகியவள் இதழ் சுழித்தும் கொண்டாள். 

Advertisement