Advertisement

அத்தியாயம் 21

நன்கு இருள் சூழ்ந்த இரவு. நிசப்தமான வீட்டிற்குள் கடிகாரத்தின் ஓசைகள் மெல்ல எதிரொலித்துக் கொண்டிருந்தது. தனிமையில் இருந்தவள், எஸ்.பி.பியின் இன்னிசைக் குரலோடு, சமையலறையில் தன்னைத் தொலைத்தாள். 

 

சமையலை முடித்த இசை, அப்போது தான் நேரமானதை உணர்ந்தாள். 

பிரகாஷ் வேலை முடிந்து வந்திருக்க வேண்டிய நேரம் தான், ஆனால் இன்னமும் வரவில்லை. மாலையில் கோவிலுக்குச் சென்ற அன்னையும் இன்னும் வீடு திரும்பவில்லையே என அப்போது தான் தோன்றியது. 

 

இரவு உணவிற்குப் பன்னீர் க்ரேவியும் சப்பாத்தியும் செய்து முடித்து சமையலறையை ஒதுங்கு வைத்து முடித்துவிட்டு ஹாலிற்கு வர, சரியாக வீட்டின் அழைப்பு மணி இசைத்தது. 

 

சென்று கதவைத் திறக்க, கையில் ஒரு கவரோடு அந்த சின்ன வாசலையும் அடைத்தபடி நெடும் உயரத்தில் நின்றிருந்தான் அருள்வேலவன். அவனைக் கண்டவளுக்கு மயக்கம் வராத குறையாகப் பேரதிர்ச்சி. கனவிலும் அவள் எதிர்பாராத ஒன்று. நம்ப இயலாத அதிர்வில் நிற்க, “இசை..” என மெல்லிய குரலில் அழைத்தான். 

 

கண்ணிமை இரண்டும் வெறிக்க, கருவிழி வெளித் தள்ளும் நிலையில் ஒரு பார்வை அவள் பார்க்க, “இசை, நான் தான், நம்பு..” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தவன் அவள் கன்னத்தில் சட்டென இதழ் பதித்து மீட்டான். 

 

அப்போது தான் உணர்வு பெற்றவள், வேகமாகக் கன்னத்தைத் துடைத்துக் கொள்ள, எங்கே உள்ளே விடாது வாசலோடு அனுப்பி விடுவாளோ என்ற எண்ணத்தில் அவள் இடையை ஒற்றைக் கையால் வளைத்து உள்ளே நகர்த்தியபடி அவனும் வீட்டிற்குள் வந்திருந்தான். 

 

கால்களை தரையில் நிலையாக ஊன்றிக் கொண்டவள், இடை சுற்றியிருக்கும் அவன் கைகளை விலக்கிவிடப் போராடியபடி, “ஐயோ.. விடுங்க… அம்மா, அண்ணா..” என்றவளின் குரலே உள்ளே சென்றது. அவள் பார்வை வாசலை நோக்கியிருக்க, கவனித்தவன் மெல்லிய சிரிப்போடு சென்று வாசல் கதவைத் தாழிட்டு திரும்பினான். 

 

அருள் திரும்பி வர, இசை ஹாலில் இல்லை. சமையலறையில் சத்தம் கேட்க, மெல்ல உள்ளே சென்றான். ஒரு ஓரத்திலிருந்த உணவு மேசையில் அனைத்தையும் அவள் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை கவனித்த அருள், கைகழுவி விட்டு அவளை இடித்துக் கொண்டு முன் சென்று அமர்ந்தான். 

 

உணவு மேசையில் தாளம் தட்டியபடி அமர்ந்திருந்தவன், “பசிக்குது இசை, சாப்பிட ஏதாவது இருந்தால் வையேன்..” என்றான். கேட்ட குரலே அவன் பசியின் வீரியத்தை அவளுக்குச் சொல்லியது. 

 

தாளமிடும் கையில் தட்டால் ஒரு அடி அடித்து விட்டு அவன் முன் தட்டை வைத்தவள் உணவு பரிமாற, அருளோ முகம் சுருக்கியபடி அவளைப் பார்த்திருந்தான். பதிலுக்கு முறைத்தவள், உண்ணுமாறு சைகை செய்ய, அடங்கியவன் அமைதியாக உண்டான். அதிலும் ஒரு கை அள்ளிக் கொண்டு ஊட்ட வர, மறுப்பாய்த் தலைசயைத்தவள் விலகி அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

 

ரசித்து உண்டபடியே, “நீயா சமைச்ச?” என்றவன் அவள் பதில் சொல்லும் முன்பே, “உனக்குச் சமைக்க எல்லாம் தெரியுமா?” என்றான் கேள்வியாக. 

 

‘அவன் வீட்டிலும் எத்தனையோ முறை சமைத்திருக்கிறேனே?’ என நினைத்தவள் முறைக்க, அதைக் கவனித்தவன், “இல்லை ஹாஸ்டல்ல வளர்ந்தேன்னு சொன்னியே.. அதான் கேட்டேன்..?” எனச் சமாளித்தான். 

 

அவன் வயிறார உண்ண, இசையோ நேர் பார்வையில் அவனை அளந்தாள். ஒரே வாரத்தில் ஒரு சுற்று இளைத்திருந்தான். கண்களில் உறக்கம் தொலைத்த சோர்வு. என்னவோ பல தேசங்கள் சுற்றி வந்த தேஷாஸ்திரி போன்றிருந்தான். யாருக்கும் தெரியாத வித்தியாசங்கள் கூட அவனை அணுஅணுவாக அளக்கும் அவள் பார்வைக்குத் தெரிந்து விடும்.

 

இந்த மெலிவும் வாட்டமும் கூடத் தன் பிரிவினால் தானா? மனம் எதிர்பார்த்து ஏங்கிய போதும்.. ‘இல்லை, வேறு ஏதோ இருக்கிறது’ என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள். இன்னுமும் அவனை இமைக்காது பார்த்த பார்வையோடு உள்ளுக்குள் ஒரு வாதமே நடந்திக் கொண்டிருந்தாள். 

 

அதைக் கண்டு, கொண்ட அருளும் உண்டு முடித்து எழுந்து கை கழுவி விட்டு, அவள் முன் ஸ்வீட் பாக்ஸோடு வந்து நின்றான். அதைத் திறந்து அவள் முன் நீட்ட, லட்டைப் பார்த்தவளுக்கு இன்ப ஊற்றும் இதழில் ஒரு புன்முறுவலும். ‘சமாதானக் கொடி பறக்க விடுகிறானா? தெரிந்தே வாங்கி வந்தானா? இல்லை எதார்த்தமாக வாங்கி வந்தானா?’ என அப்போதும் அவளுக்கு குழப்பம் தான்! 

 

நொடியில் அவள் மலர்ந்த முகம் சுருங்குவதைக் கண்டவன், அவள் தயங்குகிறாளோ என்றெண்ணி அவள் முன் மண்டியிட்டு ஒரு லட்டை எடுத்து ஊட்டியும் விட்டான். 

அவள் திமிற, முழு லட்டையும் அவள் வாய்க்குள் திணித்து விட்டு அவள் நெற்றியில் முட்டிச் சிரித்தான். 

 

அவனை விலக்கியவள், அடைத்த வாயில் வார்த்தைக்கு இடமின்றி, ‘எதற்கு?’ என்பது போல் புருவம் உயற்றி, சைகையால் கேள்வி கேட்டாள். அருளுக்கு அது நன்கு புரிந்தது. இருந்தும் புரியாதது போலே, “ஹோ.. பதிலுக்கு எனக்கு கிப்ட் கொடுக்கப் போறியா?” என்ற கேள்வியோடு தன் கன்னம் நீட்டினான். 

 

தன்னை நோக்கி நீட்டிய கன்னத்தில் வலிக்கும் அளவிற்கு ஒரு அடி வைக்க, அதிர்ந்தவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க, “எனக்கு இன்னும் கோபம் தான்..” என்றாள் முறைப்போடு. 

 

‘லட்டை பார்த்தால் எத்தனை பெரிய சண்டையாக இருந்தாலும் மறந்து விடுவாள் என்று சொன்னானே?’ என்ற எண்ணத்தில் மீண்டும் ஒரு லட்டை அவள் வாய்க்குள் திணித்தான். முறைப்போடு மொத்த இனிப்புப் பெட்டியையும் அவனிடமிருந்து பிடிக்கிக் கொண்டவள், “இதுக்காக எல்லாம் என் கோபம் குறையாது..” என்றாள் எச்சரிக்கையாக. பாதி இனிப்பை விழுங்கி, விக்கிய நிலையில் அவள் உதிர்த்த மழலை மொழி தித்திப்பாக இருந்தது. 

 

‘அடேய்! பிரகாஷு பொய்யாடா சொன்னே? நல்லா பழி வாங்கிட்டடா!’ என மனதில் அலறினான். மீண்டும் கன்னம் நீட்டியவன், “அப்போ கோபம் போற வரைக்கும் அடிச்சிக்கோ..” என்க, மறுப்பாய் தலையசைத்தவள், “ஆணோ பெண்ணோ, அண்ணனோ தம்பியோ… யாராக இருந்தாலும், எவ்வளவு கோபமா இருந்தாலும் அடிக்கிறது தம்புங்க..” என்றாள். 

 

அவன் மௌனமாக எழுந்து எதிரே இருக்கும் இருக்கையில் அமர, “அதுவும் உண்மையா பொய்யா? என்ன நடந்ததுன்னு விசாரிக்காமல் அடிக்கிறது எல்லாம் ரொம்ப ரொம்பத் தப்புங்க..” என்றாள் அவன் தவறை சுட்டிக்காட்டி.  

 

“நான் அப்படி தான் இசை, எனக்கு எல்லாமே சரியா இருக்கணும், சின்னத் தப்பா இருந்தாலும், தன்னால ஒருத்தவுங்க பாதிக்கப்படுறாங்கன்னா என்னால அதை ஏத்துக்க முடியாது. அதனால தான் விக்கி எங்கிட்ட வேலைக்கு வேண்டாம்னு சொன்னேன். என் தம்பி தங்கச்சி விஷயத்துல தலையிடாதேன்னு சொன்னேன், நீ கேட்கலை. 

 

அவங்க விஷயத்தில் நான் ரொம்பவே பட்டுட்டேன், என்னவோ நான் அடக்கி வைக்கிற மாதிரியும் அடிமைப் படுத்திற மாதிரியும் சொல்லுவாங்க, ஒரு தப்புனா தண்டிக்கக் கூடாதா? என்னால அப்படி இருக்க முடியாது. அதுக்குத் தான் ஒதுங்கிப் போயிடலாம்ன்னு இருந்தால் நீ தான் விட மாட்டேங்கிறே” என்றான் குறையாக. 

 

விக்கியின் செயலை விடவும் ராஜி, மனோவின் வார்த்தைகளில் தான் மிகவும் நொந்து போயிருந்தான், இசைக்கு அது புரிந்தது. 

 

“தப்புனா கண்டிக்கிறது சரிதான். ஆனால் அது தப்பு தானான்னு முதல்ல விசாரிக்க மாட்டேங்கிறீங்களே, அது தப்பு இல்லையா? இப்படி தான் உங்க தங்கச்சி சொன்ன பொய்யை விசாரிக்காம என் அண்ணனை அடிச்சிருக்கீங்க, உண்மையில தப்பு செய்யாதவனை, ஒரு ஒழுக்கமானவனை அவன் வேலை செய்ற இடத்துல வைச்சி பொய் பழி சொல்லி அடிச்சா அவனுக்கு அது அவமானமில்லையா? அதுலையும் உங்க தங்கச்சி சொன்னது என்ன சாதாரண விஷயமா? என் அண்ணன் மேல அது எவ்வளவு பெரிய களங்கத்தைச் சுமத்தியிருக்கு! பழி ஒரு இடம் பாவம் ஒரு இடமா? 

அதையும் விடுங்க, இப்போ விக்கி விஷயத்துல என்ன நடந்ததுன்னே தெரியாம ஒரு நல்லவனை அடிக்கிறீங்க, உண்மையைச் சொல்ல வந்தால் என்னையும் கையோங்குறீங்க. தப்பைக் கண்டிக்க வேண்டாம்னு சொல்லலை ஆனால் உங்க முன்கோபத்தால எல்லாத்தையும் முட்டாள் தனமா செய்யாதீங்கன்னு தான் சொல்லுறேன்” 

 

தன் மனதில் உள்ள மொத்த ஆதங்கத்தையும் கொட்டியவள், இறுதியில் அவனுக்கு அறிவுரையும் சொல்லினாள். யாரையும் பேச விட்டு இத்தனை அமைதியாக அவன்  கேட்டதில்லை. இன்று இசை பேசக் கேட்டு கொண்டிருந்தான். அதிலிருக்கும் உண்மையும் அவனுக்கு உரைத்தது. 

 

“ராஜி விஷயத்துல அவள் மேல இருக்குற தப்புல பாதித் தப்பு உங்க அண்ணனையும் சேரும். அப்போவே அவங்க வேண்டாம்னு ஒதுங்கிட்டேன். நீ கொஞ்சம் யோசிச்சிப் பார், சின்னத் தப்பு பெரிய தப்புன்னு எதுவுமில்லை. எல்லாமே என்னைப் பொறுத்த வரைக்கும் தப்புத் தான், ஆனால் ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் அதோட வீரியம் அந்தப் பொண்ணுங்க வாழ்க்கையை எவ்வளவு அழமாப் பாதிக்கும்?

 

என் முன்கோபம் தப்புத் தான். விக்கி, பிருந்தாவோட பேசினது தப்பில்லை, ஆனால் அவன் எந்த இடத்துல வைச்சிப் பேசினாங்கிறது தப்பு. இன்னைக்குக் கண்டிக்கலைன்னா இதே விஷயம் திரும்பத் திரும்ப நடக்கும். கொஞ்சம் யோசிச்சிப் பாரு அன்னைக்கு விக்கியையும் பிருந்தாவையும் வேற யாரவது அப்படிப் பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒண்ணுன்னா இரண்டுன்னு பேசுற ஊர் இது. இந்தச் சமூகத்தோட ஒட்டித் தான் நாமா வாழ வேண்டியிருக்கு” 

 

அருளின் வாதமும் அதிலிருக்கும் அக்கறையும் அவளுக்குப் புரியவே செய்தது. ஆனாலும் அவள் முகச் சுணக்கம் நீங்கியபாடில்லை. அவளையே இமைக்காது பார்த்திருந்தான் அருள்.

 

“இன்னுமா உன் கோபம் போகலை? ஆனால் உண்மையில நான் தான் கோபப்படணும் இசை. அவங்க விஷயம் தெரிஞ்சும் நீ எங்கிட்ட சொல்லவேயில்லை” 

 

“அதெப்படிங்க சொல்ல முடியும்? ஏதாவது இருந்தால் தானே சொல்ல முடியும்? அவங்க தான் லவ் பண்ணவே இல்லையே? ஏதோ அவனால முடிச்ச உதவியை அவளுக்குச் செய்து இருக்கான், அவ்வளவு தான்” 

 

“அப்படியே இருந்தால் மட்டும் நீ சொல்லியிருப்பியா?” என்றவன் இடக்காய் கேட்க, ஒரு நொடியில் இல்லை எனத் தலையாட்டி இருந்தாள். 

 

Advertisement