Advertisement

“சொல்லியிருக்க மாட்டேன் தான்!”

 

“ஏன்னா என் மேல நம்பிக்கையில்லை, அப்படித் தானே?”

 

“அப்படியில்லை. உங்களுக்குத் தான் லவ்வுன்னாவே பிடிக்காதில்லை”

 

“அப்படியா? யார் சொன்னது?” 

 

“ஆமாம், எங்க அண்ணன் விஷயத்துல நீங்க அவங்க லவ்வை ஏத்துங்கலையே?” 

 

“அடிப்பாவி..! அதுக்குன்னு என்னை என்ன லவ்வே பிடிக்காத சாமியார்னு நினைச்சிட்டியா? கொஞ்சம் ப்ராக்டிகல்லா யோசி, என்ன தான் விசாரிச்சாலும் வெளியாளுங்க எப்படியிருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அதுவும் போக ராஜியை இந்த மாதிரி வசதிக் குறைவான இடத்துல வாழவும் அனுமதிக்க முடியலை, அதான். இதுவே எங்க வீட்டுக்கு வர பொண்ணுன்னா எப்படியான இடத்துல இருந்து வந்தாலும் நாங்க நல்லாப் பார்த்துப்போம். அந்த நம்பிக்கை தான்..”

 

அருளின் வாதம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தது. ஆனால் அவள் முழுதாக ஏற்றுக்கொள்ளாது இருக்க, இசையின் முகத்திலே அவள் உணர்வைப் படித்துக்கொண்டான். 

 

“அதான் கோபம் போச்சுல்ல?” என்றவன் கேள்வியாக இழுக்க, அவளோ வேகவேகமாக இல்லை என மறுக்க, “அப்போ ஸ்வீட்டைக் கொடு” எனக் கேட்டவன் பிடுங்க வந்தான். 

 

அவளோ அவனுக்குத் தராது இனிப்புப் பெட்டியைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு ஓட, அவனும் எழுந்து அவளை விரட்டிக் கொண்டே வர, அந்த சிறு வீட்டிற்குள் அவனிடம் சிக்காது அங்குமிங்கும் ஓடினாள். என்ன முயன்ற போதும் அவனிடமிருந்து நழுவ முடியவில்லை, சில நிமிடத்துலே அவளைப் பிடித்திருந்தவன் கைகளில் தூக்கியிருந்தான். 

 

அவன் தூக்கிய பிறகே தன்னிடமிருக்கும் இனிப்புப் பெட்டியை அவனிடம் நீட்ட, “ப்ச், நான் ஸ்வீட் பாக்ஸைக் கேட்கலை, எனக்குப் பிடிச்ச ஸ்வீட் தான் கேட்டேன்” என்றவனின் பார்வை அவள் முகத்திலே நிலைத்தது. 

 

அவன் பார்வையின் வீரியத்தையும் அதன் பொருளையும் புரிந்தவளின் கன்னங்கள் சிவந்து தகித்தது. அவளோ அவன் நெஞ்சில் சாய, அவனோ குனிந்து அவள் தாடையில் இதழ் பதித்தான். 

அந்த ஈரம் இசையைக் குளிர்விக்க, அந்த மென் ஸ்பரிசம் அவனை மயக்கியது. 

எண்ணிலடங்கா முத்தங்களிட்டவன் அறைநோக்கி வந்திருக்க, அவன் முதுகில் அடித்தவள், “என் ரூம் அது..” என எதிர் அறையைக் கை காட்ட, சிரிப்போடு அவன் அறைக்குள் சென்றான். 

 

கட்டிலில் இட்டவன் அவள் மேலே சரிந்தான். ஒருவாரம் அன்னையின் சீராட்டலில் ஒரு பொலிவு அவளிடம் கூடியிருந்தது. தேகத்தில் ஒரு மினுமினுப்பு, சதைப்பிடிப்பும் அவனை அளந்து பார்க்க அழைத்தது. ‘தானோ அங்கே வாடிக் கொண்டிருக்க, இவளோ இங்கே வனப்புக் கூடி இருக்கிறாளே? ஒருவேளை என் பிரிவு இவளைத் தாக்கவில்லையோ?’ என்ற உறுத்தல் உள்ளுக்குள். 

 

அதற்குத் தண்டிப்பது போலே செல்லக் கோபத்தோடு முரட்டு முத்தங்களிட, அவளுக்குமே இருந்த ஏக்கம் வேகமாகத் தான் வெளிப்பட்டது, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள். ஒரு வாரப் பிரிவின் ஏக்கம் தனக்கே அதிகம் என்பதை தங்கள் இணையிடம் காட்டிவிடப் பெரிதும் போட்டியிட்டனர் இருவரும். அவனின் புதிதான புதுமையில் இசை தன்னைத் தொலைத்தாள். பெரும் இன்பச் சுழலில் சிக்கிய சிறு மலர் போல் ஆகினர். 

 

அதிகமான உடல் அலுப்பில் இசை அவனுள்ளே புதைத்தபடி உறங்கிவிட, அருள் மனம் நிறைய, செழிப்பாக உணர்ந்தான். அவளுக்கும் தன் மீது ஆசையும் ஏக்கமும் உண்டு என்பதை அறிந்ததில் ஒரு ஆனந்தம். உண்மையில் அவள் தன்னைப் போலே பிரிவைப் பிரிவாக எண்ணவில்லை. இருவருக்கும் இடையில் தேவையான சிறு இடைவேளையாகத் தான் எண்ணியிருக்கிறாள் என்பதே அவனுக்கு அப்போது தான் புரிந்தது. 

மனம் நிறைந்த உணர்வில் அவனும் கண்ணயர்ந்தான். விடியலில் முதலில் விழித்தது இசை தான். விழித்து விட்டாலே தவிர, படுக்கையிலிருந்து எழ இயலவில்லை. அசதியில் உருண்டவள், அப்போது தன்னருகே திடமாகப் படுத்திருந்த அருளை உணர, அதன் பின்னே இரவின் நினைவுகள் அவளுக்கு வந்தது. 

 

பதறி எழுந்தவள் அவனையும் உலுக்கியபடி, “நீங்க எப்படி இங்க வந்தீங்க?” என்றாள். பாதி விழித்துவிட்ட நிலையில் முழுதாக கண் திறக்காது, “அடிப்பாவி! அப்போ நைட் நடந்தது எல்லாம் கனவுன்னு நினைச்சியா? இங்க வா, உனக்குப் புரிய வைக்கிறேன்..” என அவளை இழுத்தவன், நெஞ்சோடு அணைத்தான். 

 

அவனிடமிருந்து திமிறி விலகியவள், “ஐயோ, எங்க அம்மா அண்ணன்ட்ட நான் இதைச் சொல்லவே இல்லைங்களே..” எனப் பதறியவள், கட்டிலிருந்து இறங்கினாள். 

 

அருளும் பொங்கிய நமட்டுச் சிரிப்பை வாய்க்குள்ளே அடக்க, அவளோ அதை அறியாது அவன் உடலுக்கு அடியில் கிடக்கும் அவள் உடைகளைப் பெரும் பாடு பட்டுப் போராடி இழுத்துக் கொண்டிருந்தாள். 

 

“விடுங்க..” கெஞ்சலாகக் கேட்ட போதும் இளகாதவன், “பக்கத்துல வந்து ஒரு உம்மா கொடு, விடுறேன்” என அருகே அழைத்தவன் அப்போதும் விழி திறக்கவில்லை. 

அவனோடு போராட முடியாது அலுத்தவள், அவன் விழி மூடி இருப்பதையும் கவனித்துவிட்டு அருகே வந்தாள். அவள் நெருங்குவதை உணர்ந்தவன், இதழ் மலர்ந்த சிரிப்போடு இருக்க, நெருங்கியவளோ கன்னத்தில் அழுந்தப் பல்தடம் பதியக் கடித்து வைத்தாள். அதை எதிர்பாராதவன் அலறி எழ, அவனிடம் சிக்காது உடையை உருவிக் கொண்டு ஓடியிருந்தாள். 

 

குளித்து முடித்த பின்னே வெளியே வந்தவள் வீட்டில் அன்னையும், அண்ணனும் இல்லாது அறிந்து குழப்பமாக நின்றாள். அப்போதே உணவு மேசையில் கிடந்த இனிப்புப் பெட்டி கண்ணில் பட, நினைவு வந்தவளாக, மீண்டும் தன்னறைகுள் சென்றாள். 

 

குப்புறப் படுத்திருந்தவனின் முதுகில் அடித்து எழுப்பியபடி, “ஆமாம், எனக்கு லட்டு பிடிக்கும்னு யார் சொன்னா? எப்படி சமாதானத்துக்குச் சரியா வாங்கிட்டு வந்தீங்க?” என்றாள் சந்தேகமாக.

 

சிரிப்போடு எழுந்தமர்ந்தவன், அவளையும் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டு, “இந்த அறிவு இப்போ தான் உனக்கு வந்ததா?” என்றான் கேலியாக. 

 

முறைத்தவள் அவன் தோளில் அடித்துவிட்டு, “எங்கம்மாவும் அண்ணனும் எங்க?” என வினவ, “எங்கிட்ட கேட்டா? எனக்கு எப்படித் தெரியும்?” என்றான் இலகுவாக. அதரங்களில் விரிந்த சிரிப்பு அவளுக்குச் சந்தேகத்தைத் தந்தது. 

 

“உங்களுக்குத் தெரியும் இந்தச் சிரிப்பே சொல்லுது, உண்மையைச் சொல்லுங்க” என்றாள் மிரட்டலாக, அது கூட அவனுக்கு அழகாகத் தெரிய நெற்றியில் முட்டியவன், “உங்க அண்ணன் ஹாஸ்பிட்டல்ல இருப்பான், உங்க அம்மா எங்க வீட்டுல இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..” என்றான். 

 

“ஹாஸ்பிட்டலா..?” அவள் வாயைத் திறக்க, சட்டென இதழோடு இதழ் பதித்தவன், “ராஜிக்கு குட்டிப்பையன் பிறந்து இருக்கான்..” என இசையின் இதழ்களுள் இசைந்தபடியே உரைத்தான்.

 

சந்தோஷ மிகுதியில் சட்டென அவனிடமிருந்து விலகியவள், “அதை எங்கிட்ட இவ்வளவு நேரமா சொல்லாம..? உங்களை..” என்றபடி, ஏதாவது கைக்குக் கிடைக்குமா எனத் தேடினாள். 

 

விலகியவளை மீண்டும் இழுத்து அணைத்தவன், “குழந்தை, குட்டியா எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா? எனக்கே பார்க்கவும் ஆசை வந்தது. நாமளும் சீக்கிரம் பெத்துக்காலம், அதான் ஓடி வந்துட்டேன்..” என்றவன் கண் சிமிட்ட, முகம் சிவந்தவள் அவன் தோளில் சாய்ந்தாள். 

 

பின் ஒருவழியாக, புலர்ந்த காலைப் பொழுதிலே அவனைக் கிளப்பிக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தாள். இருவரையும் ஒன்றாகப் பார்த்ததிலே ராஜிக்கும் பிரகாஷிற்கும் மனம் நிறைவு. 

குழந்தையைத் தூக்கிய இசைவாணிக்கு, தான் அத்தை ஆனதில் சொல்ல முடியாத சந்தோஷம். அவள் முகமே பூரித்து மலர, பார்த்திருந்த ஆண்கள் இருவருக்குமே நிறைந்தது மனம். 

 

ராஜியோடு கட்டிலில் அமர்ந்திருந்த இசை, குனிந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க, சற்றுத் தள்ளி நின்றிருந்த அருளுக்கு எதிரே இருக்கையில் அமர்ந்திருந்தான் பிரகாஷ். 

 

அருளும் பிரகாஷும் அப்போது தான் நேர் பார்வை பார்த்தனர். ‘ஓகேவா?’ என வினவுவது போலே கட்டைவிரலை உயர்த்திப் பிரகாஷ் கேட்க, ‘சரியாகி விட்டது’ எனத் தலையசைத்து, சைகையில் பதில் தெரிவித்தான் அருள். 

 

இதை கவனித்துவிட்ட ராஜி, இசையை மெல்லச் சுரண்டி அவளுக்கும் காட்டியபடி, “என்ன வாணி நடக்குது இங்க?” என்றவள் வியப்போடு கேட்க, “அதான் அண்ணி என்னாலையும் நம்ம முடியலையே..” என்றாள் இசை. 

 

“ஏதோ நடந்திருக்கு..” என்ற ராஜிக்கு, நேற்று பிரகாஷை அழைத்து வருமாறு அருளிடம் வேண்டியது எதுவும் நினைவிலில்லை. 

 

தலையாட்டிய இசையும், “என்னைச் சமாதானம் செய்ய, என் அண்ணனே ஐடியா கொடுக்குற அளவுக்கு இரண்டு பேரும் க்ளோஸாகி இருக்காங்க, ஒரே நாள்ல இந்த மாற்றம். நம்மவே முடியலை..” என்றாள். 

தான் அருளை விட்டு வந்ததில் அருளுக்கும் பிரகாஷிற்கும் இடையில் ஒரு நெருக்கம் வரும் என நினைத்தே அன்னை வீட்டில் தங்கி இருந்தாள் இசை. அதுவும் பிரகாஷே முதல் அடி முன்னெடுப்பான் என்று எதிர்பார்த்திருக்க, அருளே முன்னெடுத்திருந்தான். இதை இருவரும் அறியவில்லை. 

 

“அதானே.. இத்தனை நாள் நம்மளை இவ்வளவு படுத்திட்டு, இப்படி ஒரே நாள்ல சமாதானமாகி இருக்காங்களே..” 

 

“இல்லை அண்ணி, முழுசாவும் சமாதானமான மாதிரி தெரியலை. ஆனால் முன்ன மாதிரி பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன்”

 

“அது போதுமே நமக்கு..” என்க, விரிந்த இதழோடு இசையும் தலையசைத்தாள். 

 

தேவகி வீட்டில் அனைவருக்கும் சமைத்துக் கொண்டிருக்க, பத்மா, பார்வதியை விக்கி அழைத்து வந்தான். அவர்கள் இங்கு கவனித்துக் கொள்ள, இவர்கள் மூவரும் வீடு கிளம்பினர். 

Advertisement