Advertisement

தானே அவன் வேண்டாமென்று வார்த்தைகளில் உதைத்துத் தள்ளிவிட்டு, இப்போது அவன் உறவு வேண்டுமென்று வேண்டி நின்றால் அவனால் எவ்வாறு ஏற்க முடியும்? தவறு தன் மீது தானே? அவள் நெஞ்சம் குறுகுறுத்தது. 

 

“அண்ணா..” மெல்லக் குரலில் அழைத்தாள். 

 

நிமிர்ந்து பார்க்கவில்லை, அருளுக்கு உள்ளுக்குள் சுருக்கென்று வலித்தது. ஆனாலும் அவன் கேட்கிறான் என நினைத்த ராஜி, “என்னை மன்னிச்சிடுண்ணா, எல்லாப் பிரச்சனைக்கும் ஆரம்பப்புள்ளி நான் சொன்ன பொய் தான். அது இன்னைக்கு உனக்கும் அண்ணிக்கும் நடுவுல பிரச்சனையா வர அளவுக்கு வளர்ந்து இருக்கு. எல்லாமே என் தப்பு தான். மன்னிச்சிடு அண்ணா..” என்றாள் வேண்டுதலாக. 

 

பதிலின்றி நிமிர்ந்து பார்த்தான், அவள் வாடுவது அவனையும் வருந்தச் செய்தது. தொண்டை வரை கேட்க வந்த கேள்விகள் கூட கேட்கும் உரிமையன்று உள்ளுக்குள்ளே விழுங்கினான். 

 

ஆனாலும் அவனை உணர்ந்த ராஜி, “நானா இப்படி? உன் வளர்ப்பா இப்படின்னு உனக்குக் கேட்கத் தோணும், கேளு அண்ணா.. பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லி வளர்த்தேனே ஏன் பொய் சொன்னேன்னு கேளு அண்ணா..” என்றாள் பொங்கிய விசும்பலை அடக்கியபடி.  

அவள் கலங்குவதை அவனாலும் பார்க்க இயலவில்லை. “ச்சூ.. இனி இது பத்திப் பேசாத, விடு. எப்பவும் போலே இரு. இசையையும் எப்படிக் கூப்பிடத் தோணுதோ அப்படியே கூப்பிட்டுக்கோ” என்றான் சமாதானமாக. 

 

ஆனாலும் ராஜியின் மனம், அவன் மன்னிக்காது அமைதியடைய மறுத்தது. 

 

“கேளு அண்ணா, அப்படி வளர்ந்திருந்தும் எந்த ஒரு பொண்ணும் சொல்லக்கூடாத பொய்யை நான் சொன்னேன். எதுக்கு தெரியுமா? அந்த அளவுக்கு எனக்கு பிரகாஷைப் பிடிக்கும் அதான். அப்படிச் சொன்னால் தான் யாராலையும் மறுக்க முடியாதுன்னு நினைச்சேன். ஆனால் நீங்க எல்லாரும் பிரகாஷோட கேரக்டரைத் தப்பா புரிஞ்சிக்கவும் தான் நான் சொன்ன பொய்யோட பாதிப்பு என்னையே பாதிக்கிதுன்னு புரிஞ்சது. 

 

வாணி இல்லாம ஒன்னால ஒரு வாரம் கூட இருக்க முடியலையே! எவ்வளவு ஏங்கித் தவிக்கிற? இதை தவிப்பை பிரகாஷ் இல்லாமல் என்னால வாழ்க்கை முழுக்க அனுபவிக்க முடியாதுன்னு தோணுச்சிண்ணா. அதுவும் போக நான் பிடிவாதமா கேட்டால் நம்ம வீட்டுல மறுக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை… அதான் அப்படிப் பண்ணிட்டேன். தப்பு தான், உன்னைத் தான் ரொம்பவே நோகடிச்சிட்டேன். சாரி அண்ணா, என்னை மன்னிச்சிடு அண்ணா” 

 

மூச்சு வாங்கப் பேசிய ராஜியின் கண்ணீர் அருளைக் குளிர்வித்திருந்தது. அவன் வாழ்வில் இசை வந்த பிறகு தான் காதலை அறிந்திருந்தான். தன் மனைவி, அவளில்லாது தன்னில் பாதியைத் தொலைத்த உணர்வு தான் அவனுக்கு. 

 

இதில் இப்போது தான் ராஜியின் காதல் ஆழம் அருளுக்குப் புரிந்தது. 

முகம் இளகியவன், “விடு ராஜிம்மா, உன் மேல எனக்குக் கோபமில்லை, வருத்தம் தான். அதுவும் இப்போ இல்லை போதுமா? மனசை அழுத்திக்காம இரு” என்றான் ஆறுதலாக. 

 

அதில் மனம் நிறைந்தவள், அவளே தேநீர் போட்டு வருகிறேன் என எழுந்தாள். 

அருள் வேண்டாமென்று மறுக்கையிலே, அடிவயிற்றைப் பற்றிக் கொண்டு மெல்ல எழுந்தவள் முடியாது, “அம்மா…” என்ற அலறலோடு மீண்டும் அமர்ந்து விட்டாள். 

 

“ராஜி, என்னம்மா செய்யுது? வலிக்கா?” பதறியவன் அருகே வர, “ம்ம்..” என்றவள் வலி தாங்காது முனங்கினாள். காலையிலிருந்தே லேசான வலி இருக்க, அவள் தான் யாரிடமும் காட்டிக் கொள்ளாது இருந்திருந்தாள். 

 

தற்போது அவளுக்கே ஒரு பயம் வந்திருக்க, அருள் கையைப் பற்றியவள், “தாங்க முடியலைண்ணா, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டிப் போ” என்றாள். 

 

அதற்குள் சத்தம் கேட்டுப் பாரி மெல்ல நடந்து வந்திருக்க, “அம்மா, பெரியம்மாவை ஹாஸ்பிட்டல் வரச் சொல்லுங்கப்பா” என்றவன், தங்கையைக் கைகளில் தூக்கிக் கொண்டான், அவளால் மெல்ல நடக்க இயலும் என்று தெரிவித்த போதும். அவளை விட அவன் தான் உச்சக்கட்ட பயம், பதட்டத்தில் தவித்துக் கொண்டிருந்தான். 

 

அவளைப் பின்னிருக்கையில் அமர்த்தி, நொடியில் காரை கிளம்பியிருந்தான். சில நிமிடத்திலே மருத்துவமனையை அடைந்திருந்த அருள் அவளையும் அடிமிட் செய்தான். பரிசோதித்த மருத்துவர் அது பிரசவ வலி என்று தெரிவித்து விட்டு, அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினர். 

 

வலியில் துடித்தவள் அருளின் கைகளைப் பற்றிக் கொண்டு, “எனக்கு பிரகாஷைப் பார்க்கணும், கூட்டிட்டி வாங்கண்ணா” என்றாள் கெஞ்சலாக. அந்த வலியில் அவள் கெஞ்ச, அவன் நெஞ்சம் தாங்கவில்லை. சரியென்று தலையாட்டிவிட்டுக் காத்திருந்தான். 

 

பிரகாஷின் அலைபேசி எண் இல்லாது போக, மாறி மாறி இசைக்கு அழைத்தான். ஆனால் அவள் ஒரு அழைப்புகளை கூட ஏற்கவில்லை. பாரி, தேவகிக்கு அலைபேசியில் அழைத்திருக்க, விஷயம் அறிந்து தேவகி, பத்மாவோடு, பார்வதியும் வந்து சேர்ந்திருந்தனர். 

 

வந்தவர்கள் இருந்த பதட்டத்தில் மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் அவனிடம் மாறி மாறிக் கேட்க, இவர்கள் வந்துவிட்ட நிம்மதியில் அருளோ பதில் உரைக்காது, பிரகாஷை அழைக்கக் கிளம்பிவிட்டான். 

 

நன்றாக இருள் சூழ்ந்த இரவு. பிரகாஷின் அலுவலகத்திற்குள் வேகவேகமாக வந்தான் அருள். அப்போது தான் தோளில் மாட்டிய பையோடு எதிரே வந்த அந்நிறுவனத்தின் முதன்மை மேலாளர், அருளை கண்டுவிட்டு வரவேற்றார். 

 

“அடடே! வாங்க அருள் சார், என்ன இவ்வளவு தூரம்? உங்களுக்குத் தெரிஞ்சவுங்க யாருக்காவது பினான்ஸ் ஹெல்ப் பண்ணணுமா? வாங்க உள்ள போய் பேசுவோம்” என அழைத்தபடி மீண்டும் உள்ளே திரும்பினார். 

 

சின்னச் சிரிப்போடு, “வேலை விஷயமா வரலை, ஒரு பர்சனல் விஷயமா என் மச்சானை கூட்டிட்டுப் போக வந்தேன்” எனப் பேசியபடி உள்ளே வந்திருந்த அருள், பிரகாஷின் இருக்கையை நோக்கிக் கை காட்டினான். 

 

அப்போது தான் வேலை முடிந்து கிளம்ப நினைத்த பிரகாஷ், இருக்கையிலிருந்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டிருக்க, தன்னை நோக்கி வந்த அருளை வியப்போடு பார்த்தான். 

‘இன்றென்ன பிரச்சனை செய்ய இருக்கிறானோ?’ மனம் அவ்வாறே சலிப்புற, ‘ஒரு வேளை இசைபற்றி கேட்பானோ?’ என்றும் எதிர்பார்ப்பு எழ, அதிலும் தனது மேலாளரிடம் தன்னை மச்சான் என்று குறிப்பிட்டதும் அவர் பார்வை பவ்வியமாக மாறியதையும் நம்ப இயலாது பார்த்தான்.

 

ஆனால் அவனை நெருங்கிய அருளோ, “சீக்கிரம் கிளம்புங்க, ராஜியை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கேன்” என்றான். 

 

இதை எதிர்பாராது பிரகாஷ் பதட்டமாக, “ஒன்னும் பிரச்சனையில்லை. டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க, அம்மா எல்லாரும் இருக்காங்க, ராஜி உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாள் அதான்..” என்றவன் பேசியபடி அவனை வருமாறு சைகை செய்துவிட்டு முன்னே நடக்க, வேக நடையோடு அவன் பின்னே ஓடினான் பிரகாஷ். 

 

இவர்களும் வந்து சேர, அங்கே கார்முகிலன், விக்கி, ஜெகனோடு.. ராஜியின் மொத்தக் குடும்பமும் இருந்தது. பிரசவ அறையிலிருந்து ராஜியின் குரல் கேட்க, அனைவருமே பதறினர். பார்வதி தான் பத்மாவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். 

 

மருத்துவரிடம் சிறப்பு அனுமதி பெற்றுப் பிரகாஷும் உள்ளே சென்றான். அனைவரும் ராஜிக்காக வேண்டி நிற்க, அடுத்த சில மணி நேரத்தில் வீலென்ற அழுகுரலோடு பிறந்தான் ராஜி – பிரகாஷின் மைந்தன். வெளியில் கொண்டு வந்த பிரகாஷ் அனைவரிடமும் ஒருமுறை காட்டிவிட்டு மீண்டும் உள்ளே சென்று மருத்துவரின் கவனிப்பில் கொடுத்து விட்டு வந்தான். 

 

அருளுக்குக் குழந்தை கண்ணை விட்டு இன்னும் மறையவில்லை. சிவந்த ரோஜாவாக, கண்ணை மூடிக்கொண்டு கை கால்களை உதறிக் கொண்டிருந்தான். அந்த கூம்பிய குட்டி உதடும், செருகிய கண்களும் கொள்ளை அழகாக இருந்தது. வெளியில் வந்த பிரகாஷ், அருளின் அருகே உள்ள இருக்கையில் வந்தமர்ந்தான். 

 

அருள் நிமிர்ந்து பார்க்க, கண்ணோர ஈரமும் கலங்கிய விழிகளையும் தாண்டி, ஒரு வித பூரிப்பிலிருந்தான் பிரகாஷ். தன் இரத்தம், தன் பிஞ்சு மகனைத் தொட்டத் தூக்கிய ஸ்பரிசமே அவனுடல் எங்கும் சிலிர்ப்பாய் ஓடிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் அந்த ஆனந்தம் நிரம்பி வழிய, கண்டு கொண்டான் அருள். 

 

“ரொம்ப நன்றிங்க, சரியான நேரத்துக்கு ராஜியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்கீங்க..” என்றான் மனம் நெகிழ்ந்து போய்.

“இல்லை பரவாயில்லை.. இருக்கட்டும்..” என்றான் அருளும் பட்டும் படாமலும்.  

 

பேச வேண்டுமென்ற உந்துதலிருந்த போதும், அதற்கு மேல் என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை, அங்கே கனத்த மௌனம் தான். 

இசை வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் இன்னும் பிரகாஷிற்கு நினைவிலிருந்தது. அவன் செய்ததும் குற்றம் தான், இடம் பொருள் பாராது, ராஜியின் அண்ணன் என்றோ, இசையின் கணவன் என்றோ பாராது பொதுவிலே அவமானப்படுத்தியிருக்கிறான். அதை மேலும் பிடித்து இழுத்து வைத்துக் கொள்ளும் மனநிலை இப்போது இல்லை. அதற்காக இறங்கி வந்து மன்னிப்புக் கேட்கவும் அவனால் இயலவில்லை. 

 

அருளும் அதே மனநிலையில் தானிருந்தான். ‘ராஜியின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் காண்கையில் அவள் தேர்வு சரி தான். தன்னைப் போலே தந்தையின் நிழல் இன்றி சுயமாக நிற்பவன், அவனை போய் குறைவாகப் பேசிவிட்டோமே?’ என அருளுக்குத் தோன்றியது. ‘அவன் தூண்டிவிட்டான், நான் பேசிவிட்டேன் இருவரின் மீதும் தவறு தான், அதற்காகத் தானாக இறங்கிச் சென்று மன்னிப்பு கேட்க எல்லாம் என்னால் இயலாது.’ 

 

இருவரும் ஒரே வீம்பில் ஒன்று போலே இருந்தனர். இவரின் குணமும் ஒன்று தான்! 

 

வார்த்தையின்றி சுற்றும் முற்றும் பார்த்த பிரகாஷ், சட்டென அருளின் புறம் திரும்பி, “எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?” என்றான். 

 

‘தன்னிடமா இவ்வளவு தன்மையாகக் கேட்டான்?’ என நம்ப இயலாது பார்த்த அருளின் தலை தானாக ஆடியுமிருந்தது. 

 

“வாணி வீட்டுல தனியாக இருக்காள், எல்லாரும் குழந்தையை பார்த்தாச்சு, அவள் தான் இன்னும் குழந்தையை பார்க்கலை போய்க் கூட்டிட்டு வர முடியுமா?” என்றான். 

 

அருளுக்கு உடம்பெல்லாம் புது உற்சாகம் தோன்றியிருக்க, அவன் முகத்தில் பல்ப் எரிந்தது. பிரகாஷிற்கு சிரிப்பு பூத்து வந்தது, அருள் முன் வெளிக்காட்டாது அமைதியாக இருந்தான். தனக்காகத் தான் இவ்வாறு கேட்டானோ என்ற சந்தேகமிருந்த போதும் அருள் கேட்டுக்கொள்ளாது தலையாட்டியபடி சட்டென எழுந்து நடக்கத் தொடங்கினான். 

 

அவன் ஆர்வம் பிரகாஷிற்கு புரிய, சற்றுத் தூரம் சென்றிருந்த அருளை மீண்டும் அழைத்தான். அவனும் அதே இடத்திலிருந்து திரும்பிப் பார்க்க, “கொஞ்சம் ஸ்வீட் வாங்கிட்டுப் போங்க, குறிப்பா லட்டு..” எனக் குரல் கொடுத்தான். 

 

“எதுக்கு?” சட்டெனக் கேட்டுவிட்ட அருள் அதன் பின்னே இனிய செய்தி சொல்வதற்காக உரைக்கிறானோ என்றெண்ண, “இல்லை, எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் லட்டு வாங்கிக் கொடுத்தால் அடுத்த நிமிஷமே வாணி சமாதானம் ஆகிடுவாள். அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு..” என மீண்டும் குரல் கொடுத்தான்.  

 

இன்பமாய் அதிர்ந்த அருள், ‘அடேய்! மச்சான், இதை ஏன்டா இவ்வளவு லேட்டா சொல்லுற? ஒரு வாரம் வீணாப் போச்சே!’ என மனதில் புலம்பியபடி சென்றான். 

‘ஐயோ! இப்போவே நடுச்சாமம் ஆகப் போகுதே.. ஸ்வீட் ஸ்டால் மூடியிருக்கக்கூடாது ஆண்டவா!’ என வேண்டியபடி விரைந்தான் அருள்வேலவன். 

Advertisement