Advertisement

அத்தியாயம் 20

பின் புறமாகத் தலை சாய்த்து, விழி மூடியபடி இருக்கையில் தளர்வாய் படுத்திருந்தான் அருள்வேலவன். அமைதி தொலைத்த மனம், எதற்கோ ஏங்கியது. நேற்றைய இரவு இசையைக் காணவில்லை என்றதும் வந்த தவிப்பு, இன்னும் அவனை விட்டு விலகவில்லை. 

 

நேற்றைய இரவு தாமதமாக வீடு திரும்பிய அருள், உள் நுழைந்ததுமே பார்வையால் அவளைத் தான் தேடினான். இத்தனைக்கும் அவள் மீதான கோபம் துளியும் குறையவில்லை. அவர்களுக்கு உதவினாள் என்பதை விடவும், அவள் விஷயம் அறிந்தும் தன்னிடம் தெரிவிக்கவில்லையே என்ற ஆற்றாமை. தன்னிடம் தெரிவிக்காமலே தன்னை வைத்து அந்தப் பெண்ணிற்கு உதவிய ஏமாற்றம், அதையும் தன் மனைவி செய்துவிட்டாள் என்பது தான் அவன் கோபக்கனலை ஊதிவிட்டுக்கொண்டே இருந்தது. 

 

இசையைக் காணாது தேவகியிடம் விசாரிக்க, “சாயந்தரம் கோயிலுக்குப் போனவா இன்னும் வரலையே..” என்க, “இன்னுமா வரலை?” என்றவன் அதிர்ந்துவிட்டான். 

 

அருளின் மனம் ஒரு நொடியில் படபடத்துப் பயந்து போக, “எங்க போயிடுவா? ராஜியைப் பார்க்கத் தான் போயிருப்பா..” என்றார் தேவகி நிதானமாக. 

 

ஆனாலும் அருளுக்கு மனம் அமைதியடையவில்லை. உடனே அவள் முகம் பார்க்கும் ஏக்கம் முட்ட, எதிரே இருக்கும் தேவகியிடம் எதுவும் பதில் உரைக்காது விறுவிறுவென பெரியப்பாவின் வீடு நோக்கிச் சென்றுவிட்டான். அவன் உள்ளே செல்ல, ஹாலில் அமர்ந்திருந்த கார்முகிலனும் ஜெகனும் அவனை வரவேற்க, அவர்களுக்குப் பதில் சொல்லாது, “இசை இருக்காளா?” என்றான் நேரடியாக. 

 

“இல்லையே..” என்ற கார்முகிலனின் குரல் சந்தேகமாக உள்ளே செல்ல, ஜெகன் சமையலறையில் இருக்கும் பத்மாவை அழைத்திருந்தான். 

 

“இசை இங்க வரலையே..” என்ற பத்மா, “விக்கியும் இன்னும் வீட்டுக்கு வரலையே?” எனப் பதறினார். 

 

“எதுவும் பிரச்சனையா?” ஜெகன் கேட்க, மறுப்பாய் தலையசைத்த அருள் மௌனமாக அமர்ந்திருந்தான். 

 

சரியாக உள்ளே வந்த விக்கி, வீட்டில் நிகழும் கனமான அமைதியையும், அருள் தளர்ந்து அமர்ந்திருப்பதையும் கண்டுவிட்டு, “என்னாச்சிம்மா?” என்றான் பத்மாவிடம். 

 

விக்கி வந்த நிம்மதியிலிருந்தவர், இசையைக் காணவில்லை என்க, “நான்தான் பார்த்தேனே, தெருக்குள்ள வரைக்கும் ஆட்டோவுல வந்தாங்களே, வீட்டுக்கு வரலையா?” என்றான் குழப்பமாக. 

 

அதற்குள் அறையிலிருந்து மெல்ல எழுந்து தளர்வாக வந்திருந்த ராஜி, நடப்பதைக் கவனித்துவிட்டு, “சாயந்தரம் அவர் வந்தாருண்ணா, ஒருவேளை அண்ணி அவங்களோட போயிருப்பாங்களோ?” என்றாள், சந்தேகமாகவும் மரியாதையாகவும். 

 

சட்டென நிமிர்ந்த அருள், “கேட்டுச் செல்லேன்?” என்றான் வேண்டுதலாக. அவன் குரலை இதற்கு முன் இவ்வாறு கேட்டதேயில்லை ராஜி. இசைக்கான அருளின் தவிப்பு அவளுக்குப் புரிந்தது. பிரகாஷிற்கு அழைத்த ராஜி அவனிடம் விசாரித்துவிட்டு, இசை அவள் வீட்டில் தான் இருப்பதாகத் தெரிவித்தாள். 

 

அது வரையிலும் தன் தத்தளிப்பை வெளியில் காட்டிக்கொள்ளாத அருளுக்கு அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு. 

 

“என்ன பெண்ணோ? ஒருத்தர்ட்ட கூட சொல்லிக்காம போயிருக்கா..” என பத்மா குறைபட்டுக் கொள்ள, கார்முகிலன் முறைக்க, சட்டென வாயை அடங்கிக் கொண்டார். 

 

‘ஏன் ராஜியும் இது போன்று எத்தனை முறை கோபித்து வந்திருக்கிறாள், அது நினைவில்லையோ இவருக்கு?’ எனத் தோன்றிய போதும் அருள் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை, அமைதியாகக் கிளம்பிவிட்டான். 

 

மறுநாள் காலையில் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த பிரகாஷ், “வாணி, உன்னை வீட்டில் விடணுமா? கிளம்பிட்டியா?” என்றான் உணவருந்தியபடி. 

 

அவனுக்கு, இசை ஓர் இரவு அன்னையோடு தங்கியதே ஆச்சரியம் தான். நேத்து ராஜி வேறு இயல்பாக விசாரிப்பது போல் விசாரித்த போதும் ஏதோ சரியில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. இசை சொல்லிக்கொள்ளாமல் வந்தது எதுவும் தெரியாது. 

 

இன்னமும் குளிக்காது இரவு உடையிலே இருப்பவளைப் பார்க்கும் போதே அவள் கிளம்பத் தயாராக இல்லை என்பது தெரிந்தது. 

 

“ஏன், ஒரு வாரம் கூட நான் இங்க இருக்கக்கூடாதா?” வெடுக்கென இசை கேட்க, அவளை அதிசயமாக பார்த்தான் பிரகாஷ். ‘இசைக்கு இவ்வாறெல்லாம் பேச வராதே. திருமணத்திற்குப் பிறகு பெண்கள் மாறிவிடுவார்களோ?’ என்ற சந்தேகம். 

 

“தாராளமா இரு, ஏன் அவனுக்கும் உனக்கும் ஏதும் பிரச்சனையா?” என்றவன் கேட்கும் போதே அவள் முறைப்போடு தான் பார்த்தாள். 

 

அவனோ அதையும் கவனிக்காது, “ஏன் அன்னைக்கு மண்டபத்துல நான் கொடுத்ததை நீ வாங்கிக்கலையே.. அதுக்காகச் சண்டை போட்டானா? நான் வேணா இதெல்லாம் அவங்கிட்ட தனியா போய்க் கொடுக்கட்டுமா? உன்னை விட எனக்கு எதுவும் பெருசு இல்லை” என்றான். 

 

உள்ளே அவன் அவன்பில் கரைந்தாலும் வெளியே மேலும் முறைத்து நின்றாள். அவன் தங்கைக்கு என இருப்பதையும் அள்ளித் தர அவன் நினைப்பதையும், அவன் மனைவி கூடாதென நினைப்பதும் இசைக்கு நன்கு தெரியும். 

 

“ஆமாம், ஏற்கனவே அவரை நீ குறைவாத் தானே அவமானப்படுத்தி இருக்க, அது பத்தலைல்ல இன்னும் போய் நல்லா அவமானப்படுத்திட்டு வா, போ..” என்றாள் கடுப்போடு. 

 

“வாணி, நான் என்ன செஞ்சேன்? அவன் தான் முதல்ல சொல்லிக் காட்டுனான்”

 

“ஹோ..! அப்போ அவர் சொல்லிக் காட்டிட்டார்னு தான் செய்றியே தவிர, எனக்காகச் செய்யலை?” 

 

அதுவும் உண்மை தானே? அவளுக்காகச் செய்வதென்றால் திருமணத்தின் போதே செய்திருக்க வேண்டும், இப்போ செய்கிறேன் என்றால் அது அருள் சொல்லிக்காட்டிய வீம்பிற்குச் செய்வதாகத் தானே தோன்றும்?

 

“ஹேய்.. அதுக்குன்னு உன் மேல பாசமில்லைன்னு சொல்லுவியா?”

 

“உன் பாசமெல்லாம் ரொம்ப நல்லாப் புரியுது, எங்களுக்கு இருக்கிற பிரச்சனையே போதும் நீ எதுவும் பழசைக் கிளறி என் நிம்மதியைக் கெடுக்காதே” 

 

“சரி, இப்போ என்ன தான் பிரச்சனை?” என்றவன் விசாரிக்க, “அது உன்னால இல்லை, உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. உனக்கு டைம்மாச்சி, ஆபிஸ் கிளம்பு” என்றவனைக் கிளப்பினாள். 

 

‘அம்மாடி!’ என நெஞ்சை அடைத்தது பிரகாஷிற்கு. முன்பெல்லாம் எண்ணி எண்ணி இரண்டு வார்த்தை பேசுவாள் அவ்வளவு தான். இப்போது என்னடாவென்றால் அவன் மீது கோபம் என்ற போதும், அவனை விட்டுக் கொடுக்காது பேசுகிறாளே என்றிருந்தது பிரகாஷிற்கு. 

அன்று ஒருநாள் தான், அதற்கு அடுத்த நாள் விக்கி எப்போதும் போலே வேலைக்கு வந்திருந்தான். வந்திருந்தாலும் அருளிடம் எதுவும் தெரிவிக்காது எப்போதும் போலே அவன் வழக்கமாகக் கவனிக்கும் வேலைகளைப் பார்த்தான். அருளும் அதைக் கவனித்தான். என்ன தான் துரத்திய போதும் தன்னை விட்டுச் செல்ல மாட்டான் என்பது புரிய, விட்டுவிட்டான். 

 

இசை இல்லாது அருளுக்குப் பாலும் கசந்தது, படுக்கையும் நொந்தது எனும் நிலை தான். அவளோடு ஒரு வாரமாகத் தித்திக்கத் தித்திக்க அனுபவித்த இன்பம், அடுத்த ஒருவாரத்தில் இல்லாது வாட்டியது. அவளைக் காணாத விழியில் ஒரு உற்சாகமின்மை, ஆனால் அதை முடித்தவரை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான். அவளில்லாது என்னவோ தன்னில் பாதியைத் தொலைத்ததைப் போன்று வெறுமையாக இருந்தது. தொழில் இடத்திலும் வீட்டிலும் கண்டிப்போடும், அதட்டல், உருட்டல் என விரைப்பாக இருக்கும் அருள் தளர்வது அவளிடம் மட்டுமே. 

 

அவளிடம் மட்டுமே அவன் அவனாக இருப்பான், அவள் முன் மட்டுமே மலர்ந்து சிரிப்பான். அவளுள் மட்டுமே தன்னை தொலைப்பான், அவன் கோபங்கள் செயல்படாது செயலிழந்து போவதும் அவளிடம் மட்டுமே! நாள் முழுவதுமான அவனின் களைப்பிற்கு அவளே உற்சாகம் தரும் ஊக்க மருந்து. அவள் முகம் பார்த்தாலே போதுமென்ற நிலை! 

 

அவளுக்காக வெகுவாக ஏங்கிச் சிதைந்து கொண்டிருந்தான். உடலையும் உள்ளத்தையும் உருக்கிக் கொண்டிருந்தான். அருளுக்கே வியப்புத் தான்.. இத்தனை ஆழமாகவா அவள் தன்னைப் பாதித்துள்ளாள்?

 

அவளுக்கும் இது போலே இருக்குமா? என அறியும் ஆவல்! இவ்வளவு தவித்த போதும் அவனாக அழைக்கவில்லை. சொல்லிக்கொள்ளாமல் அவளாகத் தானே சென்றாள்.. அவளே வரட்டுமே என்ற வீம்பு, வீராப்பு.

 

கல்யாணத்திற்குப் பிறகு, ஒரு இரவு கூட அவனைப் பிரிந்து அவளில்லை. இப்போது இருக்கிறாள் எனில், ‘என்னாலும் இருக்க முடியும் எனக் காட்டிவிட்டாளோ?’ என்றே நினைத்தான். 

 

ஒரு வாரம் கடந்திருக்கும், தாய் வீட்டின் சீராட்டலில் இருந்த போதும் அந்த பூரிப்பு இசையிடமில்லை. பிரகாஷிற்குத் தான் கவலையாக இருந்தது. ராஜியைப் பார்க்கும் போது அவளிடம் விசாரித்துப் பார்க்க, அவளுக்கு எதுவும் தெரியவில்லை. 

 

பிரகாஷிற்கு மனம் தாங்கவில்லை. “என்ன பிரச்சனைன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறா பாரு உன் பொண்ணு..” என அன்னையிடம் குறைபட்டுக் கொண்டான். அவராவது விசாரிக்கட்டும் என்ற எண்ணம்! 

 

“புருஷன் பொண்டாட்டி பிரச்சனைக்குள்ள தலையிடக்கூடாது, இன்னைக்கு அடிச்சிப்பாங்க, நாளைக்கே அணைச்சிப்பாங்க..” என்றவரின் பதிலில், ‘ஏன் தான் இந்தம்மா இவ்வளவு பொறுப்பில்லாமல் இருக்குதோ..?’ என நொந்து கொண்டவனுக்கு ஏமாற்றம் தான். 

 

இத்தனையும் இசையின் முன் தான் பேசிக் கொண்டிருந்தனர். 

 

“அவ தான் போகலை… சரி, அவனாவது வந்து கூப்பிடுறானா பாரு..” எனப் புலம்பியவன், “சரிதான் அவன் நம்ம வீட்டுக்கு வரக் கூடாதுன்னு வீம்புல இருக்கானே..” என்றும் முனங்கினான்.

 

“இந்த மாதிரி, அண்ணி கோபப்பட்டுப் போய் நீ எத்தனை முறை கூட்டிட்டு வந்தியாம்? அண்ணியே வருவாங்கன்னு இளக்காரமா நினைச்சவன் தானே நீ?” என்றவள் சீற, மௌனமாக இருந்தான். 

 

“அவர் வரலைன்னு சொல்லுற நீ, என்னைக்காவது அவரை அழைச்சிருக்கியா? அப்பா இல்லைனா அந்த ஸ்தானமும் அண்ணன் உனக்குத் தான் ஆனால் நீ விருந்துக்குக் கூட அவரை அழைக்கலை, அதான் அவரும் வரலை” 

 

பிரகாஷ் அன்று தங்கை பேசப் பேச அதிசய திருநாளாகக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். அண்ணனாக செய்த போதும், தந்தை என்ற இடத்திற்கு அவளை ஏங்க வைத்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு. 

 

“கல்யாணத்துக்கு முன்னர் தான் சரி, அண்ணியோடு அண்ணன் அவரோட உறவு வேணும்னு கொஞ்சமும் யோசிக்காமல் அவமானப்படுத்திட்டே, இப்போ என்னோட கணவர்னு உனக்குத் தோணலையா? அவர் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரிஞ்சும், பொது இடத்துலையும், அவங்க உறவுகளுக்கு முன்னையும் அவமானப்படுத்துற? ஒரு வார்த்தைக்குக் கூட அவருக்கு நீ மரியாதை கொடுக்கிறதில்லை” 

 

மொத்தமாகத் தன் மனதிலிருக்கும் ஆதங்கம் அனைத்தையும் கொட்டிவிட்டு நீண்ட மூச்சு வாங்கினாள். பிரகாஷிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, ‘அவன் பக்கமாகப் பேசுகிறவள், தன் பக்கம் சிறிதும் யோசிக்க மாட்டளா?’ என்றே இருந்தது. 

 

பார்வதி அனைத்தையும் பார்த்திருந்த போதும் எதற்கும் இடையில் வரவில்லை. 

 

“ரொம்பத் தான் உங்க மருமகனுக்குச் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காள்..” என அவரிடம் குறைபட்டுக் கொண்டவன், தன்னறை நோக்கித் திரும்ப, “ஏன், ராஜி கூட உனக்காகக் கல்யாணத்துக்கு முன்னையே அங்க அண்ணன்கிட்ட பேசலை? பொண்ணுங்கன்னா அப்படி தான்டா..” என்றார் நிறைவாக. 

 

பார்வதிக்கு மகளின் மனம் நன்கு புரிந்தது, அதனாலே அமைதியாகச் சீராட்டிக் கொண்டிருந்தார். இங்கு வந்த பின் இசை, தேவகியிடம் தெரிவித்திருந்தாள். ஆனால் அவள் ஒரு வாரமாகியும் திரும்பாதது என்னவோ போலிருந்தது. மனோவும் இல்லாது விக்கியும் முன்பு போல் வீட்டிற்கு வராதது, இசையும் இல்லாது தேவகியால் இருக்கவே முடியவில்லை. 

 

அருளிடம் என்ன பிரச்சனை என விசாரித்தால், அவன் எதுவுமில்லை என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறினான். சரி சென்று அழைத்து வா என்றால், முடியாது என எரிந்து விழுந்தான். 

 

அங்கு இசையின் நிலையும் என்ன என்றறியாது தவித்தவர், பார்வதியை அழைத்து மாலை நேரம் கோவிலுக்கு வருமாறு வேண்டியிருந்தார். அவரும் செல்ல, தேவகியும் பத்மாவை இழுத்துக் கொண்டு சென்றார். பிரச்சனையைக் கண்டறியும் முடிவில் மகளிர் அணி கூடியது. 

 

இருவேளை உண்ணாது சுற்றிய அருளுக்கு, மாலை நேரம் பசி வயிற்றைக் கிள்ளியது. வெளியில் எதுவும் சாப்பிடத் தோன்றாது வீட்டிற்குக் கிளம்பினான். அவன் வீட்டிற்குள் நுழைய, ராஜி ஹாலில் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க, பாரி உள்ளறையில் இருந்தார். 

 

“அம்மா, ஒரு இஞ்சி டீ கொண்டு வாயேன்..” எனக் குரல் கொடுத்தபடி, அவனும் சோபாவில் அமர்ந்தான். 

 

அவன் வாடிய முகத்தைக் காண்கையிலேயே அவன் பசி தெரிய, “சித்தி கோயிலுக்குப் போயிருக்காங்க அண்ணா..” என்க, அவள் பதிலைக் கேட்டதற்கான பிரதிபலிப்பே அவனிடமில்லை. அவன் உதாசீனத்தில் மேலும் மனம் நொந்தாள் ராஜி. 

 

Advertisement