Advertisement

அப்போதும் அவனைத் தடுக்காது, “அண்ணா என்னை எவ்வளவு வேணா அடிச்சிக்கோ.. ஆனால் எதுக்கு அடிக்கிறேன்னு சொல்லிட்டு அடி, வேலையில எதுவும் தப்பு பண்ணிட்டேனா?” என்றவன், காரணம் கேட்கும் போதே மேலும் நொறுக்கியிருந்தான் அருள். 

 

அப்போதும் அருளுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது. “ஏன்டா, என் தம்பியா இருந்திட்டு எப்படிடா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்ச..? படிக்கிற பிள்ளை மனசைக் கலைக்கிறியா? அவளைத் தனியா கூட்டிட்டிப் போய்ப் பேச உனக்கு என்னடா உரிமை இருக்கு? அதுவும் என் இடத்துல இப்படிச் செய்ய உனக்கு எப்படிடா தைரியம் வந்தது? 

 

வேற யாராவது பார்த்திருந்தால் என்ன நினைப்பாங்க? உன்னைப் பத்திக்குக் கூட கவலையில்லை, ஆனால் அவளுக்கு ஒரு எதிர்காலம் இருக்குல்ல?” கேட்டவாறே வெளுத்துக் கட்டினான். அருளின் மனம் பெண்பிள்ளையின் எதிர்காலம் என்றெண்ணிப் பதறிப்போனது. 

 

தவறாக எதுவுமில்லை. எனினும் அனைவரும் அது போலே எடுத்துக் கொள்வர் என நினைக்க இயலாது. அருளுக்கு ஒழுக்கத்தை விட எதுவும் பெரிதில்லை, தன் தமையன் நெறி தவறிவிட்டானோ என்பதையே அவனால் தாங்க முடியவில்லை. 

அப்போது தான் விக்கிக்கு அருளின் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அவன் பின்னே வந்த இசையும் அதனைக் கண்டு வாசலிலே அதிர்ந்து நின்றாள். அதிலும் அருள் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர, விளக்கும் எண்ணத்தில் உள் வந்தாள். 

 

முகமே அனலாய்ச் சிவக்க, “என்ன தைரியம் உனக்கு? ம்ம்..?” என்ற மிரட்டலோடு கொத்தாக அவன் சட்டையைப் பற்றியிருந்த அருள், மீண்டும் அவன் அடிக்க கையோங்க, “ஏங்க, எதுக்கு இவ்வளவு கோபம்? கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..” என்றபடி விரைந்து வந்திருந்த இசை, அவன் கரத்தைப் பற்றினாள். 

 

இது வரையிலும் அப்படியொரு அருளின் முகத்தை இசை பார்த்ததில்லை. அவன் எல்லை தாண்டிய கோபத்தின் எல்லைகளையும் அவள் அறிந்ததில்லை. 

அருளுக்கு அவனைத் தடுத்ததில் கோபம், அதிலும் பெரும் தவறு செய்தவனுக்கு அவள் ஆதரவாக வந்தது மேலும் அவனை உக்கிரமாக்கியது. 

 

“கையை விடு நீ..” என்றவன்,  அடித்தொண்டையிலிருந்து அதட்டலிட, சிறிதும் அவள் பின் வாங்கவில்லை. 

 

அவளோ அருளின் கரத்தை மேலும் அழுத்திப்பிடித்தபடி, “உண்மை என்னனு தெரியாமல் நீங்க இப்படிப் பேசக்கூடாது..” என்றவளின் குரலில் கண்டிப்பு கூட, கரத்தை உருவிக் கொண்டவன், “அப்போ உனக்கு உண்மை தெரியும் அப்படி தானே?” என்றான் அதட்டலாக. 

 

தன்னால் அவர்களுக்குள் பிரச்சனை வருவதை விக்கி வேதனையோடு பார்த்தான். அருளின் கேள்விக்கு வார்த்தை வாராது தொண்டை அடைக்க, தலையை மட்டும் ஆமென அசைத்தாள் இசை. 

 

“ஹோ..! அப்படியா? எத்தனை நாளா நடக்குது இது? அப்போ இவனுக்காகத் தான் அந்த பொண்ணுக்கு காலர்ஷிப் கேட்ட..? எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நீ எப்படி இவங்களுக்கு சப்போர்ட் பண்ண? இவன் தப்புப் பண்ணா அறிவுரை சொல்லாம நீயும் துணை போவியா?” என்றவன் கத்த, 

அதிர்ந்த இசை, “இல்லைங்க, கொஞ்சம் கோபப்படாம நான் சொல்லுறதைக் கேட்டால் உங்களுக்குப் புரியும்” என்றவளின் மெல்லிய குரல் அவன் செவியில் ஏறவில்லை. 

 

“எத்தனை நாளா உனக்கு இது தெரியும்?” என்றவன் மேலும் கோபமாக, “இப்போ கொஞ்ச நாளா தான்..” என வார்த்தைகளை முழுங்கினாள். 

 

“ஹோ..! அப்போ உனக்குத் தெரிஞ்சும் எங்கிட்ட சொல்லாம மறைஞ்சி இவங்களைக் காப்பாத்தியிருக்க? இரண்டுபேரும் திட்டம் போட்டு உங்களுக்குத் தேவையானதை எங்கிட்ட சாதிச்சிகிட்டீங்க அப்படித் தானே? இரண்டுபேரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டீங்க? ம்ம்..?” என்றவன் ஆத்திரத்தில் அனத்தினான். 

 

“அண்ணி மேல எந்த தப்புமில்லை..” என விக்கி இடையில் வர, “நீ பேசாதேடா.. இனி ஒரு நிமிஷம் கூட உனக்கு இங்க வேலையில்லை. கிளம்பு நீ..” என்றான் உறுதியாக. 

 

கை முஷ்டியை இறுக்கிக் கொண்டிருக்க, சமாதானம் உரைக்க இசை இடையில் வர, “வேண்டாம், எதுவும் பேசாதே.. உன் மேலையும் கை நீட்ட வச்சிராதே…” என அவளை நோக்கி கையோங்கியபடியே உரைத்தவன், பின் கிளம்பு மாறும் சைகை செய்தான். 

 

அதற்கு மேலும் அவனுக்குப் புரிய வைக்க முடியாது எனத் தோன்ற, விழி நிறைந்த நீரோடு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள். அழுதபடி செல்லும் அண்ணியைப் பார்ப்பதா? அண்ணனுக்கு விளக்கம் உரைப்பதா? எனத் தவித்து நின்ற விக்கி, இசையின் பின் சென்றான். தன்னாலே இருவருக்குமிடையில் சண்டை, தன்னாலே இசைக்கு இந்நிலை என்ற குற்றவுணர்வு விக்கிக்கு. 

 

விக்கி பின்னே வருவதையும் கவனிக்காது ஆட்டோவில் ஏறிய இசை, வீடு நோக்கிச்சென்றாள். அவள் தங்கள் தெருவிற்குள் நுழையும் வரை பின் தொடர்ந்து வந்தவன், அவள் வீடு சென்று விடுவாள் என்ற உறுதி வந்த பின்னே, தன் வாகனத்தைத் திருப்பிக் கொண்டு மனம் போன போக்கில் வெகு தூரம் சென்றான். 

 

இசை வீட்டை நெருங்குகையில், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தான் பிரகாஷ். ராஜியைப் பார்க்க வந்திருந்தவன் இசைக்கு அழைக்க, அவள் அழைப்புகளை ஏற்காததால் கிளம்பியிருந்தான். 

ஆனால் சரியாக எதிரே வந்த இசை, ஆட்டோவை நிறுத்தி இறங்க, பிரகாஷும் அருகே வந்து நின்றான். 

 

“எங்க போன? உன் போன் என்னாச்சு? ஏன் கால் அட்டென்ட் பண்ணலை?” என்றவன் விசாரிக்க, கலங்கி விழிகளை வரும் போதே சரிப்படுத்தி, தன்னை நிதானப்படுத்தி விட்டு வந்திருந்தாள் இசைவாணி. 

 

“கோயிலுக்குப் போயிட்டு வந்தேன்..” என வழக்கமான குரலில் நிதானமாகப் பதிலுரைத்தவள், “அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.. என்னைக் கூட்டிட்டுப் போறியா?” என வேண்டினாள். 

 

எப்போதும் பிரகாஷோடு சென்றால், இரவே திரும்பியும் விடுவாள். இன்றும் அவ்வாறு தான் கேட்கிறாள் என நினைத்த பிரகாஷும் சரியெனத் தலையசைத்தபடி, “உங்க வீட்டுல சொல்லிட்டு வா..” என்றான். 

 

அவர்கள் நிற்கும் இடத்திற்குப் பக்கத்திலே தான் அருளின் வீடு, அருள் இது வரையிலும் தங்கள் வீட்டிற்கு வந்ததில்லை ஆகையால், பிரகாஷும் அவர்கள் வீட்டிற்குச் சென்றதில்லை. ராஜியைப் பார்க்க வந்தாலும் அவள் வீட்டோடு சரி, அங்கே இன்னும் சரியான ஒட்டுதல் வரவில்லை. கணேஷ், விக்கியோடு சகஜமாகப் பேசும் பிரகாஷிற்கு பெரியவர்களோடு பேச வார்த்தைகள் வராது. 

 

அதற்குள் அவன் வண்டியின் பின் இருக்கையில் ஏறியிருந்த இசை, “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ கிளம்பு..” என்க, அவனும் அழைத்துச் சென்றுவிட்டான். 

 

ஆனால் பிரகாஷிற்குத் தெரியாது இசை, அருளோடு கோபித்துக் கொண்டு அவன் வீட்டில் தெரிவிக்காமல் தன்னோடு வருகிறாளென்று. 

 

பூங்காவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான் விக்கி. மனம் நிறைந்த வலி, இலக்கில்லாது பார்வையை எங்கோ வெறித்தபடி இருக்க, ஏனோ மனம் ஆறவில்லை. 

 

ராமமூர்த்தி நேற்று விடுமுறையிலிருக்க, விக்கியைப் பார்க்க வந்தாள் பிருந்தா. அவன் நல்ல நேரம் அருள் அப்போது கடையில் இல்லை. உள்ளே வந்தவள் அவனைத் தேடியபடி ஒவ்வொரு தளமாகச் சுற்றி வந்தாள். யாரிடமேனும் சென்று விக்கியைப் பற்றி விசாரிக்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது. அத்தனை தளங்களும் சுற்றிவிட்டு இறுதியாக குடோன் பகுதிக்கு அவளே சென்றுவிட்டாள். 

 

மதிய உணவு நேரம் என்பதால் குடோனில் வேலை செய்பவர்கள் கேன்டீன் சென்றிருக்க, உள்ளே விக்கி மட்டுமே இருந்தான். அண்டர் கிரவுண்ட் பகுதி, அதிக வெளிச்சமற்ற இடம், அதிக இருளாக இருக்க, உள்ளுக்குள் சிறிது பயமிருந்த போதும் ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் பிருந்தா வந்திருந்தாள். 

 

சரியாக உள்ளறையிலிருந்து வந்த விக்கி, அவளைக் காணவும் அதிர்வோடு, “ஏய் பிருந்தா, நீ என்ன செய்ற இங்க?” என்க, “உங்களைப் பார்க்கத் தான் வந்தேன்..” என்றவளின் குரலில் சிறு நடுக்கம். 

 

‘அதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டுமா?’ என நினைத்துக் கொண்டவன், “என்ன விஷயம்?” என்க, “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவள் குரலில் ஒரு வேண்டல். 

 

அவன் சுற்றுப்புறத்தையோ அவனிருக்கும் இடத்தையோ பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்குப் பழக்கமான இடம், அவன் வேலை செய்யுமிடம். இரு அறைகளுக்கு இடைப்பட்ட குறுகலான பகுதியில் ஆளுக்கோரு சுவரோரம் நின்று கொண்டிருந்தனர். 

 

அவளுக்கு வேறேதேனும் பிரச்சனை இருக்குமோ என்ற பதைபதைப்பிலிருந்த விக்கி, “அது தான் என்ன விஷயம்னு கேட்டேன், சொல்லு..” என்றான் அழுத்தமுடன். 

 

ஒரு நொடி தயங்கியவள், “அ..அது.. நான் உங்களை ரொம்பவும் நோகடிச்சிருக்கேன். உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்திருக்கேன். இருந்தும் நீங்க எனக்கு உதவி செய்திருக்கீங்க. அதுவும் நீங்க சரியான நேரத்துல செய்த உதவியால தான் நான் இப்போ ஆசைப்பட்ட படிப்பை படிச்சிகிட்டு இருக்கேன். அதுக்கு நன்றி சொல்லணும், ரொம்ப ரொம்ப நன்றி. என் உசுருள்ள வரை உங்களை மறக்க மாட்டேன்..” என்றவள் கலங்கினாள். 

 

‘இதற்கு தான் வந்தாளா?’ என மனம் இலகுவான போதும், அவள் கலங்குகையில் நெஞ்சம் உருகியது. “ஹேய்.. நான் செய்தது ஒரு சாதாரண விஷயம், அதுக்கு எதுக்கு இவ்வளோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு இருக்க?” என்றவன், ஆறுதல் உரைத்தபடி அவளை நெருங்கி ஒரு அடி எடுத்து வைக்க, தரையில் கிடக்கும் கழிவுகளான அட்டைப்பெட்டிகள், கயிறுகள் காலை இடற, தடுமாறி விழுந்தான். 

 

விழுந்த போதும் அவள் மேல் உரசிவிடாது அவளின் பின்புற சுவரில் இரு கையையும் ஊன்றிக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் விக்கி. ஆனால் உடைந்தே விட்ட பிருந்தா, தன்னோட நெருக்கத்திலிருந்தவனின் சட்டையைப் பிடித்து மேலும் அருகே இழுத்தவள், “ஏங்க என் மேல இவ்வளவு அன்பு வைச்சிருக்கீங்க? வேண்டாம், உங்க அன்புக்கு நான் தகுதியே இல்லாதவள்..” எனத் தேம்பினாள். 

 

விக்கிக்கு என்ன அறுதல் சொல்வது, அவளை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியவில்லை. 

மெல்ல அவளிடமிருந்து தன்னை உருவிக் கொண்டவன், “நீ நல்லாயிருந்தால் போதும், அதைத் தவிர வேற எந்த எதிர்பார்ப்பில்லை எனக்கு..” என்றான். 

 

மேலும் மேலும் அவன் முன் பலவீனப்படுவதை உணர்ந்தவள், அதற்கு மேலும் அவன் முன் நிற்க இயலாது விடைபெற்றுக் கிளம்பினாள். 

கலங்கிய நிலையில் அவள் கிளம்புவது, அவனுக்கும் நெஞ்சைக் கவ்வியது.

Advertisement