Advertisement

அத்தியாயம் 19

வார இறுதி. சனிக்கிழமையன்று கணேஷ் அவன் மாமியார் வீட்டிற்குக் கிளம்ப, அவன் பெற்றோரும் சம்பந்தி அம்மாளின் நலம் விசாரித்து வர, உடன் கிளம்பியிருந்தனர். விக்கி வேலைக்குச் சென்றிருக்க, ராஜி சித்தி வீட்டிலிருக்க, ஜெகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். 

 

ராஜியும் பாரியும் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, தேவகியும் இசையும் சமையல் வேலையிலிருந்தனர். மதிய உணவிற்கான சமையலை முடித்திருந்தவர், இசையிடம் ஒரு பிளாஸ்டிக் வாளியைக் கொடுத்து, “இதுல தோசை மாவு இருக்கு, போய் அவங்க வீட்டு ப்ரிட்ஜ்ல வைச்சிட்டு வந்திடு, எப்படியும் பத்மா நைட்டுக்குத் தான் வருவாள். இதை யூஸ் பண்ணிக்கட்டும், நான் போன் பண்ணிச் சொல்லிடுறேன்” என்க, “சரி அத்தை..” என வாங்கிக்கொண்டு நகர்ந்தாள் இசைவாணி. 

 

“இசை..” மீண்டும் அவளை அழைத்தவர், அவள் திரும்பியதும், “ஜெகன் இருக்கான்னு நினைக்கிறேன். அவனைச் சாப்பிட வரச் சொல்லு, எப்படியும் பத்மா எதுவும் செய்திருக்க மாட்டாள்..” என்க, அதற்கும் தலையசைத்துச் சென்றாள். 

 

“ஏன் தேவகி ஒரு நாளாவது பிள்ளை வெளியில நல்ல சாப்பாடு சாப்பிடட்டுமே. அவனையும் உன் சமையலைச் சாப்பிட வைச்சுக் கொடுமைப்படுத்தாதே..” என்றவர் கேலியுரைக்க, “முப்பத்தியொரு வருஷமா மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு பேசுற பேச்சைப் பாரு..” என்றவர் சிலிப்பிக் கொள்ள, இசை சிரிப்போடு நகர்ந்தாள். 

 

தன் அன்னை, தந்தையிடம் கூட இத்தனை அந்நியோனியம் கண்டதில்லை. தானும் அருளும் கூட இத்தனை வருடங்களுக்குப் பின் இவர்கள் போன்று இருப்போமா தெரியவில்லை. தேவகியும் பாரியும் மனமொத்த தம்பதியினர், கண் முன் இருக்கும் காதல் சின்னங்கள். 

 

ஆள் யாருமற்ற வீடு கனத்த அமைதியோடிருக்க, தேவகி உரைத்தது போலே அவர்கள் வீட்டுச் சமையலறையில் தோசை மாவை வைத்துவிட்டு, ஜெகனின் அறை நோக்கிச் சென்றாள் இசை. 

அவனின் அறைவாசலில் கதவைத் தட்டிவிட்டு சில நிமிடங்களாக நிற்க, உள்ளிருந்து எந்தவிதச் சத்தங்களுமில்லை. ஒருவேளை அவன் வீட்டிலில்லையோ என்றவள் யோசிக்க, மறுநொடியே தான் வரும் போது வெளி வாசல் கதவு திறந்திருந்தது வேறு நினைவில் வந்தது. 

 

ஒருவேளை உறங்குகிறானோ என்றெண்ணியவள், பலமோடு கதவைத்தட்ட, மூடப்படாத கதவு தன்னாலே திறந்தது. ஒருக்களித்த கதவின் வழி உள்ளே பார்வையிட, ஜெகன் தரையில் படுத்திருந்தான். உறங்குகிறான் என்றெண்ணியவள் திரும்ப நினைக்க, வெள்ளை நிற மெத்தை விரிப்பில் தெரியும் சிவப்பு நிறம் அவள் கவனத்தை ஈர்த்தது. 

 

மனம் பதைபதைக்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள் அருகே சென்று பார்க்க, அதிர்ந்தாள். ஜெகனின் இடதுகை வெட்டுப்பட்டிருக்க, இரத்தம் நில்லாது வழிந்து கொண்டிருந்தது, காலடியில் கத்தியொன்று இரத்தம் தோய்ந்து கிடந்தது. 

 

ஒரு நொடியில் உள்ளம் பதற, நடுங்கியவள், பின் நிகழ்வை உணர்ந்து செயல்படத் தொடங்கினாள். உறையாத சூடான இரத்தமும், ஏறி இறங்கும் தொண்டைக்குழியும் சற்று முன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை உணர்த்த, ஒரு துணி கொண்டு இரத்தம் வரும் பகுதியை காட்டிவிட்டு, “ஜெகன்.. ஜெகன்.. இங்க பாருங்க..” என்றழைத்தவள் அவனைச் சுயநினைவிற்கு கொண்டு வர முயன்றாள். 

 

மெல்ல கண் திறந்த போதும் வலியோடு முனகியவன் மீண்டும் விழி மூடிக்கொண்டான். சுற்றும் முற்றும் ஆராய, அவன் அலைபேசியைத் தெரிய, அதை எடுத்து அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கு அழைத்தாள். பின் விக்கிக்கு அழைக்க, அவன் ஏற்காததால் அருளுக்கு அழைத்தாள். 

 

கோபமாக இருந்த போதும் இசையின் பதட்டமான குரல் கேட்டதும் உடனே கிளம்பி வந்தான். சரியாக ஆம்புலன்ஸ் வந்து முதலுதவி செய்து, வண்டியில் ஜெகனை ஏற்றியிருக்க, இசை பயத்தில் நிற்க, அருள் வந்துவிட்டான். அருளைக் காணவும் தான் அவளுக்குச் சிறிது தைரியம் வந்தது, அவர்களும் உடன் சென்றனர். 

 

மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்க, அருள் என்ன நிகழ்ந்தது என இசையிடம் விசாரிக்க, தான் பார்த்ததை உரைத்தாள். அதற்குள் விஷயம் அறிந்து தேவகியும், பாரியும் மருத்துவமனைக்குப் பதட்டமாக வந்துவிட, அவர்களைப் பார்த்ததும் ஆறுதல் உரைத்து அமைதியாக அமர வைத்தான். 

 

நரம்புகளில் வெட்டியிருந்ததால் தையலிட்டு கட்டுக்கட்டியிருந்தனர். முதலில் அருளும் இசையும் சென்று நலம் விசாரித்துக்கொண்டிருக்க, ராஜி தெரிவித்திருக்க, விக்கி வந்தான். இசை நலம் விசாரிக்க, அருள் ஏன் இவ்வாறு செய்தாய் என்று தான் விசாரித்தான். 

 

ஜெகன் பதில் சொல்லாது மௌனமாக இருக்க, “உன் சொந்த வாழ்க்கையில எதுவும்  பிரச்சனையான்னு தெரிஞ்சிக்கிற ஆசையில்லை. ஆனால் பணப் பிரச்சனை எதுவும்னா சொல்லு உதவி செய்றேன்” என்றான் தன்மையாக.  

 

ஒரு பார்வை பார்த்துவிட்டு விழி மூடிக் கொண்ட ஜெகன், “எனக்கும் ஸ்வாதிக்கும் தான் பிரச்சனை. ஆரம்பத்துல இருந்தே ஒத்துப்போகலை, அவள் செலவு விஷயங்கள்ல எதுவும் நான் கணக்குக் கேட்கக் கூடாதாம், சரின்னு நானும் கவனிக்காம விட்டதால அவளும் வேலைக்குப் போக மாட்டேன்னு வேலையை விட்டுட்டாள். ஆன்லைன் கேமிங், பெட்டிங்ன்னு சேவிங்க்ஸ் எல்லாம் கொஞ்சமா கொஞ்சமா கரைச்சிட்டாள். எனக்கு விஷயம் தெரிஞ்சு கண்டிச்சேன். அவ்வளவு தான், அவளை ஒரு வார்த்தை சொன்னதும் அவங்க வீட்டுல இருந்து சப்போர்ட்க்கு வர்றாங்க. 

 

அவங்களும் கூட கண்டிக்க மாட்டேங்கிறாங்க, ஒரே பொண்ணுன்னு செல்லமா வைச்சிக்கிறாங்களாம். அதுக்குன்னு இப்படியா பொறுப்பில்லாம இருப்பாள்? இதுல நான் என்னவோ கொடுமை பண்ண மாதிரி கொஞ்சிட்டு அம்மா வீட்டுல போய் உக்காத்துகிட்டாள்..” என்றான். மனதிலிருந்த ஆற்றாமை எல்லாம் யாரிடமாது கொட்டிவிடும் வேகம். 

 

இதில் தான் சொல்வதற்கு என்ன இருக்கிறது எனப் புரியாது தலை கோதிய அருள், “நம்ம வீட்டுப் பெரியவங்களை கூட்டிட்டுப் போய் ஒரு தடவை பேசிட்டு வாயேன் ஜெகன்..” என்றான். 

விரக்தியில் விழி திறந்த ஜெகன், “ம்ஹூம்… டிவோர்ஸ் கேட்குற அருள். நானும் பிடிவாதமாத் தர மாட்டேன்னு சொல்ல, வரதட்சணைக் கொடுமைன்னு சொல்லுவேன் இல்லை, நீ திருமணவாழ்க்கைக்குத் தகுதியேயில்லாதவன்னு சொல்லுவேன்னு சொல்லி என்னையே மிரட்டுறாள். என்னால தாங்கிக்கவே முடியலை அருள், வெளியேவும் சொல்ல முடியலை அவமானமா இருக்கு. வாழ்க்கையிலே பலமா தோத்துட்டேன், இப்போ எதுவுமே என் கையில இல்லை. வாழ்க்கையே வெறுத்துடுச்சி, என்ன செய்றதுன்னு தெரியாமல் இப்படிச் செய்துட்டேன்” என்றான். 

அவன் நிலை கேட்டதில் இருவருமே மனம் வருந்தினர். அருளைப் பிடிக்காதே தவிர, அவனிடம் குறையென்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. எவ்விதக் கெட்ட பழக்கங்களுமில்லாத ஒழுக்கமானவன். அவன் வாழ்வியல் முறைக்குத் தகுந்த எதிர்பார்ப்போடு இருந்தான், அவ்வளவே! 

இப்படி மனம் உடைந்திருப்பான் என்பதை எதிர்பாராத அருள், “அதுக்குன்னு இப்படியா செய்வ? நீ இப்படி செய்துக்கத் தான் பெரியப்பா, பெரியம்மா உன்னைக் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வளர்த்தாங்களா? ஜெகன், ஒன்னு சொல்லுறேன் புரிஞ்சிக்கோ. அழகுங்கிறது அடையாளமில்லை, அரிதாரம்..” என்க, ஜெகன் மௌனமாக இருந்தான். 

 

அருளின் கரத்தைப் பற்றிய இசை, பார்வையிலே ஏதோ வினவ, அவனும் கண்ணிமைத்துச் சம்மதம் உரைத்தான். அனைத்தையும் ஜெகன் பார்த்திருக்க, அவனிடம் திரும்பியவள், “நீங்கக் கொஞ்ச நாளைக்கு வொர்க் பிளேஸை மாத்துங்க. சென்னை வேண்டாம் வேற இடத்துல ட்ரை பண்ணுங்க. இடம் மாறுதல் மனம் மாறுதலைத் தரும், அந்தச் சின்ன இடைவெளியில ஸ்வாதியும் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கு. காலம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் பதில் சொல்லும். ஏதோ எனக்குத் தோணினதைச் சொன்னேன்..” என்றாள். 

 

தலையசைப்போடு கேட்டுக் கொண்டவன், “’தேங்க்ஸ் இசை..” என்றான் நிறைந்த மனதாக. 

அவள் தலையசைப்போடு ஏற்க, “சரி, நாங்க கிளம்புறோம், உடம்பை பார்த்துக்கோ..” என்ற அருள் உரைக்க,  இருவரும் கிளம்பினர். 

அவர்கள் செல்ல அப்போது உறைத்தது ஜெயனுக்கு, அழகு என்பது அடையாளமல்ல, அரிதாரமென. உண்மை தான், ஸ்வாதியின் அழகு கண்டு தான் திருமணம் செய்தான். அதுபோல் நிற வேறுபாடு காட்டி இசையை நிராகரித்தானே, இன்று அவள் தான் தன்னுயிரையே காப்பாற்றியுள்ளாள். மனிதரைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அருள் அளவிற்கு தனக்கில்லை என்பது அப்போது தான் ஜெகனுகுப் புரிந்தது. 

 

சம வயதினர் எனவே சிறு வயதிலிருந்தே அனைத்திற்கும் அருளோடு போட்டியிட்டுத் தான் பழக்கம். 

இருவீட்டிலும் அருளின் வார்த்தைக்கு இருக்கும் மதிப்பைக் காண்கையில் அவனைக் குறை கூறி, அவனை விடச் சிறந்தவன் எனக் காட்டிக்கொள்ளவும் முயன்றிருக்கிறான். ஆனால் இன்றேனோ தான் வாழ்வைத் தொலைத்து நிற்கும் நிலையிலும் அருளும் இசையும் மனமொத்த தம்பதியாக நிற்பது ஜெகனுக்கு ஒரு மன அமைதியைத் தான் தந்தது. வாழ்க்கையில் சில அனுபவங்கள் தன்மைப் பண்பானவனாக மாற்றும். 

 

இருவரும் வெளியே வர, ஊருக்குச் சென்றிருந்த ஜெகனின் பெற்றோரும், கணேஷும் வந்திருந்தனர். இசையின் கரத்தைப் பற்றிக் கொண்டு பத்மா கண்ணீர் விட, ஆறுதல் உரைத்தாள். 

 

பின் மெல்லிய குரலில், “ஜெகன் வந்திருக்கார்னா அவர் வாழ்க்கை எப்படியிருக்கு? எதுவும் பிரச்சனையா? இதைக் கூடவா விசாரிக்காம இருப்பீங்க, வயிறார சாப்பாடு போட்ட மட்டும் போதுமா? மனசுல என்ன இருக்குன்னு யாராவது ஒரு வார்த்தை கேட்டிருக்காலமே? ஒரு வேளை மனசுல உள்ள கஷ்டத்தை எல்லாம் யார்கிட்டையாவது கொட்டு அழுது தீர்த்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டாரோன்னு தோனுது..” எனக் கண்டிப்பு அல்லாது மெல்லிய குரலில் அறிவுரை போலே உரைத்தான். 

 

‘அனைவரை விடவும், பெற்றவள் நான் கவனிக்கவில்லையே..’ என பத்மாவிற்கு மனம் கனத்தது. ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறாள் என இசையை அழைத்துக் கொண்டு சென்றான் அருள். 

 

ஜெகன் சரியாகி வர, பத்மா கவனமாகப் பார்த்துக் கொண்டார். விடுமுறை நாட்களில் விக்கியும் அவனை வெளியில் அழைத்துச் செல்ல, தேவகியும் அவனுடல் தேற பார்த்துப் பார்த்து சமைத்துத் தர, குடும்பத்தாரின் அன்பில் நெகிழ்ந்து போனான் ஜெகன். 

 

அருளும் இசையும் தேவைக்குப் பேசிக்கொள்வனரே தவிர, வேறுவித ஒட்டுதல் எதுவுமில்லை. அருளுக்கு இறங்கிச்சென்று கொஞ்சிச் சமாதானாம் செய்வதெல்லாம் வராது. அதைவிடவும் அவனுக்கு நேரமில்லை, வேலைகள் அதிகம். 

அன்று பிரதோஷம் ஆகையால் மாலை கோவிலுக்குச் சென்று மனம் அமைதியடைய வணங்கியவள், பின் விக்கியை பார்க்கவென கடைக்குச் சென்றாள். 

 

கடந்த ஒரு வாரமாக வேலைகள் அதிகமிருக்க, அனைத்தையும் முடித்து அப்போது தான் சற்று ஓய்வாக அமர்ந்திருந்தான் அருள்வேலவன். வேலையின்றி இருந்தான் எதேச்சையாக நேற்றைய சிசிடிவி வீடியோ பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும் தான் கடையில் இல்லாத நேரத்தைச் சற்று உற்றுக் கவனிக்க, கடைசியாக குடோன் ஏரியா கேமரா பதிவில் சிக்கினர் விக்கியும் பிருந்தாவும். 

 

யாருமில்லா தனியிடத்தில் இருளில் நின்று கொண்டிருந்தனர் இருவரும், அவள் முகத்தில் சிறு பயமும், படபடப்புமிருக்க, அவன் கண்களில் ஒரு ஆர்வம். ஏதோ இருவரும் பேசிக்கொண்டிருக்க, திடீரென அவளை அணைத்தான் விக்கி. அவள் விலக்கிவிட முயல, அவனோ சில நிமிடங்களுக்குப் பிறகே விடுவிக்க, அதன் பின் அவள் சென்று விட்டாள். 

 

அவ்வீடியோ பதிவில் காட்சிகள் மட்டுமே வரும், ஒலி வராது. ஆகையால் அவர்கள் பேசிக் கொண்டதை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அதைப் பார்த்ததுமே அருளுக்குத் தன்னிலை மறக்கும் அளவு கோபம் உச்சிலேறியது. ஏன் என்னவென்று விசாரிக்கும் பொறுமை சிறிதுமில்லை. விக்கியைத் தன்னறைக்கு வருமாறு அழைத்தவன், கையை முறுக்கிக் கொண்டு காத்திருந்தான். 

 

அப்போது தான் கடைக்குள் நுழைந்த இசை, விக்கி, அருளின் அறை நோக்கிச் செல்வதைக் கவனித்து விட்டு அவனின் பின்னேச் சென்றாள். 

 

“என்னண்ணா கூப்பிட்ட…?” என்றபடி விக்கி உள் நுழைய, அந்த நொடியே அவன் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தான் அருள். 

 

எந்தவித அறிவிப்புமின்றி அடிக்க, ஏனென்ற விக்கிக்குப் புரியவில்லை. அடி வாங்கியவனோ கன்னத்தில் கைவைத்துக் கொண்டு வலியைக் கூட உணராது, “எதுக்கு அண்ணா அடிச்சே…” என்று வினவ, அதற்குள் மறுபடியும் அவனின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தான்.

 

Advertisement