Advertisement

அத்தியாயம் 18

மீண்டும் வீட்டிற்கு வந்த அருளைக் கண்டு தேவகி பதற, அவனோ அவர் புலம்பலைக் கவனியாது, “பெரியப்பா, நான் பார்த்த மாப்பிள்ளையோட இவள் கல்யாணம் நடக்கலைனாலும் பரவாயில்லை. அந்த பிரகாஷோட வேண்டாம், இப்படி ஒரு தரம் கெட்டவன் வேண்டாம்.. பொண்ணுங்களை மதிக்கத் தெரியாதவன், தன்னை நம்பி இருக்கிற பொண்ணை காப்பாத்தத் தெரியாத திருட்டுப் பையன் எல்லாம் வாழவே தகுதியில்லாதவன்” என உறுதியோடு கத்திக்கொண்டிருந்தான். 

 

பெரியவர்கள் அனைவரும் மௌனமாக நிற்க, அதிர்ந்த ராஜி, தலையில் அடித்துக் கொண்டு, அழுதபடி முன்னே வந்தாள். 

 

“அவரை என்னடா பண்ண? நானும் தானே தப்புப் பண்ணேன்?” என அருளின் நெஞ்சில் அடித்து அழுதபடி கேட்க, “அவன் எப்படிப் போனா உனக்கு என்ன? இன்னுமா இப்படிப் பட்டவன் உனக்கு வேணும்?” என்றவன் அதட்ட, சீறினாள் ராஜி. என் வாழ்விற்குள் இவனின் முடிவுகளை ஏன் திணிக்க முயல்கிறான் என்ற ஆத்திரம் பொங்கி வர, 

“என் காதலுக்கு எதிரியே நீ தான், என்னைக் கேள்வி கேட்க நீ யாரு? நீ என்ன என் கூடப் பிறந்தவனா?” என அருளைக் கை நீட்டிக் கத்தினாள். 

 

அவள் வார்த்தைகள் கூரிய அம்பாய் நெஞ்சைத் தைக்க, அருளுக்கு அந்த நொடியே மனம் விட்டுப் போனது. இந்த ஒரு நொடிக்கு முன் வரை தன் தங்கை என அவளின் நலனுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்ய, தன்னை யாரோ என்றதில் மனம் உடைந்து போனான். 

 

அவளோ நில்லாது கண்ணீரோடு பிரகாஷைப் பார்க்கச் சென்றுவிட, ‘அப்படி என்ன முறையில்லாது தன்னை கைக் கொண்டவன் மீது கரிசனமோ? என்ன மண்ணாங்கட்டி காதலோ? அன்றைய நிலையில் அருள் அவ்வாறு தான் நினைத்தான். 

 

அனைவருமே ராஜி சிறிய பெண்.. அவளது காதலே இல்லை, பிடிவாதத்தைத் தளர்த்தினால் ஒரு நல்வாழ்வு அமைத்து கொடுத்திட வேண்டுமென்று தான் அந்த நொடி வரை எண்ணியிருந்தனர். 

 

ராஜி வார்த்தைகளில் அவனை யாரோ எனத் தூக்கி எறிந்துவிட, இனி அவள் விஷயம் எதிலும் தலையிடுவதில்லை என அருள் முடிவு செய்தான். ஆனாலும் பிரச்சனை அவனை இழுத்தது. 

 

அருள் காவல் நிலையத்திலிருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டான். விசாரணையின் போது பிரகாஷைத் தாக்கியது உண்மை என ஒப்புக்கொண்டான். ஆனாலும் அதற்கு மேல் காரணம் தெரிவிக்கவில்லை. வேறு வழக்கு விஷயமாக வந்து செல்வோர் கூட அருள் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு துக்கம் விசாரித்துச் செல்ல, அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது. 

 

தேவகி கண்ணீரோடு அழுது புலம்ப, பெரியவர்கள் அனைவரும் நொடிந்து போயினர். கணேஷும் மனோவும் ஜாமீன் வாங்குவது தொடர்பாக வழக்குரைஞரைப் பார்க்க அழைத்துக் கொண்டிருந்தனர். ஜெகனும் விக்கியும் ராஜியை பின் தொடர்ந்திருந்தனர். 

 

பிரகாஷின் அலுவலகத்திற்குச் சென்ற ராஜி, அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டு, அங்குச் சென்றாள். தலையிலும் கையிலும் கட்டுகளோடு தாங்கி தாங்கி நண்பனோடு நடந்து வந்தான். 

 

அவனை அந்நிலையில் காண ராஜியின் மனம் வெம்பியது. தங்கள் காதலை வீட்டில் மறுக்கக் கூடாது என்பதற்காக அவள் சொல்லிய பொய்யொன்று இப்படி தவறாகிப் போனதே என நொந்து கொண்டாள். 

அவனைக் கண்டதும் அவள் வெடுத்து அழ, ஆறுதல் உரைத்த பிரகாஷ், நிகழ்ந்ததையும் விசாரித்தான். 

 

அவளும் விம்பியபடியே அனைத்தையும் தெரிவித்து விட, கேட்ட பிரகாஷிற்கு அருளின் மீதிருக்கும் ஆத்திரம் மேலும் அதிகமானது. ஏற்கனவே தன்னைத் தன் அலுவலகத்தில் வைத்து அடித்துவிட்டான் என்றிருந்த கோபம், அத்தனை பிரச்சனைக்கும் ஆரம்பப்புள்ளியும் அவன் மாப்பிள்ளை பார்த்தது தான் என்பது அறிய, மேலும் சினம் கூடியது. 

 

ராஜி இனி என்ன செய்யலாம் எனக் கேட்க, “கல்யாணம் பண்ணிக்கலாம், நாளைக்கே..” என்றான் உறுதியாக. 

தனக்காக இவ்வளவு போராடி தன் முன் வந்து நிற்கும் அவளை உயிரினும் அதிகமாக நேசித்தான். எதற்காவும் விட்டுக் கொடுத்துவிடும் எண்ணம் அவனுக்கு இல்லை. அதை விடவும் தன்னை வசதியில்லாதவன் என அடித்துக் கீழே தள்ளுவதை அவனால் ஏற்க முடியவில்லை. அப்படியென்ன நான் குறைந்து போய் விட்டேன் என்ற கொதிப்பு. அவர்கள் மறுப்பதைச் செய்து காட்டிவிடும் வேகம், வீம்பு. 

 

விம்பியபடியே, “எப்படி பிரகாஷ் எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்களே? அதுவும் அருள் அண்ணனுக்கு தெரிஞ்சா, விடவே மாட்டான்” என்றாள். அவள் முகத்தில் ஒரு குழப்பமான பாவனை. 

 

“கவலையை விடு, என் பிரெண்ட்ஸ் வைச்சு நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு அரேஜ் பண்ணிட்டேன். அன்ட் அந்த அருளும் இப்போ ஸ்டேஷன்ல தான் இருப்பான், அவன் வெளியே வர்றதுக்குள்ள நம்ம கல்யாணம் முடிச்சிடும்” என்றான் திட்டத்தில் பாதியை நிறைவேற்றிய மமதையில். 

 

அதிர்ந்த ராஜி, “ஸ்டேஷன்லையா..? அப்போ போலீஸ் கம்பளேன்ட் கொடுத்திருக்கையா அருள் அண்ணா மேல?” என்றாள். 

 

சீறியவன், “பின்ன அவன் என்னை அடிப்பான், நான் கை கட்டி வாங்கிக்கணும்னு சொல்லுறீயா?” என்க, நெற்றியில் அடித்துக் கொண்ட ராஜி, “அதுக்குக் காரணம் நான் சொன்ன பொய் தான், நான் கன்சீவா இருக்கேன்னு சொல்லிட்டேன் வீட்டுல, அந்தக் கோபம் தான்” என்றவள் விலக்க முயன்றாள். 

 

“அப்படி ஒரு பொய் சொல்லியும் உங்க வீட்டுல ஒத்துக்கலையே? அவ்வளவு இளக்காரமா போயிட்டேனா நான்?” 

 

‘ஐயோ..! ஆண்டவா..!’ என நொந்து கொண்டாள் ராஜி. ஆனால் அவள் உணர்வுகள் எதையும் கவனிக்காத பிரகாஷ், “இது தான் நல்ல நேரம், அவன் வெளியே வர்றதுக்குள்ள நம்ம கல்யாணத்தை முடிச்சிடலாம், என்ன சொல்லுற?” என்றான் எதிர்பார்ப்போடு. 

 

ராஜிக்கு ஒரு மாதிரி நெஞ்சை அடைக்கும் உணர்வு. பிரகாஷிற்குத் தந்தை இல்லை அவன் வீட்டில் அவன் எடுப்பதே முடிவு. ஆனால் அவளுக்குப் மிகப் பெரியதொரு குடும்பமே இருக்கிறதே. அவர்கள் இல்லாமல் அவளுக்குச் சந்தோஷம் இல்லையே.

 

“என்ன ராஜி அமைதியா இருக்க? அப்போ உனக்கு விருப்பமில்லையா? சரி, வேற என்ன செய்யலாம், நீ சொல்லு?” என்றவன் கேட்க, ராஜியிடம் அதற்கும் பதிலில்லை. 

 

ராஜியின் தலை சம்மதமாக ஆட, சரியாக அவளை பின் தொடர்ந்து வந்திருந்த ஜெகனும் விக்கியும் அதைக் கேட்டு அதிர்ந்து நின்றனர். ‘தாங்கள் என்ன அவளுக்குக் கெடுதலா செய்து விடப் போகிறோம்? தங்களை விடவா அவளுக்கு அவன் முக்கியமாகப் போய் விட்டான்?’ என்ற ஆத்திரம் இருவருக்கும், அதிலும் விக்கிக்கு அப்படியொரு கோபம். 

 

விக்கி, பிரகாஷை நோக்கிக் கையோங்கிச் செல்ல, ராஜி குறுக்கே வந்து மறித்து நிற்க, ஜெகனுக்குக் கூட அப்போது வரை தடுக்கத் தோன்றவில்லை. ஆனால் அவன் அலைபேசி அழைத்து அவ்விடத்தைக் கலைத்தது. 

 

ஜெகன் அட்டென் செய்து பேச, கார்முகிலன் என்ன நிகழ்கிறது என விசாரிக்க, ராஜியை முன் வைத்துக் கொண்டே அவளைக் குற்றம் சொல்வது போல் அவர்கள் திட்டமெல்லாம் உரைத்தான். அந்த பக்கம் பாரி ஏதோ சொல்ல, கார்முகிலன், ராஜியை அழைத்து வரச் சொல்ல, அவர்கள் முடிவில் இவனுக்கு மனமே இல்லாது ஒருவாறு பேசி முடித்தான். 

அதன் பின்பே துள்ளி நிற்கும் விக்கியைத் தடுத்துவிட்டு, “நாளைக்கு உங்க வீட்டுப் பெரியவங்களை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வருவீங்களாம்.. அப்பா கூப்பிட்டாங்க, ராஜி இப்போ நீ எங்களோட வா..” என அறிவித்து விட்டு அவளை அழைத்தான். 

 

விக்கியும் ஜெகனும் முகத்தைக் கடுகடுவென வைத்திருப்பதிலே அவர்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிந்தது. அவன் வீட்டுப் பெரியவர்களை அழைத்திலே தந்தையின் மனமும் ராஜிக்குப் புரிந்தது. பிரகாஷிற்கு விருப்பமில்லாத போதும் அவன் மறுக்காது இருக்க, ராஜி ஒரு தலையசைப்போடு அண்ணன்களுடன் கிளம்பினாள்.  

 

பிரகாஷிற்கு அவன் தேவையை யாரிடமும் கேட்டுப் பழக்கமில்லை, அவனே செய்து கொள்வான். அது போலே அவன் திருமணத்தையும் அவனே செய்து கொள்ள நினைத்திருந்தான். ஆனால் ராஜி வீட்டில் அழைத்ததால், அந்த மரியாதைக்குப் பார்வதியை அழைத்துச் சென்றான். 

 

மகன் இவ்வாறெல்லாம் செய்திருப்பான் எனக் கனவிலும் எதிர்பார்த்திடாத பார்வதிக்கு வருத்தம் தான். ஆனாலும் அவன் ஆசையை அவர் மறுக்கவில்லை, அதை விடவும் ராஜியை முதல் பார்வையிலே பிடித்து விட்டது. 

ராஜியின் வீட்டில் தாங்களே இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உரைத்தனர். அதற்கு முன் அருள் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டனர். பிரகாஷிற்கு முகமே சிவந்து விட்டது, அவனுக்கு விருப்பமின்றி ராஜிக்காக வந்து அமர்ந்திருக்க, இவர்கள் என்னடா என்றால் தன்னை அடித்து அவமானப் படுத்தியவனைக் கொண்டாடுகிறார்களே என்றிருந்தது. 

 

“என்ன, உங்க பொண்ணை வைச்சி பேரம் பேசுறீங்களா?” கோபத்தில் சட்டெனக் கேட்டுவிட, கார்முகிலனுக்கும் பாரிக்கும் சுருக்கென்று குத்தியது போல் வலித்தது. ஜெகனும் விக்கியும் ‘உன்னவனின் இலட்சணத்தைப் பார்’ என்பது போல் முறைத்து நிற்க, ராஜி பரிதாபமாக நின்றாள். 

 

பார்வதி மகனைக் கண்டிக்க, “அம்மா, நீங்க புரியாமல் பேசுறீங்கம்மா. அந்த அருள் வெளியே வந்தால் எங்க கல்யாணத்தை நடக்கவே விட மாட்டான். அதுக்காக தான் இவங்க முதல்ல கேஸ் வாபஸ் வாங்கச் சொல்லுறாங்க, அப்பறம் அவனை வைச்சி இவங்க காரியம் சாதிக்கப் பார்க்குறாங்க..” எனத் தன் பக்க கற்பனையிலே அவன் வாதிட்டுக் கொண்டிருந்தான். 

 

ஆனால் அதே நேரம் மனோவோடு உள்ளே வந்தான் அருள். சற்று முன் தான் ஜாமீன் பெற்றிருந்தான். 

பிரகாஷ் அதிர்வோடு பார்க்க, “சித்தப்பா, என்னை வைச்சி நீங்கப் பேச வேண்டிய அவசியமில்லை. உங்க பொண்ணுங்க என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க. எவ்வளவோ பெரிய பிரச்சனை எல்லாம் பார்த்துட்ட என்னால இந்த சின்ன கேஸை சமாளிக்க முடியாதா என்ன?” என்றான் நிமிர்வாக. 

 

பிரகாஷின் முகமே கடுகடுத்தது, ராஜியின் முகம் பார்த்த அருள், “இனி நான் இந்த விஷயத்துல தலையிட மாட்டேன்” என்றவன், அதற்கு மேல் நொடி கூட நில்லாது சென்றுவிட்டான். 

அருளுக்கு இன்னமும் இதில் விருப்பமில்லை, இத்தனைக்குப் பிறகும் தன்னை அவமானப்படுத்தியவனோடு சம்பந்தம் பேசுகிறார்களே என்றிருந்தது. ஒரு நாள் இரவு காவல் நிலைய வாசம் அவனுக்குப் பெரும் அவமானமாகத் தோன்ற, மிகவும் மனதில் நைந்திருந்தான். அதிலும் ராஜி சொன்ன ஒரு வார்த்தை.. அதனாலே மொத்தமாக ஒதுங்கிவிட்டான். 

 

யாருமின்றி பதிவு திருமணம் செய்து கொண்டால், பெண் தங்களை மீறிச் சென்றுவிட்டாள்  என உறவுகளுக்குள் அவமானம் ஆகையாலே ராஜி குடும்பத்தார் திருமணத்திற்குப் பேசினார். மத்தபடி அவள் பிடிவாதமே இன்றி யாருக்குமே அதில் விருப்பமில்லை. 

 

பிரகாஷ் முகம் சுருக்கிய போதும் பார்வதி இறங்கி வந்து பேச, ராஜியின் பெற்றோர்களும் சம்பந்தம் பேச, பத்தே நாளில் நேரடியாகத் திருமணம் என முடிவு செய்தனர். திருமண வேலைகள் அத்தனையும் இழுத்துப் போட்டுச் செய்து, பரபரப்போடு திருமணத்தைச் செய்து வைத்தது ராஜியின் வீட்டினர் தான். பிடிக்காத திருமணமானாலும் அவள் கஷ்டப்படக்கூடாது என நிறைவாகச் செய்தனர். 

 

அருள் ஒதுங்கிக் கொண்டதால் அவன் பெற்றோரும் மனோவுமே எதிலும் தலையிடாது ஒதுங்கிக் கொண்டனர். திருமணத்தன்று மட்டும் அவர்கள் சென்று வர, அருள் அதற்கும் வரவில்லை. 

 

தான் அறிந்தவரை அனைத்தையும் தேவகி உரைக்க, கேட்டிருந்த இசைக்கு நெஞ்சை அடைக்கும் உணர்வு தான். இருவரின் மீதும் தவறு இருக்க, இதில் யார் பக்கமும் நியாயம் சொல்ல முடியவில்லை. ராஜி சொல்லிய பொய்க்கு எந்த அண்ணாக இருந்தாலும் அவ்வாறு தான் நடந்திருப்பான். ஆனால் பிரகாஷ் ராஜிக்காகவாது, அவர்கள் உறவு வேண்டியாவது பொறுமையாக போயிருக்கலாமே என்றே மனம் குமைந்தாள். 

 

“இவ்வளவு நடந்திருக்கா..?” பெரும் வியப்போடு கேட்ட இசைக்கு, இத்தனை நாள் இதை அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்றிருந்தது. 

 

“ஆமாம்மா அருளுக்கு முன்கோபம் ஜாஸ்தி, சொன்ன சொல் மறக்கவும் மாட்டான், மன்னிக்கவும் மாட்டான்.. அது தான் திரும்பத் திரும்ப இந்தப் பிரச்சனையை இழுக்கக் காரணம்..” என்ற தேவகி மகனை நினைத்து வேதனையோடு குறைபட்டுக் கொண்டார். 

 

பயத்தில் ராஜி செய்த பக்குவமில்லாத செயல்களும், அவள் உரைத்த பொய்யும் தான் அருளையும் பிரகாஷையும் இப்படி எதிரியாக்கி வைத்து விட்டது என நன்கு புரிந்தது. 

 

முகம் தெளிந்த இசை, “அவரை மட்டுமே குறை சொல்லிட முடியாது அத்தை, உண்மையைச் சொல்லணும்னா பிரகாஷூம் அதே குணம் தான். அதான் இரண்டு பேருமே விட்டுக்கொடுக்காமல் பிரச்சனையை விடாம இருக்காங்க” என்றாள் ஆறுதலாக. 

 

பெருமூச்சோடு, “ஆனாலும் ராஜியை இன்னைக்கு கொஞ்சம் அதிகமாத் தான் பேசிட்டான்..” என்ற தேவகிக்கு மனம் ஆறவில்லை. 

“அப்படி பேசியிருக்கார்னா அவர் மனசுல எவ்வளவு வலி இருக்கும்னு நாமளும் புரிஞ்சிக்கணும் அத்தை. அன்னைக்கு அண்ணனே இல்லைன்னு எடுத்து எறிச்சி பேசிட்டு, இப்போ உறவு வேணும்னு வரும் போது அவரால எப்படி ஏத்துக்க முடியும்? அவர் பக்கமும் நியாயம் இருக்குல்ல..?” என்றாள் இசை. 

முதலில் பிடிக்கவில்லை எனினும், திருமணத்திற்குப் பின் அனைவருமே பிரகாஷை மாப்பிள்ளை என்றும் அவன் குடும்பத்தைச் சம்பந்தி வீட்டினர் என்றும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அருளால் தான் ஏற்க முடியவில்லை. அதை விடவும் ஒட்ட முடியவில்லை, ராஜியின் வார்த்தையில் ஒரேடியாக விலகி விட்டான். 

 

இசை விடாது அருளுக்காகவே பேச, மனம் குளிர்ந்து போன தேவகி, “நீ தான் அவனைக் கேள்வி கேட்க சரியான ஆள், இனி அருள் மொத்தமும் உன் பொறுப்பு. நீயே பார்த்துக்கோம்மா..” என சமாளிக்க, “ஆஹா..! நழுவாதீங்க அத்தை, நீங்கத் தானே என்னை அவருக்குக் கட்டி வைச்சீங்க..?” எனச் சிரித்தாள் இசை. 

 

“இதுல எனக்கு இன்னும் சந்தேகம் தான் இசை, அருள் யார் சொல்லியும் எதுவும் கேட்க மாட்டான். அவன் முடிவுகளை அவன் தான் எடுப்பான். அது தப்போ சரியோ அதோட பலனை நானே அனுபவிச்சிக்கிறேன்னு சொல்லுவான், ராஜியை விடச் சரியான பிடிவாதக்காரன். 

 

அப்படிப்பட்டவன், நான் சொன்னேன்னு எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணி இருக்கான்னா எனக்கு ஆச்சரியம் தான். நான் நடிச்சா ஈஸியா கண்டுபிடிச்சிடுவான். நான் கூட ஆரம்பத்துல உங்க அண்ணனைப் பழி வாங்க உன்னோட கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டானோன்னு நினைச்சேன். அப்புறம் பிரச்சனை செய்வானோன்னு நினைச்சேன் நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை, அந்த அளவுக்கு உன்னை அவனுக்கு பிடிச்சிருக்கு இசை..” என்றவர் அவள் முகம் தொட்டு அழகு கொஞ்சினார். 

 

முகம் மலர்ந்த போதும் இசைக்கு நெஞ்சுக்குள் சுருக்கென்று வலி குத்தியது. அவருக்குத் தெரியாது தான் ஆனால் அவளுக்கு நினைவில் இருக்கிறதே, இவர்களுக்குள் வந்த வாக்குவாதங்களும் அவள் அண்ணனுக்குச் சாதகமாகப் பேசியதும். பிரகாஷால் அருள் காவல் நிலையம் வரை சென்றிருக்கிறான். எவ்வளவு வேதனை கொண்டிருப்பான்? 

அருளின் மனது தன்னால் கூட காயம் கொண்டிருக்குமோ என்ற ஐயம் தோன்றியது. 

Advertisement