Advertisement

அத்தியாயம் 17

பரபரப்பான காலை நேரம். அந்த பொறியியல் கல்லூரியின் முன் வந்து நின்றது அருளின் இருசக்கரவாகனம். அதன் பின்னிருக்கையிலிருந்து இறங்கிய ராஜி, “அண்ணா இன்னைக்கு ஈவனிங் பிக்கப் பண்ண நீ வர வேண்டாம், நானே ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு வந்திடுறேன்” என்றாள் கையசைத்தபடி. 

 

சட்டைப் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தபடியே “ஏன்..?” என்றவன் வினவ, “இன்னைக்குத் தானே காலேஜ் லாஸ்ட் டே, சோ பிரண்ட்ஸ்ஸோட வெளியே போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வருவேன்..” என்றவளின் குரல், மறுத்து விடுவானோ என்ற பதைபதைப்பில் உள்ளிறங்கிப்போனது. 

 

தலையாட்டியவன், “சரி, லாஸ்டா எங்கயிருப்பேன்னு சொல்லு, வந்து கூட்டிட்டுப் போறேன்” என்க, மறுப்பாய் தலையசைத்தவள், “நானே வந்திடுவேன்..” என்றாள். 

 

அதற்கும் தலையாட்டியவன், “கவனமா வீட்டுக்கு வரணும். வேற எதுவும்னா எனக்குப் போன் பண்ணு..” என்றபடி வழக்கத்தை விடவும் அன்றைய அவள் செலவிற்கு அதிகமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு வண்டியை இயக்கினான். 

 

வண்டியைத் திருப்பியவன், “வீட்டுக்கு வா, உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்க, “அவள் சந்தோஷத் துள்ளோடு, “என்ன அண்ணா?” என ஆர்வமாய்க் கேட்டாள். மறுத்தவன், வீட்டில் வந்து சொல்லுவதாக உரைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான். 

 

விக்கியும், மனோவும் வேறு கல்லூரியில் பயின்றுகொண்டிருக்க, ராஜு மட்டும் தான் இங்கு. கல்லூரிப் பேருந்தில் தான் அவள் கல்லூரி வந்து செல்வது, என்றேனும் தவறவிட்டால் மட்டுமே அருள் அழைத்து வருவான். ஆனாலும் கிளம்பும் முன் அவள் கைச்செலவிற்குப் பணம் தரும் பழக்கம், தேவை எனும் நாட்களில் வேண்டுமென்றே கல்லூரிப் பேருந்தைத் தவறவிட்டுவிட்டு அண்ணனோடு வருவாள். 

 

அத்தனை அண்ணன்களுக்கும் அவள் ஒரு தங்கை என்பதால் அனைவருக்கும் அவள் செல்லம், அதிலும் அருளுக்குச் சற்று அதிகப்படியாக. அருள் தங்கை, தம்பிகள் அனைவரிடமும் கட்டும் கண்டிப்பு அதிகம் தான், ஆனாலும் அது அவர்கள் தவறு செய்யும் பொழுது மட்டுமே. ராஜி என்றாள் அருளின் பொறுப்பு என அனைவரும் எண்ணும்படி சிறு வயதிலிருந்து அவள் தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்து அவளை வளர்ந்தது அருள்வேலவன் தான். 

 

அன்று கல்லூரியின் கடைசி நாள், கடைசி தேர்வு. அருளிடம் தெரிவித்தது போலே மாலை தோழிகளோடு உணவகம் சென்று தங்கள் பிரிவுத் துயரை கொண்டாடிவிட்டுத் தான் கிளம்பினர். தோழிகள் அனைவரும் சென்றுவிட, பூங்காவில் பிரகாஷிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். 

தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவளின் அண்ணனின் தோழனாகப் பிரகாஷை முதல்முறை சந்தித்தாள். கடந்த ஓராண்டாக இருவருக்குமிடையில் பிரிக்க இயலாத காதல்! 

 

வாரத்தில் ஒருமுறையாவது பார்த்துக்கொள்ளும் பழக்கம் ஆகையால் அன்றும் காத்திருந்தாள். 

எப்போதும் வந்துவிடும் நேரத்தை விட, வேலை கரணமாக பிரகாஷிற்கு அன்று தாமதமானது. வேறு நாள் எனில் ராஜி கிளம்பிவிடுவாள் தான். ஆனால் இன்று தான் கடைசி நாள், இனி பார்க்கும் வாய்ப்பு எப்போது அமையுமோ எனத் தெரியாது ஆகையால் காத்திருந்தாள். 

 

ராஜியின் வீட்டிற்கு வந்தான் அருள். ஆனால் ராஜி இன்னும் வந்திருக்கவில்லை. அவளைத் தவிர வீட்டில் அனைவருமிருக்க, வந்த விஷயத்தை உரைத்தான். 

ராஜிக்கு வரன் பார்த்திருப்பதாகவும், மாப்பிள்ளை கார்மென்ட்ஸ் வைத்திருப்பதாகவும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், நல்ல பையன், தனக்கு நன்கு அறிமுகம் என்றும் உரைத்தவன், தான் விசாரித்து வந்த தகவல்களையும் கொடுத்தான். 

 

அருள் ஒரு விஷயத்தைக் கையிலில் எடுத்தால் அதன் நெறி தவறாது முடிப்பவன், வெளி வட்டாரம் அறிந்தவன், அவனின் தேர்வு சரியாக இருக்கும் என்பதாலே குடும்பத்தில் அனைவரும் ஏற்றனர். அது போக, மறுப்பதற்கும் எந்தவித காரணங்களுமில்லை. மாப்பிள்ளை வீட்டார் விவரங்கள் கேட்ட பின், அவர்களும் தூரத்து உறவில் விசாரித்து நல்ல இடம் என்பதால் ஒரு மனதாகச் சம்மதம் தெரிவித்தனர். 

அருளுக்கு மனம் நிறைந்த உணர்வு, தங்கைக்கு நல்வாழ்வு அமைத்து விட்ட நிம்மதி. வார இறுதியில் அவர்கள் குடும்பத்தைப் பெண்பார்க்க அழைத்திருந்தான். 

 

ஜெகனுக்குப் பெண் பார்க்கும் முன் ராஜிக்கு முடித்துவிடும் எண்ணத்தில் அருளை வரன் பார்க்கச் சொல்லிருந்தது கார்முகிலன் தான். அவர்கள் எதிர்பார்ப்பிற்குத் தகுந்த இடம் பார்த்து வந்தவன், தங்களிடம் தெரிவிக்கும் முன் ராஜியிடம் தெரிவித்திருப்பான் என்றே அனைவரும் நினைத்தனர். அவள் விருப்பமில்லாதை திணிக்கும் எண்ணம் யாருக்குமில்லை. 

 

ஆனால் ராஜி இல்லாததால் வீட்டினர் அவளுக்குத் தெரிவித்துவிடுவர் என நினைத்திருந்தான் அருள்வேலவன். 

 

வார இறுதிநாள் ஞாயிறு அன்று அனைவரும் வீட்டிலிருக்க, மாலை நேரம் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். ராஜிக்கு முதலில் புரியவில்லை, ஏதோ உறவினர்கள் தான் போலும் என்றே நினைத்திருந்தவளுக்குப் பின்னர் தான் அவர்கள் பேச்சு வார்த்தைப் புரிய, அதிர்ந்து அமர்ந்து விட்டாள். 

 

ராஜியைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டினர் அனைவருக்கும் பிடித்துவிட, இங்கு இவர்கள் அனைவருக்கும் திருப்தியே. அருள், தானே பொறுப்பு என்பது போன்ற நம்பிக்கையான வார்த்தைகளை உரைத்து அனுப்பினான். 

 

தெரு முக்கு வரை தான் அவர்கள் சென்றிருப்பார்கள், “ஏன் எங்கிட்ட சொல்லாம இப்படியொரு ஏற்பாடு செய்தீங்க?” என ராஜி நடு வீட்டில் நின்று கொண்டு கேட்டாள். 

 

சரியாக அவர்களை வழியனுப்பிவிட்டு அருள் உள்ளே வர, ராஜியின் கேள்வியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்கள், அடுத்த நொடி ஒரு சேர அருளைப் பார்த்தனர். 

 

அவனும் அதிர்வோடு, “அப்போ உங்கிட்ட யாருமே சொல்லலையா?” என்று கேட்க, அவள் மறுப்பாய்த் தலையசைக்க, “சரி, கணேஷ் அண்ணா எல்லா தகவலும் சொல்லுவாங்க, கேட்டுக்கோ. உனக்கு ஓ.கேவா சொல்லு, நல்ல பையன், உனக்குச் சரியான பொருத்தம். அதனாலே சம்மதம் சொல்லிட்டேன்” என்றான் பொறுமையாக. 

 

தன்னை கேட்காமல் முடிவே செய்துவிட்டானே என்ற கோபம், “என் கல்யாணம் உன்னோட பிஸ்னஸ் டீல் இல்லை, லாபம், நஷ்டம் பார்த்து உன் விருப்பத்துக்கு நீ நடத்துறதுக்கு?” என்றவள் கத்த, அருள் அதிர்ந்து நிற்க, “ராஜி உனக்குப் பிடிக்கலைன்னா அதுக்கு காரணம் சொல்லு, வேற மாப்பிள்ளை கூட பார்க்கலாம். அதை விட்டு அவனை எதுக்குக் கத்துற?” என அதட்டினான் கணேஷ். 

 

“ராஜி, இது ரொம்ப நல்ல மாப்பிள்ளை. நான் விசாரிச்சிட்டேன், இதை விட பெஸ்டா உனக்கு வேற கிடைக்காது. நான் வாக்குக் கொடுத்துட்டேன்” என அருள் கண்டிப்பாகச் சொல்ல, உக்கிரமானவளோ, “நீ கொடுத்த வாக்குக்காக என் வாழ்க்கையை எல்லாம் என்னால பணையம் வைக்க முடியாது” என மேலும் வெடித்தாள். 

 

கணேஷின் வார்த்தைகளையே மீண்டும் கார்முகிலன் சொல்லி அதட்ட, “இல்லை நீங்க எத்தனை மாப்பிள்ளை பார்த்தாலும் எனக்குப் பிடிக்காது, நான் ஏற்கனவே வேற ஒருவரை விரும்புறேன்” பட்டென மனதை அனைவரிடமும் சொல்லி விட்டாள். 

 

கார்முகிலனுக்கு சுருக்கென்று நெஞ்சில் குத்துவது போன்ற வலி, அதை விடவும் பல மடங்கு வலி அருளுக்குத் தான். தன் வளர்ப்பா இவ்வாறு தவறிப்போனது என்ற வேதனை. பத்மா பொறுக்கமுடியாமல் கையோங்கி விட, தேவகி தான் அடக்கினார். 

 

“உன் வாழ்க்கையா இருந்தாலும் உன் விருப்பத்துக்கு முடிவெடுக்க முடியாது ராஜி. இந்த வீட்டுல ஒத்துக்கவே மாட்டோம்னு தெரிஞ்சும் இப்படிச் செய்ய உனக்கு எப்படி தைரியம் வந்தது?” என கார்முகிலன் சத்தமிட, “உனக்கு இன்னும் வெளியுலகம் தெரியாது ராஜிம்மா, மனுஷங்களைப் புரிஞ்சிக்கத் தெரியாதுடா” என கணேஷ் அறிவுரை உரைத்தான். 

 

“இந்த வயசுல வர்றது எல்லாம் காதலே இல்லை ராஜி. அது வெறும் ஈர்ப்பு தான், இந்த ஈர்ப்பு ரொம்ப நாளைக்கு நிலைக்காது, இதை வாழ்க்கை முழுக்க பிடிச்சி வைச்சிக்கணும்னு நீ போராடினா, வாழ்க்கை கசந்து போயிடும், விட்டுட்டு ராஜி” எனச் சீதா, மற்ற அனைவருமே அவர்கள் பங்கிற்கு என்னென்ன சொல்ல முடியுமோ சொல்லி விட்டனர். 

அத்தனை பேர் சொல்லியும் அவள் சிறிதும் அசரவில்லை. கார்முகிலன் இந்த வீட்டில் இருக்கும் வரை காதல் திருமணத்தை ஏற்பதில்லை என உறுதியாக உரைத்தார். தேம்பித் தேம்பி அழுதபடி நின்ற ராஜி அப்போதும் இறங்கி வர மாட்டேனெனப் பிடிவாதம் பிடித்தாள். 

 

இறுதியாக அருள் தான், “யாரவன்?” என்று வினவ, தேம்பியபடியே பிரகாஷ் குறித்த அனைத்தையும் உரைத்தாள். அது வரையிலும் அவன் யார் என்று கூட கேட்காமல் காதல் என்ற வார்த்தைக்கே மொத்த குடும்பமும் மறுத்து நின்றது. 

 

அருள் அதற்கு மேல் வினாடி கூட நிற்கவில்லை சென்றுவிட்டான். அத்தனை பேரும் மறுக்க, அவள் பிடிவாதமாக நிற்க, வீடே நிலைகுலைந்து போனது. இரவெல்லாம் அழுது கரைந்தாள். தன் முடிவில் தீவிரமாக இருந்தவள் அனைவரையும் எப்படி சம்மதிக்க வைப்பது என்ற யோசனையிலே தேம்பினாள். 

 

ஒரே இரவில் பிரகாஷ் பற்றி முழுமையாக விசாரித்திருந்த அருள், மறுநாள் காலை மீண்டும் பெரியப்பாவின் வீட்டிற்கு வந்தான். 

பிரகாஷ் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தந்தையில்லை, குடும்பப் பொறுப்புகள் மொத்தமும் அவனே, அப்போது தான் கட்டியிருந்த வீட்டிற்குக் கூட லோன் வேறு கட்டிக் கொண்டிருந்தான். பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படியான வசதிகளுமில்லை, மாதச் சம்பளமும் குறைவு தான். 

 

ராஜி வளர்ந்த விதத்திற்குப் பிரகாஷ் வெகு வெகு குறைவு. அவளால் அவன் வீட்டில் நிறைவாக வாழ முடியாது, அவள் கஷ்டப்படுவாள் என அறிந்தும், அனுமதிக்க அருளால் இயலவில்லை. தான் பார்த்த மாப்பிள்ளையும் அவர்கள் குடும்பமுமே ராஜிக்கு பொருந்தும், அவள் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் நம்பினான். 

 

ராஜியின் முன் வந்து நின்றவன், “அந்தப் பிரகாஷ் உனக்கு வேண்டாம் ராஜி, எந்த விதத்துலையும் உனக்குப் பொருத்தமில்லாதவன். நான் சொல்லுற மாப்பிள்ளையைக் கட்டிக்கோ, நீ நல்லா இருப்ப, உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றான் அக்கறையாக. 

 

பொருளாதாரத்தை வைத்து எல்லாம் பிரகாஷை இவர்கள் கீழே தள்ளுவதை அவளால் ஏற்கமுடிவில்லை. இவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்த விஷயம், அவளுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. காதல் கண்ணை மட்டும் மறைக்கவில்லை அவளை மதியையே மழுங்கச் செய்துவிட்டது. பிரகாஷின் மீதான கண்மூடித்தனமான காதல், அவனை நிராகரிக்க அவளை விடவில்லை. அவர்கள் மறுக்க மறுக்க அவளின் பிடிவாதம் மேலும் அதிகமானது. 

 

“அவன் விசாரிச்சிட்டு வந்து தானே சொல்லுறான், நீ இளவரசியா வளர்ந்தவ ராஜிம்மா, உன்னால கஷ்டப்பட எல்லாம் முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கையும் வேண்டாம் சொன்னாக் கேளுடா” என பத்மா கூடக் கெஞ்சிப் பார்த்தார். 

 

‘இரு வீட்டிற்கும் ஒரே பெண்பிள்ளை என மிகவும் செல்லமாக வளர்த்தது தவறோ?’ அப்போது வருந்தினர் கார்முகிலனும், பாரியும். அத்தனைப் பேருக்கும் செல்லமானவள், இன்று அத்தனை பேர் கெஞ்சியும் துளியும் தளராது போக, அத்தனை பேருக்கும் கோபம் தான். 

 

“அப்பா! நீங்க அருள் பார்த்த மாப்பிள்ளைக்குச் சரின்னு சொல்லுங்கப்பா, இனி இவக்கிட்ட கெஞ்சி நின்னு பலனில்லை. சீக்கிரம் கல்யாணத்தை முடிப்போம்” என்று கணேஷே முடிவாக உரைத்தான்.

 

அவள் முறைக்க, “என்ன முறைப்பு வேண்டியிருக்கு? அருள் தான் அவ்வளவு சொல்லுறான்ல அவன் சொல்லுகிறதைக் கேட்க மாட்டியோ?” என ஜெகன் கையோங்கிக் கொண்டு வர, அருள் இடையில் புகுந்து அவனை அடக்கியபடி, “வேண்டாம் ராஜி, சொன்னா கேளு” என்றான் இறுதி மூச்சாக. 

 

“யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன், எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் வாழ்ந்தால் அது பிரகஷோட மட்டும் தான்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். எனக்குள்ளத் தான் அவர் உயிர் இருக்கு, அது போதும் எனக்கு” என்றாள் சிறிதும் தடுமாறாது உறுதியாக, இறுகிய உடலோடு. 

 

அனைவருக்குமே அவள் ஏதோ காதல் பித்தில் உளறுவதாகத் தோன்ற, அருளுக்கு மட்டுமே அதில் சந்தேகம் வர, “என்ன சொன்ன நீ? என்ன காரியம் பண்ணியிருக்க ராஜி நீ? சொல்லு, அந்தப் பிரகாஷை உயிரோட விட மாட்டேன்” என அதிர்வோடு குரல் உயரக் கத்தினான். 

 

அப்போதே அனைவருக்கும் அர்த்தம் புரிய, பத்மா வளர்ந்த பெண்ணென்றும் பாராது அவளை வெளுத்துக் கட்ட, தேவகி அழுது ஒப்பாரி வைக்க, ஆண்கள் அனைவரும் நெஞ்சிலும் தலையிலும் கை வைத்து விட்டனர். 

 

இந்த கலவரத்தில் யாரும் அருளைக் கவனிக்கவில்லை. பைக்கை உதைத்துக் கொண்டு சீற்றமோடு பிரகாஷின் அலுவலகம் வந்திருந்தான். அருளின் மனம் தீக்காடாய் எரிந்து கொண்டிருந்தது. 

ராஜியின் வாழ்வில் இப்படியான நிகழ்வுகளைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஒழுக்கமும், நெறி தவறாத பண்பையும் உயிரை விடப் பெரிதாக நினைக்கும் அருளுக்கு ராஜி காதலியாகவே ஆனா போதும் பிரகாஷின் இச்செயல் பெரும் குற்றம்! 

 

அலுவலகத்தின் தேநீர் இடைவேளை நேரம், அலுவலகத்திற்கு வெளியிலிருந்தான் பிரகாஷ். சிறு கடையில் அலுவலக நண்பர்களோடு தேநீர் அருந்திக் கொண்டிருக்க, வேகமோடு அங்கு வந்த அருள், வண்டியை நிறுத்துவிட்டு அவன் சட்டையைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தான். ஏனென்றே தெரியாத திடீர்த் தாக்குதலில் தடுமாறி நின்ற பிரகாஷிற்கு அருள், ராஜியின் சகோதரன் என்று மட்டும் தெரியும். 

 

“என்ன செய்ற? சட்டையை விடுடா” என்றவன் கைகளிலிருந்து உருவ முயல, “உங்க வீட்டுப் பொண்ணுக்கு ஒரு அநியாயம்னா நீ என்ன பொறமையாவா பேசிட்டு இருப்ப? என்ன தைரியம்டா உனக்கு, ஒன்னுக்கு ஐந்து அண்ணனுங்க இருக்கோம்னு தெரிஞ்சும் அவள் மேல கை வைச்சிருக்க?” எனக் கேட்டபடி அவன் முகத்தில் குத்திக் கொண்டிருந்தான். 

பொது இடம் என்பதால் அதற்கு மேலும் தங்கையை அவமானப்படுத்தும் வார்த்தைகளை விடாது கவனமாக இருந்த அருளுக்குக் கோபத்தைத் தான் கட்டுப்படுத்த இயலவில்லை. 

அருள் முழுவதுமாகத் தன்னிலை தொலைத்த அரக்க நிலையில் இருந்தான். அவன் மனம் எரிமலையாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. பிரகாஷிற்கோ பெரும் அவமானமாக இருந்தது, அதுவும் அவன் நண்பர்கள் முன், வீதியில், அவன் தினமும் பழகும் இடத்தில் வைத்தே அவனை ஒருவன் அடிப்பதை அவனால் தாங்க முடியவில்லை. 

 

பிரகாஷூம் பலமோடு அருளைத் தாக்கியபடி, “என்னைய அடிச்சதுக்கு உன்னை சும்மா விட மாட்டேன்டா” என சீற, “தப்புப் பண்ணின உனக்கே இவ்வளவு இருந்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?” எனக் கத்திய அருள், ஆத்திரம் மொத்தத்தையும் அவனிடம் கொட்டியிருந்தான். 

 

ராஜி வீட்டில் சொல்லியிருப்பதை அறியாத பிரகாஷ், தன்னை அவளிடமிருந்து பிரிக்க நினைக்கின்றனர். போலியான குற்றம் சொல்லி, அவன் பலத்தைக் காட்டி மிரட்டுகிறான் என்றே நினைத்தான். 

 

பிரகாஷிற்கு முகம் முழுவதும் இரத்தம், அதிகப்படியான காயம்.. அப்போதும் மனம் ஆறாது அடித்துக் கொண்டிருந்த அருளைச் சிலர் விலக்கி விட்டனர். 

 

சட்டையை உதறிக்கொண்டு விலகிய அருள், “இனி என் தங்கச்சிப் பக்கம் உன் நிழல் வந்தால் கூட உசுரோட விட மாட்டேன். அவள் வாழா விட்டாலும் பரவாயில்லை, உன்னை மாதிரி ஒரு முறைகெட்டவனோடு வாழ ஒரு போதும் விட மாட்டேன்” என விரல் நீட்டி எச்சரித்தான். 

 

நிற்கவே முடியாது தள்ளாடி எழுந்த பிரகாஷ், இரத்தக் காயங்களோடு முதலில் நேராகச் சென்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, அதன் பின்னே மருத்துவமனைக்குச் சென்றான். 

Advertisement