Advertisement

அத்தியாயம் 16

 

அன்று விடுமுறை நாள். மாலை நேரம் சீதா அவள் பிறந்தகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் அன்னைக்கு உடல் நலம் சரியில்லை எனச் சற்று முன் தான் அழைப்பு வந்திருந்தது.

 

ஒரு வாரம் உடனிருந்து கவனித்துக் கொள்ள நினைத்தவள், குழந்தைக்கும் அவளுக்குமான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

 

ராஜியோடு மருத்துவமனைக்குச் சென்று வந்திருந்த இசை அங்கிருக்க, ஒரு கிண்ணத்தில் சிறிது உணவிட்டு அவளிடம் கொடுத்த சீதா அதை கிருஷ்மிக்கு ஊட்டிவிட்டுக் கிளம்பிவிடும் படியும் வேண்டினாள்.

 

ஒரு நொடி தயங்கிய இசை, கிருஷ்மியோடு பேச்சுக் கொடுத்தபடி ஊட்டிவிட முயல, மறுப்பேதுமில்லாது உண்டவளைக் காண, மகிழ்ச்சி தான்.

 

ராஜி தளர்வோடு அமர்ந்திருக்க, “ஜெகன் வர்றேன்னு சொன்னானே கிளம்பிட்டானாமா?” எனக் கேட்டபடி வந்தார் கார்முகிலன்.

 

தெரியலைப்பா, கணேஷ் அண்ணாட்ட கேட்டா தான் தெரியும். இன்னைக்கு நைட் கிளம்புவானா இருக்கும்எனப் பதிலுரைத்தாள்.

 

இசை ஊட்டிவிட, அவள் கைகளில் இருக்கும் வெண்திட்டை வருடியபடி இருந்த குழந்தையை கவனித்தவள், “கிருஷ்மி அது அழுக்கில்ல, போகாது விடு..என்றாள் உள்ளிறங்கிய குரலில்.

 

வேகவேகமாக தலையாட்டியபடி, “தெரியும் சித்தி.. மச்சம் போகாதுன்னு தெரியும். இது தான் உங்க லக்கி ஜாம்மாம்.. எனக்குத் தெரியுமே..என்றாள் ராகமாக.

 

அப்படியா? யார் சொன்னது?” என்றாள் வியப்புக்காட்டிய குரலில்.

 

அருள் சித்தப்பா தான்..

 

ஏய்..பொய் சொல்லாத. நீ தான் இன்னைக்கு அருள் சித்தப்பாவையே பார்க்கலையே..என மேலும் துருவ, “இன்னைக்கு இல்லை, அன்னைக்கே..ம்ம்..டும்டும் அன்னைக்கு, நிறைய மேக்கப் எல்லாம் போட்டோம்ல அன்னைக்கு நைட்என்றாள்.

 

தனது கல்யாணநாள் இரவை தான் குறிப்பிடுகிறாள் என்பது புரிய, மனம் நெகிழ்ந்தவள் அள்ளி அணைத்துக் குழந்தையின் கன்னங்கள் இரண்டிலும் முத்தங்கள் பதித்தாள். எல்லா இடத்திலும் ஒரு வித அசூகையாப் பார்க்க, முதல் முறையாகத் தன்னைத் தன் போலே ஏற்றுக்கொண்ட அந்தக் குழந்தை உள்ளமும், அதை அவளுள்ளே பதித்த ஆருயிர் கணவனின் மீதும் அன்பு பெருகியது.

 

அவள் திடீர் முத்தத்தை எதிர்பாராது திணறிய கிருஷ்மி, “எதுக்குச் சித்தி..?” எனக் காரணம் வேறு கேட்க, “நீ உங்க பாட்டி வீட்டுக்குப் போறயில்ல.. ஒரு வாரம் சித்தி உன்னை மிஸ் பண்ணுவேன்ல அதுக்கு தான்..என்றாள்.

 

மறுநொடியே உண்ட வாயோடு ஈரம் அப்ப, இசையின் கன்னங்களில் முத்தங்களிட்ட குழந்தை, “நானும், மிஸ் யூ சித்தி..என்றாள் அன்பொழுக.

 

பெரிய குடும்பம், ராஜியும் வேறு இங்கிருப்பதால் நாள் முழுதும் சீதாவிற்கு வேலைகள் அதிகம். மாலை பள்ளி முடிந்து வந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் பெரும்பாலும் இசையுடனே கிருஷ்மி ஒட்டிக்கொண்டிருக்க, அவர்களுக்குள் ஒரு அன்பான பாசப்பிணைப்பு வந்திருந்தது.

 

அவர்களை அனுப்பிவிட்டு ஒரு எதிர்பார்ப்போடு வீட்டிற்கு வந்த இசையின் நெஞ்சம் அருளைத் தேடியது. இறுக அவனை அணைத்துக் கொள்ள அலைபாய்ந்தன கரங்கள். ஆனால் வழக்கம் போலே அவன் இன்னும் வந்திருக்கவில்லை. சிறிதும் தயக்கமில்லாது மறுநொடியே அவனுக்கு அழைத்தவள், “எங்க இருக்கீங்க?” என்றாள்.

 

முன்னுரையும் முடிவுரையுமின்றி ஒரு பரபரப்பில் அவள் வார்த்தையாட, “கடையில தான்,  என்னாச்சு?” என்றான் ஒருவித பயத்தோடு.

 

அவன் குரல் கேட்டதுமே அவள் பரபரப்பெல்லாம் அடங்க, “ம்ம், சீக்கிரம்.. வாங்க..என்றாள் கட்டளையாக, மெல்லிய குரலில், வெளிப்படாத சிணுங்கலோடு.

இதுபோலே இதற்கு முன்பும் அழைத்திருக்கிறாள் தான். ஆனால் எப்போது வருவீர்கள் என விசாரித்திருக்கிறாளே தவிர, சீக்கிரம் வாருங்கள் என அழைத்தில்லை. இதுவே முதல் முறை.

 

ஏனென்று கேட்கும் அழைப்பைத் துண்டித்துமிருந்தாள். அவன் இதழ்களில் அவள் காண இயலாத சிறுநகை மலர்ந்து விரித்தது. அவள் அழைப்பில் அருளுக்கு புது உற்சாகம் உடலெல்லாம். ஹார்மோன்களில் ஆட்சியில் ஒரு கிளர்ச்சியான உணர்வு.

 

இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அதற்கு மேல் ஐந்து நிமிடம் கூட அவனால் பொறுமை காக்க முடியவில்லை. விக்கியை அழைத்தவன், அவனைக் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீடு நோக்கி கிளம்பினான்.

 

வீட்டிற்குள் நுழைந்ததுமே அருள் அவனறை நோக்கிச் செல்ல, சந்தோஷ துள்ளளோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவள், அவனைக் கண்டதும் பாய்ந்து வந்து இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

நொடியில் விலகியவள், அவன் முகம் பற்றி, ஈரம் பதிய முகம் முழுவதும் முத்தமிட்டாள். அவளிருந்த சந்தோஷத்தின் அளவை, மூச்சடைக்கும் முத்தத்தில் வெளிப்படுத்துவதை நிறுத்தவில்லை.

 

அவள் கைகளுக்குள் தன்னை கொடுத்து பொம்மை போல அகப்பட்டுக் கொண்ட அருள், அவள் ஆர்ப்பரிப்பை எல்லாம் தித்திக்கும் சுகமாகத் தாங்கி நின்றான். இறுதியாக இதழில் இதழ் பதித்திருந்தவள் அத்தனை நேர அலைப்புறுதலில் சுவாசத்திற்குத் திண்டாடி நிற்க, அவன் சுவாசமூட்டினான்.

 

அத்தனை நாட்களாக இல்லாது இன்றவள் காட்டிய நெருக்கம் அதிகமென அருளும் உணர்ந்திருந்தான்.

 

வெகுநாட்களாகப் பிரிந்திருந்தவனை தற்போது கைப்பற்றிக் கொண்டதைப் போல் தன் ஆளுகைக்குள் அவனை அடைத்துக் கொண்டாள். களைப்பேறிய உடலையும் இளைப்பாறிய சுவாசத்தையும் கண்டுவிட்டு, அவளுக்காக அவன் தான் நிதானமாக இருந்தான்.

 

இப்போது வரையிலும் துள்ளி வந்த புது வெள்ளமாய் அவள் ஆர்ப்பரிப்பதற்கான காரணத்தை அவனறியவுமில்லை, கேட்கவுமில்லை.

 

மெத்தையில் சரிவாய் அமர்ந்திருந்த இசை, அவன் சிகை கோத, அவளிடையைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டு முகம் புதைத்திருந்தான் அருள்.

 

ஏய்.. இசை, இதோ இங்க பாரேன்.. இங்கிருந்த வெள்ளைதிட்டு கொஞ்சம் கலர் மாறியிருக்கு பாரேன். நார்மல் ஸ்கின் கலர்க்கு வந்திருக்குஎன்றவன் அவள் இடை வருடியபடி அத்தனை நேரக் கண்டுபிடிப்பை உரைத்தான்.

 

குனிந்து பார்த்தவள் அவன் காதைத் திருக, அதைத் தட்டிவிட்டபடி முகம் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

 

“இதுக்காகத் தான் உங்களைப் பிடிச்சிருக்கு. எனக்குக் கணவனா வருகிறவர் என்னைப் பார்த்து முகம் சுளிச்சிடவே கூடாது, என்னை இப்படியே ஏத்தக்கிடணும்னு எதிர்பார்த்திருந்தான். அதுக்காக ரொம்பவும் வேண்டுதல் வைச்சிருந்தேன். இன்னைக்கு அது நிறைவேறிடுச்சி அந்தச் சந்தோஷம் தான்

 

அடப்பாவி..! இத்தனை நாளா இல்லாது, இப்போ தான் இதை புரிஞ்சிக்கிட்டியா?” என்றவன் அதிர்ந்து வினவ, “ம்ம், புரிய வைக்கிற சாமர்த்தியம் உங்களுக்குப் பத்தலைஎன்றாள் ஒரு சிலுப்பலுடன்.

 

“ஆஹா..! இரு, உன்னை.. எனக் கண்டிப்பது போலே அவன் நெருங்கி வந்து அணைத்துக்கொள்ள, அவளும் அவனுள் புதைந்து போனாள்.

 

அருளே கண்டு மகிழும்படி விக்கி தொழிலை மெல்லக் கற்றுக் கொண்டிருந்தான். இறக்குமதிப் பிரிவிலிருந்து விற்பனைப் பிரிவு, விளம்பரப்பிரிவு, வாடிக்கையாளர்களைக் கவர்தல், புதுமையான ஆடைகள் வடிவமைப்பு என அனைத்துமே கவனித்துக் கற்றுக் கொண்டான்.

 

நாள் ஒன்றிற்கு ஒருமுறை மட்டும் வந்து பார்வையிட்டுச் செல்லும் அருள், கடையைக் கவனிக்கும் பொறுப்பை விக்கியிடம் விட்டுவிட்டு பர்னிச்சர் ஷோ ரூமைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.

 

அன்று இசை, தெருமுக்கில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, அப்போது தான் காலையில் வேலைக்குச் செல்லக் கிளம்பி வந்தான் விக்கி.

 

இருசக்கர வாகனத்தில் வந்தவன், “வாங்க அண்ணி, கோயிலுக்குத் தானே நான் கூட்டிட்டுப் போறேன்.. என்றழைக்க, “இதோ பக்கத்துல தானே கோயில், வெயில் கூட இல்லை. நான் நடந்தே போயிட்டு வந்திடுவேன் விக்கிஎன்றவள் மறுக்க, அதை ஏற்காதவன் அடமாக அவளை அழைத்துச் சென்றான்.

 

கோவிலில் இருவரும் பூஜைக்கு நின்று கொண்டிருக்க, விக்கியின் கவனமெல்லாம் எதிரே இருக்கும் சிறிய பேருந்து நிறுத்ததிலே இருந்தது. அவன் உடல்மொழியே சரியில்லையே என சந்தேகித்த இசையின் பார்வையும் அவ்விடம் சென்றது.

 

அங்கு கல்லூரி, பள்ளிப் பிள்ளைகள் நின்றிருக்க, அவன் காலில் மிதித்தவள், “அங்க என்னடா லுக்? அதுவும் கோயில்ல நின்னுக்கிட்டு?” என அதட்ட, லேசாகச் சிரித்துக் கொண்டவன், அது..அது..அந்தப் பொண்ணு தான் அண்ணி பிருந்தா.. எனக் கூட்டத்தில் ஒரு பெண்ணை குறிப்பிட்டான்.

 

திரும்பிப் பார்த்தவளுக்கு அன்று கடையில் பார்த்ததும் நினைவில் வந்து சென்றது. அவனைச் சீண்டும் நோக்கம் தோன்ற, சரி, இப்போ என்ன அதுக்கு?” என்றாள் மிரட்டலாக.

 

“ஒண்ணுமில்லை உங்களுக்கு தெரியாதுன்னு காட்டுனேன்..என்க, “ஹோ..! அப்போ சார், காட்டத் தான் என்னைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

 

வேகமோடு மறுப்பாகத் தலையசைத்தவன், “ஐயையோ! இல்லை அண்ணி எதேச்சியாகத் தான் பார்த்தேன்.. என்றவன் பம்ம, பொங்கிய சிரிப்பை உள்ளுக்குள்ளே விழுங்கிக் கொண்ட இசை, “ம்ம்..? இந்த டைம்ல அவள் இந்தப் பஸ் ஸ்டாப்ல நிக்கிறது உனக்குத் தெரியாது. அப்படித் தானே?” என்றாள் குரலில் ஏற்றம் காட்டி.

 

அவன் பதிலின்றி நமட்டுச் சிரிப்புச் சிரிக்க, “சரி, இப்போ நான் என்ன செய்யணும்? அவகிட்டப் போய் என் கொழுந்தன் நல்லவன், வல்லவன், உன் மேல உயிரையே வைச்சிருக்கான். நீ இல்லாம அவனால வாழ முடியாது.. இப்படியெல்லாம் சொல்லி உன்னோட சேர்த்து வைக்கணுமா? இல்லை உங்க அண்ணன்கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” என்றாள்.

 

பதறி கரம் குவித்தவன், “ஐயோ, அண்ணி நான் பாவம், பச்சை மண்ணு, என்னை விட்டுடுங்க..! உங்களுக்கு கோயில் கூட கட்டுறேன் எங்க அண்ணன் கிட்ட மட்டும் இந்த விஷயத்தைச் சொல்லிடாதீங்க, தெரிஞ்சது அவ்வளவு தான். என் தோலை உரிச்சி, உப்பு தடவி, ஊறுகாய் போட்டுடுவான்எனப் பாவமாக வேண்டினான்.

 

அதற்கு மேலும் பொறுக்க முடியாது இசை சிரித்து விட, அந்த நிமிடத்திற்குள் இவர்களைக் கண்டுவிட்ட, பிருந்தா சாலையைக் கடந்து இவர்களை நோக்கி வந்தாள். அதைக் கட்டுவிட்ட விக்கி, “போச்சு! அங்க பாருங்க, புயல் மாதிரி வாரா.. வாங்க அண்ணி எஸ்கேப் ஆகிடுவோம்” எனப் பதறி அழைக்க, “அட! ஏன்டா நீ வேற பயந்து நடுங்குற..? அந்தப் பிள்ளை பஸ் வர டைம்மாச்சேங்கிற பதட்டத்துல இருக்குஎன்றாள் அசராது.

 

அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்த பிருந்தா, “ஹெலோ மேம், என்னை ஞாபகமிருக்கா? ராமமூர்த்தி பொண்ணு..என்க, “நல்லா ஞாபகமிருக்கு, உங்களை மறக்க முடியுமா?” என இசையும் சிநேகமாகப் புன்னகைக்க, அந்த நெடி நேரத்தில் பிருந்தாவின் பார்வை அருகிலிருந்த விக்கியின் மேல் சென்று மீண்டிருந்தது.

 

“காலேஜ் ஜாயின் பண்ணியாச்சா? நினைச்ச கோர்ஸ் கிடைச்சதா? லேட் என்ட்ரி வேற?” எனப் பரிவோடு இசை விசாரிக்க, அவள் முகம் பார்த்து கேள்விக்குப் பதிலளித்த பிருந்தா இறுதியாக அவள் உதவிக்கு நன்றியும் உரைத்தாள்.

 

ஆர்வமிகுதியில் யார் சொன்னா? விக்கியா?” என இசை கேட்டுவிட, “இல்லை, அப்பா தான் சொன்னாங்க. நான் கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொல்லும் போது கேட்கலை நீங்க பேசவும் தான் அக்செப்ட் பண்ணாங்க, ரொம்ப நன்றி..என்றவளின் குரலே உள்ளே சென்றது. 

 

ஆறுதலாக அவள் கரம் பற்றித் தட்டிக் கொடுத்த இசை, “நல்லது நடந்தால் எல்லாருக்கும் சந்தோஷம் தான். நல்ல படிங்கம்மா, கல்வியை விடச் சிறந்த செல்வம் வேற என்ன இருக்க முடியும்? உங்களுக்கு மட்டுமில்லை இன்னும் பதினாறு பேருக்கும் சேர்த்து தான் உதவி செய்தார். ஆனால் உங்களுக்கு உதவி செய்ததுக்கு முக்கிய காரணம், விக்கித் தான்..என்ற இசை இது தான் சமயமென விக்கியின் உதவியையும் கோடிட்டுக் காட்டிவிட்டாள்.

 

மௌனமாகத் தலையசைத்தவள் இசையிடம் விடைபெற்றுக் கிளம்ப, செல்லும் முன் விக்கியை ஒரு பார்வை பார்த்துச் சென்றிருந்தாள்.

 

அவள் சென்ற பின்பே விக்கியை நோக்கித் திரும்பிய இசை அவன் உறைந்து நிற்பதைக் கண்டுவிட்டு முதுகில் தட்டி, “சீக்கிரமே நீ எனக்கு இன்னொரு ட்ரீட் தர வேண்டி வரும். அதனால கடனா இருக்கிற பிரியாணியைச் சீக்கிரம் வாங்கிக்கொடு விக்கிஎன்றாள் கேலியாக.

 

அட! ஏன் அண்ணி நீங்க வேற கிண்டல் பண்ணிக்கிட்டு. அவள் நல்லபடியாப் படிச்சி முடிச்சு வேலைக்குப் போய், அவள் மனசுக்குப் பிடிச்சபடி ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிட்டு ஹேப்பியா வாழ்ந்தால் அதுவே எனக்கு போதும்..என்றவன் பிள்ளையாரை நோக்கிக் கரம் குவித்து வணங்கினான்.

 

சலிப்புற்ற இசை, “இவன் வேற எப்போ பாரு இதயமே இதயமேன்னு சோக கீதம் வாசிச்சிக்கிட்டு.. இருந்தாலும் நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்கேடாஎன்றவள் நொந்து கொள்ள, “எல்லாம் எங்க அண்ணன் வளர்ப்பு தான்..என்றபடி முன்னே நடந்தான் விக்கி.

 

இருவரும் வணங்கி முடிய, மீண்டும் இசையை வீட்டில் வந்து விட்டுவிட்டுக் கடைக்குக் கிளம்பினான்.

 

சீதா இல்லாது பத்மாவிற்கு வேலைகள் அதிகரித்திருந்தது. அதிலும் விடுமுறை உள்ளது என ஜெகன் வந்திருந்தான்.

 

வந்தவனை வரவேற்ற கார்முகிலன், “என்னடா நீ மட்டும் வந்திருக்க? மருமகளை எங்கடா? என விசாரிக்க, “அவ வரலை அவங்க அம்மா வீட்டுல இருக்காள்..என்றவன், அதற்கு மேலும் நில்லாது தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

 

தான் விசாரிக்கும் போதே அவன் சென்றுவிட, மனதில் நெருடலோடு, “என்னவோ இவன் சரியில்லை, எதுவும் பிரச்சனையான்னு விசாரி பத்மா..என்றார் மனைவியிடம்.

 

அவன் முகம் கூட உன்னிப்பாகப் பார்த்திடா பத்மா, “அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க. பிரயாணம் செய்த களைப்பா இருக்கும் என்றுரைத்துவிட்டு, அவனுக்குப் பிடித்ததைச் சமைக்க சமையலறைக்குள் சென்றுவிட்டார். கார்முகிலனும் அத்தோடு துருவாது விட்டு விட்டார்.

 

மாலை நேரம் அருள் வந்திருக்க, அவனுக்குத் தேநீர் எடுத்துக்கொண்டு அவன் பின்னே அறைக்குள் சென்றாள் இசைவாணி. அருளே அவன் சட்டை ஒன்றை இஸ்திரி செய்து கொண்டிருக்க, டம்ப்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் விட்ட வேலையை இசை செய்தாள்.

 

ஆமாம், நேத்து மதியம் நான் வீட்டுக்கு வரும் போது நீயில்லையே எங்க போயிருந்த?” என்றவன் தேநீர் பருகியபடியே கேட்க, அவளும் வேலையில் கவனம் பதித்தபடி, “நீங்க வர்றேன்னு சொல்லவே இல்லையே! நான் அண்ணியோட ஹாஸ்பிட்டல் போயிருந்தேன்என்றாள்.

 

உனக்கு எதுக்கு வெயில்ல தேவையில்லாத அலைச்சல்? அப்புறம் எத்தனை தடவை சொல்லுறது, என் தம்பி, தங்கச்சின்னு யார் விஷயத்துலையும் தலையிடாதேன்னு.. நீ, நான்.. நம்மளைப் பத்தி மட்டும் யோசி..

 

கட்டுப்பாடா? கட்டளையா எனப் புரியாது அருளை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தாள். பின் மெல்லிய குரலில், “வீட்டுல வேற யாருங்க இருக்கா? ஒன்பதாவது மாசம் வேற ஆரம்பிச்சிடுச்சு.. தனியாவா அனுப்ப முடியும்?” என்றாள் அவனுக்குப் புரிய வைக்கும் விதமாக.

 

ஏன் அவள் ஆசையா கட்டிக்கிட்டவன் இல்லை, அவன் தான் அவளுக்குப் பொறுப்பு..

 

என் அண்ணனுக்கு வேலை அதிகம், உங்களை மாதிரி என்ன சொந்த பிஸ்னஸ்ஸா அப்படியே நினைச்ச நேரம் கிளம்பி வர? என் அண்ணி தானே, நான் கூட்டிட்டுப்போனா என்ன தப்பு? ஏன் நீங்களும் தான் நேத்து என்னைக் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகலை, அப்புறம் விக்கித் தான் கூட்டிட்டுப் போனான்என்றவள் இதழ் சுளித்து, முகத்தை வேறு சிலுப்பிக் கொண்டாள்.

 

இசையின் ‘என் அண்ணன்’ என்ற பெருமை ஓயாது போலே என்றெண்ணி மனதிற்குள் நொந்து கொண்டான். அத்தனை நேரம் தான் சொல்வதைச் சரியென கேளாது வார்த்தைக்கு வார்த்தை அவள் அண்ணன், அண்ணி என விவாதித்ததில் வந்த கோபம் அவள் இதழ் சுளித்த அழகில் புகையாய், சென்ற இடம் தெரியாது மறைந்து விட்டது.

 

இசை.. அழுத்தமோடு அழைக்க, அவளும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

 

“இங்க பாரு, இவங்க விஷயத்துல நான் ரொம்பவே நொந்து போயிருக்கேன், அனுபவப்பட்டுருக்கேன். அம்மா கொண்டாடுறாங்கன்னா அது அவங்க வளர்த்த பாசம், உனக்கு இதெல்லாம் வேண்டாம், அவங்க மேல பாசமிருந்தாலும் உரிமை எடுத்தூக்காத தள்ளியிரு. நம்மளை பத்தி மட்டும் யோசி, என்னப் புரிஞ்சதா?” என்றவன் விரல் நீட்டிக் கேட்க, தலையாட்டிப் பொம்மை போன்றே அழகாகத் தலையாட்டி பதிலுரைத்தாள்.

 

ஏதோ மாயம்! அவள் சிறு சிறு செய்கை அனைத்தும் அவனுக்கு அழகாய்த் தெரிய, நிதானமாய் ரசித்து, நெஞ்சுக்குள் நினைவாகச் சேர்த்துக் கொண்டான்.

 

லேசாய் முகம் கனிந்தவன், “குட்..என்றபடி அவள் கன்னம் பற்றிக் கிள்ள, “ஸ்ஆஆ..வலியில் முனகியவள் அவன் கைகளைத் தட்டிவிட்டு முறைத்தாள்.

 

அவள் முறைப்பு அவனுக்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்ட, அவள் முகம் பற்றி அருகே இழுத்தவன், குனிந்தபடி நெருங்கி வர, விழிகளை மூடியவள், இதழ் துடிக்க, எதிர்பார்ப்போடு மயங்கி நின்றாள். முகம் நிமிர்த்திய அருளோ அவனை ஈர்க்கும் தாடைக்குழியில் விழுந்திருந்தான்.

 

அவன் முதல் முத்தம் அங்கு தான் தொடங்கும் என்றாலும் முடியுமிடும் இருவரும் அறியார்.

 

ஏமாற்றத்தோடு விழி திறந்தவள் அவன் நெஞ்சில் அடித்துவிட்டு கோபம் போலே சிலுப்பிக் கொண்டு முன்னே நடக்க, அரிசிப் பற்கள் தெரிய, முகம் மலரச் சிரித்தவன், “ஹோ.. அன்னைக்கு நீ கொடுத்தியே முகம் முழுக்க.. இறுக்கி அணைச்சு இச்சு..இச்சுன்னு அப்படி வேணுமா இசை?” என்றான் அறியாப்பிள்ளை போலே.

 

ஐயோ! என்றிருக்க, நெற்றியில் அறைந்து கொண்ட இசை, திருப்பி விரல் நீட்டி அவனை எச்சரிக்க, அவனோ அடக்காது கண்சிமிட்டி, பறக்கும் முத்தம் ஒன்றை அவளை நோக்கிப் பறக்க விட்டான்.

 

அவனோடு வம்பு வளர்க்கும் நேரம் இதுவல்ல என நினைத்தவள், மீண்டும் வாசலை நோக்கி திரும்பிவிட்டாள். ‘இந்த சிடுமூச்சி சின்ராசு இவ்வளவு பெரிய காதல் மன்னன்னு வெளியே சொன்னா, இவங்க வீட்டுலையே கூட நம்ப மாட்டாங்க போல இருக்கு’ என நினைத்தபடி சிவந்த முகமாக வெளியே வந்தாள்.

 

வரவேற்பறையில் அலைபேசியில் கவனம் பதித்தபடி அமர்ந்திருந்த ராஜி, இசையின் வருகையைக் கண்டுவிட்டு, ஹே.. வாணி, இங்க வா.. இதைப் பாரேன்..என ஆர்வமாக அழைத்தாள்.

 

அவளை நோக்கி நகர்ந்த இசை மேலும் நகரவிடாது, கரம் பற்றித் தடுத்தான் பின்னே வந்த அருள். அப்போது தான் ராஜி அவனைக் கவனிக்க, “ஏன் ராஜி, இதென்ன உன் வீடுடா? இல்லை எப்பவும் இசையை உன் நாத்தனார் மாதிரியே ட்ரீட் பண்றியே.. அவள் உனக்கு அண்ணிங்கிறது மறந்துடுச்சா?” என்றான்.

 

தலையும் புரியாது, வாலும் புரியாது ராஜி முழித்து நிற்க, “இரண்டும் ஒன்னு தானேடா இப்போ உனக்கு என்ன பிரச்சனை..?” என்றபடி முன்னே வந்தார் தேவகி. சட்டெனத் திரும்பியவன் முறைப்பாக ஒருபார்வைப் பார்க்க, மறுவார்த்தையின்றி மெளனமானார். 

 

மீண்டும் ராஜியை நோக்கித் திரும்பியவன் அண்ணியாகத் தான் ட்ரீட் பண்ணல அட்லீஸ்ட் வயசுல அவள் உனக்கு மூத்தவள் தானே அதற்காவது மரியாதை கொடுத்தியா..?” என்க, ராஜுக்குத் தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற பதைபதைப்பு.

 

அவளும் மௌனமாக நிற்க, “சரி தான், நீ என்னையே அண்ணாக நினைக்கலை, பின்ன எங்கே என் மனைவியை அண்ணியா நினைக்க போறே..?” என்றான்.

 

ராஜிக்கு சுருக்கென்று குத்தியது போன்றே ஓர் வலி! விழிகள் கலங்க நின்றிருந்தாள். இடையில் வந்த இசை, “உங்களுக்கு நேரமாச்சுன்னு சொன்னீங்களே கிளம்புங்க…என்றாள் அடிக்குரலில் அழுத்தமாக.

 

அவளை பார்த்து முறைத்தவன், சட்டென அவளின் கரங்களை உதறி விட்டு, விறுவிறுவென சென்று விட்டான்.

 

ஆரம்பத்திலிருந்து இசையை வாணி என்றே அழைத்துப் பழக்கப்பட்டிருந்த ராஜிக்கு இப்போது தான் ஒரு தோழமை உணர்வு வந்திருந்தது. அவர்கள் வீட்டிலிருந்ததை விட இங்கு வந்த பின்பு தான் இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினர். அந்த நட்பு உணர்விலே அவள் எப்போதும் அழைப்பது போன்றே வாணி என்று ஒருமையில் அழைத்து விட, அதில் என்ன தவறை அருள் கண்டானோ எனப் புரியாது கலங்கி நின்றாள்.

 

அருகே வந்த அணைத்துக் கொண்ட தேவகி, “அவன் ஏதோ டென்ஷன்ல பேசிட்டு போறான்டா. நீ எதுவும் மனசுக்குள்ள வைச்சிக்காதே…என ஆறுதல் உரைக்க, அவளோ விசும்பினாள்.

 

இசைவாணிக்கு உள்ளம் கொதித்தது. தன் அண்ணனுக்கு ஆதரவாகத் தான் பேசியதால் உண்டான கோபத்தைத் தன்னிடம் காட்டாமல் ராஜியிடம் காட்டி விட்டானே என வெம்பினாள். ‘அப்படி என்ன தான் கோபமோ? அதுவும் இந்நிலையிலா அவளிடம் காட்ட வேண்டும்?’ என மனம் ஆறவேயில்லை. அவளும் அருகில் வந்து ராஜிக்கு ஆறுதல் உரைக்கத், தேவகியும் சமாதானப்படுத்தினார்.

 

‘என்றோ தான் செய்த தவறினை இன்றும் மறவாது எடுத்து வைத்துக் கூறுகிறானே’ ராஜிக்கு வெகுவாக மனம் வலித்தது. ஆனாலும் அவன் குற்றச்சாட்டிலிருக்கும் உண்மையும் அவளுக்கு நன்கு உரைத்தது. இது வரையிலும் இசையை நாத்தனாராகவும், தோழியாகவும் பாவித்தவள், நொடி கூட அண்ணியாக நினைத்து நடத்தவில்லை என்பதும் உண்மை தான். இத்தனைக்கும் தன்னை விட, இரண்டு வயது பெரியவள் வேறு.

 

அருளுக்கு வெளியில் இருக்கும் மதிப்பும் மறியாதையும் அறிந்தவள் வேறு, அதை அவன் மனைவிக்கும் தர வேண்டும் தானே?

 

ஒருவாறு அவளைச் சமாதானப்படுத்தி உண்ண வைத்து ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர் இசையும் தேவகியும்.

 

இரவு உணவிற்குச் சமைத்துக் கொண்டிருந்த தேவகி, “ஏன் தான் அவனுக்கு இவ்வளோ கோபம் வருதோ? ஒரு சொல் சொன்னா அது அவனுக்கு மறக்கவே மாட்டேங்குது…என்றார் புலம்பலாக.

 

அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த இசைவாணி,“அது ஒண்ணும் அண்ணி மேல உள்ள கோபமில்லை அத்தை. அது என் அண்ணனுக்கு சப்போர்ட்டா நான் பேசுனது அவருக்குப் பிடிக்கலை அதான்..என்றாள்.

 

ஆமாம், பிராகாஷ்ன்னு பெயர் எடுத்தாலே அவனுக்குப் பிடிக்காது தானே..!

 

அப்படி என்ன தான் என் அண்ணன் மேல கோபம்..?”

 

எல்லாம் அவங்க கல்யாணத்தப்போ நடந்த பிரச்சனை தான். ராஜி சொன்ன ஒரு பொய்யால வந்த பிரச்சனை. உங்க அண்ணனுக்குப் பிடிவாதம் ஜாஸ்தி, அருளுக்குத் தன்மானம் ஜாஸ்தி. இரண்டு பேரும் ஒரே குணமா இருக்கப் போய் விட்டுக்கொடுத்து இறங்கி வர மாட்டேங்கிறாங்க..

 

உண்மை தான் அத்தை, என் அண்ணனுக்கும் இவர் பெயர் எடுத்தாலே பிடிக்காது, கோபம் வரும். ஆமாம் அப்படி என்ன தான் பிரச்சனை அத்தை?”

 

ஏன் உனக்குத் தெரியாதா? அவங்க கல்யாணத்தப்போ நடந்தது தான்..

 

என் அண்ணன் கல்யாணம் லவ் மேரேஜ்னு தெரியும், இவரோட பிரச்சனைங்கிறதெல்லாம் எனக்கு கல்யாணப் பேச்சு ஆரம்பிச்ச பிறகு தான் தெரியும். அப்போ நான் ஹாஸ்டல்ல இருந்தேன். லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாம், நைட் நிச்சியகார்த்தம் அப்போ வந்தேன், காலையில முகூர்த்தம் வரையிலும் இருந்துட்டுப் போயிட்டேன். அப்போ உங்களை யாரையும் எனக்குப் பார்த்த ஞாபகம் கூட இல்லை

 

“திடீர்னு ஏற்பாடானதால கல்யாணம்ங்கிற சந்தோஷம் யார் முகத்துலையும் இல்லை, மனோ மட்டும் தான் மண்டபத்துல இருந்து வேலை பார்த்தான். அருள் கல்யாணத்துக்கு வரவேயில்லை. நாங்க சரியா முகூர்த்த நேரத்துக்குத் தான் வந்தோம். நாங்க என்ன ராஜி வீட்டுலையே உன்னைச் சரியா பார்க்கலே..

 

இசைக்கு நன்கு ஞாபகமிருந்தது முதல் முறை ஜெகனுக்குத் தன்னைப் பெண் பார்க்க வந்தவர்களின் முகம் மாறியதும், ஜெகனின் வார்த்தைகளும்.

Advertisement