Advertisement

அத்தியாயம் 15

உடலெல்லாம் நெட்டி முறிக்கும் படியான அசதி. அலுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் விழிக்கவே வெகு தாமதமாகி இருந்தது. இசைவாணி விழிக்கையில் வழக்கம் போலே இடையில் கட்டிய துண்டோடு சரியாகக் குளியலறையிலிருந்து வெளியே வந்தான் அருள்வேலவன். 

 

சட்டென வேக வேகமாக உடையைச் சீர் படுத்திக்கொண்டு அவன் முன் வந்து நின்றவள் சோபையாகச் சிரித்தாள். கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக வந்த போதும் அழகோவியமாக அருளுக்குக் காட்சியளித்தாள். வேக வேகமாக நேற்று எடுத்து வைத்த சட்டையை மீண்டும் எடுத்து அவன் முன் நீட்டியவள், “நேத்துத் தான் என் மேல கோபம், இன்னைக்காவது இதைப் போட்டுக்கோங்க..” என்றாள் எதிர்பார்ப்புடன். 

 

“இது எப்போ எடுத்த?” என்றவன் வினவ, “அன்னைக்குக் கடைக்கு வந்த போது தான்.. நீங்க தான் என்னை கவனிக்காம அங்க வந்தும் உங்க ஸ்டாப்ஸ்ஸைத் தானே கவனிச்சீங்க?” என்றவள் குறைபட்டுக் கொள்ள, அவனிடம் இதழ் விரியாத சிறு புன்னகை. 

 

“அண்ணிக்கும் பாப்பாவுக்கும் எப்படி ஒன்னு போலே செலக்ட் பண்ண?” என்க, “அது கிடைச்சது எடுத்துட்டேன். நிறையப் பேருக்கு அது பிடிச்சிருங்குங்க. அது மாதிரியே அதாவது அம்மா, பொண்ணுக்காக ஒரே மாதிரியா உடைகளை டிசைன் பண்ணுங்க. அன்ட் ஆன்லைன் ஷாப்பிங்க ஆப்ஷன்ஸ் எல்லாம் கொடுங்க. கடை வரைக்கும் வர முடியாதவங்களுக்கு உதவியா இருக்கும். இன்னைக்கு காலத்துக்கு கஸ்டமரின் தேவை அறிந்து செயல்படணுமுங்க..”

 

“அடேடேய்! ஒரே நாள்ல அருள் பொண்டாட்டியா முழுசா மாறிட்டே..” என்றவன் கேலி செய்ய, அவள் முறைத்தாள். 

 

“எனக்கே கொஞ்ச நாளா இந்த யோசனை இருந்தது தான். ஆனால் எனக்குத் தான் இது பத்தி அதிகம் தெரியாதுல அதான் மனோ வரட்டும் பாத்துக்கலாம்னு இருந்தேன்..” என்றவனின் குரலில் ஸ்ருதி போக, “நானே வெப்சைட் டிசைன் பண்ணட்டுமா?” என்றாள் ஆர்வமாக. 

 

“உனக்கு இதெல்லாம் தெரியுமா?” என்றவனின் குரலில் சிறு உற்சாகம் வர, “ம்ம், நான் படிச்சே இது தானே?” என்றாள். 

 

“அப்போ உன் விருப்பம் போல, உன்னை வருத்திக்காது செய்..” என்க, சம்மதமாகத் தலையாட்டியவள், “அதுக்கு ஈடா இதைப் போட்டுக்கோங்க..” என்றாள் மீண்டும். 

 

மறுப்பாய்த் தலையசைத்தவன் அவனின் வழமையான உடைகளையே எடுத்து அணிந்தபடி, “இந்த கலர் சட்டையெல்லாம் நான் போடுறதில்லை இசை..” என்க, “ஏன்? எப்போ பாரு ஸ்கூல் பையன் யூனிபார்ம் போடுற மாதிரியே வெள்ளையும் கருப்புமா..? இனியாவது இதைப் போடுங்க..” என்றாள்.

 

“ம்ம்கூம், சரிப்படாது இதெல்லாம் போட்டா சின்னப் பையன் மாதிரி இருப்பேன்” 

 

“ஆமாம் நீங்க யங் தான், அங்கிள் இல்லையே..!”

 

“அதனால தான் போடுறதில்லை. நான் ரொம்ப சின்ன வயசுலையே தொழிலுக்கு வந்தவன். ஆரம்பத்துல சின்னப் பையன்னு பல இடங்கள்ல அதை அட்வான்டேஜா எடுத்துட்டு என்னை ஏமாத்தி இருக்காங்க. சில வாய்ப்புகள் பறிபோய் இருக்கு, என் தோற்றத்தை வைச்சி யாரும் என்னைக் குறைவா இடை போட்டுறக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பேன். நான் நிக்கிற இடத்துல நான் தான் அசைக்க முடியாத ஆளுமையா இருக்கணும். அதனாலே தான் இதை மாத்திகிடுறதே இல்லை” என்றவன் நியமான காரணங்களைச் சொல்லிவிட்டு தலை வாரினான். 

 

“என் ஆசைக்காக போடுக்கக் கூடாதா?” 

 

“ம்ம்கூம்..” என்றபடி தன் முன் நின்றிருந்தவளை அணைத்து இதழோடு இதழ் பதித்தான், அதை எதிர்பாராத போதும் அவளும் இசைத்தாள். இரவில் கண்ட சுக உணர்வுகள், இன்னும் தேகத்தில் வடியாது இருந்தது இருவருக்கும். 

 

மெல்ல விடுவித்தவன், “குளிச்சிட்டு வெளியே வா..” என நெற்றியில் முட்டி விடைபெற்று வெளியே செல்ல, “நான் மட்டும் இவர் எடுத்துத் தரப் புடைவைகளை கட்டிக்கிடணுமாம், இவர் மட்டும் என் ஆசைக்கு போட்டுக்க மாட்டாராம்” என்றவள் முகம் சிலுப்பியபடி முனங்கினாள். 

அவள் குற்றச்சாட்டு அவன் செவி சென்றடைந்த போதும் திருப்பிப் பாராது சென்றிருந்தான். 

 

மனோ இல்லாத வெறுமையை நிரப்புவது போல் தேவகிக்கு விக்கிச் செல்லப்பிள்ளையாகி இருக்க, வார இறுதிநாள் அவன் கேட்டானென அசைவம் சமைத்துக் கொண்டிருந்தார். அருளின் உழைப்பிற்கு நாள் கிழமை என்பதே கிடையாது, ஆனால் விக்கிக்கு அன்று ஓய்வு நாள். 

 

உணவு மேசையில் அமர்ந்திருந்த பாரி அனைத்தையும் கவனித்திருக்க, ராஜி வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்க, இசையும் விக்கியும் மடிக்கணினியோடு சோபாவில் அமர்ந்திருந்தனர். 

 

“எதுக்கு அண்ணி நம்மகிட்ட வேலைப்பார்க்கிறவுங்க லிஸ்ட்? அவங்க பிள்ளைங்க டீட்டைல்ஸ் எல்லாம் கேட்டிருந்தீங்க?” விக்கி வினவ, “முதல்ல நான் கேட்டதைக் கொண்டு வந்தியா? அதைச் சொல்லு” என்றவள் கேட்டாள். 

 

அருகில் அமர்ந்தவன் மடிக்கணினியை இயக்கி அவள் கேட்ட தகவல்களை எல்லாம் தர, இரு நிறுவனத்தின் மொத்த லாபம் எவ்வளவு என கணக்கிட்டவள் அதில் இரு சதவீதத்தை ஒதுக்கி, அந்தத் தொகையை குறித்துக் கொண்டாள். 

அந்த தொகையைக் கொண்டு எத்தனை மாணவர்களுக்கு உதவ முடியும் எனச் சிறு கணக்கிட்டபடி, “ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாங்க அதைத் தான் செய்றேன். உங்க அண்ணன் நம்ம ஸ்டாப்ஸ்ஸோட பிள்ளைங்க படிப்புக்கு ஸ்பான்சர் பண்றேன்னு சொன்னாங்க. அதான் எத்தனை பேருக்குக் கொடுக்க முடியும், யாருக்குத் தகுதி இருக்கு, கஷ்டப்படுற குடும்பமா பார்த்து கொடுப்போமேன்னு லிஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்” என்றாள் விளக்கமாக. 

 

ஒருநொடி யோசனையில் அமர்ந்திருந்த விக்கி, பின் அவனும் அவளுக்கு உதவ, “நல்ல விஷயம் தான். ஆயிரம் அன்னச் சத்திரங்கள் வைத்தலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடின்னு பாரதியாரே சொல்லி இருக்காரே!” எனப் பாரி பெருமைப்பட, “இப்படி நாம கஷ்டப்படும் போது யாராவது உதவியிருந்தால் இன்னைக்கு அருளும் இவங்களை மாதிரி படிச்சிருப்பானே” என வேதனை கொண்டார் தேவகி. 

 

“படிப்புங்கிறது வெறும் பெயருக்குப்பின்ன போட்டுகிற பட்டமில்லை அத்தை. அது அறிவு, திறமை, பண்பு. இந்தச் சமூகத்துல நாமா வாழ்றதுக்கான தைரியத்தையும், நல்லவனா இருக்கத் தேவையான பண்புகளையும் கத்துத் தர்றது தான். அதை வாழ்க்கைப் பாடத்துல, அனுபவமா ரொம்பச் சின்ன வயசுலையே அவர் கத்துக்கிட்டார் அத்தை. அதுக்கு நீங்கப் பெருமை தான் பட்டுக்கணும்” எனப் பெருமையோடு இசை உரைக்க, “சரியாச் சொன்னம்மா..?” என்றார் பாரிவேந்தன். 

 

அனைத்தையும் கேட்டிருந்த ராஜி, “ஆமாங்க சித்தி, இப்போ அருள் அண்ணனுக்கு என்ன குறை? ஊருக்குள்ள விரல் விட்டு எண்ணப்படுற பெரிய மனுஷங்கள்ல முன்னால இருப்பான். எத்தனையோ பேர் எது எதுக்கோ அண்ணனோட சிபாரிசு தேடி வர்றாங்க தெரியுமா? எல்லாம் அண்ணனோட திறமையும் உழைப்பும் தான். இதுவே எதாவது ஒரு பட்டப்படிப்பு முடிச்சிருந்தால் எங்கையாவது ஒரு கம்பெனில மாசச் சம்பளத்துக்கு உக்காந்திருப்பான். கைக்கும் பத்தாது வாய்க்கும் பத்தாது, இதுல உங்களை எல்லாம் எப்படி இவ்வளவு வசதியா வைச்சிக்கிட முடியும்?” என்றாள். 

 

கண்ணுக்குள் விழுந்த தூசி போலே இசையின் மனதிற்குள் சிறு நெருடல். ‘ராஜி சம்பந்தமேயின்றி பிரகாஷையும் அருளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாளோ? தன் அண்ணனைக் குறைவாக நினைக்கிறாளோ?’ என உறுத்தியது. ஊர்ஜிதமில்லாது தனது கற்பனையை அனைவரின் முன் கேட்டுப் பிரச்சனை வேண்டாமென அமைதியா இருந்து கொண்டாள் இசை. 

 

பதினைத்து ஊழியர்களையும் அவர்கள் குழந்தைகளின் பெயர்களையும் இருவரும் சேர்த்துப் பட்டியலிட்டு முடிக்க, தேவகி அனைவரையும் உணவுண்ண அழைத்தார். கை கழுவி முதல் ஆளாக வந்த விக்கி, “முஸ்தபா முஸ்தாபா எங்கட பிரியாணி டப்பா..” எனப் பாடிய படியே ஒவ்வொரு பாத்திரமாகத் திறந்து பார்க்க ஏமாற்றம். 

 

“சித்தி கறியும், சோறுமா இருக்கே எங்க பிரியாணி?” என்றவன் கேட்க, “நான் எப்போடா பிரியாணி செய்றேன்னு சொன்னேன். நான்வெஜ் தனியா தான் சமைச்சேன். சித்தப்பாவும் சாப்பிட மாட்டாரு, இன்னைக்கு ராஜியும் வேண்டாம்னு சொல்லிட்டாள் அதான்” என்றார். 

 

அவன் முகபாவனைகளைக் கண்ட ராஜி வாய் மூடிச் சிரிக்க, “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு உனக்கு?” என்றவன் எகிற, “இல்லை, வேண்டாம்னா நீ நம்ம வீட்டுக்குப் போ, சாம்பார் சாதம் காத்துக்கிட்டு இருக்கு” என்றாள் கேலியாக. 

 

மேலும் முகம் கோணியவன், “என் பிரியமான பிரியாணி கிடைக்கிற வரைக்கும் இன்னைக்கு நான் உண்ணா விரதம் இருக்கப் போறேன்” என கைக் கட்டிக்கொண்டு அடமாக அமர, “இதுக்கு பதிலா நீ மௌனவிரதமிருந்தால் நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்..” என்ற ராஜி மேலும் கேலி செய்தாள். 

 

அதற்குள் கை கழுவி வந்த இசை, “என்ன? எதோ பிரியாணின்னு சவுன்ட் கேட்டது?” என்றபடி விக்கிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தவள், அவன் முகத்தைப் பார்த்துவிட்டுச் சிரிப்பை அடக்கியபடி, “ஆமாம் அவர்கிட்ட உனக்கு வேலை வாங்கித் தந்தா எங்க எல்லாருக்கும் பிரியாணி ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னியே? எங்கடா பிரியாணி?” என்றாள் கறாராக. 

 

ஒரு நொடியில் உஷாரானவன், “பிரியாணியா? அப்படினா என்ன?” என அறியாதவன் போலே பின் வாங்க, “நடிக்காதேடா..” என ராஜி பிடிக்க, “அங்க பாரு, அவன் திருட்டு முழியை..” என பாரியும் மாட்டி விட்டார். 

 

“ஒண்ணு கூடிட்டாங்க, ஐயையோ! இவங்களோட முடியாதுப்பா, சித்தி நீங்க சோறு போடுங்க.. நான் சாப்பிட்டு இடத்தைக் காலி பண்றேன்..” என்றவன் பரபரப்பாக, “பயந்துட்டான்..” என ராஜி கேலி செய்தாள். 

 

தேவகி பரிமாற, வேகவேகமாக உணவை விழுங்கும் விக்கியை பார்த்துவிட்டு, “சாமர்த்தியமா அவனோட ஐந்து நிமிஷ உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு நொடியில் முறியடிச்சிட்டம்மா” என இசையை புகழ்ந்தார் பாரிவேந்தன். 

 

உண்டு முடித்தவர்கள் அவர்கள் வீட்டிற்குச் செல்ல, பெரியவர்கள் சிறிது ஓய்வெடுக்கச் செல்ல, அருளுக்காகக் காத்திருந்தாள் இசை. சமீபமாக அவள் தான் அருளுக்குப் பரிமாறிய போதும் ஒருநாளும் அவனோடு அமர்ந்து உண்டதில்லை. இன்று அவனுக்கு எடுத்து வைத்துவிட்டு அவளும் உணவுண்ண அமர, “என்னடா இது அதிசயமா?” என்றவன் நம்ப இயலாது கேட்டான்.

 

இதழ் புத்த சிறு புன்னகையுடன், “இனி எல்லாம் அப்படி தான், நேத்து நீங்க ஏதோ வசியம் பண்ணிட்டீங்க..” என ஒற்றைக்கண்ணைச் சிமிட்டினாள். அதைச் சற்றும் எதிர்பாராதவன் முகம் மலர, வெளிப்படாத வெட்கம் ஒன்று வந்தது. 

தலை குனிந்தவன், அவள் தட்டிலிருக்கும் உணவை கண்டுவிட்டு, “ஏன் மீன் துண்டு எடுத்து வைச்சிக்க வேண்டிய தானே? நம்ம ஊரு மீனோட ருசி வேற எதுல கிடைக்கும்? நான் வேணா முள்ளு நீக்கித் தாரேன்..” என்றவன் தனது தட்டில் இருப்பதைப் பார்த்து எடுத்து அவளுக்கு ஊட்டவும் முயன்றான்.

மறுப்பாய் தலையசைத்தவள் அவனிடமிருந்து விலகி முகமும் திருப்பி விட, அதை எதிர்பாராது நொடியில் அருளின் முகம் வாட, “இல்லைங்க, நான் சாப்பிடக் கூடாது அலர்ஜி வந்திடும். என்னால சாதாரண ஆளுங்க மாதிரி ருசிக்காக எல்லாத்தையும் சாப்பிட முடியாது. உடம்புக்கு ஒத்துக்காது.. ஸ்கின்ல அலர்ஜி, பபுல்ஸ், அரிப்புன்னு ஏதாவது வந்திடும். என்ன தான் எனக்கு பிடிச்ச உணவா இருந்தாலும் அது ஏன் உடம்புக்கு ஒத்துக்கிடலைன்னா சாப்பிட முடியாது தான். எவ்வளவு பணமிருந்தாலும் பிடிச்ச உணவைச் சாப்பிட முடியாதெல்லாம் ஒரு வித சாபம்” என்றாள்.

 

குரலே கரகரக்க, தொண்டை அடைக்கும் நிலை, தண்ணீர் டம்ளரை அவளை நோக்கி நகர்த்தியவன், இடது கையால் முதுகிலும் வருடிக் கொடுத்தான். அந்த ஆறுதலில் நீர் தேங்கிய செந்நிலம் போலே செழுமையில் குழைந்து போனாள். 

 

வீட்டிலும் தொழில் இடத்திலும் அவனின் ஆளுமை குரலையும் வார்த்தைகளிலே அனைவரையும் அதட்டி, மிரட்டும் அதிகாரத்தையும் கண்டிருக்கிறாள். அப்படியானவன் தன்னை மட்டும் தனித்துவமாகக் கொண்டாடுவதும் தன்னிடம் கொஞ்சிக் குழைவதும் அவளுக்குப் பூரிப்பையும் கர்வத்தையும் தந்தது. ஆனால் அவள் தவறு செய்தாலும் அவன் காட்டும் முகம் வேறு என்பதை அவள் அனுபவிக்கையில் தான் அறிய நேரும்.

 

உண்டு முடித்த பின், அறையில் சற்று ஓய்வாகப் படுத்திருந்தான் அருள்வேலவன். சமையல் மேசையை ஒதுங்கி வைத்துவிட்டு, கையில் ஒரு காகிதத்தோடு உள்ளே வந்தாள் இசைவாணி. 

அவனருகே வந்தவள், “என்னங்க ரொம்ப பெரிய யோசனை போல இருக்கு?” என்க, “ஆமாம், ஏன் ஆண்டாவ என் பொண்டாட்டி இவ்வளவு கஞ்சமா இருக்கான்னு மனசுலையே அவர்கிட்ட விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கேன்..” என்றான், முகபாவனைகளில் உணர்வு எதையும் வெளிக்காட்டாது. 

 

அவன் வம்பிழுப்பது புரியாது, “கஞ்சமா..? அப்படி நான் என்ன செய்தேன்?” என்றவள் தோள்களை குலுக்கியபடி கைகளை விரிக்க, சட்டென அவள் கரத்தை பற்றி தன்னிடம் இழுக்க, அவன் மேலே விழுந்தாள். விழுந்தவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவள் தடைக்குழியில் ‘இச்’சென்று ஒரு முத்தம் வைத்து நிமிர்ந்து விட்டு, அவள் பவள இதழை ஒற்றை விரல் கொண்டு மென்மையாக வருடியபடி, “நேத்துல இருந்து, இப்போ வரைக்கும் நான் எத்தனை முத்தம் அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன்.. கள்ளி நீ மட்டும் கஞ்சம்..” என்றவன் குறைபட்டுக் கொண்டான்.

 

என்னவோ அவன் அள்ளி அணைத்து முத்தமிட்டாள் கூட வராத வெட்கம் அதை வார்த்தைகளில் சொல்லிக் காட்டினால் போதும், ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும். அவள் முகமே குப்பென்று வியர்த்துச் சிவக்க, கன்னங்கள் தகிக்க, அவன் ரசனையாகப் பார்த்திருந்தான். அவன் துளைக்கும் பார்வையின் குறுகுறுப்பை அதற்கு மேலும் பொறுமையாகச் சகிக்க முடியாது, “என்னங்க இது விளையாட்டு..” என நெஞ்சில் அடித்த படி விலகி எழுந்தாள். 

 

கீழே கிடந்த காகிதத்தை எடுத்தவள் அவனிடம் நீட்டியபடி, “லிஸ்ட் ரெடி..” என்க, “என்னவொரு வேகம்..” என்றபடி எழுந்தமர்ந்தவன் அதை வாங்கினான். 

 

வாசித்துப்பார்த்தவன் மனதில் கணக்கிட்டும் கொண்டான். மீண்டும் ஒருமுறை பட்டியலை வாசித்துவிட்டு, “மொத்தம் பதினேழு பேர், எல்லாம் சரி கடைசியா சூப்பர்வைஸர் ராமமூர்த்தியும் அவங்க பெயரையும் பொண்ணு பெயரையும் ஏன் எழுதியிருக்க..?” என்றான். 

 

ஒரு நொடி யோசனைக்குப் பின், “ஏங்க? அந்த பொண்ணுக்கு என்ன?” என வினவியபடி நெருங்கி அமர்ந்தாள். 

 

“இல்லை, இந்த வாரம் கடைக்கு வந்தாங்க. அந்த பொண்ணுக்குக் கல்யாணம்னு கூட எங்கிட்ட அறிமுகப்படுத்தினாங்க. நீ என்னடான்னா அந்த பொண்ணுக்கு எம்.எஸ்.சி ஸ்காலர்சிப் போட்டு வைச்சிருக்க?” 

 

“எனக்குத் தெரியாதுங்களே..!” என்றாள் குழப்பமாக. 

 

அதை கவனியாதவன், “சரி, அப்போ நீக்கிடு..” என்றான். 

 

அவளோ நிதானமாக, “இல்லைங்க இருக்கட்டும், நாளைக்குப் போய் விசாரிச்சிட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்றாள். 

 

“விசாரிக்க என்ன இருக்கு? அதான் அந்த பொண்ணுக்கு கல்யாணம்னு சொல்லுறேன்ல..” என்க, “இல்லைங்க, வெறும் டிகிரி தானே முடிச்சிருக்கு, பிஜி படிக்கணும்கிற ஆசை அந்தப் பொண்ணுக்கு இருக்காலமில்லையா? கல்யாணம் எப்போ வேணாலும் பண்ணாலாம், ஆனால் படிப்புங்கிறது இப்போ அமைச்சிக்கிட்டாத் தாங்க உண்டு. அதுவும் ஒரு பொண்ணு படிக்கிறான்னா அவள் தலைமுறையே ஒருபடி முன்னேறுதுன்னு அர்த்தமுங்க. படிச்சி முடிச்சி நல்ல வேலைக்கும் போயிட்டானா யாரையும் சார்ந்திருக்கிற நிலைமையில்லை. வாழ்கையை எதிர்கொள்ளுறதுக்கான தைரியம் வந்திடும்” என்றாள் உறுதியாக. 

 

வியப்பாக கண்ணிமைக்காது பார்த்திருந்தவன், “படிப்பு மேல இவ்வளவு விருப்பமிருக்கா உனக்கு?” என்றான் அவள் முகம் பாராது, “நான் படிக்கலையே அது உனக்குக் குறையா தெரியுதா? நான் உனக்கு பொறுத்தமில்லைன்னு தோனுதா?” என்றான். 

 

அவன் முகம் நிமிர்த்தியவள், “ஆமாம், உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் கேட்கத் தோணுது?” என்றாள். அவன் கேள்விக்கு நேரடியான பதிலைத் தவிர்ந்து, அவனிடம் கேள்வி கேட்டிருந்தாள்.

 

“என்னைக் கல்யாணம் செய்யமா வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தால் நீ நல்லாயிருந்திருப்பேன்னு சொன்னியே, அதுக்கு இது தான் காரணமோன்னு நினைச்சேன். அதுவும் போக எங்கிட்ட குறைன்னு இதை ஒண்ணு தான் சொல்ல முடியும்!” என்றான் மெல்லிய குரலில். 

 

அவளோ தான் எப்போது அவ்வாறு உரைத்தோம் என்ற யோசனையில் சில நிமிடம் அமிழ்ந்தாள். அன்று கோபத்தில் சண்டையிடும் போது எந்த வித உள்நோக்கமும் இல்லாது உரைத்தது அவளுக்குச் சுத்தமாக நினைவிலில்லை. ஆனால் அந்த வார்த்தைகளால் காயம் கொண்டவனுக்கு நினைவில் பதிந்து போனது. 

அருளிடம் குறை என்றால் படிக்காதவன் என ஒன்றைத் தான் சொல்லமுடியும். அவனுக்கு அது குறையாகத் தோன்றியதில்லை ஆனாலும் அவனைக் குறைத்துப் பேச எண்ணுபவர்கள் எல்லாம் அதைத் தான் சொல்வார்கள். பத்மாவும் ஜெகனுமே பலமுறை அவ்வாறு சொல்லக் கேட்டிருக்கிறான். பலமுறை பெண்வீட்டில் இதனாலே அவன் நிராகரிப்பப்பட்டும் இருக்கிறான். 

 

சட்டென அவன் தோள் சாய்ந்தவள், “அது, உங்களைக் கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் எங்க தகுதிக்கு மாப்பிள்ளைப் பார்த்துக் கொடுத்து என் அண்ணன் கௌரவமா இருந்திருப்பான்னு சொல்லியிருப்பேன். அது என் அண்ணனுக்காகச் சொன்ன வார்த்தைகளே தவிர, என் உள் மனசுல இருந்து சொல்லலைங்க” என்றாள் கரங்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு. 

 

அவன் மௌனவாமவே இருக்க, “அதுவும் போக நீங்க ஒண்ணும் படிக்காதவர் இல்லை, படிப்பு குறைவுன்னு வேணா சொல்லிக்கலாம். அதைவிட அனுபவ அறிவும் திறமையும் வாழ்கையை எதிர்கொள்கிற துணிச்சலும் இருக்கும் போது படிப்பு  பட்டமெல்லாம் வெறும் அலங்காரம் தான்” என்றாள் அவனை சமாதானம் செய்யும் விதமாக. 

 

அருளுக்கு அவள் வார்த்தையில் முழுதும் திருப்தி ஏற்படவில்லை. எனினும் இது பற்றிப் பேசவும் அவனை விருப்பமில்லை அப்படியே விட்டுவிட்டான். 

 

நீட்ட மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “இது பத்தி நாளைக்கு ராமமூர்த்திக்கிட்ட விசாரிச்சிட்டுச் சொல்லுறேன்” என்க, “இல்லை நானே விசாரிக்கிறேன். நான் வர்றேங்க” என்றாள் கொஞ்சலாக. அந்த அழகிலே மயங்கியவன் தானாகச் சம்மதித்துத் தலையசைத்தான். 

 

மறுநாள் காலை சொல்லியது போலே இசையையும் அழைத்துக் கொண்டு கடைக்கு வந்தான் அருள்வேலவன். பார்கிங்கில் இருக்கும் போதே அவளுக்கு மனம் திக்திக்கென அடித்துக் கொள்ள, அருளின் அலைபேசி அழைத்தது. எடுத்துப் பேசி முடித்தவன் அவளிடம் திரும்பி, “நீ உள்ள போய் என் ரூம்ல இரு.. நான் பர்னிச்சஷர் ஷாப் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்” என்று மீண்டும் கிளம்பினான். 

‘அப்பாடா!’ என நிம்மதி மூச்சோடு உள்ளே சென்றவள், பின்புற குடோன் ஏரியாவிற்குள் சென்றாள். வேலையாட்களிடம் பேசிக்கொண்டிருந்த விக்கி, அவள் தொலைவில் வருவதைக் கவனித்துவிட்டு, அவளை நெருங்கினான். 

 

அருகே வந்தவன், “என்ன அண்ணி இவ்வளவு தூரம்? ஒரு கால் பண்ணியிருந்தால் நானே வந்திருப்பேனே?” என்றவன் வினவ, “எப்பவும் அவர் கூடவே இருந்தால் எப்படி கால் பண்ண முடியும்? நீ கொஞ்சம் இப்படி வா?” என்றழைத்தாள். 

 

தனித்து வெளிச்சமான இடத்தில் அழைத்து வந்து நின்றவன், கண்ணாடி வழி கீழே தெரியும் சாலையையும் ஊர்ந்து செல்லும் வாகனத்தையும் வேடிக்கைப் பார்த்திருந்தான். படபடக்கும் மனதிற்குள் திக்திக் உணர்வு. 

 

“இங்க பாரு..” என அழைத்தவள், “என்னடா இது?” என்றொரு காகிதத்தை நீட்டினாள். 

 

திரும்பிப் பார்த்தவன் திருட்டு முழியோடு, “நேத்து நாம ரெடி பண்ண லிஸ்ட்..!” என வார்த்தைகளைப் பாதி முழுங்க, “இதுல ராமமூர்த்தி சாரோடு பொண்ணுப் பெயர் பிருந்தா கடைசியா எப்படி வந்தது?” என்றாள் விசாரணையாக. 

“ஹான்..உங்க கையெழுத்து மாதிரி தானே இருக்கு..” என்றவன் மழுப்ப, “சமாளிக்காத.. என் கையெழுத்து மாதிரி இருந்தாலும் இது நான் எழுதலை. எனக்கு நல்லாத் தெரியும், ஞாபகமுமிருக்கு. நீ தானே எழுதின? ஏன் எழுதின?..” என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு. 

 

நேர்கொண்டு பார்க்க இயலாது சமாளிப்பாக, “வேற எதுக்கு எழுதுவாங்க? அந்த பொண்ணுக்கும் உதவி செய்யத் தான்..” என்றான் உள் சென்ற குரலில். 

 

“எது? நடக்க இருக்கிற கல்யாணத்தை நிறுத்தி, அவளைப் படிக்க வைக்கிறதா?” என்றவள் முறைப்புடன் கேட்க, அதற்கு மேலும் விக்கியால் அவளிடம் சமாளிக்க முடியவில்லை. 

 

“ஆமாம் அண்ணி, அது தான் அந்த பொண்ணுக்குச் செய்ற நல்லது..” என்றவன், கரம் குவித்து, “ப்ளீஸ் அண்ணி, இது எனக்கும் செய்ற நல்லது..” என்றான் வேண்டுதலாக. 

 

அவன் மொத்தமாகச் சொல்லட்டும் என்றவள் மௌனம் சாதிக்க, “அவ பாவம் அண்ணி, மூத்த பிள்ளையா இருக்கான்னு சீக்கிரம் கட்டிக்கொடுக்க பார்க்குறாங்க. இப்போ தான் டிகிரி முடிச்சியிருக்காள், இருபத்தியொரு வயசு அவளைப் போய் முப்பத்திமூனு வயசு ஆம்பளைக்கு கட்டி வைக்கப்பார்க்குறாங்க. அவளுக்கு இதுல விருப்பமேயில்லை அண்ணி. இன்னும் படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும் தம்பி, தங்கச்சிகளுக்கு நல்லது செய்யணும்னு கனவுகளோட இருக்கா அண்ணி. நான் கேட்டேன்னு சொல்லாம நீங்க தான் அண்ணன் மூலமா அவளுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனும்

அண்ணி ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக. 

 

அவன் காதல் கதையை உரைப்பான் என்றே எதிர்பார்க்க, அவனோ அவள் குடும்பச்சூழலையும் அதில் சிக்குண்ட அவள் நிலையையும் தவிப்பாக உரைக்க, இசையே சற்றுக் கலங்கி விட்டாள் 

 

இருந்தும் அவனிடம் வெளிக்காட்டாது, “ஆமாம் இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? என்ன லவ்வா?” என்றாள் விசாரணையான. 

 

சிறிதும் மறுக்காது தலையாட்டியவன், “ஆமாம் காதல் தான், என் காதல்.. நிராகரிக்கப்பட்ட காதல்..” என்றான் நெஞ்சில் கை வைத்தபடி. அவன் முகமே அப்படியொரு வேதனையை வெளிக்காட்டியது. 

 

அதுவரையிலும் விசாரிக்கும் தோரணையிலே கேட்டவள், அவன் முகம் காட்டிய வேதனையில், “என்னடா ஆச்சு?” என்றாள் அனுசரணையாக.

 

“முதல்ல பஸ்ல தான் சும்மா பார்த்தேன். தினமும் பார்ப்பேன்.. வேற வேற காலேஜ் பஸ்ல மட்டும் தான் பார்க்குற வாய்ப்பு, ஒருநாள் அவளைப் பார்க்கலைனாலும் என்னால நிம்மதியாவே இருக்க முடியாது. மனசெல்லாம் என்னவோ மாதிரி ஏங்கும் தவிக்கும். பிரண்ட்ஸ் எல்லாம் தான் இதை காதல்னு சொன்னங்க, நானும் அப்படி தான் நினைச்சிருந்தேன். அவகிட்ட ப்ரபோஸ் பண்ணேன், அவ ஏத்துக்கிடலை.. என்னை பிடிக்கலைன்னு சொன்னாலும் பின்னாடியே சுத்தி இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணியிருப்பேன், ஆனால் அவ அவளோட பேமிலி சிச்சுவேஷன் சொல்லும் போது அவளை மேலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் தோனுச்சி, விலகி வந்துட்டேன். விலகி வந்தாலும் அவளை விட்டுட்டு எல்லாம் இருக்க முடியலை அண்ணி. அவளுக்கு ஒரு கஷ்டமுங்கிற போது மனசு தாங்க மாட்டேங்குது…” 

 

அவன் குரலும் மனமுமே அவன் நெஞ்சிலிருக்கும் காதலையும், வேதனையும் சரியாகக் காட்டிக் கொடுக்க, ஆறுதலாக அவன் கைகளில் தட்டிக் கொடுத்தாள். 

தன்னை மறுத்தவளைத் தொந்தரவு செய்யாது வெளி வந்துவிட்ட போதும் அவள் நலனுக்காகத் துடிக்கும் அவனுள்ளம் இசைக்குப் புரிந்தது. அது வரையிலும் விளையாட்டுப் பிள்ளையாக மட்டுமே பார்த்தவனை, இன்று உயர்ந்த நெறி கொண்டவனாக, பண்பானவனாகப் பார்க்கப் பெருமையாக இருந்தது இசைவாணிக்கு. 

 

“கொஞ்ச நாள் முன்ன இங்க வந்திருந்தாள். அருள் அண்ணக்கிட்ட கல்யாணம்னு சொல்லிக்கிட்டு இருந்தார் அவங்க அப்பா. அவள் முகமே சரியில்லை ரொம்ப அழுது, போராடி இருப்பான்னு நினைக்கிறேன். ஆனால் நிச்சியமா சொல்லுறேன் அண்ணி அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமே இல்லை” என்றான் உறுதியாக. 

 

நெஞ்சம் நெகிழ்ந்திருந்த இசைவாணி, “சரிடா, உங்க அண்ணன் வர்றதுக்குள்ள ராமமூர்த்தி சார் கிட்ட பேசிச் சரி கட்டப்பார்க்கிறேன்” என்க, “ரொம்ப தேங்க்ஸ் அண்ணி” என்றான் அவள் கரம் பற்றி. ஆறுதலாய் மெல்லத் தோளில் தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றாள். 

 

ராமமூர்த்தியின் மனதை மாற்றும் விதமாக இசை பேசிக்கொண்டிருக்க, அருகில் நெருங்காது அந்த தளத்தையே தவிப்போடு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான் விக்கி. 

ஒரு வழியாகக் கல்யாணத்தை நிறுத்தி பெண்ணை படிக்க வைப்பதற்கு அவர் சம்மதிக்க, தொலைவில் இருந்தே விக்கி நிம்மதி பெருமூச்சை விட்டுக் கொள்ள, “நீ இங்க என்னடா பண்ற, வேலை நேரத்துல?” என அருளின் குரல் பின்னே கேட்டது. 

 

அதிர்ந்து திரும்பியவன் ஒரு நொடிக்குள் தடுமாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு, “அது.. அங்க பாரு.. அண்ணி, அவங்க எங்கே இங்க?” என இசையை கை காட்டியவன் அருள் திரும்பிப் பார்த்த இடைவேளையில் ஓடி விட்டான். 

அருளைக் கண்டு கொண்ட இசையும் அவனிடம் வந்தாள். தான் எழுதிய பட்டியல் சரி தானென்றும், அதை உடனே செயல்படுத்தும்படியும் அருளை முடுக்கினாள். 

Advertisement