Advertisement

அத்தியாயம் 14

இசையின் குரலுக்கு இசைந்த அருள்வேலவன் தம்பியை தன்னோடு தொழில் சேர்ந்து கொண்டான். ஆனாலும் சொன்னது போலேவே ஆரம்பநிலையிலிருந்து தொழிலைக் கற்றுக்கொள்ள இறக்குமதி பிரிவில் தான் விக்கியை சேர்த்திருந்தான். இறக்குமதி செய்யப்படும் துணிவகைகளை தரம் பரிசோதிப்பது, குடோனில் இறக்குவது, அந்த அந்த செக்ஷனுக்கு அனுப்புவ வேண்டியதை பார்த்துப் பிரித்து வைப்பது, அனுப்புவது, வேண்டிய ஆடர்களை குறிப்பெடுத்துக் கொள்வது, அதில் அதிகம் விற்பனையாகும் துணிவகைகளை அளவிடுவது, அதற்கான விலை நிர்ணயம், அதில் வரும் புதுமைகள் என அனைத்து வேலைகளையும் கவனித்தான் விக்கி. 

 

அங்கிருக்கும் வேலையாட்கள் அனைவரும் விக்கியை அறிந்தவர்கள் தான் இருந்தும் வேலை என்று வர, அதுவரை இருந்த விளையாட்டுத்தனங்களை எல்லாம் கைவிட்டு அவனும் பொறுப்போடு கவனமாக இருந்தான். அதில் அருளுக்கு மனம் நிறைந்த உணர்வு, விக்கியை குறித்த இசையின் கணிப்பு சரியானதில் ஒரு மெச்சுதல்! 

 

அன்று நண்பகலை நெருங்கும் நேரம் கடைக்கு வந்திருந்தாள் இசைவாணி. திருமணத்திற்குப் பிறகு இன்று தான் கடைக்கு வந்திருக்க, அங்கு ஒரு சிலர் மட்டுமே அவளை அறிந்திருந்தனர். விக்கிக்கும் பின் பகுதியில் தான் வேலை, வாயிலில் நின்று கொண்டிருந்த முதல் தளத்தின் மேற்பார்வையாளர் ராமமூர்த்தி அருகில் வந்து, “வாங்க மேடம்..” என வரவேற்றார். 

 

தலையசைத்தவள் அப்போது தான் அவரருகே இருந்த பெண்ணை கவனித்தாள். அழுத முகத்தைத் துடைத்தது போன்று கண்கள் கலங்கிச் சிவக்க நின்றிருக்க, அவள் பார்வையைக் கவனித்தவர், “இது என் பொண்ணு பிருந்தா..” என அறிமுகப்படுத்தினர். 

 

ஒரு சிநேகப் புன்னகையோடு, “என்ன படிக்கிறம்மா?” என வார்த்தைக்குக் கேட்க, “பி.எஸ்.சி முடிச்சிருக்கேன்..” என்றாள் ஒருவார்த்தை பதிலாக. 

 

அதற்குள், “சார், ஆபிஸ் ரூம்ல இருப்பார், நீங்கப் போய் பாருங்க மேடம்..” என்றவர் பணிவோடு வழி விட, தலையசைத்தவள் அதற்கு மேல் நில்லாது உள்ளே சென்றாள். 

 

அலுவலக அறை நெருங்கியவள் கதவை ஒருமுறை தட்டிவிட்டு அவன் பதிலுரைக்கும் முன் உள்ளே செல்ல, தன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் சட்டென நிமிர்ந்து பார்க்க, அவன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர்களும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். 

 

அவன் தனிமையில் இருப்பான் என நினைத்த தன் முட்டாள் தனத்தை நொந்த படி அவள் நெருடலோடு நிற்க, “உள்ள வா இசை..” என அருளே அழைத்திருந்தான். அவன் கோபம் கொள்வான், வெளியே அனுப்பிவிடுவான் என்றே எதிர்பார்க்க, அதற்கு மாறாக உள்ளே அழைத்ததும் மலர்ந்த முகமாகச் சென்றாள். 

 

வந்தவள் அருளின் அருகே செல்ல, அவனும் எழுந்து நின்று, தன் மனைவி என அங்கிருக்கும் பெரியவர்களிடம் அறிமுகப்படுத்தினான். அவர்களும் சிநேகப் புன்னகையோடு இருவரிடமும் விடைபெற, அதில் ஒருவர் இசையின் தலையில் கரம் வைத்து ஆசீர்வதித்துச் சென்றிருந்தார். 

 

அவர்கள் அனைவரும் சென்ற பின்னே இசையின் புறம் திரும்பிய அருள், “என்ன விஷயம் இங்க வந்திருக்க?” என்றான் விசாரணையாக. 

 

அவளோ அவன் வார்த்தையாடும் முன்பே, “சாரி டிஸ்டேர்ப் பண்ணிட்டேனா? ஆமா யார் இவங்க எல்லாம்?” என்றாள். 

 

“முதல்ல போனவரு மாவட்ட வணிகர் சங்க செயலாளர்..” என்றவன் முழு விளக்கம் சொல்லும் முன்பே, “அவர் எதுக்கு உங்களைப் பார்க்க வந்திட்டுப் போறாரு?” என்றாள் இடையிட்டு. 

 

அவள் முக பாவனைகளை ஆராய்ந்தபடி, “அடுத்த செயற்குழு கூட்டம் எப்போ? யார் யாரை அழைக்கணும்? எது எதைப் பத்திப் பேசணும்னு தலைவரை கேட்டுட்டுப் போறார்” என்றான் சாதாரணமாக. அவளுக்கோ சில நொடிகளுக்குப் பின்னரே அவனைத் தான் தலைவர் என்கிறான் என்பது உறைத்தது. 

 

அவள் கண்களில் ஒரு நொடி ஆச்சரியம் மின்னி மறைய, “அடுத்துப் போன இரண்டு பெரும், நம்ம பெரியகோவில் துணை பொறுப்பாளர்கள்..” என்றதுமே, “அவங்க எதுக்கு இங்க..?” என வினவ, வாய் திறந்தவள் பாதி வார்த்தையை முழுங்கிக் கொண்டாள். 

 

“கோவில் சீரமைப்புக்கு நான் நன்கொடையா கொடுத்த தொகை கொஞ்சம் அதிகம், அதுக்கு நன்றி சொல்லிட்டு கோவில் பிரசாதமும் கொடுத்துட்டுப் போறாங்க” என்றவன் மேசையின் மீதிருக்கும் பிரசாதப்பையை கை காட்டினான். 

 

அவன் முகம் பாராது, “ஹோ.. நல்ல விஷயமுங்க..” என்ற பாராட்டலோடு, அவன் இருக்கையில் அமர்ந்தவள், பிரசாதப்பையை பிரிக்கத் தொடங்கினாள். அவள் பக்கவாட்டில் கை காட்டியபடி மேசையில் சாய்ந்து நின்றிருந்தவன், “இது விசாரிக்கத் தான் வந்தியா?” என்றான் சுவாரஸ்மான பார்வையில் அவளை அளந்தபடி. 

 

இசையோ பிரசாதப்பையிலிருந்த இனிப்பை எடுத்துச் சுவைத்தபடி, “இல்லைங்க..” என்றாள் ஒரு தலையசைப்புடன். 

 

வெகு ரசனையாய் பார்த்திருந்தவன், “பின்ன என்னைத் தான் ஆசையா பார்க்க வந்தியாக்கும்?” என்றான், ஒற்றைக்கண் சிமிட்டி கிண்டலாக. 

 

என்ன தான் கேலிக்குக் கேட்ட போதும் அவளின் ஆமென்ற பதிலே அவனின் எதிர்பார்ப்பாகியிருந்தது. அவன் முகம் பாராதிருந்தவளுக்கு அது தான் உண்மை என்றாலும் ஒப்புக்கொள்ள மனமில்லை. 

 

“அப்படியெல்லாம் இல்லைங்க.. கி.. கிருஷ்மிக்கு பர்த்டே வருது, அதான் ட்ரெஸ் எடுக்க வந்தேன்” என்றவளின் கவனம் உண்பதிலே இருந்தது. 

 

அதானே எனக்காக என்று என்னிடம் வரப்போகிறாள்! என்றெண்ணியவனின் உள்ளம் எப்போதும் போலே ஏமாற்றத்தில் தவித்த போதும் அதை அவன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. 

 

ஒரு பெருமூச்சை வெளியேற்றிவன் “சரி வா..” என்றழைக்க, வேகமாக முகம் துடைத்துக் கொண்டு, பின்னே ஓடினாள். அவனின் வேக நடைக்கு அவள் ஓடி வருவதை உணர்ந்தவன் நடையின் வேகத்தை குறைக்க, அவனோடு இணைத்துக் கொண்டவள் அப்போதும் வளவளத்தபடியே வந்தாள். 

 

“கோவிலுக்கே இவ்வளவு செய்றீங்களே அதுல பாதி ஏதாவது நல்ல விஷயத்துக்குச் செலவு செய்யலாமே?”

 

“நல்ல விஷியம்னா? எந்த மாதிரி?”

 

“கஷ்டப்படுற குடும்பத்துக்கு, முதியோருக்கு பேன்ஷன், இல்லை ஹையர் ஸ்டடிஸ் போக முடியாம கஷ்டப்படுற பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் இந்த மாதிரி..”  

 

“ஹோ,. இதெல்லாம் செய்ய தான் கவெர்மென்ட் இருக்கு, நாம எதுக்கு செய்யணும்?” 

 

செய்வதற்கான சேவை மனமிருந்தபோதும் எப்போதும் வியாபாரியாகத் தான் அவன் மூளை சிந்திக்கும் மனம் கணக்கிடும். 

 

“எல்லாருக்கும் செய்ய வேண்டாம் நம்ம கடை ஸ்டாப்ஸ்க்கு மட்டுமாவது செய்யலாமே?” 

 

“ம்ம், யோசிக்கலாம்..”

 

அந்த பதிலே அவளுக்குத் திருப்தியாக இருக்க, அதற்குள் குழந்தைகளின் ஆடைகளுக்கான தளமிருக்கும் பிரிவிற்கு அழைத்து வந்திருந்தான். 

 

“போய் பாரு, பிடிச்சது எத்தனை வேணாலும் எடுத்துக்கோ..” என்க, தலையாட்டி விட்டு அவள் உடைகளைக் கவனிக்கத் தொடங்க, அவனோ மேற்பார்வையாளரிடம் பேசிவிட்டு ஊழியர்களை கவனித்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரத்திற்குப் பின்பே ஒரு பட்டாடையும், ஒரு சந்தனநிற லாங் கவுனும் எடுத்து முடித்தாள். அதிலும் அந்த கவுனிற்கு இணையாக அதே மாதிரியான புடவை ஒன்றையும் சீதாவிற்காக எடுத்துக் கொண்டாள். 

 

அவளுக்கு வேண்டியதையும் அருள் எடுத்துக் கொள்ளச் சொல்ல, அவன் வார்த்தைக்காகவே காத்திருந்தது போல் தனக்கும் எடுத்துக் கொண்டு தான் கிளம்பினாள்.  

அந்த வார வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்மியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நெருங்கிய உறவுகள், நட்புகள், அவள் பள்ளித் தோழமைகள் எனச் சிலரை அழைத்திருந்தனர். இரு குடும்பத்திற்கும் அவள் ஒருத்தியே செல்லப் பேத்தியாக இருக்க, அனைவரும் அவளை கொண்டாடினர். இதற்கு முன் இவளிடம் ராஜிக்கானதாக இருந்தது. 

 

மாலை சீக்கிரம் வர வேண்டுமென்று அருளை இசை அழைத்திருக்க, அவன் யோசனையாகப் பார்க்க, “கவலைப்படாதீங்க, பிரகாஷ் அண்ணன் வரலை.. அதனாலே நீங்க தாராளமா வரலாம்” என அழைத்திருந்தாள். 

 

பெரும்பாலும் இம்முறை ஏற்பாடுகளைச் செய்தது, இசையும், விக்கியும் தான். அதனால் கிருஷ்மியை விட, இவர்கள் ஆர்வமாக வலம் வந்தனர். முன் மாலை நேரம், வீட்டிற்கு வந்த அருளை அலைபேசியில் அழைத்த இசை சீக்கிரம் குளித்து உடை மாற்றி வருமாறு உரைத்தாள். 

 

சிறு பிள்ளை போன்ற அவள் ஆர்வம் அவனுள்ளும் உற்சாகத்தைத் தந்தது. அறைக்குள் வந்தவன் அவனுக்கான மாற்றுடையை அவள் ஏற்கனவே எடுத்து வைத்துவிட்டுச் சென்றதை கவனித்திருந்தான். அதில் இளம்பச்சை நிற பட்டுச்சட்டையும் பட்டு வேட்டியும் அவள் எடுத்து வைத்ததைக் கவனித்தவன் நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

குளித்து உடைமாற்றியவன் கிளம்பி அவர்கள் வீட்டிற்குச் செல்ல, அவன் வருகையை எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றம். வெண்ணிற பட்டு வேட்டி சட்டையில் வந்தவனை கண்டு முறைக்கவும் இயலாது, அகமும் புறமும் சுணங்கினாள். 

 

கொண்டாட்டம் முடிய, விழா சிறப்பாக நிறைவடைய, வந்திருந்த அனைவரும் சீதா, கிருஷ்மியின் ஒரே போன்ற உடையை பாராட்டிச் சென்றனர். அன்னை மகள், தந்தை மகன் என ஒரே போலே உடைகள் தங்கள் கடையின் புதிய அறிமுகம், இணைய ஆடர்களும் உண்டு என்று அவர்களோடு நின்று கடையை விளம்பரப்படுத்தி வைத்திருத்தாள் இசைவாணி. 

 

விருந்தினர் அனைவரும் கிளம்பியிருக்க, அருள் அங்கு உண்ண மாட்டான் என்பதால் அவனுக்கு ஏதாவது சமைத்துத் தரும்படி தேவகி, இசையை வீட்டிற்கு அனுப்ப, அருளும் அவளுடன் நடந்தான். ஒரே தெருவில் ஆரம்பத்திலும் இறுதியிலும் இருக்கும் வீடுகள் நடக்கும் தொலைவு தான். 

 

மெல்லிய இருள் கவ்வியிருந்த பின் மாலை நேரம், வீசும் காற்றில் குளுமை கலந்தபடி மண்வாசம் அவன் நாசி துளைக்க, அருகே நடப்பவளை ஓரக் கண்ணால் பார்த்தான். இளம்பச்சை பட்டில் மரகத சிலையாக ஜொலிக்க, அதில் பதித்த முத்துகளாக அவள் கழுத்தோரம் இருக்கும் வெண்திட்டுகள் தெரிந்தது. 

 

இதை எதையும் கவனியாது அவளோ பெரும் யோசனையிலிருந்தாள். தனது உடைக்குப் பொருத்தமாக அவள் தேர்வு செய்து வைத்ததை அவன் அணியாததில் பெரும் ஏமாற்றம்! ராஜியின் வளைகாப்பு அன்று தான் செய்ததை தனக்குத் திருப்பி செய்கிறானோ? எனத் தோன்றிய போதும் சிறு பிள்ளைத் தனம் என ஒதுக்கினாள். அதை விடவும் பெரிதாக மனதை அழுத்தியது சற்று முன் கேட்ட பத்மாவின் பேச்சு வார்த்தைகள். 

 

“ஏன் தேவகி வேண்டாம்னு சொன்ன அருளுக்கே இந்த பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைச்சியே, அது மாதிரி ஏதாவது செய்து மனோவை இருக்க வைச்சிருக்களாமே?” 

 

“விடு பத்மா, வெளி உலகம் எப்படியிருக்குன்னு அவனும் பார்த்திட்டு வரட்டும். சில விஷயங்கள் எல்லாம் அனுபவப்பட்டு கத்திக்கிடட்டும், அதான் விட்டுட்டேன்”

 

“அதுக்கில்லை, அருளை விட மனோ தான் உன் காலையே சுத்தி சுத்தி வந்து வளர்ந்த பிள்ளை! அவனில்லாம உன்னாலே இருக்கவே முடியாதே அதுக்கு தான் சொன்னேன்” 

என்றவர் விளக்க, அருகே வேலையாக இருந்த இசையின் செவிகளில் அனைத்தும் சென்று சேர்ந்திருந்தது. 

 

திருமணத்தின் போதே அறிந்த விஷயம் தான், சில நாட்களுக்கு முன் பேசும் போது ராஜியும் குறிப்பிட்டிருந்தது, தற்சமயம் அவள் குழம்பிய மனதை மேலும் குழப்பியிருந்தது. அருள் அன்னையின் கட்டாயத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்றும் தற்போது சில நாட்களாக நான் வழியச் சென்று அவனோடு நெருங்க முயல, அவன் பிடிகொடுக்காது நழுவி ஓடுவதும் புரிந்தது. 

 

அருளுக்கு தன்னை பிடிக்கவில்லை, ஏன் பிடிக்கவில்லை? பிரகாஷிற்காகவா? இல்லையே! யோசித்தவளுக்கு நினைவில் வந்தது எல்லாம் ஜெகன் குறிப்பிட்ட குறைகள் தான்! அருள் மனதிலும் அது தான் இருக்குமோ? இந்த தேகம், இதை எவ்வாறு அணைப்பான்? இந்த முகம், இதில் எவ்வாறு முத்தமிடுவான்? மனம் வலித்தது. வெகு நாட்களுக்குப் பின் தன் மேல் இவ்வாறு வண்ணம் தெளித்த இறைவனை எண்ணிலடங்காத முறையாக விரோதித்தாள். 

 

தன் வாழ்க்கை இவ்வாறு தான் எனில் நான் தான் அதை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவும் எடுத்துக் கொண்டாள். இருவரும் வீடு வந்து சேர, சரியாக மழைத் தூரத் தொடங்கியது. தனது மனக்கவலை எல்லாம் தள்ளி வைத்து அவனுக்கு என்ன சமைப்பது என்ற யோசனையில் உள் வந்தாள்.

 

வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே! பட்டாடைகளிலிருந்தனர், உடை மாற்ற நினைத்த அருள் அறைக்கதவைத் திறக்க, சட்டென அறைக்குள் செல்ல இருந்தவனின் கையைப் பற்றியபடி, “முதல்ல நான் போய் மாத்திட்டு வந்திடுறேங்க, அப்பறம் நீங்க மாத்திக்கோங்க, அந்த கேப்ல நானும் சமைச்சி எடுத்துட்டு வந்திடுவேன்” என்க, அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெடுக்கென அவளிடமிருந்து கைகளை உருவினான். 

 

தன் மீது கோபமாக இருக்கிறான், தன்னை பிடிக்காது என்பதெல்லாம் அவள் அறிந்தது தான் இருப்பினும் இவ்வாறு முகத்தில் அடிப்பது போன்ற செயலில் நொடியில் வேதனையும் கோபமும் பொங்கியது. 

 

“கவலைப்படாதிங்க, இதுவொன்னும் தொட்டா ஒட்டிகிடுற வியாதியில்லை” என வெள்ளை திட்டுகள் படிந்த புறங்கையைக் காட்டியபடி வார்த்தைகளை வீசினாள். அவள் கோபமே அவளுக்குப் பெரிதாக இருக்க, அவன் முகத்தை ஆராயாதிருந்தாள். 

 

அவன் விலகி நிற்பது அவளுள் சந்தேகத்தைக் கொடுத்திருக்க, எதார்த்தமாகத் தொட்டதற்குக் கூட விலகிக் கொள்வது வலியைக் கொடுத்திருக்க, இத்தனை நேரம் இருந்த மன உளைச்சல் வேறு, சட்டென வார்த்தைகளில் வெளிபடுத்திவிட்டாள். 

 

சட்டென இடது கையால் அவள் இடை வளைத்து அருகே இழுத்தவன் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்த, இருவரும் விழியோடு விழி பார்த்தனர். 

 

அவள் கலங்கிய விழியைக் கண்டவன், “அப்படி நினைச்சிருந்தால் அன்னைக்கு, உன் புடவை விலக்கி, பார்த்து பார்த்து தொட்டுத்தடவி மருந்து பூசியிருப்பேனா?” என்றபடி அவள் இமைகளில் மாறி மாறி இதழ் பதித்தான். 

 

மேனி சிலிர்க்க, காது மடல்கள் சூடேற, கன்னங்கள் குறுகுறுத்தது. ஐயோ அதை யோசிக்காமல் விட்டுவிட்டேனே மனம் பதற, அதை அவன் வார்த்தைகளில் சொல்லிக் காட்டியது வேற புதுவித வெட்கத்தைத் தர, நெளிந்தாள். 

 

துவண்டு சரிவதாகத் தோன்ற மேலும் தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன், “நீ ஒன்னும் என்ன வருடுற மாதிரி தொடலை, என்னவோ ஜல்லிக்கட்டு காளையை அடக்கிற மாதிரி விருட்டுன்னு என் கையை அழுத்திப் பிடிச்சே தெரியமா? எனக்கு வலிச்சது அதான் உருவினேன்” என்க, அவள் என்னவாக இருக்கும் என அவன் கரத்தை அப்போது தான் பார்த்தாள். 

 

பார்வைக்கு தெரியும் படியான லேசான வீக்கம் தெரிய, “மரக் குடோன்ல லோட் இறக்கும் போது ஒரு கட்டை கையில விழுந்துட்டுச்சு, வெளிக்காயமில்லை உள்ள என்னவோ கொஞ்சமா வலிக்குது” என்னும் போதே, அவன் கரம் பற்றி ஆராய்ந்திருந்தாள். 

 

இதைக் கூட கவனிக்காது விட்டுவிட்டேனே மனம் பதற, “ஏங்க ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை? இரத்தம் கட்டியிருக்கும் போலே, மருந்து போட்டு உருவிவிடுறேன் வாங்க” என்றவள் பற்ற, “ச்சு, சரியாகிடும் விடு..” என மறுத்தான். 

 

அதிலே மீண்டும் அவள் முகம் வாட, மீண்டும் இடை இழுத்து தன்னோடு அணைத்தான். புடவை நழுவிய வெற்று இடுப்பில் பதிந்திருந்த கரங்கள் அதிலிருக்கும் சிறு சிறு முடிகளும் குத்திக் கூச்ச மூட்ட, நெளிந்தபடி அவன் கைகளை விலக்க முயன்றவள், “அத்தை வந்திடப் போறாங்க விடுங்க..” என்றாள் கரகரப்பாக வந்த குரலில். 

 

மையல் பார்வையில் லேசாய் இதழ் மலர்ந்தவன், “அதான் மழை பொழியுதே, அது நிற்கிற வரைக்கும் வர மாட்டாங்க..” என்றபடி அவளை அறைக்குள் நகர்த்தி வந்திருந்தான். 

 

அதை உணராதவள், “அதான் உங்களுக்கு என்னை பிடிக்காதில்ல பின்ன ஏன் பிடிச்சியிருக்கீங்க?” என அவன் அணைத்திருப்பதே பெரும் குறையாகக் குற்றம் சாட்ட, சட்டென அருளும் கைகளை எடுத்துவிட, மெத்தையில் விழுந்திருந்தாள். 

 

எதையோ அறைகுறையாகப் புரிந்து கொண்டு உளருகிறாள் என்பது புரிய, “ஆமாம் நான் எப்போ உன்னை பிடிக்காதுன்னு சொன்னேன்?” என்றபடி அவனும் அவளருகே மெத்தையில் படுத்தான். 

 

“பிடிக்கும்னும் சொல்லலையே..?” 

 

“இதெல்லாமா சொல்லுவாங்க?”

 

“ஆமாம் சொல்லணும். அதுவும் பொண்ணுங்ககிட்ட கண்டிப்பா சொல்லணும், அதைத் தான் நாங்க எதிர்பார்ப்போம்..” என்றவள் பாடம் எடுக்க, முகம் சுருங்கியவன், “ஹோ..அப்போ தான் நீங்க நம்புவீங்க?” என்றான் புருவம் தூக்கி. 

 

கோபமோ என அவன் குரலையே ஆராய்ந்திருந்தவள், “இல்லை, சொன்னா தானே எனக்கும் தெரியும்?” என்றாள் தன்மையாக. 

 

“உனக்கு உடம்புக்கு முடியாத அப்போ நான் தவித்த போதும், உனக்காக கார்ல இருந்து கட்டிக்கிற கல்யாணப்புடவை வரை பார்த்துப் பார்த்து செய்ததுலையே என் அன்பு புரியலை? எனக்கு உன்னை பிடிச்சதாலே தான் இப்போ நீ என் மனைவியா இருக்க..” 

 

அவன் உரையாடும் போதே மறுப்பாய் தலையசைத்தவள், “இல்லை, உங்க அம்மாவுக்கு என்னை பிடிச்சதால தான் நான் உங்க மனைவியா இருக்கேன். நீங்க தான் முதல்லையே என்னோட கல்யாணம் வேண்டாம்னு சொன்ன ஆளாச்சே?” என்றாள் இதழ் சிலுப்பியபடி. 

 

“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்கோ இசை, நான் முதல்ல உன்னை வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் நீ பிரகாஷோட தங்கச்சிக்கிறதுக்காக மட்டுமே, அப்போ நான் உன்னைப் பார்த்ததில்லை. அதுக்கு அப்புறம் கோவில்ல உன்னை முதல் முறை பார்த்தேன். ஹாஸ்பிட்டல்ல தான் ராஜியோட நாத்தனார்னு தெரியும். உன்னைப் பார்த்த பிறகு தான் நான் உன்னை மறுத்தது தப்போன்னு தோன்ற ஆரம்பிச்சது. அந்த நேரத்துல அம்மா திரும்பவும் கல்யாணத்துக்கு கேட்டாங்க இது தான் வாய்ப்புன்னு நானும் ஓகே சொல்லிட்டேன். 

 

அம்மாவுக்காக சம்மதம் சொன்னதா எல்லாரும் நினைச்சிகிட்டாங்க போல இருக்கு, ஆனால் நான் எனக்கு பிடிச்சதால தான் சம்மதம் சொன்னேன். எனக்குப் பிடிவாதம் அதிகம் தான், யாருக்காவும் நான் வளைய மாட்டேன். என் முடிவுகளை நான் தான் எடுப்பேன். எல்லாத்தையும் சொன்ன எங்க வீட்டுல இதைச் சொல்லலையா? எந்த விஷயத்தையும் ஒரு பக்கமா கேட்டுட்டு ஒரு பக்கமாவே மனம் சாயக்கூடாது, முழுசா அறிஞ்சி தெரிஞ்சிக்கணும். இதை நீ எங்கிட்ட முதல் நாளே கேட்டு இருக்கலாம். இப்போ நீ இங்க என் மனைவியா இருக்கிறது முழுக்க முழுக்க என்னோட விருப்பம் தான். புரியுதா?” 

இசைக்கு புரிந்தது. பத்மா, தேவகியும் இவன் பிடிவாதக்காரன் என்றும், யார் சொல்லும் கேளாதவன், தன் முடிவுகளை அவனே எடுப்பான் என்னும் படியாக பேசிக்கொண்டதும் நினைவிலிருந்தது. ஆனாலும் அவனுரைத்த காரணங்களை அவள் மனது முழுதாக ஏற்க மறுக்க, “ம்ம், பிடித்து தான் இவ்வளவு நாள் தள்ளி வைச்சிங்களோ?” என மெல்லியதாய் வாய்க்குள்ளே முனங்க, துல்லியமாக அருளின் செவிகளுக்கு அவ்வார்த்தை சென்று சேர்ந்தது. 

 

சட்டென அவளைத் தன்னை நோக்கி இழுக்க, தன் நெஞ்சில் வந்து மோதியவளை வாகாக அணைத்துக் கொண்டவன், “நானா தள்ளி வைச்சேன்? நீ தான் தள்ளி நின்னுக்கிட்டே.. முதல் நாளே முகம் திருப்பி படுத்துக்கிட்டே, எப்போ பாரு அண்ணன் அண்ணனு உங்க அண்ணனுக்காவே என்னோட சண்டை போட்டே, இதுல தப்பு மட்டும் என்னை சொல்லுற, ம்ம்? இன்னும் கொஞ்சம் என் பார்வையோ, என்னையோ உத்துக் கவனிச்சிருந்தால் இது உனக்கு புரிஞ்சிருக்கும்” என்றபடி அவள் கன்னத்தைக் கிள்ளினான். 

 

வலியில் முகம் சுருக்கியவள் சட்டென அவன் கைகளைத் தட்டி விட்டு, மார்பில் முகம் புதைத்து கொண்டாள். வெளியில் வீசும் குளிர்காற்றும் மழைச் சாரலும் மங்கையின் நெருக்கமும் அவனுள் நெருப்பை மூட்டியது. தணிக்கும் ஆவல் தபமாக மாறியது. 

 

அவள் முகம் நிமிர்ந்து தன் முகம் காணச் செய்தவன், “என் பிரியத்தை இப்போ காட்டுனா உனக்கு சம்மதமா?” என வினவ, அதங்கனின் பார்வையில் அரிவையும் மயங்கினாள். கன்னங்களில் வெம்மை படர, உடலில் மெல்லிய பரவச அலைகள் தோன்ற, அவளிமை இரண்டும் சம்மதித்து மூட, மறுநொடி அவள் தாடைக்குழியில் முதல் முத்தம் வைத்தான். 

 

அது தான் துவக்கமே தவிர, எண்ணிக்கையெல்லாம் கணக்கற்றுப் போக, முகம் முழுவதும் முத்தங்களிட்ட வேகமும், இதழில் இளைப்பாறிய நொடிகளும் அவன் அளவில்லா ஆசைகளையும் பிரியத்தையும் அவளுக்கு உணர்த்தியது. அதுவரை நடுங்கி இருந்தவளின் கரங்களும் மெல்ல அவன் முதுகை வளைத்து தன்னோடு அணைத்துக் கொள்ள, அவள் இதழோடு தன்னிதழ் பதித்திருந்தவன் மூச்சிற்கும் இடைவெளி விடாது அந்த தித்திப்பில் தொலைந்தான், அவளிடம் புது மயக்கம் கொண்டான். 

 

வெகு நீண்ட நிமிடங்களுக்குப் பிறகே பிரிந்தவனின் முகம், அவள் கழுத்து வளைவில் புதைய, அப்போதும் அவன் உதடுகள் அவள் தொண்டைக்குழில் பதித்தது. அவன் சிகை கோதி தன்னோடு புதைத்துக் கொண்டவளும் தன்னை தொலைத்தாள். அவள் அணைப்பும் அதன் அழுத்தமும் அவனை திண்டாடச் செய்தது. இருவரின் உணர்வுகளும் அது வரை அறிந்திராத எல்லைகளில் ஒன்றிணைந்து இருந்தது. 

 

விரல்கள் இருபதிற்கும் அளந்தறிய இடங்களில்லை என்றாகிப் போனது, அவன் தான்,  பட்டுப் ஸ்பரிசமும் மெல்லிய தீண்டலுமாக அவளை இசைத்தான், அவள் தந்த சுகமும் மயக்கமும் புதிதானது. அவனிடம் அப்படியொரு மென்மையை எதிர்பாராதவள் மொத்தமாக அவன் மேல் பித்தானாள். 

 

ஈருயிரும் மெய்யும் ஒன்றாகிப் போக, கால நேரம் அங்கே கணக்கற்றுப் போனது. இனிமையை எத்தனைமுறை அள்ளி அணைத்த போதும் சலிக்கவில்லை இருவருக்கும். தீரா மோகத்தில், தணியா மையலில் அமிழ்ந்தவன் அவளையும் தெளிய விடாது உள் ஈர்த்துக் கொண்டான். அவன் தந்த ஆண்மையின் வாசம் அவள் சுவாசமானது, உடல் ஓட்டிய வியர்வையின் ஈரம் அவள் தான் தன் அந்தாதி என நெஞ்சிலும் ஒட்டியது. 

 

தனக்கே தனக்கென உரிமையான காதலை அடைந்ததில் உலகையே வென்ற இன்பமும் ஈடில்லாத திருப்தியும் இருவருக்குள்ளும். விடியும் நேரம் விளக்குகள் இல்லாத இருளிலும் சற்றே உடல் இளைப்பாறச் சொல்லியது இறுதியாய் இதழ் ஈரம் படர, நெற்றில் அவனிட்ட முத்தம்! பதிலாக அவன் நெஞ்சில் இதழ் பதித்தவள் முகமும் புதைத்துக் கொண்டு சுகமாய் கண்ணயர, தோள்களில் தட்டிக் கொடுத்து நெஞ்சோடு அவளை அணைத்தவன் நெஞ்சுக்குள்ளும் அவளை அடைத்து கொண்டான்!  

Advertisement