Advertisement

அத்தியாயம் 13 

அன்றைய நாளுக்குப் பிறகு அவளவான பேச்சு வார்த்தைகள் கூட இருவருக்குமிடையில் இல்லை. அவனோடு தான் பேசுவதில்லையே தவிர, இரு வீட்டிலும் இயல்பாக அனைவரோடும் பழகினாள் இசை. ராஜி வேறு பிறந்தகத்தில் இருக்க, புதிதாக பிரகாஷ் அடிக்கடி அவளைப் பார்க்க வந்து சென்று கொண்டிருந்தான். அவன் வரும் நேரங்களில் சில சமயம் அவனோடு சென்று அவள் அன்னையும் பார்த்து வருவாள். 

 

அருள் இது எதையும் கண்டு கொள்வதில்லை. தொடக்கூடாது என்றதற்கு இணங்கி அவள் நிழலைக் கூட உரசாது விலகிடுவான். இதை அனைத்தையும் பார்த்திருந்த தேவகி தான் மறுகிக்கொண்டிருந்தார். தன் பிடிவாதத்தால் அருளைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்தது தவறோ என அடிக்கடித் தோன்ற ஆரம்பித்திருந்தது. 

 

இரவு உணவிற்குப் பின், இரு குடும்பமும் அருள் வீட்டின் வரவேற்பறையில் இருக்க, சொல்லியபடி மனோ பெங்களூர் கிளம்பினான். அன்றைய நாளுக்குப் பிறகு அது பற்றிய பேச்சு வார்த்தைகளே வீட்டிலில்லை. அவனும் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை, இன்று கிளம்புகிறேன் என அறிவித்தான். அவ்வளவு தான். 

 

தேவகி மட்டும் இன்னும் கோபத்தில் முகத்தைத் தூக்கி வைத்திருக்க, பாரி மகனின் தலை கோதி விடை கொடுத்தார். அருளிடம் விடை பெற, வார்த்தை வராது அவன் சட்டைப் பையில் செலவிற்கான பணத்தை வைத்துவிட்டு மெல்லியதாய்த் தோளில் தட்டி விடை கொடுத்தான். எவ்வளவு முயன்றும் மனோ பேசிய எதையும் மறக்க முடியவில்லை, மனதில் ஒரு ஓரம் அவன் வைத்த குற்றச்சாட்டு அப்படியே இருந்தது. 

 

“அப்போ வழியனுப்பப் போற எனக்கு அண்ணே..?” என விக்கி கேட்க, “விட்டுட்டு வரும் போது கவனமா வரணும்” என்றபடி அவன் கேட்டதையும் கொடுத்தான் அருள். 

 

வீட்டினர் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மனோ கிளம்ப, பேருந்து நிறுத்தம் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வர விக்கியும் உடன் சென்றான். 

 

மனோ சென்ற பின் தேவகிக்கு வீடே வெறுமையாகத் தோன்றியது, அருளும் அதிகமாக வீட்டில் இருப்பதில்லை. இசையும் பெரும்பாலாக பகல் நேரங்களில் ராஜியும் தான் வீட்டிலிருந்தனர். அருளையும் இசையும் காண்கையில் எல்லாம் சொல்ல இயலாத குற்றவுணர்வு நெஞ்செல்லாம் அரித்தது. 

 

என்ன தான் நுண்ணிப்பாகக் கவனித்த போதும் இருவரின் உறவு நிலையை அறிய முடியவில்லை. மகனின் தேவைகள் அனைத்திற்கும் மருமகளை முன்னிருத்தி அவர் விலகிக் கொண்டார். இருந்தும் அவர்களிடையே ஒட்டுதலுமில்லாது விலகலுமில்லாது அவரவர் விலக்குவிசை எல்லையில் சரியாக நின்று கொண்டனர். 

 

அன்றே அருளிடம் வேலை கேட்க நினைத்திருந்த விக்கி, மனோ செய்த கலவரத்தில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டான். இப்போதும் எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை எனச் சொல்ல இயலாது. ஏனெனில் அவன் எங்கும் வேலை தேடவில்லை. 

 

அருளிடம் தான் வேலை வேண்டும் என உறுதியாக இருந்தவன், அவன் அலுவலக அறையில் சென்று சந்தித்து கேட்க, அருள் வேலையில்லை என நேரடியாகவே மறுத்து விட்டான். ராஜி, மனோவால் பெரிதும் காயப்பட்டிருந்த அருள், இனி சகோதரர்களின் எதிர்காலத்தில், அவர்கள் வாழ்வில் தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான். அருள் வேண்டாமென்றது விக்கிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது, அவனறிந்த வரை அருள் எப்போதும் அவர்கள் நலனின் அக்கறை உள்ளவன். இதைச் சிறிதும் அவன் எதிர்பார்க்கவில்லை. 

 

தேவகி, தன் மனக்கவலையை ராஜியிடம் மட்டும் பகிர்ந்திருக்க, சமீபமாக அவளும் தம்பதிகளைக் கவனிக்கத் தொடங்கினாள். முடித்தவரை ராஜி மருத்துவப் பரிசோதனைக்கு செல்கையில் பிரகாஷ் வர முயற்சித்தாலும் பெரும்பாலும் அவன் வேலை காரணமாக வர இயலாது. இசை தான் எப்போதும் அவளுடன் செல்ல, தற்சமயம் விக்கி அவர்களுக்கு ஓட்டுநராகி இருந்தான். 

 

பரிசோதனைக்குப் பின் சற்று தளர்வாக அமர்ந்திருந்த ராஜி, “பக்கத்துல தானே கடையிருக்கு, போய் அண்ணனைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போவோமா?” என மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள். 

 

கசப்புடன் முறுவலித்த இசை, “வேண்டாம் அண்ணி, நைட் எப்படியும் வீட்டுக்குத் தானே வருவாங்க. உங்களுக்குப் பார்க்கணும்னா விக்கியைக் கூட்டிட்டிப் போயிட்டு வாங்க” என்றாள். கடைக்குச் சென்றால் மட்டும் கண்டுகொள்ளவா போகிறான் என்ற ஆதங்கம். 

 

நுண் பார்வை பார்த்திருந்த ராஜி, “ஏன் இப்படி அண்ணனைத் தவிர்கிற?” என நேரடியாகக் கேட்டாள். 

“அப்படியெல்லாம் எதுவுமில்லை, உங்களுக்கு ஏன் அப்படித் தெரியுது?”

 

“முதல்ல எங்க வீட்டுல ஜெகனுக்குன்னு கேட்டுட்டு பின்ன அருள் அண்ணனுக்குப் பேசினது பிடிக்கலையா?”

 

“ம்ம், அது பிடிக்கலை தான். நீங்க ஏன் அண்ணி எனக்கு வெளியே மாப்பிள்ளைப் பார்க்காம உங்க வீட்டுலையே பார்த்தீங்க. அதுவும் இவருக்கும் பிரக்காஷூக்கும் ஆகாதுன்னு தெரிஞ்சும்”

 

“நான் ஜெகனுக்குத் தான் கேட்கச் சொன்னேன், அவன் பிடிக்கலைன்னு சொல்லி சித்தி அருள் அண்ணனுக்குக் கேட்டு அவனையும் சம்மதிக்க வைப்பாங்கன்னு எல்லாம் எதிர்பார்க்கலை வாணி”

 

“இப்போ பாருங்க, நான் நடுவுல மாட்டிட்டு முழிக்கிறேன். யார் பக்கம் பேசுறதுன்னே தெரியலை, எல்லாம் உங்களால தான்” என நேரடியாகவே குற்றம் சாட்டினாள். 

 

“நான் இப்படி செய்ததுக்கு இரண்டு விஷயம் தான் காரணம். என் அண்ணனுங்களைச் சின்ன வயசுல இருந்து எனக்குத் தெரியும் இரண்டு பேரும் இரண்டு விதம், ஆனாலும் நல்லவுங்க. இது மாதிரி ஒரு மாப்பிள்ளையும், எங்க குடும்பம் மாதிரி ஒரு குடும்பமும் உனக்கு அமையிறது ரொம்பக் கஷ்டம் வாணி” 

 

‘இவள் கூடத் தன் குறையைக் காட்டித் தான் இந்த முடிவு எடுத்தாளா? அப்படியா, என்னை என் போலே ஏற்றுக்கொள்ளும் ஒருவன் வராது போய்விடுவான்?’ உள்ளே வெம்பினாள். 

 

“அது மட்டுமில்லை, இதுல என் சுயநலமும் இருக்கு. அதுவே வெளியிலன்னா உங்களுக்கு  நிறையச செய்ய வேண்டியிருக்கும். பொண்ணு இப்படி இருக்குன்னு சொல்லி இன்னும் அதிகமா டிமான்ட் பண்ணி நகை, பணம், சீருன்னு கேட்பாங்க. அதுவே எங்க வீடுங்கிற பச்சத்துல உனக்குச் சீர் செய்யத் தேவையில்லை. அதிக செலவுமில்லாம கல்யாணத்தை முடிச்சிடத் தான் நினைச்சேன்” 

 

ராஜி பேசிக்கொண்டிருக்கும் போதே இசைக்கு இதயம் சுருக்கென்று வலித்தது. தன் குறையைக் காட்டிலும் தன்னை பாரமாக நினைத்து விட்டனரே என்றே தோன்றியது. 

 

“வீட்டுல அவர் ஒருத்தர் சம்பாத்தியம் தான், அவர் இன்னும் வீட்டுக்கு லோன் கட்டிட்டு தான் இருக்காரு, இதுல எங்க கல்யாண டைம்ல வேற பர்சனல் லோன் போட்டிருக்காரு. அண்ட் இந்தக் குழந்தை கூட இப்போவே வேண்டாம்னு தான் சொன்னார், என்னோட பிடிவாதம் தான் இது. மாசச் சம்பளத்துல இதைச் சமாளிக்கிறதே பெருசா இருக்கு, இதுல இன்னும் கடன் இழுத்து விட்டுடுவாரோன்னு பயம் எனக்கு.. அதான் இப்படி யோசிச்சேன். ஆனாலும் உனக்கு அநியாயம் செய்யலை, நல்லது தான் செய்திருக்கேன்” 

இசை கண்களை இறுக மூடியிருந்தாள். ஹாஸ்டலில் இருந்த வரை மாத மாதம் செலவுக்குச் சரியாக பணம் வருமே தவிர, வீட்டின் பொருளாதார நிலைமையை அவள் அறிந்ததில்லை. 

 

“இப்போ உனக்கு நல்ல குடும்பம் அமைச்சும், சரியான வாழ்க்கை அமையலையோன்னு தோனுது. தப்புப் பண்ணிட்டேனோன்னு தவிப்பா இருக்கு. குற்றவுணர்வு அழுத்துது” என்ற ராஜி பெரிதாய் மூச்சு வாங்க, அவள் கரங்களை ஆறுதலாய்ப் பற்றிய இசை, “இல்லை அண்ணி, உங்கத் தேர்வு சரி தான்” என்றாள் வார்த்தைக்கு மட்டும். இந்நிலையில் ராஜி பெரியதும் மன அழுத்தத்தில் உழல்வது நன்மைக்கு அல்ல என்பதால். 

 

“இது பிரகாஷ்க்குத் தெரியுமா?” என்க, இல்லை என்பது போல் ராஜியின் தலை இடம் வலமாக அசைந்தது. 

 

“நீங்க பிரகாஷூக்கு கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சு தலைகுனிவை கொடுத்துட்டீங்க, நம்ம தகுதிக்கே எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கலாம்” என்க, ராஜிக்கு அப்போது தான் உண்மை உரைத்தது. 

 

“மனைவியா நம்மளோட ஒவ்வொரு சொல்லுலையும் செயல்லையும் கணவனுக்கும் பங்கிருக்கு, இது எந்த மாதிரி அவரைக் காட்டும்னு கொஞ்சம் யோசிச்சு செய்திருக்கணும் அண்ணி” என இசை உரைக்கையில் தான், தன் தவறில் பாதி பங்கு கணவனைச் சென்று சேரும் என்பதும் உரைத்தது ராஜிக்கு. 

 

“சரி விடுங்க, இனி இது பத்தின பேச்சு வேண்டாம், எனக்கு எதுவும் வேண்டாம். பிரகாஷூம் நீங்களும் நல்லாயிருந்தால் அந்த சந்தோஷமே எனக்குப் போதும், வாங்க கிளம்புவோம்” என்ற இசை, அவளையும் மெல்ல அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். 

 

ராஜியின் மனம் பற்றி எவ்வாறோ அருள் அறிந்திருக்கிறான். ‘இவர்கள் மீது தவறிக்க, என் அண்ணன் மீது பொய் பழி கூறுகிறீர்கள் என அருளைப் பழித்தது தவறோ? என இசையினுள் தோன்றத் தொடங்க, ‘இனி அவனிடம் மன்னிப்புக் கேட்க இயலுமா? மன்னிப்பானா? என நினைத்து வெம்பினாள். 

 

மன்னிப்பு வேண்ட முயற்சித்தாலும் வார்த்தை வராது தடுமாறி நிற்க, அருளோ பிடி கொடுக்காது நழுவி ஓடிக் கொண்டிருந்தான். அவளும் விடாது அவனின் தேவைகளை பார்த்துப் பார்த்துச் செய்து விட்டு பேச்சிலும் இழுத்துப் பார்த்தாள். அதை அறிந்த போதும் தொழில் முழுவதும் அவனே கவனிப்பதால் நேரமில்லாது தவித்தான். 

 

நள்ளிரவிலும் தனக்காகக் காத்திருந்த இசை புதிதாகத் தெரிந்தாள். இசையின் இந்த மாற்றம் புரிந்தது ஆனால் எவ்வாறு என்று தான் தெரியவில்லை. அதன் நிலைத் தன்மையை அறிய அவள் பொறுமையை மேலும் சோதித்துக் கொண்டிருந்தான். 

 

அருள் வேலை தர மாட்டேன் என நேரடியாக மறுத்த போதும் விடாது இசையிடம் சிபாரிசு வேண்டினான் விக்கி. ஓயாது ஓடும் கணவனிடமிருந்து சிறிதேனும் தனக்கான நேரம் கிடைக்கும் என நினைத்து, விக்கிக்காகப் பேசும் முடிவிலிருந்தாள் இசைவாணி. 

 

அன்றொரு மாலை நேரம், மழை பொழிந்த முடிந்ததும் வீசியது குளிர் காற்றொன்று. மழை நாளில் ஹாஸ்டலில் தோழிகளோடு போடும் ஆட்டம் நினைவில் வர, பால்கனியில் நின்று அந்த குளுமையை ரசித்துக் கொண்டிருந்தாள் இசைவாணி. 

 

சட்டென கதவு திறக்கும் ஓசையில் திரும்ப, ஈர உடையோடு உள்ளே வந்த அருள் குளியலறை நோக்கிச் சென்றான். குளித்து முடித்து இடையில் கட்டிய துண்டோடு வெளியே வர, மாற்றுடையோடு நின்றிருந்தாள் இசைவாணி. அப்போது தான் அவளது உடையைக் கவனித்தான். ராஜி வளைகாப்பிற்கு கட்டிக்கொள்ளுமாறு கொடுத்த புடவையை இன்று கட்டியிருந்தாள். 

 

புடவை அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. அவள் இதழில் மின்னிய குறுநகை, தாடைக்குழியில் அவன் கவனத்தைப் பதிப்பித்துக் கொள்ளும்படி ஈர்த்தது. நம்ப இயலாது ஒரு புதுப் பார்வை பார்த்தவன், உடையை வாங்கிக் கொண்டு மாற்றத் தொடங்கினான். 

 

அவளோ வழக்கம் போல் கண்களை மூடாது, நழுவி ஓடாது நிலையாய், சுவரில் சாய்ந்தபடி கைக்கட்டி நிற்க, அருளுக்குக் காண்பது பகல் கனவா என்னும் நிலை! மெல்லிய குரலில், “ஜிம்முக்கு எல்லாம் போவீங்களா?” என்றாள் கட்டுடலைக் கண்ணெடுக்காது பார்த்தபடி. 

 

“ம்ம், உழைச்சே உரமேறின உடம்பு..” என்றவன் அவளை ஆராய்ந்தபடி தலை துவட்டிக் கொண்டிருக்க, அவளும் மௌனமாகச் சில நிமிடங்கள் பார்வையால் அவனை அளந்து கொண்டிருந்தாள். 

 

பின் மெல்லிய குரலில், “சா..சாரிங்க..” என்றாள் சிறு தயக்கத்துடன். எதுக்கு என்பது போல் புருவம் மட்டும் உயர்த்திக் கேட்க, “என் அண்ணன் மேல பொய் பழி சொல்லுறீங்கன்னு உங்களைத் தப்பு சொன்னதுக்கு” என்றாள் சுணங்கிய முகத்தோடு. 

 

“அப்போ நான் சொன்ன பழி இப்போ உண்மையாகிட்டோ? எப்படி திடீர்னு புருஷன் மேல நம்பிக்கை வந்தது..?” என்றவன் வெகு சாதரணமாகக் கேட்க, அவளுக்குத் தான் சுருக்கென்று குத்தியது வாதை. 

 

“அது.. ராஜி அண்ணி தான் அப்படி நினைச்சிருக்காங்க. அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ? அவங்க செய்த தப்புல பாதிப் பங்கு எங்க அண்ணனையும் சேரும், இல்லைன்னு மறுக்க முடியாது..” என்றவள் அவன் எவ்வாறு நினைத்துக் கொள்வானோ என்ற யோசனையிலே வார்த்தைகளை கோர்த்திருந்தாள். 

 

தவறு என்பது தன்னைத் திருமணம் செய்ததை தான் குறிப்பிடுகிறாளோ என்ற சந்தேகம். அதை விடவும் இப்போதும் அவள் அண்ணனுக்காக நியாயம் பேசுகிறாளே என்ற ஆற்றாமை கோபமாகப் பொங்க, அடக்க முயன்றான். 

 

“ஹோ..! அப்படியா..? அதாவது கணவனும் மனைவியும் சரி பாதின்னு சொல்லுற அப்படித் தானே?” என்றவன் கேட்க, அவளுக்கு மேலும் மேலும் அவன் வார்த்தைகள் குத்தியது. நீ அவ்வாறு நடந்து கொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அவளுக்குப் புரிந்தது. 

 

ஒரு முறை கூட அவள் தனக்கான பேசியதில்லை. எப்போதும் அண்ணன் பக்கம் தான், சபையில் கூட அண்ணனுக்காகத் தன்னை விட்டுக்கொடுத்தது எல்லாமே அவனுக்குச் சொல்ல முடியாத ஏமாற்றம், பெரும் வலி. 

 

ஒரு போதும் அவன் வலியை வெளிக்காட்டியதில்லை. இருந்தும் இன்று சிறு வார்த்தையில் அது வெளிப்பட்டு விட, இசைக்குத் தான் ஆதங்கம் நெஞ்சைக் கவ்வியது. தொண்டை அடைக்க, தலை குனிந்திருந்தவள் மெல்லிய குரலில் மீண்டும் மன்னிப்புக் கேட்க முயல, அவள் வாயில் விரல் வைத்துத் தடுத்தான். 

 

சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் விழியிரண்டும் கலங்கிய குளமாக மின்ன, “தேவையில்லை, ஏன் வலியை உனக்குத் திருப்பிக் கொடுக்கணும்னு நினைக்கலை. என் வேதனை உனக்குப் புரிஞ்சா போதும்” என்க, சட்டென அவன் நெஞ்சில் விழுந்து அணைத்திருந்தாள். 

 

அழுது புரளவில்லை. ஆனாலும் அவள் கேளாத மன்னிப்பை அவன் அன்பான அணைப்பும் ஆறுதலான தலை வருடலும் தந்திருந்தது. மெல்ல மூச்சை உள்ளிழுத்தபடி அவனிடமிருந்து விலகியவள், “ஆமாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? ராஜி அண்ணி கேட்டுக்கிட்டாங்களா? இல்லை முதல்லையே வரதட்சணை எதுவும் வாங்க மாட்டேன்னு சொல்லிக் கல்யாணம் பண்ணீங்களே அதான்.. அதனால தானே இப்போ இவ்வளவு பிரச்சனை, எல்லாம் முறையா நடந்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காதே..?” என்றாள். 

“முறையான்னா எதைச் சொல்லுற?”

 

“அது எங்க வீட்டுல எனக்குச் செய்ய வேண்டியதைச் செய்திருந்தால், நீங்களும் வேண்டாம்னு சொல்லாம, நம்ம கல்யாணம் நடந்திருந்தால்..”

 

“அது நடக்காது, ஒரு பொண்ணோட வரதட்சணையும் சேர்த்துக் கொடுக்கிறது தான் முறைன்னு சொல்லி வைச்சது எவனோ முதுகெலும்பு இல்லாதவன் பண்ண வேலையா இருக்கும். நீ இல்லை, நான் யாரைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் இப்படி தான் செய்திருப்பேன். படிக்கிற வயசுல என் குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பிச்சவன், என்னை நம்பி எனக்காக வார பொண்ணுக்கு உழைக்க மாட்டேனா? அவள் கொண்டு வரச் சீரை வைச்சி தான் நான் வாழணுமா?” 

 

“இல்லை எனக்கே என் குடும்பப் பொருளாதார நிலைமை இப்போ வரைக்கும் தெரியலை..”

 

“எனக்கு நல்லாத் தெரியும், தெரிஞ்சி தான் ராஜிக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்னு சொன்னேன். அவ கேட்கலை. அத்தோட விட்டாளா? இல்லையே! திரும்ப உனக்கு ஜெகனை வேற கேட்டுத் தப்பு மேல தப்பு செய்துட்டா?” 

 

அது வரையிலும் இளகிய உணர்வில் அவன் கருத்தோடு ஒற்றி உரையாடிக் கொண்டிருந்தவளின் முகம் மெல்ல மாறியது. 

 

“இதுல அண்ணியோட தப்பில்லையே..?” மெல்லிய குரலில் வினவ, மறுப்பான தலையசைப்போடு “தப்பு தான்..” என்றான் அழுத்தமாக. 

 

திருமணத்திற்கு முதல் நாள் இரவு, மூடிய அறைக்குள் அருள் உடை மாற்றிக்கொண்டிருக்க வெளியே கேட்டது ஜெகனின் குரல். 

 

“என்ன ராஜி இது? உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? நீ இழுத்த வினை எங்க வந்து நிக்குது பாரு? ஏன் இப்படிச் செய்த?” என்றவன் எரிச்சலோடு வினவ, “எல்லாம் பிரகாஷை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் இப்படி பண்ணேன் ஜெகன். நம்ம வீடுன்னா அவளுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதுவும் போக, நானும் உரிமையா எப்போவும் போல வந்து போய் இருக்கலாம் இல்லையா?” என அவள் பக்கம் பலனை மட்டும் பட்டியலிட்டது ராஜியின் குரல். 

 

“அதுக்குப் பலியிட என் வாழ்க்கை தான் கிடைச்சதா? சரியான சுயநலவாதி நீ. உன் வீட்டுப் பாரத்தை என் தலையில தள்ளிடலாம்னு நினைச்சியோ? எனக்கு என்ன குறைன்னு அந்த பொண்ணைப் பார்த்த? அந்த பொண்ணோட எப்படி? அவள் கையாள ஒரு கிளாஸ் காஃபி கூட என்னால வாங்கிக் குடிக்க முடியாது, ச்சே..” என்றான் மேலும் எரிச்சலில். 

 

“அப்படி சொல்லாத ஜெகன், அவள் ரொம்ப நல்ல பொண்ணு..” என்றவள் மென்குரலில் இறங்கி வேண்ட, “இருக்கட்டுமே! அவளுக்கு எல்லாம் அருள் மாதிரி படிக்காத பையன் தான் சரி, நல்லவேளை நான் தப்பிச்சேன். என்ன, வீட்டுல தான் எல்லாரும் ஒருவழி படுத்தி எடுத்துட்டாங்க போ” எனக் கடுப்புடன் மொழிந்தவன் கடந்து சென்றிருக்க, அறைக்குள் அருள் அனைத்தையும் கேட்டிருந்தான். 

 

அதை இது வரையிலும் யாரிடமும் வெளிப்படுத்தாதவன், ராஜியின் எதிர்பார்ப்பை அவள் மொத்த குடும்பத்தின் எதிர்பார்ப்பாக நினைத்துக் கொண்டான் அருள். அதனாலே சண்டையிடும் போது இசையைத் தன் உரிமை எனக் காட்ட முயன்று பிரகாஷை குறைவாகக் கூறிவிட்டான். 

 

சிந்தனை இங்கில்லாது சிலை போல் நிற்பவனைக் கவனிக்காது, “எப்படியோ அவங்களால தான் நம்ம கல்யாணாம் நடந்தது விடுங்க” என இசை கையசைக்க, அதில் கலைந்தான். 

 

அவள் குரலிலும் முகத்திலும் சந்தோஷத் துள்ளலோ கவலையோ வெளிப்படவில்லை ஆகையால் அவளுக்கு இதில் விருப்பமில்லையோ என்றே நினைத்தவன் அதை வினவ முயன்றான். 

 

அவளோ, “உஷ்..! இனிமே இது பத்தி பேச வேண்டாம், சரியா?” என விரல் நீட்டி, முகம் சிணுங்க கட்டளையாகக் கேட்க, அவனுக்குச் சிரிப்பில் இதழ்கள் துடித்தன. 

 

இதை தானே அன்று நானும் சொல்லினேன்? ‘என் மனைவியாக மட்டுமிரு, உன் அண்ணனைப் பற்றிய விவாதங்கள் வேண்டாமென..’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டான். 

 

வெளியே தேவகியின் குரல் கேட்டதில் கலைந்தவள், சென்ற நொடியே கையில் காபிக் கோப்பையுடன் திரும்பி வந்தாள். அவனிடம் நீட்ட, மறுக்காது வாங்கியவன் பருகத் தொடங்க, “ஏங்க, நம்ம விக்கி இருக்கான்ல, அவனுக்கு நம்ம கடையில ஒரு வேலை ஏற்பாடு செய்யுங்களேன் ப்ளீஸ்” என்றாள், குரலில் ஒரு குழைவு. 

 

மனம் நிறைந்த உணர்விலிருந்தவனுக்கு, நம் குடும்பம் என்றவள் வளையிட்டது மேலும் இனித்தது. இருந்தும் அவள் வேண்டுதலை மறுக்கவே செய்தான். ‘ஒன்று அவள் சகோதரன் இல்லை தன் சகோதர்கள் பற்றிய நினைப்பு மட்டும் தானா? தன்னை நிக்கவே மாட்டளா?’ நொந்து கொண்டான். 

 

“வேண்டாம் இசை, மானோவோ விக்கியோ யாரா இருந்தாலும் அவங்க வாழ்க்கையை அவங்களே அமைச்சிக்கட்டும், யாரையும் நான் தடுக்கலை. யாரும் எனக்குக் கீழ வேலைப் பார்க்க வேண்டாம், யாரையும் வாழ வைச்ச புண்ணியமும் எனக்கு வேண்டாம்” 

 

 

இன்னமும் அவர்கள் பேசிய வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டும், நெஞ்சை அரித்துக் கொண்டும் தான் இருந்தது. ராஜி, பிரகாஷ், மனோ என யார் பேசியதையும் இன்னமும் அருள் மறக்கவில்லை. மிகுந்த தன்மானம் பார்ப்பவன், எதையும் அவ்வளவு எளிதில் மறந்து மன்னிக்க மாட்டான். இதில் இசை மட்டும் விதிவிலக்காகிப் போனாள்.

 

“என்ன நீங்க? விக்கிக்கு நாமா செய்யாம வேற யாரு செய்வா?” 

 

“என்கிட்ட வந்தால், அடிமட்டத்துல இருந்து தொழிலைக் கத்துக்கணும்னு கீழ்த்தட்டு வேலையைத் தான் தருவேன். வேலைன்னு வந்துட்டா எனக்கு பெர்பெக்ட்டா இருக்கணும் விளையாட்டுத்தனமெல்லாம் இருக்கக் கூடாது. எங்கிட்ட கண்டிப்பு அதிகம், விக்கிக்கு, அவன் படிப்புக்கு இதெல்லாம் சரிப்படாது”

 

“அதெல்லாம் சரிப்படும், சொன்னாப் புரிஞ்சிப்பான்” 

 

“நான் வேணா வெளியே வேலைக்கு ரெக்கமென்ட் செய்யுறேன்” 

 

“நம்ம பிஸ்னஸ் இருக்கும் போது அவன் வெளியே வேலைக்குப் போனா நல்லவா இருக்கும், யாருக்கு அவமானம்?” என்றவள் அவனை விடுவதாயில்லை.  

 

அவள் முக பாவனையில், “ஓய்.. ஒருவேளை அரியர்ஸ் கிளியர் பண்ணிட்டேன்னு பொய் சொல்லுறானோ? அதான் எங்கிட்ட வேலை கேட்குறானா?” எனக் கேலியாய் வினவினான். 

 

சிலுப்பியவள், “க்கும், திறமைக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லைங்க. ஒரு மூனு மாசம் பாருங்க, சரியா வரலைன்னா அப்பறம் நீங்க சொல்லுற மாதிரி செய்யலாம்” எனச் சமாதானம் பேசினாள். 

 

“அதெல்லாம் சரிப்படாது இசை”

 

“ஒருமுறை வாய்ப்பு கொடுங்க, ப்ளீஸ் எனக்காக, எனக்காக..”

 

“சரி, சரி நாளைக்கு வரைச் சொல்லு..” என்றவன் கண்ணாடியைப் பார்த்தபடி தலை வாரத் துவங்க, நினைத்ததைச் சாதித்த திருப்தியில் முகம் விகசிக்க, துள்ளலோடு வெளியே சென்றாள் இசைவாணி. 

Advertisement