Advertisement

அத்தியாயம் 12

முதல் முறையாக அருள் சற்றே இதழ் பிரிய சிரிப்பதை என்னவோ காண அதிசயத்தைக் கண்டது போல் அவள் பார்த்து நிற்க, சட்டென அவள் கரம் பற்றி இழுத்தவன் கிருஷ்மி விட்டுச் சென்ற வெறுமையான இடத்தில் அவளை அமர்த்திக் கொண்டான். 

 

அவளின் படபடக்கும் இதயத்தின் ஓசை அவளுக்குள்ளே எதிரொலித்தது. இந்நிலையில் அவனிடமிருந்து விலகவோ எழவோ சிறிதும் முயற்சிக்காது, வாகாய் அமர்ந்து கொண்டவளின் மனத்தில் ‘இவன் தானா? இவ்வாறெல்லாம் நடந்து கொள்வது? என்ற ஐயம் தான்!

 

“என்னடா இவன் இப்படியெல்லாம் நடந்துகிறானேன்னு பார்க்குறியா?” என மனத்தைப் படித்தது போல் கேட்டவன், “எனக்கும் என்னவோ இதெல்லாம் புதுசாத் தான் இருக்குஎன்றான் உளமார! 

 

அண்ணனுக்காகப் பேசியதில் இசையின் மீது கோபமிருந்த போதும் அவளைத் தள்ளி வைக்கவோ தவிர்க்கவோ அவனால் இயலவில்லை. ஏனென்று இது வரை அவனும் ஆராயவில்லை. ஆனாலும் தன் மனைவி என்ற எண்ணம் முற்பொழுதும் அவன் நினைவில் உண்டு! 

 

இப்படி ஜில் மோர் கொடுத்து விடுறதுக்குப் பதிலா நீயே உன் கையாள இங்க தொட்டுத்தடவுனா கூட என் நெஞ்சுல இருக்கிற வலி குறையும் தான்என்றான் மையலாக.

 

அவன் இதயத் துடிப்பின் அலைவரிசையை அவள் கரங்கள் நன்கு உணர, அவளுள்ளும் ஏதோ மயக்கம்! அவன் நெஞ்சில் இருக்கும் தன் கரங்களிலே பார்வையைப் பதித்திருந்தவள், “வலிக்குதா? என்ன செய்து?” என்றாள் மெல்லிய குரலில். 

 

“மனோ இப்படி பேசுவான்னு எதிர்பார்க்கவே இல்லை, இன்னும் அவன் ஏன் பார்வையில சின்னப் பிள்ளையாத் தான் தெரியுறான்” 

 

நீங்களும் இவ்வளவு கோபமா பேசியிருக்கக் கூடாது, கொஞ்சம் பொறுமையாத் தான் சொல்லியிருக்கலாமே?” 

 

ஏது? நான் கோபப்பட்டேனா?” என ஆச்சரியமாகக் கேட்டவன் மனத்தில் தன் கோபத்தில் பாதியைக் கூட வெளிப்படுத்தவில்லையே என்ற எண்ணம் தான்!  

 

அவனிடமிருந்து இறங்கியவள் இடுப்பில் கை வைத்து முறைத்தபடி, “பின்ன இல்லையா, எவ்வளவு விசாரணை? மனோ அவன் திறமைக்கு இந்தச் சின்ன ஊர் போதாதுன்னு நினைக்கிறான், அவனுக்குப் பெங்களூர் போகணும், வெளி உலகம் பார்க்கணும், சுதந்திரமா இருக்கணும் ஆசைஎன இத்தனை நாட்களில் அவனுடனான தோழமையில் அவனைப் பற்றி அறிந்ததை உரைத்தாள். 

 

“அதுக்கென்ன போறதுன்னா வோர்ல்ட் டூரே போயிட்டு வரட்டும். நான் என்ன வேண்டாம்னா சொல்லப் போறேன்” 

 

இங்க தான் நீங்க அவனைச் சரியா புரிஞ்சிகிடலை, அவனுக்கு பேமிலியைத் தாண்டின புதுசா ஒரு சுற்றுப்புறம் தேவையா இருக்கு. வேலை செய்ய நினைக்கிறான். சாதிக்கணும், கற்ற அவன் கல்வியை அவன் திறமையை நிரூபிக்கணும்னு வேகத்தில இருக்குறான், அவனை ஏன் நீங்க தட்டுறீங்க?”

 

“எனக்குப் புரியுது, அதை இங்க இருந்ததே செய்ய வேண்டியது தானே? இல்லை, வெளியே போய் எப்படிச் சமாளிப்பான்? அவனால ஒரு நாள் கூட அம்மா இல்லாம இருக்க முடியாதே, அவன் போற இடமும் அவன் கம்பெனியும் எப்படி இருக்குமோ?” என்றவனின் குரலில் தோய்ந்திருந்தது கவலை. 

 

இத்தனை வருடத் தொழில் அனுபவம் உடையவன், பக்குவமானவன் அவனே இவ்வாறு கலங்குகையில் மனோவின் மீதான அவன் பாசத்தையும் அக்கறையும் அவளால் உணர முடிந்தது. 

 

அதெல்லாம் நீங்க கவலைப்படத் தேவையில்லை, அவன் இனிமே தான் போய் இண்டர்வியூ அட்டென் பண்ணணும்

அதெல்லாம் செலெக்ட் ஆகிடுவான், அவன் ரொம்ப டேலன்ட்டட், அந்தக் கம்பெனி தான்..

 

அது நல்ல கம்பெனி தான் அன்ட் பிரண்ட்ஸ் இரண்டு மூனு பேர் அங்க தான் வொர்க் பண்றாங்க” என்றவள் ஆறுதலாய் அவன் கரங்களைப் பற்றி கொண்டாள். 

 

ஓய்! நீ தான் அவனுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தியா?” என ஆறுதலுக்குப் பற்றி அவள் கரத்தை அழுத்தப்பற்றி முறைப்போடு கேட்க, அறிந்து கொண்டானே என்பதால் திருதிருவென முழித்தாள். 

 

அவள் முழிப்பதிலே உண்மை தான் என உணர்ந்தவன், “உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்?” என்றவன் அதுவரை இருந்த மனநிலையிலிருந்து விசாரணைக்கு மாறியிருந்தான். 

 

அது லாஸ்ட் இயர் நானும் ட்ரை பண்ணேன். எல்லாத் தகுதியும் இருந்தும், இதோ இந்தக் குறைக்காகவே என்னை ஒதுக்கிட்டாங்கஎனத் தன் முகத்தை வட்டமிட்டுக் காட்டியவளின் குரல் உள்ளே செல்ல, கண்களில் திரையிட்டு மறைக்க முயன்ற ஒரு வலி. 

 

ஆனாலும் அருளின் கண்களிலிருந்து தப்பவில்லை, திறமைக்கும் உடல் அமைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் நிராகரிக்கணும்?” என்றான் வெம்பியபடி. 

 

அது அப்படித் தான். ஏன்னா இந்த சமூகம் எங்களைத் தீண்டத்தகாதவர் போன்றே தான் பார்க்கும். சின்ன வயசுல எனக்கு யூஸ் பண்ண பேபி பாத் சோப்பால அலர்ஜி வரவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்காங்க, அப்போ அவங்க கொடுத்த மருந்தோட வீரியம் அதிகமா இருக்க, பக்கவிளைவா மெலனின் குறைப்பாடு வந்திருக்கு. இது தான் காரணம்னு கண்டுபிடிக்கவே எனக்கு பனிரெண்டு வருஷமாச்சு. இதுல என் தப்பு என்ன இருக்கு? இது ஒண்ணும் சரிபடுத்த முடியாத நோய் இல்லை, ஜெஸ்ட் சருமத்துல உள்ள மெலனின் குறைபாடு, அவ்வளவு தான், அதை யாரும் புரிஞ்சிக்கிறதா இல்லை என்றவளுக்கு வேதனையல்ல கோபம் தான், தன்னை ஒதுக்கிய சமூகத்தின் மீது. 

 

சின்ன வயசுல ரொம்ப கஷ்டமா இருக்கும். என்னைப் பார்க்கிறவுங்க எல்லாம் வினோதமா பார்ப்பாங்க, சிலர் முகத்தை அருவருப்பா சுளிச்சிட்டுப் போய்டுவாங்க. சாதாரணமா பஸ்ல போனாலே என் பக்கத்துல சீட்ல யாரும் உக்கார மாட்டாங்க. வீட்டுக்கு வந்து பத்திரிக்கை கொடுத்துட்டுப் போற உறவுகள் கூட ஃபங்க்ஷனுக்கு என்னை கூட்டுட்டு வர வேண்டாம்னு அம்மாட்ட சொல்லிட்டுப் போய்டுவாங்க, ஏன்னா என்னைப் பார்த்து ஒரு வேளை இது மரபு வியாதியா இருக்குமோன்னு அவங்க சம்பந்தி வீட்டுல நினைச்சுபாங்களாம்.. சின்ன வயசுல தெரியலை வளர வளர அந்த வித்தியாசம் எனக்குப் புரியத் தொடங்கியது. 

 

நானும் சின்னப் பொண்ணு தானே? அப்போ எல்லாம் ரொம்ப அழுகையா வரும், என்னை ஒதுக்குற இந்த சமூகம் வேண்டாம்னு தோனும். ஏழாவது படிக்கும் போதே ஹாஸ்டல் போயிட்டேன். என்னைப் பரிதாபமாப் பார்க்காமல் தோழமையா பார்க்கிற சின்ன நட்பு வட்டத்தை என்னைச் சுத்தி வைச்சிக்கிட்டேன். அதே போல முதல் பார்வையிலே என்னைப் பார்த்து முகம் சுளிக்கிறவன் என் வாழ்க்கைத் துணையா வரத் தேவையில்லைன்னும் உறுதியா இருந்தேன் 

 

அவளைப் பற்றி அறியும் ஆவலிருக்க, அனைத்தையும் தலையசைத்துக் கேட்டிருந்தான் அருள்வேலவன். அதிலும் இறுதியாக அவள் குறிப்பிட்டது ஜெகனைத் தான் இருக்கும் என்றும் யூகித்திருந்தான். அவள் முகத்தை ஆராய்ந்திருந்தவனுக்கு உணர்வுகளை அறிவதில் தடுமாற்றம் தான், கவலையோ கண்ணீரோ இல்லை பெரும் வேதனையை உசாதீனத்தைக் கடந்தே வந்திருக்கிறாள் அதில் பக்குவமும் கொண்டவள் எனப் புரிந்தது. 

 

சரி, இப்போ ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா இதைச் சரி செய்ய முடியாதா?” என்றவன், எதிர்பார்ப்பு இன்றி அறிந்து கொள்ளவே கேட்டான். 

 

 ஏன் சரி செய்யணும்? சிவந்த தோல்கள் மட்டும் தான் அழகா? இது அழகில்லையா? இது என்னோட தனித்தன்மைன்னு நான் ஏத்துகிட்டேன், அடுத்தவங்களைப் பத்தி எனக்கென்ன? அதுக்காக எல்லாம் முகத்தை மறைச்சி வாழ முடியுமா?” 

‘இதற்காகத் தன்னை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறானோ? சிகிச்சையில் சரியாகி விடுமோ என எதிர்பார்க்கிறானோ? என நினைத்தாள். 

 

சபாஷ் என்பது போல் பொறுமையோடு புருவம் உயர்த்தியவன், “அதுவும் சரி தான், இது தான் உன்னோட தனித்துவ அழகியல்என்றான் கட்டை விரலையும் உயர்த்திக்காட்டி. 

 

அதில் சின்னதாய்ச் சிரித்தவள், “கொஞ்ச வருஷமா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு தான் இருக்கேன். என் உடல்ல நாப்பது சதவீதமா இருந்த வெண்திட்டுக்கள் இப்போ இருபது சதவீகிதமா குறைஞ்சி இருக்குஎன எழுந்து சென்றாள். 

 

அரிசிப்பல் தெரியகச் சிரிக்கும் அழகும் அதற்குப் போட்டியிட்டு அவனை ஈர்க்கும் அந்த  தாடையின் சிறு குழியும் அவள் சென்ற பின்னும் கண் மறையாது கருத்திலிருந்தது. அவளைப் பற்றி அறியாதது என்னவெல்லாம் உள்ளதோ? இன்னும் இன்னும் அவளை அறியும் ஆவல் அவனுள் ஊற்றெடுத்தது. 

 

ராஜியின் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்தது. அருள் தன் வீட்டிற்கு வரமாட்டானென அறிந்தது தான், இசையையும் அனுமதிக்கவில்லை எனில் என்ன செய்வது? ஆகையால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யும்படி சொல்லியிருந்தான் பிரகாஷ். 

 

அந்த ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டிருந்தது. கையில் ஒரு பார்சலோடு வீடு வந்த அருளின் பார்வை இசையைத் தேட, அவன் தந்தை மட்டும் ஹாலில் புத்தங்களோடு அமர்ந்திருந்தார். 

 

“எங்கப்பா யாரையும் காணும்?” 

 

அந்த வீட்டுல இருக்காங்க, தாம்பூலம் பை எல்லாம் பாக்கெட் போட்டுக்கிட்டு இருக்காங்க” 

 

தலையாட்டிவிட்டு தனது அறைக்குள் வந்தவன், மின் விளக்கைக் கூட ஒளிர விடாது படுத்துவிட்டான். அடுத்த அரை மணி நேரத்திற்குப் பின் உள்ளே வந்த இசைவாணி அருள் உள்ளிருப்பதை அறியாது, சோர்வோடு அவளும் வந்து கட்டிலில் விழுந்தாள். அதை எதிர்பாராது, “ஸ்ஸ்..ம்மா..என மெல்லியதாக மறுநொடி கேட்டது அருளின் குரல். 

 

பஞ்சு மெத்தை அல்லாது வலுவான அவன் தேகத்தையும், உடல் சூடும், ஸ்பரிசமும் அப்போதே இசை உணர, கையை உயர்த்தி இரவு விளக்கை ஒளிரவிட்டாள். தங்கத்தின் மீது பதித்த வைரம் போல் அவன் மீது பொதிந்து கிடப்பதைப் பார்த்தவள் சட்டென அவனிடமிருந்து விலகினாள். 

 

நீங்க எப்போ வந்தீங்க?” அதிர்ந்து கேட்டவள் மறுநொடியே, “ஏன் நான் படுக்குற வலது பக்கம் படுத்து இருந்தீங்க? அதுவும் லைட் கூட ஆன் செய்யாம இருட்டுல” எனச் சந்தேகத்தோடு வேகவேகமாகக் கேட்டாள். 

 

அவளிருந்தால் ஒரு ஓரம் படுத்துக் கொள்பவன், இல்லாததால் மொத்த கட்டிலையும் ஆக்கிரமித்துப் படுத்திருந்தான். 

 

மூக்கு விடைக்கக் கேட்டவளைப் பார்த்திருந்தவன் சட்டெனத் தன்னை நோக்கி இழுத்து அணைத்து, “நீ என்ன நினைச்சி சந்தேகப்பட்டியோ அதுக்குத் தான்என மென் குரலில் காதோரம் கிசுகிசுக்க, அவளோ முகம் வியர்க்க, “நா..நான் எ..என்ன நினைச்சேன்?” எனத் தடுமாறி உளறினாள்.

 

நீ தான் சொல்லணும்? என்ன நினைச்சே சொல்லு..என மேலும் மெல்லிய குரலில் கேட்க, அவளுக்கு மயக்கம் வரும் நிலை தான், அவனையும் அவன் அணைப்பையும் அத்தனையும் மறந்து போனாள். 

 

“ம்ம்..?” அவன் பதில் வேண்டவே, தன்னிலை உணர்ந்தவள் சட்டென அவனிடமிருந்து விலகி, “நாளைக்கு பஃக்ஷன் இருக்குல்ல அதான் கொஞ்சம் வேலை அதிகம், அந்த டயர்ட்னஸ்ல தான் லைட் கூட போடாம, கவனிக்காம.. எனத் தவறு செய்தது போல் அவள் தடுமாறி விழித்தாள். 

 

அந்த நொடிகளில், ‘அவள் மீது நீ கோபமாய் இருப்பதை மறந்துவிட்டாயோ? என அவன் மனசாட்சி வேறு ஞாபகப்படுத்தியது. கட்டிலிருந்து இறங்கியவன் தன் கொண்டு வந்த பார்சலை அவளிடம் கொடுத்து நாளைக்குக் கட்டிக்கோ எனப் பார்வையை எங்கோ வைத்துக்கொண்டு உரைத்தான். 

 

வாங்கியவள் பிரித்து பார்க்க, உள்ளே வெள்ளி ஜரிகையோடு மெல்லிய லாவண்டர் நிறத்தில் செமி சில்க் புடவை ஒன்றிருந்தது. நிமிர்ந்து பார்க்க அவனில்லை அறையிலிருந்து சென்றிருந்தான். முகத்தைத் தூக்கி வைத்தபடி அன்பில்லாது கடமைக்கென்று அவன் செய்ய, கசந்தது அவளிற்கு. 

 

மறுநாள் வளைகாப்பு விழா! செல்வதா வேண்டாமா என்றவன் யோசித்து நிற்க, இசைவாணி அவனுக்கு முன்பே கிளம்பியிருந்தாள். அதிலும் வேறொரு புடவையை உடுத்தியிருக்க, தன்னைத் தாண்டி செல்ல இருந்தவளின் கரம் பற்றி நிறுத்தியவன், “நான் கொடுத்த புடவையை எதுக்குக் கட்டலை?” என்றான் இறுகிய முகமாக. 

 

கைகளை உருவியபடி, “அதுக்கு இன்னும் ப்ளவுஸ் ஸ்டிச் பண்ணலைஎன்றவள் ஓடியிருந்தாள். புடவையோடு ப்ளவுஷூம் உண்டு என்பதை இருவரும் அறிவர். அவள் பொய் உரைத்துச் செல்ல, “இரு உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் எனச் செல்லக் கோபமுடன் அவளை பின் தொடர்ந்திருந்தவன், விழாவிற்கும் வந்திருந்தான். 

 

மண்டபத்திலும் அவள் பின்னே முறைப்போடு சுற்றி வர, அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தான்! அறிந்தும் அறியாதது போலே கண்டுகொள்ளாமல் இசை சுற்றி வர, அவர்களைப் பார்த்திருந்த உறவுக்கார இளசுகள் கேலியில் இறங்கியிருந்தனர். விக்கியும் மனோவும் அவனுக்குப் பின்னே நின்று கொண்டு அவன் காதில் கேட்கும் படி கேலி செய்ய, திரும்பி உக்கிரமாக ஒரு பார்வை பார்த்தவன், மண்டபம் என்பதால் விட்டுவிட்டுச் சென்றிருந்தான். 

 

உறவுப்பெண்களும் சுமங்கலிகளும் ராஜிக்கு நலங்கு பூசி வளையல் அணிவிக்க, வீட்டுப் பெரியவர்கள் ஆசிர்வதித்து ஐந்து வகை உணவூட்ட, விழா இனிதே நிறைவடைந்தது. நெருங்கிய உறவுகள் மட்டுமே மீதமிருக்க, கடைக்குக் கிளம்ப இருந்த அருள்வேலவனை இசையிடம் சொல்லி நிறுத்தினான் பிரகாஷ். 

 

ராஜி இருக்கையில் அமர்ந்தபடி புரியாது பார்த்து நிற்க, இருவரின் முன் வந்த பிரகாஷ், இசையின் கரம் பற்றி, “என்னால முடிச்ச அளவு உனக்குக் கொஞ்சம் நகை சேர்த்திருக்கேன், அப்புறம் இதுல நம்ம வீட்டுப்பத்திரம் இருக்கு, உனக்குச் செய்யாத சீருக்கு ஈடா வைச்சிக்கச் சொல்லு, என் தங்கச்சியை நான் சுமையா நினைச்சதில்லைன்னு இப்போவாது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இனி நீ உன் புகுந்த வீட்டுல தலை நிமிர்ந்து கௌரவமா இருக்கலாம். யாரும் சொல்லிக்காட்ட மாட்டங்க இல்லை?என்றபடி அவள் கையில் தாம்பூலத்தை வைத்த பிரகாஷின் பார்வை அருகில் நின்ற அருளின் மீது தானிருந்தது. 

 

ஆனால் அருளின் பார்வையோ அவள் கையிலிருக்கும் பொருளின் மீது அக்கினி வீச்சாய் பாய, குடும்பத்தார் என்ன இது புது பிரச்சனை எனக் குழப்பத்தில் நிற்க, நெருங்கிய உறவுகள் அனைவரும் அதிர்ந்து பார்த்திருந்தனர். 

 

அனைவரும் என்ன நினைப்பர்? நான் ஆசை கொண்டது போலவும், அதற்காக என் வீட்டில் இசையைக் குறைவாக நடத்தியதாகத் தானே நினைப்பார்கள்? அருளுக்கு அடக்க இயலாத கோபம். அதே நேரம் இசை, சொல்ல முடியாத தவிப்பிலிருந்தாள். ‘இருக்கும் ஒற்றை வீட்டையும் தன் கையில் வைத்து விட்டு அண்ணன் என்ன செய்வான்? அவன் எதிர்காலம் என்னாகும்?’ வயிற்றில் பிள்ளையைத் தாங்கி அமர்ந்திருக்கும் ராஜியே முதலில் விழி முன் வர, குற்றவுணர்வு மேலோங்கியது. 

 அனைவரும் அதிர்ந்து நின்ற நொடியில் மெல்ல எழுந்து பிரகாஷின் அருகில் வந்த ராஜி, “என்னங்க என்ன செய்றீங்க? இதுக்கு தான் மண்டபத்துல விசேஷம் வைக்கச் சொல்லி அருள் அண்ணனையும் கூப்பிட்டீங்களா?” என்றாள் மெல்லிய குரலில். 

அன்று மருத்துவமனையில் தன்னைப் பார்த்துக் கேட்ட கேள்வியை இவள் எங்கே அறிவாள்? என்ற ஆற்றாமையிலிருந்த பிரகாஷ், “நீ கவலைப்படாத ராஜி, என் தங்கச்சி செய்றேன்னு உன்னை ஒண்ணும் தெருவுல நிற்க வைச்சிட மாட்டேன் எனக் கத்த, நொந்து கொண்டாள் அவள்.

 

அதே நேரம் அருகே நின்றிருந்த இசையின் தோள் பற்றிய அருள், தன்புறம் கோபமாகத் திருப்ப, அந்த வேகத்தில் அவள் கையிலிருந்து தட்டும் பொருட்களும் கீழே விழுந்து சிதறியது. 

 

இங்க பாரு இசை, என்னைக்காவது என் வீட்டுலையோ இல்லை நானோ உன்னைக் குறைவா நடத்தியிருக்கோமோ? இல்லை, இதெல்லாம் வேணும்னு நாங்க கேட்டோமோ? சொல்லு..என வெடித்த எரிமலையாக அதட்ட, விழி நிறைந்த நீரோடு அவள் தலை இடம் வலதாக ஆடியது. 

 

பின்ன இதுக்கெல்லாம் என்ன ஆர்த்தம்? கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்துறானா?” என்னும் போதே, மூக்கு விடைக்க, “என் அண்ணன் எனக்குத் தானே கொடுத்தான், என் கையில தானே கொடுத்தான். பின்ன ஏன் நீங்க பேசுறீங்க? பேசாம அமைதியாக இருக்கஎன்றாள் சபையில் குரல் உயராது அழுத்தமாக. 

 

ஆனால் அருள் கொதித்தே விட்டான். அவளுக்குக் கொடுத்தால் அது தனக்கு அவமானமில்லையா? அவள் வேற தான் வேறா? 

 

காது மடல்கள் வரை சினத்தில் அனலாய்ச் சிவக்க, “அப்போ உனக்கு ஆசையா? ஆனாலும் ஒண்ணு உறுதியா சொல்லுறேன் கேட்டுக்கோ, இத்தோட நீ வீட்டுக்கு வாரேன்னா அதுக்கு நீ வரவே வேண்டாம். போ.. என உறுதியாக இசையிடம் கர்ஜித்தவன், விறுவிறுவென வெளியேறினான். 

 

இடையில் வந்த யார் சமாதானங்களையும், கெஞ்சல்களையும் அருள் கண்டுகொள்ளவே இல்லை. ‘இதைக் கொண்டு வருவதென்றால் வர வேண்டாம் என்றானா? இல்லை வர வேண்டாம் என்பதற்காக இவ்வாறு உரைத்தானா? இசையின் மனம் ஆற்றாமையில் விம்ம, விழி நிறைந்த நீரோடு நின்றாள். 

 

பிரகாஷின் முட்டாள்தனங்களால் தலையில் அடித்துக் கொண்ட பார்வதி, அவனைப் பிழிய, ராஜியை அழைத்துக் கொண்டு அனைவரும் வீட்டிற்குக் கிளம்பினர். தேவகி, இசையை அழைக்க, சிதறிய அனைத்தையும் அள்ளி அன்னையின் கையில் கொடுத்துவிட்டு, அருளின் சட்டையைப் பிடிக்கும் ஆத்திரத்தில் வீடு வந்திருந்தாள். 

 

அடக்க முடியாத ஆதங்கம், கோபம் என இசை கொதித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் சுருக்கென்ற வலி குத்திக் கொண்டேயிருந்தது. ‘தன்னை எவ்வாறு அவன் வரக் கூடாது எனலாம்? அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்து விடுவானா? அவ்வளவு தானா நான் அவனிற்கு? நெஞ்சம் வலித்தது.  

 

அழுதால் கண்ணீரோடு சினமும் கரைந்துவிடுமோ என நினைத்து அழுகையைக் கூட அடக்கி வைத்து அருளிற்காகக் காத்திருந்தாள் இசை! 

 

நள்ளிரவைத் தாண்டிய நேரம் அருள் வீட்டிற்குள் வர, அன்னையும் மனோவும் ஹாலிலே காத்திருந்தனர். தேவகிக்கு இரு பிள்ளைகள் மீதும் ஆதங்கமிருந்த போதும் வெளிப்படுத்த இயலாது மனதில் வெம்பினார். 

 

ஏற்கனவே அவன் ருத்திர தாண்டவத்தில் அரண்டிருந்த மனோ, “இன்னைக்கு ஒரு நாள் என்னோட வந்து என் ரூம்ல படுத்துக்கோ அண்ணாஎன மிகவும் மெல்லிய குரலில் பயத்தோடு அழைத்தான். 

 

வரவேற்பு அறையிலிருந்து பார்க்க, அவன் அறையே இருளாக இருக்க, எங்கே அவள் வரவில்லையோ என்றே அருளின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. இதில் மனோவின் வார்த்தைகள் செவி நுழையாது போக, இருவரையும் உறங்கச் சொல்லிக் கட்டளை இட்டபடி, விறுவிறுவென தன்னறை நோக்கிச் சென்றான். 

 

அறையே இருளில் இருக்க, மின் விளக்கைப் போட்டவன் அதிர்ந்தான். கட்டிலில் சாய்ந்தபடி தரையில் கால்களைக் கட்டிக்கொண்டு முகம் புதைய அமர்ந்திருந்தாள் இசைவாணி. அவளைக் காணவும் தான் ஒரு வரையறை இல்லாத சந்தோஷம், தன் சொல் கேட்டு தனக்காக வந்துள்ள மகிழ்வு, எங்கே வாராது போய்விடுவாளோ எனத் தவித்திருந்தவனுக்கு அப்போது தான் முழு ஆசுவாசம். 

 

வெளிச்சத்தை உணர்ந்த இசையும் சட்டென முகத்தை உயர்த்தி அவனைத் தான் பார்த்திருந்தாள். அவன் தவித்த விழிகளில் ஒரு தணியும் குளிர்நிலை அவளுக்குப் புரிந்த போதும், ஏற்கும் மனநிலையில்லை. 

 

வேகமாக எழு, அத்தனை நேரம் ஒடுங்கி அமர்ந்திருந்திருந்ததால் மரத்துப் போன கால்களால் நிலையாக நிற்க இயலாது தடுமாறினாள். சட்டெனக் கரம் நீட்டியபடி அருள் தாங்க வர, கை நீட்டித் தடுத்தவள், “என்னைத் தொடாதீங்க..என்றபடி கட்டிலில் பொத்தென அமர்ந்தாள். 

 

இத்தனை நாட்களில் எத்தனை மனஸ்தாபங்கள் வந்த போதும் ஒருமுறை கூட அவ்வாறு சொல்லாதவளின் வார்த்தை தற்போது அவனைக் குத்திக் கீறி வலியைக் கொடுத்தது. 

 

என் அண்ணன் செய்றதையும் வேண்டாம்னு சொல்லிட்டு, வக்கில்லாதவன் என் மேல பாசமில்லாதவன்னு பழி வேற சொல்லிக்கிறீங்க, இது என்னங்க நியாயம்?” என்றாள் கொதிப்புடன். 

 

பல மணி நேரங்களில் உறுதியோடு அடக்கி வைத்த அருளின் கோபமெல்லாம் மீண்டும் மேலெழுந்தது. 

 

அன்னைக்கே சொன்னேனே என் மனைவியா மட்டும் பேசுன்னு. மறந்துட்டீயா? சபையில கூப்பிட்டு வைச்சு என்னை என்னவோ கொடுமைக்காரன் மாதிரியும், பணத்தாசை பிடிச்சவன் மாதிரி என் சொந்த பந்தங்கள் முன்னாடியே அவமானப்படுத்துறான், நீ அவனுக்கு சப்போர்ட் வேற? ம்ம்.. எனக்கு ஒரு அவமானம்னா அது உனக்கு இல்லையா? அன்னைக்கும் அப்படி தான் பப்ளிக்ல என்னை ஜெயிலுக்கு அனுப்புறேன்னு அசிங்கப்படுத்துறான். அவன் செய்றது மட்டும் சரியோ? இப்போ நீ நியாயம் சொல்லு?” 

 

அடக்க முடியாத கோபம் இருந்தால் போதும் வார்த்தைகளில் அவள் மீது காட்டி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். 

 

“உங்களாலத் தானே என் அண்ணன் இப்படி நடந்துக்கிடுறான்? எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் அவனுக்குன்னு இருக்கிற ஒரு வீடையும் எனக்குக் கொடுத்துட்டு என்ன செய்வானாம்? அதையும் கூட யோசிக்காமல் எனக்காகச் செய்தவனை என் மேல பாசமில்லைன்னு சொல்லுறீங்க. நம்ம கல்யாணம் பேசும் போதே எதுவும் வேண்டாம்னு சொன்னது உங்க வீட்டுல இருந்து தானே? அப்பறம் நீங்களே ஹாஸ்பிட்டல அவனைக் குத்திக்காட்டிப் பேசுறீங்க, அப்படி இருந்தும் அவன் சக்திக்கு மீறி செஞ்சா வேண்டாம்னு சொல்லுறீங்க. உங்க மனசுல என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? என் அண்ணனை அவமானப்படுத்த என்னை பயன்படுத்திக்கிட்டீங்க, எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான்! 

 விரல் நீட்டிக் குற்றம் சாட்டினாள் அப்போதும் அவள் மனத்தில் பொங்கும் ஆத்திரம்  அடங்கவில்லை. 

ஆனால் அருளுக்கோ பெரும் வலி. மேலும் மேலும் அவனை ஏமாற வைத்துக் காயப்படுத்தியிருந்தாள். தன்னை விட அவளுக்கு அவள் சகோதரன் தான் முதன்மையானவன், முக்கியமானவன் என அவள் வெளிப்படுத்துவதை அவனால் ஏற்க முடியவில்லை. 

 

வந்த வழியே திரும்பி, அறையின் வாசல் வரை சென்றிருந்தவன், “ஆனாலும் நான் உன் அண்ணனைக் குற்றம் சொன்னது உண்மை! சொன்ன குற்றமும் உண்மை தான் எனச் சென்றிருந்தான். 

Advertisement