Advertisement

அத்தியாயம் 11

நாட்கள் நகர, அருள் – இசையின் உறவு மட்டும் சீராகவில்லை. ‘தன்னைக் கணவனாக நினைக்காது நெருங்குவதில்லை’ என அருள் விலகி இருக்க, ‘திருமணத்தின் போதே பிடித்தமில்லாது இருந்தவனுக்குத் தற்போது தன்னையும் பிடிக்கவில்லை போலும்! என்றே நினைத்திருந்தாள் இசைவாணி. 

 

செல்ல முத்தமோ, சின்னச் சீண்டலோ, அணைப்போ இல்லாது அவன் நேசம் அவளால் உணரமுடியாது போனது. அவள் தேவைகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தான், மறுநாளே வீட்டு வாசலில் புதிதாகக் கார் வாங்கி நிறுத்தியிருந்தான். பைக்கில் எங்கும் அவளை அழைத்துச் செல்வதில்லை. ஆரம்பத்தில் தேவைக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வர் இருவரும். 

 

அவளும் வீட்டை விட்டுச் செல்வது அரிது. திருமணமானவள் என்பதை வேறுபடுத்திக் காட்டுவது அவன் கட்டிய மஞ்சள் கயிறு மட்டுமே தவிர, அவள் வீட்டில் எப்படியிருந்தாளோ அப்படியே தான் இருந்தாள். பொழுது போகவென விக்கிக்கும் மனோவிற்கும் ரெக்கார்ட் எழுதுவது, பிராஜெக்ட்டில் உதவுவது என அவர்களோடு நேரம் கழிய, ஒரு நல்ல தோழமை உணர்வு படர்ந்திருந்தது அவர்களுக்குள். 

 

இதற்கு இடையில் ஜெகனின் திருமணம் ஸ்வாதியோடு நடந்து முடிந்திருந்தது. பூர்வீகம் இந்த ஊர் தான் எனும் போதும் குடும்பமாகச் சென்னையிலிருந்தனர். அவளும் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலையிலிருக்க, ஜெகனும் பணியிடத்தை மாற்றிக் கொண்டான். திருமணம் முடிந்ததுமே இருவரும் சென்னையில் குடியமர்ந்து விட்டனர். 

 

தேவகியோடு ஒட்டிக்கொண்டு திருமண வேலைகளைச் செய்த போதும் வெளியாட்களோடு தள்ளியே நின்று கொண்டாள் இசைவாணி. திருமணம் அன்றும் அருளோடு சென்றவள், அவனோடே திரும்பியும் விட்டாள். அதிக நேரம் தங்கவில்லை. 

 

அன்று காலை உணவு நேரத்திற்கும் சற்று தாமதமான பின்பே வீடு வந்தான் அருள். அவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே பல வித பலகாரங்களின் வாசம் நாசியைத் துளைத்தது, எப்போதும் போலே வீட்டிற்குள் வந்ததும் அவன் கண்கள் சுழன்று இசையைத் தான் தேடியது. அவளோடு பேசுவதில்லை எனினும் வீட்டிலிருக்கும் போதெல்லாம் பார்வைக்குள்ளே அவளை வைத்திருந்தான். 

 

வந்ததுமே அவன் பசியறிந்து தேவகி பரிமாற, “எங்கம்மா யாரையும் காணும்?” என்க, “அந்த வீட்டுல இருக்காங்க, சாப்பிடுற நேரமாச்சு, இப்போ வந்துடுவாங்கடா” என்றார். 

 

இனிப்பு மற்றும் சைவ, அசைவ வகையோடு உணவு மேசையே நிறைந்திருக்க, வியந்து பார்த்தான். 

 

ரசித்து உண்டபடி, “அது சரி, என்ன விசேஷம்? இன்னைக்குத் தடபுடலாச் சாப்பாடு நிறைச்சிருக்கு?” என்க, “அது ஒண்ணுமில்லை, நம்ம மனோவும் விக்கியும் கடைசி செமஸ்டர்ல பாஸாகிட்டாங்க, அதான் அவங்களுக்குப் பிடிச்சதைச் சமைச்சேன், அப்படியே உனக்கு பிடிச்சதும் இசைக்குப் பிடிச்சதும் சமைச்சேன். அதுவும் போக எப்பவும் போல அப்பாவுக்குச் சமைக்கிறது வேற, கடைசியில பார்த்தா இவ்வளவு ஐட்டம் வந்துட்டுச்சு” என்றார் பாவம் போலே முகத்தை வைத்துக் கொண்டு. 

 

அத்தனையும் செய்து விட்டு மகன் திட்டிவிடுவானோ என்ற பயத்தில் அறியாப்பிள்ளை போலே அவர் காட்டும் முக பாவனையைக் கண்டவன், “அதானே கிட்சன்குள்ள போனா உலகமே மறந்துடுமே உங்களுக்கு” என்றான் இதழ் பிரியாத சின்னச் சிரிப்போடு. 

 

அதே நேரம் “என்ன என்ன ஐட்டங்களோ சித்தியின் சமையலினிலே..! திறந்து பார்த்தால் தெரிந்துவிடும், நான் தின்றேனென்றால் முடிந்துவிடும்..” என ராகமிழுத்துப் பாடிய படியே விக்கி வர, அவன் பின்னே மனோவும், இசையும் அவள் கை பற்றியபடி கிருஷ்மியும் உள்ளே வந்தனர். 

 

உண்டு முடித்திருந்த அருள், “வாடா.. சாப்பிடு..” என அழைக்க, “நீ அழைக்காட்டாலும் அத்தனையும் எனக்குத் தான்” என்றபடி ஒவ்வொரு பாத்திரங்களாகத் திறந்து ஆராயத் தொடங்கினான் விக்கி. 

 

“அடே அடே அவல் பாயசம்!” என சப்புக்கொட்டியவன், “என்ன சித்தி, மனோ பாஸானதுக்கா?” என்றான். 

 

“அவன் பாஸானது என்ன புதுசா? நீயில்ல அத்தனை அரியரோடு இந்த செமஸ்டர் பேப்பரையும் கிளியர் பண்ணியிருக்க, அதுக்குத் தான் இது!” எனத் தேவகி வார, ஐயோ என முழித்த விக்கி மனதில் அருள் அறியாத அரியர் இரகசியத்தை இவ்வாறு அவிழ்த்து விட்டாரே! என்ற அலறல் தான். 

 

அவன் திருட்டு முழியை அறிந்த போதும் அருள் எதுவும் கேட்காது இருக்க, “தாங்கள் வெற்றியின் ரகசியம் என்னவோ சித்தப்பா?” என வாய் மூடிச் சிரித்தபடி கேலியாக கிருஷ்மி கேட்க, “அதானே என்னோட தானே சும்மா சுத்திட்டு இருந்தே எப்படிடா நிகழ்ந்தது இந்த அதிசயம்?” என நம்ப இயலாது மனோவும் கேட்டான். 

 

அனைத்தையும் பார்த்திருந்த இசை, சத்தமின்றிச் சின்னதாய் சிரித்துக் கொள்ள, “எல்லாம் எங்க அண்ணி வந்த நேரம்!” என அவள் மீது ஐஸை வைத்த விக்கி தன் மீது சந்தேகம் வராது நழுவிக் கொண்டான். 

 

“அண்ணி உருகாதீங்க ஐஸ் வைக்கிறான்..” மனோ எச்சரிக்க, “என்னவோ சந்தோஷம் தான் எனக்கு” என இசையின் முகத்திலும் குரலிலும் அது வெளிப்பட, பார்த்திருந்த அருளுக்குள் ஆனந்த மழைச்சாரல்! வெகுநாட்களுக்குப் பின் அவளின் மலர்ந்த முகத்தைக் கண்டுவிட்டான். 

 

“அடப் போங்கப்பா, எனக்கென்னவோ கவலை தான். இந்த அரியர்ஸ் இருந்திருந்தால் அதை வைச்சே இன்னும் ஒண்ணு இரண்டு வருஷத்தை ஓட்டுவேன், இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சே..” எனத் தலையில் கை வைத்தான் விக்கி. 

 

“அதனாலே இப்போ என்ன குறைச்சி போச்சாம்?” ஒரு விதக் கடின குரலில் அருள் கேட்க, பதறி நிமிர்ந்தவன் சிரித்துச் சமாளித்தபடி, “ஒண்ணுமில்லை அண்ணா! இதோ மனோ கேம்பஸ்ல பிளேஸ் ஆகிட்டான், நான்ல இனிமே வேலை தேடித் தெருதெருவா தனியா அலையணும்!” என்றான் இப்போதே அசதியுற்றது போல்.  

அது வரையிலும் விஷயம் அறிந்திடாத அருள் “மனோ நீ கேம்பஸ் இண்டர்வியூ அட்டென்ட் பண்ணியா?” என வினவ, அவனின் குரலின் தன்மையில் என்ன உணர்வைப் பிரதிபலிக்கிறான் என யாராலும் அறிய முடியவில்லை. 

 

மறுநொடியே அனைவரின் பார்வையும் இசையின் மீது தான் பாய்ந்தது. ஏனெனில் செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்தவனை ஊக்குவித்துப் பயிற்சி அளித்து நேர்காணலில் கலந்து கொள்ள வைத்ததே அவள் தான்! அதை அருளைத் தவிர அனைவரும் அறிந்திருந்தனர். 

 

அனைவரின் பார்வையும் இசையின் மீது சென்றதை அருள் கவனிக்க, அவள் வார்த்தை வராது மௌனமானாள். தங்கள் உறவுநிலை அனைவரின் முன் காட்சிப்படுத்தப்படுகிறதோ என்ற படபடப்பு அவளிற்கு. 

அருள் கேட்ட தொனியில் சிறு நடுக்கம் தான் மனோவிற்கு, இருந்தும் வெளிக்காட்டாது, “அது ஜெஸ்ட் ஃபர்ஸ்ட் லெவல் இண்டர்வியூ தான் அண்ணா, நெக்ஸ்ட் லெவல் இன்டெர்வியூ மெயின் ஆபிஸ் பெங்களூர்ல.. செலக்ட்டான சிக்ஸ் மன்த் டரைனிங் அங்க தான் அண்ணா..” என்றான். வார்த்தைகளைப் பாதி மென்று முழுங்கியபடி ஒருவாறு விவரம் தெரிவித்தவன், தவிப்போடு தாயின் முகம் பார்த்தான். 

 

அருளின் முகத்தில் வெளிக்காட்டாத ஏமாற்றம். “அப்போ நீ இண்டர்வியூ அட்டென்ட் பண்ணிருக்கே..?” என்க, “அது ஜெஸ்ட் சும்மா என் திறமையை நிரூபிக்கிற டெஸ்ட் மாதிரி தானே அண்ணா?” என்றான் மனோ. 

 

அத்தனை பேருக்கும் கவலைபற்றிக் கொண்டது, வாக்குவாதங்கள் எங்கே திசை மாறிவிடுமோ என்ற பதைபதைப்பு. 

 

அருளோ, “அதை ஏன் சொல்லவே இல்லை?” என்க, அவன் எவ்வாறு கேட்டானோ ஆனால் விசாரணை போலே தான் மனோவிற்கு தோன்றியது. அருளின் அதே இரத்தம், அவனின் பாதியாக இருந்தான். சற்றும் ஆராயாது சுருக்கென்ற கோபம் துள்ளி எழ, “அதையும் உங்கிட்ட சொல்லிட்டு தான் செய்யணுமா?” என்றான் மனோ. 

 

மனோவின் குரல் உயரவில்லை எனினும் அதில் ஒரு அழுத்தமும் பிடிவாதமும் இருக்க, “சொல்லுறதுக்கு நீ எங்கே வீட்டுல இருந்த? உனக்கு தெரிஞ்சி இருக்கும்னு நினைச்சோம்டா” என்ற தேவகி இடையில் வர, சட்டெனத் திரும்பிப் பார்த்த அருள் அவரை ஒரு பார்வையில் அடக்கியிருந்தான். 

 

என் விருப்பம், நான் செய்யக் கூடாதா? என் திறமையை நிரூபிக்கக் கிடைச்ச வாய்ப்பை நான் எப்படி விட முடியும்? மொத்தம் முப்பத்தி இரண்டு பேர் அட்டென்ட் பண்ணோம், அதுல நாங்க ஏழு பேர் தான் செலக்ட் ஆகியிருக்கோம்” என்றவன் திறமையைக் காட்டும் படி பேச, என்னவோ தன்னைச் சமாளிப்பதாக நினைத்த அருள், “அப்போ நீ போற முடிவுல உறுதியா இருக்க?” என்றான்.

 

மனோவும் விடாது, “ஆமாம், நான் பெங்களூர் போகணும், வேலைக்குப் போகணும்..” என்றான் உறுதியாக. 

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், வேலை பார்க்கணும்னா நம்ம கடையில வந்து வேலையைப் பாரு, எங்கேயோ போய் ஏன் வேலை பார்க்கணும்?” என்றான். 

 

“எது? இந்தச் சின்ன கடையிலையா..!” 

 

“ஆமாம், நம்ம கடையிலையே முதலாளியா உக்காருவதை விட்டுட்டு எதுக்கு எங்கேயோ போய் வேலையாளா சம்பளத்துக்கு வேலை பார்க்கணும்?” 

 

“ஏன், நான் காலம் முழுக்க உனக்குக் கீழவே இருக்கணுமா? எங்களை உன் கைக்குள்ளையே அடக்கி வைச்சிகணும்னு நினைக்கிறியா?” என்றவன் முழுதாக வார்த்தைகளை முடிக்கவில்லை, பளாரென அறைந்திருந்தார் தேவகி. 

 

அது வரையிலும் அதிர்ந்த சிலையாக இருந்த அருள் பதறி அன்னையைத் தடுக்க, “என்ன வார்த்தைடா பேசுற? இன்னைக்கு இந்தக் குடும்பம் இவ்வளவு உயர்ந்து நிக்குதுன்னா அதுக்குக் காரணமே அவன் தான், இந்தப் பேச்சு பேசுறியே உன்னைப் படிக்க வைச்சதே அவன் தானே அதை மறந்துட்டியா?” என்றவர் ஆற்றாமையில் பொருமினார். 

 

அடிகளை அசராது தாங்கியவன், “ஆமாம் இப்படி எல்லாரும் அவனைத் தலையில தூக்கி வைச்சுக் கொண்டாடுறதுக்குத் தான் அவன் எங்க ஆசைகளைப் பலி கேட்குறான். அவனால தான் நாங்க வாழுறோம்கிற பெயரும் பெருமையும் அவனுக்கு வேணும். அதுக்கு நாங்களா சுயமா முன்னேறிடக் கூடாது,  அதானே வேணும் அவனுக்கு? 

 

எத்தனை அடக்கு முறை! எங்க விருப்பம் போலே என்னைக்காவது இருக்க விட்டுருக்கானா? எப்பவும் எங்களை அடிமையாத் தான் அடக்கி வைச்சிருக்கான். அவன் திறமைக்கு இந்தச் சின்ன ஊருக்குள்ள இருக்க வேண்டியது தான். நான் ஏன் இங்க இருக்கணும்? அவனை விடவும் அதிகம் படிச்சிட்டு அவனுக்குக் கீழ என்னால வேலை பார்க்க முடியாதும்மா” என்றான் மனோ. 

 

“ஏன்டா மனோ, இப்படியெல்லாம் பேசுற? அவன் இதெல்லாம் உங்க மேல உள்ள அக்கறையில தான்டா செய்தான்” எனத் தேவகி நியாயம் கேட்க, “எது அக்கறை? என்னை வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னதா? க்கும்.. நல்ல அக்கறை தான். அவனுக்கு பொறாமைம்மா, அவனை மீறி நான் போயிடுவேனோங்கிற பயம்மா. அவன் கிட்ட பெர்மிஷன் கேட்டேனா? இல்லையில்லை? அப்பறம் ஏன் அவன் என்னைப் போக வேண்டாம்னு சொல்லுறான்?” என்றான் மனோ. 

 

“போடா, போ நீ எங்க வேணாலும் போ, ஆனால் இதுக்குப் மேல எம்பிள்ளையைப் பத்தி குறைவாப் பேசுன, சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்ற தேவகி பெருமூச்சோடு பொங்கினார். 

 

தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்றதும் கொண்டாடிய அன்னையே தற்போது தன்னை விரட்ட, வேதனை நெஞ்சைக் கவ்வ மனோவால் தாங்க முடியவில்லை. 

 

இருவரையும் கவனித்த அருள், சூழ்நிலையின் கனம் தாளாது இசையிடம் கண்ணால் சைகை காட்ட, புரிந்தவள் தேவகியையும் குழந்தையும் அவர் அறைக்குள் அழைத்துச் சென்று விட்டாள். 

 

‘அவ்வளவு தானா? என் உடன் பிறந்தவன் என்னைப் புரிந்து கொண்டது?’ என்பது போல் ஒரு பார்வை மனோவை நிமிர்ந்து பார்த்தவன், கடந்து தன்னறைக்குள் சென்று விட்டான். அது வரையிலும் அரண்டுபோய்ச் சிலையாக இருந்த விக்கி, தான் கேட்க வந்ததை வாய்க்குள் மென்று வயிற்றுக்குள் கரைத்து விட்டான் நொடியில். 

 

அனைவரும் சென்றிருக்க, அவ்விடத்தில் நிலவிய பேரமைதியை உணர்ந்து, எழுந்து வந்த விக்கி, மனோவின் தோளில் கை வைத்து வைத்தான். அவன் மூக்கிற்கு அடியில் விரல் வைத்துத் தேய்த்த விக்கி, “ஏன்டா பென்சில் மீசை கூட இல்லையே? பின்ன எங்கிருந்து வந்துடா இந்த வீரம்?” என்றான் நம்ப இயலாது. 

 

“விடுடா, நம்மளும் எவ்வளவு நாளைக்குத் தான் அமைதியா அடங்கியே போறது?” என சுரத்தே இல்லாமல் மனோ பதிலலிக்க, அவன் முதுகில் ஆறுதலாகத் தட்டிக்கொடுத்த விக்கிக்கு, நம்ம தலை தப்பிச்சது என்ற நிம்மதியே! 

 

புதிதாய் முளைத்த சிறு சிறகு கொண்டு உலகையே சுற்றி வரத் துடிக்கும் படபடக்கும் பட்டாப்பூச்சு போலே காத்திருந்தவனுக்கு அவன் விரித்த சிறகைக் கட்டி வைப்பதைத் தாங்க இயலவில்லை. 

 

அறைக்குள் சாய்வு நாற்காலியில் தளர்வாய் படுத்து விட்ட அருளுக்கு மனத்தில் பெரும் பாரம். வார்த்தைகளில் வடிக்கப்படாத தன் அன்பு, அடக்கு முறையாக அவர்கள் பார்வையில் உருமாறிவிட்டதை அவனால் தாங்க இயலவில்லை. என்றுமே ஒழுக்கம் பேண சற்றுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வான் தான், அதற்காக அவர்கள் நியாயமான ஆசைகளுக்கு ஒரு போதும் தடை விதித்ததில்லை. 

 

மனோவின் திறமைகள் மீது அருளுக்கு நம்பிக்கை உண்டு தான். அதே நேரம் அத்திறமைகளைத் தங்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலிருந்தான். அவன் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் லாபம் என இது வரை அது பற்றி மனோ சிறிதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவனுக்குப் பதினெட்டு வயது பூர்த்தியான பொழுதே பாதிப் பங்குகளை அவன் பெயருக்கு மாற்றி இருந்தான் அருள்! 

 

தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் தொழில் கற்றுத் தர வேண்டும், அவன் திறமை கொண்டு தங்கள் வளங்களை மேலும் பெருக்க வேண்டும் என்ற உத்வேகமும் ஆர்வமும் அருளிடம் பொங்கியிருந்தது. ஆனாலும் கல் பட்டுச் சிதறிய கண்ணாடிச் சிற்பம் போன்று சிதறி, ஆசைகளை எரித்தான். 

 

அதை விடவும் பெரிதாக வலித்தது தன் உடன் பிறந்தவனே தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான். ‘என்னை கேள்வி கேட்க நீ யாரு? நீ என்ன என் கூடப் பிறந்தவனா?’ என்றோ கேட்டே ராஜியின் வார்த்தைகளும், ‘ஏன் நான் காலம் முழுக்க உனக்குக் கீழவே இருக்கணுமா? எங்களை உன் கைக்குள்ளையே அடக்கி வைச்சிகணும்னு நினைக்கிறியா?’ என்ற மனோவின் வார்த்தைகளும் மாறி மாறி கூரிய திருகு போலே நெஞ்சை குடைந்தது. 

 

வலி கொண்ட நெஞ்சை நீவுவது போல் மெல்லியதாய் செவி தீண்டியது சின்னக் கொலுசின் சிணுங்கல் ஒலி. அவள் வந்த அரூபத்திலும் கலையாதிருந்த அருளின் கரங்களை மெல்லத் தொட்டுத் தடவியபடி, “சித்தப்பா..” எனப் பட்டுக் குரலில் அழைத்தாள் சிட்டு. 

 

விழி திறந்தவன் முகம் மலர்ந்து, “அடடேய் என் செல்லக் குட்டிம்மா.. வாங்க வாங்க..” என கிருஷ்மியைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டவன், “என்னடா இது..?” என்றான் அவள் நீட்டிய கிளாஸைப் பார்த்து. 

 

“இதுவா கூல்(ஜில்) மோர்.. இதைக் குடிச்சா வயித்துக்குள்ள போய் நெஞ்சு எரிச்சல் எல்லாம் சரி பண்ணிடுமாம்..” என்றபடி தன் தளிர் பிஞ்சுக்கரத்தால் அவன் வயிறு நெஞ்சைத் தொட்டு நீவி விட்டு உரைத்தாள். 

 

அதுவே அவனுக்குச் சில்லென்ற புத்துணர்வைத் தர, தன் சுற்றுப்புறத்தை ஒரு முறை அவன் கண்கள் சுற்றி வர, “அப்படியா? யார் சொன்னா உனக்கு?” என்றன இதழ்கள். 

 

“சித்தி..” என அவள் சொல்லும் போதே சரியாக அவன் விழிகள் கதவிடுக்கில் தரையில் விழும் நிழலைக் கண்டது. அந்த நிழல் உருவத்தின், வரிவடிவில் தன்னவளை அடையாளம் கண்டுகொண்டு துள்ளியது உள்ளம். 

 

“எங்கே உன் சித்தியைக் கூப்பிடு கேட்போம்..” என்றவன் தூண்ட, அவன் மடியில் வாகாய் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தவள் கதவை நோக்கிக் கை நீட்டி, “சித்தி, இங்க வாங்க..” என பெரும் குரலில் கத்தி அழைத்தாள். 

 

இசை வெளிப்படாதிருக்க, எங்கே அவளுக்குக் கேட்கவில்லையோ என நினைத்து சிறுமி மேலும் மேலும் கத்தி அழைக்க, வேறு வழியின்றி தலையை மட்டும் நீட்டி திருட்டுப் பூனை போலே எட்டிப் பார்த்தாள் இசை. அவள் செயலை ரசித்திருந்தவன் சற்றே சத்தம் எழச் சிரித்தான். 

 

அவன் கண்டு கொண்டதால் அவளும் உள்ளே வந்து நிற்க, சிரிப்புடனே குழந்தையை இறக்கிவிட்டவன், “பாட்டிக்கிட்ட போய் பாயசம் வாங்கிச் சாப்பிடு, போடா குட்டிம்மா..” என்றதும் அவள் ஓடி விட்டாள். 

Advertisement