Advertisement

அத்தியாயம் 07

நட்சத்திரங்கள் இல்லாத கருமை வானில் வெண்ணிலவு உலாவும் நேரம். நட்சத்திரங்கள் எல்லாம் அள்ளிக் கோர்த்தது போலே சீரியல் மின் விளக்குகளால் மின்னியது அந்தத் திருமண மண்டபம்.  

 

வாசலில் வாழையும் வரவேற்பில் தேவகியும் நின்றிருக்க, எங்கும் மங்கள இசையும் சுகந்தமான மணமும் தான். சிறுவர்கள் துள்ளி விளையாட, பெரும்பாலும் வண்ணப் பட்டும் மின்னும் பொன்னுமாய் நிறைந்திருந்தது மண்டபம். 

 

தேவகி முகத்திலிருந்த சந்தோஷம் அருள் மனதை நிறைக்க, முகமோ என்றும் போலே.   அனைவரும் மகிழ்ச்சியில் வலம் வர, பிரகாஷ் மட்டுமே இறுகிய முகமாக தன் கடமைகளைச் செய்தான். தங்கைக்குத் திருமணம் என்பதில் மகிழ்ச்சி தான் எனினும், அருளோடு திருமணம் என்பதைத் தான் இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

 

நிச்சியதார்த்தமும் வரவேற்பும் முடிய, அப்போதும் அனைவரும் தளர்வாக அமர்ந்திருந்தனர். அருளின் தொழில் தொடர்பினர், உறவினர் எனப் பெரும் கூட்டமே வாழ்த்திச் சென்றிருக்க, பெரியவர்கள் அவர்களை உணவுண்ண அழைத்துச் சொல்லவும், உறவுகளைக் கவனிக்கவும் விடை கொடுப்பதுமாக இருந்தனர். 

 

வீட்டினர் மட்டும் அதிலும் இளசுகள் மட்டுமே வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கேலி பேசிச் சிரித்து கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் தொழில் நண்பர்களுக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்த அருளின் பார்வை அவ்வப்போது அங்கு இருக்கும் இசையின் மீது பட்டு மீண்டது. இளம் பால் ரோஸ் நிறத்தில் வெள்ளி ஜரிகையிட்ட பட்டும், வெண்கற்கள் பதித்த அணிகலனும் அதற்கு ஏற்ற சிகை அலங்காரமும் தான் கண்களை ஈர்க்கிறதோ என்ற சந்தேகம். 

 

ஜெகன் எப்போதும் அலைபேசியும் கையுமாக இருக்க, அதைச் சொல்லி விக்கியும் மனோவும் கேலி செய்ய அவன் எழுந்து ஓடியே விட்டான். அருள் இல்லாததால் அங்கு விக்கியின் குரல் அதிகமா இருக்க, இசையும் அனைவருடனும் எளிதாகக் கலந்து உரையாடிச் சிரிக்க, அருளுக்கு மனதில் ஏதோ நிம்மதி பரவும் உணர்வு. 

 

சற்று முன் அவள் சோர்வாகத் தெரிகிறாள் என அன்னைக்கு ஜாடை காட்ட, அவர் பாதாம் பால் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார். மற்றவர்கள் உணவு உண்டிருக்க, இன்னும் அவர்கள் மட்டும் உண்ணவில்லை. கையில் வாங்கியவள் எதிரே சிறு பெண் இருப்பதைக் கவனித்து, “குடிக்கிறியா கிருஷ்மிக்குட்டி” என அவள் முன் நீட்டினாள். 

 

அவள் கைகளையும் அதிலிருக்கும் வெண் படலத்தையும் கவனித்தவள், “வேணாம் உங்க கை அழுக்கா இருக்கு” என்றவள் சட்டெனத் தட்டியும் விட, இசையின் புடவையில் சிறிதாகச் சிதறியும் விட்டது. அலர்ந்த அல்லி கருகியதைப் போல் இசையின் முகம் நொடியில் வாட, அருள் அனைத்தையும் கவனித்திருந்தாள். 

 

“அவ இப்போ தான் வயிறு நிறையச் சாப்பிட்டாள்” எனச் சீதா சமாளிக்க, “சின்னப் புள்ள புரியாமல் சொல்லியிருப்பா வாணி” என ராஜியும் உரைத்தாள். அனைவரிடமும் இது போன்ற நிராகரிப்பைப் பார்த்தே பழக்கப்பட்டவள், அந்த பக்குவம் இருக்க, சின்ன தலையசைப்போடு எழுந்து கொண்டாள். 

 

விக்கி, மனோ, ஜெகன் விடியலில் வருவதாகச் சொல்லி வீட்டிற்குச் சென்றுவிட, அனைவரும் உணவுண்டு அவரவர் அறை நோக்கிச் சென்றுவிட, உறக்கம் வராது தன் அறைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தான் அருள்வேலவன். ஓடி விளையாடி ஓய்ந்த கிருஷ்மிதா அறை நோக்கி வந்தாள்.

 

“குட்டிம்மா..” என்றவனின் அழைப்பில் “சித்தப்பா..” என அருகே வந்தவளைக் கைகளில் தூக்கிக்கொண்டான். என்னவோ அவளிடம் மட்டும் கடுமையைக் காட்டுவதில்லை, தவறே செய்தாலும் அதை உணர்த்திவிடுவானே தவிர, கண்டிக்க மாட்டான். 

 

“சாப்பிட்டியா குட்டி..?” என்க, “ம்ம், ஐஸ்கீரிம், சாக்லேட் கூட… அம்மாவுக்கு தெரியாமல்” என்றவள் வாய் மூடி சிரிக்க, உடன் அவனும் சிரித்தான். 

 

அவள் இடது பெருவிரல் அருகே இருக்கும் குட்டி மச்சத்தை அழுத்தித் தடவியவன், “பாரு, சாக்லேட் இழுவி வைச்சிருக்க, உங்கம்மா கண்டுபிடிச்சிட மாட்டாங்களா?” என அறியாதவன் போலே கேட்க, “ம்ச், சித்தப்பா இது மச்சம்” என்றாள் அவன் கைகளைத் தட்டிவிட்டபடி. 

 

“அப்போ போவாதா?” என்க, “ம்கூம்..” என மறுப்பாகத் தலையசைத்தாள். 

 

“இது மாதிரி தான் உங்க இசை சித்தி கைலையும் மச்சமிருக்கு தெரியுமா பாப்பா” என்க, “அது மச்சமா? வெள்ளையா இருக்கு?” என்றாள் சந்தேகமாக. 

 

“என் அறிவுப்பிள்ளை..” என கொஞ்சியவன், “சிலருக்கு அப்படி தான், உங்க சித்தி மாதிரி வெள்ளையா பெருசா இருக்கும். அது அழுக்கில்லை. மச்சம்னா போவாது தானே?” என்க, அவளும் தலையாட்ட, ஆசையாய்த் தலை தடவினான். 

 

எதிலும் இசையை மனதில் வைத்துப் பார்த்துப் பார்த்து செய்தான், ஆனாலும் அவள் கவனித்திருக்கவில்லை. பெண் பார்க்கத் தேவகி அழைத்த போதும் பிரகாஷை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் செல்ல மறுத்து விட்டான். ஆகையால் இரு குடும்பத்தினரும் தான் மீண்டும் சென்று பெண் பார்த்துத் திருமணம் பேசி வந்தனர். 

 

அதன் பின் திருமண உடை எடுக்க அனைவரையும் அவன் கடைக்குத் தான் அழைத்திருந்தான். தேவகி, அவர்கள் வீட்டினரை அழைக்க, பிரகாஷை தவிர, பெண்கள் மூவரும் வந்திருந்தனர். 

 

அருள் அனைவருக்கும் அவர்கள் விரும்பம் போல் எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தான். மனோ, விக்கி இது தான் வாய்ப்பென்று அவர்கள் பக்கம் சென்றுவிட, பெண்கள் பட்டுப்புடவை தேர்விலிருந்தனர். தேவகியும், பத்மாவும் அடர் நிற புடவைகளை இசைக்குத் தேர்வு செய்து காட்ட, மஞ்சளும், ஊதாவும், பச்சையும் அவளுக்குத் திருப்தியைத் தரவில்லை. முகத்தில் ஒரு பிடித்தமின்மை, ஆனாலும் பெரியவர்களின் பேச்சை மறுக்க முடியாத இயலாமை என முழித்தபடி அமர்ந்திருந்தாள். 

தன்னறை கணினியில் பார்த்திருந்தவனுக்கு அவள் முகபாவனையே கொள்ளை கொள்ளும் அழகாகத் தெரிந்தது. இப்போது தான் மீண்டும் பார்க்கிறான், எப்போது ரசிக்க ஆரம்பித்தான் எனத் தெரியாது, ரசிக்கத் தூண்டியது அவள் முகபாவனைகள் தான், எதார்த்தமாகப் பார்த்தவனுக்குப் பின் பார்வையை மீட்க முடியவில்லை. அதிலும் அந்தச் சிறு தாடைக்குழி தொட்டுப் பார்க்கும் ஆசையை தூவி ஈர்த்தது. ஒருவேளை தனக்கு உரிமையானவள் என நினைத்ததால் கூட இருக்கலாம். 

சில நிமிடங்கள் அவள் அவஸ்தைகளை ரசித்துப் பார்த்தவன், பெரியவர்கள் அவர்கள் முடிவை அவள் தலையில் கட்ட, அவள் முழிக்கச் சின்னதாகச் சிரித்தே விட்டான். பின் பணிப்பெண்ணை அழைத்து அவளை அழைத்து வரச் சொன்னான். 

 

அவளை அழைக்க, அன்னையின் முகம் பார்க்க, அவர் கண்ணசைத்த பின்னே பணிப்பெண்னோடு சென்றாள். தேவகிக்கு மகனை எண்ணி மனம் நிறைந்த உணர்வு, அனைத்தும் பார்த்திருந்தவனுக்குச் சிரிப்பு வர, அவர்கள் உள்ளே வருவதற்குள் அதையும் மறைத்திருந்தான். 

 

உள்ளே வந்ததும், “அவங்க காட்டுற புடவை பிடிச்சிருக்கான்னு பாரு” என்றவன் கணினித் திரையிலிருந்து தலை நிமிரவில்லை. 

 

பெண் பார்க்கும் அன்றும் வரவில்லை, இப்போது வார்த்தைக்கு ஒரு வரவேற்பில்லை சரி, பார்வைக்குக் கூடவா பஞ்சம்? அத்தனை உதாசீனமா? என நினைத்தவள் முகம் சுணங்கியபடி திரும்பினாள். இரண்டு பணிப்பெண்கள் ஏற்கனவே அவன் தேர்ந்தெடுத்திருந்த ஐந்து பட்டுப் புடவைகளைக் காட்டினர். 

 

மெல்லிய பால் ரோஸ் நிறத்தில் வெள்ளிச் ஜரிகையிட்டப் பட்டும், வெண் சந்தன நிறத்தில் தங்க ஜரிகையால் நெய்த முகூர்த்தப்பட்டும், இளம் மஞ்சள், சந்தன நிறத்தில் ஒரு பட்டும் என பெரும்பாழுமான புடவைகள் மென்மையான நிறங்களாக இருந்தது. அனைத்தும் அவளை வேறுபடுத்திக்காட்டாது, உடல் நிறத்தோடு பொருந்திப் போகக் கூடியது. 

 

அனைத்துமே அவளுக்குப் பிடித்துவிட, அவன் உதாசீனத்தையும் மறந்து குதூகலமாக அவன் முன் வந்தவள், “எல்லாமே நல்லாயிருக்குங்க..” என்றாள் மலர்ந்த நறுமலராக. 

 

அப்போது மட்டுமே நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “மத்தவுங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கச் சொல்லு, உனக்கும் வேற என்னென்ன வேணுமோ எடுத்துக்கோ” என்றான். 

 

சரியென்பது போல் தலையசைக்க, காதுகளில் ஆடிய சிறு ஜிமிக்கி அவன் கவனம் பறித்தது. ஒரு முறை சுண்டிவிட்டுக் கொஞ்சும் ஆசை! அவளோ சிறு பிள்ளையின் உல்லாசத்தோடு சென்றிருந்தாள். 

 

அதிகாலை புது விடியல், மங்கள இசைகள் முழங்க, மனங்கள் நிறைய இசைவாணியின் வெண் கழுத்தில் பொன் தாலியை அணிவித்தான் அருள்வேலவன். சிறுவர்கள் வாழ்த்த, பெரியோர்கள் ஆசிர்வதிக்க, மற்ற நிகழ்வுகளும் சிறப்பாகத் தொடங்கியது. இசையின் பூரித்த முகமும் அதிலிருந்த புன்னகையும் பிரகாஷிற்கு நிறைவைத் தந்தது. 

 

தன் அன்னையின் முடிவு சரி தானோ என்றொரு நொடி தோன்றியும் விட, அவன் முகத்தின் வழி அவன் எண்ணம் அறிந்த ராஜி மெச்சும் படி பார்த்தாள். 

 

அருள் வீட்டில் மீண்டும் கேட்டதை ராஜி தெரிவிக்க, அப்போதும் பிரகாஷ் இரைச்சலிட்டுச் சண்டையிட்டான் தான். என்னடா இவனோடு வம்பாகிப் போனது, அன்று வேண்டாமென்தற்கும் கத்துகிறான், இன்று கேட்டதற்கும் கத்துகிறான். ராஜி பரிதாப நிலையில் நிற்க, பார்வதி தான் வாதிட்டார். 

 

“அவக்கிட்ட எதுக்குடா கத்துற? இப்போ இந்த சம்பந்தத்திற்கு என்ன குறை?” 

 

“அவன் குறை தான், என் தங்கச்சி தகுதிக்கு அவன் குறை தான்” 

 

“அப்போ இவக்கிட்ட இருக்குற குறை? அதை என்னென்னு சொல்லுவ?”

 

“அம்மா..”

 

“சும்மா கத்தாதேடா, இப்படி இருக்கிற பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையுறதே கஷ்டம் தான். இதுக்கு மேலையும் மாப்பிள்ளை பார்க்குறேன்னு ஒவ்வொருத்தரா கூட்டி வந்து அவள் குறையைக் காட்சிப்படுத்தி அவளை நோகடிக்கப் போறியா?” 

 

“ஏன்மா இப்படியெல்லாம் சொல்லுறீங்க, என் தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளையை நான் பார்ப்பேன்” 

 

“என்னத்தை நீ பார்ப்ப? இப்படி நிதர்சனம் புரியாமல் பேசாதடா, இவளை மாதிரி பொண்ணுங்களை மறுக்கத் தான் செய்வாங்க. இவங்களை மாதிரி ஒரு நல்ல குடும்பம் கிடைக்காது, இங்க இருக்கிறதை விட அவங்க போனா உன் தங்கச்சி நல்லாத் தான் இருப்பாள்”

 

“அதுக்காக அருளை.. அவனை எப்படிம்மா..?”

 

“அவனுக்கு என்ன? உனக்கும் அவனுக்குமான பகையை மனசுல வைச்சி நீ வேண்டாம்னு சொல்லாத, அது உங்களுக்கு உள்ளான பிரச்சனை! எம்பொண்ணுக்கு அமையுற நல்ல வாழ்க்கை நீ கேடுக்காத, இதுக்கும் மேல நீ ஏதாவது பிரச்சனை செய்தால் நாங்க தனியா போய்கிறோம். என் பொண்ணு கல்யாணத்தை நடத்திக்க எனக்குத் தெரியும்”

 

“ஐயோ, இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா..” என பதறிவன், சற்றே தொலைவில் கண்ணீரோடு நின்றிருந்த இசைவாணியைப் பார்த்தான். 

 

அவளும் மௌனமாக நிற்க, “இப்போ முடிவா என்ன தான் சொல்லுற? இந்தக் கல்யாணம் நடக்கும், உன் தங்கச்சிக்கு நல்ல அண்ணனா இருந்து நீ செய்து வைக்கிறையா இல்லை, நாங்க தனியா போய்கிடட்டுமா?” என்றார் கராராக. 

 

இசையின் விழிகளிலிருந்த எதிர்பார்ப்பு பிரகாஷிற்குப் புரிந்தது. “வாணிக்கு சம்மதம்னா பேசுங்க. ஆனால் எந்த இடத்துலையும் அவன் கிட்ட நான் இறங்கிப் போக மாட்டேன்” என்றவன், சென்றே விட்டான். 

 

அதன் பின் தகவல் தெரிவிக்க, மொத்தக் குடும்பமும் பெண் பார்க்க வந்தனர். அவர்கள் பக்கம் அருள் வரவில்லை, இவர்கள் புறம் பிரகாஷூம் வீட்டிலில்லை. பேசியதெல்லாம் பார்வதியும் கார்முகிலனும் தான். 

 

பெண்ணிற்கு எதுவும் செய்யத் தேவையில்லை எனவும், திருமணச்செலவுகள் முதல் இதர செலவுகள் அனைத்துமே தன் பொறுப்பு என அருள் சொல்லியே அனுப்பியிருக்க, இவர்களும் ஏற்றுக் கொண்டனர். என் திருமணத்தை நானே செய்வேன் பிரகாஷ் செய்து வைத்தான் என்ற பெயர் தனக்குத் தேவையில்லை என்பதே அவன் எண்ணமாக இருந்தது. 

 

அவனை எதிர்பார்த்து இருக்கவில்லை எனினும், அவன் வராதது இசைக்குச் சிறு ஏமாற்றத்தைத் தந்தது, இருந்தும் யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அன்று இரவு பிரகாஷ் இதற்கும் ராஜிடம் தான் கத்தினான்.

“ஏங்க இந்த வீட்டுக்குன்னு நாம இன்னும் லோன் கட்டிட்டுத் தானே இருக்கும், அதுவும் போக பெருசா சேமிப்பும் இல்லை, வாணிக்குன்னு செய்வது அவங்களுக்குன்னு சேர்த்து வைத்த நகையைக் கொடுத்திடுவோம். அவங்க பங்குக்கு அவங்க கல்யாணச் செலவு செய்துகிறாங்க எல்லாம் சரி தான். சும்மா கத்தாதீங்க” என அவளும் அடக்கிவிட, அவனும் அளவு பாராது செலவு செய்யும் நிலையில் இல்லை என்பதால் அடங்கினான். 

 

இன்று செய்ய வேண்டிய சடங்குகளைத் தங்கைக்காகச் செய்தான், ஆனால் அருளைப் பார்க்கும் நொடி அவன் முறைக்க, இவன் விறைக்க இப்படியே தான் இருந்தனர். தங்கைக்காக அவன் பொறுமை கொள்ள, தன் திருமணம் என இவனும் சகித்துக் கொண்டான். இருவரும் பிரச்சனை எதுவும் செய்யாததிலே பெரியவர்களுக்கு மனம் நிறைவு.

 

ஆனாலும் தன்னை அடித்தவன் என் பிரகாஷ் மனதிலும் தன்னை அவமானப்படுத்தியவன் என அருள் மனதிலும் இருந்த கோபம் துளியும் குறையவில்லை. கோபம் குறையாது உறவு தளிர் விடாது. 

 

ஒரு வழியாகத் திருமணச்சடங்குள், வாழ்த்துகள், போட்டோ சூட் என விடியலிலிருந்து மதிய விருந்து வரையிலும் கொண்டாட்டம் முடிய, அதன் பின் வீட்டிற்குக் கிளம்பினர். மண்டபத்தின் வாசலிலே பிரகாஷூம், பார்வதியும் விடைகொடுக்க, கலங்கி நின்ற பார்வதியின் கரம் பற்றி தேவகி ஆறுதல் சொல்லிவிட்டே கிளம்பினார். 

 

அருளின் மீது கோபமிருந்த போதும் ராஜியின் குடும்பத்தோடு ஒட்டுதல் இல்லாத போதும் அவர்கள் குடும்பத்தின் மீது நன்மதிப்பு இருந்தது பிரகாஷிற்கு. அதனாலே தங்கையை நிறைவோடு அனுப்பி வைத்தான். 

 

ராஜியும் அவர்களோடு தான் கிளம்பினாள், வீடு செல்லும் முன் அம்மன் கோவிலுக்கு வணங்கச் சென்றனர். பின் குடும்பத்தோடு வீட்டிற்குச் சென்றனர். உறவுகள் சூழ அருள்வேலவனின் மனைவியாக முதல் முறை அவன் வீட்டிற்குள் பிரவேசித்தாள் இசைவாணி. 

Advertisement