Advertisement

அத்தியாயம் 06 

“ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய”

எஸ்.பி.பியின் பக்திக் குரல் காதை நிறைக்க, வண்ணமலரின் நறுமணங்களும் ஊதுபத்தியின் சுகந்தமும் அக்கோவில் மண்டபம் எங்கும் காற்றோடு கலந்திருந்தது. வழக்கத்தை விட அன்று பக்தர்கள் நடமாட்டம் சற்று அதிகப்படியாக இருக்க, கருவறையில் இருக்கும் ஈசனை நோக்கி கரம் குவித்தவாறு கண்மூடி நின்றிருந்தான் அருள்வேலவன். 

 

எப்போதும் உழைக்க வேண்டும், உழைப்பிற்கான சக்தி கொடு என்பதே அவன் வேண்டுதலாக இருக்கும். ஆனால் இன்று முதல் முறையாகப் பொன்னும் பொருளும் வேண்டவில்லை, பெண் வேண்டுமென்று வேண்டினான். அன்னையின் மனநிறைவிற்கேனும் தன் திருமணத்திற்குப் பெண் வேண்டுமென்று வேண்டினான். 

 

தன் முன் நீட்டப்பட்ட ஆரத்தித் தட்டில் காணிக்கை இட்டு, கண்களில் ஆரத்தியை ஒற்றிக்கொண்டான். இறுதியாக, “ஈசனே, எங்கம்மாவுக்கு ஒரு மருமகளைக் கொடுத்திடுப்பா…” வேண்ட, “இந்தாங்க..” என வரம் தருவது போல் கேட்ட குரல் அவன் வேண்டுதலைத் தடை செய்தது. 

 

சட்டென திரும்பிப் பார்க்க, அவனை நோக்கி கை நீட்டியபடி நின்றிருந்தாள் இளம் பெண் ஒருத்தி. அவன் பார்வை அவள் முகத்தில் நிலைக்க, அவள் பார்வை தாழ்ந்து கரத்தைக் காட்ட, அவனும் கவனித்தான். நீட்டிய அவள் கரத்திலிருந்தது அவனது அடையாள அட்டை. 

 

காணிக்கை இடும் போது அவன் சட்டைப்பையிலிருந்து தவறி விழுந்ததை எடுத்திருந்தாள் இசைவாணி. அருளின் கைகளில் விபூதியை வைத்த அர்ச்சகர், அந்த ஒருநொடியில் நகர்த்து விட, கூட்டமும் சிறு தள்ளுமுள்ளோடு அவரை நோக்கித் திரும்ப, தெரியாது ஒரு பெண் அவள் மீது இடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவர், சற்றே முகத்தையும் சுளித்து நகர்ந்தார். 

 

அந்த ஒரு நொடியிலே அனிச்சம் பூவாய் முகம் வாடிய இசை, சட்டெனச் சிறிது நகர்ந்து வர, அவள் பின்னாலே வந்தான் அருள்வேலவன். மண்டபத்தில் நின்றவள் மீண்டும் அவன் அடையாள அட்டையை நீட்ட, வலது கையில் விபூதியிருக்க, ஒரு நொடி யோசித்து நின்றான். 

 

தான் நீட்டிய கரத்தில் பதிந்திருக்கும் அவன் பார்வையிலும் தாமதத்திலும் அவன் தயங்குவதாக நினைத்தவள், “இங்க வைச்சிடுறேன், எடுத்துகோங்க” என அருகே இருக்கும் கல்தூணைக் காட்டினாள். 

 

“இல்லை, இங்க கொண்டாங்க” என்றவன் உள்ளங்கைக்குள் விபூதியிருக்க, நுனிவிரலால் வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ்..” என்றான். 

 

ஏதேனும் முக்கிய வேலையாகக் கூடச் செல்லலாம், மறுக்காது தன் கைகளால் வாங்கியதிலே அவளுக்கு நன்மதிப்புத் தோன்றியது. சிறு தலையசைப்போடு ஏற்றவள், “எஸ்க்யூஸ்மி…” என்றபடி சட்டென அவன் கைகளிலிருந்த விபூதியை நுனிவிரலால் தொட்டு நுதலில் ஒட்டிக்கொண்டாள்.

 

அவனின் விரிந்த விழிகள் சுருங்க, தலையசைப்போடு நகர்ந்தான். சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு சிறு சிறு கோவில்களையும் நின்று வேண்டிச் செல்ல, அவளும் அவன் பின்னே வந்து கொண்டே இருந்தாள். ஒருமுறை தன் சட்டைப் பைகளைத் தடவிப் பார்த்துக் கொண்டவன், ‘தான் எதையும் தவறவிடவில்லையே பின் ஏன் தன்னை தொடர்கிறாள்?’ என நினைத்தான். 

 

‘பொது இடம் தானே, ஒரு வேளை அவளும் சாமி தான் கூம்பிடுகிறாள் போலும்’ என்றும் தோன்ற, கண்டுகொள்ளாது கோயிலிருந்து கிளம்பிவிட்டான். வீடு நோக்கிக் கிளம்பியவன் இரு சங்கர வாகனத்தில் மருத்துவமனையைத் தாண்டுகையிலே அன்னைக்கு மாத்திரை வாங்க வேண்டுமென்ற நினைவும் வந்தது. 

 

அருகே இருக்கும் மருத்துவமனையில் வண்டியை நிறுத்தியவன், மருந்தகம் நோக்கிச் சென்றான். அப்போதும் இசைவாணி பின் வருவதை அவன் கண்களும் கவனித்தன. ‘பார்ப்பதற்கும் நல்ல பெண் போலே தெரிகிறாள். தவறாக நினைக்கும் படியான தோற்றமில்லை, பின் ஏன் தன்னைப் பின் தொடர்கிறாள்?’ என்ற யோசனை. 

 

மருந்தகத்தில் மருந்து வாங்கிவிட்டுத் திரும்பியவனின் விழிகள் அங்குமிங்கும் சுழன்றது. ‘சில நொடிகள் முன்பு வரை இருந்தாளே எங்கே அவள்?’ யோசனையில் மெல்ல நடைபோட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். 

 

யாரவள்? அவளைப் பற்றிய எண்ணம் உனக்கு ஏன்? மனம் குட்ட, தன்னிலை உணர்ந்தவன் மேலும் நடக்க, “அருள் அண்ணா..” எனக் கேட்ட குரலில் திரும்பினான். காத்திருப்போர் நாற்காலியில் ராஜி அமர்ந்திருக்க, அவள் அருகே தண்ணீர் பாட்டிலோடு நின்றிருந்தாள் அவள். 

 

அருகே சென்றவன், “செக்கப் வந்தியா?” என்க, ஆமென அவள் தலையாட்ட, சுற்றும் முற்றும் பார்த்தான். 

 

“ஏன் தனியா வந்திருக்க? நம்ம வீட்டுல இருந்து யாரும் கூட வரலையா?” என்க, அதற்கும் அவள் ஆமென்றாள்.

 

“எங்கே உன் காதல் கணவன், கூட வரணும்னு தோனலை? பொறுப்பு இருந்தால் தானே? தனியா விட்டுட்டு எப்படி அவனால நிம்மதியா இருக்க முடியுது? இப்படிக் கஷ்டப்படத் தான் பெரும்பாடுபட்டுப் போராடி அவனைக் கட்டிகிட்டியா?” எனப் பொறுமை இல்லாது பொது இடம் என்றும் பாராது ஆற்றாமையில் கேட்டான். 

 

கணவன் மீது கோபமிருந்த போதும் அவனைக் குறைவாகப் பேசுவதை ராஜியால் ஏற்க முடியவில்லை. அதிலும் இசையை யாரென்று அறியாது அவன் பேசி விட, ராஜிக்குத் தான் சங்கடமாக இருந்தது. 

 

“அண்ணா..” என அடிக்குரலில் அழுத்தமாக அழைத்தவள், “அவருக்கு இன்பார்ட்டன்ட் வொர்க் இருக்கு, அதான் அவர் தங்கச்சியை அனுப்பி வைச்சிருக்கார்” என அவனைப் பேசவிடாது இசையைக் கை காட்டினாள். 

 

சட்டென அவன் பார்வை இசை மீது தாவ, “இவங்க தான் எங்க அருள் அண்ணன்” என்றாள் ராஜி. தங்களை நோக்கி வந்ததிலிருந்து இசையும் அவனைத் தான் பார்த்திருந்தாள். தெரிந்தவர் போலே எனப் பார்த்திருந்தவள், அண்ணன் என்றதும் பார்வையைத் தாழ்த்தினாள். 

 

தன்னை நிராகரித்தவர் என அவள் மனதிலும் தனக்காகப் பார்த்த பெண் என அவன் மனதிலும் ஒரே சேரத் தோன்றியது. 

 

தவறாக தானேதும் சொல்லவில்லை என்பது போல் நிலையாகப் பார்த்தவன், “செக்கப் முடிச்சதா? நான் காத்திருக்கவா?” என்றான். 

 

சரியென்ற ராஜியை செவிலியர் அழைக்க, மருத்துவர் அறை நோக்கிச் சென்றாள். அருளின் பார்வை எதிரே இருந்த இசையின் மீது தான் இருந்தது. முகம், கழுத்து, கை என நிதானமாகப் பார்வையிட்டான். அதிலும் இருந்தும் இல்லை எனச் சொல்லும் படியாக இருந்த தாடை குழியில் ஒரு ஈர்ப்பு! ‘அன்னை சொல்லிய போதே ஒரு முறை பார்த்திருக்கலாமோ? குறை காட்டி மறுத்ததாக நினைத்து விடுவாளோ?’ என்ற சிறு பதைபதைப்பு. 

 

சில நிமிடங்கள் யோசனையோடு கைகளைப் பிசைந்தவள், பேசிவிடும் முடிவோடு எழுந்தாள். அவனையும் அறியாது, அவன் முன்கோபமும் அறியாது அருகே வந்திருந்தாள். 

 

அவனும் யோசனையோடு எழ, “அண்ணி கேட்க மாட்டேங்கிறாங்க, நான் கூப்பிட்டேன். பிரகாஷ் அண்ணா மேல கோபம் போலே அவனும் வந்து கூப்பிட மாட்டான். வீட்டுக்கு வரச் சொல்லுங்களேன்” என்றாள் வேண்டுதல் போலே. முதல் முறையாகப் பேசியதில் சிறு தயக்கமும் வேறு. 

 

தங்களைப் பற்றியோ, தான் மறுத்ததைப் பற்றியோ கேள்வி கேட்பாள் என எதிர்பார்க்க, ஆனால் அவளோ பிரகாஷைப் பற்றி பேசியதில் ஆத்திரம் தான் கட்டுக்கடங்காமல் வந்தது. 

“கட்டிக்கிட்ட பொண்ணை ஒழுங்கா வைத்து வாழத் துப்பில்லை, இதுல அவனுக்கு சப்போர்ட்க்கு வேற நீயும் வர்றியா?” என அடிப் பற்களைக் கடித்தபடி கோபமோடு கேட்க, அவனின் இந்த பரிமாணத்தைத் தாங்காது பயந்தவள் ஒரு அடிப் பின் வாங்கி நின்றாள். 

   

‘ஏதோ இருவருக்குள்ளும் சின்ன மனஸ்தாபம். அதற்காகத் தன் சகோதரனை இவ்வளவு குறைவாகப் பேசிவிடுவானா?’ என அவளுக்கும் கோபம் புகையத் தொடங்கியது. 

 

பல்லைக் கடித்தவள், “அண்ணியை நல்லா தான் பார்த்துக்குறோம்” என்றாள் ரோஷமுடன். 

 

“தெரியுது உங்க லட்சணம். போய் சொல்லு, அவன் கோபம் எதுவா இருந்தாலும் எங்கிட்ட காட்டச் சொல்லு, அதை விட்டுட்டுக் கர்ப்பமா இருக்கிற பொண்ணுக்கிட்ட காட்டினால்  திரும்பவும் மூஞ்சி முகரையைப் பேர்த்திடுவேன்” 

 

அவன் மிரட்டலுக்கு சிறிதும் அசரவில்லை அவள். தங்கள் மீது தவறில்லாத போது ஏன் பயப்பட வேண்டும் என்ற நிமிர்வு அவளுக்கு! 

 

“சண்டையே உங்களால தான், நீங்க என்னை வேண்டாம்னு சொன்னதால தான்” பதிலுக்குப் பதில் பேசிவிடும் வேகத்தில் பழியை அவன் மீதே போட்டு விட்டாள். 

 

பின்னே அதிகப்படியாக உளறிவிட்டோமோ என்ற படபடப்பு வர, அதையும் வெளிக்காட்டாது நிமிர்வாக நிற்க, அவன் பார்வையும் நிதானமாக ஆராய்ந்தது. 

 

“நியாயமா அவன் சந்தோஷப்பட்டு இருக்கணுமே..” எனச் சந்தேகம் போலே மென்குரலில் கேட்டவன், “ஏன், அவனுக்கு ஆசையா? இல்லை உனக்கு ஆசையா?” என்றான் எள்ளலோடு. 

 

ஜிவுஜிவுவென முகம் சிவக்க, காது மடல்கள் விரைக்க, சினத்தோடு முறைக்க மட்டுமே முடித்தவளுக்கு மறுத்துரைக்க வார்த்தையேதும் வரவில்லை. ‘முகம் பாராத இவன் மீது ஆசை வேறு வருமாம்?’ ஆற்றாமையில் பெரிதாக மூச்சு வாங்கினாள். 

 

இருக்கும் இடமும் தங்கள் வாக்குவாதமும் பிறர் பார்வையில் பல விதமாகக் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பது புரிய, அவன் கோபத்தை கட்டுப்படுத்தி மௌனமானான். 

 

அதற்குள் ராஜியும் வர, அருள் அலைபேசியில் யாருக்கோ அழைத்தபடி முன்னே நடக்கத் தொடங்கினான். இருவர் முகத்தையும் நொடியில் ஆராய்ந்தவளுக்கு, ஏதோ சரியில்லை என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது. 

 

மருத்துவமனையின் வாசலுக்கு வந்திருந்தவன், “ஏதுவும் சாப்பிடுறீங்களா?” என பொதுவாகக் கேட்டபடி அலைபேசியை ஆராய, ராஜி இசையைப் பார்த்தாள். 

 

அவள் மறுக்க, இவளும் வேண்டாம் என்க, சில நிமிடங்களிலே அவர்கள் முன் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. 

 

“அருள்ண்ணே வணக்கமுண்ணே..” என ஓட்டுநர் இருக்கையிலிருந்த இளைஞன் சல்யூட் அடிக்க, தலையசைத்தான். 

 

“ஏறுங்க..” என்ற குரலில் இசை நிமிர்ந்தும் பாராது உள்ளே ஏறிவிட, ராஜி, “நான் அங்க போல உன்னோட வீட்டுக்கு வரேன்” என்றாள் அடமாக. 

 

“ராஜி..” அதட்டலாக அழைத்தவன், “உன்னோட முடிவுகளை எப்பவும் நீயே தேர்ந்தெடுத்துக்கிற, அது சரியா அமையாவிட்டாலும் அதைச் சரி படுத்திக்க வேண்டிய பொறுப்பும் உன்னோடது தான். இது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை அதுவும் பிடிவாதமாக. பின்ன ஏன் உன்னை பெத்தவுங்களையும் உனக்குப் பிறக்கப் போற புள்ளையையும் கஷ்டப்படுத்துற? உங்க வீட்டுக்குக் கிளம்பு” என்றான். 

 

அவளின் திருமணத்திற்கு பிறகு இன்று தான் இவ்வளவு பேசி இருக்கிறான். இவ்வளவு தூரம் அவன் இறங்கி வந்ததே பெரிது என்னும் போது அவளும் பிடிவாதத்தைக் கை விட்டாள். அதுமட்டுமின்றி பிரகாஷை பார்க்கும் ஏக்கமு இருக்க, ராஜியும் அமைதியோடு ஏறினாள். 

ஏற்கனவே சூடு கண்ட பூனையான அருள், அவள் விஷயத்தில் விலகி இருந்தான். இப்போதும் இதைச் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் ஏனோ இசையின் கெஞ்சல் அவனை இளக வைத்திருந்தது. அதையும் வெளிக்காட்டாது அறிவுரை போலே சொல்லிவிட்டான். 

 

“மெல்லப் பத்திரமாக் கூட்டிட்டு போ, இறக்கிவிட்டுக் கால் பண்ணிடு முருகா” என அருள், ஆட்டோ ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருக்க, இசையின் பார்வை அவன் மீது ஒரு நொடி தவழ்ந்து மீண்டது. என்ன தான் சண்டையிட்ட போதும் தான் வேண்டியதற்காக ராஜியை அனுப்பி வைத்ததில் நீர்க் குமிழி போன்ற சிறு இன்பக் குமிழிகள் அவள் இதயத்தை நனைத்தது. 

 

அதை உணர்ந்தானோ என்னவோ சட்டென அருள் நிமிர, அவள் முகம் குனிந்து விட்டாள். கிளம்பும் நொடி வரையிலும் அவள் நிமிராது போக, அவன் தான் இறுதி வரையிலும் ஏக்கமாகப் பார்த்திருந்தான். 

 

அவள் அண்ணனைப் பேசியது வரை சரி, ஆனால் அவளைப் பேசியது தவறோ என்ற எண்ணம். அவளைப் பாதித்து விட்டதோ என ஆராயும் பார்வை, ஆனாலும் அவன் ஆராய்ச்சிக்கு இடம் கொடாது, இறுதி வரை முகம் நிமிராமலே சென்றுவிட்டாள் அழுத்தக்காரி. 

 

தேவகி, பத்மாவின் தீவிரத் தேடலில் ஜெகனுக்கு அவன் எதிர்பார்ப்பிற்குத் தகுந்த பெண் கிடைத்துவிட, அருளுக்கு இன்னும் அமையவில்லை. தேவகி விரதம், பூஜை என வேண்டுதல் வைத்ததோடு மேலும் மனதை அழுத்திக் கொண்டார். 

 

அதன் விளைவு, தேவகி மருத்துவமனையில் படுக்க, மனோ அழைக்க, அருள் பதறிப் போய் ஓடி வந்தான். மனைவி ஒரு நாள் படுத்ததிலே பாரி கலங்கிப் போய் அமர்ந்துவிட, அருளால் தாங்க முடியவில்லை. 

 

இரத்த அழுத்தம் அதிகரிப்பு, உணவு உண்ணாமையே மயக்கத்திற்குக் காரணமென மருத்துவர் அறிவிக்க, சினத்தோடு அன்னையின் அறைக்குள் சென்றான். பாரி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, மனோ அன்னையின் அருகில் நின்றிருக்க, தேவகியின் ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, அருளின் வருகையை பார்த்துச் சட்டெனக் கண்மூடினார். 

 

“எத்தனை தடவைம்மா சொல்லுறது, ஏன் இப்படி உங்களையே வருத்திக்கிறீங்க? நீங்க முழிச்சுத் தான் இருக்கீங்கனு தெரியும், இங்க பாருங்க” என்க, மகனிடம் தனது நடிப்புத்திறமை பலிக்காததில் மெல்ல கண்ணைத் திறந்தார். 

 

“உனக்குத் தெரியும் தானேம்மா, நீ இல்லாம எங்களால எப்படி? ஏன்மா..?” என்றான் இறங்கிய குரலில். 

 

மூவரின் முகத்தையும் பார்த்தவர், “அதான் என் கவலையும், நான் இல்லைனா எனக்கு அடித்து இந்த குடும்பத்தைக் கவனித்துக்க, எம்புள்ளைகளைப் பார்த்துக்க ஒரு மருமகள் வேணும்டா” என்றார். அருளும் தான் என்ன செய்வான்?

 

“அது அது நேரம் காலம் வரும் போது நடக்கும்மா” ஆறுதலுக்கு அவன் உரைக்க, “என்ன நேரம் வரணும்? எல்லாம் உன் பிடிவாதம் தான்டா. எல்லாமே பொருந்தி வந்த சம்பந்தத்தை நீ தானே வேண்டாம்னு சொன்ன? அந்த பாவமோ என்னவோ அடுத்து அமைய மாட்டேங்குது” என்றவரின் கண்கள் கலங்கியது. 

 

“அம்மா..” மென்மையாக அழைத்தபடி கட்டிலில் அமர்ந்தவன், தேவகியின் கைகளைப் பற்றிக் கொள்ள, “பெத்தவளையே இப்படிப் பேச வைச்சிட்டியே” என மேலும் கலங்கினார். 

 

“ஏன்மா? எனக்குப் பிடிக்கலை, அதுக்குன்னு வேண்டாம் சொன்னாத் தப்பா? அப்படிப் பார்த்தா என்னை வேண்டாம்னு சொன்னவங்களுக்கு எல்லாம் என்ன வேற வரன் அமையாமலா போய் விட்டாது? பாவம் அது இதுன்னு சொல்லுறீங்க” என்றான். 

 

ஆனால் அவன் மனதிலும் அந்த உறுத்தல் ஓரம் இருக்கவே செய்தது. 

“நீ பிடிக்கலைன்னு சொன்னா அதுக்கு ஏத்துக்க கூடிய காரணமும் சொல்ல வேண்டாமா? ராஜி நாத்தனார், அந்த பொண்ணு, அவளுக்கு என்னடா குறை? நீ அவன் அண்ணனுக்காக வேண்டாம்னு சொன்ன, ஆனால் அவங்க அவள் குறை காட்டி வேண்டாம்னு சொல்லுறதாத் தானே நினைப்பாங்க? அந்த மனசை எவ்வளவு நோகடிச்சி இருக்கன்னு பாரு, அது பாவமில்லையா?” 

 

அவர் பேசும் போதே அருளின் மனம் நிலையில்லாது தத்தளிக்க, இசையின் முகம் நினைவில் வந்து உரசியது. 

 

அருள் மௌனமாக இருக்க, ‘சாதாரண மயக்கத்திற்கு அம்மா என்ன ஸீன் போடுது, அருளே கவுந்திடுவான் போலே’ என மனோ மனதில் நினைத்தான். 

 

தான் செய்தது நியாயமே இல்லை என அருளுக்கும் மனது உறுத்த, “அவள் ஜாதகம் மட்டும் தான்டா உனக்கு அம்சமா பொருந்தி வந்தது. ஏன் அருள் திரும்பவும் அவங்கக்கிட்ட கேட்போமா..?” என மெல்லிய குரலில் வேண்டினார் தேவகி. 

 

‘அட ஏன்மா நீ வேற சும்மா இல்லாம அவனைச் சீண்டுற? ஹாஸ்பிடல்னு கூட பார்க்கமா இங்கையே ருந்திரதாண்டவம் ஆடப் போறான் போ’ என நினைத்து மனோ பதைபதைப்போடு தேவகியின் அருகே வந்தான். 

 

“போதும்மா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்ற மனோவை, இடையில் தடுக்கும் படியாகக் கேட்டது, “சரிம்மா, கேளுங்க” என்ற அருளின் குரல். 

 

பிரபஞ்சமே நின்றுவிட்டதை போலே அதிர்ந்த மனோ, “சொன்னது நீ தானா? சொல் சொல்..” என ராகமிழுங்க, அவன் முதுகில் ஒரு அடி வைத்த அருள், மருந்தகம் வரைக்கும் சென்று வருவதாக எழுந்து சென்றுவிட்டான்.  

 

“அப்பனே என் வேண்டுதலும் விரதமும் பலிச்சிடுச்சு” எனத் துள்ளலோடு எழுந்தமர்ந்தார் தேவகி. 

 

“யம்மா, பார்த்து மெல்லமோ..” என்றான் மனோவும் சந்தோஷமாக, “இப்பவே ராஜிக்குப் போனை போடுடா” என்றார். 

 

“எப்படிம்மா அண்ணன் சம்மதிச்சான்? என்னாலே நம்மவே முடியலையே..!” 

 

“என் பெர்பாமன்ஸ் பார்த்து மிரண்டுட்டான் போலே” எனத் தேவகி பெருமை கூற, “பலே! பலே! பத்மினி” பாராட்ட, பார்த்திருந்த பாரியும் முகம் மலர்ந்தார். 

 

அருளின் மனசாட்சியே அவனை கேலி செய்யும் நிலையிலிருந்தது. ‘மீண்டும் எப்போதுடா கேட்பார்கள், உடனே சம்மதம் தெரிவிக்கலாம் எனக் காத்திருந்தது போலே இருக்கிறதோ தன் செயல்?’ என நினைத்தான். 

 

எல்லாம் உள்ளுக்குள் இருந்து இம்சிக்கும் இசையால் தான். காதலா என்றால் தெரியாது, ஆனால் அவளைக் கடந்துவிட முடியவில்லை. பார்க்காமல் இருந்திருந்தால் திடமாக இருந்திருப்பான், ஆனால் பார்த்த பின் தான் இந்த உறுத்தல். 

 

அன்றொரு நாள் பார்த்தது தான், இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அடிக்கடி வருவதுண்டு அவள் நினைவு, அதுவும் அன்னை பெண்களின் புகைப்படத்தைக் காண்பிக்கையில் எல்லாம் அவனால் அவளைத் தவிர்ந்து யாரையும் தேர்வு செய்திட முடியவில்லை. 

 

அவள் ஒன்றும் அவனின் அத்தியாவசியமில்லை, அவளுக்காக உருகவில்லை. உள்ளத்திலிருந்த உறுத்தல் தான் என்றில்லை, யாராகவோ இருப்பது அவளாகவே இருக்கட்டுமே என்றெண்ணம்.

Advertisement