Advertisement

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 17

சரோஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அபிராமியம்மன் கோவிலில் அருண் பெயரில் பூஜையும், அன்னதானமும் நடந்துகொண்டு இருந்தது. அனைத்தும் இளாவின் மேற்பார்வையில். கோபியும் அங்கே அவனோடு இருக்க, இளம்பரிதி அவனை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை.

சரோஜாவும் ரேணுகாவும் கூட அங்கேதான் இருந்தார்கள். சரோஜா கோபியை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தார்.

அம்மாவின் முன் வாய் கூட அவனுக்குத் திறக்க முடியவில்லை.

ஒரு நேரத்தில் இரு பெண்களை ஏமாற்றி, இப்போது ஒன்றுமே தெரியாத நல்லவன் போல் நிற்கிறான்?!
தான் பெற்ற மகனா இவன் என்ற கேள்வியும், துயரமும் அவருக்கு தீரவேயில்லை. அருணுக்கு பதில் இவன் கோமாவில் படுத்திருந்தால் கூட தேவலாம் என்று தோன்றிவிட்டது.

ரேணுதான் தன் கணவனிடம் “ஏங்க.. அன்னதானம் செய்றது அருண்காக. நீங்க இப்படி கை கட்டி நின்னு வேடிக்கைப் பாக்குறீங்க.. வாங்க பரிமாறலாம்..” என,

“அதெல்லாம் வேணாம் சும்மா நில்லு…” என்று கோபி சொல்ல,

“ஏங்க…” என்று அவள் எதோ சொல்ல வருவதற்குள், தியாகு கோபியைப் பார்த்தபடி கடந்து செல்ல, ரேணுகா யாரோ என்று நிற்க, ஒருநொடியில் கோபிக்கு குப்பென்று வியர்த்துவிட்டது.

‘இவனா?!! இவன் இங்க என்ன செய்றான்…’ என்று பார்க்க,
தியாகு ஒரு வில்லச் சிரிப்போடு மெதுவாய் திரும்பிப் பார்த்தபடி செல்ல, வேறு எதற்கோ அங்கே வந்துகொண்டு இருந்த இளாவின் பார்வையில் அனைத்தும் பட,

‘எவன் இவன்… இப்படி பாக்குறான்…’ என்று பார்த்தவனின் கண்கள், அப்படியே கோபியைக் காண, அவனின் அஞ்சிய தோற்றம் தான் கண்ணில் பட்டது.

கண்கள் இடுங்க, நின்ற இடத்திலேயே நின்றவன், என்ன நடக்கிறது என்று நோட்டம் விட கோபியோ “ரேணு வா நம்ம கிளம்பலாம்…” என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

“கிளம்பலாமா?! என்னங்க இப்போதானே அன்னதானம் ஆரம்பிச்சு இருக்கு…” என,

“அ.. அதெல்லாம் இளா பார்த்துப்பான்.. நீ வா போலாம்…” என்றவன் அடுத்து “அம்மா வா கிளம்புவோம்…” என,
சரோஜாவோ அவனை அப்படி ஒரு முறை முறைத்தார்.

“ம்மா… எ.. எனக்கு எப்படியோ இருக்கு.. பாரு வேர்க்குது.. என்னவோ செய்யுது…” என, அப்போதும் சரோஜா அசையவில்லை ஆனால் ரேணு சற்றே பயந்து

“என்னங்க என்ன செய்து..?” என்று பதறினாள்.
பேச்செல்லாம் இவர்களிடம் இருந்தாலும், கோபிக்கு அவ்வப்போது பார்வை சற்று தூரத்தில் நின்று இருந்த தியாகுவிடம் சென்று வர, இளா அனைத்தையும் ஒரு பார்வையாளனாய் தான் பார்த்து இருந்தான்.

தியாகுவிற்கோ கோபியின் இந்த பயமும் பதற்றமும் கண்டு அப்படியொரு சிரிப்பு. ஷாலினியின் வாழ்வை கேள்வி குறியாக்கியவனை இத்தோடு விடுவதா?!! கோபியை மட்டுமே கண்டபடி அவர்களை அவன் நெருங்கி வர, மீண்டும் இளா அவர்களை நோக்கி தன் கால்களை எடுத்து வைத்திருந்தான்.

கோபி நேராய் வந்தவன் சரோஜாவிடம் “அம்மா நல்லாருக்கீங்களா?!” என,

அறிமுகம் இல்லாத பார்வை பார்த்தவர் “ம்ம்…” என்றுவிட்டு “யார் தம்பி நீங்க..? எனக்கு அடையாளம் தெரியலையே…” என,

“உங்களுக்கு என்னைத் தெரியாதுங்கம்மா.. ஆனா இதோ இவரை, அய்யாவை எல்லாம் எனக்கு ரொம்பவே தெரியும்…” என,

‘யாரிவன்…?!’ என்பதுபோல் பார்த்தார்.

கோபிக்கு நொடியில் கை கால் எல்லாம் உதறல் எடுத்துவிட்டது. வார்த்தைகளை தேட, இளம்பரிதி வந்தவன் “யார் நீங்க..?!” என்றான் நேரடியாக தியாகுவிடம்.

“கோபியை, அய்யாவை எல்லாம் நல்லா தெரியுமாம்…” என்று சரோஜா சொல்ல,

“அப்படியா?!” என்றவன் தியாகுவை நேராய் பார்த்து

“ஆனா எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே…” என, கோபிக்கு அப்போதுதான் சற்றே மூச்சு விட முடிவது போலிருந்தது.

தியாகுவோ இளாவை கொஞ்சமும் அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனது கணிப்பெல்லாம் தியாகு பற்றியும், வெற்றிவேலன் பற்றியுமே இருந்திட அங்கே இளம்பரிதி என்பவனை அவன் எதிர்பார்க்கவில்லை.
அவனை யாரென்றும் அத்துனை தெரியவில்லை.

ஷாலினி விஷயம் புரிந்ததுமே இளா அங்கிருந்து விலகி இருந்தானே..!

இளம்பரிதி உடனிருக்கிறான் என்ற தைரியத்தில் “அம்மா நம்மள தெரிஞ்சவங்க பல பேர் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் நமக்கும் தெரியனும்னு அவசியமில்லை.. வாங்க கிளம்புவோம்…” என்று நகரப் பார்க்க,

“நான்.. நானே கிளம்புறேன்…” என்ற தியாகு, மீண்டும் அதே புன்னகை சிந்தி கோபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்ப, சரோஜாவிற்கு அப்போது வித்தியாசமாய் எதையும் நினைத்திட முடியவில்லை.

சொல்லப்போனால் கோபி இங்கே கோவிலுக்கு கிளம்பியே இருக்கவில்லை. ரேணு தான் பிடிவாதம் செய்து அழைத்து வந்திருந்தாள். இப்படியொரு பூஜை, அன்னதானம் என்பதே அவனுக்கு அன்றைய தினம் காலையில் தான் தெரியும்.
சரோஜாவிடம், கோபி “ம்மா கிளம்பலாம்…” என்று திரும்பச் சொல்ல,

“உன்னை யார் இங்க வர சொன்னது..?” என்றார் பட்டென்று.

“அம்மா..!”

“நீயா வந்துட்டு இப்போ ஏன் கிளம்பலாம் கிளம்பலாம்னு சொல்லிட்டு இருக்க? போறதுன்னா போ.. அவ்வளோதான்.. எனக்கு வரத் தெரியும்…” என்றிட, ரேணுவிற்குக் கூட ஏன் இவர் இப்படி பேசுகிறார் என்றானது.

“ரேணு.. நீயும் கிளம்புறதுன்னா கிளம்பு.. நான் இளாவோட வீட்டுக்கு வர்றேன்..” என,

“இல்லத்தை.. நம்ம சேர்ந்தே போவோம்…” என்றாள்.
இத்தனை சம்பாசனைகளுக்கும் இளம்பரிதி கோபியை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவனிடம் தெரியும் சிறு சிறு மாறுதல்களும் அவனின் கண்களுத் தப்பவில்லை.

ஆக, இப்போது வந்தவனை இவனுக்கு தெரிந்திருக்கிறது. எதற்கோ அவனைக் கண்டு அஞ்சுகிறான் என்று தோன்ற ‘இன்னும் என்ன பிரச்சனை மறைச்சு வச்சிருக்கானோ…’ என்று நினைத்தான்.

ரேணு சரோஜாவோடு பேசியபடி நிற்க, இளா மெதுவாய் கோபியிடம் “யாரிவன்..?” என,

“ஆ!!” என்று திகைத்தவன், “எ.. எனக்குத் தெரியாது…” என்றான் வேகமாய்.

“நம்புறது போல இல்லையே…”

“நி… நிஜமா…” என்றவன், இன்னும் தியாகு அங்கே எங்காவது இருக்கின்றானா என்று சுற்றிப் பார்க்க,

“இப்போ பதில் சொல்லலை… இதோ இப்படியே வெளிய போய் அவனையே கேட்பேன்…” என்று இளா இறுகிய குரலில் சொல்ல,

“அய்யோ..! வேணாம்…” என்றான் கோபி பட்டென்று.

‘பதில் சொல்…’ என்பதுபோல் இளம்பரிதி பார்க்க,

“அ… அவன்.. அவன் அ.. அந்த ஷாலினியோட அண்ணன்…” என, இளாவிற்கே கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது.

இருந்தும் “அந்த ஷாலினி..?!” என்று நக்கலாய் கோபியை பார்த்துச் சொல்ல, கோபிக்கு பதிலே சொல்ல முடியவில்லை.

ஒன்றும் சொல்லாது அப்படியே நிற்க “பழகும் போகுது எங்க போச்சு இதெல்லாம்…!” என்ற இளா பின் இருக்கும் இடம் உணர்ந்து “நீயெல்லாம் இன்னும் அனுபவிக்கனும்..” என்றுவிட்டு அன்னதானம் நடக்கும் இடம் சென்றுவிட்டான்.

சரோஜா தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து முடித்தவன், அவனின் வீடு செல்ல, வீட்டினில் பெண்கள் மூவரும் தான் இருந்தனர்.

அம்மாவும் பெண்ணும் ஹாலில் தலையணை போட்டு டிவி பார்த்துக்கொண்டு இருக்க, வானதி அவர்களின் அறையில் இருந்தாள் போலும்.

இளம்பரிதியின் பைக் சத்தம் கேட்டது தான். எழுந்து வெளியே செல்வோம் என்று தோன்றினாலும், ‘என்ன புதுசா உனக்கு..?’ என்று தன்னை தானே அடக்கியவள், எப்படியும் அவன் அறைக்குள்ளே வருவான் தானே என்று தான் செய்துகொண்டு இருந்த வேலையை தொடர்ந்தாள் வானதி.

வீட்டினுள் வந்தவனின் பார்வை, அம்மா தங்கை இருவரையும் தாண்டி வானதியையும் தேட மோகனாவோ

“அவனுக்கு தண்ணி எடுத்துக் குடு…” என்று மகளிடம் சொல்ல,

“ம்மா… அண்ணிட்ட சொல்லும்மா…” என்றாள் தெய்வா.

“அவ உள்ள எதோ வேலை செஞ்சிட்டு இருந்தா…” என்ற மோகனா எழுந்து அமர,

“பரவாயில்லம்மா…” என்றவனுக்கு ‘என்ன வேலையா இருந்தா என்ன? வர முடியாதா இவளுக்கு?’ என்று தோன்றியது.

அவனுக்குத் தெரியவில்லை. அப்படியே அவள் வெளி வந்தாலும், வெறுமெனே சும்மாதான் நிற்கப் போகிறாள் என்று. வெளியே சென்றுவிட்டு வந்தால் தண்ணீர் எடுத்துக் குடுக்கவேண்டும், எதுவும் வேண்டுமா என்று விசாரிக்கவேண்டும், கவனிக்கவேண்டும் போன்ற விஷயங்கள் எல்லாம் அவளுக்கு எட்டாத விஷயம் என்று அவனுக்குப் புரியவில்லை.

சில நிமிடங்கள் ஹாலில் அமர்ந்து இருந்தவன், மோகனா நீர் கொண்டு வந்துத் தரவும், வாங்கிக் குடித்துவிட்டு, அங்கே அறைக்குள் செல்ல, இவன் சென்ற நொடி வானதி பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்த்த விதத்திலேயே உன் வரவை நான் எதிர்பார்த்தேன் என்ற செய்தி இருக்க, ‘ஆமா இப்படி பாக்குறதுல மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை…’ என்று இளா முணுமுணுக்க,

“வேலை எல்லாம் முடிஞ்சதா?” என்றாள் அமர்ந்தபடியே.

“ம்ம்…” என்றவன் சட்டையை கலட்டியபடி பேச,

அவளும் அதற்குமேல் என்ன கேட்பது என அறியாது “ம்ம்…” சொல்லி மீண்டும் அவளின் மடி கணினியில் பார்வையை செலுத்த, சின்னதாய் ஓர் ஏமாற்றம் இளாவினுள் படர்ந்தது.

இதுவே அவளிடம் இருந்து வரும் அதிகப் படியான விசயம்தான் என்பது கணவனாய் போன இளம்பரிதிக்கு அவ்வப்போது மறந்துவிடுகிறது. இளாவின் அப்பாவெல்லாம் வீடு வந்தால், மோகனா அத்துனை பேசுவார். அதனைப் பார்த்து வளர்ந்தவனுக்கு மனதும் அப்படித்தான் எதிர்பார்ததுவோ என்னவோ.
காலையில் போனவன் இப்போதுதான் வருகிறான். உண்டானா என்றுகூட கேட்கக் தோன்றாதா?! என்று அவனுக்குத் தோன்ற,

‘டேய் டேய்… ரொம்ப எதிர்பார்க்காத… காலையில போன.. இப்போதான் வர்ற.. அவ சாப்பிட்டாளான்னு நீ கேட்க வேண்டியது தானே…’ என்றது அவனின் மன சாட்சி.
‘அட ஆமா..!!’ என்று “சாப்பிட்டாச்சா?!” என்றான் அவளைப் பார்த்து.

“ம்ம் ஆச்சு.. நீங்க?!”

“ஆச்சு… ஆச்சு…” என்றான் கடுப்பாய்.
அவனைப் பார்க்காது, கணினியைப் பார்த்தபடி அவள் பதில் பேச, நின்று ஒருநொடி பார்த்தவன் பின் குளியல் அறைக்குள் சென்றுவிட்டான். அவன் கதவடைத்த வேகத்தில் தான் வானதி நிமிர்ந்துப் பார்க்க, அவளுக்கு விளங்கவில்லை இத்துனை சத்தமாய் ஏன் கதவு சாற்ற வேண்டும் என்று.

கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் கடந்திருக்கும், இடுப்பில் சுற்றிய துண்டோடு இளா வர, தன் வேலையை முடித்து அப்போது தான் வானதி கட்டில்விட்டு எழுந்து அமர்ந்தவள், இரு கைகளையும் வளைத்து, சோம்பல் முறித்து நிற்க, அவள் அணிந்திருந்த ப்ளாசோவும் ஒரு கருப்பு நிற குர்த்தியும் அத்துனை அழகாய் இருந்தது அவளுக்கு.
“ம்ம்ம்ம்… யப்பா…!!” என்று நின்றவள், விரித்துப் போட்டிருந்த தன் கேசத்தை, கொண்டை போல் சுற்றி ஒரு கிளிப் போட, அங்கே ஒருவன் இருப்பதை அவள் கவனிப்பது போலவே அவனுக்குத் தெரியவில்லை.
அறையினில் இருந்த ட்ரெஸிங் டேபிள் கண்ணாடி முன்னே அவள் நின்று தன்னை இப்படி அப்படி அழகு பார்க்க,

“எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. கொஞ்சம் தள்ளு…” என்று வந்து நின்றான் இளா.

இன்னும் உடல் துவட்டவில்லை, பின் எங்கே வேறுடை அணிவது?!

அவன் மீது வந்து சோப் வாசம் அவளின் நாசியில் நுழைய “சோப்பெல்லாம் கரைச்சாச்சு போல…” என்று கிண்டலாய் மொழிந்தவள், அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

வாசம் பிடித்த நாசியே அவனின் கோலம் உணர்த்திவிட,

“நானும் குளிக்கணும்…” என்றபடி அவள் நகர்ந்து போக, இளா பதில் சொல்லவில்லை.

பதிலை அவளும் எதிர்பார்க்கவில்லை.

அவள் சோப் பற்றி பேசியதிலேயே எதோ ஒரு விதத்தில் தன்னை அவள் கவனிக்கிறாள் என்று தோன்ற, இளா இதழில் ஒரு மென்னகையோடு நிற்க, குளிக்கச் சென்றவளுக்கோ, அங்கே குளியல் அறை முழுவதும் அந்த சோப் வாசமே வீச, ஏனோ இளாவே அங்கே இருப்பது போல் தோன்ற,

“ச்சே.. என்ன இப்படியெல்லாம் நினைக்கிறோம்…” என்று தன் தலையில் தட்டிக்கொண்டாள்.

இருவருக்கும் ஏற்கனவே ஒருவர் மீது ஒருவருக்கு சலனம் இருந்தது தானே..!! இப்போது கணவன் மனைவி என்கையில் இவ்வாரனா உணர்வுகள் எல்லாம் இயல்புதான் என்பது அவளுக்கு இன்னும் புரியவில்லை.

மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு தயக்கம்.
உள்ளே போனவள், ஐந்தே நிமிடத்தில் வெளிவர, இளம்பரிதி வேறுடைக்கு மாறி, கட்டிலில் படுத்திருந்தான்.
அவள் வரும் அரவம் கேட்டு “என்ன நீ சோப் கரைக்கலையா?!” என,

“உங்க சோப் அழுதுட்டு இருந்துச்சு.. என் சோப் அதுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருந்துச்சு. அதான் தொல்லை பண்ணாம வந்துட்டேன்…” என்று எதுவோ பேசவேண்டும் என்று சொல்லி வைக்க,

“அப்படியா உன் சோப் ஆறுதல் சொல்லுச்சா?! எப்படி?? என்ன சொல்லிட்டு இருந்துச்சு?!” என்றான் அவனும் விடாது.

“ஹா..!! என்னைக் கேட்டா?!!” என்றவள் தோளைக் குலுக்க,

“நீதானே இப்போ சொன்ன..” என்றான்.

“அவங்களை தொல்லை செய்யக் கூடாதுன்னு அதெல்லாம் கவனிக்கல.. அதெல்லாம் அவங்க பெர்சனல்…” என,

‘இவ என்னடா விட்டா சோப்புக்கு கல்யாணம் பண்ணி வைப்பா போல…’ என்று நினைத்தவன், ‘இவ இப்படி எல்லாம் பேசுவாளா??!’ என்று ஆராய்ச்சி செய்யும் விதமாய் அவளைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தான்.

வானதிக்கு, இளம்பரிதி பேசினால் கூட பரவாயில்லை போல் தோன்றியது. எப்போதுமே அவனின் பார்வை அவளுக்கு ஒரு தொல்லை கொடுக்கும் விசயம்தான். அவனின் கவனம் எல்லாம் தன்மீது தான் இருக்கிறது என்று தெரிந்தும், அவளுக்குமே அவனோடு இன்னும் சிறிது நேரம் இருந்திடவேண்டும் என்று தோன்றினாலும், அவளுக்கு ஒருவித அவஸ்தையாகவே இருந்தது.

பேச்சை மாற்றிட எண்ணி “ஜிங்க்ளிஸ்க்கு இடம் பார்க்கணும் தானே…” என,

“பார்க்கலாம்.. பார்க்கலாம்…” என்றான்.

“எப்போ…?!”

“பார்த்துட்டு சொல்றேன்…”

“நான் பார்க்கணும் தானே…”

“உன்னை யாரு பார்க்க வேண்டாம் சொன்னா?” என்று அவன் பேசுவது அனைத்துமே, அவளுக்கு இரு பொருள் சுமப்பதாய் இருக்க,

“ம்ம்ச் இதென்ன வம்பு?!” என்றாள் நேருக்கு நேராய் அவனைப் பார்த்தே.

“நான் என்ன பண்ணேன்..?!” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.

“எ.. எனக்கு இப்படியெல்லாம் பேச வராது…”

“எப்படி?!!”

“இதோ இப்போ நீங்க பேசினீங்களே அதுபோல…” என்று கை நீட்டி சொல்ல,

“ஹ்ம்ம் உனக்கு சோப் வச்சு கதை சொல்லத்தான் தெரியும்…” என்றவன் “சொல்லு என்ன மாதிரி இடம் பார்க்கலாம்…” என,

“அது இடம் பார்த்தாதான் ஐடியா வரும்…” என்றாள்.

“ம்ம்.. சரி.. நாளைக்கு கூட்டிட்டு போறேன்…” என, அவனுக்குத் தெரியவில்லை, நாளையில் இருந்தும் இன்னும் தன் நிம்மதி கெடப் போகிறது என்று.
அங்கே கோபியோ, வெற்றிவேலனிடம் “எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா…” என,

“டேய் நான் தான் பார்த்துக்கிறேன் சொல்றேனே…” என்றார் அவரும்.

“இல்லப்பா அவன் பார்த்த பார்வையே சரியில்லை…”

“இருக்கட்டும்… நீயே எல்லாத்துக்கும் பயந்து பயந்து நீயே எல்லாத்தையும் வெளிய காட்டிக் குடுத்துடுவ போல..” என்றவர், “உங்கம்மா இவ்வளோ அமைதியா இருக்கிறதே பெரிய விஷயம்.. நீ கொஞ்சம் சும்மா இரு…” என்று சமாதானம் செய்தார்.

“இல்லப்பா… அவன்.. அவன் இருக்குற வரைக்கும் நா.. நான்.. நாம நிம்மதியா இருக்க முடியாது…” என்று கோபி சொல்ல,

“அதுக்கு..?!” என்றார் வெற்றிவேலன்.

“அ.. அவன் அவன் இருக்கக் கூடாதுப்பா…” என,

“டேய்..!” என்று அதிர்ந்துவிட்டார்.

Advertisement