கல்லூரிப் பேருந்தில் ஜன்னலருகே இருக்கைப் பார்த்து அமர்ந்தவளை வெளியே நின்று பார்த்திருந்தான் சக்தீஸ்வரன்.
பேருந்து நகரவும் வெளியே பார்த்தவள் அவனது கண்களைச் சந்திக்க, கை அசைத்து சிரித்தான் அவன்.
சட்டெனத் தலையை திருப்பிப் பார்வையைத் திசை திருப்பியவளுக்கு அவனை மீண்டுமாய் திரும்பிப் பார்க்கச் சொல்லி மனம் உந்தித் தள்ள, “ம்ம்ம்ஹூம் பார்க்க மாட்டேன். இந்தாளு சரியான வசியக்காரனா இருப்பான் போல! அவரை பார்க்கத் தானாக கால் போய்டுதே! அவர் கொடுத்ததை வேற வாங்கி பேக்குக்குள்ள போட்டுட்டோமே” எண்ணியவளாய் தனது பையைத் துழாவியவளுக்கு அவளது கைபேசி அகப்பட, எடுத்துப் பார்த்தாள்.
ஜானகியின் பெயரில் எண்ணற்ற தவறிய அழைப்புகள் இருப்பதைக் கண்டவள், அவளுக்கு அழைக்க முற்பட்ட சமயத்தில் அவளே அழைத்தாள்.
“ஏன் நான் அடகு வச்சதை வந்து மீட்டு தர போறியா ஜானு” சிரித்தவாறு கேட்டாள் இளவஞ்சி.
“சிரிச்ச.. மவளே கொன்றுவேன் உன்னை! நேத்து எந்த நிலைமைல உன்னை விட்டுட்டுப் போனேன். என்ன ஏதுன்னு கேட்க போன் செஞ்சா நைட்டு போனே எடுக்கலை. இங்கே எனக்கு பதறுமா பதறாதா? காலைலயாவது எடுத்துத் தொலைக்க வேண்டியது தானே! நீ மட்டும் நேர்ல இருந்த என் கைல கைமா ஆகிருப்படி” பொரிந்து தள்ளினாள் ஜானகி.
“சாரி! சாரிடி! பயந்துட்டியா? நேத்து வீட்டுல பிரச்சனை ஆகிடுச்சு ஜானு! வாய்க்கா தகராறு மாதிரி ஒரே வாய் தகராறு தான்” சிரித்தவாறு இளவஞ்சி உரைக்க,
‘ஆமா நாம எப்படி திடீர்னு ஹேப்பி ஆனோம். மனசு ஒரு மாதிரி குஷியா ஃபீல் ஆகுதே! ஆனா வீட்டுலருந்து கிளம்பும் போது கூட ஒரு மாதிரி கவலையாவே தானே இருந்தோம்’
ஜானகியின் கேள்வியில் தான் வானிலை போல் தனது மனநிலையும் மாறி இருந்ததை உணர்ந்தாள் இளவஞ்சி.
சில்லென்ற காற்றுடன் மழை தூற ஆரம்பித்திருந்தது.
பேருந்தில் இருந்த அனைவரும் படபடவென்று ஜன்னலை மூட, இவளோ ஜன்னல் வழியாக கையினில் சிதறிய துளிகளை உள்ளங்கையில் தாங்கி விளையாடிவளாய்,
“நிலைமை எதுவும் சரியாகலை ஜானு. அப்படியே தான் இருக்கு. ஆனா என்னனு தெரியலை மனசு ரொம்ப இதமா இருக்கு!” என்றாள்.
“நீ இந்தளவுக்கு ரிலாக்ஸ்டா பேசுறதை கேட்கவே சந்தோஷமா இருக்குடி! எல்லாம் ஈசன் செயல் தான் வஞ்சி. இனி உன் வாழ்க்கைக்கு அவர் தான் பொறுப்புனு தானே நேத்து உன்னை விட்டுட்டு வந்தேன். இன்னிக்கு இப்படி நீ சந்தோஷமா பேசுவதைக் கேட்கும் போது, சிவபெருமான் உடனே என் வேண்டுதலை நிறைவேத்தின மாதிரி பரவசமா ஃபீல் ஆகுது வஞ்சி. சீக்கிரம் உன் வாழ்க்கைல நல்லது நடக்கும்னு நம்பிக்கை வருது! சரிடி காலேஜ்ல பேசுவோம். ராஜா செகண்ட் லைன்ல வந்துட்டே இருக்காரு” என்றவாறு இணைப்பைத் துண்டித்தாள் ஜானகி.
ஜானகியின் பேச்சை மென்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த இளவஞ்சியோ, ‘இந்த மனநிலை மாற்றத்துக்குக் காரணம் கோவில்ல இருந்த சாமியா இல்ல அந்த சாமியினால அங்கே பார்த்த ஆசாமியா’ என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
அன்று கல்லூரியில் இருவருக்கும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்ற வண்ணமிருக்க, மதியத்திற்கு மேல் தான் இளைப்பாறும் நேரம் கிடைத்தது இருவருக்கும்.
பணியாளர் அறையில் தனது இருக்கையில் அமர்ந்தவாறு மேஜையில் தலையைச் சாய்த்தவாறு படுத்திருந்தாள் இளவஞ்சி.
“அட நீ வேற போடி!” என அலுத்துக் கொண்டவாறு எழுந்து அமர்ந்த இளவஞ்சி நேற்று மணிகண்டன் தன்னிடம் உரைத்ததைக் கூறியவளாய், “இப்படி சொல்றவர்கிட்ட போய் யாராவது இம்ப்ரஸ் ஆவாங்களா?” எனக் கேட்டாள்.
“வாவ் இப்படி பசங்ககிட்ட தான்டி இம்ப்ரஸ் ஆவாங்க பொண்ணுங்க. நீ தான் எக்ஸ்செப்ஷனல் (exceptional) கேஸ்ஸா இருக்க! எவ்ளோ உண்மையா தன்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிருக்காங்க. உன்னைப் பிடிச்சிருக்குனு வேற சொல்லிருக்காங்க. கல்யாணத்துக்குனு ஒத்துக்க இதையும் தாண்டி சில ஃபேக்டர்ஸ் இருக்கு தான். ஆனாலும் முதல் பேச்சு வார்த்தைலயே இவ்வளோ உண்மையா பேசியிருக்காரே! அதுவே இம்ப்ரசிவ் தானே! என்ன செஞ்சா நீ இம்ப்ரஸ் ஆவ வஞ்சி? உனக்கு எந்த மாதிரி பையனைக் கட்டிக்கனும்னு ஆசை?” புருவத்தை உயர்த்திக் கேட்டவாறு கேள்வியாய் பார்த்தாள் ஜானகி.
முகத்தில் சட்டென ஒட்டிக்கொண்டது நாணச்சிவப்பு.
“அடடா கன்னமெல்லாம் சிவக்குதே! என்னமோ இருக்கு போலயே” என்று ஜானகி கிண்டல் செய்ய,
‘என் கேள்விக்கு இது பதில் இல்லையே’ என்பது போல் முறைத்தாள் ஜானகி.
“நான் சொல்றதை முழுசா கேளு ஜானு. ஏன் இதை சொல்றேன்னு அப்ப தான் புரியும்” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
“அப்ப சிவன் மேல பக்தியை தாண்டி அபரிதமான அன்பு! எப்பவுமே அவர் என் பக்கத்துல இருந்து கைட்(guide) செய்ற மாதிரி தோணும். அந்தளவுக்கு பக்தியோட இருந்த காலகட்டம். இப்பவும் அந்த அன்பு இருக்கு ஆனா அந்த பக்தி இல்லை” என்று பெருமூச்செறிந்தவளாய்,
“எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க அப்படினு திருவெம்பாவைல ஒரு வாசகம் வரும். அதாவது ஈசனை வணங்குபவரை தான் மணப்பேன்னு சொல்ற மாதிரியான வரிகள் அது.
என்னை மாதிரியே சிவன் மேல பக்தியா இருப்பவரைத் தான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு அப்ப ரொம்ப ஆசை இருந்துச்சு ஜானு. என் டீன் ஏஜ்ல நான் கற்பனைச் செய்த கணவர் பிம்பம் எப்படி இருந்தாங்கனா சிவனைப் பத்தி உள்ளம் உருகப் பாடுறவங்களா, அவர் மேல பக்தியா இருக்கிறவங்களா இருந்தாங்க. நானும் என் கணவருமாக இணைந்து சிவனுக்குச் செய்யும் பூஜைகள் பணிவிடைகளைலாம் கற்பனைச் செஞ்சி பார்த்துப் பூரிச்சிருக்கேன்.
இப்படி சிவபெருமானைப் பக்தியா கும்பிடுற டீன் ஏஜ் பசங்கலாம் இருக்காங்களாப்பானு அப்ப அப்பாகிட்டயே கேட்டிருக்கேன்”
அப்பாவின் நினைவில் கண்கள் கலங்கியது அவளுக்கு.
“என்னோட இந்த ஆசை பத்திக்கூட அப்பாகிட்ட பேசியிருக்கேன் தெரியுமா! ஏன் சிவனைக் கும்பிடுறவரைத் தான் கட்டிப்பியா வஞ்சிமா! பெருமாளைக் கும்பிடுறதுலாம் பக்தியா ஆகாதானு கேட்டுச் சிரிச்சாங்க அப்பா!
அரியும் சிவனும் ஒன்னு, ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு எல்லா ஜாதி மதம் இனமும் கடந்து ஒற்றுமையா வாழ்ந்துட்டு இருக்க இந்தக் காலத்துல இப்படிச் சிவனைக் கும்பிடுறவரைத் தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு சொல்றது தப்பா இருக்கும். ஆனா கல்யாணம் செய்றவரை மட்டும் தான் காதலிப்பேன்னு கொள்கை வச்சிக்கலாம் வஞ்சிமா! அது தான் இந்த காலத்துக்குச் சரியா இருக்கும்னு சொன்னாங்க.
வாழ்க்கைல மனக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். ஒழுக்கத்துக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. மனசே ஒரு விஷயத்தை நினைச்சு ஆசைப்பட்டாலும் மூளையால் சிந்திச்சு அந்த விஷயம் நமக்கு நல்லதா இல்லையானு ஆராய்ச்சி செஞ்சி தான் மனசோட ஆசையை நிறைவேத்தனும்னு சொல்லிக் கொடுத்தாங்க அப்பா.
அதனால கட்டிக்கப் போறவரைத் தவிர யாரையும் மனசால நினைக்கக் கூடாதுனு தான் கடவுள்கிட்ட வேண்டிப்பேன் ஜானு” என்று கூறியவாறு அமைதியானவளைப் பெருமையுடன் ஜானகி பார்த்திருக்க,
“ஆனா என்னோட இந்தக் கொள்கையை உடைக்கிற மாதிரியான ஒருத்தரைப் பார்த்தேன் ஜானு. முதல் முறையா ஒருத்தர் மேல ஈர்ப்பு வந்திருக்கு ஜானு!” கை விரல்களை ஆராய்ந்தவளாய் தலையைத் தாழ்த்தியவாறு கூறினாள் இளவஞ்சி.