காவலர்கள் மூலம் அறநிலையத்துறை அலுவலர்களிடமும் அந்தக் கோவிலின் நிர்வாகிகளிடம் பேசி விரைவாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தான் ராஜா.
பிரசன்னம் பார்க்கப்பட்டு அடுத்த மாதத்திலேயே சிவலிங்கத்தை நிறுவுவதற்கான தேதி குறிக்கப்பட, அதனை சக்தியிடம் தெரிவித்தான்.
மங்கையின் திருமணத்தன்றே இந்த நிகழ்வும் குறிக்கப்பட்டிருக்க, திருமணத்தையும் அதற்கு பின்பான சடங்குகளையும் முடித்து விட்டு ஓரிரு நாட்கள் கழித்து ஆத்மநல்லூருக்கு செல்லலாமென முடிவு செய்தனர் இருவரும்.
வெகு விமர்சையாக சக்தீஸ்வரன் இளவஞ்சியின் வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இளவஞ்சியின் பிறந்த வீட்டில் அனைவருமே வந்திருந்து வாழ்த்தினர். வசந்தா முன்பு போல் இயல்பாகப் பேசவில்லை என்றாலும் இளவஞ்சியின் உடை மற்றும் அலங்காரங்கள் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசினார். வெகு மகிழ்வாய் ஜானகி தனது கணவன் ராஜாராமனுடன் வந்திருந்து தோழியை மனதார வாழ்த்திவிட்டுச் சென்றாள். மணிகண்டனும் தனது குடும்பத்துடன் வந்திருக்க, மங்கை தான் மணக்கவிருக்கும் மாப்பிள்ளையை வரவழைத்திருந்தாள்.
எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் வந்திருந்து வாழ்த்தி நிறைவாக இந்நிகழ்ச்சி நடந்து முடிந்ததில் அனைவருமே மகிழ்ந்திருந்தனர்.
மங்கையின் திருமணம் மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பப்படி வடபழனி முருகன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, இளவஞ்சியை முந்தைய தினமே மங்கையுடன் இருக்குமாறு அனுப்பி விட்டான் சக்தீஸ்வரன்.
இரண்டு நாட்கள் முழுவதும் மங்கையுடன் அவளுக்குத் தேவையானதை கவனித்துக் கொண்டு திருமணத்தை மனநிறைவாகச் செய்து முடித்து வந்திருந்தாள் இளவஞ்சி. அலுவலக பணிச்சூழல் காரணமாகத் தாலி கட்டும் நேரம் மட்டும் சென்று விட்டு வந்தான் சக்தீஸ்வரன்.
அடுத்து வந்த நாட்களில் எவ்வித இடையூறும் இல்லாமல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டதாக ராஜா கூறியதும் அத்தனை நிம்மதியாக உணர்ந்தான் சக்தீஸ்வரன்.
ராஜா அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தவனின் மனம் பரவாசமானது. உடனே நேரில் சென்று கண்ணாற தனது கடவுளைத் தரிசிக்கும் ஆவல் எழுந்தது.
முன்பு போலவே இந்த முறை பயணத்தையும் இளவஞ்சியே முழுவதுமாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
*****
“வஞ்சி இப்ப கூட வேண்டாம்னா வீட்டுக்கு போய்டலாம். கண்டிப்பாக இதை செஞ்சே ஆகனும்லாம் கிடையாது” மகிழுந்தை தரிப்பிடத்தில் நிறுத்தியவனாய் உரைத்தான் சக்தீஸ்வரன்.
முகத்தில் பயம் படர்ந்திருந்தாலும், “இல்ல இது எனக்கு பிடிச்சி தான் நான் செய்றேன். வாங்க போகலாம்” என்றவளாய் அவனை கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் இளவஞ்சி.
அவளை அமர வைத்து, “வலிக்கும் மேடம்! பொறுத்துக்கோங்க” என்று கூறும் போதே, கண்களைச் சுருக்கியவளாய் அருகிலிருந்த சக்தியின் முதுக்குப் பகுதி சட்டையை இழுத்துப் பிடித்து வயிற்றில் ஒரு பாதி முகத்தை வைத்து அழுத்தினாள்.
“நீ இப்படி என்னையே ஒட்டிக்கிட்டு இருந்தா அவங்க வேலையை எப்படி செய்ய முடியும்? ஒழுங்கா முகத்தை காமி வஞ்சி” என்று அவளின் முகத்தை அவர்களுக்கு ஏதுவாகத் தூக்கிப் பிடித்தான்.
அவளின் மூக்கினருகே கைகளைக் கொண்டு வரும் போதே இவள் பின்னே விலகிச் செல்ல, அவர்கள் குத்துவதற்கு ஏதுவாக அவளை இழுத்துப் பிடித்தான் சக்தி.
மூக்கில் வைத்து ஒரு அழுத்து தான் அழுத்தினார்கள், “ஸ்ஸ்அஅஆஆ” என வலியில் அலறியவாறு சக்தியின் வயிற்றில் புதைந்தவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
மகிழுந்தில் ஏறி அமர்ந்த மறுநொடி அவளின் மூக்கில் பளபளத்த மூன்று கல் மூக்குத்தியில் முத்தமிட்டு, “அதிரூபசுந்தரி தான் என் தங்கப்பொண்ணு” என்றான்.
“இதெப்படி உங்களுக்குத் தெரியும்” ஆச்சரிய தொனியில் அவள் கேட்க, “அது தானா வந்துச்சு! ஏன் சிவநேசன் முத்தரசியை இப்படித் தான் கொஞ்சுவாரா?” எனக் கேட்டான்.
“ஆமா ஆமா! நீங்களும் என் அழகு புருஷன் தான்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், “ஸ்ஸ்அஅஆஆ! வலிக்குதுப்பா” என்று சற்றுத் தேம்ப ஆரம்பித்து விட்டாள்.
குடிக்க நீரளித்து அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தியவனாய் அவளை அழைத்துச் சென்றான்.
*****
அன்று போல் இன்றும் பேருந்தில் அவளது தோளில் சாய்ந்து உறங்கியவாறு பயணித்திருந்தான் சக்தீஸ்வரன்.
இம்முறை தனது மாதாந்திர தேதியெல்லாம் கணக்கிட்டுத் தான் பயணத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தாள் இளவஞ்சி.
சோலை வனத்தில் முன்பு அவர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தான் தங்கினர் இப்பொழுதும். அதே ஓட்டுனருடன் வண்டியை ஏற்பாடு செய்து கொண்டனர்.
அறையில் குளித்து முடித்து உடையணிந்தவளாய், “ஒரு நாள் இந்த அருவில குளிக்கனும்ப்பா” என்று ஆசையாகக் கூற, “கண்டிப்பாக ஒரு நாள் பிளான் செய்யலாம். விடியற்காலைலயே ஆளு இல்லாத நேரமா போய்ட்டு வந்துடலாம்” என்றான்.
“ஒன்னு கவனிச்சீங்களா சக்தி! இப்ப தரை வழியா நாற்பது கிமீ கிட்ட டிராவல் செஞ்சி போற இந்த ஆத்மநல்லூருக்கு, சிவநேசனும் முத்தரசியும் மாதவப் பெருமாள் கோவில் பின்னாடி ஏதோ மலைப்பாதை வழியா சுலபமாக வந்துட்டு போயிருக்காங்க. அப்ப ஏதோ குறுக்குப் பாதை இதுக்கு இருந்திருக்கும் தானே” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் இருக்கலாம் வஞ்சி! ஆனா இப்ப எல்லாம் அடைஞ்சி போய் இருக்கும்” என்றான்.
இருவருமாகக் கிளம்பி ஆத்மநல்லூரை நோக்கி மகிழுந்தில் பயணத்தைத் தொடங்கினர்.
ஓட்டுனர் கோவிலினருகே வண்டியை நிறுத்தியதும் அந்த பூக்காரம்மாவிடம் நெடு நாள் பழகிய உறவினர் போல் அன்பாகப் பேசினாள் இளவஞ்சி.
வெகு மகிழ்வான மனநிலையுடனேயே இருவரும் கைகளைக் கோர்த்தவாறு கோவிலின் உள்ளே சென்றனர்.
அர்ச்சகர்கள் முதல் கோவில் பணியாளர்கள் வரை முன்பிருந்த ஆட்கள் இல்லாது புது ஆட்களாக இருப்பதை பார்த்தவாறு மூலஸ்தானத்திற்குள் சென்றனர். அழகிய மாதவப் பெருமாளைத் தரிசித்து வணங்கி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தனர்.
“என்ன சக்தி! எல்லாரும் புது ஆளுங்களா இருக்காங்க. அன்னிக்கு நம்ம கூட சண்டைப் போட்ட ஒருத்தருமே இல்லையே” எனக் கேட்டாள் இளவஞ்சி.
“ஹ்ம்ம் கோர்ட்ல கேஸ் போட்டதும் அவங்களலாம் வேற கோவிலுக்கு மாத்திருப்பாங்களா இருக்கும்” என்று கூறியவாறு அவளுடன் பிரகாரத்தைச் சுற்றியவனின் கண்களில் தூரமாய் அவனது எம்பெருமான் ஈசன் லிங்கச் சொரூபமாக வீற்றிருக்கும் காட்சியைக் கண்டவன் பரவசத்துடன் ஓடோடிச் சென்று அந்த லிங்கத்தை அணைத்திருந்தான். கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கி வழிந்தது அவனுக்கு.
கல்லாலான அந்த லிங்கத் திருமேனியைத் தழுவுவது பஞ்சினை ஒத்த உணர்வை அளித்தது அவனுக்கு. அவனது கண்ணீர் லிங்கத் திருமேனியை அபிஷேகித்திருந்தது.
ஆனந்த கண்ணீருடன் சக்தீஸ்வரனைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி. அவனுக்கும் இந்தச் சிவலிங்கத்திற்கும் இருக்கும் பிணைப்பை எண்ணி நெகிழ்ந்தது நெஞ்சம்.
அந்தச் சிவலிங்கத்தின் அருகிலேயே அமர்ந்தவன் அதனைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான். தன்னிலை மறந்து எங்கே கண்களை மூடினாலும் மறைந்திடுமோ என்று பயந்தவனாய் இமை சிமிட்டாது அந்த சிவலிங்கத்தைப் பார்த்திருந்தான் சக்தீஸ்வரன்.
ஈசனின் மீதான அவனது பக்தியை ரசித்தவாறு பார்த்திருந்தாள் இளவஞ்சி.
உச்சஸ்தாதியில் குரல் எடுத்தவனாய் இந்த வரியை அவன் பாடவும் ஆங்காங்கே நின்றிருந்த அனைவரும் அப்படியே திரும்பி இவனைப் பார்த்தனர்.
கண்களை மூடி கரங்களைக் குவித்தவனாய்,
மெய்யே உன் பொன் அடிகள்
கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா
விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
என்று பாடிய பொழுது அவன் குரல் அதீத பக்தியில் தழுதழுத்தது.
என்று பாடியவனாய் விழுந்து வணங்க, இவளும் அவனுடன் இணைந்து விழுந்து வணங்கினாள்.
சில நிமிட தியானத்திற்குப் பிறகு இருவருமாக வெளியே வந்து அமர, “மனசு நிறைவா இருக்குடா தங்கப்பொண்ணு” என்றான் சக்தீஸ்வரன்.
அவனின் கண்களைத் துடைத்து விட்டு மீசையை முறுக்கி விட்டவளாய், “இறைவனின் புகழை பாடும் உங்க குரலைக் கேட்கும் போதெல்லாம் இப்படி ஒரு புருஷனைக் கொடுத்ததுக்கு நன்றி நன்றினு ஈசனின் பாதத்துல விழுந்து வணங்க தோணுதுங்க! ஐம் ப்ரவுடு ஆஃப் யூ மை புருஷா” என்று தோளோடு கையிட்டு லேசாக அணைத்து விடுவித்தாள்.
வெட்கப் புன்னகை சிந்தியவனாய் அமர்ந்திருக்க அச்சமயம் அங்கு வந்தான் ராஜா.
“என்ன ராஜா! கேஸ்லாம் முடிஞ்சிதுல! இப்ப எதுவும் பிரச்சனை இல்லையே” எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.
“கேஸ்லாம் பிரச்சனை இல்லை சக்தி! ஆனால் அந்த பிரெஞ்சுக்காரன் நாம நினைக்கிற மாதிரி சாதாரண ஆளு இல்ல! இது வரைக்கும் இருபது பழங்கால சிலைகள், பதிமூனு கல்சிலைகள், நாலு உலோக சிலைகள். இன்னும் பல கலைப்பொருட்களை பிரெஞ்சு நாட்டுக்குக் கடத்துறதுக்காக ஒரு இடத்துல பதுக்கி வச்சிருந்திருக்கான். அவனோட அம்மாக்கு உடம்பு சரியில்லனு இதெல்லாம் இங்கே விட்டுட்டு போனவன் இன்னும் வரலையாம். நம்ம தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் மூலமாக இதை கண்டுபிடிச்சி மீட்டிருக்காங்க. அதுல இவனோட அடையாளம் ஏதோ இருந்திருக்கு. இவன் தனியாளா இல்ல இவன் பின்னாடி எதுவும் டீம் இருக்கானு தெரியலை. ஆனாலும் நாம இந்தக் கோவிலை நம்ம கண்காணிப்பில் வச்சிக்கிறது தான் நல்லது சக்தி” என்றான்.
ராஜா கூறிய செய்தியில் இளவஞ்சி அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, “இனி என்னை மீறி யாரும் இந்த சிவலிங்கத்தைத் தொட முடியாது ராஜா! எது வந்தாலும் பார்த்துக்கலாம்” தீர்க்கமாக உரைத்தான் சக்தீஸ்வரன்.
அவனின் தைரியமான பேச்சில் சிவநேசனைக் கண்ட நிம்மதி அவளுக்கு.
மூவருமாக அந்த கோவிலின் வாசலை நோக்கி நடக்க, இவர்களை நோட்டம் விட்டவனாய் ஒருவன் யாருக்கோ அழைத்துத் தகவல் கொடுத்திருந்தான்.
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி கொண்டானவன்
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பில் ஒளியாகி நின்றானவன்
சக்தீஸ்வரனின் கைபேசியின் அழைப்பொலியாய் இப்பாடல் ஒலித்திருக்க, அழைப்பையேற்று பேசியவாறே கோவிலின் வாயிலில் நின்று சிவபெருமானை மனதோடு நினைத்து வணங்கி விட்டு இளவஞ்சியின் கரங்களைப் பற்றியவனாய் சென்றான் சக்தீஸ்வரன்.
இப்பிறவி மட்டுமல்ல இதேபோல் இன்னும் எத்தனை எத்தனை பிறவி எடுத்தாலும் அவற்றில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் இன்று போல் என்றுமே சக்தீஸ்வரன் சிவநேசனாய் எல்லாம் வல்ல ஈசனின் ஆசியோடு சிவலிங்கத்தைக் காத்திருப்பான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதேபோல் இளவஞ்சியும் முத்தரசியாய் அந்தந்த பிறவிகளில் பிறப்பெடுத்து அரன் மட்டுமல்லாது அரியின் ஆசியோடு சக்தியின் வஞ்சியாய் அவனை வந்து சேருவதோடு மட்டுமல்லாமல் அவனைக் காத்திருப்பாள் என்ற இறை நம்பிக்கையோடு அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.
***ஆத்மநல்லூர் ஈசனைக் காக்கும் சக்தீஸ்வரன் இளவஞ்சியின் பயணம் தொடரும்***