அத்தியாயம் 30

நினைக்க நினைக்க நெஞ்சம் பூரித்துப் போனது சக்தீஸ்வரனுக்கும் இளவஞ்சிக்கும்.

தங்களை கொண்டு இன்று எத்தனை பக்தர்கள் நன்மை அடைகிறார்கள் என்றெண்ணி மனம் மகிழ்ந்த அதே சமயம் சிவபிரானின் கருணையை எண்ணி கலங்கின கண்கள்.

தன்னவளின் பக்திக்கு கிடைத்த வரமல்லவா இது! அந்த வரம் இன்று தங்களுக்கே உதவியும் இருக்கிறது என்பதை நினைக்க உடல் புல்லரித்தது.

தாங்கள் இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும், இக்கோவிலில் சிவபெருமான் முத்தரசிக்கு அளித்த இந்த வரம் இவர்களை என்றும் காத்து நிற்கும் என்பதும் புரிந்தது இருவருக்கும்.

இதனை தங்களுக்குள் சிந்தித்து நெகிழ்ந்தவர்களாய் ஆத்மநல்லூரை நோக்கிப் பயணித்திருந்தனர் சக்தீஸ்வரனும் இளவஞ்சியும்.

ஒரு காதல் என்ன செய்யும்?

தான் நேசிப்பவரின் நலனுக்காகத் தன்னையே வருத்திக் கொள்ளும்! தன்னலம் மறந்து தன்னவர் நலத்தையே பிரதானமாய் நோக்கும். அன்பான இல்லறத்துடன் வாழ வைத்து தெய்வீக காதலாய் அதனை உயர்வடையச் செய்யும்.

“முத்தரசி இல்லாமல் சிவநேசன் இல்லங்கிறது எவ்ளோ உண்மைல! முத்தரசினால மட்டும் தானே சிவநேசனோட பெயரும் அந்தக் கல்வெட்டுல இருக்கு!” என்றான் சக்தீஸ்வரன்.

மென்னகை புரிந்தாள் அவள்.

“எனக்கு முத்தரசிக்கிட்ட பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா வஞ்சி?” எனக் கேட்டான் சக்தி.

“என்னது சக்தி?” ஆர்வம் மேலிட அவள் கேட்க,

“என்னை ஒதுக்கினவன்கிட்ட நான் திரும்பப் போய் நிக்க மாட்டேன்னு தன்மானத்தை விட்டுக் கொடுக்காத அதே சமயம், என் காதலுக்கு நான் உண்மையா இருப்பேன்னு சிவநேசனோட உயிருக்காக மட்டும் வேண்டி சந்திரர்கிட்ட கேட்டது. அந்த நேரம் முத்தரசியை அவ்ளோ பிடிச்சிது‌. அப்ப மட்டும் சிவநேசன் பேசாம அமைதியாக இருந்திருந்தா இந்த காதல் சேர்ந்திருக்காது வஞ்சி!” என்றான்.

இருவருமே அந்த ஜென்ம நினைவுகளில் இருந்து தெளிந்து வெளியே வந்து சிவநேசன் முத்தரசியை வணங்க கூடிய ஆட்களாய் மனத்தில் உயர்வான இடத்தில் வைத்து உணர தொடங்கியிருந்தனர்.

அவனின் கூற்றை ஆமோதித்தவளாய், “உண்மை தான் சக்தி! அக்காலப் பெண்கள் எதுக்காகவும் அவ்ளோ சீக்கிரத்துல தலை வணங்கிட மாட்டாங்க தான்” என்று புன்னகை புரிந்தாள்.

“சக்தி! சப்போஸ் அந்த டைம்ல சந்திரர் வராம இருந்து, மன்னர் அந்த சட்டத்தைப் போட்டிருந்தா என்னவாகிருக்கும்?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்ம் என்னவாயிருக்கும்! கலை பொக்கிஷமா நாம பாதுகாத்துட்டு இருக்கிற பல சைவ வைணவ கோவில்கள் புத்த மடங்களாவும் சமணக் கோவிலாவும் உருமாறியிருக்கும்‌. இப்ப காணாம போன அந்த சிவலிங்கம் அப்பவே காணாம போயிருக்கும்” என்றான்.

“ஹ்ம்ம் அப்பவும் அந்த சிவலிங்கத்தைக் காக்க தான் நீங்க பிறந்திருக்கீங்க போல! ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தினு நானும் உங்க கூடவே பிறந்திருக்கேன்” என்று புன்னகைத்தாள்.

“இப்ப நடந்ததைலாம் யோசிச்சு பார்த்தா, சிவபெருமான் ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிச்சிருக்காருனு புரியுது வஞ்சி” என்றான் சக்தீஸ்வரன்.

“எப்படிச் சொல்றீங்க?” கேள்வியுடன் அவனை அவள் பார்க்க,

“என்னோட ஆயுள் கண்டம் ஸ்டார்ட் ஆன டைம்ல தான் உன்னைப் பார்த்திருக்கேன் வஞ்சி. அதான் எனக்கு ஆக்சிடெண்ட் ஆகிருக்கு. உன்னைப் பார்க்காம இருந்திருந்தா ஆக்சிடெண்ட்ல உயிரே போயிருக்கலாம். அப்புறம் அந்தப் பையன் என்னைக் குத்த வந்தது கூட நாம சேர்ந்து வாழ ஆரம்பிக்கலையே அந்த டைம்ல. கல்யாணம் தானே முடிஞ்சி இருந்தது. நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பிறகு எனக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் வரலையே! அப்ப நீ என் கூட வாழ்ந்தா எனக்கு ஒன்னும் ஆகாதுன்ற வரம் உண்மை தானே! இந்த ஆக்சிடென்ட், கத்தி குத்துப் பிரச்சனைலாம் உயிர் கண்டத்துனால வந்திருந்தாலும் அதை வச்சே உன்னைக் கனவுல மிரட்டி ஆத்மநல்லூருக்கு வர வச்சிட்டாரே! அதான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்னு சொன்னேன்” என்று விளக்கமளித்தான் சக்தீஸ்வரன்.

அவன் கூறியதை ஆமோதித்தவளாய், “ஆமா சக்தி! என்னமா பிளான் செஞ்சி நம்மளை வர வச்சிருக்காரு” எனச் சிரித்தவள்,

“இப்ப எப்படி இந்த சிவலிங்கத்தை மீட்க போறோம் சக்தி. அன்னிக்கு நாம தேதி வச்சி கணக்கு செஞ்சி பார்த்ததுல சிவலிங்கத்தை இவங்க தோண்டி எடுத்து ஏழு எட்டு நாள் ஆகுதுல” எனக் கேட்டாள்.

“ஆமா வஞ்சி! நாம உடனே ஆக்ஷன் எடுக்கனும். இல்லைனா சிவலிங்கத்தை சிலை கடத்தல் கும்பல் மூலமாக இவங்க வெளிநாட்டுக்கு எங்கேயும் அனுப்பிட்டாங்கனா மீட்கிறது கஷ்டம்! இன்னிக்கு ஒரு பிளானோட தான் போறேன். என்ன நடக்குதுனு பார்ப்போம்” என்றவன் கூறிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கோவிலின் வாசலை அடைந்திருந்தனர்.

அழகிய மாதவப் பெருமாள் என்ற பெயர் பலகையைக் கண்டதும் பழைய நினைவில் புன்னகை புரிந்தவர்களாய் உள்ளே சென்றனர்.

இருவரின் உள்ளமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. முதல் முறையாக இக்கோவிலுக்குள் இருவரும் வரும் பொழுது இருந்த மனநிலைக்கும் தற்பொழுது இருக்கும் மனநிலைக்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசத்தை உணர்ந்தவர்களாய் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

இவர்களுக்கும் இக்கோவிலுக்குமான உறவை, அன்று அவர்களின் ஆன்மா மட்டுமே உணர்ந்திருந்த உண்மையை, இன்று இவர்களும் அறிந்திருக்க, வாசலின் உள்ளே காலெடுத்து வைக்கும் போதே இருவரின் உடலும் உள்ளமும் சிலிர்த்து அடங்கியது.

அவளின் சுவாசமும் சுவாமியே என நாராயண மந்திரத்தை விடாது உச்சரித்து அன்றாடம் அவரின் தரிசனத்தைக் கண்ட கோவில்!

அவனின் சுவாசமான எம்பெருமான் ஈசனை அன்றாடம் ஆரத் தழுவி வணங்கிய கோவில்!

அவனிடம் அவள் தனது காதலை மொழிந்த கோவில்!

அவளின் காதலையேற்று மணமுடித்து வைக்குமாறு அவன் வணங்கி நிற்க, சிவஞான சந்திரர் இருவருக்கும் மணமுடித்து வைத்த கோவில்!

இருவருக்கும் சிவபெருமான் அசரீரியாக வரமளித்த கோவில் என இருவரும் அக்கோவிலின் உள்ளே ஒவ்வொரு இடத்தையும் அணு அணுவாக உணர்ந்து பரவசமாகப் பார்த்திருந்தனர்.

இருவரின் ஆன்மாவும் அதீத பக்தியுடன் பரவசமாய் இருக்க, இருவரும் மூலஸ்தானத்திற்குள் சென்று நின்றனர்.

நின்ற கோலத்தில் அழகனாக காட்சியளித்த பெருமாளைக் கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் இளவஞ்சி‌. தான் அன்றாடம் மாலை சூட்டிக் கண்டு ரசித்த பெருமாள்.

‘உன்னை காண்பதே எனது பாக்கியம் என எத்தனை நாட்கள் உனை தேடி ஓடி வந்திருப்பேன் இங்கே! என்னைக் கை விட்டு விட்டாயே மாதவா! உன் பிரியத்திற்குரிய பக்தை இல்லையா நான்?’ அன்று போலவே இன்றும் மனதினுள் இக்கேள்வியெழ, கண்களில் நீர் கோர்த்துக் கொண்டாலும் மென்னகை புரிந்து அதனை உள்ளிழுத்துக் கொண்டவளாய் பிரசாதத்தை வாங்கிக் கொண்டாள்.

அவளின் கண்ணீரைக் கண்ட சக்தி, “என்ன ஆனந்த கண்ணீரா?” என்றவனாய் மூலஸ்தானத்தை விட்டு அவளுடன் வெளியே வந்தான்.

“இல்லங்க! என்னை ஏன் சிவனை வணங்கும் குடும்பத்துல பிறக்க வச்சிட்ட மாதவா? உன்னோட பிரியமான பக்தை இல்லையா நானு மனசு கேட்டுக் கலங்குதுங்க” என்றாள்.

“அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும் வஞ்சி” என்று அவளைச் சமாதானம் செய்தவனாய் பிரகாரத்தைச் சுற்றி வர, அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருந்தது.

சக்தியின் கைகளைப் பற்றியவளாய், “எல்லாரும் நம்மளை முறைச்சி பார்க்கிற மாதிரியே இருக்கு சக்தி” என்றாள் இளவஞ்சி.

“முறைக்கலை! பார்க்கிறாங்க! இன்னிக்கு என்ன பிரச்சனை செய்ய வந்திருக்கானோனு பார்க்கிறாங்க” என்று சிரித்தவனாய் அவளின் கையைத் தட்டிக் கொடுத்தான்.

அந்தச் சிவலிங்கம் இருந்த இடத்தில் தரையில் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனருகில் அவளும் அமர்ந்து கொள்ள, அவன் கண்களை மூடியவாறு தியானிக்கத் தொடங்கினான்.

எங்கே தான் கண்களை மூடினால் தன்னவனை எவரேனும் தாக்கி விடுவார்களோ எனப் பயந்தவளாய் அவனுக்கு அரணாக இருப்பவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள் இளவஞ்சி.

சிறிது நேரத்தில் அன்று வந்த கோவிலின் அலுவலர் குருமூர்த்தி அங்கு வந்தவராய், “இங்கே யாரும் உட்கார கூடாது! உட்காருறதுக்கு தான் வெளில இடமிருக்கே! இங்கே ஏன் உட்கார்ந்திருக்கீங்க?” எனச் சற்று அதட்டலாகவே கேட்டார்.

அவரின் குரலில் கண் திறந்த சக்தீஸ்வரன், “ஏன் நாங்க இங்க உட்காருறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? நாங்க எழுந்திருக்க மாட்டோம்” அழுத்தமாய் பார்த்தவாறு உரைத்தான்.

சக்தியின் கைகளைப் பற்றிய வஞ்சி, “பிரச்சனை வேண்டாம் சக்தி! போய்டலாம்” என அவனது காதினில் உரைத்தாள்.

“நீ பயப்படாத! நான் இருக்கேன்ல! ஒன்னும் ஆகாது” என்றவனாய் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அதற்குள் கோவிலின் பணியாளர்கள் அர்ச்சகர்கள் என அனைவரும் சூழ்ந்து அவனை எழுப்புவதிலேயே முனைப்பாய் இருக்க, அவன் முடியாது எனத் திடமாய் இருந்ததில் அவனின் கைப்பற்றி தூக்க வந்த ஒரு கோவில் பணியாளரை சக்தி சற்றாய் தள்ளி விட்டதில் தூரமாய் போய் விழுந்தான் அவன்‌. அதில் ஆங்காரமான அந்நபர் எழுந்து வஞ்சியைத் தூக்க கையைக் கொண்டு போக, ஒரு கையால் வஞ்சியை அணைத்துப் பிடித்தவனாய் மறுகையால் அந்நபரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருந்தான் சக்தீஸ்வரன்.

கோழிக்குஞ்சைக் காப்பது போல் எவரும் அவளைத் தொட முடியாத வண்ணம், அவளின் தலையைத் தனது மார்பினில் அழுத்தி அவளைச் சுற்றிக் கைகளைப் போட்டு அணைத்தவனாய் அவன் அமர்ந்திருக்க, நான்கைந்து நபர்கள் சேர்ந்து இவர்களை நோக்கி வந்து எழுப்ப கைகளைத் தூக்கிய சமயம்,

“என்ன இங்க பிரச்சனை?” என்றவாறு வந்து நின்றனர் காக்கி சட்டை அணிந்திருந்த இரு காவலர்கள். அவர்களுடன் நின்றிருந்தான் வழக்கறிஞர் ராஜா‌.

இப்பொழுது அனைவரையும் பார்த்தவாறு மனைவிக்குக் கைக் கொடுத்துத் தூக்கி விட்டு எழுந்தவனாய் அக்காவலர்களின் அருகே சென்றான் சக்தீஸ்வரன்.

“நீங்களே சொல்லுங்க சார்! கோவிலுக்குள்ள உட்காருறது தப்பா? அதுக்கு ஏன் கோவில்ல வேலை செய்ற மொத்த பேரும் வந்து இப்படி எங்களை அடிக்க வரனும்” என்று கேட்டான் சக்தீஸ்வரன்‌.

“என்னது அடிக்க வந்தோமா? அவன் தான் எங்களை அடிக்க வந்தான் சார்!” என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏற்கனவே சக்தியிடம் அடிவாங்கிய அந்த நபர், சக்தியை நோக்கி கோபமாய் கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.

“பாருங்க சார்! இப்படித் தான் அவங்க அடிக்க வந்துட்டு நாங்க அடிச்சோம்னு சொல்றாங்க” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கூறியவனின் ஒரு கை மனைவியை இறுக்கமாய் தன்னுடன் அணைத்திருந்தது.

“நான் ஏற்கனவே ஒரு பிரச்சனையை விசாரிக்க வந்தா, நீங்க ஒரு பிரச்சனையைப் பண்ணிட்டு இருக்கீங்களேயா” என அலுத்துக் கொண்டவராய் விசாரணையைத் தொடங்கினார் ஒரு காவலர்.

“இங்கிருந்த சிவலிங்கத்தைக் காணோம்னு வக்கீல் ராஜா நம்ம உள்ளூர் கோர்ட்ல கேஸ் போட்டிருக்காரு‌. இதை விசாரிக்கச் சொல்லி கோர்ட்ல இருந்து உத்தரவு வந்திருக்கு. அதுக்குத் தான் நான் வந்திருக்கேன். இங்கே முன்னாடி சிவலிங்கம் இருந்ததை யாராவது பார்த்திருக்கீங்களா?” என்று காவலர் கேட்க, ஒருவரும் வாய் திறக்கவில்லை.

“இவங்களை தனித்தனியா விசாரிச்சா தான் வேலைக்கு ஆகும் போல” என்று ராஜாவிடம் உரைத்தவராய்,

“நீங்க யாரு? எந்த ஊருலருந்து இங்கே வந்திருக்கீங்க?” என சக்தி மற்றும் வஞ்சியிடம் விசாரித்து விட்டு அவர்களை அனுப்பி வைத்த காவலர்,

அங்கிருந்த மற்றவர்களிடம், “இங்கே தான் சிவலிங்கம் இருந்திருக்கு! இங்கே உட்காரக் கூடாதுனு ஆளை அடிக்கிற அளவுக்குப் போறீங்கனா கண்டிப்பாக இங்கே சிவலிங்கம் இருந்திருக்குனு அர்த்தம் தானே!” அனைவரையும் பார்த்தவாறு கேட்டார்.

“சார் நாம தனியா பேசலாம் வாங்க” என்று குருமூர்த்தி காவலரைத் தனியே அழைக்க, “எதுவா இருந்தாலும் பப்ளிக்காவே பேசுவோம், சொல்லுங்க” என்று காவலர் அவரை ஆராயும் பார்வை பார்த்து வைக்க, “இங்கே சிவலிங்கம் இருந்தது உண்மை தான். ஆனா இங்க இருந்து எடுத்ததுக்கு காரணம் இருக்கு” என்றார் குருமூர்த்தி.